Episode 16

Loading

நெற்றியை தேய்த்துக் கொண்டு கண்ணை மூடி அமர்ந்து இருந்தாள் சுலோக்ஷனா. நாற்காலியில் லேசாக சுழன்றபடி, தினகரனை எப்படி மடக்குவது என்று யோசித்து கொண்டிருந்தாள்.

“நிவி” என்று அழைத்துக் கொண்டே கதவை திறந்தாள் மணி. நிவி பதில் பேசாமல் இருக்க, “உன்னை மோகன் சார் கூப்பிட்டார்” என்று வந்த விசயத்தை சொன்னவள் குரலை தணித்து, “அவர் முகமே சரி இல்ல. ரொம்ப மிரண்டு போய்ட்டாரோ என்னவோ” என்று கூறினாள்.

“சரி போ வர்றேன்” என்று கூறியவள், எழுந்து ஸ்கூட்டி சாவியை கையில் சுழற்றிய படி வெளியே வந்தாள். பாஸ்கர் மேசையில் கவிழ்ந்து இருக்க அவனிடம் சென்று, ” ரெண்டு இன்டர்வியூ கேட்டேன். ஒன்னு தான் ரெடியாகி இருக்கு. சீக்கிரம் ரெடி பண்ணிட்டு ஒன் ஹர்ல ரிப்போர்ட் பண்ணுங்க” என்று வேலை கொடுத்தாள். அதன் பின் மோகன் கேபினுக்குள் நுழைந்து கொண்டாள்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவளை, அமரச் சொன்னார் மோகன்.

“இந்த தினகரன் பத்தி என்ன நினைக்குற?”

“என்ன பெருசா நினைக்க போறேன். நிறைய பேர் செய்றத தான் அவனும் செஞ்சுட்டு இருக்கான்.”

“இது வரை பார்த்தவன விட இவன் டேஞ்சர்னு தோனுது.” என்றவரின் முகம் யோசனையில் இருந்தது.

“அப்போ இத இத்தோட விட்டுரலாம்” என்று நிவி சொல்ல மோகன் அவளை முறைத்தார்.

“என்ன நீயே இப்படி சொல்லுற?” என்று கேட்டவரின் குரலில் நிச்சயமாக கோபம் இருந்தது.

“பின்ன என்ன சார்? இவ்வளவு பில்டப் கொடுக்குறீங்க. அப்படி என்ன பண்ணிடுவான் என் உயிர எடுத்துடுவானா?” என்று கேட்டு முடிப்பதற்குள், “நிவி.. என்ன அபசகுனமா பேசிட்டு இருக்க? இப்போ தான் கல்யாணம் ஆச்சு. இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காத” என்று மோகன் அதட்டினார்.

“சார் அவன் என் நிழல கூட தொட முடியாது சார். வீட்டுக்கே அவன் ரைட் ஹேண்ட்ட அனுப்புனான். ஓட ஓட விரட்டுனேன். இனிமேலும் அவன் எது பண்ணாலும் என்ன பாதிக்காது. அது ஒரு க்ரைம்னு லிஸ்ட் கூடிட்டே தான் போகும்.” என்று அவருக்கு தைரியம் சொன்னவள், “இப்போ ஒன்னு பண்ணலாம். அவன எப்படி கையும் களவுமா மாட்ட வைக்குறதுனு நான் ப்ளான் போட்ருக்கேன். அத ட்ரை பண்ணலாம். முடியலனா இருக்க ஆதாரத்த மட்டும் வெளிய விட்டு ப்ளாக் பண்ணலாம்.” என்றாள் முடிவாக.

“சரி என்ன வேணா செய் உன் டீம் உனக்கு உதவும்.”

“என் டீம்ல இன்னும் ரெண்டு பேர் வேணும். அது யாருனு அப்புறமா சொல்லுறேன்” என்றவள் எழுந்து சென்றாள். போகும் போது மேசைக்கு அடியில் மோகனுக்கு கண் காட்டி விட்டு சென்று விட்டாள். குனிந்து பார்த்த மோகன் அதிர்ந்து போனார்.

இவர்கள் பேசியதை கேட்க யாரோ அங்கு ட்ரான்ஸ் மீட்டரை பொறுத்தி இருக்கின்றனர். தங்களுக்குள்ளேயே துரோகியா? நினைத்த மாத்திரத்தில் அவருக்கு கடுங்கோபம் வந்தது. ஆனால் கோபத்தை காட்டினால் குற்றவாளி தப்பித்து விடுவான். அமைதியாக இருந்தார்.

அன்று முழுவதும் எதை எதையோ பேசினார் மோகன். ஆனால் எல்லாம் உப்பு பெறாத விசயம். மாலை எல்லோரும் கிளம்பும் போது அறையில் வந்த மாதவன் சில காகிதங்களை கொடுத்தான். அது தவறி கீழே விழுந்து விட, குனிந்து எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்து விட்டு செல்ல அவனோடு அந்த ட்ரான்ஸ் மீட்டரும் சென்று விட்டது.

