அத்தியாயம் 14 (final)

Loading

கண்மணியின் விருப்பப்படி, திருமண வேலைகள் பிரம்மாண்டமாக நடக்க ஆரம்பித்தது. வெறும் ஒரே வாரத்தில் திருமணம் என்றால்?

சொந்த பந்தம் அத்தனை பேருக்கும், அழைப்பு அலைபேசியில் தான் சென்றது. அதே மாப்பிள்ளை அதே பெண் என்றதும், எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

உண்மை தானா? என்று தெரிந்து கொள்ளவே, எல்லோரும் வர தயாராக இருந்தனர்.

கண்மணியின் அத்தை குமாரிக்கும் மீண்டும் வயிறு எரிந்தது. அவரது மகனை மறுத்து, ஓடியவனை தேடி கொண்டு வந்து திருமணம் செய்கிறார்களே? என்ற கோபம். அதனால் திருமணத்திற்கு செல்லாமல் இருந்து கொண்டார்.

புதிதாய் திருமண சேலை, நகைகள் என்று எல்லாமே கண்மணிக்காக வாங்கினர். பழைய சேலையை கட்ட மாட்டேன் என்று விட்டாள் அவள்.

எல்லாமே ஒரே வாரத்தில் அவசர அவசரமாக நடக்க, நிற்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். கண்மணி மட்டும் எல்லாவற்றையும் வேடிக்கை தான்‌ பார்த்தாள்.

இவ்வளவு செய்ய வைத்ததற்கு, பாலமணியிடம் திட்டும் கிடைத்தது.

“இப்படி எல்லாரையும் பறக்க வச்சுட்டு, எவ்வளவு ஜாலியா டிவி பார்த்துட்டு இருக்கா பாருங்க” என்று குற்றம் சாட்ட, கண்மணி கவனித்தால் தானே?

அரக்கப்பறக்க வேலைகள் நடந்து முடிந்தது. முதல் திருமணம் ஏன் நின்றது? அப்படி எங்கே போனான் அமுதன்? என்று தெரிந்து கொள்வதற்காகவே அத்தனை சொந்தங்களும் வந்து இறங்கி விட, விழா கலை கட்டியது.

அமுதன் எங்கே போனான்? ஏன் பேனான்? என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் கொடுக்கப்படவில்லை.

அவன் ஒரு காவல்துறை அதிகாரி என்று சொன்னதுமே வாயைப்பிறந்தவர்கள், அவர்களாக எதோ கதையை கட்டி திருப்தி பட்டுக் கொண்டனர்.

தூண்டித்துருவி கேட்கும் தைரியம் வரவில்லை.

சொந்தங்களின் தலையில் வேலையை கட்டி விட்டு, ஓய்ந்து போனார் பாலமணி. அடித்துப்பிடித்து ஒரு வழியாக திருமண நாளும் வந்தது.

காலையில் பரபரப்புடன் கடைசி கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்க, இன்றும் கண்மணிக்கு மேக் அப் போடும் வேலை நடந்தது.

தலையலங்காரம் எல்லாம் முடித்த பார்லர் பெண், “சேரி கட்டி விடுற பொண்ணு அஞ்சு நிமிஷத்துல வந்துடுவா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி விட்டு சென்றாள்.

அலங்காரம் முடிந்ததா? என்று பார்க்க வந்த பாலமணி, அறை காலியாக இருக்கவும் அதிர்ந்தார்.

அறைக்குள் எங்கு தேடியும் கண்மணி கண்ணில் படவில்லை.

“இவள ரூம விட்டு வெளிய வராதனு சொல்லிட்டு தான போனேன்?” என்று கோபத்தோடு பாலமணி தேட, அங்கு வந்த விநோதா என்னவென்று விசாரித்தாள்.

“என்ன அத்தை பதட்டமா இருக்கீங்க?”

“இந்த பொண்ண காணோம். எங்க போனானு தெரியல” என்று கோபத்தோடு அறையும் குறையுமாக சொல்லி வைக்க, விநோதா நெஞ்சில் கைவைத்து விட்டாள்.

