சாரா 18

Loading

படகில் ஏறியதிலிருந்து ராகவி கடலை ரசிப்பதும், சாராவின் நெருக்கத்தில் திணறுவதுமாக இருக்க, சாராவிற்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

கடைசியாக, “பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டவளை என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

சிரிப்போடு கை காட்ட, உடனே ஓடி விட்டாள்.

சிரிப்போடு தலையாட்டியவன் கைபேசியை எடுத்து பார்க்க, ஏகாம்பரத்திடமிருந்து செய்தி வந்திருந்தது. ஒருவன் அவர்களை தொடர்ந்து வந்ததும், அவன் இப்போது இந்த படகை கண்காணிக்க தீர்மானித்திருப்பதும், செய்தியாய் வந்திருந்தது.

‘வரட்டும். இருக்க அத்தனை பேரையும் கூட்ட விட்டு வெளிய எடுக்குறேன்’ என்று நினைத்துக் கொண்டவன், கைபபேசியை தூக்கி போட்டு விட்டு வெளியே சென்றான்.

முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய ராகவிக்கு, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு சில நிமிடங்கள் குழம்பமாக இருந்தது.

திடீரென முகம் மிகவும் அழகாக தெரிந்தது அவள் கண்களுக்கு.

“இந்த கண்ணாடி நல்லா காட்டுதே.. எதுக்கும் இது எவ்வளவுனு கேட்டு வீட்டுல வாங்கி வைக்கனும்” என்று தானாய் பேசிக் கொண்டு வெளியே வந்தாள்.

பையை திறந்து டவலை எடுத்து முகத்தை துடைக்க, சாரா வந்து விட்டான்.

கையில் மாத்திரையோடு வந்தவன், “போட்டுக்க” என்று நீட்டினான்.

“இது என்ன மாத்திரை?”

“தூக்க மாத்திரை. உன்னை தூங்க வச்சா தான சுறாவுக்கு தூக்கி போட முடியும்?”

“நீங்க சுறா பேர சொல்லி என்னை பயமுறுத்திட்டே இருக்கது நியாயமே இல்ல பாஸ்”

பேசிக் கொண்டிருந்தவள் கன்னங்களை இருவிரல்களில் பிடித்து, மாத்திரையை திணித்து விட்டவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவள் வாயில் ஊற்றி விட்டான்.

மாத்திரையை விழுங்கியவள் உதட்டோரம் தண்ணீர் வடிய, அதையும் அவனே துடைத்து விட்டான்.

“நான் என்ன சின்ன பிள்ளையா? இப்படியா போட்டு விடுவீங்க?”

“சொன்னத செய்யாம கேள்வி கேட்டா அப்படித்தான்”

“இது என்னனு தெரிஞ்சுக்க தான கேட்டேன். நிஜம்மாவே தூக்க மாத்திரையா?” என்று கேட்டவள் கண்ணில் லேசாய் பயமும் எட்டிப் பார்த்தது.

அவன் மீது நம்பிக்கை இருந்தாலும், உள்ளே சிறு பயம் சுறாவை பற்றி இருக்கத்தான் செய்தது.

சாரா அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“இது தூக்க மாத்திரை இல்ல. போதை மாத்திரை. கொஞ்ச நேரத்துல போதை ஏறி.. என் மேல லவ் வந்து.. அப்புறம்…” என்று இழுத்து மெத்தையை பார்க்க, பயந்து போய் அவனை தள்ளி விட்டாள்.

உடனே வாய்க்குள் கைவிட்டு வாந்தி எடுக்கும் முயற்சியில் இறங்க, சாரா பாய்ந்து அவளது இரண்டு கையையும் பிடித்துக் கொண்டான்.