சோபாவில் அமர்ந்து எதிரில் இருந்த மடிக்கணினியை வெறித்துக் கொண்டிருந்தாள் சுலோக்ஷனா. ஒரு வேலையும் ஓட வில்லை. பிறந்த வீட்டிலிருப்பவர்கள் எல்லோரிடமும் பேசி முடித்து விட்டு சந்தோசமான மனநிலையில் தான் வேலையை எடுத்தாள். ஆனால் இருந்த சந்தோசம் போய் குழம்பியது தான் மிச்சம்.

அலுவலகத்திலிருந்து வந்த செழியன், சுலோக்ஷனா நிலமையை பார்த்து விட்டு முழித்தான்.

‘என்ன ஆச்சு இவளுக்கு? லாப்டாப்ப முறச்சுட்டு இருக்கா’ என்று நினைத்தவன், தொந்தரவு செய்யாமல் தன் வேலைகளை கவனிக்கச் சென்று விட்டான்.

அரைமணிநேரம் கழித்து வந்து பார்த்தால், சுலோக்ஷனாவிடம் எந்த மாற்றமும் இல்லை. காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தாள்.

“க்கும்.. நிவி மேடம்” என்று செழியன் அழைக்க, திரும்பி பார்த்தாள். அருகில் அமர்ந்தவன், “எதாவது பிரச்சனையா? இவ்வளவு சீரியஸா இருக்க?” என்று கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“நான் ஹெல்ப் பண்ணட்டா? என் கிட்ட சொல்லு. சொல்யூஸன் கிடைக்குமா பாக்கலாம்”

“சொன்னேன்ல… அந்த தீனா. அவன எப்படி ப்ளாக் பண்ணுறதுனு புரியல. இப்போ தான் அவனுக்கு ஆப்போஸிட்டா இருந்த ப்ருஃப் எல்லாம் பார்த்தேன். அத மட்டும் வச்சு அவன உள்ள தூக்கி போடலாம். ஆனா அவன கையும் களவுமா பிடிக்கனும். அவன் அதுக்கு மேல.. என் டீம்லயே எனக்கு எதிரா ஆட்கள ரெடி பண்ணிட்டான். இதுல அப்போ அப்போ மிரட்டல் வேற. எல்லாத்தையும் மீறி எப்படி கொண்டு வர போறேன்னு நினைச்சாலே தலை வலிக்குது”

இது வரை, யாரிடமும் தன் வேலையை பற்றி சுலோக்ஷனா கூறியதில்லை. அன்னை பயந்து விடுவார். அப்பாவிற்கு அவரது வேலையே சரியாக இருக்கும். முதல் முறையாக செழியனை நம்பி சொல்லி விட்டாள். சொல்லி முடித்து தலையை பிடித்துக் கொண்டாள்.

வேகமாக எழுந்த செழியன் மாத்திரையையும் தண்ணீரையும் எடுத்து கொடுத்து, “இந்த மாத்திரைய போடு. போட்டு கண்ண மூடி படு. நான் ஒரு டென் மினிட்ஸ் இத எல்லாம் பார்த்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுறேன்.” என்று சொல்ல, மறுக்காமல் வாங்கி கொண்டாள். அவள் சோபாவிலேயே படுக்க, அவளது தலையை தன் மடியில் தாங்கி கொணடான். வேண்டாம் என்று அவள் மறுக்க, “ஸ்ஸ்.. கண்ண மூடு” என்றான்.

அந்த பலம் பொருந்திய ஆண் மகனின் மடி கூட சுகமாக இருந்தது சுலோக்ஷனாவிற்கு. கண்ணை முடிக்கொண்டு அந்த இதத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

அவளது மடிக்கணினியை ஆராய்ந்து கொண்டிருந்தான் செழியன். பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை தனி தனியாக சில இடங்களில் சேமித்தவள் மடிக்கணினியிலும் சேமித்து வைத்து இருந்தாள்.

அதை எல்லாம் பார்த்தவன் தீனாவின் உரையாடலையும் முழுதாக கேட்டான். சற்று நேரம் யோசித்து விடையறிந்தவன், “எஸ்” என்று தனக்குள்ளாக கூறி விட்டு சுலோக்ஷனாவை பார்க்க, அவளோ மடியில் தூங்கி இருந்தாள்.

தூங்கும் அவளை தன்னை மறந்து ரசித்தான். தலையை பட்டும் படாமல் வருடிக் கொடுத்தவன், ‘சோ க்யூட்’ என்று மனதிற்குள் கொஞ்சினான். இப்போது அசைந்தால் எழுந்து விடுவாள். என்ன செய்யலாம் என்று யோசித்தவன், எதிரில் இருந்த அவளது மடிக்கணினியை ஆராய ஆரம்பித்தான்.

வேலை சம்பந்தபட்டதை எல்லாம் ஒதுக்கி விட்டு, மற்றதை எடுத்து பார்த்தான். சுலோக்ஷனா, சுலோக்ஷனாவின் குடும்பம், நண்பர்கள் என எல்லாருடைய படங்களும் இருந்தது. இவனுக்கு மற்றவர்களா முக்கியம்? அவளது புகைப்படங்களை மட்டும் எடுத்து பார்த்தான்.