‘அய்யோ.. இதுங்க கல்யாணத்துல எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறதே வேலையா வச்சுருக்குங்களே’ என்று நினைத்தவள், விறுவிறுவென அமுதனை தேடிச் சென்றாள்.

அப்போது தான் அமுதன் வேட்டி சட்டைக்கு மாறியிருந்தான். வேலனிடம் பேசிக் கொண்டே, தயாராகிக் கொண்டிருந்தான்.

“எப்படியே மச்சான்.. போற போக்க பார்த்தா சாமியாரா போயிடுவியோனு நினைச்சேன். கண்மணி கால்ல விழுந்து கல்யாணம் வரைக்கும் வந்துட்ட”

“ரைமிங்கா? நீங்க என் அக்கா கால்ல விழுறத விட நான் அதிகமா விழல அத்தான்.”

“மீசைல எதோ ஒட்டிருக்கு பாரு”

“மண்ணு இல்ல” என்று கூறி பல்லைக்கடிக்க, விநோதா வேகமாக வந்தாள்.

“டேய் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?”

“என்னகா?”

“இப்ப ஏன் பதட்டமா இருக்க?”

“பொண்ண காணோமாம். ஏன்டா இப்படி பாடாபடுத்துறீங்க?”

“என்ன சொன்ன?” என்று வேலன் அதிர, அமுதனும் குழம்பினான்.

“க்கா.. அங்க தான் பக்கத்துல இருப்பா. நல்லா பாரு”

“இல்லடா.. அவங்கம்மாவே தேடுறாங்க. அய்யோ என்னால முடியலங்க..” என்று நொந்து போய் அவள் அமர்ந்து விட, வேலன் அவளை தாங்கிப்பிடித்தபடி அமுதனை கேள்வியாக பார்த்தான்.

“நான் போய் பார்க்குறேன்” என்றவன், உடனே வெளியேறினான்.

உண்மையில் பாலமணி பதட்டத்தை மறைத்து தேடிக் கொண்டிருக்க, அமுதன் சுற்றிலும் பார்வையை ஓட விட்டான்.

பிறகு நேராக சாப்பிடும் இடம் நோக்கி சென்றான்.

“இன்னொன்னு போடுங்க” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி.

அது பானிபூரியும் ஐஸ்கிரீமும் தரும் இடம். பானிபூரிக்கான பூரியை எடுத்து, அதில் ஐஸ்கிரீமை வைத்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

“செம்ம டேஸ்ட்” என்றவள், வரிசையாக வாங்கி உண்டு கொண்டிருந்தாள்.

கல்யாண பெண் சுடிதாரில் வந்து இப்படி சாப்பிடுகிறாளே? என்று அவர்கள் திருதிருவென விழித்தாலும், மணப்பெண் கேட்கும் போது மறுக்கவும் தோன்றவில்லை.

வாயிலிருந்ததை விழுங்கும் முன்பே அவள் அடுத்ததை வாங்க, அமுதன் அவள் கையிலிருந்ததை தன் வாய்க்குள் போட்டுக் கொண்டான்.

பதறி திரும்பியவள், அமுதனை பார்த்ததும் சிரித்தாள்.

“சூப்பரா இருக்கல?”

“ம்ம்.. செம்ம”

“இவனுக்கும் கொடுங்க” என்று கேட்க, இரண்டு கவுண்டரிலும் நின்றிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மாப்பிள்ளையாக வேட்டி சட்டையில் வந்தவனும் இப்படி சாப்பிடுகிறானே?

அவனுக்கும் ஒன்றை வைத்துக் கொடுக்க, சந்தோசமாக வாங்கி சாப்பிட்டான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்த கண்மணி, “இங்க எதுக்கு வந்த?” என்று கேட்டாள்.

“வேற எதுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடத்தான்”

“என்னை தேடி வரல?”

“உன்னையும் தேடித்தான் வந்தேன்”

“நான் காணோம போய்ட்டேன்னு பதறல?”

“அப்படி எல்லாம் நீ தொலைய முடியாது மேடம். செக்யூரிட்டி ஃபுல் டைட்ல இருக்கு.”

