சாரா 30
![]()
கந்தனிடம் விசயத்தை சொல்லி, வீட்டுக்கு சென்று ராகவியிடம் பேசும் படி சொன்ன சாரா, காலையிலேயே வெளியே கிளம்பியிருந்தான்.
அங்கேயே இருந்தால் ராகவியை தடுத்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது.
அந்த வேலைக்காக, கமிஷ்னர் பொன்வண்ணன் முன்பு அமர்ந்திருந்தான். அவனுடன் சிவாவும் அமர்ந்திருந்தான்.
“சாரா.. புதுசா ஒரு பிரச்சனைய கிளப்புறீங்க” என்று கமிஷ்னர் காட்டமாக கூற, “இது பிரச்சனையா?” என்று புரியாமல் கேட்டான் சாரா.
“உங்கப்பா சாவுல சந்தேகம் இருக்குனு இப்ப கம்ப்ளைண்ட் பண்ணா எப்படி? அதான் எல்லா ஃபார்மாலிட்டிஸும் முடிஞ்சதே?”
“எதுவும் முடியல” என்றான் சிவா.
கமிஷ்னர் அவனை பார்க்க, “உங்க கஸ்டடில இருந்த எங்கப்பா இறந்துருக்காரு. கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டு வைத்தான்.
கமிஷ்னர் மனதில் சலித்துக் கொண்டார்.
‘அவர அரெஸ்ட் பண்ணும் போது சும்மா இருந்தவன், கந்தனுக்கு ஆப்பு வச்சுட்டான். இப்ப அவங்கப்பா செத்தப்போ சும்மா இருந்துட்டு, யாருக்கு ஆப்பு வைக்க வந்துருக்கான்னு தெரியலயே?’ என்று நினைத்தவர் சிவாவை பார்த்தார்.
மொட்டை போட்டிருந்ததால், தொப்பி அணிந்திருந்தான். கண்கள் சிவந்து போயிருந்தது. முகம் சோர்ந்திருந்தது.
கடத்திய போது கூட அவனிடம் பெரிதாக மாற்றமில்லை. இப்போது துவண்டு போய் அமர்ந்திருந்தான்.
“நீங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தீங்களா?”
“பார்த்தோம். ஆனா எங்களுக்கு நம்பிக்கை இல்ல.”
“அதுக்காக இன்னொரு தடவ போஸ்ட்மார்ட்டம் பண்ணனுமா? அதுக்கு வழி இல்லாம நீங்க எரிச்சுட்டீங்களே?”
சாரா அவரை நோக்கி சற்று சாய்ந்து அமர்ந்தவன், “சார்.. எங்கப்பா இறப்புல எங்களுக்கு சந்தேகம் இருக்கு. சம்பந்த பட்டவங்கள நீங்க விசாரிக்கனும். அவ்வளவு தான் நாங்க கேட்குறது. இத நாங்களே செஞ்சுக்க முடியும். போலீஸ்னு உங்க மேல இருக்க மரியாதையில தான் வந்தோம்” என்றான் நல்லவன் போல.
“லிசன் சாரா.. அவரு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருனு ரிப்போர்ட் சொல்லுது”
“அதுனால அவர கொல்லலனு சொல்ல முடியுமா? எத்தனையோ மருந்து சத்தமில்லாம ஹார்ட் அட்டாக் வர வைக்க இருக்கு சார். எங்கப்பாவ அரெஸ்ட் பண்ண ரெண்டு நாள்ல திட்டம் போட்டு கொன்னுட்டாங்கனு தான் நான் நினைக்கிறேன்”
“அப்படி யாரு திட்டம் போடுவா?”
“ஏசிபி அனுபமா தான் பண்ணிருக்கனும். அவங்களுக்கு தான எங்கப்பாவ பத்தி எல்லாமே தெரியும். அவங்களே அரெஸ்ட் பண்ணுற போல பண்ணிட்டு கொலையும் பண்ணிட்டாங்க” – சிவராஜ்
“ஏசிபி மேல இப்படி அபாண்டமா பழி போடுறத என்னால ஏத்துக்க முடியாது சிவராஜ்”
“அப்ப எங்கப்பா அநியாயமா செத்தது?” என்று கேட்டான் சாரா.
‘கடத்தல் பண்ணுறவன் செத்தது அநியாயமாடா?’ என்று உள்ளே தான் கேட்டுக் கொண்டார் கமிஷ்னர்.
“இத எங்க ஸ்டைல்ல பார்த்துக்கலாம்னு தான் சார் நான் சொல்லுறேன். ஆனா இவன் தான் போலீஸ் கிட்ட போவோம். சட்டப்படி செய்வோம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டான். நீங்க எங்கப்பாவ அரெஸ்ட் பண்ணும் போது கூட நாங்க எதுவுமே பண்ணலயே. எல்லாத்தையும் கோர்ட்ல பார்த்துக்கலாம்னு அமைதியா தான இருந்தோம்? அந்த அமைதிய தப்பா நினைச்சுட்டு எங்கப்பாவ கொன்னுட்டா? அப்புறமும் எப்படி அமைதியா இருக்க முடியும்?”
