அத்தியாயம் 3
![]()
ஒன்றரை மாதம் கடந்திருந்தது. கண்மணியின் திருமணம் நின்று. எல்லாம் இயல்புக்கு வந்து விட்டாலும், அவ்வப்போது சொந்தபந்தங்கள் பேசும் குத்தல் பேச்சு மட்டும் நிற்கவில்லை.
குமாரி பேசுவதையே நிறுத்தி விட்டார். தன் மகனை, கண்மணி சபையில் வைத்து அவமானப்படுத்தியப் பிறகு எப்படிப்பேசுவார்?
அவரது வயித்தெரிச்சலை சொந்தபந்தகளிடம் கொட்டி அனுப்பிக் கொண்டிருந்தார். அதுவும், முகவரி தவறாமல் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.
கண்மணி பூனாவில் வேலையை தேடி விட்டாள். அவளது படிப்புக்கு ஏற்ற வேலையையே கண்டு பிடித்தவள், உடனே கிளம்ப முடிவு செய்தாள்.
பூனாவில் தான் அவன் இருக்கிறான் என்றால், அதற்கு மேல் தாமதிக்க அவளுக்கு விருப்பமில்லை. ஒன்றரை மாதம் கடந்து விட்டது. ‘அவன் வேறு எங்கேயாவது போயிருந்தால்?’ என்ற கேள்வி வந்தாலும் கூட, அவன் அங்கு தான் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை இருக்கவே வேலையை தேடி முடித்து விட்டாள்.
பொற்றோரிடமும் விசயத்தை சொன்னாள்.
“நான் திரும்ப வொர்க் போகப் போறேன்பா” என்க, “இப்ப ஏன் வேலைக்கு? தரகர் ஒரு நல்ல வரன் கொண்டு வந்துருக்காரு” என்றார் பாலமணி.
அவரை திரும்பிப் பார்த்தவள், “திரும்ப எப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சீங்க?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“ஏன்டி.. ஒரு தடவ நின்னுடுச்சுனா அடுத்து பார்க்க மாட்டோமா? இதென்ன கேள்வி?”
“ஓஹோ.. பாருங்க. ஆனா என் கிட்ட சொல்லலயே?”
“பார்த்ததும் சொல்லலாம்னு இருந்தோம். நீ என்னடானா வேலைக்கு போறேன்னு வந்து நிக்கிற? இப்ப வேலை அவசியமா? கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பாரு..”
“இப்ப மாப்பிள்ளை பார்த்தீங்களா? இல்லையா?”
“பார்த்தாச்சு. நல்ல பையன். நல்ல வரன்”
“போட்டோ இருக்கா?” என்று அவரது பேச்சை இடைவெட்டி கேட்டாள்.
உடனே பாலமணி தன் கைபேசியில் இருந்ததை காட்டி விட்டு, “இவரு தான். பாரு.. உனக்கு பிடிக்கும்” என்று நீட்டினார்.
அதை வாங்கிப்பார்த்தவள், “இவனுக்கு என் கல்யாணம் மணமேடையில வந்து நின்னது தெரியுமா?” என்று கேட்டாள்.
“தெரியும். அதெல்லாம் பரவாயில்லனு சொல்லிட்டாங்க”
“அப்படியா?” என்று கேட்டவள், உடனே அவரது கைபேசியிலேயே தரகரை அழைத்தாள்.
“என்னமா? பையன் வீட்டுல பேசிட்டேன். அவங்க பொண்ணு பார்க்க வர்ரேன்னு சொல்லிருக்காங்க”
“மறுபடியும் மொதல்ல இருந்தா? தகரகரே நான் கண்மணி பேசுறேன்”
“நீயாமா? சொல்லுமா”
“இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கல. எனக்கு அமுதன தான் பிடிச்சுருக்கு. அவரு தான் என் புருஷன். அவர தேடிப்பிடிச்சு கூட்டிட்டு வாங்க. இல்லனா கம்முனு இருங்க. இனிமே மாப்பிள்ளைய தூக்கிட்டு வராதீங்க. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்”
படபடவென பொறிந்து கொட்டி விட்டு வைத்து விட்டாள்.
“ஏய் என்ன பேசுற?” என்று பதறினார் பாலமணி.
