Episode 4

Loading

அன்று, அதிசயமாக நந்தனும் சுலோக்ஷனாவும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் மூன்று நாட்களில் நித்தின் ஜானவியின் இருபத்தைந்தாவது திருமண நாள். அப்படி தான் சொல்லப்படுகிறது. சுலோக்ஷனாவின் வயதை வைத்து, உண்மையை யாரும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களது திருமணமான வருடத்தை அதிக படுத்தி காட்டிக் கொண்டனர்.

வழக்கத்தை விட இந்த வருடம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவுக்கு வந்து, பெரிதாக திட்டம் போட்டனர். எதையோ எழுதிக் கொண்டிருந்த சுலோக்ஷனாவிற்கு அழைப்பு வந்தது.

“சொல்லு யானாமூனா”

“ஹலோ டார்லிங்” என்று மறு பக்கம் பதில் வந்தது.

“ஹாய் டார்லிங். என்ன உன் ஃபோன் எங்க?”

“அத காணோம். இல்ல இல்ல சார்ஜ்ல தான் இருக்கு.” என்று உளறிக் கொண்டிருந்தாள் சாலினி. யமுனாவின் முதல் மகள்.

“ஹா ஹா டார்லிங். ஒரு நாள் என்னையும் மறந்துட்டு யாருனு கேட்க போற. கட்டையால அடிச்சு கொல்ல போறேன்” என்ற சுலோக்ஷனாவை வழக்கம் போல் தூசியாக தட்டியவள், “அத விடு டார்லிங். பங்சன் வொர்க் எப்படி போகுது. நாங்க ஈவ்னிங் கிளம்பி வரோம்” என்றாள்.

“வாங்க வாங்க.. இப்போ என்ன டான்ஸ் ஆடிட்டு இருக்கியா…? யானாமுனா உன்னை விட்டுருச்சா?”

“ஹான்.. எங்க..? கீழ புராணம் பாடிக்கிட்டு தான் இருக்காங்க. நான் ரூம்ல ஆடிட்டு இருக்கேன். அப்பா சமாளிச்சுப்பார்” என்று சொன்னவள், அப்போதும் விடாமல் அந்த மேற்கத்திய இசைக்கு ஏற்றவாரு துள்ளி குதித்து உடலை வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள்.

“அடி தான் வாங்க போற. ஆமா எங்க அந்த புத்தக புழு?

“அவ சிஸ்டத்துல உட்கார்ந்து இருக்கா. எதையாவது நோண்டிட்டு இருக்கலனா தூக்கம் வராது ” என்று கிண்டலடிக்க, அவள் முகத்தில் பறந்து வந்து விழுந்தது குட்டி தலையணை.

தூக்கி எறிந்தவள் கண்ணை கணினியை விட்டு அகற்றாமலே, ” உன் வேலை என்னமோ அத மட்டும் பாரு” என்று சைகையால் கூறினாள்.

“குஷன்ன தூக்கி எறியுறா டார்லிங்” என்று சாலினி சுலோக்ஷனாவிடம் புகார் படிக்க, சுலோக்ஷனா சிரித்தாள்.

அதற்குள் கீழிருந்து சத்தம் கேட்க ஆரம்பித்தது. பாட்டை நிறுத்தி விட்டு கவனிக்க, “சும்மா இரு இந்திரா.. அவ பண்ணுற அளப்பறைக்கு இன்னைக்கு என் கையால அடி வாங்குனா தான் திருந்துவா” என்று சொல்லிக் கொண்டே யமுனா அறைப்பக்கம் வந்தார்.

அவசரமாக ஓடிச் சென்று, மெத்தையில் அமர்ந்து இருந்த யாழினியின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்ட சாலினி, மடிக்கணினியில் புகுந்து கொண்டாள். கதவை திறந்த யமுனா இடுப்பில் கை வைத்து நிற்க, பின்னால் வந்த விரேந்திரனோ வாய்க்குள் சிரிப்பை கட்டுப்படுத்தினார்.

“பாரு என்ன நடிப்புனு? சாலினி கண்ணு… இங்க வாடா…” என்று யாமுனா இழுத்து கூப்பிட, “ம்மா யாழுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றாள் நிமிர்ந்து பார்க்காமலே.

