சாரா 22
![]()
அனுசயா வேலையில் கவனமாக இருக்க, “மேடம் உங்கள தேடி ஒருத்தர் வந்துருக்காரு” என்ற செய்தியோடு வந்து நின்றான் பியூன்.
“யாரு?”
“உங்க அண்ணன்னு சொல்லுறாரு”
“எனக்கு அண்ணனா?” என்று புரியாமல் பார்த்தவள், பிறகு எழுந்து வெளியே வந்தாள்.
அங்கே நிரூபன் தான் நின்றிருந்தான். அவனை பார்த்ததும் சட்டென சுதாரித்தவள், புன்னகையை பூசிக் கொண்டு கண்ணில் கேள்வியோடு அருகே சென்றாள்.
“இங்க என்ன பண்ணுற?” என்று கேட்க, “முக்கியமான விசயம் பேசனும். வா” என்று அழைத்தான்.
“போன் பண்ணிருக்க வேண்டியது தான?”
“நீ எடுக்கல” என்றதும் தான் தன் கைபேசியை எங்கு வைத்தோம் என்று யோசித்தாள்.
“ப்ச்ச்.. அத வீட்டுல மறந்து வச்சுட்டேன். என்ன அவசரம்?” என்று கேட்டவளை தனியாக அழைத்து வந்தவன், “எஸ்பி கந்தன் இப்ப சாராவோட போட்ட ஃபாலோவ் பண்ணிட்டு போயிருக்காரு” என்றான்.
“வாட்? அவருக்கு ஏன் இந்த வேலை?”
“தெரியல. ஆனா அவர் போனத பார்த்தேன். அதுனால நான் ஃபாலோவ் பண்ண வேணாம்னு கிளம்பி வந்துட்டேன். உன் கிட்ட சொல்லலாம்னா கால் அட்டன் பண்ணல நீ”
“ப்ச்ச்.. கந்தன் கிட்ட தான் இந்த கேஸ் இல்லையே. அப்புறம் ஏன் உள்ள நுழையுறாரு? இருக்கதெல்லாம் போதாதா?”
“இப்ப என்ன செய்யுறது?”
“குரு எங்க?”
“அவன் வேற வேலையா போயிட்டான்”
“பூபதியும் ஐலாண்ட் போயிட்டான். இப்ப யாரு அவருக்கு விசயத்த சொல்லுறது?”
“நீ தான் சொல்லனும்”
“நல்லா வாங்கி கட்டப்போறோம். இந்த கந்தன் என்ன தான் நினைச்சுட்டு இருக்காரோ?” என்று எரிச்சலுடன் தலை முடியை கோதிக் கொண்டாள் அனுசயா என்கிற அசிஸ்டன்ட் கமிஷ்னர் அனுபமா.
அவளருகே நின்றிருந்த நிரூபன் இன்ஸ்பெக்டருக்கும் இப்போது யார் போய் கமிஷ்னரிடம் விசயத்தை சொல்வது? என்று புரியவில்லை.
“சரி நானே சொல்லுறேன். கந்தன் இப்படி நடுவுல வருவாருனு எதிர் பார்க்கல” என்றவள், நிரூபனை அனுப்பி விட்டு அலுவலகத்தில் நுழைந்தாள்.
ஆனால் மனதில் கந்தனை திட்டவும் தவறவில்லை.
*.*.*.*.*.*.*.*.*.*.
நன்றாக தூங்கி எழுந்தான் சாணக்கியன். வலி நிவாரணியின் வீரியம் குறைய ஆரம்பித்திருக்க, வலி தெரிய ஆரம்பித்ததும் கண் விழித்து விட்டான்.
ராகவி இன்னுமே தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது உணவில் கலந்த மாத்திரை, அவளை நன்றாக தூங்க வைத்திருந்தது.
முதலில் எழுந்து கொண்ட சாரா, தூங்குபவளை எழுப்பினான்.
“கவி.. எந்திரி” என்று அழைத்து உலுக்க, புரண்டு படுத்தவள் கண்ணை திறக்கவில்லை.
“கவி எந்திரிக்கிறியா? இல்லையா?”
மீண்டும் உலுக்க லேசாய் கண்ணை திறந்து பார்த்தாள். அருகே சாணக்கியனின் முகம் தெரிய, சட்டென விழித்தவள், பதறி எழுந்து அமர்ந்தாள்.
