அத்தியாயம் 7
![]()
க்ரூணால் வேலையில் கவனமாக இருக்க, அமரிடமிருந்து அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
“சொல்லு அமர்”
“யாருனு எதாவது தெரிஞ்சதா?”
“யார சந்தேகப்படனு தெரியல அமர். ஆனா யாரோ கூட இருக்கவன் தான்.”
“விசாரிங்க.”
“நீ என்ன பண்ணுற?”
“கடை வாடகை கொடுக்கல ஒருத்தன். அவன விசாரிக்க ராகேஷ் கூட வந்துருக்கேன்”
“அவன் கூட சுத்ததானு எத்தனை தடவ சொல்லுறது உனக்கு?”
“சர்மா சாப்.. அவன் என் ஃப்ரண்ட்”
“அவன் செய்யுறது வேற வேலை. நீ செய்யுறது வேற. உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன். அவன் கூட அடிதடிக்கு போகாத. அவ்வளவு தான்”
“நான் அப்புறம் பேசுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
“இந்த பையன..” என்று சலித்துக் கொண்டார் க்ரூணால்.
அவருக்கு ராகேஷை சுத்தமாக பிடிக்காது. போதை பொருள் பயன்படுத்துவான். எந்த நேரமும் அடிதடி தான் செய்வான். பக்கா ரௌடி அவன் தான்.
எல்லோரும் ஒரே கூட்டத்தில் தான் வேலை செய்கின்றனர். ஆனால் தனித்தனி பிரிவு. அவரவர் தகுதிக்கும் குணத்திற்கும் ஏற்ப தான் வேலை.
க்ருணால் போக்குவரத்தை மட்டும் தான் பார்த்துக் கொள்கிறார். அதனால் அதில் அமரை சேர்த்தார். அவனை வளர்த்து, மகளை கட்டி வைக்கும் ஆசை வேறு இருக்கிறது.
அந்த ராகேஷுடன் சேர்ந்து அடிதடியில் அமரும் இறங்கி விட்டால், அவரது ஆசையில் மண் விழுந்து விடுமே. அதனால் தான் ராகேஷிடமிருந்து அமரை பிரிக்க போராடிக் கொண்டிருந்தார்.
அவரது கவலையை கண்டு கொள்ளாமல், அமர் ராகேஷுடன் தான் நின்றிருந்தான்.
கண்மணி சென்ற காரில் விழுந்தவனை தான், இப்போது மிரட்டிக் கொண்டிருந்தனர். பாபு பையாவின் கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்தவன், வாடகை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு நாள் ஊரை விட்டு ஓடி விட்டான்.
மூன்று வருடங்கள் கழித்து இன்று மாட்டியிருக்க, அதற்காக தான் அடி வாங்கிக் கொண்டிருந்தான்.
“விட்டுருங்க.. எப்படியாவது பணத்த கொடுத்துடுறேன்” என்று அவன் கெஞ்சிக் கொண்டிருக்க, ராகேஷ் தன் வெறியை எல்லாம் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
அமர் அவனை பிடித்து நிறுத்தி விட்டு, “இவன் செத்து போயிட்டா பணம் எப்படி வரும்?” என்று கேட்ட பின் தான் ராகேஷ் நிதானித்தான்.
ஆனால் அவன் உட்கொண்டிருந்த போதை வஸ்து, அவனை இன்னும் தடுமாற வைத்துக் கொண்டு தான் இருந்தது.
“எந்திரி”
அடி வாங்கியவன் எழுந்து நிற்க, “போ.. இன்னும் ஒரு வாரத்துல உன்னையே வித்தாச்சும் பணம் கரெக்ட்டா வந்து சேரனும். மறுபடியும் ஓட நினைச்சனா, எங்காளுங்க தூக்கிட்டு வந்து கொன்னுடுவாங்க. போ” என்று கூறி துரத்தி விட்டான்.
ராகேஷுக்கு மீண்டும் போதை வேண்டும் போல் இருந்தது.
“ப்ச்ச்.. என் கிட்ட இல்ல. வீட்டுக்கு போகனும்” என்றவன் பைக்கை நோக்கி நடக்க, “இந்த நிலைமையில ஓட்டுனா செத்துடுவ” என்று நிறுத்தினான் அமர்.
“நீ ஓட்டு” என்று அவனிடம் சாவியை கொடுத்து விட்டு, ராகேஷ் பின்னால் ஏறிக் கொண்டான்.
..........
கண்மணி நேராக தன் கேபினுக்குள் செல்லாமல், யாழ்வேந்தனை தேடிச் சென்றாள்.
அவன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்க, கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.
அவன் பேசி முடித்ததும், கையோடு கொண்டு வந்திருந்த டப்பாவை நீட்டினாள்.