“கிழிச்ச. நீயா வரியா நான் வரவா?” என்று கேட்ட படி யமுனா பக்கத்தில் வர, அவசரமாக எழுந்த சாலினி கட்டிலுக்கு மறுபக்கம் ஓடினாள்.

“ஓடாத கொன்னடுவேன்” என்று யமுனா துரத்த, “நின்னா மட்டும் கொஞ்சவா போறீங்க?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலை சுற்றிக் கொண்டிருந்தாள்.

விரேந்திரன் பின்னால் சென்று ஒளிய, “எல்லாம் நீ கொடுக்குற இடம். டான்ஸ்னா பரதநாட்டியம் கத்துக்குவானு நினைச்சு ஒத்துகிட்டேன். என்னத்த கத்துகிட்டு வந்து நிக்குறா பாரு. வெளிய வா சாலு.” என்று யமுனா கத்த, அவள் அசையாமல் தந்தையின் பின்னால் நின்றாள்.

சாலினிக்கு தந்தையின் தொழிலை கவனித்துக்கொள்ள வேண்டும், முக்கியமாக அன்னையை தொழிலை விட்டு துரத்த வேண்டும். அதற்காகவே ஆடை வடிவமைப்பை பற்றி படித்தாள். படித்து முடித்து தொழிலில் நுழைந்து ஒரு வருடமாகிறது. ஆனால் அன்னையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் யமுனாவிற்கு பிடிக்காத மேற்கத்திய நடனத்தை கற்றுக் கொண்டு, மேலும் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறாள்.

விரேந்திரன் ஆடை பற்றிய மொத்த தொழிலையும் யமுனாவின் பொறுப்பில் விட்டு விட்டு, அவனது வாசனை திரவிய தொழிலை மட்டுமே கவனித்துக் கொள்கிறார். யமுனா எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. ஆனால் திருமணத்திற்கு பின் வேலை எல்லாம் பார்க்க மாட்டேன் என்று கட்டளை போட்டவரை, வேலைக்குள் நுழைக்க விரேந்திரன் படாதபாடு பட்டுவிட்டார்.

யமுனாவை பொறுத்த வரை, அவளது அன்னை நந்தினி செய்த தவறை அவள் செய்து விடக்கூடாது. நந்தினி அந்தகாலப்பெண்மணி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தொழிலில் கில்லாடி. யமுனாவின் தந்தை பெருமாளும் கூட பெரிய தொழிலதிபர் தான்.

இருவரையும் திருமணம் செய்து வைக்க ஒரே காரணம் பணம் தான். அன்னை தொழிலை கட்டிக் கொண்டு அழ, தந்தைக்கு துணை தேவைபட்டதோ…? துணையை தேடிக் கொண்டார். யமுனா எட்டு வயதில் இருக்கும் போது, பெருமாளுக்கு வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியது. எப்போதும் கண்ணில் பாடாத மனைவியை பிடிக்கவில்லை.

வீட்டோடு இருக்கும் மனைவியை தான் அவரது மனம் விரும்பியது. விவாகரத்து பெற முடிவு செய்தார். மகளை தன்னோடு வைத்துக் கொள்ள நினைத்தார். நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. அவரது இரண்டாவது மனைவி மாலாவும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் காலம் முழுக்க மாலாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, மீண்டும் யமுனாவை நாடினார்கள். யமுனா அவர்களே தள்ளி நிறுத்தி விட்டாள்.

அந்த சிறு வயதில் தந்தையை பிரிந்து இருக்க முடியாமல் தவித்தாள். தாய் அவளை பள்ளி விடுதியில் சேர்த்து விட்டு, மீண்டும் அவரது வேலைகளை தொடர்ந்தார். ஏன் இப்படி வளர்கிறோம்? என்று தெரியாமல் வளர்ந்தவள், புரிய வேண்டிய நேரத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டாள்.

தந்தையை சுயநலவாதியாக நினைத்து ஒதுக்கி வைக்க ஆரம்பித்தாள். அவரிடம் பேசலாம் என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்தாலும், அதை அவள் நிராகரித்து விட்டாள். அன்னையின் மேல் இருந்த பாசமும் அவரது விலகலில் குறைய ஆரம்பித்த போது தான், விரேந்திரனை சந்தித்தாள்.

