அத்தியாயம் 12
![]()
பாபுவை எப்படி வெளியே கொண்டு வருவது? என்று யோசித்து, அமுதன் திட்டம் போட்டிருக்க, கண்மணி வந்து சேர்ந்தாள். வந்தவள் எதிரிகள் கண்ணிலும் விழுந்து வைத்தாள்.
அமர் அவர்களது சரக்கை தனியாளாக மீட்டுக் கொண்டு வந்து சேர்த்ததால், ராயுடு குழு அவன் மீது கோபம் கொண்டது.
அமரை கொன்று விடும் எண்ணத்தில் சுற்றியவர்கள், அவன் வீட்டை நோட்டம் போட, கண்மணி அவர்கள் பார்வையில் விழுந்தாள். அவளை அமரின் காதலியாக நினைத்தனர்.
அவளை தூக்கி, அமரை கதிகலங்க வைக்க திட்டம் போட்டனர். அதற்காக அவளை பின்தொடரந்தனர்.
கண்மணி முதலில் அமுதனிடம் சொல்லும் போது, அவனுக்குமே சற்று அதிர்ச்சி தான்.
உடனே அவளது பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்தவன், திட்டத்தையும் ஆரம்பித்தான்.
கண்மணியை அவர்கள் கடத்தப்போவது உறுதி. அப்படி கடத்தி விட்டால், மீட்கவும் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அப்படி கடத்தும் முன்பு, ஆள்மாறாட்டம் செய்ய நினைத்தான்.
கண்மணியை முழுதாய் பயமுறுத்தி அனுப்பினான். நான்கு நாட்கள் அவள் வீட்டில் அடைந்து கிடைக்கும் போது, அமுதன் தன் வேலையை செய்து முடித்தான்.
அன்று இரவு.. கண்மணியை மயங்க வைத்த காவல் துறையினர், அவளது உடை போலவே அணிந்த பெண் போலீஸை இருளில் நிறுத்தி விட்டனர்.
கடத்த வந்த கும்பலும், அவளை கண்மணியாக நினைத்து இருளில் மாற்றிக் கடத்திச் சென்றது.
கண்மணியை கடத்தி விட்டதாகவும், அவள் வேண்டும் என்றால் உடனே வருமாறும் அமருக்கு செய்தி அனுப்பினர்.
அமர் டெம்போவில் சாய்ந்து நின்று, ஒரு ஹிந்தி பாடலை பாடுவதாக சொல்லி கத்திக் கொண்டிருக்கும் போது தான் அந்த செய்தி வந்தது.
பதறி அடித்து அவன் ஓட, அவனை பார்த்த க்ருணாலும் மணீஷும் விசாரித்தனர்.
“என் லவ்வர கடத்திட்டானுங்க” என்று பதட்டத்தோடு சொல்லி விட்டு, பைக்கில் கிளம்பியிருந்தான். மற்ற இருவரும் பின்னால் சென்றனர்.
மூவரும் ராயுடு சொன்ன இடத்துக்கு சென்று சேர, அங்கு இரண்டு கார் நின்றிருந்தது.
இருளில் நிற்பவர்கள் யாரென்று யாருக்கும் புரியவில்லை. கண்மணியை காப்பாற்ற விகாஸும் கூட வந்து விட்டான்.
“அந்த பொண்ண அனுப்பிடு ராயுடு.. இல்லனா இங்கயே உன்னை கொன்னுடுவேன்” என்று விகாஸ் மிரட்ட, ராயுடு சிரித்தான்.
“எனக்கு அவன் தான் வேணும். அவன நான் கொன்னதும் நாம அப்புறம் டீல் பேசிக்கலாம் விகாஸ். அமர மட்டும் அனுப்பு”
“அமர் என் ஆளு. உள்ள இருக்கது அவனோட பொண்டாட்டி. அவள விடலனா நடக்குறதே வேற” என்று விகாஸ் மிரட்ட, அமர் கோபத்தோடு ராயுடு மேல் பாய்ந்தான்.
எல்லாரும் அவன் மீது பாய, காருக்கு பின்னாலிருந்த அடியாட்களும் வந்து சண்டை போட்டனர்.
