சாரா 13

Loading

ராகவியின் பேச்சில் வைரவர் முகத்தில் கூட மெல்ல புன்னகை எட்டிப் பார்க்க, ஏகாம்பரம் ‘எப்போது ஓடலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“கல்ல தூக்குற அளவுக்கு தெம்பு இருந்தா தான தூக்கிப்போடுவா?” என்று சாணக்கியன் நக்கலடிக்க, “ஏன் பாஸ் நீங்களே ஏத்தி விட்டு என்னை கொல்ல சொல்லுறீங்க? விட்டுருங்க பாஸ்” என்று கெஞ்சினான் ஏகாம்பரம்.

காலில் மட்டும் தான் விழவில்லை.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பூபதியோடு காசியும் உள்ளே வந்தனர். பூபதி சாணக்கியனை பார்த்து சைகை காட்ட, “நீங்க மூணு பேரும் போய் சாப்பிடுங்க.” என்று ராகவி, ஏகாம்பரம், காசி மூவரிடமும் சொல்லி விட்டு, பூபதி, வைரவர் மற்றும் சாணக்கியன் அங்கிருந்து சென்று விட்டனர்.

அந்த வீட்டின் சமையல் காரன், அவர்களை சமையலறைக்குள் இருந்த மேசையில் அமர வைத்து, உணவை வைத்தான்.

“ஹை..! சிக்கன் கிரேவி” என்று குதூகலித்தவளை, காசியும் ஏகாம்பரமும் விசித்திரமாக பார்த்தனர்.

“எந்த அனிமல பார்த்தாலும் பயம்னு சொன்ன?”

“பயம்னு தான சொன்னேன்? சாப்பிட மாட்டேன்னா சொன்னேன்?”

“உசுரோட இருந்தா தான் பயமா?”

“ஆமா”

“அப்ப வெளிய நிக்கிற நாய்ல சூப்பு வச்சு தரச்சொல்லவா?’

“உவாக்.. யோவ் ஏகாம்பரம்.. அம்புட்டு தான் மரியாதை சொல்லிட்டேன்”

அவளது கோபத்தை கண்டு இருவரும் சிரிக்க, ஏகாம்பரத்தை முறைத்து விட்டு ரசித்து ருசித்து உண்டாள் ராகவி.

இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அறையில் அமர்ந்து சிவா சென்ற காரை பற்றிய விவரங்களை அறிய முயற்சித்துக் கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

விசயம் தெரிந்ததும், பூபதியை ஆதாரங்கள் தேடச்சொல்லி அனுப்பிய சாணக்கியன், வைரவர் வீட்டுக்கு வந்திருந்தான். அவரிடம் விவரங்களைக்கூறி முடித்து விட்டு, பூபதிக்காக காத்திருக்க அவனும் வந்து விட்டான்.

சிவா தொலைந்து போன அன்று, கடத்தப்பட்ட பாதையில் சென்ற அத்தனை கார்களின் விவரங்களும் காணொளியில் இருந்தது. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் அந்த வழியாக சென்ற கார்களை கணக்கெடுத்தனர்.

மொத்தம் எட்டு கார்கள் தான் அந்த இடத்தை கடந்திருந்தது. அதில் சிவா சென்ற காரை தவிர, வேறு எதுவுமே தாமதிக்கவில்லை. எல்லாம் சரியான நேரத்தில் கடந்து போயிருந்தது. கடத்தப்பட்ட இடத்தில் கேமரா எதுவும் இல்லாததால், அங்கு என்ன நடந்தது? என்று புரியவில்லை. சிவா சென்ற கார் அங்கிருந்து சென்றதற்கான அறிகுறியும் இல்லை.

இதற்கு முன்பு சிவாவை தேடும் போது, இதே காணொளி மட்டும் தான் கிடைத்தது. அந்த பாதையில் இருந்து எப்படி மறைந்தான்? என்று புரியாமல் குழப்பமடைந்தனர்.

