அத்தியாயம் 4

Loading

ஹோட்டல் அறையில் கதவை பூட்டி, விளக்கை அணைத்து விட்டு மெத்தையில் விழுந்த கண்மணியின் மனதில், அமுதன் வந்தான்.

திருமணம் பேசும் போது, அவன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். கண்மணியை விட குறைவான சம்பளம் தான். ஆனால் அவனது தோற்றம், அவன் பேசும் விதம், அவனுடைய குடும்பம் எல்லாம் பிடித்துப்போனதால், உடனே சம்மதித்து விட்டனர்.

அமுதனும் கூட அவளிடம் இயல்பாக இரண்டொரு வார்த்தை பேசினான்.  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததும், அவனுக்கு வேலைகள் நிறைய இருப்பதாக கூறி விட்டான்.

திருமண வேலைகளை அவளது குடும்பத்தினர் தான் கவனித்தனர். அதாவது விநோதாவும் அவளது மாமியார் வீடும்.

விநோதாவிற்கு திருமணமாகும் வரை உயிரோடு இருந்த பெற்றோர்கள், அடுத்தடுத்து தவறி விட, தம்பியின் திருமண பொறுப்பு அவளிடம் வந்தது. தம்பியும் பொறுப்பற்றவன் அல்ல என்பதால், அவளுக்கு பெரிய சிரமங்கள் இருந்ததில்லை.

சொந்தமாய் அவனுக்கென வீடும் வேலையும் இருக்க, சந்தோசமாய் பெண் பார்க்க கிளம்பி விட்டாள். அப்படி பார்த்ததில் வந்தவள் கண்மணி.

கண்மணியின் அழகு ஏற்கனவே ஈர்த்திருக்க, அவளது குடும்பமும் பணத்தை பெரிதாக மதிக்காமல், குணத்தை மதித்தது அதிகமாய் பிடித்துப்போனது.

கண்மணி தான் அமுதனுக்கு ஏற்றவள் என்று முடிவு செய்து விநோதா தம்பியிடம் கேட்க, அவனும் தலையாட்டி விட்டான். அப்படி ஆரம்பித்த திருமண பேச்சு, நினைத்தபடி நடந்திருந்தால் இன்று திருமணம் முடிந்து ஒன்றரை மாதமும் கடந்திருக்கும்.

எல்லாமே நல்லபடியாக சென்ற போது, அமுதன் ஏன் திடீரென யாருக்கும் சொல்லாமல் கிளம்பினான்? அதுவும் நல்லிரவு.. யார் கண்ணிலும் படாமல், வேறு ஒருவன் உடையில் கிளம்பியிருக்கிறான்.

அப்படி செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவன் யாரையும் காதலித்து இருந்தால், விநோதாவிடம் நேரடியாக சொல்லி விடலாம். விநோதா ஒன்றும் காதலுக்கு எதிரியாக இருக்கப்போவது இல்லை. தம்பியின் மீது உயிரை வைத்திருந்தாள்.

அப்படி காதல் இல்லாத பட்சத்தில், வேறு எதற்காக திருமண மண்டபத்தை விட்டு யாருக்கும் சொல்லாமல் ஓட வேண்டும்?

இது என்ன மர்மம் என்றே புரியவில்லை அவளுக்கு. ஆனால், அப்படி ஓடியவனை தேடி இங்கு வரை வந்து நிற்கிறாள்.

சாலையில் பார்த்தவன் அமுதன் தானா? அந்த அமைதிக்கும் இந்த அடிதடிக்கும் என்ன சம்பந்தம்?

அவனாக இருந்தால் சரி. அவனில்லாமல் அவனை போல இருக்கும் வேறு ஒருவனாக இருந்தால்?

யோசித்து களைத்து உறங்கியும் விட்டாள். அடுத்த நாள் காலை அலுவலகம் சென்று சேர, அங்கு அவளுக்கான ஃப்ளாட் ஒன்றை காட்டினர்.

“இந்த இடம் நம்ம ஆஃபிஸ்க்கு தூரம் தான். உங்களுக்கு ஓகேவா?”

“சேரிங்கா?”

“எஸ்”

“ஓகே.. நோ ப்ராப்ளம்.” என்று கூறி விவரங்களை வாங்கிக் கொண்டாள்.

வேலையை உடனே ஆரம்பித்து விட்டாலும், உள்ளே அமுதனின் எண்ணம் இல்லாமல் இல்லை.