அவனுடையது தான். ஆனால் அதில் இப்போது பக்கோடா இருந்தது.
“பார்ரா..! கொடுக்கல் வாங்கலா?”
“அதான் இல்ல. அம்மா அப்பா வந்துருந்தாங்க. எனக்காக செஞ்சாங்க. போனா போகுது டப்பாவ காலியா கொடுக்க வேணாமேனு, இதுல போட்டு எடுத்துட்டு வந்தேன்”
“தாராள மனசு தான். தாங்க்ஸ்”
“எனக்கு உங்க கிட்ட பேசனும். ஃப்ரி ஆகிட்டு பேசலாம்” என்றதும், யோசனையோடு தலையாட்டி வைத்தான்.
கண்மணி தன் வேலையை பார்த்தாள். மாலை வரை வேலை கழுத்தை நெறித்துக் கொண்டு தான் இருந்தது. வேலை நேரம் முடிந்ததும், வேந்தனே அவளை தேடி வந்தான்.
“என்ன விசயம் பேசனும்?” என்றே அவன் நேரடியாக கேட்க, “இந்த ஊர பத்தி” என்றாள்.
“ஊருக்கு என்ன? நல்ல ஊர் தான்”
“அப்ப அந்த பாபு பையா?”
வேந்தன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
“இத பத்தி யாரு உன் கிட்ட சொன்னது?”
காலையில் நடந்ததை கூறினாள்.
“அவ்வளவு பெரிய ரௌடியா அந்த பாபு?”
“ரௌடினு சொல்ல முடியாது. ஆனா அவன் கிட்ட இருக்க ஆளுங்க எல்லாம் அப்படி தான் நடந்துக்குறாங்க”
“ஆனா அந்த பாபுவ யாரும் பார்த்ததே இல்லையாமே?”
“ம்ம்.. வெளிய எங்கயும் வர மாட்டான். எதாவது பெரிய விசேசத்துக்கு அவனுக்கு இன்விடேஷன் போனாலும், அவனோட ரைட் ஹேண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் தான் வருவான்”
“தமிழ் சினிமால வர்ர ரௌடிங்க மாதிரி சொல்லுறீங்க?”
“கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா படத்துல கொலை பண்ணுற மாதிரி காட்டுவாங்க. இங்க கொலை எதுவும் நடக்காது. அப்ப அப்ப பணம் கொடுக்காம ஏமாத்துறவன, நடு ரோட்டுல போட்டு வெளுப்பாங்க. அவனுங்க தலைய அடமானம் வச்சாவது பணத்த எப்படியாவது செட்டில் பண்ணனும்னு ஓடுவானுங்க”
“போலீஸ் ஒன்னும் பண்ணாதா?”
“யாராச்சும் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்ல? கொடுக்க மாட்டாங்க. இங்க எவ்வளவு பயம் இருக்கோ, அவ்வளவு மரியாதையும் வச்சுருக்காங்க. போலீஸ் என்ன செய்ய முடியும்?”
“இவ்வளவும் பண்ணிட்டு தலைமறைவா வேற இருக்கான் அந்த பாபு.. இன்ட்ரஸ்டிங்”
“ஆக்ட்சுவலி பாபு அவன் ஒரிஜினல் பேரில்லை.”
“வாட்?”
“மரியாதைக்காக பாபுனு கூப்பிட ஆரம்பிச்சு, அது அப்படியே பாபு பையாவா மாறிடுச்சுனு கேள்வி பட்டேன். பட் நல்ல மனுசன்னு தான் சொல்லுறாங்க. ஏமாத்ததாத வரை”
“சொத்தும் பணமும் இருந்தா ரோட்டுல ஒருத்தன அடிக்கலாமா? கட்டப்பஞ்சாயத்து தான இதுவும்?”
“இவங்க போய் பணம் கேட்க போய் தான அவனும் கொடுக்குறான். இவங்க கேட்காம இருந்துட்டா, அவன் எப்படி அடிக்க முடியும்? இவங்களே வளர்த்து விட்டுட்டு, இப்ப இவங்களே அவஸ்தையும் படுறாங்க.”
“வாஸ்தவம் தான். இவங்களே அவன டான் ஆக்கிட்டு இருக்காங்க”
“உனக்கு ஏன் இந்த விசயத்துல இவ்வளவு இன்ட்ரஸ்ட்?” என்று கேட்க, கண்மணியின் மனதில் அமர் தோன்றி மறைந்தான்.
“ஊருக்குள்ள இருக்க போறோம். எத்தனை வருசம் எத்தனை மாசம் இங்க இருப்பேன்னு தெரியாது. சுத்தியிருக்கத தெரிஞ்சுகிட்டா பாதுகாப்பா இருக்கலாம்ல?”