“என்ன?”
“பாஸ்.. சுறாவுக்கு உங்க மூஞ்சி இருக்கு” என்று பதட்டத்தோடு சொல்ல, “வாட்?” என்றான் புரியாமல்.
“உங்கள மாதிரியே எப்படி சுறா இருக்க முடியும்?”
“கனவு கண்டியா?”
“கனவா?’
“கொஞ்சம் நல்லா சுத்திப்பாரு” என்றதும், பார்வையை சுழல விட்டாள்.
இருப்பது அறை. மெத்தையில் படுத்திருக்கிறோம் என்று புரிய, “அப்ப நாம சுறாவ பார்க்க போகலயா?” என்று கேட்டு வைத்தாள்.
“என்ன கனவு கண்ட நீ?”
“ஒன்னும் இல்லையே” என்றவள், உடனே மெத்தையை விட்டு இறங்கி விட்டாள்.
“நின்னு சொல்லிட்டுப்போ கவி” என்று அழைத்தவன் பக்கம் திரும்பாமல், கதவை திறந்து வெளியேறியவள் அருகே இருந்த கழிவறையில் நுழைந்து விட்டாள்.
சாரா அவளது ஓட்டத்தை கண்டு சிரித்து விட்டு, எழுந்து வெளியே வந்தான்.
முகத்தை கழுவியவளுக்கு கனவு இப்போது தான் புரிந்தது. கனவில் சாரா அவளை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
மிகவும் அழகாக இருந்த அந்த வீட்டில், பூட்டப்பட்ட ஒரு அறையை திறந்தான். அந்த அறையில் சுவற்றுக்கு பின்னால் படிகள் இருந்தது. அதில் இறங்கும் போது, ராகவி சுவற்றில் முட்டிக் கொண்டு தட்டுத்தடுமாறி இறங்கினாள்.
சாரா அவளது கையைப்பிடித்து அழைத்துச் சென்றான். சில தூரம் நடந்ததும் அங்கிருந்த கதவை திறக்க, உள்ளே விளக்குகள் எரிந்தது.
அங்கு மீன் கண்காட்சி நடக்கும் இடம் போல, பல பெரிய தொட்டிகளில் மீன்கள் மிதந்து கொண்டிருந்தது. அதை எல்லாம் பார்த்து விட்டு, கடைசியாக இருந்த மிகப்பெரிய திரையை விலக்கினான் சாரா.
பிரம்மாண்டமான சுறாவின் வால் பகுதி தான் தெரிந்தது. அதன் தலையை பார்ப்பதற்காக ராகவி இங்கும் அங்கும் ஓட, அதே நேரம் சாரா அவளை எழுப்பி இருந்தான்.
சுறாவின் முகத்தை பார்க்கப்போனவள் கண்ணில் சாராவின் முகம் விழ, எது கனவு எது நினைவு என்றே புரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் கனவு என்று புரிந்ததும், தலையில் அடித்துக் கொண்டாள்.
“கனவுல வர்ர அளவுக்கா யோசிப்ப? கொடுமை” என்று தன்னை தானே திட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
கந்தனும் பிரமோத்தும் புதிதாய் முளைத்திருப்பதை பார்த்தவள், கந்தனை விட்டு விட்டு பிரமோத்தை தான் நன்றாக பார்த்தாள்.
சாராவை விட அதிகமாக உயரமாக இருந்தவனை வேண்டுமென்றே அண்ணார்ந்து பார்த்தவள், “எவ்…வளவு ஹைட்டு!”என்று இழுத்து வைத்தாள்.
அவளது தலையை பிடித்து சரியாய் நிறுத்திய சாரா, “பின்னாடி விழுந்துடாத” என்றான்.
“இவங்க என்ன பாஸ் இவ்வளவு உயரமா இருக்காங்க? அண்ணார்ந்து பார்த்து கழுத்தே சுளுக்கிடுச்சு” என்றவள், கழுத்தை வேறு விளையாட்டாய் தடவிக் கொண்டாள்.
“ஏன்? நாம வளரலயேனு பொறாமையா இருக்கா?”
“ஹலோ கிண்டலா? எனக்கு இந்த ஹைட் போதும். அப்புறம்.. இவரு உங்கள விடவும் தான் ஹைட்டா இருக்காரு. இவரு பக்கத்துல நீங்களே குள்ளம் தான்” என்று கோபமாக சொல்லி விட்டு, தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டாள்.
