சாரா 3

Loading

“சார் ப்ளீஸ்.. நான் போகனும்”

“சொல்லாம போக முடியாது”

“என்னை காப்பாத்துனீங்க தான். அதுக்கு நன்றிக்கடன் பட்டுருக்கேன் தான். ஆனா இது என் பர்ஷனல் சார்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

அவள் கெஞ்ச, ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான்.

“நீ வேலை பார்த்த கடையோட முதலாளி செத்து போயிட்டான்” என்று உணர்ச்சியே இல்லாத முகத்துடன் கூறினான்.

கேட்டதும் ஒரு நொடி அதிர்ந்த ராகவி, அடுத்த நொடியே நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவள் முகத்தில் மறைக்க முடியாத நிம்மதி தோன்றியது அவன் கண்ணிலும் விழுந்தது.

“அவன் தான உன்னை அப்படி பண்ணது?” என்று கேட்டவன், பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு நின்றான்.

அவனிடமிருந்து பார்வையை தளைத்துக் கொண்டு அவள் மௌனமாக, “உன் மாமா எங்க இருப்பான்?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

புரியாமல் நிமிர்ந்து பார்த்தவள், சட்டென இரண்டு கையாலும் வாயை மூடிக் கொண்டு, “நீங்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

அவளது அதிர்ச்சியை புரியாமல் பார்த்து அவன் புருவம் உயர்த்த, “நீங்களா.. அவன.. கொன்னு…” என்று கேட்க முடியாமல் அவள் தடுமாறினாள்.

இவன் யாரென்று தான் அவனுக்கு தெரியுமே. இவனே கொன்று விட்டானோ? மாமாவையும் கொல்வதற்காக கேட்கிறானோ? என்று அவள் பதறிப்போய் பார்க்க, அவள் முகத்திலேயே மனவோட்டத்தை படித்தவன் இடவலமாக தலையசைத்தான்.

சாணக்கியன் மனதில் இதற்காக அதிருப்தி எழுந்தது தான். அவனை கொல்லத்தான் சாணக்கியனும் கிளம்பினான். ஆனால் அவன் போகும் முன்பே எமன் முந்திக் கொள்ள, வெறும் கையோடு திரும்பி வந்தான்.

சாணக்கியன் செய்யவிவ்லை என்றதும் அவளது முகத்தில் இருந்த பதட்டம் சற்று குறைந்தது.

“அவன் எல்லாம் எதுக்கு உயிரோட இருந்துட்டு? செத்து தொலையட்டும்” என்றாள் வெறுப்பாக.

“அவன் தான் உன்னை அப்படி பண்ணதா? அவன் வீட்டுக்கு போனியா நீ?”

“ம்ம்”

“ஏன் போன?”

“சார் இது அடுத்தவங்க பர்ஸ்னல் ப்ளீஸ் கேட்காதீங்க”

அவள் எதையும் சொல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த, “சொல்ல மாட்ட?” என்று அழுத்தமாக கேட்டான்.

அவனது குரல் மாற்றத்தில் திடுக்கிட்டு அவள் பார்க்க, அந்த பார்வை அவனை உடனே தணித்தது.

‘ஏற்கனவே பயந்து போயிருக்கவள ரொம்ப பயமுறுத்த வேணாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தான்.

“சார்.. சாரா சார்.. சார் நான் இங்க இருந்து போகனும்” என்று அவள் பேசிக் கொண்டே இருக்க, அவன் நிற்காமல் சென்று விட்டான்.

தன் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்த சாணக்கியன், ராகவியை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

இந்த மூன்று நாட்களாக அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. எந்த வேலையில் இருந்தாலும் வீட்டில் இருக்கும் இவள் நினைவு தான் அவனை சுற்றிக் கொண்டே இருந்தது. இன்று அவள் சரியாகி விட்டாள் என்றதும், உடனே பார்க்க வந்து விட்டான்.

நடந்ததை கணித்திருந்தாலும், அவளாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான். அவள் காயத்தின் காரணமாக ஆடை அணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவளை நேற்று முழுவதும் பார்க்காமல் இருந்து விட்டான்.

இன்று அவளை சந்தித்து விசாரிக்கலாம் என்றால், வாயை திறக்க மறுக்கிறாள்.

“ராஜ்” என்று பூபதி கதவை தட்ட, “வா” என்று குரல் கொடுத்தான்.

ஊருக்கே சாராவாக இருந்தாலும், பூபதிக்கு எப்போதுமே ராஜ் தான்.

“ராகவியோட ஃபைல்” என்று நீட்ட, வாங்கி திறந்து பார்த்தான்.

பூபதி அவன் முன்பு அமர்ந்து கொள்ள, சாணக்கியன் ஃபைலை படித்தான்.