“அவங்க சம்பந்தமில்லாதவங்கள எதுவும் பண்ண மாட்டாங்க. நாம நம்ம வேலைய பார்த்தா போதும். பணம் வாங்குறவன் தான் கவலை படனும்”
“யாருக்கு தெரியும்? நாளைக்கு எனக்கே திடீர்னு பத்து கோடி தேவைப்படலாம். நானும் அந்த பாபு பையா கிட்ட போய் நிக்கலாம்.”
“அதுக்கு ஏன் அங்க போற? நான் தர்ரேன்”
“ரொம்ப நன்றி. கொடுங்க” என்று கண்மணி கையை நீட்ட, “செக்கா? கேஸா?” என்றான் அவன்.
“செக்காவே கொடுங்க. கேஸ் சேஃப்டி இல்ல”
“நேரா ரிசர்வ் பேங்க்குக்கே எழுதி தரட்டுமா? போய் வாங்கிக்க”
“ரிசர்வ் பேங்க்ல அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா? வாவ்..! வாட் அ ரிச் ஃபேமிலி”
கை தட்டி கண்மணி சிரிக்க வேந்தனும் சிரித்து விட்டு, “சரி கிளம்பு. பை” என்றவன் முதலில் கிளம்பியிருந்தான்.
கண்மணியும் பல பல குழப்பங்களோடு வீடு சென்று விட்டாள்.
........
அந்த வாரமும் கடந்து போயிருக்க, வார இறுதி வந்தது. இந்த வாரம் அமுதனின் முகவரியை தேடும் முயற்சியில் இறங்கினாள் கண்மணி.
அவனது எண்ணை ஹேக் செய்ய முடியவில்லை என்று கூறி விட்டாள் ரியா. அமுதன் அனுப்பிய லின்க்கை தொடவே இல்லை.
அவனது எண்ணுக்கு எதாவது அழைப்பு வந்தால் மட்டும், கண்டு பிடித்து சொல்வதாக சொன்னாள்.
அப்போதும் அமர் பல இடங்களில் சுற்றிக் கொண்டிருக்க, எது அவனுடைய வீடு என்று புரியவில்லை.
“ரெசிடன்சல் ஏரியாவா பார்த்து தேடுங்க.” என்றவள் சில முகவரிகளையும் கொடுத்தாள்.
பஜார் ஏரியாக்களை எல்லாம் கழித்து விட்டு, மிச்சமிருந்த குடியுருப்பு ஏரியாக்கள் நான்கை எடுத்தாள்.
ஒவ்வொரு முறையும் ஒரு இடத்திற்கு செல்வதாக முடிவு செய்திருந்தாள்.
முதல் முகவரியை எடுத்தவள், டாக்ஸி பிடித்து பல அதிர்ச்சிகளை சந்திக்க கிளம்பி விட்டாள்.
........
ஹிந்தி பாடல் ஒன்றை விசில் அடித்து பாடிக் கொண்டே, அமர் அவர்களிடத்துக்கு வந்தான்.
இன்றும் வாகனம் ஓட்டும் வேலை தான். எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்க, வேலை செய்யும் இடத்திற்குள் சென்றான்.
ரகரகமாய் விதவிதமாய் துப்பாக்கிகள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தும் துணிகள் நிறைந்த பெட்டியில் வைத்து மறைக்கப்படது.
நான்கு பெட்டிகள் துப்பாக்கியோடு ஏற்றப்பட, மற்ற எல்லாம் வெறும் புத்தாடைகள். ஜவுளி கடைக்கு சரக்கு கொண்டு செல்லும் வண்டி போல அதுவும் ஊருக்குள் செல்லும்.
அமர் வெறுமென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். புத்தாடைகளை போட்டு துப்பாக்கியை ஒருவன் மறைத்துக் கொண்டிருக்க, அதிலிருந்து ஒரு சட்டையை எடுத்தான்.
“நல்லா இருக்கே..” என்றபடி திருப்பித்திருப்பி பார்க்க, “சரக்க கொடுத்ததும் சர்மா சாப் கிட்ட சொல்லிட்டு எடுத்துக்க” என்றான் அடுக்கியவன்.
“ஓகே. இத முன்னாடி வை” என்றவன் திரும்பி வெளியே சென்றான்.
கதவின் அருகே யாரோ நிற்பது போன்று தோன்ற, பட்டென கதவை திறந்து பார்த்தான். யாருமில்லை.
அமர் குழப்பத்தோடு நிற்க, அவனது கைபேசி இசைத்தது.
“சர்மா சாப்..?”
“ராகேஷ் செத்துட்டான் அமர்”
“என்ன சொன்னீங்க?” என்று கேட்டவனுக்கு பேரதிர்ச்சி.
