சாரா 25

Loading

வீடு வந்ததும், ஏகாம்பரத்தை பார்த்து துள்ளி குதிக்காத குறை தான். அவ்வளவு ஆனந்தத்தை காட்டினாள் ராகவி.

“ஏகாம்பரம்.. எப்படி இருக்கீங்க? லாங் டைம் நோ சீ” என்று பாச மழையை பொழிய, அவன் அவளை மேலும் கீழும் பார்த்து பார்த்து வைத்தான்.

“ரெண்டு நாள் தான பார்க்கல? என்னமோ ரெண்டு வருசமா பார்க்காத மாதிரி லாங்க டைம்னு சொல்லிட்டு இருக்க?”

“அதாவது ஏகா.. உங்கள பார்க்காம இருந்த ரெண்டு நாளும், எனக்கு ரெண்டு வருசம் மாதிரி தான் போச்சு”

“பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலயே. நல்லா ஊர் சுத்திட்டு வந்துருக்க மாதிரில தெரியுது”

“ஊர இல்ல கடல சுத்துனோம். போட்ல போனோம் தெரியுமா?”

“அப்படியா?”

“ஆமா. சுறாவ கூட பார்த்தோம்”

மீண்டும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், “எங்க?” என்று கேட்டான்.

“கடல்ல தான்”

“சுறா கடல்ல தான் இருக்கும். நீ எங்க பார்த்த?”

சாரா அழைத்துச் சென்ற ஹோட்டலை பற்றி விளக்கி முடிக்க, “தப்பிச்சுட்டியே” என்றான்.

“எதே?”

“பக்கத்துல பார்த்துருந்தா உன்னை சுறாவுக்கு சாப்பாடா போட்டுருக்கலாம்”

“ஹலோ.. நான் இப்பலாம் சுறாவ பார்த்து பயப்படுறது இல்ல. சுறா புட்டு கேட்குற அளவுக்கு தைரியமாகிட்டேன். தெரியுமா?”

“கண்ணாடிக்கு வெளிய நின்னு பார்த்துட்டு பேச்ச பாரு”

“நீங்க என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க ஏகாம்பரம். இதுக்கெல்லாம் ஒரு நாள் இருக்கு”

“இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்”

“உங்க பாஸ நான் கல்யாணம் பண்ணிட்டா என்னாகும்னு யோசிச்சீங்களா?”

“முதல்ல பண்ணு. அப்புறம் வந்து பேசு” என்று சீண்டி விட்டான்.

முகத்தை தூக்கிக் கொண்டு, வெடுக்கென நடந்து சென்றவளை பார்த்தவன் பெருமூச்சு விட்டான்.

இவளை மீட்க நினைத்து வந்த கந்தன், இப்போது சஸ்பென்ஸனில் இருக்கிறான். சாரா அவனது வேலையை காட்டியிருந்தான்.

“சாணக்கியராஜ் கூட கப்பல்ல ஏன் போனீங்க?” என்று கேட்டு கந்தனை ஒருவழியாக்கி, சஸ்பென்ஸனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

சாரா, “குழந்தை பிறந்தா சொல்லி அனுப்புங்க எஸ்பி” என்று நக்கலாக செய்தி ஒன்றை அனுப்பி விட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்திற்கு, ராகவியை நினைத்து கவலையாக இருந்தது. அவளை சுற்றி எவ்வளவோ நடக்கிறது. எதையும் கவனிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த பெண்ணின் மீது காதல் கொண்ட சாரா ஒரு பக்கம்.

ஏகாம்பரம் எல்லாவற்றையும் நினைத்தபடி வேலை பார்க்க, “ஏகா..” என்று ராகவி அலறும் சத்தம் கேட்டது.

வேலையை அப்படியே போட்டு விட்டு அவளிடம் ஓடினான். தொலைகாட்சியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் வந்ததும் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.

தொலைகாட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அதில் அனுபமா காவல்துறை உடையில் நின்று, வைரவரை கைது செய்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.

ஏகாம்பரத்திற்கு முன்பே விசயம் தெரியும் என்பதால், அவன் அதிரவில்லை. ராகவியை பார்த்தான்.

“இவ.. போலீஸா?” என்று ராகவி அதிர்ச்சியோடு கேட்க, ஏகாம்பரம் தலையாட்டி வைத்தான்.

“அப்புறம் ஏன் இங்க வேலை பார்த்தா?”

