அத்தியாயம் 2
![]()
மூன்று நாட்கள் கடந்திருந்தது. திருமணம் நின்று போனதும், சொந்தபந்தகளை எல்லாம் அனுப்பி வைத்து விட்டு, வீடு அமைதிக்குத் திரும்பியிருந்தது.
கண்மணியின் தந்தை, அந்த வீட்டை மகளது இஷ்டப்படி கட்டியிருந்தார். மிகப்பெரிய வீடு தான். ஒரு மகள் என்பதால், பாசத்தை கொட்டி வளர்த்திருந்தனர். அவளது திருமணம் மேடைக்கு வந்து நின்று போனதில், மனம் நொந்து போயிருந்தனர்.
பாலமணி மகளிடம் பேசுவதில்லை. அவருக்கு கோபம். மகள் தன் பேச்சை கேட்கவில்லை என்று.
இதை எல்லாம் கண்டும் காணாமல், நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்தாள் கண்மணி.
திருமணத்திற்காக அவள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டிருந்தாள். அதனால் இப்போது வேலையும் இல்லை.
அவளிடம் துக்கம் பகிர்ந்து கொள்ள வந்த நண்பர்களை கூட, ஒதுக்கித் தள்ளினாள். யாரிடமும் அவள் பேசுவது இல்லை.
சொந்தபந்தங்களை எல்லாம் ஒரு பார்வையிலேயே விலக்கி விட, யாரும் நெருங்கவில்லை.
திருமணம் நின்றதால் சோகமாக இருப்பாள் என்று நினைக்க வழியில்லை. நிறுத்தியவளே அவள் அல்லவா?
சரி நின்று போயிற்று. அடுத்ததாக காட்டியவனுக்கு கழுத்தை நீட்டாமல் போனாளே? அது தான் சொந்தங்களுக்கு பிடிக்கவில்லை.
“அவன் என்ன வெளியாளா? குமாரி மகன் தான? காதோடு காது வச்சாப்புல அவன கட்டிட்டு போயிருந்துக்கலாம். அத விட்டுட்டு இப்படி பண்ணிட்டா. இனி இவளுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?” என்று அக்கறைபடுவது போல் பேசி, பாலமணியை சீண்டிக் கொண்டிருந்தனர் சொந்தங்கள்.
அவருக்கும் அது மனதில் இருந்தாலும், மகள் ரவியை திருமணம் செய்யாததில் சந்தோசம் தான்.
“அந்த நேரத்துல நானும் தப்பு தப்பா யோசிச்சு, ரவிய போய் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சுட்டேன். நல்ல வேளை மணி பண்ணிக்கல. ஆனா ஒரு வார்த்தை நம்ம கிட்ட பேசியிருந்தா, நாமலே போய் எல்லாரு கிட்டயும் பேசியிருக்கலாம்ல? பெரிய மனுசி மாதிரி, முன்னாடி போய் நின்னு அப்படி பேசிட்டா. எல்லாரும் என்னலாம் பேசுறாங்க தெரியுமா?” என்று கணவனிடம் புலம்பித் தள்ளியிருந்தார்.
“நாம எடுத்த முடிவு தப்புனு தான், மணி தானே போய் பேசிட்டா. எனக்கும் இப்ப யோசிக்க யோசிக்க, மணி பண்ணது தான் சரினு தோணுது. நாம பேசியிருந்தா, சொந்தக்காரங்க நம்மல சமாளிச்சு, ரவிக்கே கட்டி கூட வச்சுருப்பாங்க. எல்லாம் சரியா தான் நடந்துருக்கு. பேசாம இரு” என்று அடக்கினார்.
இருவரும், சொந்தங்களின் பேச்சை எல்லாம் வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டே அனுப்பி வைத்தனர்.
மூன்று நாட்களும் கடந்து போயிருக்க, கண்மணி காலையிலேயே தயாராகி கீழே வந்தாள்.
பாலமணி அவளை திரும்பிப் பார்க்க, “எங்கமா கிளம்பிட்ட?” என்று கேட்டார் ராஜகுமார்.
“விநோதாவ பார்க்க போறேன்பா”
“அவங்கள ஏன் பார்க்க போற?” என்று பாலமணி அதட்ட, “போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க” என்றாள்.