ராகவியின் விவரங்கள் அக்குவேறு ஆணிவேராக இருந்தது. அவள் பிறப்புச் சான்றிதழின் நகல் உட்பட.

“அந்த பொண்ண என்ன செய்ய போற?”

“அத ஏன் நீ கேட்குற?”

“ராஜ்.. இது என்ன புது பழக்கம்? அந்த பொண்ண காப்பாத்தினா ஹாஸ்பிடல்ல கொண்டு போய் போட வேண்டியது தான? வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பக்கத்து ரூம்ல வச்சுருக்க. எப்ப இருந்து இப்படி மாறுன?”

“அத உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல”

“சொல்லலனா போ. அவள இங்க இருந்து அனுப்பி விடு போதும்.”

“நோ”

“என்னது?”

“அவ இனிமே இங்க தான் இருப்பா.”

“ராஜ்!”

“நீ கிளம்பு. லாயர் உன்னை பார்க்கனும்னு சொன்னாரு”

“ராஜ் நீ தேவையில்லாம பண்ணிட்டு இருக்க”

“உன்னை போனு சொன்னேன்”

இதற்கு மேல் பேச முடியாது என்று பூபதிக்கு புரிந்து போக, அவனை முறைத்து விட்டு எழுந்து சென்றான்.

சாணக்கியன் சிறியதாய் இருந்த ராகவியின் படத்தை பார்த்தான். நீளமான கூந்தலோடு அறியா பிள்ளையாய் நின்றிருந்தாள்.

இவளிடம் அப்படி என்ன இருக்கிறது? என்று மீண்டும் மீண்டும் யோசித்து பதில் கிடைக்காமல் தடுமாறினான்.

“இவள விட்டு தள்ளி இரு” என்றது மூளை.

“இவளால எனக்கு எந்த ஆபத்தும் வராது” என்றது மனம்.

ஆனால் மூளை அதை நம்பவில்லை.

“பெண்கள் பேய்கள்” என்று அடித்துச் சொல்லியது.

“இவ முகத்த பார்த்தா பேய் மாதிரி இல்லையே.. எந்த மேக் அப் உம் இல்லாத அழகான முகம்” என்று மனம் ரசித்தது.

“பெண்கள் என்றாலே ஆபத்துனு சொல்லிக் கொடுத்தத மறந்துட்டியா? இல்ல ஒருத்தி செஞ்சத மறந்துட்டியா?”

மூளை உறும, சட்டென அவன் முகம் இறுகிப்போக, பட்டென அந்த ஃபைலை மூடி வைத்து விட்டான்.

அவனுக்கு அவளை அனுப்பவும் மனமில்லை. அவளை வைத்திருக்கவும் முடியவில்லை. மனதிற்கும் மூளைக்கும் இடையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

ராகவியின் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவனை வேலை கலைத்தது.

காசி வந்து நின்றான். காசி காரோட்டி மட்டுமல்ல, சாணக்கியனின் அத்தனை முக்கியமான வேலையின் விபரமும் அவனிடம் தான் இருக்கும். ஆனால் ஒன்றும் தெரியாத காரோட்டியாகவே தன்னை வெளியே காட்டிக் கொள்வான்.

“கிளம்பனும் பாஸ்” என்று வந்து நின்றவனை பார்த்து தலையசைத்தபடி எழுந்து கொண்டான்.

காசியோடு வாசலுக்கு நடக்கும் போது, அவனது பார்வை தன்னை அறியாமல் மாடி பக்கம் சென்று திரும்பியது. காரில் ஏறி அமர்ந்ததும் காசி வேலையை பற்றி பேச ஆரம்பிக்க, ராகவி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனாள்.

சாணக்கிய ராஜ். ஊருக்கு சாரா. செய்யாத தொழில் இல்லை. அத்தனையும் உட்சத்தில் இருக்கும் தொழில்கள். கொள்ளை கொள்ளையாய் கொள்ளை அடிப்பதும், அரசாங்கத்தை ஏமாற்றி ஏப்பம் விடுவதும் அவனது இடக்கை பழக்கம்.

வெளியே அவன் பெயர் என்னவோ வைர வியாபாரி தான். தனி நிறுவனத்தை வைரத்திற்கென உருவாக்கி வைத்திருக்கிறான். ஆனால் உள்ளே கடத்தப்படாத பொருட்களே இல்லை.

ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ, அவனை எதிர்த்து விட்டால் சத்தமில்லாமல் கதையை முடிக்கும் அளவு பலம் பெற்றவன். ஒவ்வொரு தேர்தலிலும் சத்தமில்லாமல் அவனது பணம் விளையாடிக் கொண்டிருக்கும்.