ஒருவன் க்ருணாலை அடித்து கீழே தள்ளி, மணீஷிடம் பாய்ந்தான். அவனை மணீஷ் அடிக்க, அவன் மணீஷின் தலையை உடைத்தான்.
“டேய்.. எவ்வளவு தைரியமிருந்தா எங்க பாபுவ அடிப்ப?” என்று கேட்டு விகாஸ் அவனை அடிக்க, அமர் சண்டை போடுவதை உடனே நிறுத்தினான்.
மற்றவர்களும் அடிப்பதை நிறுத்தினர். இருளாய் இருந்த இடம் சட்டென ஒளி பெற்றது.
திமுதிமுவென காவலர்கள் தூப்பாக்கியோடு வந்து அவர்களை வளைத்தனர்.
அமர், விழுந்து கிடந்த க்ருணாலுக்கு கை நீட்டி எழுப்பி விட்டான்.
அடி வாங்கிக் கிடந்த மணீஷ் என்கிற பாபு பையா, ஒரு நொடி அதிர்ந்து சட்டென விசயத்தை புரிந்து கொண்டு அமுதனை பார்த்தான்.
“எனக்கு வேற வழி தெரியல மணீஷ். நீ தான் அந்த பாபுனு எனக்கு தெரிஞ்சாலும், உன்னை யாருமே பார்த்தது இல்லனு சொல்லிட்டாங்க. உன் ஆளு விகாஸ் வாயால சொன்னா தான், எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கும்னு தான் இத பண்ணேன். நவ் கேம் ஓவர்”
அமுதன் கையை விரிக்க, மணீஷ் சுற்றியும் பார்த்தான். விகாஸ் துப்பாக்கி முனையில் நின்றான். மணீஷிக்கு பின் பக்கம் வெறும் இரண்டே போலீஸ் நிற்க, சட்டென முடிவெடுத்தவன் திரும்பி ஓட, அடுத்த நொடி அவனது உடலில் பல தோட்டாக்கள் நுழைந்தது.
அமுதன் திட்டப்படி, அவனை ஓட விட்டு சுட்டு முடித்திருந்தனர். க்ரூணால் அதாவது எஸ்பி குப்தா, வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டே மணீஷ் அருகே சென்று பார்த்தார். செத்துக் கிடந்தான்.
“இவனையும் முடிங்க” என்று விகாஸை காட்ட, அவனையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
ராயுடு வியர்வையில் குளித்தபடி நின்றிருந்தார். அவரது குடும்பம் காவல்துறையின் பிடியில் இருந்தது.
கண்மணியாக நினைத்து கடத்திய பெண் போலீஸ், அவனை மாட்ட வைத்திருந்தாள். அவரது குடும்பத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான், இப்போது இங்கு வந்து நடிக்க வைத்தனர்.
அமர் வெளுத்ததில் ராயுடு முகத்திலும் காயங்கள் இருந்தது. குப்தா அவனிடம் வந்தார்.
“உன்னையும் இங்கயே வச்சு முடிச்சுவிட என்னால முடியும். ஆனா உன் குடும்பத்துக்காக விடுறேன். இனி எதுலயாச்சும் மாட்டுன… அந்த கதை தான் உனக்கும்.” என்று மணீஷை காட்டியவர், “இப்ப கிளம்பு” என்றார்.
தப்பித்தால் போதுமென, ராயுடு காரை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.
மணீஷுடைய தந்தை தான் முதலில் அவர்கள் குழு தலைவன். அவரை தான் காவல்துறையினர் அழித்தனர். தந்தையை அழித்தவர்களை பழிவாங்க நினைத்தான் மணீஷ். அவனை மணீஷ் பாபு என்று அவனை எல்லாரும் கூப்பட்டது, தந்தை இறந்த பிறகு பாபு பையாவானது. மணீஷ் பாதுகாப்புக்காக மறைந்தது.