இப்போது கடத்தப்பட்டிருக்கிறான் என்று தெரிய வந்த பிறகு, மேலும் மும்முரமாக வேலையில் இறங்கினர். சிவா காரைத்தவிர மற்ற அனைத்து கார்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

“இந்த கார் டீடைல்ஸ் நாளைக்குள்ள வரனும். நாளைக்கு காலையில அந்த இடத்துக்குப் போவோம். என்னமோ நடந்துருக்கு. சும்மா கடத்தியிருந்தா, கார் க்ராஸ் ஆகி போயிருக்கனும். அப்படி எதுவுமே இல்லாம எப்படித்தொலைய முடியும்?”

“நாளைக்கு போய் பார்த்துடலாம்” என்று பூபதி சொல்ல, வைரவரும் அதையே ஆமோதித்தார்.

........

அனுசயா சில நொடிகள் உறைந்து போய் நின்று விட்டாள். திடீரென சாரா வந்து நின்றதும், தன்னை திரும்பியும் பார்க்காமல் ராகவியின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றதும், அவளை உறைய வைத்திருந்தது.

அப்படியே நின்றிருந்தவளை அவளது கைபேசி அழைப்பு நடப்புக்கு கொண்டு வர, அதை எடுத்துக் காதில் வைத்தாள்.

“வாட்?” என்று அதிர்ந்தவள், உடனே அங்கிருந்து கிளம்பினாள்.

புயல் வேகத்தில் காரை செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை அடைந்தவள், காரை விட்டு இறங்கி உள்ளே நுழைந்தாள்.

அவளை பார்த்ததும் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவனை ஓங்கி அறைந்து விட்டாள். அடியை வாங்கிக் கொண்டு தலையை தொங்கப்போட்டுக் கொண்டான் அவன்.

“அறிவில்ல? இப்படி பண்ணி வச்சுருக்க? அந்த சாரா கிட்ட அவன் எப்படி மாட்டுனான்?” என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.

அடி வாங்கியவன் வாயைத்திறக்காமல் இருக்க, “ஒரு வேலை தான கொடுத்தேன்? அவன போய் அதுவும் சாரா கையில கொடுத்துட்டு வந்து நிக்கிற? உன்னை கொன்னுடவா?” என்றவள் அவனை நெருங்க, அவள் கையைப்பிடித்து நிறுத்தினான் நிரூபன்.

“அனு அமைதியா இரு” என்ற நிரூபன் கையை உதறினாள்.

“என்ன அமைதியா இருக்கது? இத்தனை மாசமா நான் போராடிட்டு இருக்கேன். இங்க இப்படி சொதப்பி வைக்கிறீங்க” என்று அவள் கத்த, “இப்ப ஏன் கத்திட்டு இருக்க? அடுத்தது என்னனு பாரு” என்று கூலாக பதில் சொன்னான் குரு.

“அடுத்து என்ன? இன்னேரம் சாரா எல்லாத்தையும் நோண்ட ஆரம்பிச்சுருப்பான். சீக்கிரம் வந்து நிப்பான். எல்லாருமா சேர்ந்து மேல போவோம்”

“அப்படி எல்லாம் நடக்காது. அவன் வர்ரதுக்குள்ள நாம வேலைய முடிச்சுடலாம்”

“பைத்தியம் மாதிரி பேசாத. வேலை முடிய இன்னும் ஒரு மாசம் டைம் கேட்டேன். அதுக்குள்ள திவாகர கோட்டை விட்டீங்க. இப்ப அந்த டிரைவர. உங்கள எல்லாம் வச்சுட்டு..”

“நாம ஏன் ஒரு மாசம் வெயிட் பண்ணாம சீக்கிரம் வேலைய முடிக்க கூடாது?” என்று குரு கேட்க, “சீக்கிரம் முடிக்க ட்ரை பண்ணா வசமா மாட்ட தான் செய்யனும். உங்க கிட்ட என்னடா கேட்டேன்? இன்னும் ஒரு மாசம் தான கேட்டேன். இப்படியா பண்ணுவீங்க?” என்று அனுசயா குதித்தாள்.