“இதான் உண்மை. அமுதன் என்ன ஆனார்னு எனக்கு தெரியனும். அவர பார்த்து இந்த விசயத்த முடிக்காம வேற எதுவும் பேசாதீங்க.. நான் மறுபடியும் வேலைக்கு போகப்போறேன். எங்கயாவது தூரமா வேலை கிடைச்சா நல்லா இருக்கும். இங்க இருந்தா சரி வராது” என்றவள் விறுவிறுவென அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னங்க இப்படி சொல்லுறா? அன்னைக்கு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க போறேன்னு சொன்னா. வந்து கம்ப்ளைண்ட் பண்ணல. வேணாம்னு விட்டோம்னு சொன்னா. சரி அதோட தொலைஞ்சதுனு பார்த்தா.. இப்ப இப்படி சொல்லிட்டு போயிட்டு இருக்கா? அந்த பையன், கல்யாணத்தன்னைக்கு காணாம போயிட்டான். வேற எதாவது நடந்திருந்தா கூட, மனச தேத்திக்கலாம். தானா போனவன தேடிப்பிடிச்சு கொடுனு கேட்குறா? நீங்களும் சும்மா இருக்கீங்க?”
பாலமணி கணவனை பிடித்து புலம்பித்தள்ள, ராஜகுமாரும் கூட அதை தான் யோசித்தார். மகள் அமைதியாக இருக்கவும் தான், அடுத்த திருமண பேச்சையே எடுத்தனர். ஆனால் அவள் அமுதனை மட்டுமே மனதில் நினைத்திருக்கிறாளோ?
“நீ என்ன ஏதுனு நல்லா கேளு. இல்லனா நானே பேசுறேன்” என்று விட்டார்.
ஆனால் பேச மகள் விட்டால் தானே?
“அமுதன மறக்க முடியல. அவ்வளவு தான் விசயம். கொஞ்ச நாள் என்ன விடுங்க” என்றதோடு முடித்து விட, பெற்றவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பாலமணி மகளிடம் பேசி போராடி ஓய்ந்து விட்டார். கண்மணி நல்ல மகள் தான். கோபம் வராத பட்சத்தில். கோபம் வந்து விட்டால் யார் பேச்சும் அவள் காதில் நுழையாது.
தாய் தந்தையை கூட தள்ளி வைத்து விட்டு முடிவெடுத்து விடுவாள். ராஜகுமார் மகளின் மீது நிறைய பாசம் வைத்திருந்தார். அவளது திருமணம் நின்றது அவரையும் பாதித்தது. ஆனால் அவள் முடிவின் மீது நம்பிக்கையும் இருந்தது.
அமுதன் அவர்கள் பார்த்த மாப்பிள்ளை தான். மறுப்பே இல்லாமல் கண்மணியும் தலையாட்டியிருந்தாள். ஆனால் திருமணம் நடக்கவில்லை.
கண்மணிக்கு கோபம் வந்து விட்டது. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்தார்.
ஆனால் பாலமணி வேறு சொன்னார்.
“இவ அமுதன் மேல ஆசை வச்சுட்டாங்க. அவளா மனசு மாறுற வரை விட்டு தான் பிடிக்கனும் போல?” என்று பெருமூச்சு விட்டார் பாலமணி.
இருவரின் நினைப்பையும் கண்டும் காணாமல் இருந்தாள் கண்மணி. இரண்டு நாட்களாக அவளது மனதை மாற்ற முயற்சித்து பெற்றோர் தோற்றதும், தனக்கு பூனாவில் வேலை கிடைத்ததை தெரியப்படுத்தினாள்.
அவ்வளவு தூரம் மகளை அனுப்ப இருவருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் அவள் கேட்க வேண்டுமே?
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கிளம்பிச் சென்று விட்டாள்.
விமானநிலையம் வரை வந்து விட்டுச் சென்ற பெற்றவர்கள், முடிந்த வரை அறிவுரை கூறி விட்டுக் கிளம்பினர்.
விமானத்தில் அமர்ந்திருந்தவளின் மனம் எல்லாம், அமுதனை பற்றிய சிந்தனை தான். புதிதாய் சேரப்போகும் வேலையை பற்றிக் கூட நினைக்கவில்லை.
இந்த வேலையே அவனை தேடுவதற்காக தானே?
‘என்னை அசிங்க படுத்திட்டு ஊர விட்டு ஓடிட்டா? வந்து பார்த்துக்கிறேன் உன்னை’ என்று நினைத்துக் கொண்டாள்.
முதலில் சற்று யோசனை தான். பூனாவில் இருந்து மின்னஞ்சல் வந்ததற்காக அவன் அங்கேயே இருப்பான் என்று சொல்ல முடியாதே? இருந்தாலும், எதோ ஒரு நம்பிக்கையில் வேலையை தேடி கிளம்பியிருந்தாள்.
சும்மாவே பூனா சென்று விசாரிக்கலாம். ஆனால் அது அவளுடைய பெற்றோர்களின் மனதை பாதிக்கும். ஓடிப்போனவனை தேடிப்போகிறாயா? என்று தடுப்பார்கள். இப்போது வேலை மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். அதுவே தற்போது போதுமானது என்று விட்டு விட்டாள்.
