சாரா 29
![]()
கந்தனை வரவேற்ற போது, அவன் சாராவைப் பார்க்க வந்திருப்பதாக தான் நினைத்தாள் ராகவி.
ஆனால் சாராவைப் பற்றி எதுவும் கேட்காமல், அவளோடு பேச ஆரம்பிக்க அவளும் அமர்ந்து பேசினாள்.
குறிஞ்சி சிரித்த முகத்துடன் பேசவும், அவளுக்கும் அவளை பிடித்திருந்தது.
“உன்னை பத்தி சொல்லேன். உன் அம்மா அப்பா எல்லாம் எங்க?” என்று குறிஞ்சி கேட்க, “எனக்குனு யாரும் இல்ல. எல்லாரும் போய் சேர்ந்துட்டாங்க” என்று கையை விரித்தாள் ராகவி.
“உனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையா?”
“இல்லயே”
“உன் அப்பாவோட மூத்த தாரத்தோட பையன் உனக்கு அண்ணன் இல்லையா?” என்று கேட்டு நிறுத்த, ராகவி அவர்களை கூர்ந்து பார்த்தாள்.
யாரும் இல்லை என்று சொன்னால், முதல் தாரம் வரை விசாரிக்கிறார்களே? இவர்களுக்கு எப்படித் தெரியும்? என்ற கேள்வி தோன்ற, நேராக கேட்டு விட்டாள்.
“இந்த விசயம் எப்படி உங்களுக்கு தெரியும்?”
அவளது சந்தேகத்தை பார்த்து விட்டு, கந்தனை ஒரு பார்வை பார்த்தாள் குறிஞ்சி.
“அந்த அண்ணன் இவர் தான்” என்று வந்த விசயத்தை உடைத்து விட்டாள்.
“ஹான்!” என்று அதிர்ந்து போனவளின் விழிகள் விரிந்த நிலையில் உறைந்து விட, “இவர உனக்கு ஞாபகம் இருக்காதுல? ரொம்ப சின்ன வயசுல தான் உன்னை இவரும் பார்த்துருக்காரு” என்றாள் குறிஞ்சி.
ராகவி பேச்சற்று இருவரையும் மாறி மாறிப்பார்க்க, “ரொம்ப சாக்கா இருக்கா?” என்று கேட்டு புன்னகைத்தாள் குறிஞ்சி.
ராகவி தலையை ஆட்டி விட்டு, “அன்னைக்கு பார்க்கும் போது சொல்லவே இல்லையே?” என்று கந்தனிடம் கேட்டாள்.
“அப்ப அவருக்கும் தெரியாது. உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு தேடிப்பார்த்து தான் கண்டு பிடிச்சோம்” என்று குறிஞ்சி இடையே புகுந்து பேசினாள்.
அப்போதே தெரியும் ஈன்று சொன்னால், எப்போதிலிருந்து தெரியும்? என்ற கேள்வி வரும். வீணாய் முருகனுக்கு கந்தன் கொடுத்த தண்டனை கதையும் வரும்.
இப்போதைக்கு ராகவிக்கு இது எதுவும் தெரியத்தேவையில்லை என்பதால், அதை அப்படியே மூடி மறைத்து விட்டு, புதிதாய் தெரிந்தது போல் காட்டிக் கொண்டனர்.
“ஹய்யோ! அன்னைக்கு பாஸ் கூட நீங்க எனக்கு அண்ணன் மாதிரினு சொன்னாரு. நிஜம்மாவே அண்ணனாகிட்டீங்க. இத பாஸ் கேட்டா சாக் ஆகிடுவாருல?”
ராகவி குதூகலமாக பேச, “அவருக்கு ஏற்கனவே தெரியும்” என்றான் கந்தன்.
“தெரியுமா?”
“ம்ம். நான் சொன்னேன்.”
“என் கிட்ட சொல்லவே இல்ல?”
“இடையில தான் அவரோட அப்பா இறந்துட்டாங்கள்ள? அதுல மறந்துருப்பாரு” என்று மீண்டும் குறிஞ்சியே சமாளித்தாள்.
“ஓஓ.. ஆமா.. வைரவர் ஐயா இப்படி போவாங்கனு நினைச்சே பார்க்கல யாரும்”
“வருத்தம் தான். அதுல அவரு மறந்துருப்பாரு. ஆனா நாங்க உன்னை பார்க்கனும்னு சொன்னோம். உடனே வர சொல்லிட்டாரு”
ராகவி புதிதாய் உறவுகள் கிடைத்ததில் புன்னகைக்க, “நீ இங்க வேலை பார்த்துட்டு இருக்கியாமே?” என்று கேட்டாள் குறிஞ்சி.