வைலட் நிற புடவையில் தேவதையாய் நின்று நந்தனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். கன்னத்தில் கைவைத்து அமர்ந்து விட்டான். படத்தை பெரிதாக்கி வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென சுலோக்ஷனா முழித்து விடுவாளோ? என்று தோன்ற அவசரமாக அவளை திரும்பி பார்த்தான். இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

தனது கைபேசியை எடுத்தவன் கணினியுடன் இணைத்து படத்தை சுட்டு விட்டான். சுட்டதற்கான அடையாளத்தை அழித்து முடிக்க, சுலோக்ஷனா அசைந்தாள். மளமளவென எல்லாவற்றையும் அணைத்து வைத்து விட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டான்.

தூக்கம் கலைந்து முழித்தவள், முதலில் செழியனை பார்த்து புன்னகைத்தாள். அவனும் புன்னகைக்க, கண்ணை மூடிக் கொண்டாள். முழுசுயத்திற்கு வந்ததும், இருக்கும் நிலையறிந்து அவசரமாக எழுந்தாள்.

“ஹே ரிலாக்ஸ். இப்போ பெயின் எப்படி இருக்கு?” என்று செழியன் வினவ, “சரியாகிடுச்சு” என்று பதிலளித்தாள். உண்மையில் வலி பறந்து போயிருந்தது.

“சரி ஃப்ரஸ் ஆகிட்டு வா” என்று அனுப்பி வைத்தான்.

அவள் வந்து அமர்ந்ததும், “தீனாவோட எல்லா டீடெயிலும் பார்த்துட்டேன். என்னனா… இன்னும் ரெண்டு வாரத்துல அவனோட சரக்கு எல்லாம் இந்தியா வந்து இறங்குது. அந்த ஃபோன்ல அவன் சொன்ன டேட்க்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. இப்போனு பார்த்து உன் கையில இதெல்லாம் சிக்கி இருக்கு.” என்று சொல்ல, “இதுல என்ன இருக்குனு என்னையும் மணியையும் தவிர யாருக்கும் தெரியாது செழியன்” என்றாள் இடையில் புகுந்து.

‘எவன்டா அவன் மணி?’ என்று மனதில் கடுப்பாக நினைத்தாலும், “எக்ஸாட்லி. இதுல என்ன இருக்குனு அவனுக்கு தெரியாது. என்ன இருக்குனு தெரியாம சரக்க நாட்டுக்குள்ள இறக்க முடியாது. அவன் ப்ராப்ளம் புரியுதா? என்ன ஆதாரம் சிக்கி இருக்குனு தெரியாம, இப்போ அந்த மால் எல்லாத்தையும் கொண்டு வந்தா, நீ லாக் பண்ணி ரெட் ஹேண்ட்டா புடிச்சுடுவ. அதுக்காக அவனால மால் மொத்தத்தையும் திருப்பி அனுப்ப முடியாது. ஒன்னு அவனுக்கு பெரிய லாஸ் வரும். இல்ல அவன் பணத்துல பெரிய பங்கு ஒரே இடத்துல முடங்கிடும். ரெண்டுமே ஒரு பிஸ்னஸ் மேன்க்கு பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைய தடுக்க முதல்ல அவன் என்ன ஆதாரம் உன் கிட்ட சிக்கி இருக்குனு தெரிஞ்சுக்க பார்ப்பான். தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், அத எடுக்குறதா அழிக்குறதானு யோசிப்பான்” என்று உப்பு புளி போட்டு விளக்கி முடித்தான் செழியன்.

சுலோக்ஷனா துள்ளி குதித்து விட்டாள்.

“சூப்பர் சூப்பர் செழியன். ஹய்யோ என்னமா கண்டு பிடிச்சு, புட்டு புட்டு வச்சுட்டீங்க. அடுத்து என்ன பண்ணனும்னு ஐடியா கிடச்சுடுச்சு. தேங்க்யூ சோ மச்” என்று செழியனின் கையை பிடித்துக் கொண்டு குதித்தாள்.

அவளை புன்னகையுடன் பார்த்தவன், “தேங்க்ஸ் இப்படி சொல்ல கூடாது சனா” என்று கூற, சுலோக்ஷனா ஒரு நொடி நிதானித்தாள்.

நிதானித்து யோசிக்கும் முன் அவளை இழுத்து அணைத்தவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

உதட்டை பொருத்தி எடுத்த நொடி, உடலில் இருந்த மொத்த இரத்தமும் கன்னத்தில் வந்து நின்றது போல் சுலோக்ஷனாவின் கன்னம் சிவந்து போனது.

“இப்படி சொல்லனும். இனிமே சொல்லும் போது இத ஃபாலோவ் பண்ணு. இப்போ நோ ப்ராப்ளம்” என்று காதருகில் கூறி விட்டு இறுக அணைத்தவன், உடனே விட்டு விட்டு ஜிம்மில் நுழைந்து கொண்டான்

Leave a Reply