யோசனையுடனே பயணித்து, விமானத்திலிருந்து இறங்கியவளை, அழைத்துச் செல்ல அலுவலகத்திலிருந்து கார் வந்திருந்தது.
அவள் சேர்ந்த பணி மிகவும் பெரியது. சாதாரண வேலைக்கு அவள் சேரவில்லை. அதனால் அவளுக்கு வரவேற்பும் பலமாகவே இருந்தது.
காரிலேயே அலுவலகம் சென்று இறங்கியவள், வேலையில் சேர்ந்து கையெழுத்தும் போட்டு விட்டாள்.
“உங்களுக்கு வீடு வேணும்னா சொல்லுங்க மேடம் அரேன்ஜ் பண்ணி தர்ரோம்” என்று அந்த அலுவலக மேனேஜர் கேட்க, உடனே தலையாட்டியிருந்தாள்.
வேலையில் சேர்ந்ததற்கான ஃபார்மிலிட்டி அனைத்தும் முடிந்ததும், “எம்டிய பார்க்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றனர்.
கதவை தட்டி விட்டு உள்ளே சென்றனர்.
தொலைபேசியை காதில் வைத்தபடி குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவன், பேசி முடித்து வைத்து விட்டு நிமிர்ந்தான்.
“இவங்க தான் புது ஹெச் ஆர்” என்று மேனேஜர் காட்ட, யாழ்வேந்தன், “ஹலோ.. சிட்” என்று இருக்கையை காட்டினான்.
கண்மணி அவன் பெயரை படித்து விட்டு, “தமிழா?” என்று கேட்டாள்.
“ஆமா.. உங்க பேரு கண்மணில?”
தலையசைத்தபடி அமர்ந்து விட, மேனேஜர் வெளியேறி விட்டார்.
கண்மணிக்கு, வேலை சம்பந்தமான தேவையான விசயங்களை யாழ்வேந்தன் கூறினான். முதலில் பல வருட வேலை அனுபவம் இருந்ததால், அவளும் உடனே புரிந்து கொண்டாள்.
“நாளைக்கு வந்து ஜாயின் பண்ணா ஓகே. மேனேஜர் உங்களுக்கு செட்டில் ஆக ஹெல்ப் பண்ணுவார்” என்று கூறி அனுப்பி வைத்தான்.
கண்மணி உடனே சென்று ஒரு ஹோட்டலில் தங்கினாள். தன் வேலைகளை முடித்து விட்டு, பெற்றோர்களுக்கு விசயத்தை கூறி முடித்தவள், தன்னிடமிருந்த முகவரியை எடுத்தாள்.
அமுதன் எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்பினானோ, அந்த இடத்தின் முகவரி.
‘ஒரு வேளை இங்க எதுவும் கிடைக்கலனா?’ என்ற கேள்வி தலைக்குள் ஓடியது.
‘கிடைக்கிற வரை அவன விட மாட்டேன்’ என்று நினைத்தவள், உடனே கிளம்பியிருந்தாள்.
பிரவுசிங் சென்டர் அது. அங்கு சென்று அங்குள்ள கணினி ஒன்றில் அமர்ந்து, சில நிமிடங்கள் அந்த இடத்தை ஆராய்ந்தாள். எல்லாம் புது முகங்கள் தான்.
ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்தவள், பிறகு எழுந்து வந்தாள்.
அதே இடத்தில் சற்று நேரம் உலாவினாள். யாரிடமும் படத்தை காட்டி கேட்க தயக்கமாக இருந்தது. அமுதனின் படத்தை காட்டி பார்த்திருக்கிறாயா? என்று விசாரிக்கலாம் தான். ஆனால் தெரியாத ஊர் அல்லவா? சட்டென பேச தயங்கினாள்.
யாராவது “தெரியும் வா” என்று கூறி, அவளை ஏமாற்றவும் துணியலாம். அதனால் யாரிடமும் பேசாமல், சும்மாவே அந்த இடத்தை அலசினாள்
பசி வேறு எடுக்க, அருகே இருந்த ஹோட்டலில் நுழைந்து சாப்பிடவும் செய்தாள்.
மனம் மீண்டும் மீண்டும் இங்கு வந்தது சரியா? என்று யோசித்துக் கொண்டே இருக்க, வாசலில் எதோ சத்தம் கேட்டது.
யாரோ யாரையோ அடித்துக் கொண்டிருப்பது போன்ற சத்தம். மக்கள் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மேலும் சிலர் அங்கே கூடினர்.