“ஒரு வேளை இந்த கல்யாணமும் நின்னுட்டா என்ன செய்வ?”

“நின்னா நிக்கட்டும்.‌ கல்யாணமா முக்கியம்? ஹனிமூன் தான்‌ முக்கியம். தாலி கட்டுனாலும் இல்லனாலும், உன்னோட இன்னைக்கு நைட் ஹனிமூன் போறது உறுதி.‌ அதுனால கவலையே இல்ல. இன்னும் நாலு ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா”

அவன் கூலாக பதில் சொல்ல, அவளுக்கு தான் கடுப்பாகி விட்டது.

அவனை திட்ட வாயைத்திறக்க, வேகமாக வந்து அவள் கையைப்பிடித்தார் பாலமணி.

“இங்க என்ன பண்ணுற நீ?”

“ஐஸ்கிரீம் சாப்பிடுறா அத்த”

“உன்னை ரூம்ம விட்டு வரவேணாம்னு சொன்னேன்ல? நீங்களும் ரெடியாகுங்க மாப்பிள்ளை.” என்று மகளை திட்டி விட்டு, மாப்பிள்ளையிடம் சொல்லி விட்டு, கண்மணியை கையோடு இழுத்துக் கொண்டு சென்றார் பாலமணி.

கண்மணி திரும்பி அமுதனை முறைத்து விட்டுத் தான்‌ சென்றாள். அமுதனோ, சிரித்துக் கொண்டே அவள் மிச்சம் வைத்ததை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு நகன்றான்.

சேலை மாற்றி மணமேடையில் வந்து அமரும் வரை, பாலமணி பேசிய பேச்சில் கண்மணியின் காதில் இரத்தமே வந்து விட்டது.

சொந்தபந்தங்கள் எல்லோரும் திருமணத்தை ஆர்வமாக எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்பவரும், அவர் பங்குக்கு ஓடிக் கொண்டிருந்தார்.

“இது முடிஞ்சதா? ஐயருக்கு எதாவது வேணுமானு கேளுங்க” என்று மேனேஜர் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நேரம் பறக்க, மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்தனர். சடங்குகள் நடக்க, கண்மணி அமுதனை முறைத்து கொண்டிருந்தாள்.

மந்திரங்கள் முடிந்து தாலியை எடுத்து கொடுக்க, அமுதனும் சிரித்தபடி கட்டி விட்டான்.

அதுவரை கோபமாக அமர்ந்திருந்த கண்மணி, தாலி கட்டியதும் கூட்டத்தை கெத்தாய் ஒரு பார்வை பார்த்தாள்.

வந்தவர்கள் வாழ்த்தி பரிசை கொடுத்து முடிக்க, சாப்பிடும் இடத்திற்கு வந்தனர்.

கண்மணியின் இலைக்கு ஐஸ்கிரீம் வர, அமுதன் தடுத்தான்.

“ஏற்கனவே நிறைய சாப்பிட்டுட்ட.. பேசாம இரு” என்று அதட்டியவன், அவளை சாப்பிட விடாமல் பறித்துக் கொண்டான்.

“அப்படி தான் சாப்பிடுவேன்.. கொடு” என்று கண்மணி பறிக்கப்பார்க்க, “அத்தை.. இவளுக்கு இன்னும் ஐஸ் வேணுமாம்” என்று மாட்டி விட்டான்.

பாலமணி பார்த்த பார்வையில், அன்னையை முறைக்க முடியாமல் கணவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

அன்று மாலை, வீடு சென்றதும் இரவே உடைகளை எடுத்துக் கொண்டு தேன்நிலவு கிளம்ப வேண்டும்.

“நான் வரல. நீ போ” என்றாள் கண்மணி.

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? இப்ப என்ன?”

“எங்கம்மா கிட்ட போட்டு கொடுத்தல? அவ்வளவு திட்டு வாங்கிருக்கேன். எல்லாம் உன்னால”

“சரி.. நாம அங்க போனதும் அத்தை இங்க தான் இருப்பாங்க. அங்க நீ எத்தனை ஐஸ்கிரீம் வேணும்னாலும் வாங்கி சாப்பிடு. யாரு கேட்பா?”

