அத்தியாயம் 9

Loading

கண்மணி திரும்பி நின்று கொண்டாள்.

‘அவ்வளவு வசனம் பேசிட்டு, கம்முனு நின்னுட்டோமே’ என்று நினைத்தவளுக்கு வெட்கமாய் இருந்தது.

அமுதனும் தலையை தேய்த்துக் கொண்டான்.

‘கோபப்படுவாளோ?’ என்ற பயம் அவனுக்கு.

திரும்பி நின்றிருந்தவள் அருகே சென்றான்.

“கண்மணி..” என்று அழைக்க, அவளிடம் பதில் இல்லை.

“கோபமா?” என்று கேட்டவன் பின்னாலிருந்து அணைக்க, உடனே கையை தட்டி விட்டாள்.

“இதுக்கு தான் உன்னை கிளம்ப சொல்லுறேன். கிளம்பு போ” என்க, வேகமாக அவன் பக்கம் திரும்பினாள்.

“போனா? எப்படி? டாக்ஸிக்கு கொடுக்க கூட பணமில்ல. என் காச கொடு போறேன்”

“அத்தான் கிட்ட சொல்லுறேன் போட்டு விட்டுவாரு”

“எடுத்தது நீ. கொடுக்குறது உன் அத்தானா? நீ ஏன் இப்படி கடன் வாங்கிட்டு சுத்துற?”

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது”

“ஓஹோ அதான் அங்க இருந்து சொல்லாம ஓடி வந்தியா?”

உடனே அவள் கையைப் பிடித்தவன், “சொல்ல நேரமில்லமா.. அவசரமா வந்து கூப்பிட்டாங்க” என்றான்.

கையை உதறி விட்டவள், “பேசாத.. ஒரு மெசஜ் மட்டுமாச்சும் அனுப்பியிருக்கலாம்ல? நான் எவ்வளவு பயந்து போனேன்னு தெரியுமா?” என்று கேட்டவளுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

உடனே அவள் வாயை மூடியவன், “உஸ்ஸ்.. இது சவுண்ட் ப்ரூஃப் வீடு இல்ல. சத்தமா பேசுனா பக்கத்து வீடு வரை கேட்கும்” என்று எச்சரித்தான்.

“கேட்கட்டும். இல்லனா நானே போய் கத்தி எல்லாருக்கும் சொல்லுறேன். இவன் அமரில்ல யாழமுதன். அதுவும் ஒரு போலீஸ்னு..”

அமுதன் புன்னகைத்து விட்டு, “சொல்லிட்டு?” என்று கேட்டான்.

“சொல்லிட்டு, எல்லாருமா சேர்ந்து உன்னை துரத்துரத வேடிக்கை பார்ப்பேன். என்னை விட்டுட்டு ஓடுனல? இப்பவும் ஓடு”

“இங்க ஓடலாம் முடியாது. தெரிஞ்ச அடுத்த நிமிஷம் என்னை சுட்டுருவாங்க”

தலையில் சுடுவது போல் சைகை செய்து காட்ட, “நீ பண்ணதுக்கு நானே உன்னை சுட்டுருக்கனும்” என்றாள் அவள்.

“அடிப்பாவி!”

“இப்ப என் காச கொடு. நான் கிளம்பனும்.”

“என் கிட்ட இல்ல. கல்யாணம் முடிஞ்சதும் வட்டியோட வாங்கிக்கோ”

“கல்யாணமா? யாருக்கு?”

“உனக்கும் எனக்கும் தான்”

“நினைப்பு தான். உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணுறதுக்கு நான் என்ன லூசா?”

“அப்புறம் ஏன் அக்கா கிட்ட, உங்க தம்பி தான் என் புருஷன்னு சவால் விட்ட?”

“அது கோபத்துல சொன்னது. இப்ப ஓசியா கொடுத்தா கூட நீ வேணாம்”

“ஓசியா? சரி அத விடு.. நீ இங்க என்ன பண்ணுற?”

“என்ன வேணா பண்ணுறேன். உனக்கென்ன?”

“கண்மணி..” என்று இழுத்தவன், அவளையும் இழுத்து அணைப்பில் நிறுத்த, கடுப்பாகி விட்டாள்.

“மரியாதையா கைய எடு.”

“நீ முதல்ல இங்க என்ன பண்ணுறனு சொல்லு”

“இங்க தான் வேலை பார்க்குறேன்”

“வேலையா? அங்க வேலையே கிடைக்கலயா?”

“அங்க வேலை பார்த்தா உன்னை எப்படி தேடுறது?”

“வாட்?” என்று அதிர்ந்து போய் பார்த்தான்.

“ஆமா.. உன்னை தேடனும்னு தான் இங்க வந்தேன்”

“நான் இங்க இருக்கேன்னு உனக்கு யார் சொன்னா?”