எல்லோரையும் பற்றியும் தெரிந்து கொள்ளவே சாதாரண டிரைவராக அதே குழுவில் வேலை செய்தான் மணீஷ். அவனது தந்தை சாவுக்கு, உள்ளிருந்தும் ஆட்கள் உதவி இருக்க வேண்டும் அல்லவா? எல்லாம் அருகே இருந்து பார்ப்பதால், நிறைய தெரிந்து கொண்டான்.
அமர் மீது மட்டும் அவனுக்கு சிறு பிரம்மிப்பு வந்தது. அதனால் தானாகவே சென்று நண்பனான். நண்பனாக இருந்தாலும், அமர் எதையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியம் காப்பது கூட, அவனுக்கு பிடித்து தான் இருந்தது. அவனது குழுவுக்கு அமர் நேர்மையாக இருப்பதாக நினைத்தான்.
ராகேஷ் செத்ததும், மணீஷ் தன் சுயரூபத்தை வெளியே கொண்டு வர நினைத்தாலும், விகாஸ் விடவில்லை. அதில் நிறைய ஆபத்திருப்பதாக சொல்லி தடுத்தான்.
ஆனால் அவன் வாயால் வர வைத்து, இருவரின் கதையையும் முடித்து விட்டு, அமுதன் மற்றும் அவனது பயிற்சியாளர் குப்தா இருவரும் கிளம்பி விட்டனர்.
காவலர்களிடம் பத்திரமாக இருந்த கண்மணியை அழைத்துக் கொண்டு கிளம்பிய அமுதன், வேலனிடமும் கண்மணியின் குடும்பத்திடமும் விசயத்தை சொல்லி, அவர்களோடு டெல்லி கிளம்ப சொல்லி விட்டான்.
அங்கு சென்று தன் டிரைனிங் முடித்ததற்காகவும், மிஷனை முடித்ததற்காகவும் பாராட்டு மெடலை வாங்கிக் கொண்டு, கூடவே போஸ்டிங் வாங்கிக் கொண்டு ஊர் திரும்ப வேண்டும்.
........
எல்லாம் சொல்லாமல், சொல்லக்கூடியதை மட்டும் சொல்லி முடித்தான் யாழமுதன்.
“உன் கூட ஃப்ரண்ட்டாவா இருந்தான் அந்த பாபு?”
“ம்ம்.. கூடவே இருந்துருக்கான் தேடி அலைஞ்சுருக்கோம்”
“இனி அவன் கேங் என்னாகும்?”
“கலைஞ்சு போகும். சிலர் வேற குரூப்ல சேரலாம். அவங்க சொத்தெல்லாம் கவர்மென்ட் எடுத்துக்கும். ஆனா அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. அத இங்க இருக்கவங்க பார்க்கட்டும். நாம கிளம்புவோம்”
“நான் இப்ப தான் வேலையில சேர்ந்தேன். அதுக்குள்ள ரிடர்ன் போகவா?” என்று கேட்டவளுக்கு அப்போது தான் யாழ்வேந்தனின் நினைவு வந்தது.
“அய்யய்யோ.. வேந்தன் சார்.. என்னை காணோம்னு தேடிருப்பார்” என்றவள் ஓடிச் சென்று தன் கைபேசியை எடுத்தாள்.
“யாரு? அந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டவனா?” என்று பொறாமையுடன் கேட்டான்.
“ஆமா”
வேந்தன் இரண்டு முளை அவளை அழைத்திருந்ததை பார்த்து விட்டு, உடனே திருப்பி அழைத்தாள்.
“ஹலோ.. சார்..”
“சொல்லு கண்மணி”
“சாரி சார் சொல்லாம கிளம்பிட்டேன் ” என்றாள் மற்றதை சொல்லாமல் மறைத்து.
“ஓகே நீ சேஃப் தான?”
“வீட்டுல தான் இருக்கேன்”
“ஓகே”
“சார் ரொம்ப டல்லா பேசுறீங்க?”
“இங்க ஒரு பிரச்சனை”
‘அங்கயுமா?’ என்று நினைத்தவள், “என்னது?” என்று விசாரித்தாள்.