“உளவு பார்க்க வந்துருக்கா. ஐயாவ பத்தின‌ டீடைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய் இப்ப அரெஸ்ட் பண்ணிட்டா”

“பச்ச துரோகி” என்ற ராகவி வெறுப்பை உமிழ, ஏகாம்பரம் ஆச்சரியமாக பார்த்தான் அவளை.

சாதாரண ஆட்கள் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்தால் பாராட்டவே செய்வார்கள்.

சாதாரண பெண் தான் ராகவி. ஆனால் அவள் அனுபமாவை துரோகி என்றது ஆச்சரியமாக இருந்தது. ராகவிக்கும் இந்த நிழல் தொழிலை கண்டு பயம் தான். அப்படி இருக்க அனுபமாவை துரோகி என்றால்?

“என்ன சொன்ன?”

“இவ தான் துரோகி. எனக்கு இவள பார்க்கும் போது எல்லாம் பிடிக்கல. இவ்வளவு பெரிய துரோகியா இவ? ச்சீ”

“அவ போலீஸ் ராகவி”

“இருக்கட்டுமே. கடவுளா கூட இருக்கட்டும். போலீஸ்னா அந்த வேலையில துரோகம் இருக்கனும்னு சட்டமா என்ன?”

“அவ வேலை அப்படித்தான்”

“எப்படித்தான்? போலீஸ்னா கேஸ தேடனும். பிடிக்கனும். கோர்ட்ல போய் நிறுத்தனும். அதான? ஒருத்தவங்க நம்பிக்கைய தந்திரமா சம்பாதிச்சு, அத யூஸ் பண்ணி அவங்க முதுகுல குத்துறது போலீஸ் வேலையா? அதுக்கு நான் தப்பு தான் பண்ணுறேன்னு தைரியமா பேசுறவங்க மேல். இவள என்னைக்காச்சும் பார்த்தேன்னா இருக்கு”

ராகவி பல்லைக்கடிக்க, ஏகாம்பரம் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

ராகவி கத்தியதை கேட்டு ஓடி வந்தது ஏகாம்பரம் மட்டுமல்ல, சாராவும் தான். காரை வாசலில் நிறுத்தியவன், அவள் அலறியது கேட்டு காரை கூட பூட்டாமல் ஓடி வந்திருந்தான்.

அவள் பேசியதை கேட்டு அவன் அருகே வர, ஏகாம்பரம் இடத்தை காலி செய்திருந்தான்.

“இப்ப ஏன் அவ மேல கோபப்படுற? அவ வேலைய தான செஞ்சா?” என்று சாராவும் கேட்டு விட்டு அவளருகே அமர, “நீங்க என்ன அவளுக்கு சப்போர்ட்டா?” என்று குதித்தாள்.

“இல்ல. ஆனா அவளோட வேலை இதான். எங்கள பத்தி தான் உனக்கு தெரியுமே? கடத்துவோம். கொலை பண்ணுவோம். அத தூக்கி சுறாவுக்கு போட்டுருவோம்”

அவன் சிரிப்போடு சொல்ல, சாராவை முறைத்துப்பார்த்தவள், ஒன்றும் பேசாமல் வெடுக்கென எழுந்து சென்று விட்டாள். சாரா தொலைகாட்சியை அணைத்து விட்டு அவளை பின்தொடர்ந்து சென்றான்.

வீட்டின் வெளியே, அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செடிகளின் இலையை எல்லாம் பிடுங்கி போட்டுக் கொண்டிருந்தாள். இருக்கும் கோபத்தை எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு இலையாக பிடுங்கி எறிந்து கொண்டிருக்க, சாரா அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“இப்ப ஏன் இந்த செடிய பிச்சுட்டு இருக்க?” என்று கேட்க, “ம்ம்.. ஒருத்தர் தலைய பிய்ச்சு போட முடியல. அதான் இத பிய்ச்சுட்டு இருக்கேன்” என்றவள் கையை வெடுக்கென உருவிக் கொண்டாள்.

“யார் மேல கோபம் உனக்கு?”

“உங்க மேல தான்”

“ஏன்?”

“நீங்க ஏன் நல்லவரா இல்ல?”

“அப்படினா?”

“போங்க உங்களுக்கு புரியாது” என்றவளின் முகம் சுருங்கியது.

