அத்தியாயம் 13
![]()
கண்மணியோடு தங்கியிருக்கும் பெண் வந்து விட, அவளிடம் சொல்லி விட்டு இருவருமாக கிளம்பினர். மீண்டும் கார் பயணம்.
நேராக விமானநிலையம் தான் சென்றனர். அங்கு சென்று விமானத்தில் ஏறி அமரும் வரை, பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளாமல் சென்று சேர்ந்தனர்.
விமானம் கிளம்பியதும், சீட் பெல்ட்டை கழட்டி விட்டு சாய்ந்து அமர்ந்த கண்மணி, “டயர்டா இருக்கு” என்றாள்.
“தூங்கு. இறங்கும் போது எழுப்புறேன்”
“இப்ப ஏன் டெல்லி போறோம்? நேரா வீட்டுக்கு போகலாம்ல?”
“அங்க போய் என்ன செய்ய?”
“அம்மா அப்பாவ பார்க்கனும். நடு ராத்திரினு நான் ஃபோன் பண்ணி கூட சொல்லல”
“தேவையில்ல அவங்களையும் தூக்கிட்டேன்”
“எதே?”
“உன்னை எப்படி டெல்லி கடத்திட்டு போறேனோ, அப்படித்தான் அவங்களையும் தூக்க சொல்லிட்டேன்”
“எதுக்கு?”
“அங்க எனக்கு மெடல் கொடுப்பாங்க. எல்லாரும் இருக்கனும்ல? அதுக்கு தான்”
“ஓஹோ”
“அப்படியே தேவைப்பட்டா அங்க ஹனி மூனையும் முடிச்சுட்டு, அப்புறமா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா?”
யாழமுதன் கண்சிமிட்டி கேட்க, கண்மணி அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
“அப்படி எதாவது நடந்துச்சுனு வை… அப்புறம் பிள்ளைய தத்தெடுக்குற நிலைமை தான் வரும்” என்றவள், சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள்.
முதலில் எதுவும் புரியாமல் பார்த்தவன், புரிந்ததும் வாயில் கை வைத்து விட்டான்.
“அடிப்பாவி..! என் வாழ்க்கைய அழிச்சுடாதடி”
“கவலை படாத. நானே உன்னை போனா போகுதுனு கல்யாணம் பண்ணிக்குவேன்.”
“நீ விவகாரமான ஆளு தான்.” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை.
ஓய்வெடுத்து முடிய டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களது குடும்பமும் வந்தது. நடந்ததை எல்லாம் வேலன் சொல்லியதும், அமுதன் மீதிருந்த கோபமெல்லாம் பறந்து போனது கண்மணியின் பெற்றோருக்கு.
இருவரும் அவனை பெருமையாக பார்த்தனர். ஆனால் சொல்லாமல் சென்று அமுதனை தேடியதற்கு, கண்மணி பாலமணியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள். அங்கேயே ஒரு வாரம் தங்கி ஊரை சுற்றி பார்த்து விட்டு, யாழமுதன் பதவியை பெற்றான்.
தமிழ்நாட்டில் வேலை கிடைத்திருக்க, அங்கேயே கிளம்பி விட்டனர்.
..........
யாழ்வேந்தனுக்கு வாழ்க்கையே சலிப்பாக இருந்தது. அன்று காலையில், ரித்திகா தன் காதலை சொல்லி, அதை மறுத்ததும் உடனே கண்மணியிடம் பேச நினைத்தான்.
ஆனால் அது நடக்கவில்லை. கண்மணி திடீரென மறைந்து போனாள். அவளை தேடிக் கொண்டிருக்கும் போது தான், ரித்திகாவின் தோழன் ஒருவனிடமிருந்து யாழ்வேந்தனுக்கு அழைப்பு வந்தது.
ரித்திகா மருத்துவமனையில் இருப்பதாக. அதுவும் தற்கொலைக்கு முயன்றதாக.
முதலில் எரிச்சலும் கோபமும் வந்தாலும் பாவமாகவும் இருந்தது. அவன் அவ்வளவு கோபமாக அவளது காதலை மறுத்திருந்தான். அது தான் காரணமோ? அமைதியாக பேசியிருக்க வேண்டுமோ? என்று நினைத்தவனுக்கு, குற்ற உணர்வும் வந்தது.
