சாரா 21
![]()
கந்தன் கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை இழந்து கொண்டிருந்தான். சாராவும் அவனிடம் பேசி விளையாடிக் கொண்டிருக்க, படகும் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது.
“யூ ஆர் டிராப்ட்” என்று சாரா சொல்லவும், கந்தன் ஒரு நொடி தான் யோசித்தான். அடுத்த நொடி விசயம் விளங்கி விட, படகு போகும் திசையை பார்த்தான்.
எந்த பாதை என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்க, வெளியே மழையும் வர ஆரம்பித்திருந்தது.
“டேக் ரெஸ்ட் எஸ்பி. எனக்கும் டயர்டா இருக்கு. தூங்கி எழுந்து வந்து பேசலாம்.” என்று கூறி சாரா எழுந்து அறைக்குள் சென்று விட, கந்தன் மழையை பொருட்படுத்தாமல் வெளியே சென்று பார்த்தான்.
அவன் வந்த படகு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.
“ச்சே” என்று தலையில் அடித்துக் கொண்டவனுக்கு, எல்லாம் சாராவின் திட்டம் என்று புரிந்தது.
சாராவோ ராகவியின் அருகே வந்து படுத்து விட்டான். தூக்கம் கண்ணை இழுத்துக் கொண்டு வந்தது. பிரமோத்திடம் பொறுப்பை கொடுத்து விட்டதால், எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக தூங்கி விட்டான்.
வெளியே மழையில் நின்றிருந்த கந்தனுக்கு, ஒரு குடையை கொடையாக வழங்கிச் சென்றான் பிரமோத். அவனை உள்ளே அழைக்கவில்லை. கண்ணை மட்டுமே அவனிடம் பதித்து விட்டு, தன் வேலையை பார்த்தான்.
கந்தனின் மனம் ஒரு நிலையில் இல்லை. மழை காற்றால் அப்போது ஆடிக்கொண்டிருந்த படகு போல், அவன் மனமும் தத்தளித்தது.
ராகவி.. அவனது தந்தையின் இரண்டாவது மனைவி பெற்ற மகள். தாய் இறந்து போனதும் தந்தை மறுமணம் செய்த போது, அவரை விட்டு விலக்கி கந்தனின் தாய் மாமன் அவனை அழைத்துச் சென்று விட்டார்.
தந்தையின் வாழ்வு சீக்கிரமே முடிந்து போக, அவர் பெற்ற மகளான ராகவியை, அவர் இறந்து போன நாளில் தான் முதன் முதலாக பார்த்தான்.
மாற்றாந்தாயின் மகளாக இருந்தாலும் தங்கை அல்லவா? சொல்லாமல் கொள்ளாமல் பாசம் ஒன்று அவனுக்குள் ஊரத்தான் செய்தது.
வளர்ந்து படித்து பதவியிலும் அமர்ந்த பிறகு தான், தந்தையின் மற்றொரு குடும்பம் என்ன செய்கிறது? என்று தேடத்தோன்றியது. தேடினான். ராகவியின் குடும்பம் சிரமப்பட்டாலும் சிதையாமல் இருந்தவரை, அவனுக்குப் பெரிதாக வேலை எதுவும் இல்லை.
இடையில் கந்தனுக்கு திருமணமும் முடிந்தது. வருடங்கள் இப்படியே சென்றிருக்கலாம். திடீரென ராகவி தனிமைப்பட்ட விவரம் கிடைத்தது.
கந்தனின் மனைவி இப்போது வயிற்றில் குழந்தையுடன் இருக்கிறாள். பிள்ளை பிறந்த பிறகு விசயத்தை சொல்லி, ராகவியை தங்களோடு அழைத்துச் செல்ல நினைத்திருந்தான்.
முதலில் ராகவிக்கு தன்னை பற்றித் தெரியுமா? என்ற கேள்வி பூதகரமாக நின்றது உண்மை. ஆனாலும் விசயத்தை விளக்கி, அவளை பாதுகாப்பாய் தன்னோடு அழைத்துச் செல்லவே திட்டமிட்டிருந்தான்.
அவள் இருக்கும் வீடும் அந்த பகுதியும் பாதுகாப்பானது என்பதால் அமைதி காத்திருக்க, அவனது பொறுமை சாராவுக்கு அனுகூலமாக மாறி விட்டது.
ராகவியின் தாய் மாமன் வந்த விவரம் கூட கந்தனுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. ராகவியை கண்கானிக்க வைத்திருந்த ஆள், அன்று ராகவி நள்ளிரவு வரை வீடு வரவில்லை என்று கூறியதும், அவள் வேலை செய்யும் இடத்திற்கு கந்தன் சென்று பார்த்தான்.
