சாரா 11

Loading

அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு, வேகமாக உள்ளே நுழைந்தனர் மூவரும் சாணக்கியன், பூபதி மற்றும் காசி.

உள்ளே இருந்தவன் சன்னல் வழியாக தப்ப நினைக்க, காசி அவனை பிடித்துக் கொண்டான்.

அவனை இழுத்து உள்ளே போட்ட அடுத்த நொடி, உதை விட்டான் பூபதி. காசி அமைதியாய் நிற்க, பூபதி அடிக்க ஆரம்பித்து விட்டான்.

கீழே கிடந்தவனை முடிந்தவரை அடித்து உதைத்து விட்டு, தூக்கி நிறுத்தினர்.

“எங்கடா சிவா?”

“எனக்கு தெரியாது”

“சொல்லுடா..” என்றவன் முகத்தில் குத்து விட, சாணக்கியன் அவனது சட்டையை பிடித்துக் கொண்டான்.

“சிவா எங்க?” என்று கேட்டவன் குரலில், மரணம் அழைப்பு விடுத்தது அவனை.

அவன் சிவாவின் டிரைவர். கடைசியாக சிவாவுடன் இருந்தவன். அவன் தொலைந்த அன்றே, இவனும் தொலைந்து போனான்.

அவன் பதில் சொல்லாமல் எச்சிலை விழுங்க, சாணக்கியன் ஒரு அறை விட்டான். தாங்க முடியாமல் சுவற்றில் சென்று மோதி விழுந்தான்.

“சிவா எங்க?” என்று கேட்டவன் மீண்டும் ஒரு அறை விட, கீழே விழுந்திருந்தான்.

பூபதி மீண்டும் அவனை பிடித்து தூக்கி நிறுத்தினான்.

“இப்ப சொல்லப்போறியா? இல்ல சாகுறியா?” என்று கேட்ட பூபதி மேலும் அடிக்க, துவண்டு மயங்கிப் போனான்.

“எனக்குத்தெரியாது” என்று மயக்கத்தோடு முணங்கியவனை, இங்கே வைத்து விசாரிக்க முடியாது என்று தூக்கி காரில் போட்டுக் கொண்டு கிளம்பினர்.

அவர்களது இடத்தில் வைத்து கட்டி போட்டு விட, மயங்கிக் கிடந்தவன் பல நிமிடங்களுக்கு பிறகே கண் விழித்தான்.

அவன் முகத்தில் தண்ணீரை கொட்டி விட்டு, அடித்து எழுப்பினர்.

எதிரில், கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு, முகம் இறுக நின்றிருந்த சாணக்கியனை பார்த்து, அவனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.

“உனக்கு கடைசியா ஒரு சான்ஸ் தர்ரேன். என்ன நடந்ததுனு சொல்லு”

“சார் சார் எனக்கு எதுவும் தெரியாது சார்.. நான் எதுவுமே பண்ணல. யாரு கடத்துனதுனு எனக்கு தெரியாது சார்”

“நடந்தத சொல்லுனு கேட்டேன்”

உடனே ஒப்பித்தான்.

சிவராஜ் மறைந்த அன்று, காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஆள் இல்லாத பகுதியில் நடு சாலையில் ஒரு கார் பாதையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தது.

சட்டென எச்சரிக்கை அடைந்து காரை பின் பக்கம் நகர்த்த, மேலும் ஒரு கார் வந்து பின்னால் நின்றது.

மாட்டிக் கொண்டது புரியவும், “சார் கார விட்டு இறங்காதீங்க” என்று சொல்லிக் கொண்டே கைபேசியை எடுக்க, அதில் சுத்தமாக நெட்வொர்க் இல்லை.

நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிவராஜ் கோபத்துடன் கதவை திறந்து கொண்டு இறங்கி விட்டான்.

முதலாளியை காக்கும் பொருட்டு டிரைவரும் இறங்க, எங்கிருந்தோ எதுவோ வந்து தலையை தாக்கியதாக கூறினான். அதன் பிறகு முழித்த போது, காட்டுக்குள் கால்கள் கட்டப்பட்டு கிடந்தது தான் தெரிந்தது.

சிவாவை கடத்தி விட்டார்கள் என்பது புரிய, எங்கே தன்னை சந்தேகப்படுவார்களோ? என்ற பயத்தில் ஓடி மறைந்து விட்டதாக கூறி முடித்தான்.