“விடுங்க.. விடுங்கனு சொல்லுறேன்ல..” என்று துள்ளியவளை, விடாமல் பிடித்துக் கொண்டவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஏய்.. லூசு.. நான் சும்மா சொன்னேன். எத சொன்னாலும் நம்பிடுவியா?” என்று கேட்டவன், அவளை அசையாமல் பிடித்துக் கொண்டான்.

திடீரென ராகவியின் கண்ணில் கண்ணீர் குளம் கட்டி விட, அவனது கையை வெடுக்கென உதறினாள்.

அவளது கண்ணீரை பார்த்ததும் சாராவுமே அதிர்ந்து விட்டான்.

“ஹர்ட் பண்ணிட்டனா?” என்று அவன் சற்று கவலையோட கேட்க, ராகவி வேறு பக்கம் திரும்பி கண்ணை துடைத்துக் கொண்டாள்.

அவளது தோளை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “சும்மா தான் சொன்னேன். அது சீ சிக் காக போடுற மாத்திரை. கடல்ல புதுசா வர்ரல.. வாந்தி மயக்கம் எதுவும் வராம இருக்க சாப்பிடுவாங்க. வேற எதுவும் இல்ல” என்று விளக்கம் கொடுத்தான்.

“அத அப்படியே சொல்லுறதுக்கு என்ன?” என்று கேட்டவள் குரலில், கோபமும் அழுகையும் சரிபாதியாக கலந்திருந்தது.

“விளையாட்டா தான் சொன்னேன். இவ்வளவு சீரியஸா எடுத்துப்பனு தெரியாது”

“இது விளையாட்டு இல்ல” என்றவள், மீண்டும் ஒரு முறை கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவளது நடவடிக்கை வித்தியாசமாக இருக்க, அவளை அமர வைத்து அருகே அமர்ந்து கொண்டான்.

“இத ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குற? என்ன விசயம்?”

அவனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

“என்னனு சொல்லு”

“அத சொல்ல முடியாது”

“என் கிட்ட நம்பிக்கை இல்லையா?”

சில நொடி மௌனமாக இருந்தவள், “ஒன்னு கேட்டா நீங்க உண்மைய சொல்லுவீங்களா?” என்று விசாரித்தாள்.

“கேளு”

“நீங்க.. நீங்க…” என்று ஆரம்பித்தவள், கேட்க முடியாமல் திணறினாள்.

“பரவாயில்ல கேட்டுரு”

“நீங்க போதை மருந்து விற்பீங்களா?” என்று கண்ணை மூடிக் கொண்டு கேட்டு விட்டாள்.

இரண்டு நொடிகள் சத்தமில்லாமல் போக, கண்ணை திறந்து பார்த்தாள். சாரா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ராகவி பயத்துடன் கேள்வியுடன் பார்க்க, சாராவின் பார்வை அவளை விட்டு அகலவில்லை.

சில நொடிகள் பார்வை கலந்தது.

சாரா மெல்ல மறுப்பாக தலையசைத்தான்.

“நான் அது எல்லாம் பண்ணுறது இல்ல” என்று பார்வையை மாற்றாமல் அவன் கூற, ராகவியின் பதட்டம் தணிந்து நிம்மதி பெருமூச்சும் விட்டாள்.

அவளது நடவடிக்கையை பார்த்தவன், “ஏன்? எதாவது டிரக் இஸ்யூல மாட்டிக்கிட்டியா?” என்று கேட்டான்.

மறுப்பாக தலையசைத்து, “நான் இல்ல” என்றாள்.

“வேற யாரு?”

“நான் வேலை பார்த்தேனே ஒரு கடை..”

“அந்த கடை ஓனர் வித்தானா?”

“தெரியல. ஆனா அவனோட பொண்ணு…” என்றவள் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“பொண்ணு டிரக் அடிக்ட்டா?”

“ம்ம்..”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“அவளுக்கு அந்தாளே கொடுத்துருக்கான். என் கிட்ட சொன்னா”

“சோ ரௌடினு சொன்னதும் நானும் டிரக் டீலர் நினைச்சியா?”