கடை விடுமுறை என்று கூற, ‘எங்கே போயிருப்பாள்?’ என்ற யோசனையோடு அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.
திடீரென ராகவி வீடு திரும்பியதாக செய்தி வந்தது. ‘பத்திரமாக வந்து விட்டாள். காலையில் என்னவென்று விசாரித்துச் சொல்’ என்று கூறி விட்டு வீட்டுக்கு கிளம்பியவனுக்கு, மீண்டும் அழைப்பு வந்தது.
ராகவி முத்துவிடம் அடி வாங்கி அலறும் சத்தம் கேட்டு, கந்தனுக்கு உடனே அழைத்து விசயத்தைக்கூறினான். கந்தன் ஓடி வந்து பார்க்கும் போது, சாரா ராகவியை தூக்கிக் கொண்டு சென்று விட, முத்து மட்டும் அரை மயக்க நிலையில் வீட்டில் கிடந்தான்.
முதலில், “சாரா வண்டி தான் சார். நான் நல்லா பார்த்தேன். சாராவே தான் தூக்கிட்டு போனான்” என்று ராகவியை கண்காணித்த எதிர் வீட்டுக்காரன் கூறும் போது, கந்தனால் நம்பவே முடியவில்லை.
சாரா பெண்கள் விசயத்தில் எப்படிப்பட்டவன் என்று ஊருக்கே தெரியும். அவன் எதற்காக திடீரென வந்து ராகவியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்?
அவனுக்கும் ராகவிக்கும் எதுவும் சம்பந்தமிருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.
பிறகு கடைசியாக ராகவிக்கு வந்த அழைப்புகளை தேடி கண்டு பிடித்து, கடை முதலாளி முருகன் வீட்டுக்குச் சென்று நின்றான். அங்கு அவனுடைய மகள் கண்ணீர் வடிய நடந்ததைக் கூறினாள்.
அவள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ராகவியை அழைக்கச் சொன்னதும், அவள் வந்ததும், அவளிடம் முருகன் நடந்து கொண்டதையும் விளக்கி விட்டு அழுது தீர்த்தாள்.
அவளை மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தவன், விடியும் போது ராகவியை தேடி விட்டு வெறுங்கையோடு வந்த முருகனுக்கு கரெண்ட் சாக் கொடுத்து, கதையையும் முடித்து விட்டான். இப்படி ஒருவன் உயிரோடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றியதோ என்னவோ? ஆனால் அப்போது இருந்த கோபத்திற்கு, சட்டமும் தண்டனையும் அவனுக்கு தெரியவில்லை. அப்படி வழக்கு போட்டாலும், இரு பெண்களின் மனமும் இன்னும் பாதிக்கப்படும்.
குற்றவாளிகளை இழுத்துச் சென்று, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கத்தான் அவனுக்கும் ஆசை. ஆனால் சில விசயங்கள் கை மீறிப்போகும் போது, சுட்டு விட்டு காரணத்தை எழுதி நீட்டி விடுவான்.
முருகனின் மனைவி வந்து கண்ணீர் வடிக்க, ‘விசயத்தை வெளியே சொன்னால் இத்தனை நாட்களாக மகளை கொடுமை படுத்தியதற்காக சிறைபடுத்தப்படுவாய்’ என்று மிரட்டி விட, அவள் வாயை மூடிக் கொண்டாள்.
அதன் பிறகு தான் ராகவியை சாராவிடமிருந்து எப்படி மீட்பது? என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தான். மனதின் ஓரம் குற்ற உணர்வும் இருந்தது. அவளை பற்றி தெரிந்த உடனே, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தால் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து இருக்க மாட்டாள் அல்லவா?
ஆனால் சாராவிடம் இருப்பதற்காக அவன் அதிகம் பயப்படவில்லை. சாரா பெண்களை எல்லாம் ஒதுக்கித்தள்ளுவான். அதனால் ராகவிக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் அவள் தன்னுடைய தங்கை என்று சாரா அறிந்து விட்டால்? ஆபத்தை தேடிப்போய் அமர்ந்தது போல் இருக்கும். அதை அவன் அறியும் முன்பே ராகவி அவனிடமிருந்து வந்து விட்ட்டால் நலம் என்று நினைத்தான்.
நினைப்பது எல்லாம் எப்போது நடந்திருக்கிறது? எப்போதும் மூளை ஒரு பக்கமும் விதி வேறு பக்கமும் சுழன்று தானே பழக்கம். அதே தான் கந்தனுக்கும் நடந்தது.