“உன் அத்தான் தான்”

“அவரா? அவருக்கு யார் சொன்னது?”

“அப்ப உன் அத்தானுக்கு நீ இங்க இருக்கது தெரியாது?”

“அடியேய் போட்டு வாங்குறியா? அவருக்கும் அக்காவுக்கும் நான் எங்க இருக்கேன்னு தெரியாது”

“ஓகே.. தப்பிச்சுட்டாங்க”

“ஏன்?”

“இல்லனா நேரா போய், குடும்பமா சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்கனு கம்ப்ளைண்ட் கொடுத்து, உங்கள தூக்கி உள்ள வைக்க சொல்லிருப்பேன். உன் போலீஸ் வேலைக்கும் ஆப்பு வச்சுருப்பேன்”

“நீ செஞ்சாலும் செய்வ” என்றவன், சிரித்தபடி அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

கையை தட்டி விட்டவள், “தொடாத. நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல” என்று எகிறினாள்.

“ஆகியிருக்க வேண்டியது தான்.‌ ஆனா நடக்கலயே..” என்று பெருமூச்சு விட்டான்.

“ரொம்ப வருத்தமோ?”

“பின்ன இல்லையா?”

“அப்புறம் ஏன் ஓடுன?”

“எல்லாம் நேரம். வேற என்ன சொல்ல?”

“சரி அந்த நேரத்த கட்டிட்டு அழு. நான் கிளம்புறேன்”

“என் மேல கோபமா இருக்க போல”

“இல்ல கொலை வெறில இருக்கேன்”

“அப்புறம் ஏன் மேடம் தேடி வந்தீங்க?”

“தேடி வந்தது லவ்ல இல்ல. பார்த்தா ஒரே வெட்டா வெட்டனும்னு வந்தேன்”

“ரொம்ப சூடா இருக்க நீ” என்றவன், அவளது கன்னத்தில் முத்தமிட, தள்ளி விட்டு முறைத்தாள்.

“பார்ரா..! லிப்ஸ்ல கொடுத்தா தான் தள்ளி விட மாட்டியா?” என்று கேட்டவன் அவளது இதழில் மீண்டும் முத்தமிட, தள்ள முயற்சி செய்து பிறகு அமைதியாகி விட்டாள்.

அவனாகவே விலகி, “கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. கிட்டத்தட்ட கடைசி கட்டத்துக்கு வந்துட்டேன். முடிச்சதும் மொத்தமா இத தலை முழுகிட்டு, நம்ம ஊருக்கே போயிடலாம்” என்றான்.

“நான் ஒன்னும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கல”

“சரி நான் தான் வெயிட் பண்ணுறேன். என் மேல நீ கோபமாவே இரு. நான் வந்து சமாதானம் பண்ணுறேன். ஓகே”

கண்மணி உதட்டை சுளித்து விட்டு, அவனது அணைப்பிலிருந்து விலகி தன் கைபையை எடுத்தாள்.

“எதாவது சாப்பிடுறியானு கூட கேட்க முடியாது. ஏன்னா வீட்டுல எதுவுமே இல்ல”

“தேவையில்ல கிளம்புறேன்”

“பத்திரமா போ. நான் வந்து விட முடியாது”

“ஆமா உன் கேஸ் என்ன? அந்த பாபுவ தேடுறதா?”

அவளை அதிர்ச்சியோடு பார்த்தவன், “இதையும் தெரிஞ்சுகிட்டியா?” என்று கேட்டான்.

“இத யோசிக்க பிரமாதமான மூளை வேணுமா என்ன? அவன் கேங்ல வேலை பார்க்குறனா அவன தான தேடுவ”

“இங்க வந்து எவ்வளவு நாள் ஆகுது?”

“ஒரு மாசம் தான் ஆகுது”

“அதுக்குள்ள..! சரி எதுக்கும் பத்திரமா இரு.”

“உன் கிட்ட இருந்து பத்திரமா இருந்தா போதாதா?” என்று கேட்டவள் தன் உதட்டை பார்த்து விட்டு முறைக்க, அதில் அமுதன் சிரித்து விட்டான்.

அவனை முறைத்து விட்டு திரும்பி நடந்தவள், சட்டென நின்றாள்.

“ஆமா.. நீயா என்னை சூப்பர் மார்கெட்ல ஃபாலோவ் பண்ண?”

சிறு அதிர்ச்சியோடு பார்த்தவன், “இல்ல. எப்ப என்ன நடந்துச்சு?” என்று விசாரித்தான்.

“யாரோ என்னை ஃபாலோவ் பண்ணுற மாதிரி தோனுச்சு. அதான் கேட்டேன்”

அமுதன் சில நொடிகள் யோசித்து விட்டு, “உனக்கும் எனக்கும் சம்பந்தமிருக்கது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டான்.