“இதையே பேசி எதுவும் ஆகப்போறது இல்ல. அவன் கடத்துன இடத்துக்கு போனாலும், எதுவும் கிடைக்கப்போறது இல்ல. இன்னும் கொஞ்ச நாள் அவன் தேடிட்டு ஓயட்டும். வெயிட் பண்ணலாம்”

“முட்டாள். இது நாள் வரை சிவாவுக்கு என்ன ஆச்சு? கடத்துனாங்களா? காணாம போனானா? அவனா ஓடிட்டானா? இல்ல செத்தே போயிட்டானானு எதுவுமே தெரியாம இருந்ததால தான், சாரா சும்மா வேடிக்கை பார்த்தான். இப்ப கடத்தியிருக்காங்கனு அந்த டிரைவர் சொல்லிருப்பான். இதுக்கு மேல அவன் சும்மா இருக்க மாட்டான்”

“சரி நான் முட்டாள். நீ சொல்லு.. இப்ப என்ன பண்ணனும்?”

“எங்கயாவது போய் முட்டிக்க வேண்டியது தான்” என்றவள், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

நிரூபன் அவளது தோளில் தட்டி விட்டு, “ரொம்ப டென்சன் ஆகாத. அமைதியா இரு. யோசிக்கலாம்” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

சில நிமிடங்களில் அப்படியே அமர்ந்திருந்தவள், குருவை பார்த்தாள்.

“அந்த ராகவி பத்தி விசாரிச்சியா?”

“ம்ம். நீ சொன்னது தான் இருந்துச்சு.”

“அவ ஏன் சாரா வீட்டுல இருக்கா?”

“அது மட்டும் தான் மர்மமா இருக்கு. அந்த வீட்டுல இருந்து விசயத்த கறக்குறது அவ்வளவு ஈசி இல்லையே”

“அவள பார்த்தாலே எரிச்சலா வருது. ஓவரா திமிரு பிடிச்சு திரியுறா”

“அவ கிட்ட பேசத்தான போன? என்ன ஆச்சு?”

“திடீர்னு சாரா வந்து அவள இழுத்துட்டுப் போயிட்டான்”

“இந்த சாராவுக்கு எப்படி திடீர்னு பொண்ணுங்க மேல இவ்வளவு பாசம் வந்துச்சு?”

“அது தான் எனக்கும் புரியல”

இன்று ஏகாம்பரத்தோடு ராகவி வெளியே கிளம்பிய சில நிமிடங்களிலேயே, அவர்களை பின் தொடர்ந்து அவளது விவரங்களை முழுவதுமாக அறிய பார்த்தனர்.

ஏகாம்பரமும் ராகவியும் தனியாக செல்வதை கேள்விப்பட்டுத்தான், அனுசயா அவர்களிடம் பேச நினைத்து அங்கு வந்ததே. ஆனால் சாரா நடுவில் வந்து சொதப்பி விட்டு சென்று விட்டான்.

“அவளுக்கு எதாவது வியாதி இருக்குமோ? அதுனால பாவம் பார்த்து வச்சுருக்கானா?”

“அப்படி எல்லாம் அவன் பாவம் பார்க்குறவன் இல்ல. ஆனா இவ இருக்கது எனக்கென்னமோ சரியா படல. கண்டிப்பா நம்ம ப்ளான்ல இவ குறுக்க வருவா.”

“அப்படி வந்தா அவ கதைய முடிச்சுட வேண்டியது தான்.” என்று சாதாரணமாக சொல்லி கையை விரித்தான் குரு. அனுசயா அதற்கு எதுவும் சொல்லவில்லை.

