Episode 6

Loading

காலையில் எழுந்து கீழே இறங்கி வந்த சுலோக்ஷனா, “ம்மா ஜூஸ்” என்று சத்தம் கொடுத்தாள். இன்றோடு விஜயநந்தன் அமெரிக்கா சென்று இரண்டு நாட்களாகிறது.

ஜானவி மகளுக்கு பழச்சாறை கொண்டு வந்து கொடுக்க அதை, “நன்றி”யோடு வாங்கியவள், நாளிதழை கையில் எடுத்தாள். அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த நித்தின், “அம்மா.. ஜான்..” என்று அவசரமாக அழைத்தான்.

அவர்கள் வர, “அன்பு செல்வம் சார் போன் பண்ணி இருந்தார். அவங்களுக்கும் சுலோக்ஷனாவ பிடிச்சுடுச்சாம்.” என்று சொல்ல, ஜானவிக்கும் லோகேஸ்வரிக்கும் சந்தோசம் தாளவில்லை.

டம்ளரை வாயினருகில் கொண்டு போன சுலோக்ஷனா, அதிர்ந்து அப்படியே நிறுத்தினாள்.

“அடப்பாவி அப்பாடக்கர்” என்று வாய் வரை வந்த வார்த்தையை, அவசரமாக பழச்சாறை குடித்து முழுங்கினாள்.

‘இவன போய் நம்புனேன் பாரு. இவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் வேணாம்னு பார்த்தா சும்மா இருக்க மாட்டான் போலயே.’

“ரெண்டு பேரும் முதல்லயே பார்த்தவங்க தான? அதனால பொண்ணு பார்க்குற வேலை எல்லாம் வேணாம். நேரா நிச்சயத்த வச்சுக்கிட்டா என்னனு கேட்டாங்க. எனக்கும் அதான் சரினு தோனுச்சு. ஓகே சொல்லிட்டேன்” என்று நித்தின் சொல்ல, சுலோக்ஷனாவிற்கு பழச்சாறு கூட தொண்டையில் சிக்கிக் கொண்டது.

‘அய்யோ! என்ன இவ்வளவு அவசரமா போறாங்க!!! யாராவது ப்ரேக் போடுங்கயா’ என்று சுலோக்ஷனா மனதில் அலறினாள்.

“மாமா ஒரு வாரத்துல வந்துடுவார்ல? வந்ததும் தேதி குறிக்கலாம்” என்று ஜானவி சொல்ல, அப்போது தான் சுலோக்ஷனாவிற்கு உயிர் வந்தது.

‘ஆஃப்டர் ஆல் கல்யாணத்துக்கெல்லாம் இந்த சுனாபானா பயப்பட வேண்டி இருக்கே’ என்று தனக்கு தானே புலம்பியவள், எழுந்து சென்று விட்டாள்.

வேலைக்கு கிளம்பி வந்தவள், உணவு மேசையில் சந்தோசமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்தாள். அவரது சந்தோசம் முக்கியமாக தோன்றிய போதும், திருமணம் செய்து கொள்ள அவளுக்கு பிடிக்கவில்லை.

சாப்பிட்டு விட்டு கிளம்பியவள், நேராக அலுவலகம் நுழைந்தாள். மளமளவென வேலைகளை செய்து விட்டு, மற்றவர்களை அழைத்து விட்டுப் போயிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு யோசனையோடு அமர்ந்து விட்டாள்.

பல நேரங்களில் இது போல் சுலோக்ஷனா யோசனை செய்வதுண்டு. எதாவது செய்தியை பற்றி அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, யாரும் அவளிடம் பேச முயற்சிக்க முடியாது. மீறி பேசினால் “கெட் லாஸ்ட்” என்ற ஒரே வார்த்தையில் துரத்தி விடுவாள்.