வந்த விசயத்தை எப்படியாவது மனைவி நடத்தி காட்டி விடுவாள் என்று தெரிந்ததால், கந்தன் அதிகம் பேசாமல் இருந்து கொண்டான்.
“ஆமா.. வேலை தான் பார்த்துட்டு இருந்தேன்”
“இருந்தேன்னா? இப்ப பார்க்கலயா?”
“இல்ல. இனி பார்க்க தேவையில்லனு பாஸ் சொல்லிட்டாரு”
“ஓஓ அப்ப இங்க இருந்து கிளம்பிடுவியா?”
“ம்ம் போகனும்.
“அப்ப எங்க வீட்டுக்கு வரலாம்ல? நீ தனியா ஒரு வீட்டுல தங்கி இருந்தியாமே.. தனியா இருக்கதுக்கு எங்க கூட வாயேன்” என்று கையைப்பிடித்துக் கொண்டு கேட்டாள் குறிஞ்சி.
எப்படியோ சுற்றி வளைத்து, விசயத்துக்கு வந்து விட்டாள் குறிஞ்சி.
ராகவி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழிக்க, கந்தன் அவளது பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
இன்னும் அவள் உறுதியாய் ஒரு முடிவை எடுக்காத பட்சத்தில், அவர்களோடு வருவதாக சொல்லவும் முடியாமல் தவித்தாள்.
“எங்களுக்கும் பெருசா சொந்தமெல்லாம் இல்ல. இவரோட மாமா வீட்டுல தான் சொந்தம் நிறைய இருக்கு. ஆனா இங்க நாங்க தனியா தான் இருக்கோம். இப்ப சொந்தம்னு நீ இருக்கியே. எங்க கூட இருக்கலாம்ல?”
குறிஞ்சியின் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கியவள், “நான் பாஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனுமே” என்றாள்.
“போன் போடு” என்றதும் கைபேசியை தேடிச் சென்றவள், சாராவின் எண் இல்லாததால் ஏகாம்பரத்தையே அழைத்தாள்.
“சொல்லு ராகவி”
“ஏகா.. பாஸ்க்கு கால் பண்ணி வீட்டுக்கு வர முடியுமானு கேட்குறீங்களா?”
“ஏன்?”
“வீட்டுல கெஸ்ட் வந்துருக்காங்க”
“யாரு?”
“கந்தன் போலீஸ் சார்.”
அவளுக்கு உடனே அண்ணன் என்று அறிமுகப்படுத்த வரவில்லை.
ஆனால் ஏகாம்பரம் விசயத்தை புரிந்து கொண்டான். அதைக்காட்டிக் கொள்ளாமல், “பாஸ் எதாவது வேலையா இருப்பாரு. நான் வரட்டா?” என்று கேட்டான்.
“வாங்க. ஆனா பாஸுக்கும் கால் பண்ணுங்க” என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
குறிஞ்சி வந்தவளை கேள்வியாக பார்க்க, “ஏகாம்பரம் வருவாரு..” என்றாள்.
யாரென தெரியாமல் அவள் விழிக்க, “அவரும் இங்க என்னை மாதிரி வேலை பார்க்குறவரு” என்றாள்.
“ஓஓ.. சரி உட்காரு.”
அவள் அமர்ந்ததும், “நீ எப்படி இங்க வந்த? உன் அம்மா எங்க?” என்று விசாரித்தாள்.
தெரிந்திருந்தாலும் பேச்சுக் கொடுக்கவே விசாரித்தாள். ராகவிக்கு தான் பேசுவதில் தயக்கம் இருந்தது இல்லையே. அவர்கள் உறவினர் என்று வேறாகி விட, நன்றாகவே பேசினாள்.
அவளது வரலாறை எல்லாம் குறிஞ்சி விசாரித்து முடிக்க, ஏகாம்பரம் வந்து விட்டான்.
கந்தனை பார்த்து மரியாதையாக தலையசைத்தவன், ராகவியை பார்த்தான்.
அவள் ஏகாம்பரத்திடம், சந்தோசமாக தனது புது அண்ணனை அறிமுகம் செய்தாள்.
“அப்படியா?” என்று தெரியாதது போல் கேட்டு, புன்னகைத்து வைத்தான்.
“பாஸ் வரலயா?”
“அவர் எதோ வேலையில இருக்காரு போல” என்றவன், “நீ வேற வீடு பார்க்கனும்னு சொன்னல? பார்க்கலாமா?” என்று கேட்டான்.