“ராகேஷ யாரோ கொன்னுட்டாங்க”
“எப்போ? எப்படி? நீங்க எங்க இருக்கீங்க?”
“என்ன அமர்? என்ன விசயம்?” என்று கேட்டபடி வந்தான் மணீஷ்.
“ராகேஷ் செத்துட்டானாம்” என்றவன், வேகமாக வெளியே ஓடினான்.
அவனோடு மணீஷும் வந்தான். இருவரும் பைக்கில் ஏறி உடனே கிளம்பினர்.
ராகேஷின் வீடு தனி வீடு. அவனுக்கு மக்களை பார்ப்பதே பிடிக்காது. அதிக நேரம் போதையில் இருப்பதால், அவனால் அடுத்தவர்களை பார்த்தால் சும்மா இருக்கவும் முடியாது.
தனி வீடு ஒன்று வாங்கி அதில் தான் இருந்தான். இப்போது அந்த வீடு எரிந்து போயிருந்தது.
கருகிப்போய் கிடந்த வீட்டை பார்த்ததும், பைக்க பூட்டக்கூட தோன்றாமல் மணீஷிடம் விட்டு விட்டு அமர் உள்ளே ஓடினான்.
மணீஷ் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டு வாசலில் நின்றிருந்தான்.
வீடு கருகிப்போயிருந்தது. தீயணைப்பு துரையினர் தங்களது வேலையை முடித்து விட்டிருந்தனர்.
ராகேஷின் எரிந்த உடலை வாகனத்தில் ஏற்ற, அமரின் கண்கள் கலங்கி கண்ணீர் வந்து விட்டது.
“அமர்..” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார் க்ருணால் .
“யாரு இப்படி பண்ணிருப்பா?”
“தெரியல. கண்டு பிடிக்கலாம்”
அமர் ராகேஷை பார்த்தபடியே நின்று விட, அவனை சுற்றியிருந்த வேலைகள் வேகமாக நடந்து முடிந்தது. வாகனம் கிளம்பி விட்ட பிறகே, அமருக்கு சுயநினைவு வந்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்ப, மணீஷ் அவன் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான்.
“பாவம் ராகேஷ்.. இந்த வீட்டுல அவனோட லவ்வரோட வந்து வாழனும்னு அவ்வளவு கனவோட இருந்தான்” என்ற அமருக்கு மனம் பொறுக்கவில்லை.
“உள்ள சிலிண்டர் வெடிச்சுருக்கு அமர்”
“சிலிண்டரா?”
“ஆமா.. மத்தவங்க சொல்லிட்டு போனத கேட்கலயா?”
அமரின் முகம் ஒரு நிமிடம் யோசனைக்கு சென்று மீண்டது.
பிறகு பரபரப்புடன் க்ருணாலை தேடினான்.
“சர்மா சாப் எங்க?”
“ஏன்?”
அவனது பரபரப்பை பார்த்து மணீஷ் கேள்வியாக கேட்க, “ராகேஷுக்கு சமைக்கவும் தெரியாது. அவன் வீட்டு கிச்சன்ல கேஸ் சிலிண்டரும் கிடையாது. அதெப்புடி திடீர்னு முளைச்சது?” என்று ஒரு வேகத்துடனும் கோபத்துடனும் சொன்னவன், உடனே க்ருணாலை தேடி நகர்ந்தான்.
மணீஷ் அதிர்ந்து ஒரு நொடி நின்று விட்டு, அமர் சென்ற திசையை பார்த்தான்.
அமர் உடனே க்ருணாலை பிடித்து விசயத்தை சொல்ல, க்ரூணால் பெருமூச்சு விட்டார்.
“இது கொலை தான்னு சும்மாவே தெரியுது. எவிடன்ஸ் எடுக்கலாம். நம்ம ஏசி கிட்ட பேசுறேன்.”
“யாருனு மட்டும் தெரியட்டும்.. அவன உயிரோட வச்சு கொளுத்திடுறேன்” என்று சூளுரைத்தான் அமர்.
........
கண்மணி தேடி வந்த குடியிருப்பு பகுதியில் நின்றாள்.
ஆட்கள் நடமாட்டம் இருந்தது. டாக்ஸியை விட்டு இறங்கியவள், அதை போகச் சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
காரை கழுவிக் கொண்டிருந்த ஒருவரிடம் வந்தவள், “ஒரு நிமிஷம்.. இவர உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
திரும்பிப் பார்த்தவர், “அமர்.. என் வீட்டுக்கு மேல் வீட்டுல தான் இருக்கான். நீ யாரு?” என்று கேட்டார் அவர்.
தொடரும்.
