Episode 2

Loading

மாலை நேரம்… ஊரை தாண்டி பணக்கார செழுமை கொண்ட அந்த பங்களாவில், “அடேய்… நில்லுங்கடா…” என்ற சத்தம் வாசல் வரை கேட்டது. அந்த வீட்டின் அழகும் கம்பீரமும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுத்து விடும். அப்படிப்பட்ட வீட்டில், அடித்துப் பிடித்து ஓடிக்கொண்டிருந்தனர் இருவர். துரத்துபவளோ விடுவதாக இல்லை.

அங்கிருந்த மற்ற இருவரும் அவர்களை மதிக்காமல், உலகின் அதி முக்கியமான விசயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

“அத்தை நைட் இடியாப்பம் பண்ணிடலாமா. நித்தின் ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்கார்” என்று ஜானவி சொல்ல, “மாவு வேணுமே. நாளைக்கு பண்ணலாம். இன்னைக்கு தோசை சுட்டு குடு” என்றார் லோகேஸ்வரி.

ஓடி ஓடி ஓய்ந்து போனவர்கள், இவர்களிடம் வந்து தஞ்சம் புகுந்தனர்.

“பாட்டி” என்று ஸ்வரண் லோகேஸ்வரியிடம் செல்ல, “அம்மா” என்று நந்தன் ஜானவியிடம் ஓடினான்.

“அங்க போனா மட்டும் விட்ருவனா?” என்று கேட்டுக் கொண்டே வந்த சுலோக்ஷனா, அவர்களை இழுத்து தலையில் கொட்டினாள்.

“எத்தனை தடவ அடி வாங்குனாலும் திருந்த மாட்டானுங்க எருமைங்க” என்று கத்தி விட்டு அமர, தட்டில் பஜ்ஜியை வைத்து அவளிடம் நீட்டினார் ஜானவி. அதை சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் வந்து பக்கத்தில் அமர்ந்தனர்.

இவர்களது சண்டையை எல்லாம் ஜானவி ஒரு பொருட்டாகக் கூட மதிப்பது இல்லை. எதையாவது பேசி சுலோக்ஷனாவை ஓட வைப்பது தான் இருவரின் வேலையும்.

“ம்மா ம்மா ம்மா” என்று நந்தன் பின்னாடியே சுற்ற, “என்னடா?” என்றாள் ஜானவி.

“ஊட்டி விடுமா”

“கொடைக்கானல்ல நல்ல க்ளைமேட் ஆம். ஊட்டி வேணாமே” என்றாள் சுலோக்ஷனா.

வாயில் பஜ்ஜியை திணித்தபடி அவள் சொல்ல ,பக்கத்தில் இருந்த ஸ்வரணுக்கு தான் புரையேறியது.

அவன் தண்ணீரை தேடி எடுக்க, “நீயும் வா ஸ்பீட் பேபி. சூசைட் பாயிண்ட் உனக்காக தான் வெயிட்டிங் ஒரே தள்ளா தள்ளி விட்டுட்டு வர்ரேன்.” என்ற நந்தன் பல்லை கடித்தான்.

“அதுக்கு ஏன்டா அவ்வளவு தூரம் போகனும்? ஒரு மணி நேரம் உன் கிட்ட பேசினாலே போதாது” என்று கேட்க, அடுத்த சண்டை ஆரம்பம்!

ஸ்வரண் தட்டை தூக்கிக்கொண்டு கொண்டு ஓடி விட்டான்.

“இவ ஏன் ஓடுறான்?” சுலோக்ஷனா கேட்க, “நீ புடிங்கி தின்னுடுவனு” என்று நந்தன் கூற, அடுத்த ரணகளம் ஆரம்பம். வாய்த்தகராறு வாய்க்கால் தகராறு ஆகும் முன் நித்தின் வந்து சேர்ந்தார்.

“பாருங்க பா. இவன் என்ன பார்த்து பூசணிக்காய்னு சொல்லுறான்” என்று சுலோக்ஷனா உதட்டைப் பிதுக்க, “அய்யே! இன்னும் சின்ன பப்பா மாதிரி வாய பிதுக்குறத பாரு. ப்பா தீணிய குறைக்க சொல்லுங்க பா” என்று அவன் பங்குக்கு ஆரம்பித்தான்.