“இதெல்லாம் நான் ஏன் நம்பனும்?” -பூபதி

“என் பொண்டாட்டி மேல சத்தியமா இதான் சார் நடந்துச்சு.”

“நீயே அவனுங்கள வர வைச்சு சிவா சார கடத்த ப்ளான் போட்டுருக்கலாம்ல?”

“இல்ல சார்…” என்றவன் அழுது விட்டான்.

“நீ சொன்னது உண்மைங்குறதுக்கு என்ன ஆதாரம்?” என்று பூபதி கேட்க, “என் பொண்டாட்டி கிட்ட சொல்லிருக்கேன் சார். அவள வேணா கேளுங்க. பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டேன். அதுக்குள்ள இவ்வளவும் நடந்துடுச்சு. பெத்த பிள்ளைய கூட இன்னும் நான் பார்க்கல சார். என்னை கொன்னுடாதீங்க சார்” என்று கெஞ்சி அழுதான்.

“உண்மையா இருந்தா நீ நேரா வந்து சொல்ல வேண்டியது தான?”

“பயந்துட்டு ஓடிப்போயிட்டேன் சார். சத்தியமா அவர நான் எதுவும் பண்ணல சார்”

“நீ சொன்னது மட்டும் பொய்யா இருந்தா, உன் புள்ளை அப்பா இல்லாம தான் வளரும். ஞாபகம் வச்சுக்க” என்றவன் சாணக்கியனை பார்க்க அவன் அழுத்தமாய் பார்த்து விட்டு நகர்ந்தான்.

இது வரை சிவா என்ன ஆனான்? என்றே தெரியாமல் இருக்க, இப்போது கடத்தப்பட்டிருப்பதாக கிடைத்த செய்தி பெரிய செய்தி தான். அதைச் சொல்ல வைரவரை சந்திக்க கிளம்பினான் சாணக்கியன்.

........

வர மாட்டேன் என்றவளை வம்பாக ஏற்றிக் கொண்டு கிளம்பினாள் அனுசயா. ஏகாம்பரம் தான், இருவருக்கும் என்ன தான் பிரச்சனை? என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

காரில் அமர்ந்த அடுத்த இரண்டாவது நிமிடம், “நிறுத்துங்க நிறுத்துங்க” என்று கத்தினாள் ராகவி.

அனுசயா புரியாமல் பார்க்க, “நிறுத்துங்கனு சொன்னேன்” என்றாள்.

ஏகாம்பரத்திற்கும் எதற்காக நிறுத்தச் சொல்கிறாள்? என்று புரியவில்லை. ஆனால் அனுசயா நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தாள்.

“கடை வந்துடுச்சு. நாங்க இறங்கிக்கிறோம்” என்றாளே பார்க்கலாம்.

“வாட்?” என்று அனுசயா அதிர, ஏகாம்பரம் கூட அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

இரண்டு நிமிடம் கூட முழுதாக கடக்கவில்லை காரில் ஏறி. உடனே நிறுத்தி கடை வந்து விட்டதாக சொல்லி இறங்குபவளை பார்த்து, மற்ற இருவருக்கும் தலை சுற்றியது.

“எங்க?” என்று கேட்ட அனுசயாவும் இறங்க, ஒரு ஆள் மட்டும் நடந்து செல்லக்கூடிய ஒரு சிறிய சந்துப்பகுதியில் இருந்த தேநீர் கடையை காட்டி வைத்தாள் ராகவி.

“அந்த கடை தான். லிஃப்ட்க்கு தாங்க்ஸ். வாங்க ஏகாம்பரம் போகலாம்” என்று அவனையும் அழைக்க, ஏகாம்பரம் அனுசயாவை பார்த்து வைத்தான்.

அவனுக்கு உள்ளே அனுசயாவை பார்த்து சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்க முடியாதே. அவளோ மிகப்பெரிய பதவியில் பெரிய தலைகளோடு சமமாக பழகுபவள். ஏகாம்பரம் வெறும் சமையல்காரன் அல்லவா?

கதவை திறந்து இறங்கியவன், கையை பிடித்துக் கொண்டு தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்ட ராகவி, “நாங்க வர்ரோம் மேடம்” என்றாள் அனுசயாவை பார்த்து.

அனுசயா அவளை இமைக்காமல் பார்க்க, ஏகாம்பரத்தை இழுத்துக் கொண்டு நடந்தாள் ராகவி.