கண்மணி எரிச்சலாக பார்த்து விட்டு, சாப்பிட்டு முடித்தாள். பில்லை கொடுத்து விட்டு வெளியே வர, கூட்டம் அவளுக்கு சுத்தமாய் வழி விடவில்லை.
‘இருக்கதுல இவங்க வேற.. நடுரோட்டுல சண்டை போட்டுட்டு.. இரிடேட்டிங் இடியட்ஸ்’ என்று மனதில் தாளித்துக் கொண்டே, கூட்டத்தை விலக்கி முன்னே நகர்ந்தாள்.
எந்த மொழியில் திட்டுகிறான் என்று தெரியாமலே ஒருவன் திட்டிக் கொண்டிருக்க, தரையில் கிடந்து ஒருவன் அடி வாங்கிக் கொண்டிருந்தான்.
‘இதெல்லாம் ஒரு பொழப்பு? இளைச்சவன் கிடைச்சா அடிக்க வேண்டியது’ என்று எரிச்சலாக நினைத்து திரும்பியவள், சட்டென நின்றாள்.
கூடத்தில் அமுதன்! படக்கென திரும்பிப் பார்க்க, அமுதன் முன்னால் வந்தான்.
கண்மணி அவனை பார்த்து அதிர்ந்து போனாள்.
சாலையோர ரவுடி போல இருந்தான். உள்பனியன் தெரியும் அளவு சட்டை பட்டன்களை திறந்து விட்டு, பரட்டை தலையோடு, கையில் சிகரெட்டோடு வந்தவனை பார்த்து, இதயமே நின்று விட்டது அவளுக்கு.
மடிப்பு கலையாமல் வெள்ளை சட்டையும் நீல ஜீன்ஸும் அணிந்து, அவளிடம் இரண்டொரு வார்த்தை பேசிய அதே அமுதன் இவனா?
அதிர்ச்சியில் அவள் உறைந்து போய் நின்று விட, அமுதன் அடிவாங்கி கீழே கிடந்தவனை சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தினான்.
அடிவாங்கியவன் எதற்கோ கெஞ்ச, அமுதன் எதோ கேட்க, எதுவும் கண்மணியின் காதில் விழவே இல்லை.
அடிவாங்கியவன் என்ன சொன்னானோ? அமுதன் ஓங்கி ஒரு குத்து விட்டான். மீண்டும் அவன் கீழே விழவும் தான், கண்மணிக்கு சுயநினைவே வந்தது.
“பணம் ஒழுங்கா வந்து சேரனும். இல்ல..!” என்றவன், ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.
அவன் அரைகுறையாக பேசிய மராத்தி மொழி கண்மணிக்கு விளங்கவில்லை. ஆனாலும், எதையோ கேட்டு மிரட்டுகிறான் என்று மட்டும் தெரிந்து கொண்டாள்.
இருவரும் மிரட்டி விட்டு சுற்றி நின்றிருந்தவர்களை முறைத்துப் பார்க்க, ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று நினைத்த கூட்டம் மடமடவென கலைந்து சென்று விட்டது.
கண்மணி மட்டும் அப்படியே நிற்க, அமுதனும் அவனுடன் இருந்தவனும் சிகரெட்டை பகிர்ந்து கொண்டபடி, திரும்பி நடந்தனர்.
அடிவாங்கிக் கிடந்தவன் தள்ளாடி எழுந்து, மறுபக்கம் போனான். கண்மணி அமுதனையே பார்த்திருந்தாள்.
“என் தம்பிக்கு எந்த கெட்டபழக்கமும் இல்ல” என்று கூறிய விநோதா, இவன் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை பார்த்தால் என்ன செய்வாள்? என்று யோசனை ஓடியது.
அமுதன் அங்கிருந்த பைக் அருகே செல்ல, கண்மணி உடனே அவனை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
“ஹேய்.. ஸ்டாப்..” என்று அவள் கத்த, அதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை.
மற்றவன் பைக்கை எடுக்க, அமுதன் பின்னால் ஏறிக் கொண்டான். கண்மணி ஓடி வந்த போதும், அருகே வரும் முன் கிளம்பி விட்டனர்.
சட்டென நின்றவள், அமுதனின் முதுகை வெறித்துப் பார்த்தாள்.
‘சோ இங்க தான் இருக்கான். ஆனா இவன் அவன் தானா? இல்ல அவன மாதிரி இருக்கிற வேற ஒருத்தனா?’ என்ற யோசனை உள்ளே ஓடியது.
குழப்பத்துடனே மனனம் செய்து வைத்த பைக்கின் எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, திரும்பி நடந்தாள்.
தொடரும்.