“அடப் பொறுங்கடா எங்க இன்னொருத்தன்?” என்று கேட்க, ஸ்வரண் ஒரு கதவின் பின்னாலிருந்து தலையை நீட்டினான்.

“ப்பா இங்க” என்று பஜ்ஜியை தூக்கிக் காட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“என்னது உங்களுக்கு பஜ்ஜியா?” என்று கேட்ட நித்தின், “ஜான் இது டூ மச். அவங்களுக்கு பஜ்ஜி எனக்கு இந்த வரட்டு பிஸ்கட். ஓரவஞ்சகம் பண்ணுறா மா உங்க மருமக” என்று அவன் அவனது அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்தான்.

“இந்த வயசுக்கு இது போதும் சாப்பிடு” என்றார் லோகேஸ்வரி. நித்தின் பாவமாக பார்க்க, ஜானவிக்கு பாவமாக இருந்ததது. அவள் அத்தையை திரும்பிப் பார்க்க, அவர் விட்ட முறைப்பில் வேகமாக திரும்பிக் கொண்டாள்.

வயது கூடுகிறது என்று, லோகேஸ்வரி கணவனுக்கும் மகனுக்கும் சாப்பாட்டு விசயத்தில் பல தடைகள் போட்டு இருந்தார். ஜானவி நித்தினுக்காக பரிந்து பேசினால், அவளுக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும். மணிமாறன் ஒரு மாதமாக புண்ணிய தலங்களை தரிசிக்க சென்றுள்ளார். லோகேஸ்வரிக்கு உடல் நிலை சரி இல்லை. அதனால் அவரது நண்பர்களோடு சென்று விட்டார்.

“அப்பா இந்த கொடுமையில இருந்தெல்லாம் தப்பிச்சுட்டார்” என்று நித்தின் சொல்ல, ஜானவிக்கு சிரிப்பு வந்தது.

அவர் சிரிப்பை கட்டுபடுத்த, “என்ன ஏன் சிரிக்குற?” என்று கேட்டார் நித்தின்.

“அங்கயும் அத்தை ஸ்பை வச்சு இருக்காங்க” என்று சொல்ல, நித்தின் அதிர்ந்து போனார்.

“அம்மா… ஏன்?”

“ஒரு பாதுகாப்புக்கு. நேத்து பானிபூரி வாங்கி சாப்பிட முயற்சி பண்ணி இருக்கார். இன்னைக்கு காலையில குல்பி. அதுக்கு முன்னாடி நாள் பாவ்பாஜி” என்று அடுக்கிக் கொண்டே போக, நித்தின் வாயை மூடிக் கொண்டார்.

சுலோக்ஷனா, “நான் வச்ச பஞ்சாயத்து பத்தி பேசாம உங்க பஞ்சாயத்துலயே இருக்கீங்க. நான் போறேன் என் மாமியார் வீட்டுக்கு. எனக்கு இப்போவே கல்யாணம் பண்ணி வைங்க” என்று சத்தமாக கூற, மற்றவர்கள் பேச்சை விட்டு இவளை கவனித்தனர்.

“எங்க? நானும் அந்த நல்ல நாள் இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு பார்க்குறேன். கடந்த அஞ்சு வருசமா இத தான் சொல்லிட்டு இருக்க” என்று நந்தன் வாரி விட்டான்.

“வேணா நந்து.. ம்மா இவன ஏன்மா பெத்தீங்க. நான் தம்பி கேட்டா, ஸ்வரண மட்டும் பெத்து இருக்க வேண்டியது தான?” என்று சண்டைக்கு தயாரானாள்.

இவர்கள் சண்டையில் சிரிப்பு வந்தாலும், ஜானவிக்கு மகளின் திருமணத்தை பற்றியக் கவலை இருந்து கொண்டே தான் இருந்தது.

“பார்க்குற எல்லாரையும் நீ தான் வேணாம்னு சொல்லுற. அப்புறம் கட்டிவைனா?” என்று ஜானவி குறைபட்டாள்.

“ம்மா அப்பா மாதிரி ஒருத்தர கூட்டிட்டு வாங்க உடனே கட்டிக்கிறேன்” என்று வழக்கமான பல்லவியை பாடி வைக்க, “அப்பா மாதிரியே ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் உனக்கு தம்பி. சோ நிறைய ஆசை படாம கல்யாணத்துக்கு ரெடியாகு” என்ற நந்தன் எழுந்து சென்று விட்டான்.