“என்னது?” என்று இருவரும் அதிர, “ஓடிப்போனவன் எங்க போனான்னு தெரிய வேணாமா? கண்டு பிடிக்காம விட மாட்டேன். நான் போயிட்டு வர்ரேன்” என்றவள், கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“என்னங்க இப்படி சொல்லிட்டுப் போறா?”
“போயிட்டு வரட்டும். நாம நம்ம வேலைய பார்ப்போம்” என்றார் ராஜகுமார்.
“என்ன நீங்க? அவ போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க போறாளாம்”
“கொடுக்கட்டும். அவன வேற எப்படி கண்டு பிடிக்கிறது?”
“கல்யாணமே நின்னு போச்சுங்க. அவன தேடி இவ என்ன செய்ய போறா?”
“ஏன்டா இப்படி பண்ணனு சட்டைய பிடிச்சு கேட்பா” என்று முடித்து விட்டார்.
ராஜகுமாருக்கு மகளின் முடிவுகள் மேலிருந்த நம்பிக்கையில், அவளை விட்டு விட்டார். கண்மணியும் சிறு பிள்ளை அல்ல. எதையும் யோசிக்காமல் செய்யமாட்டாள்.
கண்மணியும் காரை எடுத்துக் கிளம்பியிருந்தாள். இரண்டு மணி நேர தொலைவில் இருந்த ஊரை, ஒன்றரை மணி நேரத்தில் கடந்து சென்றாள்.
விநோதாவின் வீட்டின் முன்னால் நின்று ஹாரனை அடிக்க, வினோதா தான் எட்டிப் பார்த்தாள்.
காரிலிருந்து கண்மணி இறங்க, விநோதா அதிர்ந்து போனாள்.
“இந்த பொண்ணு ஏன் இங்க வந்துருக்கா?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, வாசலுக்கு வந்து கேட்டை திறந்தாள்.
“வா கண்மணி..”
“நீங்க மட்டுமா வீட்டுல இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.
“அவரு உள்ள தான் இருக்காரு”
“அப்ப சரி” என்றவள், அப்போது தான் எழுந்து வந்த வேலனை பார்த்தாள்.
விடுமுறை நாள் என்பதால், இப்போது தான் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான். அவனும் கண்மணியை பார்த்து அதிர்ந்தான்.
“வாமா” என்று சம்பிரதாயமாக அழைக்க, “சரி கிளம்புங்க ரெண்டு பேரும்” என்றாள் அவள்.
“எங்க?”
“போலீஸ் ஸ்டேஷனுக்கு”
“என்னது?” என்று இருவரும் அதிர, “உங்க தம்பிய காணோம்னு கம்ப்ளைண்ட் பண்ணனும். கூட வாங்க” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, “எதுக்கு இது?” என்று கேட்டாள் விநோதா.
“உங்க தம்பி என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா செல்லிட்டு, மண்டபத்து வரை வந்துட்டு விட்டுட்டு போயிருக்கார். நான் அவர் மேல கேஸ் ஃபைல் பண்ண முடியும். ஆனா நான் காணோம்னு தான் கம்ப்ளைண்ட் கொடுக்க போறேன். நீங்களும் வந்தா, அது மிஸ்ஸிங் கேஸா ஃபைலாகும். இல்ல நான் மட்டும் போய் பண்ணா, உங்கள தான் போலீஸ் முதல்ல கூப்பிட்டு விசாரிப்பாங்க.”
அசால்ட்டாக வெடியை வீசியவள், “எப்படினாலும் கேஸ் கொடுப்பேன். பட் நீங்களும் வந்தா உங்களுக்கு நல்லது.” என்று கூறி விட்டு இருவரையும் பார்த்தாள்.
இருவருக்கும் இதில் சம்மதம் இல்லை என்றாலும், அவன் மறைந்த கதை தெரியாததால் தலையை ஆட்டி விட்டு அவளோடு கிளம்பி விட்டனர்.
காவல்நிலையம் சென்று வழக்கை கொடுத்தனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டரும் விசாரித்தார்.
“மிஸ்ஸிங் கேஸா? இல்ல எதாவது லவ் இருந்து வீட்ட விட்டு போயிட்டாங்களா?”