அங்கிருந்து எழுந்து சென்றவள், சற்று உள்ளே சென்றாள். கதவுக்கு வெளியே தொங்கிய பூட்டை திறந்து உள்ளே பார்த்தாள்.

சிவராஜ் தரையில் அமர்ந்திருந்தான். சாதாரண அறை தான் அது. கட்டில் மெத்தை இருந்தது. அவனுக்கு தேவையான உடைகள் இருந்தது. தண்ணீர் இருந்தது. கட்டிலுக்கு கீழ் பத்திற்கும் மேற்பட்ட நோட்டுகள் அடுக்கப்பட்டிருந்தது. அறையும் சுத்தமாக இருந்தது.

அனுசயா உள்ளே வர, நோட்டில் எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் எப்போதும் தோன்றும் நக்கல் சிரிப்பு இப்போதும் தோன்றியது.

இந்த நான்கு மாதங்களும் இப்படித்தான் வருவாள். வந்து அவனை பார்த்து நக்கலாக சிரிப்பாள். ஆனால் சிவா அவளை மதிக்காமல் திரும்பி விடுவான். இன்று அவளை கூர்ந்து பார்த்தவன் முகத்தில் புன்னகை வந்தது.

அவனது புன்னகை அனுசயாவின் முகத்தில் இருந்த சிரிப்பை குறைக்க, சிவாவை முறைத்தாள்.

“என்ன சிரிப்பு?” என்று கேட்க, இப்போது சிவா நக்கலாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, குனிந்து கொண்டான்.

“உன் கிட்ட தான கேட்குறேன்?”

அவன் பதில் சொல்லாமல் இருக்க, எழுதிக் கொண்டிருந்த நோட்டை பிடுங்க வந்தாள். பட்டென கையை தட்டி விட்டவன், நிமிர்ந்து முறைத்தான்.

அவளும் பதிலுக்கு முறைக்க, எழுந்து நின்றான். கிட்டத்தட்ட சாணக்கியனின் உயரம் தான் சிவாவும். அனுசயா நிமிர்ந்து தான் பார்க்க வேண்டியிருந்தது.

அவனை முறைத்து வைத்தவள், “எதுக்கு சிரிச்ச?” என்று மீண்டும் கேட்டாள்.

அவளை தாண்டிச் சென்று மெத்தையில் அமர்ந்தவன், “திடீர்னு உன் கண்ணுல பயம் தெரியுதே. அதான் சிரிச்சேன். ஏன் சாராவுக்கு விசயம் தெரிஞ்சு போச்சா?” என்று கேட்டான்.

இது தான் இந்த நான்கு மாதங்களில் இருவரும் பேசிக் கொள்ளும் முதல் வார்த்தை. இதுவரை சிவா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

“அவன் எவ்வளவு போராடுனாலும் எதையும் கண்டு பிடிக்க முடியாது”

“சாரா பத்தி உனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்” என்று நக்கலாக சொன்னவன், உடனே பெருமூச்சு விட்டு விட்டு எழுதும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அனுசயா எட்டிப் பார்த்தாள். எல்லாம் இசையின் எழுத்து வடிவம். தலைகீழாய் நின்றால் கூட அவளுக்கு அதில் எதுவுமே புரியாது. அங்கிருந்த அத்தனை நோட்டுக்களிலும் இசை தான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

விறுவிறுவென வெளியே வந்து மீண்டும் அறையை பூட்டியவள், குருவிடம் வந்தாள்.

“எந்த அளவுக்கு போயிருக்கு வேலை?”

“இதென்ன கேள்வி? நீயே எல்லாத்தையும் பார்த்துட்டு தான இருக்க? சீக்கிரம் முடிஞ்சுடும்.”