முதல் நாள் பெரிதாய் வேலை எதுவும் இல்லாததால், இருந்ததை முடித்து விட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் கதவை தட்டி விட்டு வந்தான் யாழ்வேந்தன். எதோ ஒரு ஃபைலை கொடுக்க வந்தவன், அவளது முகத்தை பார்த்து விட்டு, “அதுக்குள்ள வீட்டு நினைப்பா?” என்று சிரித்தபடி கேட்டான்.

“ஹான்?” என்று ஒரு நொடி குழம்பியவள், பிறகு புரிந்து கொண்டு மறுப்பாக தலையசைத்தாள்.

“ஆனா ஃபேஸ் டல்லா இருக்கே. ஹோம் சிக்னஸ் எல்லாருக்கும் இருக்கது தான். சீக்கிரமா பழகிடும்”

ஆறுதலாய் பேசியவனிடம் உடனே விசயத்தை சொல்ல முடியாமல், புன்னகைத்து விட்டு அவன் வந்த காரணத்தை விசாரித்தாள். அவனும் வேலையை பற்றிப்பேச, இருவரும் வேலைக்குள் புகுந்தனர்.

பேசி முடித்து கிளம்பும் போது, “உனக்கு வீடு அரேன்ஜ் பண்ணியாச்சா?” என்று கேட்டான்.

“ம்ம்.. ஒரு ஃப்ளாட் சொன்னாங்க. சேரிங்க்ல..”

“அதான் சேஃப். தனியா இருக்க முடியாது”

கண்மணி தலையாட்டி விட்டு, “நீங்க எத்தனை வருசமா வொர்க் பண்ணுறீங்க?” என்று அவனை பற்றி விசாரித்தாள்.

“இந்த கம்பெனில படிச்சு முடிச்சதுமே ஜாயின் பண்ணிட்டேன். பட் இங்க வந்து ரெண்டு வருசம் தான் ஆகுது.”

“மேனேஜிங் டைரக்டரா வர்ரது சும்மாவா? பெரிய அச்சீவ்மெண்ட் தான்” என்று பாராட்டுதலாக அவள் பேச, யாழ்வேந்தன் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்.

“உங்கள எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க? எம்.டி சார்னா? இல்ல பேர் சொல்லியா?”

“ரெண்டும் தான். வேந்தன் சார்னு கூப்பிடுவாங்க”

“ஓகே வேந்தன் சார்”

“சரிங்க கண்மணி மேடம். இப்ப வேலைய பாருங்க. வீட்ட பத்தி அப்புறம் நினைக்கலாம்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

கண்மணி வீட்டை பற்றியா நினைக்கிறாள்? அமுதனை தானே நினைத்தாள். அவனை சந்திக்க வேண்டும் என்பதில், இன்னமும் உறுதி குறையவே இல்லை.

அன்றைய நாள் அவளோடு வேலை செய்யும் மற்றவர்களின் அறிமுகத்தோடு ஆரம்பித்து, வேலையை முடித்ததோடு முடிந்தது.

ஹோட்டல் சென்று அறையை காலி செய்தவள், அவளிடம் கொடுத்த வீட்டு முகவரியை நோக்கிச் சென்றாள். போகும் வழியில், நேற்று அமுதன் சண்டை போட்ட இடத்தை கடந்து தான் சென்றாள்.

அவளால் அவனது தோற்றத்தை கண்டு குழப்பமடையாமல் இருக்கவே முடியவில்லை. இரண்டும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறதே. இதில் எது பொய்? எது உண்மை?

இருவரும் ஒருவனாக இருந்தால், நிச்சயமாக எதோ ஒன்று பொய் தான். ஆனால் வெவ்வேறு ஆளாக இருந்தால்? யோசனைகள் குறையாமல் வளர்ந்து ஓடியது.

பயணம் முடிந்து வீடு சென்று சேர, அங்கு ஏற்கனவே ஒரு பெங்காலி பெண் தங்கியிருந்தாள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தான். இரண்டு அறை கொண்ட ஃப்ளாட் அது. ஒரு அறையை கண்மணிக்கு கொடுத்து விட்டாள் அவள்.

கண்மணி அவளிடம் நட்பாக பேசினாலும், மனதில் அமுதன் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தான்.

இரவு உணவை ஆர்டர் செய்து வாங்கி உண்டு விட்டு, சில நிமிடங்கள் டிவியை பார்த்து விட்டு, அறைக்கு வந்தாள். பெங்காலி பெண்ணுக்கு இரவு நேர வேலை. மதியமே சென்று விட்டாள். அவளிடம் சாவி இருப்பதால் தானாக வந்து விடுவாள்.