செய்யும் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும், பெண்கள் என்றால் எட்டடி தள்ளிச் சென்று விடுவான். பெண்களை மட்டும் அவன் நம்புவதே இல்லை. அவனுக்குக் கற்றுக் கொடுத்த குருவின் பாடம். ஒரு பெண் புகட்டிய பாடம்.

இப்போது அவனது தந்தையை சந்திக்க வந்திருந்தான். ராஜா வைரவர். எப்போதும் கம்பீரத்தோடும் கண்ணில் கத்தியைப்போன்ற கூர்மையோடும் காட்சி அளிப்பவர். இன்று சோபாவில் சற்று தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.

அவரிடம் காவல்துறையினர் எதோ பேசிக் கொண்டிருக்க, அழுத்தமான காலடி சத்தத்துடன் உள்ளே வந்தான் சாணக்கியன்.

காவல்துறை அதிகாரி எழுந்து அவனை பார்த்து, “ஹலோ” என்றான்.

சாணக்கியன் தலையசைத்து விட்டு, “எதாவது தெரிஞ்சதா?” என்று கேட்டான்.

“இல்ல சார். அந்த பொண்ணு பத்தின டீடைலும் கிடைக்கல. என்ன பண்ணுறதுனே புரியல”

“அவங்க தொலைஞ்சு நாலு மாசம் ஆகுது. இன்னும் கண்டு பிடிக்க முடியலயா?”

“சார்.. நாங்களும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா எந்த தடையமும் கிடைக்க மாட்டேங்குது.”

“சோ?”

“அவங்க இறந்து போயிருப்பாங்களோனு தோனுது”

“தோனுதா? தோனுறத சொல்லுறதுக்கா நீங்க போலீஸா இருக்கீங்க?” என்று சாணக்கியன் நக்கலாக கேட்க, “சாணக்கியா” என்று அதட்டினார் வைரவர்.

“இதுக்கு தான் நான் என் வழில போறேன்னு சொன்னேன். கேட்காம நாலு மாசமா அவங்கள தேடி அலைஞ்சுட்டு, இப்ப தோனுதுனு வந்து சொல்லிட்டு நிக்கிறார்”

“கொஞ்சம் சும்மா இரு” என்று அதட்டியவர், “நீங்க உங்களால முடிஞ்சத பண்ணுங்க. இல்லீகலாவே போனாலும் அத நான் பார்த்துக்கிறேன். எனக்கு என் மகன் எங்க இருக்கான்னு தெரியனும்” என்று கூறி விட்டு, “காபிய குடிங்க” என்று காட்டினார்.

அந்த காவலதிகாரியோ ஒரே மூச்சாக காபியை ஊற்றிக் கொண்டு, கிளம்பிச் சென்று விட்டான்.

“நீ உட்காரு” என்று சாணக்கியனிடம் கூற, ஒற்றை சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

“என்ன திடீர்னு வந்து நிக்கிற?”

“திவாகர் எங்க?”

தந்தையை திருப்பிக் கேட்டவனை சலிப்பாய் பார்த்தார்.

“அவன் என் கஸ்டடில இருந்தவன். என்னை கேட்காம எங்க கொண்டு போனீங்க?”

“உன் கிட்ட விட்டா நீ அவன கொன்னுடுவ”

“அவன் பண்ண வேலைக்கு இவ்வளவு நாள் உயிரோட இருந்ததே தப்பு”

“அவன் பண்ணது துரோகமா இருந்தாலும், அவன் நம்ம குமாரசாமி பிள்ளை”

“அவரே அவன அடிச்சு கொல்ல தான் சொல்லுறாரு”

“பெத்த பிள்ளை பாசம் உனக்கு புரியாதுடா. நீ அவன என் கிட்ட விடு”

“எனக்கு அவனால தான் சிவராஜ் காணாம போயிருப்பான்னு சந்தேகமா இருக்கு”

வைரவர் மறுப்பாக தலையசைத்தார்.

“திவாகருக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்க மாதிரி தெரியல. அப்படி இருந்திருந்தா என்னைக்கோ அவன் மாட்டி இருப்பான்”

“இப்ப திவாகர என் கிட்ட விட முடியுமா? முடியாதா?”

“நோ சாணக்கியா. நீ சிவாவ தேடுறத மட்டும் பாரு. போதும்”

வெடுக்கென எழுந்தவன், வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

காரில் அமர்ந்திருந்தவனுக்கு ஆத்திரம் அடங்குவேனா என்றது. திவாகர் துரோகி. அவனது துரோகத்தால் பெரிய பிரச்சனையில் மாட்டி மீண்டு வந்திருந்தனர். மிகப்பெரிய சரக்கு ஒன்று அரசின் பிடியில் சிக்கி, தண்டமாய் பணத்தை அழுது மீட்டெடுத்தான் சாணக்கியன்.