“நான் நல்லவனா இருந்தா என்ன பண்ணிருப்பா?” என்று கேட்டு, அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவள் பதில் சொல்லாமல் நிற்க, “சொல்லு. நான் நல்லவனா இருக்கனுமா?” என்று கேட்டான்.

“தெரியல. ஆனா கொஞ்சம் பயமா இருக்கு”

“ஏன்?”

“எல்லாரும் உங்கள கொல்ல பார்க்குறாங்களே”

“அதுக்கு?”

“எனக்குனு யாருமே இல்ல. புதுசா நீங்க ஏகாம்பரம் எல்லாம் கிடைச்சீங்க. உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுனா மறுபடியும் நான் அனாதை தான்”

முடிக்கும் முன்பே கண்கலங்கி விட்டது அவளுக்கு.

“கவலைப்படாத. நான் செத்துப்போயிட்டா ஆவியா வந்தாச்சும் உன் கூட இருப்பேன்” என்று சொல்லி வைத்தான்.

அவள் முகத்தை மேலும் சுருக்க, “இப்ப எதுக்கு இப்படி இருக்க? எப்பவும் போல இரு. நான் கெட்டவன் தான். என்னை கொல்ல ஒரு ஊரே சுத்தது தான். அதுக்காக என்னால எதுவும் பண்ண முடியாது. இதான் நான். இதான் சாரா.” என்றவன் அவளை விட்டு விட்டு சென்று விட்டான்.

செல்பவன் முதுகை அமைதியாக பார்த்தவளுக்கு, மனம் பிசைந்தது. அவளுக்கென ஒரு உறவாக அவனை தான் நினைத்திருந்தாள்.‌ அவனையும் கடவுள் பறித்துக் கொள்வாரோ? என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, மனம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே வேலை செய்ய, ஏகாம்பரம் விசித்திரமாக பார்த்தான்.

“ராகவி..” என்றதும், “ம்ம்” என்று திரும்பிப் பார்த்தாள்.

“நீ ராகவி தான? இல்ல காத்து கருப்பு எதாவது அடிச்சுருச்சா? ஏன் இவ்வளவு அமைதியா இருக்க?”

அவள் பதில் சொல்லாமல் தரையை பார்த்தாள்.

“இந்தாமா.. என்னை பாரேன். என்ன பிரச்சனை?” என்று அக்கறையாக கேட்டான்.

“நான் அன்னைக்கே இங்க இருந்து போயிருக்கனும் ஏகாம்பரம்”

‘ஆரம்பிச்சுட்டாடா’ என்று நினைத்தவன், “ஏன்?” என்று கேட்டான்.

“அப்படி போயிருந்தா எப்பவும் போல நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்துருப்பேன். ஆனா இப்ப…”

“இப்ப என்ன?”

“எனக்கு நீங்க எல்லாம் இருக்கீங்கனு நினைச்சு சந்தோசப்பட்டா… பாஸ யாரோ கொல்ல பார்க்குறாங்க”

“அவருக்கு எப்பவும் மிரட்டல் இருக்கும். சாகுறதுக்கெல்லாம் அவர் பயந்ததே இல்ல”

“என்ன இவ்வளவு ஈசியா சொல்லுறீங்க? கூடவே இருந்தவங்க சாகுற வலி தெரியுமா? என் அம்மா பாட்டி ரெண்டு பேரும் செத்தப்போ நான் எப்படி அழுதேன் தெரியுமா?”

“சரி.. கஷ்டம் தான்”

“பாஸோட கையில கட்டுப்போட்டுருக்காரு தெரியுமா? கேட்டா புல்லட் பட்டதுனு சொல்லுறாரு. திக்குனு இருந்துச்சு”

“ம்ம்”

“ரெண்டு நாளா அந்த ஐலாண்ட்ல இருக்கப்ப, நான் சந்தோசமா இருந்தனானு கூட தெரியாது. ஆனா பயந்துட்டு இருந்தேன். எப்ப யாரு வந்து பாஸ கொல்லுவாங்களோனு”

“ஹேய் லூசு..” என்று அதட்டிய ஏகாம்பரம், “அப்படி எல்லாம் யாரும் உடனே வந்து அவர கொல்ல முடியாது. சும்மா பயந்துட்டு இருக்காத” என்றான்.

“என் கவலை எனக்கு.”

“நீ பாஸ கல்யாணம் பண்ணிக்க போற மாதிரி ஃபீல் பண்ணுற?”