“இந்த ரித்திகா.. அன்னைக்கு மால்ல பார்த்தோமே.. அவ சூசைட் அட்டன் பண்ணிட்டா”
“வாட்? ஏன்?”
“லவ்வ சொன்னா.. நான் நோ சொன்னேன். நவ் ஹாஸ்பிடல்ல இருக்கா”
“அடப்பாவமே.. லவ் இல்லனா செத்தே ஆகனுமா என்ன?”
“அத யாரு இவளுக்கு சொல்லுறது? சரி நான் அப்புறமா பேசுறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.
அமுதன் துணிகளை எல்லாம் அடுக்கி முடித்திருந்தான்.
“என்ன சொல்லிட்டியா?”
“என்னத்த?”
“வேலைய விடுறத தான்”
“அதுக்கு மெயில் பண்ணிக்கலாம். நீ பேக் பண்ணிட்டியா? மிச்சத்த நான் பண்ணுறேன்” என்றவள், மற்ற பொருட்களையும் சேமித்து பெட்டியில் அடக்கினாள்.
“இந்த வீட்டுல இருக்கவளுக்கு சொல்லனுமா?”
“இன்னும் ரெண்டு மணி நேரம் தான். வந்துடுவா. சொல்லிட்டே போகலாம். நாம பேக் பண்ண இன்னும் லேட்டாகும்”
இருவருமாக எல்லாவற்றையும் எடுத்து முடிக்க, பசி எடுத்தது.
வீட்டில் இருந்ததை அப்போதைக்கு சமைத்து சாப்பிட்டனர்.
“நடு ராத்திரி சாப்பிடுறேன். வயிறு என்ன ஆகப்போகுதோ?” என்றாள் கண்மணி.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தூங்குனா தான் செரிக்காது. நான் பல நேரம் இந்த நேரத்துல தான் சாப்பிடுவேன்”
“இங்க தனியா தான இருந்த சமைச்சு பழகலயா?”
“அதுக்கு நேரமிருந்தது இல்ல. என் வேலை விடாது”
“சமைக்க நேரமில்லனா அங்க கல்யாணம் பண்ணிக்க மட்டும் வந்த? அதுக்கெப்புடி நேரம் வந்துச்சு? அதுவும் ஒரு மாசம் இருந்தியே?”
“அங்கயும் நான் ஒரு வேலையா தான் வந்தேன். அத முடிச்சுட்டு கிளம்ப வேண்டியவன் தான். ஆனா வந்ததுமே அக்கா கல்யாணம் பத்தி பேசி உன் ஃபோட்டோவ வேற காட்டுச்சு. உன்னை பார்த்துட்டு எப்படி வேணாம்னு சொல்ல? அதான் உடனே சரினு சொல்லிட்டேன்”
“ஆஹான்..”
“நம்புமா.. எப்படியும் இங்க கொஞ்ச நாள் இருப்போம். கல்யாணம் பண்ணிட்டு, உண்மைய சொல்லிட்டு தான் கிளம்புறதா இருந்தேன். அதான் உன் கிட்ட சொல்லவும் செஞ்சேன். ஆனா.. எப்படியோ ப்ளான் மாறி நடு ராத்திரி கிளம்ப வேண்டியதா போச்சு”
“உன் அக்காவுக்கு உன் வேலை பத்தி தெரியாது தான?”
“ஆமா.. அது ஒரு ஓட்டை வாய். எங்கயாவது உளறி வச்சுடும். அதுனால அத்தான் வேலை பார்க்குற கம்பெனில, வேற பிரான்ச்ல நானும் வேலை பார்க்குறதா சொல்லி சமாளிச்சோம்”
“அப்புறம்?”
“அங்க வந்ததும் அக்கா தொல்லை பண்ணும்னு அத்தான் டெம்பரவரியா ஒரு வேலை ஏற்பாடு பண்ணார். அது எனக்கு எதுக்கு யூஸாச்சுனு தெரியல. ஆனா உன்னை பொண்ணு பார்த்தப்போ தைரியமா சொல்ல யூஸாச்சு.”