நந்தன் அச்சு அசலாக நித்தினை உரித்து வைத்து பிறந்து இருந்தான். உருவத்தில் மட்டுமே. குணத்தில் பொறுமை இது வரை இருக்கிறது. இனியும் இருக்குமா என்பது விதியின் கையில்…!

இவ்வளவு கலாட்டா நடந்தும், ஸ்வரண் பஜ்ஜியை முழுதாக முழுங்கி விட்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

சுலோக்ஷனா… இருபத்தைந்து வயதை கடந்து கொண்டிருந்தாள். படித்து முடித்து நான்கு வருடம் வேலை செய்தபின் தான் திருமணம் என்று வீட்டில் முதலிலேயே சொல்லிவிட, இப்போது அவள் சொன்ன நான்கு வருடம் முடியும் நிலையில் இருக்கிறது.

பார்க்கும் அனைவரையும் தந்தை போல் இல்லை என வேண்டாம் என்று மறுத்துக் கொண்டு வருகிறாள்.

நந்தன்… இருபத்தி ஒன்று வயது இளைஞன். இன்னும் நான்கு நாட்களில் வெளிநாடு பறக்க இருக்கிறான். மேல் படிப்பை அங்கு சென்று படிக்க வேண்டும் என்று நித்தின் கூறியதை மறுக்கவில்லை. படித்து முடித்து அவன் திரும்பி வர ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகலாம்.

ஸ்வரண்… பனிரெண்டு படிக்கும் பள்ளி மாணவன். அவனிடம் அதிகம் பேச முடியாது. அமைதி விரும்பி. அவனுக்கு இவர்களது சண்டை ஒரு பொழுது போக்கு. எப்போதாவது நந்தனுக்கு ஆதரவு கொடுத்து, சுலோக்ஷனாவிடம் வாங்கிக் கட்டுவான்.

*.*.*.*.*.

இரண்டு நாட்களுக்குப் பின், செழியன் அலுவலகத்திற்கு, மாதாந்திர பத்திரிக்கையில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ” என்று செழியன் பேச, “சார் நான் மோகன் பேசுறேன். ****** மேகஸின் எடிட்டர்” என்றார்.

“ம்ம்” என்றவன் தன் வேலைகளில் கவனமாக இருக்க, “சார் உங்க கிட்ட நிவி பேசனுமாம். அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமா?” பவ்யமாக கேட்டவருக்கு பதில் சொல்ல ஒரு நொடி யோசித்து விட்டு, “கிளம்பி வர சொல்லுங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

இருபது நிமிடங்கள் கடந்தது. அலுவலகத்தில் எல்லோரும் வேலை முடிந்து கிளம்பி விட, நிவி உள்ளே நுழைந்தாள். நேராக அவன் இருக்கும் கேபினுக்குள் நுழைந்தவள் முதல் வார்த்தையாக, “நீங்க இப்போ ஃப்ரியா சார்?” என்று கேட்டாள்.

“அது ஏன் உனக்கு? வந்த வேலைய பார்த்துட்டு கிளம்பு” என்று செழியன் கடுமை நிறைந்த குரலில் கூற, “வந்த வேலையே அதான். நீங்க என் கூட ஒரு இடத்துக்கு வரனும். எல்லாம் அந்த நியூஸ் பத்தினது தான்” என்று சர்வசாதாரணமாக பதில் சொன்னவளை உற்றுப்  பார்த்தான்.

அவள் அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. மனதில் அடுத்து செய்ய வேண்டியவை அடுக்காக ஓடிக் கொண்டிருந்தது.

அவளது யோசனையை கண்டவன், வேலைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினான். தனது ஸ்கூட்டியில் நிவி முன்னால் செல்ல, காரில் பின் தொடர்ந்தான். ஒரு இடத்திற்கு வந்ததும் இறங்கியவள் அவனிடம் வந்து, “ரொம்ப முக்கியமான விசயம் இல்லையா? அதுனால நீங்க கார விட்டுட்டு நடந்து வர்ரது மேல். இந்த தெரு தாண்டிட்டா, நானும் ஸ்கூட்டிய நிறுத்திட்டு நடப்பேன். முன்னாடியே சொன்னது தான். நான் உள்ள போய்ட்டு கூப்பிடுறேன். நீங்க வந்தா போதும்” என்றவள், அவன் பதிலை எதிர் பார்க்காமல் வேகமாக சென்று விட்டாள்.