“ஆனா நீ என்னை விட குள்ளமாச்சே.”
“நான் இப்ப கேட்டனா?”
“அதான உண்மை?”
“ரொம்ப பீத்திக்காதீங்க. இப்ப ஹைட்டா இருக்கதுல என்ன பிரயோஜனம்? மேல இருக்க பொருள ஈசியா எடுக்கலாம். அவ்வளவு தான? அதுக்கு நாங்க சேர் யூஸ் பண்ணிட்டு போறோம். ஒன்னுத்துக்கும் உதவாத ஹைட்ட வச்சுட்டு பீத்திக்கிறாங்க யா.. ஹும்..” என்று நொடித்தவள் திரும்பி நடந்தாள்.
அவளது பேச்சில் வழக்கம் போல் சாரா புன்னகைத்து விட, கந்தனுக்கும் புன்னகை வந்தது.
கந்தன் அவளை தூரமாக நின்று தான் பார்த்திருக்கிறான். அருகே சென்று பேசியது இல்லை. இப்போது அவள் பேசுவதை கேட்கும் போது, குழந்தையாகவே அவனது கண்ணுக்கு தெரிந்தாள்.
அவர்கள் மட்டுமல்ல, பிரமோத் கூட அவளை சுவாரஸ்யமாக தான் பார்த்தான். யாரும் சாராவிடம் இப்படிப் பேசி அவன் பார்த்தது இல்லை. அதுவும் பெண்கள் அவனருகே போவதை கூட சாரா வெறுப்பான்.
இப்படி சரிக்கு சரியாய் அவன் ராகவியிடம் பேசுவதே ஆச்சரியம் என்றால், அவளோ உன் உயரமே வீண் என்று சொல்லி விட்டு தைரியமாக செல்கிறாள்.
இப்படி யாராவது அவனை இதுவரை அவமானப்படுத்தி இருக்கிறார்களா? இல்லவே இல்லை. ராகவி மட்டும் இவ்வளவு உரிமையாய் நடந்து கொள்வதை பார்த்து, பிரமோத்துக்கு ஆச்சரியமும் சுவராஸ்யமும் உருவானது.
கூடவே உறுதியும் உண்டானது. நிச்சயமாக இந்த பெண் சாராவின் மனதில் இருக்கிறாள் என்று.
ராகவியோ யார் பார்வையை பற்றிய கவலையும் இல்லாமல், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நொறுக்குத்தீனிகளில், எதை எடுத்து சாப்பிடலாம்? என்ற தீவிர யோசனையில் இருந்தாள்.
“இது எல்லாம் புதுசா இருக்கே” என்றவள், ஒரு பாக்கெட்டை பிரித்து சாப்பிடவும் செய்தாள்.
“நல்லா இருக்கு பாஸ். என்னது இது?” என்று கேட்க, “சாப்பிட்டு தான தூங்குன?” என்று கேட்டான் சாரா.
“இப்ப திரும்ப பசிக்குது. என்னது இது?”
“பார்த்தா தெரியல? சிப்ஸ்”
“அது தெரியுது. ஆனா எதுல பண்ண சிப்ஸ்?”
“பலாப்பழம்”
“அதுல எல்லாமா பண்ணுவாங்க?”
“பண்ண போய் தான சாப்பிடுற:?”
“வாஸ்தவம் தான்” என்றவள் வெளியே எட்டிப்பார்த்து விட்டு, “அய்யோ! மழை பெய்யுது பாஸ்..!” என்று பதறி விட்டாள்.
“மழை தான பெய்யுது.. அதுக்கு ஏன் பதறுற?”
“கப்பல் மூழ்கிடும்ல?”
சாரா தலையில் அடித்துக் கொள்ள நினைத்து, கடைசி நொடியில் விட்டான்.
“இதென்ன பேப்பர் கப்பலா? மழையில மூழ்குறதுக்கு?”
“அப்ப இந்த கப்பல் மூழ்காதா? அப்புறம் ஏன் மழை வந்தா கடலுக்கு போகாதனு நியூஸ் போடுறாங்க?”
“அது பெரிய மழை, புயல் வந்தா சொல்லுறது. இது அப்ப அப்ப வந்துட்டு உடனே நின்னுடும். இதுக்கெல்லாம் கப்பல் மூழ்காது.”