சாரா பேசப்பேச, கமிஷ்னர் அவனை தான் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கெல்லாம் சாரா அசரவில்லை.
“இவன் பாவம் சார். சம்பந்தமில்லாம யாரோ இவன கடத்தி வச்சுருந்துருக்காங்க வேற. இவனையும் தேடச்சொல்லி உங்க போலீஸ் கிட்ட தான் வந்து நின்னோம். கடைசியா கண்டு பிடிச்சுட்டோம். எனிவே அத வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன். ஆனா இப்ப எங்க அப்பா செத்ததுக்கு நியாயம் வேணும். நீங்க விசாரிப்பீங்களா? இல்லையா? அத மட்டும் சொல்லுங்க”
நல்ல பிள்ளை போல் பேசினாலும், அவன் கண்ணில் ஒரு திமிர் தெரியத்தான் செய்தது. எல்லாம் எனக்குத்தெரியும் என்ற திமிர்.
சிவாவை கடத்தும் போதும் அமைதியாக இருந்தான். அவனை காப்பாற்றிய பின்பும் அமைதியாக தான் இருந்தான். வைரவரை கைது செய்த போதும் அமைதியாக இருந்தான். வைரவர் இறந்த போதும் அமைதியாக தான் இருந்தான்.
அந்த அமைதியை கமிஷ்னர் ஒன்றும் நம்பி விடவில்லை தான். பதுங்கி கிடக்கும் புலி ஆபத்தானது என்று அறியாதவரா அவர்?
அத்தனை அமைதிக்கும் சேர்த்து இப்போது வந்து நிற்கிறான். ஆனால் அவரிம் வந்ததில் அவருக்கு ஒரு திருப்தி இருந்தது. என்ன செய்கிறான் என்று கண்காணிக்கலாம் அல்லவா?
கமிஷ்னர் இப்படி நினைக்க, சாரா அவரை வைத்தே அவரது கண்ணை தோண்டும் முடிவில் இருந்தான்.
நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, “விசாரிக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார்.
“எங்கப்பா சாவுக்கு நியாயம் கிடைக்கனும். அவ்வளவு தான்” என்று முடித்தான் சிவா.
“சந்தேகம் இருக்குனா அப்பவே கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கலாம்ல? இவ்வளவு லேட்டா ஏன் வந்தீங்க?” என்று பொறுக்காமல் கமிஷ்னர் கேட்டு விட, “எங்கப்பா இறந்து போயிட்டாரு சார். அவருக்கு உண்டான மரியாதைய செய்யுறது தான் பெத்த பிள்ளையோட கடமை. அவரோட உடம்ப வச்சுட்டு, கேஸ் போட்டு இழுத்தடிச்சு, எங்களால அவருக்கு அவமரியாதை பண்ண முடியாது. அதுனால தான் நல்ல மகனா கடமைய செஞ்சோம். இப்போ கம்ப்ளைண்ட் கொடுத்ததும் அதே கடமை தான்.” என்று சாரா விளக்கினான்.
‘ஆக.. ஆறப்போட்டு அடிக்க பார்த்துருக்கானுங்க’ என்று புரிந்து கொண்டு, தலையை மட்டும் ஆட்டினார் கமிஷ்னர்.
சாராவும் சிவாவும் எழுந்து விடை பெற்றுச் சென்றனர். அவர்கள் சென்றதும் புகார் கடித்தத்தை மீண்டும் படித்தார்.
அனுபமாவின் மீது தான் புகார் எழுதி இருந்தனர்.
‘கூடவே இருந்ததுக்கு அவள தான் டார்கெட் பண்ணிருக்கானுங்க போல’ என்று நினைத்துக் கொண்டார்.
சிவாவும் சாராவும் வெளியே வர, காசி காரின் முன்னால் நின்றிருந்தான்.
“கார எடு காசி.” என்று கூறி ஏறி அமர்ந்தவர்கள், “நேரா ஏசிபி ஆபிஸ்க்கு போ” என்றனர்.
காசியும் உடனே கிளம்பினான். கார் பறந்து சென்று அனுபமாவின் இடத்தில் நின்றது. சிவா மட்டுமே இறங்கிக் கொள்ள, சாரா இறங்கவில்லை.
“அவள விடாத” என்று சாரா கூறவும், சிவா தலையை ஆட்டியபடி தொப்பியை சரி செய்து கொண்டு திரும்பி நடந்தான்.
“எங்க பாஸ்?”
“ஆபிஸ் போ” என்றதும் காரை எடுத்து விட்டான்.
அலுவலகம் சென்று இறங்கும் போது தான், ஏகாம்பரத்திடமிருந்து காசிக்கு அழைப்பு வந்தது.
பேசி முடித்து விட்டு, சாராவை தேடிச் சென்று விசயத்தை சொன்னான்.
“கிளம்பி போறதுனா போகட்டும். நமக்கு இங்க வேலை இருக்கு. ஹேக்கர்ஸ் வந்துட்டாங்களானு பார்த்துட்டு வா” என்று கூறி அனுப்பி விட்டான் சாரா.