“கரெக்ட். இதுக்காகவே அவர நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்ல” என்று பட்டென கூற, ஏகாம்பரம் அதிர்ந்தான்.

“பாஸ் எனக்கு கடன் கொடுத்தவர் நான் கடன்காரி. அவ்வளவு தான். இதுக்கு மேல எதுவும் கிடையாது” என்று திட்டவட்டமாக சொன்னவள், முகத்திலும் தீவிரம் இருந்தது.

“ஏன் இந்த திடீர் முடிவு?”

“திடீர்னு எல்லாம் இல்ல. எப்பவும் இருக்கது தான். அப்பவே சொன்னேன்ல.. நான் நிம்மதியா வாழனும். அதுக்கு உங்க பாஸ் வாழ்க்கை எல்லாம் எனக்கு செட்டாகாதுனு. இப்பவும் அதான்” என்று முடித்து விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.

வழக்கத்திற்கு மாறாக அவள் அமைதியாக இருந்ததே, ஏகாம்பரத்தை கவலைப்பட வைத்தது.

சாராவிடம் இதை சொல்வதா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்க, மாடியிலிருந்து தடதடவென சாரா இறங்கி வரும் சத்தம் கேட்டது.

ஏகாம்பரம் உடனே ஓடிச் சென்று பார்க்க, ராகவியும் பின்னால் வந்தாள். சாரா இருவரையும் பார்க்கவில்லை. அவன் வாசலை நோக்கி ஓடி விட, இருவரும் புரியாமல் அவன் பின்னால் ஓடினர்.

காசி காரை எடுக்கும் முன்பே சாரா காரை எடுத்துக் கொண்டு சென்று விட, “என்னாச்சு?” என்று ராகவி தான் கேட்டாள்.

அவள் பக்கம் திரும்பிய காசியின் கண்கள் கலங்கியிருந்தது.

“வைரவர் ஐயா இறந்துட்டாராம்” என்று இடியை இறக்கினான்.

ராகவி அதிர்ச்சி தாங்காமல் இரண்டு கையாலும் வாயை மூடிக் கொள்ள, ஏகாம்பரமும் அதிர்ந்தான்.

“என்ன! எப்போ?” என்று ஏகாம்பரம் வினவ, “இப்ப தான் நியூஸ் வந்துச்சு” என்றவன், “அந்த அனுபமா அவர கொன்னுட்டா போல ஏகா” என்றான்.

காசி கோபமாக பேசியபடி கண்ணை துடைக்க, ராகவிக்கு அனுபமாவின் மீது மலையளவு வெறுப்பு வளர்ந்தது.

“நாம அங்க போகலாமா?”

“ம்ஹும். ஜெயில்ல இருக்க ஒரு போலீஸ் சொல்லித்தான் விசயம் தெரியும். இன்னும் மீடியாவுக்கு சொல்லல.”

“பரவாயில்ல நாம போவோம்”

“ராகவி” என்று ஏகாம்பரம் தடுக்க, “போவோம்னு சொல்லுறேன்ல?” என்றவள் விடுவிடுவென உள்ளே சென்று, செருப்பை மாட்டிக் கொண்டு வந்தாள்.

காசிக்கும் அங்கு நிற்க விருப்பமில்லை. அதனால் அவன் காரை எடுக்க, ஏகாம்பரமும் அவர்களோடு கிளம்பி விட்டனர்.

வைரவரை வைத்திருந்த மருத்துவமனைக்கு சென்றனர். காசி காரை சரியாக நிறுத்தும் முன்பே கதவை திறந்தவள், இறங்கி உள்ளே ஓடினாள்.

வாசலில் நின்றிருந்த இரு காவலர்களால் கூட அவளை பிடிக்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக ஓடி விட்டாள்.

சாரா தூரமாக நின்றிருந்தான். அவனை சுற்றி சிலர் நின்றிருந்தனர். அவனை நோக்கி நடந்தவள் கண்ணில், தனியாக வந்து கொண்டிருந்த அனுபமா பட்டாள்.

உடனே அவளை நோக்கிச் சென்றவள், “துரோகி.. ஏன்டி அவர கொன்ன?” என்று ஆவேசமாக கேட்டாள்.

அவளது ஆவேசத்தை அலட்சியத்துடன் பார்த்த அனுபமா, “நீ யாரு என்னை கேள்வி கேட்க?” என்று கேட்டு வைத்தாள்.

‌தொடரும்.

Leave a Reply