கண்மணி கதவை பூட்டி விட்டு படுத்துக் கொண்டாள்.

வேலையில் உடல் களைத்திருந்தாலும், தூக்கம் வருவதாக இல்லை. வேலையும் கெடாமல் அமுதனை பற்றியும் விசாரிக்க வேண்டும். எப்படிச் செய்வது? என்று பலவாறு யோசித்துக் கொண்டே படுத்திருந்தாள்.

*.*.*.*.*.*.

அந்த அறையில், சலசலப்பு கொஞ்சமும் இல்லாமல் வேலை நடந்து கொண்டிருந்தது.

அங்காங்கே எரிந்த குண்டு பல்ப் தவிர, வேறு எதுவும் வெளிச்சத்திற்கு இல்லை. ஆனால் அப்போதும் தடுமாறாமல், இருபது பேருக்கும் மேல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

வேலை முடிந்து அடுக்கப்பட்ட பெட்டிகளை எடுத்துக் கொண்டு இருவர் அறையை விட்டு வெளியே வர, அமர் திரும்பிப் பார்த்தான்.

அங்கு நின்றிருந்த வண்டிக்குள் பெட்டிகள் ஏற்றப்பட்டது.

“அமர் சாப்..” என்று வந்த ஒருவன் சாவியை நீட்ட, அமர் வாங்கிக் கொண்டான்.

கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சரக்கோடு கிளம்பி விட்டதாக அவனை அனுப்பி வைத்தவன், அவனது முதலாளியிடம் தெரிவித்தான்.

“யார் போறா?”

“அமர்”

அதோடு பேச்சு முடிந்து போனது.

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் கைபேசியில், ஹிந்தி பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அதோடு சேர்ந்து பாடிக் கொண்டு.. இல்லை கத்திக் கொண்டே வாகனத்தை ஓட்டினான்.

இந்த அமர் தான், அமுதனின் தோற்றம் கொண்டவனாக காலையில் கண்மணி பார்த்திருந்தாள்.

அவன் இப்போது பாடலை கத்தியபடி டெம்போவை ஓட்டிக் கொண்டிருக்க, இடையில் காவல்துறையினர் வழிமறித்தனர்.

வண்டியை நிறுத்தியவன், தலையை மட்டும் வெளியே நீட்டி அங்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டரை பார்த்தான்.

“இன்ஸ்பெக்டர் சாப்..” என்று கத்தி அழைத்து வணக்கம் வைக்க, உடனே திரும்பினான் இன்ஸ்பெக்டர்.

அமரை டார்ச் அடித்து பார்த்து விட்டு, “அனுப்பி விடு” என்பது போல் சைகை செய்தான் அந்த காவலாளி.

உடனே வழிமறித்த போலீஸ் நகர்ந்து விட, அமர் மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்து விட்டு பாடலை கேட்டு விசிலடித்தபடி கிளம்பி விட்டான்.

மீண்டும் ஒரு மணி நேர பயணம் கடக்க, சேர வேண்டிய இடத்தை அடைந்தான்.

அங்கு ஏகப்பட்ட கண்டெய்னர்கள் லாரிகள் இருக்க, இவனது டெம்போ உள்ளே நுழைந்தது.

வண்டியை நிறுத்தியதுமே அவனை நோக்கி இருவர் வர, அவர்களிடம் சாவியை தூக்கிப்போட்டு விட்டு, பாக்கெட்டில் கை விட்டபடி சென்றான்.

சிறிய அலுவலக அறை ஒன்று அங்கு ஓரமாக இருக்க, உள்ளே சென்றான்.

அங்கு அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த க்ரூணால் சர்மா, கண்ணாடியை சரி செய்தபடி அவனை பார்த்தார்.

“சர்மா சாப்.. எப்படி இருக்கீங்க?” என்று அமர் குசலம் விசாரிக்க, அவர் ஒன்றும் பேசாமல் ஒரு நோட்டை எடுத்து வைத்தார்.

அமர் கையெழுத்திட, “நான் சொன்னத பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்டார்.

“என்னைய விட்டுருங்க. எனக்கு அதெல்லாம் செட்டாகாது” என்றவன், கையெழுத்து போட்டு நிமிர்ந்தான்.

“எவ்வளவு நாள் தப்பிக்கிறனு பார்க்குறேன்” என்றவர் முறைக்க, அமர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.

நள்ளிரவு இரண்டு மணி. குளிர் வாட்டி எடுத்தது. இதமாக சிகரெட் பிடிக்க ஆசை தான். ஆனால் க்ரூணால் பார்த்தால் துரத்தி அடிப்பார்.