ஆனால் இப்போது அவள் யோசித்தது வேலையை பற்றியல்ல. செழியனை பற்றி. அவன் ஏன் சம்மதம் சொன்னான் என்று. நிச்சயமாக திமிர் பிடித்தவன் தான். வாசு என்று நினைத்து தன்னை சாடிச் சென்றவன், உண்மை தெரிந்த பின் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.

அன்று அறிமுகபடுத்தும் போது அமைதியாக இருந்தானே. அப்படி என்றால் முதலிலேயே கண்டு பிடித்து விட்டான். இருந்தும் அன்று அலுவலகம் சென்ற போது எரிந்து விழத்தானே செய்தான்.

அதை எல்லாம் வைத்து அவன் வேண்டாம் என்று சொல்லி விடுவான் என்று கணக்கு போட்டது எங்கே தவறியது? தலையை பிடித்துக் கொண்டாள்.

“அடேய் அன்புஉஉஉஉஉஉஉ” என்று கத்தியவள், “இரு உன்னை…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு கைபேசியை எடுத்தாள். அழைக்கலாமா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தி விட்டு, “நமக்கு தானே காரியமாகனும். கூப்பிடுவோம்” என்று சமாதானமாகி அழைப்பு விடுத்தாள்.

முழுதாக அழைப்பு சென்று அணைந்தது. அழைப்பை ஏற்கும் வழியை காணவில்லை. கடுப்புடன் தூக்கி போட்டு விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். கண்ணை மூடியவள் அவனிடம் என்ன பேச வேண்டும்? என்று மனதில் தொகுத்துக் கொண்டிருந்தாள்.

ஐந்து நிமிடத்தில் கைபேசி இசைத்தது. செழியன் தான். எடுத்து காதில் வைக்க, “ஹலோ சுலோக்ஷனா பிசியா?” என்று கேட்டான்.

‘என்ன நாம கேட்க வேண்டியத இவன் கேட்குறான்?’ என்று யோசித்தவள், “இல்ல” என்றாள்.

“நீ ஏன் சம்மதம் சொன்ன? நீ வேணாம்னு சொல்லிடுவனு நினைச்சு நான் இங்க ஓகே சொல்லிட்டேனே? உனக்கு என்னை பிடிக்காதுனு நினைச்சேன். ஏன் ஓகே சொன்ன?” என்று சுலோக்ஷனா கேட்க வேண்டிய அனைத்தையும் செழியன் கேட்க, விலுக்கென நிமிர்ந்தாள்.

“என்னது நான் பிடிக்காதுனு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?”

“ஆமா.. அன்னைக்கு தப்பா நினைச்சுட்டு உன்னை திட்டுனது, தெரிஞ்சதுக்கப்புறமும் சாரி கேட்காதது எல்லாம் வச்சு பிடிக்காம போயிருக்கும்னு நினைச்சனே அப்படி இல்லையா?” என்று கேட்டு வைத்தான்.

சுலோக்ஷனா உண்மையாகவே குழம்பிப் போனாள். தான் நினைத்த காரணத்தை எல்லாம் அவன் சொல்கிறான். குழப்ப முயற்சிக்கிறானோ? என்று யோசித்தவள், “நான் அன்னைக்கு கால் பண்ணி என்ன சொன்னேன்?” என்று கேட்டாள்.

கொஞ்சம் தெளிய ஆரம்பித்தவளை அடுத்தடுத்த பதில்களால் குழப்ப ஆரம்பித்தான் அவன்.

“என்ன சொன்ன? நீ தான் எனக்கு பார்த்துருக்க பொண்ணுனு சொன்ன” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்.

“அது இல்ல. நோனு பதில் வந்தா சந்தோசப்படுவேன்னு தான சொன்னேன்?”