பள்ளியிலிருந்து அழைத்து செல்லப்படும் எந்த ஒரு போட்டியையும், யமுனா மறுத்ததே இல்லை. அப்படி ஒரு நாள் தான், முதன் முதலாக அவள் மேல் உண்மையான அக்கறையுடன் பேசிய விரேந்திரனை பார்த்தது.

பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளவில்லை. ஆனால் மனதில் அவன் ஆழப்பதிந்து விட்டான். அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவனை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி பார்ப்பது? மனதை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

விதி அவள் இன்டர்ன்ஸிப் மூலம் மீண்டும் அவனோடு இணைத்து வைத்தது. என்னென்னவோ செய்து இருவரும் ஒரு வழியாக திருமண பந்தத்தில் இணைந்து விட்டனர். அவர்களின் காதல் வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு தான் சாலினி, யாழினி.

யாழினி இப்போது தான் பனிரெண்டு முடித்து இருக்கிறாள். ஸ்வரணுக்கும் யாழினிக்கும் ஒரே வயது தான். ஆனால் ஸ்வரணிடம் இருக்கும் விளையாட்டு தனம் இருக்காது. அமைதியானவள். சாலினிக்கு நேர் எதிர். சாலினி யமுனாவின் தாய் நந்தினியை உரித்து வைத்து பிறந்து இருக்க, யாழினி விரேந்திரன் அன்னை செம்பவளத்தை உரித்து வைத்து இருந்தாள்.

இருவருமே விரேந்திரனுக்கு செல்லம் தான். அன்னையின் ஜாடையில் இருப்பதாலோ என்னவோ, யமுனாவும் சாலினியும் எப்போதும் முட்டிக் கொள்வார்கள். அதை விட தன் கணவனின் பாசத்தை பங்கு போட வந்தவள் என்ற பொறாமை வேறு யமுனாவை படுத்தி வைக்கும்.

....

கல்யாண நாள் வேலையை எல்லோரும் பரபரப்பாக செய்து கொண்டிருக்க, ஒரு பக்கம் விஜயநந்தன் வெளிநாடு செல்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. திருமணநாள் முடிந்து அடுத்த நாள் அவன் கிளம்புகிறான்.

நித்தினின் தொழிலான வர்ணபூச்சு கம்பெனியை விஜயநந்தன் தான் இனி பார்க்க வேண்டும். அதற்கான படிப்பை முடித்து விட்டு, ஐந்து வருடம் கழித்து தான் வருவான்.

ஜானவிக்கு மகனை பிரிந்து இருக்கவே முடியாது. அவர் வழக்கம் போல் சோக கீதம் வாசித்தாலும் சமாதானம் செய்து விட்டு வேலைகளை கவனித்தனர்.

அடித்து பிடித்து, ஒரு வழியாக யமுனா தன் இரண்டு மகள்களை கூட்டிக் கொண்டு தன் பெரியம்மாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

சாலினி, யாழினி, சுலோக்ஷனா, விஜயநந்தன், ஸ்வரண்… ஒன்றாக சேர்ந்து அவர்களது வேலைகளை செய்து கொண்டிருக்க, இல்லை விளையாடிக் கொண்டிருக்க, யமுனா, ஜானவி,லோகேஸ்வரி தங்களது பேச்சில் மூழ்கி விட்டனர்.

நித்தின் வேலையாக வெளியே சென்று இருந்தார். சிறியவர்கள் அவ்வப்போது பேசுவதும் அடித்துக் கொள்வதுமாக இருந்தனர்.

யாழினி இயற்கையிலேயே அமைதி. இவர்களது பேச்சை கவனித்தாளே ஒழிய, வாயை திறந்து பேசவே இல்லை.

சாலினிக்கும் சுலோக்ஷனாவுக்கும் ஐந்து வயது வித்தியாசம். ஆனால் டார்லிங் என்று தான் கூப்பிட்டுக் கொள்வர்.

ஸ்வரனும் யாழினியும் ஒரே வயது. அதனால் இருவரும் பல நேரங்களில் ஒன்றாகவே சுற்றுவர். இப்போதும் ஸ்வரண் எதையோ கொண்டு வந்து கொடுக்க, இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

நடுவில் தனியாக இருந்தது விஜயநந்தன் தான். கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, நித்தின் வந்து விட்டார்.

“என்ன நந்து எல்லாம் உன்னை கழட்டி விட்டுட்டாங்களா?”