ராகவி சில நொடி யோசித்து விட்டு, “வேற வீடு வேணாம் ஏகா. நான் அண்ணன் அண்ணி கூட போகப்போறேன்” என்று விட்டாள்.
எதிர்பார்த்தது தான் என்றாலும், ஏகாம்பரத்திற்கு வருத்தமாகத்தான் இருந்தது. கந்தனின் முகமும் குறிஞ்சியின் முகமும் சட்டென மலர்ந்தது.
காலையில் ராகவியைப்பற்றி குறிஞ்சியிடம் சொல்லும் போது, ஆச்சரியமாக கேட்டிருந்தாள்.
“ஏங்க முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு நடந்துருக்குமா?” என்று கேட்டு முறைக்கவும் செய்தாள்.
“நீயே ரெஸ்ட் எடுக்க ஊருக்கு போயிட்ட. நீயும் இல்லாத வீட்டுல ராகவிய எப்படி கூட்டுட்டு வர்ரது? நான் பேசி என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா? சரி நீ திரும்பி வந்ததும் பேசலாம். இல்லனா பாப்பா பிறந்ததும் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். அந்த ஏரியா நல்ல சேஃபான ஏரியா தான் குறிஞ்சி. அவளுக்கு பிரச்சனை வெளியில இருந்து வரல. உள்ள இருந்தே வந்துருக்கு”
“ஆனா இப்ப அந்த சாரா கூட இருக்காளே. அதுவும் பிரச்சனை தான?”
“ஆமா. அவன் பொண்ணுங்க விசயத்துல நல்லவனா இருந்தாலும், ராகவிய அவனுக்கு பிடிச்சுருக்கு போல. ஆனா அவன் தொழிலுக்கு ராகவிய கல்யாணம் பண்ணா, தினம் தினம் மரண வாழ்க்கை தான். அத சொன்னதும் புரிஞ்சுட்டு இப்ப அவனே அனுப்புறேன்னு சொல்லிட்டான்”
“உங்க தங்கச்சி.. ராகவி.. நாம கூப்பிட்டதும் வருவாளா?”
“வரனும். அந்த மாதிரி நீ தான் பேசனும்”
“கரெக்ட் நான் தான் பேசனும். நீங்க பேசுனா அக்யூஸ்ட் கிட்ட பேசுற மாதிரில பேசி வைப்பீங்க?” என்று கிண்டலாக சொல்லி விட்டு, என்ன பேசுவது? எப்படிப்பேசுவது? என்று யோசித்து முடித்து விட்டுத்தான் கிளம்பி இருந்தனர்.
இருந்தாலும், ராகவி உடனே தங்களை நம்பி வருவாள் என்ற நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. ஆனால், சாராவின் உதவியுடன் காரியத்தை முடிக்கலாம் என்று நினைத்திருந்தனர்.
எதற்கும் தேவையில்லாமல், ராகவி வருவதாக சொல்லி விட்டாள்.
“அதுவும் நல்லது தான். நீ தனியா பயந்துட்டு இருக்க வேணாம் பாரு” என்று சமாளித்துக் கொண்டு கூறினான் ஏகாம்பரம்.
“ஆமா ஏகா. மறுபடியும் எப்படித்தனியா இருக்கப்போறோம்னு பயந்துட்டே இருந்தேன். இவங்க போலீஸ் வேற.. சேஃப்பா இருக்கலாம்” என்று கூற, ‘இங்க கூட சேஃபா தானமா இருந்த? உங்கண்ணன் தான், உனக்கு பாதுகாப்பு இருக்காதுனு கூட்டிட்டு போக பார்க்குறாரு’ என்று நினைத்துக் கொண்டான்.
“உங்க பாஸ கூப்பிட்டு விசயத்த சொல்லுங்களேன். நாளைக்கே கூட வீடு மாறிடலாம்” என்று குறிஞ்சி ஆர்வமாக பேச, “ஆமா பாஸ் எப்ப தான் வருவாரு?” என்று கேட்டாள்.
“தெரியலமா எதாவது வேலையில இருப்பாரு” என்ற ஏகா, “இவங்களுக்கு டீ காபி எதாவது போட்டுக் கொடுத்தியா?” என்று ராகவியை கேட்டான்.
“இல்ல ஏகா. எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் போட்டாலும் நல்லா இருக்காது. நீங்க போடுங்க”
ஏகா உடனே நடக்க, “வேணாம் ஏகாம்பரம். நாங்க சாப்பிட்டு தான் வந்தோம். இந்த நேரத்துல வேற எதுவும் குடிச்சு பழக்கம் இல்ல. சாரா வருவானானு மட்டும் கேட்டு சொல்லு” என்று கந்தன் தடுத்து விட்டான்.