“இல்ல இல்ல” என்று அவள் பதற, “நீ தான என்னை ரௌடினு சொன்ன?” என்று கேட்டு வைத்தான்.

“அது எல்லாரும் சொன்னதால அப்படியே…” என்று இழுத்தவள், அவனது பார்வையில் உதட்டை கடித்துக் கொண்டாள்.

“யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவியா?”

“இல்லையே”

“இப்ப நம்பி மாத்திரைய வெளிய எடுக்க போன?”

“அது.. பயத்துல..”

“இல்லனா மட்டும் நீ அறிவாளி தான்”

“என்ன இப்படி சொல்லுறீங்க? நானும் நல்லா படிப்பேன்”

“படிக்கிறவன் எல்லாம் அறிவாளி கிடையாது. காமன்சென்ஸ் இருக்கனும் அதுக்கு”

“அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்கு”

“பார்த்தாலே தெரியுது” என்று நக்கலாக சொல்லி விட்டு, “சரி இப்ப சொல்லு.. அந்தாளு ஏன் பெத்த பொண்ண அப்படி பண்ணான்?” என்று கேட்டான்.

“அவன் ஒரு பொம்பள பொறுக்கி.. பெத்த மகளுக்கு போதை மருந்து கொடுத்து பைத்தியமாக்கிட்டு இருந்தான்.”

“உனக்கு எப்படித் தெரிஞ்சது?”

தனக்கு எப்படித் தெரிந்தது என்று சொல்ல ஆரம்பித்தாள்.

சாணக்கியன் முதன் முதலாக ராகவியை பார்த்த அன்று, அவள் வேலை செய்த குமரன் கடையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த கடை திறந்து பத்து வருடங்கள் கடந்து விட்டதால், அதை சிறப்பாக கொண்டாட ஆண்டுவிழா ஏற்பாடு செய்தனர். அங்கு ராகவியோடு பத்துக்கும் மேற்பட்ட, பெண்கள் வேலை செய்கின்றனர்.

கிட்டத்தட்ட எல்லோருமே திருமணமானவர்கள். ராகவி மட்டுமே அங்கு திருமணமாகாத பெண். அதே கடையில், வேலை பார்த்து சூப்பிரவைசராக இருந்தவன் தான் லிங்கம்.

பார்க்க அழகாகவும் நல்ல உயரமாகவும் இருப்பதால், எல்லோருக்கும் அவன் ஹீரோ போல தான். எதுவென்றாலும் லிங்கம் பெயர் தான் எல்லோரின் வாயிலும் வரும்.

அவனிடம் ராகவிக்கும் ஒரு மயக்கம் உண்டு. திருமணமாகாத பெண் என்பதால், அவனையும் அவளையும் வைத்து சில பல கதைகள் கூட உலாவியது.

ஆனால் லிங்கத்திற்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்ததும், கட்டுக்கதைகள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. ராகவிக்கு வருத்தம் தான். ஆனால் அப்போது தான், அவள் தன்னுடைய பாட்டியையும் பறி கொடுத்திருந்தாள்.

அதனால் லிங்கத்தை பற்றி அவள் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் மனதில் ஓரம் சிறியதாய் வருத்தமிருந்தது உண்மை.

விழாவின் போது, லிங்கம் வீட்டில் அவனுக்கு நிச்சயம் செய்ய பேச வருவதாக பெண் வீட்டார் சொல்லி விட, விழாவை ஏற்பாடு செய்ததோடு அவன் கிளம்பி விட்டான்.

காலையில் விழாவுக்கு கிளம்பும் போதே, மழை வரும் என்ற நிலையில் வானம் காட்சி அளித்ததால், ரெயின் கோட் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றாள் ராகவி.

மரம் விழுந்து, போக்குவரத்து பாதித்து, பேருந்துக்காக காத்திருந்து, ஒரு வழியாக கடையை சென்று அடைந்தாள். விழாவும் சிறப்பாகவே சென்றது.