“நிஜம்மா தான?” என்று சந்தேகம் தீராமலே கேட்டவள், வெளியே சென்று மழையை வேடிக்கை பார்த்தாள்.
படகு நிற்காமல் சென்றதோடு மழை சத்தமும் இதமாக இருக்க, அதை ரசித்தபடி கையிலிருந்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதுவரை ராகவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சாரா, இப்போது கந்தன் பக்கம் திரும்பினான். கந்தனின் பார்வையும் ராகவியின் மீது தான் இருந்தது.
“உங்க தங்கச்சி கிட்ட பேசுறது?” என்று சாரா கிண்டலாக சொல்ல, கந்தன் அவனை திரும்பி பார்த்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை.
“சாப்பிட்டீங்களா எஸ்பி? எனக்கு பசிக்குது. சாப்பிடலாமா?”
“தேவையில்ல”
“ரெண்டு நாள் பட்னி கிடக்க முடியாது எஸ்பி”
“ரெண்டு நாளும் நீ இங்க தான் இருக்கப்போறங்குறதுல என்ன நிச்சயம்?” என்று கந்தன் கேட்க, சாரா ஒரு நொடி புருவம் சுருக்கினான்.
பிறகு புன்னகையுடன், “தெரியல எஸ்பி. ஆனா ரெண்டு நாள் இருக்கனும்னு தான் வந்தேன். இருப்பேன்.” என்றவன், சமையல் செய்யும் இடத்திற்கு சென்று உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.
“கவி..” என்று அழைத்தவனை ராகவி திரும்பிப் பார்த்தாள்.
“மீன் சாப்பிடுறியா?”
“கொண்டாங்க” என்று ஆர்வமாக வாங்கியவள், மழையை பார்த்துக் கொண்டு நின்றபடியே சாப்பிட, அவளோடு நின்றபடி தன் உணவை முடித்தான் சாரா.
கந்தன் தான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இப்போது எதுவும் செய்ய முடியாது. அவனது துப்பாக்கி கைபேசி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டது.
நடுக்கடலில் சாராவிடம் மாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். ஆனாலும் என்ன செய்ய முடியும்? என்ற யோசனை தீவிரமாக உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.
சாரா சாப்பிட்டு முடித்த போதே, மழை நின்று விட்டது.
சாரா கந்தனை பார்த்து விட்டு, “உனக்கு இவங்க யாருனு தெரிய வேணாமா?” என்று கேட்டான்.
கந்தனையும் பிரமோத்தையும் பார்த்தவள், “வரும் போது இவங்கள நான் பார்க்கல. எப்ப வந்தாங்க?” என்று கேட்டாள்.
“இடையில வேற போட்ல வந்தாங்க”
“ஓஹோ.. உங்க ஃப்ரண்டா?”
“ம்ஹும்.. சொந்தம்னு சொல்லலாம்”
“ஓஓ உங்க மாஃபியா கும்பலா?” என்று அவள் இழுக்க, சாராவிற்கு சிரிப்பு வந்தது.
‘இதைக்கேட்டால் கந்தன் முகம் எப்படி மாறும்?’ என்ற நினைப்பே சிரிப்பை கொடுத்தது.
“மாஃபியா இல்லமா. போலீஸ்”
“எதே!” என்று அதிர்ந்தவள் உடனே உள்ளே எட்டிப் பார்த்தாள்.
கந்தன் எதோ யோசனையில் அமர்ந்திருக்க, “ஆமா பாஸ். முடி கூட கம்மியா வெட்டிருக்காங்க. போலீஸே தான். உங்க சொந்தகாரவங்க போலீஸ்ல எல்லாம் இருக்காங்களா? சூப்பர்” என்று கூறி வைத்தாள்.
“சூப்பரா?”
“ஆமா.. நீங்க ஒரு டான். உங்களோட ஆளுங்க போலீஸ்ல அரசியல்ல எல்லாம் இருப்பாங்க தான? எம்புட்டு சினிமா பார்த்துருப்போம்?”
பக்கென வரத்துடித்த சிரிப்பை அடக்கியவன், அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
“படம் பார்த்து கெட்டு போயிருக்க நீ. டிரக் விற்பியானு கேட்குறது.. இப்ப போலீஸ என் ஆளுங்கனு சொல்லுறது.. படம் வேற ரியாலிட்டி வேற மா”
ராகவி திடீரென அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
“என்ன?”