“ஆமா. நீ நோ சொல்லிடுவனு அதுல தான் நான் ஸ்ட்ராங்கா முடிவுக்கு வந்தேன். புரிஞ்சுக்க சுலோக்ஷனா. எங்க வீட்டுல நிறைய பொண்ணு பார்த்துட்டாங்க. எதாவது குறை சொல்லி வேணாம் வேணாம்னு சொல்லிட்டே இருப்பேன். இப்போ உன் கிட்ட எந்த குறையும் கண்டு பிடிக்க முடியல. என்ன சொல்லுறதுனு யோசிச்சேன். நீயா நோனு தான் சொல்லுவனு சொல்லவும் தான் தைரியமா ஓகே சொன்னேன். ஆனா நீயும் ஓகே சொல்லி இருக்க. அப்போ உனக்கு என்னை பிடிக்குமா?” என்று கேட்டு முடிக்க, சுலோக்ஷனாவிற்கு தலை சுற்றியது.

அவள் பேச வேண்டிய அனைத்தையும் ஒரு வார்த்தை கூட மாறாமல் பேசி வைத்தால் என்ன செய்வாள்? தலையில் கை வைத்து மேசையில் கவிழ்ந்து கொண்டாள்.

என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க? செழியனோ கைபேசியை கையால் மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

‘இவன் கிட்ட போன்ல பேசுனா சரி வராது’ என்று முடிவெடுத்தவள், “ஹலோ ” என்றாள்.

சிரிப்பைக் கட்டுப் படுத்தி விட்டு சாதாரண குரலில், “ஹான் சொல்லுமா” என்றான்.

‘மா வா?’ என்று முழித்தாள். அதிகமாக நித்தின் தான்மா என்று அழைப்பான். அதை ஒதுக்கியவள், “எனக்கு உங்க கிட்ட நேரா சில விசயங்கள் பேசனும்.” என்று சொல்ல, “சரி தான். நானும் அதான் நினைச்சேன். எங்க பேசலாம்? காபி சாப்?” என்று கேட்டான்.

“ம்ஹூம். நான் காபி சாப்பிட மாட்டேன். வேற எங்கயாவது… பீச்?”

“சரி ஈவ்னிங் பார்க்கலாம்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

சுலோக்ஷனா கண்ணை மூடி அமர, செழியனோ உல்லாசமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

அன்று சுலோக்ஷனாவை திட்டி விட்டு வந்தததிலிருத்து அவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அவளது நிமிர்வு, நேர்மையை காட்டியது. வாசுவை பற்றி முழு விபரம் வேண்டும் என்று விசாரிக்க சொன்னவன், வாசுகி என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணின் படம் வர, பார்த்து விட்டு, “நினைச்சேன்” என்று தலையில் தட்டிக் கொண்டான்.

தான் பேசிய வார்த்தை அதிகப்படி என்பதால் மன்னிப்பு கேட்க நினைத்தான். ஆனால் அவனது ஸ்டேடஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இப்போது போய் மன்னிப்பு கேட்டால், அது எதாவது பிரச்சனையை கிளப்பி விடும். அவளை சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன், அன்று தூக்கத்தை தொலைத்து இருந்தான்.

மீண்டும் மீண்டும் சுலோக்ஷனா எதிரில் அமர்ந்து தன்னை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த தோற்றம் அவனை இம்சித்தது. அடுத்த நாள் முதல் வேலையாக அவளை பற்றிய அத்தனை தகவலையும் சேமித்து வைத்தான்.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் அவளையே நாடுவது அவனுக்கு குழப்பமாகவே இருந்தது. அவளே நேரில் வருகிறாள் என்றதும் மனம் துள்ளத்தான் செய்தது.

அதை அடக்கும் வழி தெரியாமல் தான், அவளிடம் எடுத்தெறிந்து பேசினான். மனதை கடிவாளமிட முறச்சித்து கொண்டிருக்க, அவளோ மீண்டும் தூண்டிவிடும் முயற்சியில் இறங்கினாள்.