“அவன் ஃப்ரண்ட் கிட்டலாம் கேட்டுட்டேன் சார். அப்படி எதுவும் இல்லனு சொல்லிட்டாங்க”
“ஃப்ரண்டுங்க மறைச்சுருக்கலாம் இல்லையா?”
“அப்படியும் சந்தேகப்பட்டு அவன் ஃபோன் செக் பண்ணோம். ஃபோன கூட மண்டபத்துல விட்டுட்டு தான் போயிருக்கான்”
“அந்த ஃபோன்ல எதுவும் கிடைக்கலயா?”
“இல்ல சார்”
“வீட்டுல அவரோட ரூம்ல தேடுனீங்களா?”
“தேடிட்டோம் சார். அவன் பர்ஸ், பணம், டிரஸ் எல்லாமே இருக்கு. ஓடி தான் போகனும்னா ஃபோன் இல்ல பர்ஸயாச்சும் எடுத்துட்டு போயிருப்பான்ல? அவன் ஏடிஎம் எல்லாம் வீட்டுல தான் இருக்கு. மண்டபத்துலயும் அவன் எப்ப வெளிய போனான்னு யாருக்குமே தெரியல”
“வேலை பார்க்குற ஆஃபிஸ்?”
“அங்கயும் யாருக்கும் எதுவும் தெரியல. யார கேட்டாலும் எங்களுக்கு தெரியலனு தான் சொல்லுறாங்க”
“இந்த மூணு நாள்ல அவர் பேங்க்ல இருந்து எதாவது பணம் எடுத்துருக்காரானு பார்த்தீங்களா?”
“இல்லயே..”
“அத செக் பண்ணுவோம் முதல்ல. அப்புறம் மண்டபத்தோட சிசிடிவி ஃபுட்டேஜ் வேணும். உங்க கூட ஒரு காண்ஸ்டபிள் வருவாரு. அதெல்லாம் வாங்கி அவர் கையில கொடுத்து அனுப்புங்க” என்றவர் காண்ஸ்டபிளையும் அனுப்பி வைத்தார்.
முதலில் வங்கி சென்று, விசயத்தை சொல்லி அவனது கணக்கை ஆராய்ந்தனர். எந்த பணமும் எடுக்கப்படவில்லை.
பிறகு மண்டபத்திற்கு சென்றால், அங்கு எந்த காட்சியும் சந்தேகப்படும்படி பதிவாகவில்லை.
ஆனாலும் அதை எடுத்துக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டனர்.
அவரும் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, “உங்க தம்பி தானா கிளம்பி போகலனா கடத்தல் வேலையா இருக்கலாம்” என்றார்.
“அப்படினா எங்களுக்கு எந்த மிரட்டலும் வரலயே?”
“அதுவும் சந்தேகமா தான் இருக்கு. ஒரு வேளை இதுக்கப்புறம் வருதா பார்க்கலாம். இல்லனா மிஸ்ஸிங்கேஸ்னு ஃபோட்டோவ எல்லா இடத்துக்கும் அனுப்பிடுறேன்” என்று கூறினார்.
கண்மணி மட்டும், மீண்டும் மீண்டும் அந்த சிசிடிவி காட்சிகளை உற்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அதில் ஒருவன் மட்டும் தொப்பி போட்டு உள்ளே சென்று விட்டு, மீண்டும் வெளியே வந்தான்.
சாதாரணமாக பார்க்கும் போது பெரிதாக எதுவுமே தெரியவில்லை. ஆனால் கண்மணி இதோடு நான்கு முறை பார்த்து விட்டதால், வித்தியாசமாக தெரிந்தது.
மண்டபத்தில் வைத்தே ஒரு முறை பார்த்தவள், வரும் வழியெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தாள். இப்போதும் கவனித்தவள், “சார்…” என்று இழுத்தாள்.
“என்ன மேடம்..?” – இன்ஸ்பெக்டர்.
“இந்த ஆள பாருங்களேன்..” என்று காட்டினாள்.
சிவப்பு சட்டையணிந்து, கொண்டு தலையில் தொப்பியோடு உள்ளே சென்றான்.
பத்து நிமிடத்தில் வெளியே வந்து விட்டான்.
“இது யாருனு தெரியுமா?” என்று கேட்க, வேலனும் விநோதாவும் மறுப்பாக தலையசைத்தனர்.