அவள் சொன்னது போல் காரை பூட்டி விட்டு நடந்தான். நெருக்கமாக வீடுகள் அமைந்து இருக்கும் தெரு. ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டினாள்.

செழியன் தூரமாக அதை பார்த்தாலும், மெதுவாகவே நடந்து வந்தான். நிவி அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் எட்டி பார்த்து அவனை அழைக்க, நான்கு எட்டில் வீட்டை அடைந்து விட்டான். அவன் உள்ளே நுழைந்ததும் கதவை பாதிக்கு மேல் சாத்தி வைத்தாள்.

அது யாருடைய வீடு? என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அங்கு நிவியும் மற்றொரு பெண்ணும் மட்டுமே நின்றிருந்தனர்.

“சார் யார் தெரியுமா?” என்று அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் நிவி கேட்க, அவள் இடவலமாக தலையாட்டினாள்.

“தெரியலனா பரவாயில்லை விடு. சார் இவ வாசுகி. எங்க மேகஸின்ல வாசு” என்றாள் நிதானமாக. அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அதை நிவி குறித்துக் கொண்டாலும், எதுவும் பேசவில்லை. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் செழியனையும் அமரச்சொன்னாள்.

“அம்மா எங்க வாசு?” என்று கேட்க, “அ.. அம்மா.. அம்மா ஊருக்கு போயிட்டாங்க. நீ என்ன திடீர்னு வந்து இருக்க?”

“சொல்லுறேன். வந்தவங்களுக்கு தண்ணி கொடுக்குற பழக்கம் இல்லையா?” என்று கேட்க, வாசு வேகமாக சென்று தண்ணீரை எடுத்து வந்தாள்.

நிவி வாங்கி குடிக்க, செழியன் மறுத்து விட்டான்.

“சரி நீ ஏன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல?” என்று கேட்டவள் வாசுகியை பிடித்து ஒரு நாற்காலியில் அமர வைத்தாள். வாசுகி பதில் சொல்ல முடியாமல் திணற, சன்னல் பக்கம் சென்று எட்டி பார்த்து விட்டு, “அந்த புளூ சட்டை யாரு?” என்று கேட்டாள்.

வாசுகியின் உடல் தூக்கிவாரிப் போட்டது.

“எந்த.. எந்த.. புளு சட்டை? எனக்கு தெரியாதே” என்று திக்கி திணற ,”ஏன் இவ்வளவு பதட்டம்? உண்மைய சொல்லு. ஏன் அப்படி நியூஸ் எழுதுன? அந்த நியூஸ்க்கு உன் கிட்ட ஆதாரம் இருந்தா, வாங்கிட்டு போக தான் வந்தேன்” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தாள். வாசுகி முழித்தாள். அவளிடம் ஆதாரம் எதுவும் இல்லையே.

“என்ன நடக்குதுனு சொல்லு வாசு. அப்படி எழுதிட்டு நீ தப்பிச்சுடலாம்னு நினைக்கிறியா?”

வாசுகி வேகமாக சென்று கதவை முழுதாக அடைத்து விட்டு வந்து அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஒரு நாள் முன்னாடி ரெண்டு பேர் வீட்டுக்கு வந்தாங்க. நான் தர நியூஸ உன் மேகஸின்ல போடனும்னு சொன்னாங்க. என்ன ஏதுன்னு கேட்டா பதில் சொல்லல. போடு உனக்கு பணம் தரேன்னு சொன்னாங்க. நான் அதுக்கு ஒத்துக்க முடியாதுனு சண்ட போடும் போது, அம்மா கழுத்துல கத்திய வச்சுட்டாங்க. என் கழுத்துல வச்சு இருந்தா பயப்பட்டு இருக்க மாட்டேன். எவ்வளவோ பார்த்தாச்சுனு இருந்து இருப்பேன். ஆனா அம்மா கழுத்துல கத்திய பார்த்துட்டு நிஜம்மா பயம் வந்துடுச்சு. போட வேண்டிய நியூஸ எல்லாம் என் கிட்ட கொடுத்துட்டு உன் அம்மா வேணும்னா சொன்னத செய்னு சொல்லிட்டு, அம்மாவ கூட்டிட்டுப் போயிட்டாங்க. நீயும் மோகன் சாரும் அன்னைக்கு லீவ் வேற. அதான் ஈசியா வேலைய முடிச்சுட்டேன். அப்பவும் அம்மாவ விடல. அந்த புளு சட்டை காரன் இங்கயே தான் இருக்கான் வேவு பார்த்துட்டு. இன்னைக்கு காலையில தான் அம்மாவ விட்டாங்க. நேரா ஊருக்கு பெரியம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். நானும் வேலைய விட்டுட்டு போகனும்னு கிளம்பிட்டு இருக்கேன்.” என்று கூறி முடித்தாள்.