குழந்தைக்கு சொல்வது போல் அவன் சொல்ல, கண்மணிக்கு சிரிப்பு வந்தது.

“நான் சில்லியா பிகேவ் பண்ணுறேன்னு எனக்கே தெரியுது. உனக்கு கோபமே வரலயா?”

“வரலயே.. புது பொண்டாட்டி கிட்ட எவனாச்சும் கோபப்படுவானா?”

“அப்ப நான் பழசாகிட்டா கோபப்படுவியா?”

“வாய்ப்பிருக்கு” என்றதுமே, அவன் தோளில் அடி விழுந்தது.

“சரி சரி.. கிளம்பலாம் வா”

“நான் வரனும்னா என் கேள்விக்கு பதில் சொல்லு”

“என்ன?”

“ஒரு வேளை.. நீ ஓடிப்போயிட்டனு எனக்கு வேற யாரு கூடையும் கல்யாணம் பண்ணி வச்சுருந்தா என்ன செய்வ?”

“உண்மைய சொன்னா அடிப்ப.. பொய்யே சொல்லுறேன். சாமியாரா போயிருப்பேன்”

கண்மணி இடுப்பில் கை வைத்து முறைக்க, “சும்மாடா.. அப்படி எல்லாம் கல்யாணம் நடந்துருக்காது. யூஸுவலா முறைப்பையன தான் ரெடிமேட் மாப்பிள்ளையா மாத்துவாங்க. உன் அத்தை பையன தான் உனக்கு பிடிக்காதே. கண்டிப்பா கட்டிக்க மாட்டனு தெரியும். அப்படி மீறி கல்யாணம் பண்ண கிளம்பியிருந்தா, அத்தான் ஏதாச்சும் பண்ணி நடக்க விடாம தடுத்துருப்பாரு. சொல்லிட்டு தான் போனேன். அத விட முக்கியமா, நீ வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டனு எனக்கு நிறைய நம்பிக்கை இருந்துச்சு. மத்தவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா நமக்கு தெரியுமே நமக்கிடையில இருந்த லவ் பத்தி.. அந்த நம்பிக்கை தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றவன், அவள் தலையில் முட்டினான்.

அவள் மீது அக்கறை இல்லாமல் விட்டுச் செல்லவில்லை என்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.

“அப்புறம் இந்த கிராண்ட் வெட்டிங். அத்தனை பேரு முன்னாடி அன்னைக்கு நீ தனியா நின்னுருக்க. இன்னைக்கு அத்தனை பேரையும் கூப்பிட்டு, இப்ப அதே பையன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்கனு காட்ட நினைச்ச. நடத்தியாச்சு. அவ்வளவு தான?”

அவளது எண்ணத்தை சரியாய் புரிந்து கொண்டான். அது அவளது முகத்தில் புன்னகை வரவைத்தது. உடனை அவனது முகத்தை பற்றி, இதழில் முத்தமிட்டாள்.

“கரெக்ட்டா சொல்லிட்ட” என்று கூறி சிரிக்க, “அங்க போய் இறங்குற வரை என்னை சோதிக்காம இருமா. உனக்கு புண்ணியமா போகும்” என்றான் நெஞ்சை நீவியபடி.

கண்மணி சிரித்தபடி கிளம்பினாள். இருவரும் தேன்நிலவு சென்று திரும்பினர். அடுத்த நாளே அமுதன் வேலையில் சேர வேண்டும். காக்கி உடை அணிந்து தொப்பியை கையில் வைத்தபடி அவன் வர, கண்மணி அவனை இமைக்காமல் பார்த்தாள்.

“எப்படி?” என்று கேட்க, அவன் கையிலிருந்த தொப்பியை வாங்கி தலையில் மாட்டியவள், “சூப்பர்” என்றாள்.

விரைப்பாய் அவளுக்கு சல்யூட் வைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்ட விட்டு வேலையை பார்க்க கிளம்பி விட்டான் கண்மணியின் யாழமுதன் ஐபிஎஸ்.

முற்றும்.

Leave a Reply