ஆனால் சாராவின் கதையே வேறு. சாரா அன்று நல்ல எண்ணத்தில் தான் ராகவியை காப்பாற்ற நினைத்தான். முதன் முதலில் அவளை பார்த்து, அவளது சிரிப்பில் மயங்கிய சாரா தான், அவளை வீடு வரை அழைத்துச் சென்று விட்டது.
அந்த ஈர்ப்பு மிச்சம் இருந்ததால் தான், அவளது கொலுசை கொடுக்க தானே இறங்கிச் சென்றான். அந்த கொலுசு வெள்ளியும் அல்ல. அது அவ்வளவு முக்கியமும் அல்ல. ஆனால் அவளது அழுது சிவந்த முகமும், கிழிந்த உடையும் அவனை என்னவோ செய்தது.
அதனால் தான் கொலுசை எடுத்துக் கொண்டு அவனே சென்றான். வீட்டை கண்டுபிடித்து கொலுசை கொடுத்ததோடு வராமல், அவளை காப்பாற்றிக் கொண்டு வந்த போது, அவன் அவனாக இல்லை.
ராகவியின் மயக்கத்தை தெளிய வைத்து, அவளை காப்பதே அப்போது முக்கியமாக பட்டது. அதனால் அவன் சுற்றுபறத்தை கூட கவனிக்காமல் காரில் ஏறி கிளம்பி விட்டான்.
ஆனால் எப்போதும் கவனத்துடன் இருக்கும் காசியின் கண்ணில், எதிர் வீட்டுக்காரன் நோட்டம் விடுவது தெரிந்தது. அதை மனதில் குறித்தபடி தான் கிளம்பிச் சென்றான்.
ராகவியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பிறகு, அவளை பற்றி விசாரிக்கச் சொல்லி பூபதியிடம் பொறுப்பை ஒப்படைத்தான். பூபதி சேகரித்தது என்னவோ பொதுவான விவரங்கள் தான். ஆனால் காசி, அடுத்த நாளே முக்கிய விவரத்தோடு வந்து நின்றான்.
“இந்த பொண்ணு கந்தனோட தங்கச்சி” என்று சொன்ன போது, சாராவிற்கே ஒரு நொடி ஆச்சயமாகத்தான் இருந்தது.
“எஸ்பி கந்தனா?”
“ஆமா பாஸ்”
“அவருக்கு தங்கச்சி எல்லாம் இருக்கா? இதுவரை தெரியலயே?”
“இந்த பொண்ணு சித்தி பொண்ணு போல. எதிர் வீட்டுல இருக்கவன இவளுக்கு காவலுக்கு வச்சுருக்கார்.”
“இன்ட்ரஸ்டிங்” என்ற சாரா, அப்போதே இனி ராகவியை வெளியே விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
காசி அறிந்த விவரம் எதுவும் பூபதிக்கு தெரியாது. அவன் பொதுவாக அவளைப்பற்றி விசாரித்து வந்து விசயத்தை சொல்லி விட்டு ,அவளை அனுப்பி வைத்தால் போதும் என்று நினைத்தான்.
அவர்கள் அப்படித்தான். ஒருவருக்கு தெரிந்த விசயம் அடுத்தவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. காசிக்கு தெரிந்தது பூபதிக்கு தெரியாது. ஏகாம்பரத்திற்கு தெரிந்தது காசிக்கு தெரியாது.
அவர்கள் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும், எதையும் உளறவும் மாட்டார்கள். தெரியவில்லை என்பதால் வருத்தப்படவும் மாட்டார்கள். எல்லாம் தெரிந்த ஒரே ஒருவன் தான் இருப்பான். அவன் சாராவாக மட்டுமே இருப்பான்.
காசி வந்து, ‘ராகவி கந்தனுக்கு எப்படித்தங்கையானாள்?’ என்பதை விவரித்து விட, அதற்கு மேல் அவளை விட சாரா முட்டாள் அல்லவே?
அவன் முடிவில் வலுவாவதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது முருகனின் இறப்பு. கந்தன் கையால் அவன் இறந்து போயிருக்கிறான் என்ற விவரம்.
காவல்துறைப்பணியில் கந்தன் எப்படிப்பட்டவன் என்று சாராவை விட யாரும் அறிய முடியாது. தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததற்காக, ஒருவனை கொலை செய்திருக்கிறான் கந்தன்.
ராகவி அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று இந்த ஒரு செயல் சொல்லி விடாதா? அதனால் தான், அவள் சரியான பின்பும் வீட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்தான் சாணக்கியராஜ்.
இந்த காரணம் புரியாமல் தான், அனுசயாவும் அவளது குழுவும் தலையை பிய்த்துக் கொண்டிருந்தனர். பூபதிக்கு தெரிந்தால் தானே அவர்களுக்கு தெரிவதற்கு?
ராகவிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திணறிய அனுசயா, அவளை சந்தித்து நேராக அவளது விவரங்களை வாங்க முடிவு செய்து, பின்தொடரவும் ஆளை ஏவி இருந்தாள்.
அன்று கந்தன் ஊரை விட்டு வெகுதூரம் சென்றிருந்த நேரம், ஏகாம்பரமும் ராகவியும் அவளது வீட்டுக்கு திரும்பி வந்தனர். உடைகள் தேவையான எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, எதிர்வீட்டுக்காரன் கவனித்து விட்டு கந்தனிடம் விசயத்தை கூறினான்.
இப்போது சென்றால் தான் ராகவியை தடுக்க முடியும் என்று புரிந்ததும், வேலையை அவசரமாக முடித்து விட்டு கந்தன் கிளம்பி விட்டான்.
ராகவி போகுமிடமெல்லாம் மூவர் தொடர்ந்தனர். ஒன்று கந்தன் வைத்த ஆள். ராகவியின் எதிர் வீட்டுக்காரன். மற்றொன்று அனுசயாவின் குழுவினர். கடைசியாக சாராவின் ஆள்.
அனுசயா பேச சந்தர்ப்பம் பார்க்க, கந்தன் ராகவியை மீட்க நினைக்க, இரண்டையும் தடுப்பது போல் உடனிருந்தான் ஏகாம்பரம்.
ராகவி தான், தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்று புரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஏகாம்பரம் எப்போதுமே கவனத்துடன் தான் இருப்பான். அவன் வேலை செய்யும் இடம் அப்படி.
அனுசயாவின் ஆள் யாரென்று தெரியவில்லை என்றாலும், எதிர்வீட்டுக்காரனை ஏகாம்பரம் அடையாளம் கண்டு கொண்டான்.
கந்தனுக்கு விவரம் போவது தெரிந்து அவன் சாராவிடம் விசயத்தைக்கூற, சாரா வேலையை அப்படியே போட்டு விட்டுக் கிளம்பியிருந்தான்.
அன்று… சிவாவின் கார் டிரைவரை பிடித்து இழுத்துச் சென்று, அடித்து உதைத்து விசயத்தை வாங்கிக் கொண்டு, நேராக கடத்தப்பட்ட இடத்திற்கு செல்வது தான் அவர்களது திட்டம்.
ஆனால் கந்தனின் ஆள் பின் தொடர்வதை கேட்டதும், பூபதியை அனுப்பி விட்டு சாரா ராகவியை தேடி ஓடி வந்து விட்டான்.
அனுசயாவின் காரில் ஏறியதாக ஏகாம்பரம் கூற, சாராவிற்கு பிடிக்கவில்லை.
“எங்கயாவது இறங்கிடு. நான் வர்ரேன்” என்று சாரா சொல்லி வைக்க, ‘என்ன செய்வது?’ என்று ஏகாம்பரம் யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு வேலை வைக்காமல், ராகவியே காரில் ஏறிய இரண்டாவது நிமிடம் இறங்கி விட்டாள்.
அனுசயா அப்போதும் விடை பெறாமல் பேச வர, சாரா கந்தனின் பைக்கை தாண்டிக் கொண்டு வந்து நின்றான்.
கந்தன் ராகவியை தூரத்தில் பார்த்து விட்டு அருகே செல்ல நினைக்கும் முன்பு, சாராவின் கார் அவனை கடந்து சென்று முன்னால் நின்றது.
அதோடு நில்லாமல், சாராவே இறங்கிச் சென்று ராகவியில் கையைப்பிடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றி விட்டான்.
நடப்பதை கந்தனால் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. இடையில் சென்று பேசினால், முதலில் இருந்து தான் யார் என்று ராகவிக்கு விளக்க வேண்டும். அப்படி விளக்கினாலும் உடனே அவனை நம்பி உடன் வருவாளா? என்பது சந்தேகம்.
அந்த விளக்கத்தையும் சாராவின் முன்பே கொடுக்க வேண்டும். இதுவரை சாராவிற்கு ராகவியை பற்றிய உண்மை தெரியாமலிருந்து, தானே சென்று உளறி வைக்க கூடாது என்பதால், அமைதியாக நின்று விட்டான்.
சாராவும் ராகவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். ஆனால் கந்தன் அப்படியே இருக்க முடியாதே.
சாராவை எப்படியாவது பிடித்து ராகவியை மீட்க நினைத்தவன், இப்போது சாராவின் வலையில் வந்து விழுந்திருந்தான்.
ராகவியை பொறியாக வைத்து, கந்தன் என்னும் எலியை அழகாக வலைக்குள் இழுத்துப்போட்டிருந்தான் சாணக்கியராஜ்.
தொடரும்.