“அதான? இல்லனா நீ செஞ்சுட்டு இருக்க இந்த வேலைய சொல்ல முடியுமா? சொல்லிருந்தா எங்கப்பா உன்னை அடிச்சே விரட்டிருப்பார்”
“அதே தான். முதல்ல அத்தானுக்கும் எனக்கும் இந்த கல்யாணத்துல பெரிய இஷ்டமில்லை. என்கேஜ்மெண்ட் பண்ணிட்டு கல்யாணத்த தள்ளி வைக்கலாம்னு இருந்தோம். அக்கா தான் விடாம நச்சரிச்சு பண்ணுச்சு. உண்மைய சொல்ல முடியாம தலையாட்டுனதால உன்னை மண்டபத்துல விட்டுட்டு போக வேண்டியதா போச்சு”
“அத நான் மறக்க மாட்டேன். அத்தனை பேரும் அய்யோ பாவம்னு பார்த்த பார்வைக்கு எல்லாம் உன்னை தான் அடிக்கனும்”
“சாரி சாரி சாரி.. என்னால வேலைக்கு நோ சொல்ல முடியல. உடனே கிளம்பிட்டேன்”
“அப்போ நீ போனப்போ உன் அத்தானுக்கு விசயம் தெரியும் தான?”
“ம்ம்..”
“நினைச்சேன். உங்கக்கா அந்த அழு அழுறாங்க. உங்க அத்தான் மட்டும் கல்லு மாதிரி நிக்கிறாரேனு சந்தேகம் வந்துச்சு. இன்னொரு டவுட்டு இருக்கு”
“என்ன?”
“நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண போறது பத்தி உன் அத்தான் உன் கிட்ட சொன்னாரு தான?”
“ஆமா.”
கண்மணி அவனை இப்போது முறைத்தாள்.
“நீங்க கிளம்பும் போதே அவர் எனக்கு மெஸேஜ் பண்ணிட்டாரு. நான் லேட்டா பார்த்துட்டு, அவசரமா ஒரு பிரவுசிங் சென்டர்ல போய் ஆஃபிஸ்க்கு மெயில் போட்டேன்.”
அன்று நடந்தது கண்மணிக்கு நினைவு வந்தது. கிளம்பும் போதே, வேந்தன் அடிக்கடி தன் கைபேசியை பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.
இப்போது அமுதனை காணவில்லை என்று கண்மணி வழக்கு போட்டால், காவல்துறையினர் அவனது படத்தை எல்லா இடத்திற்கும் அனுப்பி விடுவர். அப்படி நடந்தால், அமுதனின் ரகசிய மிஷன் அவ்வளவு தான். அவன் யாரென்ற விவரமும் எல்லோருக்கும் தெரிந்து போகும். அது மிகப்பெரிய ஆபத்தில் வந்து நிறுத்தும்.
அதை தடுக்க நினைத்து, வேலன் அமுதனுக்கு விசயத்தை சொல்ல, அமுதன் உடனே யோசித்தான். கண்மணியை நேராக அழைத்துப்பேசி தடுக்க முடியாது.
உடனே அலுவலகத்திற்கு மின்னஞ்சலை அனுப்பி விட்டு, வேலனை அழைத்தான்.
“நான் ஆஃபிஸ்க்கு வேலைய விடுறதா மெயில் பண்ணிட்டேன். அத சொல்லுங்க. நம்பலனா அந்த மெயில கூட எடுத்துக்காட்டுங்க. நானா தான் அங்க இருந்து போனேன்னு இருக்கட்டும். அப்ப தான் கேஸ் போட முடியாது” என்று கூறி விட, வேலனும் தன் வேலையை சரியாய் செய்தான்.
கண்மணியும் வழக்கு கொடுக்காமல் நிறுத்தி விட்டாள்.
“அத்தானும் மச்சானுமா சேர்ந்து என்னை நல்லா ஏமாத்தியிருக்கீங்க இல்ல?” என்று கேட்ட கண்மணி கையை ஓங்கினாள்.
ஓங்கிய கையை பிடித்த அமுதன், சிரிப்போடு அணைத்துக் கொண்டான்.
தொடரும்.