உடனே மருத்துவமனை சென்றான். அங்கு ரித்திகா அப்போது தான் மீண்டிருந்தாள். யாழ்வேந்தன் வந்திருப்பதாக சொல்ல, பார்க்க மறுத்து விட்டாள்.
“நான் சாகனும்னு தான் நினைச்சேன். செத்துடுவேன்னு சொல்லி அவர மிரட்ட நினைக்கல. அவர் வாழ்க்கையில யார் இருக்கனும் இருக்க கூடாதுனு அவர் முடிவு பண்ணட்டும். இது என் வாழ்க்கை. வாழனுமா கூடாதானு நான் முடிவு பண்ணுறேன். அவர எனக்கு பார்க்க இஷ்டமில்ல. எல்லாம் முடிஞ்சதுனு சொல்லியாச்சுல? அப்படியே போக சொல்லுங்க. நான் செத்து போனா கூட அவர் கிட்ட சொல்லாதீங்க.. உங்கள கெஞ்சி கேட்குறேன்”
அழுகையுடன் ஹிந்தியில் அவள் பேசியது எல்லாம் வேந்தனும் கேட்டான். அவனால் அதற்கு மேல் அவளிடம் போக முடியாது. தன்னை ஒதுக்கி வைத்து விட்டாள்.
ஆனால் அதையாவது தெளிவாக செய்து, வேறு வாழ்வை பார்க்கலாம் அல்லவா?
இப்படி சாவைத்தேடி போகிறாளே? என்று கோபமும் வருத்தமும் வந்தது. ஆனால் அதை சொல்லும் உரிமை கூட அவனுக்கு அவள் கொடுப்பதாக இல்லை.
சோகத்துடனே திரும்பி விட்டான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, வேலையை விட்டு விடுவதாக கண்மணியிடம் இருந்து செய்தி வந்தது.
உடனே அவளை அழைத்து விசாரிக்க, “கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு சார். முன்னாடியே சொல்லாம வேலைய விடுறதுக்கு சாரி. நான் வேணும்னா வீட்டுல இருந்து என் வொர்க்க முடிச்சு கொடுக்குறேன்” என்றாள்.
வேந்தன் என்ன சொல்வான்? அமைதியாய் தன் வாழ்த்தை சொல்லி விட்டு வைத்து விட்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை வாழ்வே சலிப்பாக தான் இருந்தது. ஏனோதானோவென வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க, அவனுக்கு ஒரு பார்சல் வந்தது. ரித்திகாவிடமிருந்து.
முதன் முதலில் அவனோடு காபி குடித்த போது, அவளுக்கு பிறந்த நாள். எதை வாங்கிக் கொடுப்பது என்று தெரியாமல், காஃபி சாப்பில் இருந்த பூ ஒன்றை வாங்கிக் கொடுத்து வாழ்த்தியிருந்தான்.
அந்த பூவை அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். அதை தான் இப்போது அனுப்பி இருந்தாள்.
கூடவே ஒரு கடிதம். அவனை மறக்கவும் முடியாது. வாழவும் முடியாது. ஆனால் அவளது பெற்றோரின் கண்ணீருக்காக வாழப்போகிறாளாம். மேலும் நிறைய எழுதி விட்டு, கடைசியாக ஒரு கோரிக்கையும் வைத்திருந்தாள்.
அந்த கடித்ததை படித்து முடித்ததும், அதோடு சேர்த்து அந்த பூவையும் எரித்து விடும் படி கேட்டிருந்தாள்.
அது வரை அமைதியாக இருந்தவனின் மனதை, கடைசி வரிகள் சலனபடுத்தியது. அவளால் அதை செய்ய முடியாது என்று தான் அவனிடம் அனுப்பி இருக்கிறாள்.
அவன் செய்து விடுவான் என்ற நம்பிக்கையா? அவ்வளவு தூரம் அவன் கல்நெஞ்சம் படைத்தவன் என்று நினைத்தாளா?
கோபம் வருவதற்கு பதில் வருத்தம் தான் வந்தது. ஏனோ அவள் சொன்னதை செய்யாமல், அந்த பூவையும் கடிதத்தையும் பத்திரப் படுத்தினான்.
காலம் யாருக்கு எதை வைத்து காத்திருக்கிறது என்பது, யாருமறியா ரகசியம் அல்லவா?