பத்தாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஏகப்பட்ட சலுகைகள் அறிவித்து இருக்க, கடையில் கூட்டமும் அதிகமாக இருந்தது. வேலை முடிந்து அன்று மாலை எல்லோரையும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்தான் குமரன்.

எல்லோரும் அங்கு செல்ல, அவனுடைய மனைவி நன்றாகவே வரவேற்றாள். பார்ப்பதற்கு இளமையாக இருந்தாள். இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பிறகு தான் தெரிந்தது.

ராகவி வீட்டிற்கு பின்பு எதேச்சையாக செல்ல, அங்கு சன்னல் வழியாக ஒரு பெண்ணில் உருவம் தெரிந்தது. முதலில் பயந்து போனவள், அந்த பெண் ராகவியை பார்த்து அருகே கூப்பிடவும் சற்று தெளிந்தாள்.

குமரனுக்கு ஒரு மகள் இருப்பதும், அவள் பைத்தியம் என்ற விவரம் ஆதாரமில்லாமலே எல்லோர் காதிலும் போடப்பட்ட விசயம் ஆகும். இப்போது அந்த பெண் தான் அங்கு இருக்கிறாள் என்று புரிய, ராகவிக்கு வருத்தமாக இருந்தது.

‘எதாவது மருத்துவமனையில் சேர்த்து இவளை சரிசெய்யலாமே?’ என்று தான் தோன்றியது.

“அக்கா.. அக்கா..” என்று அந்த பெண் அழைக்க, ராகவி அருகே செல்லவில்லை என்றாலும் ஓடவும் இல்லை.

“அக்கா என்னை காப்பாத்துங்கக்கா. நான் பைத்தியமில்ல. ப்ளீஸ்கா போலீஸ்க்கு போன் போட்டு சொல்லுங்க. என்னை ரொம்ப அடிக்கிறாங்கக்கா” என்று கெஞ்சினாள்.

முதலில் அதிர்ந்த ராகவி, பிறகு மெல்ல அருகே சென்று விசாரித்தாள். அந்த பெண்ணும் அழுது கொண்டே சிற்றன்னையும் தந்தையும் செய்யும் கொடுமை பற்றிக் கூறினாள்.

அப்போதே காவல் துறையை அழைக்க நினைக்க, யாரோ வருவது போல் சத்தம் கேட்டது. உடனே அந்த பெண் சன்னலை அடைத்துக் கொண்டாள்.

ராகவிக்கு அப்படியே விட்டுப்போக மனமில்லாமல், தன் கைபேசி எண்ணை எழுதி சன்னல் வழியாக உள்ளே போட்டு விட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததிலிருந்த அந்த பெண்ணின் நினைவாகவே இருந்தது. எதாவது செய்து அந்த பெண்ணை காப்பாற்ற முடியுமா? என்று யோசித்துக் கொண்டிருக்க, கடைக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது.

குமரன் குடும்பத்தோடு எதோ ஒரு ஊருக்கு செல்வதாக விவரம் வந்தது. ஒரு வாரம் கழிந்த நிலையில், ராகவியின் மாமா திரும்பி வந்து, அவளிடம் நல்லவன் போல் பேசி பணம் கேட்டான். இல்லை என்று சொல்லி துரத்தி விட்டாள்.

அன்று இரவு ராகவிக்கு அழைப்பு வந்தது. அந்த பெண் தான் பேசினாளா? இல்லை அவளைப்போன்று வேறு யாரும் பேசினார்களா? என்று தெரியவில்லை.

ஆனால் தன்னை காப்பாற்றும் படி அவள் அழுது வைக்கவும், உடனே கிளம்பி விட்டாள். அங்கு சென்று பார்த்தால், அந்த பெண் இல்லை. குமரன் மட்டும் முழு போதையில் அவளை நோக்கி பல்லை காட்டினான்.