வாசுகியின் வீட்டில் அவள் நடந்து கொண்ட தோரணை, விஷயத்தை அடிவேரிலிருந்து ஆராய்ந்து அந்த பெண்ணையும் காப்பாற்றி, பிரச்சனையை முடித்து வைக்கும் போது, அழுத்தமாக மனதில் பதிந்து விட்டாள்.

அதற்கு முத்தாய்ப்பாய் அவள் பார்த்த பார்வை. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று பார்த்தாளே! இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

அதன் பின் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். வீட்டில் பேசி நிச்சயம் வரை வந்து விட்டாகியது. சுலோக்ஷனா என்ன யோசிப்பாள்? என்று முதலிலேயே கணித்து இருந்தான். இனி அவள் நேராக பேசினாலும், எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.

அவளாக திருமணத்தை நிறுத்தி விடக் கூடாது. நிறுத்தவும் விட மாட்டான்.

......

ஸ்வரணுக்கு அண்ணன் இல்லாமல் வெளியே போக பிடிக்கவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தான். யாழினி தூங்கி கொண்டிருந்தாள். அவளுக்கென்று தனியாக கைபேசி இல்லை. சாலினிக்கு அழைத்தான்.

அவள் வந்து யாழினியிடம் கொடுக்க, “ஹலோ” என்றாள் தூக்க கலக்கத்தில்.

“ஏய் பூசணிக்கா என்ன இன்னேரத்துல தூங்குற?”

“யாருடா பூசணி…? தூங்குறவள எழுப்பி ஏன் தூங்குறனு கேட்குற எருமை மாடே. மரியாதையா ஃபோன வை” என்று கத்தி விட்டாள்.

“ப்ப்ப்பா பிசாசே.. ஏன் இப்படி கத்துற? எல்லோரும் உன்னை போய் அமைதினு நம்புறாங்க பாரு”

“அந்த எல்லாரும் தூங்கும் போது ஃபோன் போட்டு அறுக்கல. நீ தான அறுக்குற”

“அறுக்குறனா? என் போர் எனக்கு தான் தெரியும் அண்ணன் இல்லாம செம்ம போர் தெரியுமா”

அண்ணன் என்று சொன்னது விலுக்கென எழுந்து விட்டாள்.

“ஹே உன் கிட்ட ஒன்னு சொல்லனும்னு இருந்தேன் ஸ்வரா”

“என்ன?”

விமான நிலையத்தில் வைத்து நந்தன் சொன்னதை விளக்கமாக சொன்னாள்.

“இவ்வளவு வாயடிக்குற… இது கூட செய்யாம கண்ண மூடி நிப்பியா? லூசா நீ? நல்ல வேளை அண்ணா பார்த்தார்”

யாழினி சோகமாக அமர்ந்து இருக்க, ஸ்வரண் அட்வைஸ் மழை பொழிந்து விட்டான். பேசிக் கொண்டு இருந்தவன் நடுவில் புகுந்து, “இப்போ தான்டா உனக்கும் உன் அண்ணனுக்கும் இடையில இருக்க வித்தியாசம் புரியுது ” என்றாள் நக்கலாக

“என்னது?”

“அவங்க நாலே லைன்ல சொலியூசன் சொல்லிட்டு, சார்ட்டா முடிச்ச விசயத்த, நீ இவ்வளவு நேரம் அறுக்குற. நீ இன்னும் வளரனும் தம்பி” என்று கிண்டலடிக்க, “அடிங்க” என்று ஆரம்பித்தவன் திட்டி விட்டு வைத்தான்.

சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்து விட்டாள்.

நந்தன் சொன்னதை பற்றி அவள் சாலினியிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை. ஸ்வரணிடம் இருக்கும் நட்பு, அவனிடம் மட்டும் சொல்ல தூண்டியது. அவன் சொன்ன அறிவுரைகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டாள். ஆனால் அதை அப்படியே அவனிடம் காட்டாமல் விளையாட்டாக முடித்து விட்டாள்.

Leave a Reply