கையை தேய்த்துக் கொண்டு அவன் நடக்க, அவன் கொண்டு வந்த டெம்போவிலிருந்த பொருட்கள் இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே பார்த்து கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்தான். காற்றும் குளிரும் உடலை துளைக்க, அதில் நடப்பதே சுகம் தான். பத்து நிமிடத்தில் தூரத்திலிருந்து அவனை அழைக்கும் குரல் கேட்டது.

உடனே திரும்பிச் சென்றான். சாவியை அவனிடம் கோடுத்து விட்டு, இடத்தை காலி செய்தனர்.

இனி, வண்டியை எடுத்த இடத்தில் மீண்டும் விட்டு விட்டு தான் வீடு திரும்ப வேண்டும்.

அமர் சலித்துக்கொள்ளவில்லை. அவனுக்கு இந்த இரவு நேர பயணங்கள் தான் அதிக விருப்பம். காலையில் ஏகப்பட்ட இரைச்சலுக்கு நடுவே வண்டி ஓட்டுவது என்றால், எரிச்சல் தார் வரும்.

டெம்போவில் ஏறி அமர்ந்தவன், க்ரூணாலை பார்த்து கையாட்டி விட்டு மீண்டும் பாடலை கத்தியபடி கிளம்பியிருந்தான்.

எடுத்த இடத்தில் சென்று நின்றவன், வண்டி இன்ஜினை அணைத்து விட்டு அப்படியே அமர்ந்திருந்தான்.

அவன் பக்கம் வந்த ஒருவன் வண்டியை தட்ட, பாடுவதை விட்டு திரும்பி பார்த்தான்.

மணீஷ் அவனை பார்த்து புன்னகைக்க, உடனே பாடலை நிறுத்தினான் அமர்.

“மணீஸ்.. எப்ப வந்தீங்க?” என்று ஆர்வமாக கேட்க, “இப்ப தான்” என்றான்.

“நீ ஏன் இங்கயே உட்கார்ந்துருக்க? வேலை முடிஞ்சதுனா வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான?”

“வீட்டுக்கா?” என்று கேட்டவனின் முகம் அஷ்டகோணலானது‌.

மணீஸ் அவனை கேள்வியாக பார்க்க, “அங்க ஒரு பேய் எனக்காக உட்கார்ந்துருக்கும். இன்னைக்கு நைட் இங்க தான்” என்றான்.

“பேயா? முதல்ல கீழ இறங்கு” என்றதும், அமர் வெளியே குதித்தான்.

“என்ன பேய்?”

“என் வீட்டு கீழ் வீட்டுக்காரன். அவன் கிட்ட கடன் வாங்கிருக்கேன். அத திருப்பி தர சொல்லி நடுராத்திரி கதவ தட்டுவான்.”

“ஏன் எல்லாரு கிட்டயும் கடன் வாங்குற நீ?”

“காசில்லனா கடன் தான வாங்கனும்?”

“உனக்கு சம்பளம் கொடுக்குறாங்களே”

“அதான் பத்தலயே.”

“நான் வேணா தரவா?”

“வேணாம். உங்கள விட்டும் ஓடுற மாதிரி ஆகிடக்கூடாது. நாளைக்கு சம்பளம் தந்துடுவாங்க. அப்ப பார்த்துக்கிறேன்”

மணீஸ் சிரித்தான். அமர் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்காமல் ஓடுவது, இன்று நேற்றய பழக்கமில்லை. வருடக்கணக்கில் நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் சம்பளம் வந்ததும், திருப்பிக் கொடுத்து விடுவான். அதன் பின் கையில் பணமிருக்காது. மீண்டும் கடன் தான்.

“ரொம்ப குளுருதுல? ஒரு தம்?” என்று சிகரெட்டை எடுக்கப்போக, மணீஷ் ஒரு எத்து விட்டான்.

“ஆஆ..” என்று சன்னமாய் அலறி அவன் தேய்த்துக் கொள்ள, மணீஷ் வீரல் நீட்டி எச்சரித்தான்.

“குளுருதேனு சொன்னேன்…” என்று அமர் கையை விரிக்க, “அதுக்கு சிகரெட் தான் வேணுமா? டீ குடிக்கலாம் வா” என்றவன், அமர் தோளில் கை போட்டு இழுத்துச் சென்றான்.

அவர்கள் வேலை செய்யும் இடத்தின் அருகே, எப்போதும் திறந்திருக்கும் தேநீர் கடையை நோக்கிச் சென்றனர்.

தொடரும்.

Leave a Reply