ஏகாம்பரம் சாராவை அழைக்க, அவனுக்கு அழைப்பு செல்லவில்லை. காசியை அழைத்தான். அவன் உடனே எடுத்தான்.
“பாஸ் எங்கடா?”
“அவர் முக்கியமான வேலையில இருக்காரு. ஏன்?”
“எஸ்பி சார் ராகவிய கூட்டிட்டு போக வந்துருக்காரு.”
“ம்ம்.. பாஸ் தான் வந்து பேசச்சொன்னாரு. ராகவிய கூட்டுட்டு கிளம்புனா அனுப்பி விடு.”
“அவ பாஸ பார்க்கனும்னு சொல்லுறா”
“இன்னைக்கு முடியாது. வேலை இருக்கு”
“சரி.” என்றதோடு வைத்து விட்டான்.
மூவரும் அவனை கேள்வியாக பார்க்க, “பாஸ் வேலையில இருக்காரு. இன்னைக்கு வர முடியாதாம்” என்றான்.
“சரி விடுங்க. நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றாள் ராகவி.
அவள் உடனே கிளம்புவதாக இல்லை என்று புரிந்தது.
“நீ எப்பமா எங்க வீட்டுக்கு வர்ர?” என்று குறிஞ்சி கேட்க, “அந்த வீட்ட காலி பண்ணனும். பண்ணிட்டு வர்ரேன்” என்றாள்.
“அத ஒரு நாள்ல முடிச்சுடலாம். நீ எப்ப வர்ர?”
“நாளைக்கு பாஸ் வந்ததும் சொல்லிட்டு வர்ரேன்.”
“அண்ணி… வர்ரேன் அண்ணி..”
“ஓகே வர்ரேன் அண்ணி..”
“சமத்து” என்று கன்னம் பிடித்துக் கொஞ்சியவள், கந்தனுடன் கிளம்பி விட்டாள்.
ராகவி வாசலுக்குச் சென்று அவர்களுக்கு கையாட்டி விட்டு வந்தாள்.
“யாருமே இல்ல இல்லனு ரொம்ப ஃபீல் பண்ணுவேன் ஏகாம்பரம்.. இப்ப சொந்தமா ஒரு அண்ணன் அண்ணி அவங்களோட பாப்பா.. ஒரு குடும்பமே இருக்கு எனக்கு” என்று குதித்துக் கொண்டு சொன்னவளை பாசமாக பார்த்து வைத்தான் ஏகாம்பரம்.
அவளது சந்தோசம் அவனையும் புன்னகை செய்ய வைத்தது. அவளை அவளே அனாதை என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொள்வதன் காரணம், அந்த உணர்வு அவளை பலமாக தாக்கியிருந்தது தான்.
அவளால் அந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் சொல்லி, தன்னை தானே தேற்றிக் கொண்டு வாழ்ந்தாள். இப்போது உறவுகள் கிடைத்ததும், அவளது சந்தோசம் எல்லையை கடந்தது.
இல்லாதவனை விட, பெற்று இழந்தவனுக்குத் தானே அந்த வலி புரியும். அவளது கஷ்டத்துக்கு மருந்தாக அமைந்தது இந்த புது உறவு. அதை ஆசையுடன் அவள் வரவேற்றாள்.
ஆனால் சாராவின் மனம், அந்த சந்தோசத்தினால் உடைந்து கொண்டிருந்தது.
ராகவி சாராவிடம் சொல்லி விட்டு தான் கிளம்ப வேண்டும் என்று நினைத்தாள். நினைப்பது நடப்பதில்லையே? சொல்லாமலே கிளம்ப வேண்டிய நிலையில், சாராவே அவளை தள்ளியிருந்தான்.
மீண்டும் அவனை எப்போது சந்திப்பது? என்ற கேள்வியை மனதில் தாங்கியபடி ராகவி கிளம்ப, அவளது கேள்விக்கு விதி சிரிப்பை தான் பதிலாக கொடுத்தது.
இங்கு ஒரு காவல்துறை அதிகாரி, சாராவின் வாழ்க்கையில் புகுந்தது போல், அவர்களும் ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்வில் விளையாட ஆரம்பித்திருந்தனர்.
விளையாட்டுப்பொருளாய் சிக்கியது என்னமோ, “அனுபமா உதவி ஆணையர்..!” என்றவள் தான்.
தொடரும்.