தொப்பி போட்டிருந்ததால் அவனது முகம் தெரியவில்லை.
“இவன் மட்டும் தான் முகம் தெரியாம உள்ள போயிட்டு வர்ரான்.” என்றவள் மீண்டும் அதை ஓட்டிப் பார்த்தாள்.
போகும் போது இருந்ததற்கும், வரும்போது இருந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. உடல் பாவனை, அணிந்திருந்த செருப்பும் மாறி இருந்தது. அதை எல்லாம் வரிசையாக இன்ஸ்பெக்டர் கவனித்தார்.
“ஒரு வேளை கல்யாண வீட்டுல செருப்பு திருடுற கும்பலா இருக்குமோ?” என்று விநோதா சொல்ல, “இருங்க மேடம்” என்ற இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த காணொளியை மெதுவாக ஓடவிட்டு பார்த்தார்.
அவனது ஒவ்வொரு அங்க அசைவுகளும் படமெடுக்கப்பட்டது. முதலில் போனவன் ஒருவன் திரும்பி வந்தவன் ஒருவன் என்று தெளிவாக தெரிய மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“வெளியேறுனது உங்க தம்பியா இருக்கலாம்” என்று இன்ஸ்பெக்டர் கூற அதே நேரம் வேலனின் கைபேசி இசைத்தது.
எடுத்துப்பார்த்தவன், “அமுதன் ஆஃபிஸ்ல வேலை பார்க்குறவன் கிட்ட இருந்து போன் வருது சார்” என்றான்.
“எடுத்துப்பேசுங்க” என்றதும் காதில் வைத்தான்.
பேசி முடித்து வைத்து, வேலன் விசயத்தைக் கூறினான்.
கேட்டதும் கண்மணியின் முகத்தில் கோபம் கொந்தளித்தது.
“அமுதன் வேலைய விட்டுறதா மெயில் அனுப்பி இருக்கான் சார்” என்று வேலன் சொன்னதும், கண்மணி கடுப்பாகி விட்டாள்.
‘அடேய் அமுதா… உனக்கு விசம் நான் தான்டா’ என்று நினைத்தவள், “அப்ப இந்த கேஸ் ஃபைல் பண்ண வேணாம் சார். ரொம்ப நன்றி சார். நாங்களே இனி அவர தேடிக்கிறோம்” என்று முடித்து விட்டாள்.
இன்ஸ்பெக்டர் தலையாட்டியதும் வெளியே வந்தவள், “இனி உங்க தம்பிய நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி விட்டு வேகமாக கிளம்பி விட்டாள்.
விநோதாவும் வேலனும் அவளை புரியாமல் பார்த்தனர்.
“இப்ப ஏன் கோபமா போறா?”
“உன் தம்பி ஓடிருக்கான்னு தெரிஞ்சதும் கோபம் போல”
“முதல்லயே பிடிக்கலனா சொல்லிருக்கலாம். இந்த பொண்ண வேற ஊர் முன்னாடி நிறுத்திட்டோம்”
“ஏன் இப்படி பண்ணான் அவன்? உனக்கு எதுவும் தெரியலயா?”
“எனக்கு எப்படி தெரியும்? சொல்லாம கொள்ளாம நம்மல அசிங்க படுத்திட்டு போயிட்டான். திரும்ப பார்த்தேன்னா இருக்கு” என்ற விநோதாவும் கடுப்புடனே கிளம்பி விட்டாள்.
கண்மணி நேராக தன் நண்பணை தேடிச் சென்றாள். அமுதன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க.
அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலை வைத்து, ஐபி அட்ரஸை எடுக்க இரண்டு நாட்கள் ஆனது.
அமுதன் வேலை செய்தது சிறிய நிறுவனம் என்பதால், வேலை சீக்கிரமே முடிந்து விட்டது.
ஐபி அட்ரஸை எடுத்துப் பார்க்க, அது பூனாவில் காட்டியது.
‘அங்க இவனுக்கு என்ன வேலை?’ என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள் கண்மணி.
ஆனால் என்ன வேலையாக இருந்தாலும் சரி. நேரே சென்று பார்த்து விட வேண்டும் என்று நினைத்தவள், அடுத்த நாளே பூனாவில் வேலையை தேட ஆரம்பித்தாள்.
தொடரும்.