“நிஜம்மாவே இதான் கடையா?” என்று ஏகாம்பரம் பொறுக்காமல் கேட்டு விட, “ஆமா.. இதான் இங்க முட்டு சந்து கடை. நாலு நிமிஷத்துல நடந்து வர்ர தூரம் தான். ஆனா கேட்காம கார்ல ஏத்தி இறக்கி விட்டுட்டு போறாங்க. கொடுமையா இல்ல?” என்று கேட்டு வைத்தாள்.

“அதுக்காக நீ பண்ணுறது ரொம்ப ஓவர். இங்க தான் இருக்குனு சொல்ல வேண்டியது தான?”

“எங்க சொல்ல விட்டாங்க உங்க மேடம்?” என்று கடுப்பாக சொல்லி விட்டு, “அண்ணா ரெண்டு டீ” என்று ஆர்டர் கொடுத்தாள்.

“உனக்கு அவங்க கிட்ட என்ன பிரச்சனை?”

“இவளால தான உங்க பாஸ் கல்யாணம் அது இதுனு பேசி என்னை பயமுறுத்தினாரு?” என்று ராகவி கடுப்பாய் கேட்டதும் தான் ஏகாம்பரத்திற்கு நினைவு வந்தது.

“அடப்பாவி.. அது சும்மா சொன்னதுனு சொன்னேனே”

“அது சும்மாவா இருந்தாலும் இவ ஆரம்பிச்சது தான?” என்று கேட்டபடி பார்க்க, அனுசயா அருகே வந்து விட்டாள்.

“இங்க தான் வர்ரா பாருங்க” என்றதும், ஏகாம்பரம் திரும்பிப் பார்த்தான்.

“எனக்கும் ஒரு டீ சொல்லுங்க” என்ற அனுசயா, அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்து விட்டாள்.

அவளை மேலும் கீழும் பார்த்த ராகவி, ஏகாம்பரத்தை பார்த்து, ‘நல்லா பாரு’ என்பது போல் சைகை செய்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

தேநீர் வரும் வரை ராகவி செய்தித்தாளை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள்.

“என்ன படிச்சுருக்க ராகவி?” என்று அனுசயா கேட்க, நிமிர்ந்து பார்த்தவள், “இந்த பேப்பர தான் படிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.

“கிண்டலா? என்ன படிச்சுருக்கனு கேட்டேன். காலேஜ் போனியா?”

“இல்ல”

“ஸ்கூல்?”

“போனேன்”

“பாஸ் பண்ணியா?”

“பண்ணேன்”

ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு அவள் செய்திதாளில் கண்ணை வைத்திருக்க, “நீ எதுக்கு அவர் வீட்டுல இருக்க?” என்று நேரடியாக கேள்விக்கு வந்தாள்.

“ஏகாம்பரம் பதில் சொல்லுவாரு” என்று அவன் பக்கம் கையை காட்டி விட்டு, தேநீரை வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டாள்.

இப்போது ஏகாம்பரம் விழித்துக் கொண்டு நின்றிருந்தான். சொல்ல நினைத்திருந்தால் சாராவே சொல்லி இருப்பானே? சொல்ல பிடிக்காமல் தானே எதெதோ பேசி அனுசயாவை துரத்தி விட்டான். இப்போது ஏகாம்பரம் மட்டும் எப்படி சொல்ல முடியும்?

சொல்ல அனுமதி இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமல் அவள் திகைத்துக் கொண்டிருக்க, அனுசயா அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

விட்டால் பார்வையால் கூறு போட்டு விடும் வேகம் அவள் பார்வையில்.

“என்ன ஏகாம்பரம்? பர்மிஷன் கேட்கனுமா?” என்று அவன் மனதை சரியாக படித்து அவள் கேட்க, “அப்படி இல்ல மேடம்” என்று இழுத்தான்.

“அப்ப சொல்லலாமே?”

“ஹேய்.. நம்ம பாஸ்!” என்று கூச்சலிட்டாள் ராகவி.

“பாஸா?” என்று ஏகாம்பரமும் அதிர்ந்து பார்க்க, ,சாணக்கியன் தான் வந்து கொண்டிருந்தான்.

‘இவரு எங்க இங்க?’ என்று ஏகாம்பரம் அதிர, அனுசயாவும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றாள். அங்கு சந்தோசமாய் நின்றிருந்தது ராகவி மட்டும் தான்.

“இங்க என்ன பண்ணுறீங்க?” என்ற கேள்வியோடு சாணக்கியன் ராகவியின் கையிலிருந்த தேநீரை பார்த்தான்.