“நோ. நான் யாரு கிட்டையும் எதுவும் சொல்லல. ஃப்ரண்ட்ஸ்க்கு கூட கல்யாணம் நின்னத மட்டும் தான் சொன்னேன். அதுக்கு மேல எதையும் சொல்லல”

“இப்ப வீடு வரை வந்துட்ட..” என்றவன் யோசிக்க, “இதுக்கு முன்னாடியும் இங்க நான் வந்துருக்கேன்” என்றாள்.

“வாட்? எப்போ?”

அன்று வந்து விசாரித்ததை சொல்ல, அமுதன் தலையை தேய்த்துக் கொண்டான்.

“அதுல யாராச்சும் நோட் பண்ணியிருந்துருப்பாங்களா?” என்று அவள் கவலையாய் கேட்க, “வாய்ப்பிருக்கு” என்றான்.

“என்னை தேடி யாரும் வீடு வரை வர மாட்டாங்க. எல்லாம் இங்க இருக்கவங்க மட்டும் தான் வருவாங்க. புதுசா ஒரு பொண்ணு வந்துருக்குனா, கண்டிப்பா நோட் பண்ணியிருக்கலாம்.”

கண்மணியின் முகம் மெல்ல வெளிறிப்போக, சட்டென பேசுவதை நிறுத்தி அவளருகே வந்தான்.

“பயப்படாத. அவ்வளவு சீக்கிரம் யாரும் எதையும் கெஸ் பண்ண முடியாது. அப்படியே பண்ணாலும் நான் பார்த்துக்கிறேன்”

“உன் வேலையில எதுவும் பிரச்சனை வராதே?”

“வராது.”

“நிஜம்மா?”

“நிஜம்மாடா.. நீ பயப்படாத. பத்திரமா கிளம்பு.”

கண்மணி வருத்தமாக கிளம்ப, “நில்லு.. உன் ஃபோன் நம்பர் கொடுத்துட்டுப் போ” என்று கேட்டு வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தான்.

........

கண்மணி வீடு வந்து சேர்ந்தாள். அலுவலகம் செல்ல தேவையில்லை. விடுமுறை எடுத்திருந்தாள். அமுதனை பார்க்க தாமதமாகலாம் என்ற எண்ணத்துடன் தான் சென்றாள்.

இப்போது சீக்கிரம் வந்து விட்டாலும், அலுவலகம் செல்ல மனமில்லை. காலை உணவை சமைத்து சாப்பிட்டவளின் மனதில், அமுதன் பேசிய எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது.

அமுதனோடு நிச்சயம் நடந்து முடிந்ததுமே, அவன் தன் வேலையைப் பற்றி சொல்லி விட்டான்.

“நீங்க சொல்லுறதே புரியல. இப்ப நீங்க போலீஸா? இல்லையா?” என்று அவன் குழப்பத்துடன் கேட்க, “இப்ப ஒரு வேலையா இருக்கேன். அது முடிச்சுட்டு தான் போஸ்டிங்” என்றான்.

“அப்படி என்ன வேலை?”

“அது என்னனு சொல்ல முடியாது. நான் வேலை பார்க்குறதா சொன்ன கம்பெனில, அத்தானும் வேலை பார்க்குறார். அதுனால டெம்ப்ரவரியா அங்க இருக்கேன். எல்லா டீடைலும் கேட்காத. என்னால சொல்ல முடியாது” என்று விட்டான்.

கண்மணிக்கு புரியவில்லை என்றாலும், அவன் உண்மையை சொன்னது பிடித்திருந்தது. அதனால் அவன் மீது மதிப்பும் வந்திருந்தது.

ஆனால் சொல்லாமல் மண்டபத்தை விட்டுச் சென்றது, அவளை கோபப்படுத்தி இருந்தது.

வேலை என்றாலும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்படி சொல்லவில்லை என்றால், அவன் பொய் சொன்னானா? எது உண்மை? எது பொய்? என்றே தெரியாமல் குழம்பியவள், அவன் எங்கிருந்தாலும் தேடி விசயத்தை அறிந்து கொள்வது என்று கிளம்பி விட்டாள்.

இப்போது அறிந்தும் கொண்டாள். ஆனால் சற்று பயமா இருந்தது. இந்த வேலையில் அவனுக்கு எதாவது நடந்து விடுமோ என்ற பயம்.

இது போதாதென்று, யாரோ அவளை பின் தொடர்வது போன்ற உணர்வு வேறு இருக்க, அதுவும் குழப்பியது.

அந்த குழப்பத்துடனே அன்றைய நாளை ஓட்டி முடித்தாள்.

அடுத்த நாள் அலுவலகம் சென்று சேர்ந்தாள்.

வேந்தன் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு, “நேத்து லீவ் போல?” என்றான்.