........
கண்மணியும் யாழமுதனும் குடும்பத்துடன் தமிழ்நாடு திரும்பினர். வந்ததுமே வேலையில் சென்று சேராமல், இரண்டு வாரம் நேரமெடுத்து இருந்தான் அமுதன்.
அதற்குள் திருமணத்தை நடத்தி விட ஆசை. அதையே விநோதாவிடமும் சொல்ல, அவளுக்கும் சம்மதம் தான்.
விநோதா, வேலன் மற்றும் அமுதன் மூவருமாக கண்மணியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
விசயத்தை சொல்ல, “ரெண்டு வாரத்துலயா?” என்று கேட்டார் பாலமணி.
“ரொம்ப பெருசா இல்ல அத்தை. அப்படி பண்ணா முதல்ல வந்தவங்க எல்லாம், என்ன ஏதுனு கேள்வியா கேட்டு எரிச்சல் பண்ணுவாங்க. சிம்பிளா முடிச்சுக்கலாம்” என்று அமுதன் விளக்க, மற்றவர்களுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.
“அதுவும் சரிதான். இப்பவே நீங்க எங்க போனீங்கனு கேட்டா, அதுக்கு பதில் சொல்ல முடியாது. கல்யாணத்த முடிச்சுட்டு சொல்லுவோம்”
“யாருக்கு கல்யாணம்?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள் கண்மணி.
“உனக்கும் மாப்பிள்ளைக்கும் தான்” என்றார் பாலமணி.
“எதே? யாரு அந்த மாப்பிள்ளை?” என்று கேட்டவளை பார்த்,து அமுதன் நெஞ்சில் கைவைத்தான்.
“என்னை பார்த்தா உனக்கு மாப்பிள்ளையா தெரியலயா?”
“உன்னை போய் நான் ஏன் கல்யாணம் பண்ணனும்? நோ சான்ஸ். நான் கிளம்புறேன் மா” என்றவள், உடனே வெளியேறி விட்டாள்.
அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்தனர்.
“இப்படி சொல்லிட்டு போறாளே.. ஹேய்.. நில்லு” என்ற அமுதன் பின்னாலேயே சென்று விட்டான்.
விநோதா தான் புரியாமல் பார்த்தாள்.
“என்னாச்சு? கண்மணிக்கு பிடிக்கலயா?” என்று விநோதா வருத்தமாக கேட்க, “பிடிக்காம தான் யாரு கிட்டயும் சொல்லாம தனியா தேடிப்போனாளாக்கும்?” என்று கேட்டார் பாலமணி.
“ஆமால..”
“அவளாச்சு மாப்பிள்ளையாச்சு. என்னமோ பண்ணட்டும். நாம நம்ம வேலைய பார்ப்போம். கண்மணி அப்பா வரட்டும். கல்யாணத்த எப்படி நடத்துறதுனு பேசலாம்” என்று விட்டார்.
வேலன், பின்னால் ஓடிய மச்சானை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“இப்ப ஏன் சிரிக்கிறீங்க?”
“அன்னைக்கே சொன்னேன்ல? உன் தம்பி நிலைமை ரொம்ப மோசமாகும்னு.. இப்ப பாரு பின்னாடி ஓடுறத?”
“அன்னைக்கு சொல்லாம பதறடிச்சான்ல? இப்ப படட்டும்” என்று விட்டாள் அக்கா.
கண்மணி காரில் ஏற, அமுதனும் உடனே உள்ளே ஏறிக் கொண்டான்.
“நீ எங்க வர்ர?”
“நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற? அதுக்கு முதல்ல காரணம் சொல்லு”
“கீழ இறங்கு. நான் கிளம்பனும்”
“பதில் சொல்லாம இறங்க மாட்டேன்”
கண்மணி வெடுக்கென திரும்பி, காரை எடுத்தாள்.
“இப்ப எங்க கிளம்பிட்ட?”
“டிரைவ் பண்ணும் போது பேசுன.. எங்கயாவது கொண்டு போய் விட்டுருவேன்”
அமுதன் கப்பென வாயை மூடிக் கொள்ள, கண்மணியும் ஹோட்டலுக்குச் சென்றாள்.
அங்கு அவளது பழைய அலுவலக நண்பர்களை சந்திக்க சென்று விட, அமுதன் காரிலேயே இருந்தான்.