“ஆமாபா… இதுங்க கேர்ள்ஸ். அதுங்க சின்ன பசங்க. எந்த பக்கமும் சேர முடியல” என்று சோகமாக சொல்ல, “நான் இருக்கேன்டா. இரு வர்ரேன்” என்று உள்ளே சென்றார்.

முகம் கழுவி விட்டு வந்தவர் விஜயநந்தனுடன் வேலைகளை பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்.

அப்படி இப்படி என்று திருமணநாளும் வந்து சேர்ந்தது. ஜானவி பட்டு சேலையில் மினுமினுக்க, நித்தின் வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றான்.

“ப்பா கலக்குறீங்க… பங்சன்க்கு வர போற அத்தனை பொண்ணு கண்ணும் உங்க மேல தான் இன்னைக்கு விழப்போகுது” என்று சுலோக்ஷனா சொல்ல, “எங்க அண்ணியும் தான் பெஸ்ட் ” என்று யமுனா சுலோக்ஷனாவை இடித்துக் கொண்டு ஜானவியிடம் வந்து நின்றாள்.

“எல்லா பொண்ணும் பார்த்தா என்ன? பார்க்கலனா என்ன? என் பொண்டாட்டி என்னை பார்த்தா போதாது” என்ற நித்தின் ஜானவியை பார்த்து கண்ணடிக்க, சுற்றி இருந்தோர் “ஹோ…” என்று கூச்சலிட்டனர்.

ஜானவி தான் முகம் சிவந்து நித்தினை கிள்ளி வைத்து விட்டு ஓடி விட்டார். அதற்கும், “ஹோ..” என்று கூச்சலிட்டு கேலி செய்தனர்.

விழா ஆரம்பிக்க, திருமணமான ஜோடிகளுக்கெல்லாம் போட்டி வைத்து நடத்திக் கொண்டிருந்தாள் சுலோக்ஷனா. நித்தின் ஜானவி இருவரும் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சாலினி சுலோக்ஷனாவிற்கு உதவியாக இருந்தாள்.

விஜயநந்தன் விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்தான். யாழினி குடித்து முடித்த ஜூஸ் டம்ளரை ஒரு இடத்தில் வைத்து விட்டு திரும்ப, அவளது கைதட்டி ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்தது.

விழப்போவதை பார்த்து பயந்து அவள் கண்ணை மூடிக்கொள்ள, இரண்டு நொடிகள் கடந்தும் உடையும் சத்தம் கேட்கவில்லை. கண்ணை திறந்து பார்த்தாள். எதிரில் டம்ளரை பிடித்துக் கொண்டு விஜயநந்தன் நின்றிருந்தான்.

நாக்கை கடித்துக் கொண்டு அவள் முழிக்க, “கீழ விழுந்தா பிடிக்கனும். கண்ண மூடினா என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

“ஆமா… அது ஒரு பயத்துல”

“பார்ரா.. உனக்கு வாய் இருக்கு போல. ” என்று கிண்டலடித்தான்.

அவளோ உதட்டை சுழித்து பழிப்பு காட்டி விட்டு அவனை தாண்டி ஓடினாள். ஓடியவள் எதிரில் வந்த ஸ்வரணிடம் மோதிக் கொண்டாள். அதை பார்த்த நந்தன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

“எருமை எப்படி வந்து மோதுற?” என்று ஸ்வரண் திட்ட, ” உன்னை யாருடா நடுவுல வர சொன்னது லூசு” என்று பதிலுக்கு திட்டி விட்டுச் சென்று விட்டாள்.

சுலோக்ஷனாவும் சாலினியும் விளையாட்டை முடித்து, வெற்றி பெற்ற ஜோடிக்கு பரிசு கொடுக்க நித்தினையும் ஜானவியையும் அழைத்தனர்.

வெற்றி பெற்றவர்கள் அன்பு செல்வமும் விசாலாட்சியும். நித்தினிடம் பேசியவர்கள், “உங்க பொண்ண எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. எங்க பையனுக்கும் பொண்ணு பார்க்குறோம்” என்று விசயத்தை சொல்ல, நித்தினுக்கு அவர்களது குடும்பத்தை பிடித்ததால் மறுப்பு சொல்லவில்லை.