“அப்ப நீங்க பறந்து பறந்து ஃபைட் பண்ண மாட்டீங்களா? ச்சே.. நான் கூட நீங்க ஒரு ஹீரோ மெடிரீயல். பறந்து பறந்து ஃபைட் பண்ணுவீங்கனு நினைச்சேனே. ச்சு ச்சு” என்று உச்சுக்கொட்டியவள், சிரிப்பை அடக்கிக் கொண்டு வம்பிழுத்தாள்.
“உனக்கு வாய் ஓவராத்தான் இருக்கு”
“போங்க பாஸ் நானே டிஸப்பாயிண்ட் ஆகிட்டேன். நீங்க ஒரு ஹீரோனு நினைச்சு உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். இப்ப இப்படி சொல்லிட்டீங்க. ச்சு.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு பாஸ்” என்றவள், கை நிறைய சிப்ஸை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.
“அடிங்.. இந்த வாயிக்கே உன்னை தூக்கி சுறாவுக்கு தீனியா போடுறேன் இரு” என்றவன், அவள் தலையை பிடித்து ஆட்டி வைத்தான்.
“சொல்லிக்கிட்டே இருக்கானே தவிர சுறாவ கண்ணுல காட்ட மாட்டுறானே பா”
“இருக்கானா?”
“பாஸ் காமெடி காமெடி”
“இல்ல.. நீ கேப்ல என்னை தான அவன் இவன்னு சொன்ன?”
“இல்ல பாஸ். உங்க மேல எனக்கு எவ்வளவு மரியாதை இருக்கு. உங்கள போய் அப்படிச் சொல்லுவேனா?” என்று பேசிக் கொண்டே நான்கடி தள்ளி நிற்க, “இங்க வா நீ” என்றான்.
‘மாட்டேன்’ என்பது போல் தலையசைத்தவள், ஓட ஆரம்பித்தாள்.
வெளியே இருந்து அவள் உள்ளே ஓடி வர, எதிரே வந்த கந்தனிடம் மோதப்போய், கடைசி நிமிடத்தில் தடுமாறியவளை கந்தன் பிடிக்கும் முன், சாரா பின்புறம் பிடித்து இழுத்திருந்தான்.
அவள் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து நிறுத்தியவன், கந்தனை பார்த்து விட்டு, “இவர் கந்தன் எஸ்பி” என்று ராகவிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
மோதப்போனதில் சற்று அதிர்ந்தவள், சாரா பிடித்து விட்டதும் தான் நிதானத்துக்கு வந்தாள்.
“ஹலோ சார்” என்று கந்தனுக்கு வணக்கம் வேறு ராகவி வைக்க, அவனுக்கு, சாராவை முறைப்பதா? தன்னைத் தானே நோவதா? என்று புரியவில்லை.
“இவர் இல்லனா நான் இப்ப உயிரோட இருந்துருக்க மாட்டேன் கவி. அவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்காரு” என்று வேறு சொல்லி வைக்க, ராகவி அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
“ஏன்?” என்று கேட்டவளின் குரலில் முதல் முறையாக ஒரு பயம் ஊடுருவி சென்றது. சாராவிற்கு ஆபத்து என்ற எண்ணம், அவளை திடீரென தாக்கியிருந்தது.
“அத அப்புறமா சொல்லுறேன். இவர் இப்ப நம்ம கெஸ்ட்.” என்று மட்டும் சொல்லி வைத்தான்.
ராகவி கந்தனை நன்றியோடு பார்த்து விட்டு, சாராவை தான் நன்றாக பார்த்தாள்.
சட்டைக்குள் காயமும் கட்டும் மறைந்திருக்க, ராகவிக்கு எதுவும் தெரியவில்லை.
‘இவருக்கு எதாவது ஆகிட்டா மறுபடியும் நான் அனாதை தானா?’ என்ற கேள்வி அவள் மனதில் மலை போல் எழுந்து நின்றது.
‘ஆண்டவா.. இவரையாவது எனக்கு விட்டு வை’ என்று அவள் மனம் அவசரமாக வேண்ட, அந்த வேண்டுதலுக்கு மாற்றாக சாராவின் உயிரை எடுத்து விட முடிவு செய்திருந்தது ஒரு கூட்டம்.
தொடரும்.