“டீ குடிக்க வந்தோம்.” என்று ராகவி பதில் சொல்ல, ஏகாம்பரம் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். அனுசயா பக்கம் சாரா திரும்பவில்லை.

“குடிச்சாச்சுனா கிளம்புங்க”

“இன்னும் இல்ல. இப்ப தான் வாங்குனேன். பாதி மிச்சமிருக்கு” என்ற ராகவி அவசரமாக குடிக்க ஆரம்பித்தாள்.

கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு, ராகவி கையிலிருந்த தேநீர் டம்ளரை வாங்கி கீழே வைத்த சாணக்கியன், அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்.

“அய்யோ என் பேக்” என்று ராகவி பதற, “ஏகாம்பரம் கொண்டு வருவான். வா” என்றபடி இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

சில நொடிகளில் தன் முன்னால் நடந்ததை, அனுசயா புரிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்க, ஏகாம்பரம் குழப்பத்துடன் பையை தூக்கிக் கொண்டு பின்னால் சென்றான்.

கார் கதவை திறந்து சாரா அமர, அவனோடு ராகவியும் ஏறிக் கொண்டாள். முன்னால் ஏகாம்பரம் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.

“உன்னை டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு தான போகச்சொன்னேன்?” என்று சாரா ஏகாம்பரத்திடம் கடுமையாக கேட்க, அந்த குரலுக்கே அவன் பதறிப்போனான்.

“ராகவி தான் பாஸ் எதோ வாங்கனும்னு சொன்னா.. அதான் வாங்க போனோம்” என்று ஏகாம்பரம் சமாளிக்க, “நான்..” என்று ஆரம்பித்து விட்டு ராகவி வாயை மூடிக் கொண்டாள்.

‘இல்லை என்று சொன்னால் ஏகாம்பரத்தை சாரா திட்டுவானோ?’ என்று யோசித்தவள், “நான் தான் சொன்னேன்” என்று மாற்றி கூறினாள்.

முதலில் ஆரம்பித்ததற்கும் கடைசியாக பேசியதற்கும் இருந்த வித்தியாசம் புரிந்தாலும், சாணக்கியன் புரியாதது போல், “என்ன வாங்க போனீங்க?” என்று கேட்டான்.

‘ஏன் கேட்டோம்?’ என்று வருத்தப்படும் அளவு பதிலை சொல்லி வைத்தாள் ராகவி.

“இன்னர்ஸ். நீங்க வாங்குன சைஸ் பத்தவே இல்ல. ஆனா வேற வழியில்லாம போட்டுக்கிட்டேன். இப்ப கடைக்கு போய் வேற புதுசா சரியான சைஸ்ல வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் பேட்ஸ் அப்புறம்…”

“போதும்” என்று ஏகாம்பரம் பாய்ந்து தடுத்தான்.

இன்னும் எதையெல்லாம் சொல்லி வைப்பாளோ? என்று பயந்து விட்டான்.

காசியும் காதில் விழுந்ததை மூளைக்குள் செல்ல விடாமல் அழிக்கும் வேலையில் இறங்கினான்.

“இவரு தான கேட்டாரு?” என்று ராகவி சொல்ல, “அம்மா தாயே.. அப்புறமா பில்லயே எடுத்து பாஸ் கிட்ட கொடுத்துடுவோம். அவரே பார்த்துப்பாரு. கொஞ்சம் அமைதியா வாமா” என்று ஏகாம்பரம் கையெடுத்து கும்பிடு போட்டு விட்டான்.

அவன் பதட்டம் சாராவிற்கு தான் சாதகமாக இருந்தது. அவள் ஆரம்பித்ததும், தடுக்க கூட மறந்து திகைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதுவரை பெண்களோடு பழகியதும் இல்லை. அவர்களை பற்றிய அக்கறையும் இல்லை. திடீரென ஒரு பெண் அருகே அமர்ந்து கொண்டு, அவளுடைய விசயங்களை பேசவும் திணறித்தான் போனான். கெத்தை விட முடியாமல் அமைதிகாத்தவன் காது மடல்கள் சிவந்து போனது.

ஏகாம்பரம் சொன்னதும் ராகவி வாயை மூடிக் கொள்ள, சாணக்கியன் வெளியே திரும்பிக் கொண்டான். ஆனால் இதழ்கள் மெல்ல விரிந்து புன்னகை செய்தது.

‘இவள வச்சுட்டு.. ஆண்டவா’ என்று ஏகாம்பரம் தனக்குள் புலம்பிக் கொண்டே பயணித்தான்.

தொடரும்.

Leave a Reply