“இல்ல. சீக்கிரமா முடிக்க ட்ரை பண்ணா சாரா கிட்ட மாட்டனும். அவன் என்ன செய்வான்னே தெரியாது. அவன தான் அடுத்து தூக்கனும்னு இருந்தேன். எல்லாம் நல்லா போயிட்டு இருக்கப்போ ராகவினு ஒருத்தி வந்து நிக்கிறா. அவளால உண்மையிலயே எதாச்சும் பிரச்சனை வந்துட்டா கொன்னுடுவேன்”

“இதான் பொண்ணுங்கனு சொல்லுறது. போன வேலைய விட்டுட்டு இன்னொருத்தி மேல பொறாமை புடிச்சுட்டு சுத்துற?”

“நான் பொறாமை பட்டேன்னு நீ பார்த்தியா?”

“உனக்கு சாரா மேல இருக்க இன்ட்ரஸ்ட் எனக்கு தெரியாதுனு நினைச்சியா? சும்மா கத்திட்டு இருக்காத. போய் வேலைய முடிக்கிற வழிய பாரு. சாரா மேல ஆசைப்பட்டு வேலையில கோட்ட விட்டனா, முதல்ல உன்னை தான் கொல்லுவேன்” என்று மிரட்டி விட்டுச் சென்று விட்டான் குரு.

அனுசயாவிற்கு எரிச்சலாக வந்தது. அவளுக்கு சாராவின் மீது கொள்ளை ஆசை தான். ஆனால் அவன் பெண்கள் என்றாலே பத்தடி தள்ளி நிறுத்துவான். அவன் வீட்டுக்கு சுலபமாய் போய் வரவே அவளுக்கு பல மாதங்கள் பிடித்தது.

ஆனால், ஒருத்தி சட்டமாய் நடு வீட்டில் இருக்கிறாள். அவள் கையைப்பிடித்து அழைத்துச் செல்கிறான் சாணக்கியன். நினைக்க நினைக்க வெறியே வந்தது.

வேலை மட்டும் சரியாக முடிந்து விட்டால், சாராவை அவள் தன்‌ கைக்குள் கொண்டு வந்து விடுவாள். அதற்கிடையில் இந்த ராகவி எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

..........

நன்றாய் சாப்பிட்டு விட்டு, ஏகாம்பரத்திடம் வாய் பேசிக் கொண்டிருந்தாள் ராகவி.

“ஏன் ஏகாம்பரம்.. இந்த வீடு எவ்வளவு நிலம் இருக்கும்?”

“ஏன் வாங்க போறியா?”

“லொல்லா?”

“பின்ன எதுக்கு கேட்குற?”

“தெரிஞ்சுக்க தான். ஒரு நூறு வீடு இங்க கட்டலாம்ல?”

“நூறு?”

“ஆமா.. இவ்வளவு பெரிய இடம் இருக்கே. நூறு கட்ட முடியாதோ?”

“இப்ப நீ கட்டப்போறியா?”

“என்ன எல்லாத்துக்கும் எடக்கு மடக்கா பேசிட்டு இருக்கீங்க?”

“அய்யா முன்னாடி என்னை மாட்டி விட்டுட்டு, இப்ப நல்லவ மாதிரி பேசுனா? நானும் பேசுவனா?”

“நீங்க தான ஏகாம்பரம் சார் பேசாதனு சொன்னீங்க? நான் பொய் சொல்லி மாட்டி விடலயே”

“அப்ப நீ சொன்ன ரௌடி மேட்டர், கொலை பண்ணுற விசயம் எல்லாத்தையும் நானும் சொல்லட்டுமா? ஏன்னா அதுவும் உண்மை தான?”

“மிஸ்டர் ஏகாம்பரம்…”

“ன்னா?”

“இந்த பேச்ச இதோட விட்டுட்டு நாம சிக்கன் குருமா பக்கம் போவோம். உங்களுக்கு சிக்கன்ல என்னலாம் சமைக்க தெரியும்?” என்று கேட்டவளை, ‘கல்லை எடுத்து அடித்தால் என்ன?’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

“பிரியாணி செய்வீங்களா?”