“ஃபோட்டோ கொடுங்க. நான் சுலோக்ஷனா கிட்ட கேட்டு சொல்லுறேன்”

அன்பு செழியனின் படத்தை உடனே அனுப்பி வைத்தனர்.

சுலோக்ஷனாவிடம் ஒரு முறை பேசி விட்டு அன்பு செல்வம் தம்பதி கிளம்பினர். மற்ற எல்லோரும் விழா முடிந்து கிளம்பி விட, அந்த இடத்தை சுத்தம் செய்ய விஜயநந்தன் ஆட்களை நியமித்து இருந்தான். எல்லோரையும் அனுப்பி விட்டு பார்த்தால் ஸ்வரண் அறையில் போய் முடங்கிக் கொண்டான்.

நித்தினும் விரேந்திரனும் பேசிக் கொண்டிருக்க, யமுனாவும் ஜானவியும் அவர்கள் அறையில் சென்று படுத்து விட்டனர்.

யாழினி சாலினி இருவரும் சுலோக்ஷனாவின் அறையில் தஞ்சம் புகுந்தனர். விஜயநந்தனும் சுலோக்ஷனாவும் எல்லாம் முடிந்து வர, வீடே அமைதியாக இருந்தது.

“நீங்களும் போய் தூங்குங்க. உன் ஃபோனுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பி இருக்கேன் பார்த்து சொல்லு” என்று சுலோக்ஷனாவிடம் சொன்னார்.

“ஃபோன்ல சார்ஜ் இல்லபா. போட்டுட்டு பார்க்குறேன்” என்று சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

நந்தனும் ஓடிச்சென்று மெத்தையில் விழுந்து விடடான். சுலோக்ஷனா இரவு உடைக்கு மாறினாள். கைபேசி உயிர் பெற்றிருக்க, அதை எடுத்துப் பார்த்துக் கொண்டே தண்ணீரை குடித்தவளுக்கு புரையேறியது.

அவசரமாக தண்ணீரை விழுங்கி விட்டு, “பார்ரா…! அப்பாடக்கர் இங்கயும் வந்துட்டானா?” என்று பார்த்தாள்.

அவளையும் அறியாமல் மனம் அவனை ரசிக்க தொடங்கி இருந்தது.

அன்னையின் தோளில் கை போட்டுக் கொண்டு சிரித்தபடி நின்று இருந்தான் அன்பு செழியன்.

‘சும்மா சொல்லக்கூடாது அழகன் தான்டா நீ’ என்று தனக்குள்ளே சொல்லி விட்டு சிரித்தபடி உறங்கி போனாள்.

......

இரவு வீட்டிற்குள் நுழைந்த அன்பு செல்வம், மகனது அறையில் இன்னும் விளக்கு எரிவதை பார்த்து விட்டு அங்கே சென்றார்.

“தூங்கலையா இன்னும்?”

“இல்ல டாட். பங்சன் நல்லபடியா முடிஞ்சதா?”

“ம்ம் நல்லாவே முடிஞ்சது. உன் ஃபோடோவ நித்தின் கிட்ட கொடுத்து இருக்கேன்” என்று செல்வம் கூற, ஆச்சரியமாக பார்த்தான்.

“ஆமா டா. அவங்களும் சுலோக்ஷனாக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க போல. உடனே வாங்கி சுலோக்ஷனா கிட்ட கேட்குறேன்னு சொன்னாங்க”

‘கிழிஞ்சது. அவ என்னை பார்த்துட்டு வேணாம்னு சொல்ல போறா’ என்று நினைத்தவன், “சரி பார்க்கலாம்” என்று மட்டுமே தந்தையிடம் கூறினான்.

மேலும் பேசிவிட்டு தந்தை சென்று விட கைபேசியை எடுத்தான். இன்று அவளது விழாவில் எடுத்த படங்களை அனுப்பி இருந்தனர், சுலோக்ஷனாவை பின்தொடர வைத்த ஆட்கள்.

கையில் மைக்குடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“மிஸ் நிவி என்கிற சுலோக்ஷனா.. மிஸஸ் ஆக ரெடியா இருங்க. அடுத்த வருசம் இதே விளையாட்ட நம்ம விளையாடுவோம்” என்று சொன்னவனுக்கு, மனம் நிறைந்த உணர்வு.

Leave a Reply