காரில் ஏசியை போட்டு விட்டு, கைபேசியை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
பூனாவில், மிகப்பெரிய கடத்தல் கும்பல் தலைவன் பாபு செத்தது பற்றிய செய்தி எங்குமில்லை. விகாஸ் செத்தது மட்டும் தான் பரவியிருந்தது.
அதை பார்த்து விட்டு அந்த குழுவே குழப்பமடைய, குழம்பிய குட்டையில் அழகாய் மீன் பிடித்தனர் காவல்துறையினர். பல வழக்குகளில் இருந்து தப்பித்த குற்றவாளிகளின் உயிர், எமனுக்கு காணிக்கை ஆனது. சிறிய அளவில் குற்றம் செய்தவர்கள் எல்லோரும், சிறை கம்பிக்கு பின்னால் அடைக்கப்பட்டனர்.
அதில் எஞ்சியவர்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள். சிலர் வேறு குழுவில் இணைந்தனர். மொத்தத்தில் அந்த கூட்டமே கலைக்கப்பட்டது.
குப்தா வேலை முடிந்த செய்தியை அமுதனுக்கு அனுப்பி இருக்க, அவன் குப்தாவை அழைத்தான்.
“அமுதன்.. எப்படி இருக்க மேன்? உன் வேலையில ஜாயின் பண்ணிட்டியா?”
“இல்ல சார். இங்க கல்யாண பிரச்சனை. முடிஞ்சா அடுத்த நாளே கிளம்பிடுவேன்”
“என் பொண்ண வேணாம்னு சொல்லிட்டு வேற பொண்ணு பின்னாடி போற.. எப்படியோ நல்லா இருந்தா சரி” என்று முடித்துக் கொண்டார்.
சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தாள் கண்மணி. அப்போதும் அமுதன் காரிலேயே இருந்தான்.
பார்த்ததும் சிரிப்பு வர பார்க்க, அடக்கிக் கொண்டாள். காரில் அமர்ந்து கிளம்பப் பார்க்க, அமுதன் அவளுடைய இரண்டு கையையும் பிடித்துக் கொண்டான்.
“என்ன?”
“இப்ப என்ன வேணும் உனக்கு? ஏன் அடம் பிடிக்கிற?”
“உன்னை கல்யாணம் பண்ணனுமா?”
“அப்ப வேணாமா?”
“சரி எப்படி கல்யாணம் பண்ணலாம்?”
“சிம்பிளா பண்ணிக்கலாம். முன்னாடி மாதிரி பெருசா பண்ணா எல்லாரும் வந்து என்ன ஏதுனு கேள்வி கேட்டு எரிச்சல் பண்ணுவாங்க.”
“எனக்கு கிராண்ட் வெட்டிங் தான் வேணும். அதுவும் முன்ன விட பெருசா… பிரம்மாண்டமா வேணும். உனக்கு சிம்பிள் வேணும். சோ செட் ஆகல பார்த்தியா?”
“அடியேய்.. என்ன நக்கலா?”
“சீரியஸா பேசுறேன் மேன். எனக்கு கிரண்டா தான் வேணும். உன்னால பண்ண முடியுமா?”
அமுதன் அவளையே பார்த்திருந்தான். கண்மணியும் சளைக்காமல் பார்க்க, “சரி பண்ணலாம். ஆனா இப்ப டைம் இல்ல” என்றான்.
“எனக்கு அத பத்தி தெரியாது. கல்யாணம் பெருசா தான் நடக்கனும். அதுவும் உன் செலவுல தான் நடக்கனும். உனக்கு தான கல்யாணம் வேணும். நீயே செலவு பண்ணு. இல்லயா இப்படியே விட்டுட்டு போய் உன் வேலையில ஜாயின் பண்ணு”
அதோடு பேச்சு முடிந்தது என கையை விலக்கி விட்டு, காரை எடுத்தாள்.
அமுதன் சற்று யோசித்து விட்டு, கைபேசியை எடுத்தான்.
“அத்தான் ஊருல பெஸ்ட் வெட்டிங் ப்ளானர தேடுங்க. அதுவும் ஒரே வாரத்துல செஞ்சு கொடுக்கனும். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தே ஆகனும்” – யாழமுதன்.
தொடரும்.

வெச்சு செய்றா கண்மணி 🙂