நிவி செழியனை திரும்பி பார்த்த பார்வையில் மீண்டும் அதே கேள்வி, ‘அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ?’

அதை புரிந்து கொண்டவனுக்கு தான், சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

“நிச்சயமா போய் தான் ஆகனுமா?” என்று நிவி கேட்க, வாசுகி அமைதியாக தலையாட்டினாள்.

“ஓகே யுவர் விஷ். காவலுக்கு நின்னவன காவலதிகாரி தூக்கிட்டு போயிடுவாங்க. நீ பேக் பண்ணி முடி. உன் சேலரி செட்டில்மண்ட்டோட உன்னை அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணுறேன்” என்ற நிவியின் கையை பிடித்துக் கொண்டவள், “தாங்க்ஸ் நிவி” என்றாள்.

நிவியின் கைபேசி ஒலிக்க கையில் எடுத்தவள், “சொல்ல மறந்துட்டேன். இவர பத்தி தான் நீ நியூஸ் போட்ட. அன்பு செழியன் இவர் தான்” என்று கூறி விட்டு பேச ஆரம்பித்து விட்டாள்.

வாசுகி அதிர்ந்தே போனாள். எதோ வயதான மனிதரை பற்றி இருக்கும் என்று தான் நினைத்தாள். அந்த செய்தியில் குணக்கேடு முதற்கொண்டு இருந்தது.

எதிரில் அமர்ந்து இருந்தவனை பார்த்தால் அப்படி எதுவும் தெரியவில்லை. இவனை பற்றியா அப்படி எழுதினோம்? என்று மனம் வெதும்பி, “சாரி சார்” என்றாள்.

செழியன் பதில் கூறவில்லை. அடுத்து வேலைகள் துரிதமாக நடந்தது. வேவு பார்க்க நின்றவனை கைது செய்து விட்டு, இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாசுகியிடம் நேரடியாக வாக்கு மூலம் வாங்கிக் கொள்ள, இரண்டு நபர்களை அவளுக்கு உதவிக்கு வைத்து விட்டு, கிளம்பி விட்டனர். இரவே வாசுகி ஊரை விட்டு சென்று விடுவாள். செழியன் வாசுகியின் பெயரில் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. அவளையும் மிரட்டித் தானே செய்ய வைத்திருக்கிறார்கள்? அதனால் அவளை மன்னித்து விட்டான். இதைச் செய்தவனை பிடிக்கும் படி காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டதோடு அவர்களும் கிளம்பினர்.

அவனது கார் இருக்கும் இடம் வரை ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு வந்த நிவி, “எல்லாம் க்ளியராகிடுச்சுல? இனி கோர்ட்க்கு போறதா? இல்ல எப்படி டீல் பண்ணுறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. பை” என்று கூறி ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.

“இப்போ வர உன் பேர சொல்லவே இல்லையே?” என்று செழியன் கையை கட்டிக் கொண்டு எதிரில் நிற்க, “நிவினு எல்லாரும் கூப்பிட்டாங்களே கேட்கல?” என்று திருப்பிக் கேட்டாள்.

“நான் உன் பேர கேட்டேன்” செழியன் விடாப்பிடியாக கேட்க, “அத தெரிஞ்சுக்குற அளவு நாம க்ளோஸ் ஆகல சார். இந்த நிமிஷத்தோட உங்களுக்கும் எனக்கும் இருந்த சம்பந்தம் முடிஞ்சு போச்சு. அதோட விட்ருங்க” என்று கூறி விட்டு, ஸ்கூட்டியை ஆன் செய்ய விலகி நின்றான்.

விதி அவர்களது பாதையை இனி தான் இணைக்க போகிறது என்று அறியாமலே பறந்து விட்டாள்.

Leave a Reply