“சிக்கன் பிரியாணி விட மனுச பிரியாணி நல்லா செய்வேன். உன்னை ஒரு நாள் கொன்னு பண்ணுறனா இல்லையானு பாரு”

“என்னலாம் வச்சு பண்ணா கறியே கிடைக்காது. எலும்பு தான் இருக்கும்” என்று கையை விரித்தவளை பார்த்து, அவனுக்கு கோபம் போய் சிரிப்பு வந்து விட்டது.

“நாய்க்கு எலும்பு தான் பிடிக்குமாம்.”

“ஹான்!” என்று புரியாமல் பார்த்தவள், புரிந்து விடவும் படக்கென எழுந்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“என்னை பிரியாணி பண்ணி இந்த நாய்க்கு போடுவீங்களா? எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி சொல்லுவீங்க?”

“பின்ன நானா சாப்பிட முடியும்? உவாக்”

“யோவ்” என்றவள், குனிந்து குட்டியாய் இருந்த கல்லை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

“இப்பவே கல்ல போட்டு கொல்லுறா. பாஸ் காப்பாத்துங்க” என்று ஏகாம்பரம் வீம்புக்கு அலற, “உங்க பாஸ் வந்தாலும் உங்கள காப்பாத்த முடியாது” என்றவள் மேலும் கல்லை தூக்கி அவன் மீது போட்டாள்.

“இந்த கல்லு சைஸுக்கு அவன கொல்ல நாலு வருசம் ஆகிடும்” என்று சாணக்கியன் அருகே வந்து சொல்ல, அதிர்ந்து அப்படியே நின்றவள், ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்தாள்.

சாணக்கியன் புருவம் உயர்த்த, உடனே கையை தட்டி விட்டு நல்ல பிள்ளை போல் நின்று கொண்டாள்.

“போய் கார்ல ஏறு” என்று ஏகாம்பரத்திடம் சொல்லி விட்டு, ராகவியை பார்த்தான்.

“நானும் போகவா பாஸ்?” என்று கேட்டவள் ஓடப்பார்க்க, காலை அகட்டி வைத்து அவளது வழியை மறித்தான்.

‘அய்யோ.. இவர இவ்வளவு க்ளோஸப்ல பார்த்தா பயந்து வருதே’ என்று நினைத்தவள், தள்ளி நின்று கொண்டாள்.

“ஏகாம்பரம் என் கிட்ட என்ன சொன்னான்னு அவன் கூட சண்டை போடுற நீ?” என்று கேட்க, “அதான்..” என்று ஆரம்பித்தவள் உடனே நிறுத்தினாள்.

மீண்டும் தன் வாயால் சொல்லி மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைத்தவள், “மறந்து போச்சு பாஸ்” என்றாள்.

“பாஸ்?”

“ஏகாம்பரம் அப்படித்தான கூப்பிடுறாரு”

“அவன் என் கிட்ட வேலை செய்யுறவன்”

“நானு?”

“நீ என் கிட்ட கடன் வாங்குனவ”

“ரெண்டும் வேறயா?”

“இல்லையா?”

“நீங்க சொன்னா சரி தான் சார்”

“சார்?”

“சாரும் வேணாமா? முதலாளினு கூப்பிடவா?”

“முதலாளியா?”

“ம்ம்”

“ஓகே”

“இந்த பழைய பேரு உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டவள், தலையை சொறிந்தபடி பார்த்தாள்.

“இதெல்லாம் உனக்கு புரிஞ்சா நீ வளர்ந்துடுவ. போய் கார்ல உட்கார்” என்றான்.

“இப்பவே வளர்ந்து தான இருக்கேன்? இவரு அளவுக்கு வளரனுமோ?” என்று முணங்கிக் கொண்டே அவள் செல்வது அவன் காதில் விழ, புன்னகைத்துக் கொண்டான்.

தொடரும்.

Leave a Reply