“ஆமா.. கொஞ்சம் வேலை.” என்றவள், வேறு எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள்.

அடுத்த நான்கு நாட்கள் வேலையில் கடந்தது. மற்றதை பற்றி யோசிக்க அவளுக்கு நேரமில்லை. அமுதனின் எண் இருந்த போதும், அவனை அழைத்து அவள் பேசவுமில்லை.

..........

அந்த பிரம்மாண்டமான வீட்டின் நடுவில் இருந்த சோபாவில், மணீஷ், அமர் மற்றும் க்ருணால் அமர்ந்து இருந்தனர்.

ராகேஷின் இறப்பை பற்றிய விசாரணைகள் இன்னும் சென்று கொண்டிருந்தது.

“சர்மா சாப்.. எப்படி இருக்கீங்க?” என்ற கேள்வியோடு, ஆர்பாட்டமாய் வந்து நின்றான் விகாஸ் கிருஷ்ணன். பாபுவின் வலது கை.

இன்று தான் அமர் அவனை நன்றாக பார்க்கிறான். அவனை பார்த்ததும், மூவரும் எழுந்து நின்றனர்.

உட்காருங்கள் என்பது போல் கையாட்டியவன், எல்லோருக்கும் காபி கொண்டு வர சொல்லி விட்டு, தானும் அமர்ந்தான்.

நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவன். இன்னும் திருமணம் செய்யவில்லை. ஏகப்பட்ட பெண்கள் உண்டு அவன் வாழ்வில்.

“நீ அமர் தான?”

அமர் தலையாட்ட, “உன் கூட தான ராகேஷ் சுத்துனான். எப்படி இப்படி ஆச்சு? நீ பார்க்கலயா?” என்று கேட்டான்.

“நான் அவன் வீட்டுக்கு எல்லாம் போனது இல்ல. ஜஸ்ட் ஆஃபிஸ்ல தான் பார்ப்போம்” என்று பச்சையாய் ஒரு பொய்யை சொன்னான்.

“வீட்டுக்கு போனதே இல்லையா?”

“அப்படி இல்ல. அவன் வீட்ட ரெண்டு தடவ பார்த்துருக்கேன். மத்தபடி அவன் கூட நான் தங்கல”

“ஓஹோ.. சர்மா சாப்.. நீங்க என்ன சொல்லுறீங்க?”

“எவனோ வேணும்னே பண்ணிருக்கான். சிலீண்டர்ல கை ரேகையும் இல்ல. வீடும் மொத்தமா எறிஞ்சு போச்சு. எத எடுத்தாங்க எத விட்டாங்கனும் தெரியல.”

“எதையாவது எடுத்துருந்தா, அத வச்சு நம்மல நெருங்க நினைப்பாங்கள்ள?”

“கண்டிப்பா”

“அதான் வேணும்.”

மற்ற மூவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க, “புரியல விகாஸ்” என்றார் க்ருணால்.

“இது எலிக்கு பொறி வச்ச மாதிரி சர்மா சாப். விசத்தை எடுத்த எலி, தின்னுட்டு தண்ணிக்கு வந்து தான ஆகனும்? அப்ப பார்த்துக்கிறேன்”

“அவங்க வெளிய வராமலே எதாச்சும் பண்ணா?”

“வெளிய வந்து தான் ஆகனும். எடுத்தத வச்சு பூஜையா போடுவான்? யூஸ் பண்ணித்தான ஆகனும்? லீகலா யூஸ் பண்ணா, நம்மாளுங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. காதோட காது வச்ச மாதிரி முடிச்சு விட்டுருவாங்க. இல்ல நம்ம தொழில் பக்கம் வந்தா, நான் இருக்கேன். மொத்தமா அடக்கிருவேன்”

விகாஸ் ஒரு விகாரமான சிரிப்போடு சொல்ல, மூவரும் அவனை இமைக்காமல் பார்த்தனர்.

“அவனுங்களா வந்து வலையில விழட்டும். இப்ப ராகேஷ் செத்தத விட்டுட்டு, அடுத்த வேலைய பாருங்க” என்று முடித்து மூவரையும் அனுப்பி விட்டான்.

அமர் விகாஸ் பேசியதை யோசித்தபடியே சென்றான். இவன் சாதாரணமானவன் அல்ல. மிகவும் ஆபத்தானவன். இவனை கடந்து தான், அந்த பாபுவை தொட முடியும். இவனே இவ்வளவு புத்திசாலியாக இருந்தால், இவனுக்கு மேல் இருப்பவன் எப்படி இருப்பான்?

இவன் இதை யோசிக்க, மணீஷ் ஒரு முடிவுக்கு வந்து, தன் கைபேசியில் யாருக்கோ செய்தி அனுப்பி விட்டான்.

தொடரும்.

Leave a Reply