அவனிடம் அகப்பட்டு தப்பி ஓடி வந்தவள் தான், பூபதியை சந்தித்து சாராவையும் சந்தித்திருந்தாள்.

இதற்கிடையில் அவளுடைய மாமன் அவள் பணத்தோடு வருவாள் என்று வீட்டு வாசலில் காத்திருந்தான். ராகவி வந்ததும் அவளிடம் பணமில்லை என்று தெரிந்ததும், அவளை அடிக்க ஆரம்பித்து விட்டான்.

அவள் மயக்க நிலைக்கு செல்லவும், சாரா கதவை தட்டவும் சரியாக இருந்தது. சாரா அன்று வராமல் போயிருந்தால், ராகவியின் உயிர் போகவும் வாய்ப்பிருந்தது.

“இதுக்கு தான் அன்னைக்கு அடுத்தவங்க பர்ஸ்னல்னு சொன்னியா?”

“ம்ம். அந்த பொண்ணு இப்ப என்ன ஆனானு கூட தெரியல”

“அந்த குமரன் கரெண்ட் அடிச்சு செத்து போயிட்டான். உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ நைட் மழை வந்தது. அதுல எங்கயோ போய் கரெண்ட்ல சாக் அடிச்சுருச்சு”

“போகட்டும் நாசமா போறவன். அவன் எல்லாம் கருகி தான் சாகனும். அதான் நல்ல தண்டனை”

“ஆனா என்னையும் டிரக் டீலர்னு நினைச்சுட்டல?”

“இல்ல மாஃபியானு சொன்னா டிரக் தான விற்பாங்க?”

“நிறைய படம் பார்ப்பியோ?”

“ஹி ஹி”

“நான் அதெல்லாம் டீல் பண்ணல. போதுமா?”

ராகவி தலையை ஆட்டி விட்டு, “சாரி” என்று மன்னிப்பும் கேட்டாள்.

“உன்னை எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க?” என்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு வைத்தான்.

“ராகினு கூப்பிடுவாங்க. ராகி மாவுனு கூட கூப்பிடுவாங்க. பாட்டி பாப்பானு கூப்பிடுவாங்க”

“அதான் நீ பாப்பாவாவே இருக்க போல. யாரும் கவினு கூப்பிட்டது இல்லையா?”

“கவியா!”

“இனி நான் கவினு கூப்பிடுறேன்.” என்றவன் கண் சிமிட்ட, “ஓகே” என்றாள்.

“நீ என்ன எப்படிக் கூப்பிடுவ?”

“எப்படி கூப்பிடுறது? முதலாளினா? வேணாம். ரொம்ப வயசானவர் மாதிரி இருக்கு”

அவள் முகத்தை சுளிக்க, சிரித்து விட்டு, “என்னங்கனு கூப்பிடேன்” என்று வம்பிழுத்தான்.

“நீங்க என்ன என் புருஷனா?” என்று அவள் மறுப்போடு கேட்டு வைக்க, “ஆக கூடாதா? பழங்காலத்துல கந்தர்வ மணம்னு ஒன்னு இருக்கு தெரியுமா? அத இங்கயே நடத்திடலாம்” என்று கூறி கண்ணடித்தான்.

அவளுக்கு அது உடனே புரிந்து விட்டால், அவள் எப்படி ராகவியாக இருக்க முடியும்? புரியாமல் தான் பார்த்து வைத்தாள்.

“அப்படினா?”

“அப்படினா தாலி கட்டாம…”

“கட்டாம?”

“லிவ் இன்ல இருக்கது. அதுவும் கல்யாணம் ஆனதுக்கு சமமாம்”

“அய்யே” என்றவளின் முகம் போன போக்கில், வாய் விட்டு சிரித்தவன் அவள் நெற்றியில் முட்டினான்.

தொடரும்.

Leave a Reply