பிரச்சனையின் காரணத்தை அலசி திவாகரை கண்டு பிடித்தான். இன்று வரை அதை அவன் ஏன் செய்தான் என்று சொல்லவே இல்லை.

தப்பியோடிய திவாகரை தேடிச் செல்லும் போது தான், ராகவியை பார்த்து அவளை சாணக்கியனோடு அனுப்பி வைத்தான் பூபதி.

திவாகரை கொல்லும் வெறி இருந்தாலும், அவனது துரோகத்திற்கான காரணத்தை அறியாமல் அவனை பரலோகம் அனுப்ப அவனுக்கு விருப்பமில்லை.

“ஜிம்முக்கு போ” என்றான் காசியிடம்.

காரும் அவனது ஜிம்மில் வந்து நிற்க, இறங்கி விறுவிறுவென உள்ளே நுழைந்தான்.

காசி அவன் முதுகை பார்த்து விட்டு, பூபதியை அழைத்து விசயத்தைக்கூறினான்.

“அவன் கோபம் போனதும் சரியாகிடுவான் விடு”

“ஆனா பூபதி.. வீட்டுல இருக்க பொண்ண பத்தி பெரிய பாஸ்க்கு சொல்லிடலாம்னு நினைக்கிறேன்”

“சும்மா இருடா. எதையாவது செஞ்சு வைக்காத”

“ஏன்?”

“எதையாவது எல்லாருமா சேர்ந்து செய்யாதனு சொன்னா, ராஜ் அத தான் முதல்ல செஞ்சு வைப்பான். இப்ப இந்த பொண்ணு விசயத்துல அப்படி எதுவும் நடந்துடாம பார்த்துக்கனும். முதல்ல அந்த பொண்ணு குணமாகட்டும். நானே அவள வெளிய அனுப்புறத பார்த்துக்கிறேன்”

“என்னமோ.. அந்த பொண்ண பார்த்தா எனக்கு சரியா படல” என்று கூறி விட்டு காசி வைத்து விட்டான்.

பூபதிக்கும் அதே நிலை தான். ராகவியை வைத்திருப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சாலையில் பார்த்து உதவி செய்வது வேறு. அது அடிப்படை மனிதாபிமானம். ஆனால் வீட்டிற்கு கொண்டு வந்து தங்க வைப்பது சரியான செயல் இல்லை அல்லவா?

இன்னும் அவளுக்கு உடல் நிலை சரியாகாததால், அவளை சந்திக்க முடியாது என்று நர்ஸே மறுத்துக் கொண்டிருக்கிறாள். சாணக்கியனுக்கும் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே பூபதி பொறுமை காத்துக் கொண்டிருக்கிறான்.

அவளது விவரங்களை பார்த்தவனுக்கு, அவள் அவ்வளவு முக்கியம் போன்றும் தோன்றவில்லை.

அதிக வயதான ஒருவருக்கு ராகவியின் தாயை திருமணம் செய்து வைக்க, ராகவி பத்து வயதை தொடும் போதே அவளுடைய அப்பா அறுபதை எட்டியிருந்தார். அவள் பூப்பெய்தும் போதே தந்தை இறந்து போக, பிறந்த வீட்டு உபயோகத்தில் வாழ்ந்தார் ராகவியின் தாய்.

ராகவியின் தாய்க்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான். அவனும் அதிகமாக குடிப்பதால், திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகி விட்டது. விவாகரத்தான கோபத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டான் மாமன்.

அவன் திரும்பி வரும் போது இருந்தது ராகவியும் அவளுடைய பாட்டி மட்டுமே. வந்தவன் தொழில் செய்ய பணம் கேட்டு சண்டை போட, அப்போது நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்த பாட்டியும் உயிரை விட்டார். கடைசியாக எஞ்சிய ராகவியிடம் பணம் கேட்டுக் கொண்டே இருப்பான்.

அவள் சம்பாதிப்பை கொடுத்தாலும், மேலும் கேட்பான். தனியாக வீட்டில் இருக்க பயந்து அவள் ஹாஸ்டலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஹாஸ்டலில் பேசியதாக கூட தகவல் கிடைத்தது. பிறகு அவள் ஏன் ஹாஸ்டலுக்கு போகவில்லை. அந்த மாமன் என்ன ஆனான்? எதற்காக நள்ளிரவில் அவள் அந்த தெருவில் வந்து கொண்டிருந்தாள் என்று புரியவில்லை.

அவள் சரியான பிறகு விசாரிக்க வேண்டும் என்று பூபதி மனதில் குறித்து வைத்துக் கொண்டான்.

தொடரும்.

Leave a Reply