ராகவியை பற்றி நினைக்க கூட நேரமில்லாமல், அவனை வேலைக்குள் தள்ளி விட்டுக் கொண்டான்.
ஹேக்கர்ஸ் வந்தனர்.
“எல்லா டிவைஸோட டீடைலும் இதுல இருக்கு. எல்லாத்தையும் ஹோக் பண்ணனும். அதுல க்ளவுட் ஸ்டோரேஜ்ல கூட எதுவும் இல்லாம அத்தனையும் தூக்கனும்” என்று கூறி, அனுபமாவின் விவரங்களை தான் கொடுத்தான்.
சிவா, காதால் கேட்டவை, தானே பார்த்தவை, அத்தனையும் குறிப்பெடுத்து வைத்திருந்தான். அனுபமாவினுடையது மட்டுமல்ல நிரூபனுடையதும் தான்.
குரு மட்டுமே உசாராக தப்பி விட்டான். ஆனால் இப்போது அவனை கண்கானிக்க ஆள் போட்டிருந்தான் சாரா.
அனுபமாவின் விவரங்கள் இங்கு அலசி ஆராயப்பட, சிவா அவளின் முன்பு அமர்ந்திருந்தான்.
அவள் தான் அழைத்திருந்தாள். வைரவர் இறந்து போனாலும், அவரின் மீது பதிவு செய்த வழக்கு இன்னும் உயிரோடு தானே இருக்கிறது? அதைப்பற்றி அவருடைய பிள்ளையை விசாரித்து தானே ஆக வேண்டும்?
அதற்காக அவள் அழைத்திருக்க, அவளை சந்திக்க வரும் முன்பே குழியை பறித்து விட்டுத்தான் வந்திருந்தான்.
சில நிமிடங்கள், அவனை வெளியே அமர வைத்து விட்டுத்தான் உள்ளே அழைத்தாள் அனுபமா. அவளும் அவனும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.
சிவா நாற்காலியில் தெனாவெட்டாக அமர்ந்து கொண்டு,, சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.
அது அனுபமாவிற்கு பிடிக்கவில்லை. அவனது தொப்பி கூட பிடிக்காமல் போனது போலும்.
“தொப்பிய கழட்டு” என்று அதிகாரமாக சொல்ல, “என்ன சொன்ன?” என்று கேட்டான்.
“ஏய் மரியாதையா பேசு” என்று அனுபமா எகிற, “நீ கொடுத்தியா?” என்று கேட்டு வைத்தான்.
சுள்ளென கோபம் ஏறி விட்டாலும் உடனே தணிந்தவள், “தொப்பிய கழட்டுங்க” என்றாள்.
கழட்டி அருகே வைத்தவனை நன்றாக பார்த்தாள். முடி இல்லை தான். அதற்காக அவனிடமிருந்த தோரணை குறைந்ததா என்றால்? இல்லை தான்.
அவனும் கையைக்கட்டிக் கொண்டு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். காவல்துறை உடையில் மிடுக்குடன் இருந்தாள்.
இவள் தான் சிவாவை தேடித்தேடி வந்து பேசியவள். இவள் தான், “சிவா சாப்பிட்டீங்களா?” என்று கேட்டு பேச்சை ஆரம்பித்தவள்.
“உங்க அப்பா எங்க? காணோமே? சைன் வாங்க வந்தேன்” என்று கேட்டுக் கொண்டு வந்து நிற்பாள்.
ஆனால், இப்போது மொத்தமும் தலைகீழாய் மாறி அமர்ந்திருந்தாள்.
அவனிடம் பேசுவதற்காகவும், அவனை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வமாக ஓடி வருவாள். அத்தனையும் காதலி செய்வது போலவே செய்தாள்.
அவளது விசாரனையை பார்த்தால், யாராக இருந்தாலும் அவள் சிவாவை காதலிப்பதாக தான் நினைப்பார்கள். அவனை கடத்துவதற்காக செய்த வேலை என்று யாரும் கனவில் கூட நினைக்கவில்லை.
“அனுசயாவிற்கு உங்களை பிடித்திருக்கிறது போல” என்று வீட்டில் வேலை செய்யும் சிலர் அவனிடம் நேரடியாகவே சொல்லி இருந்தனர்.
சிவாவிற்கு அவள் மீது ஆசையோ ஈர்ப்போ வரவில்லை. அதனால் அவளை பற்றி பெரிதாக கவலைப்படாமல் இருந்தான்.
கடத்திக் கொண்டு வந்து, தான் யார் என்று அவள் சொன்ன போது தான் அவளைப்பற்றி அவனும் ஆராய ஆரம்பித்தான்.
அவளும் கட சிவாவைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அன்று கடத்தியதற்காக, கோபப்படுவான், கத்துவான் என்று எதிர்பார்த்த அனுபமா கூட, அவனது அமைதியில் ஆச்சரியமடைந்தாள்.
முதலில் கடத்தும் போது, சிவா அமைதியாக தான் காரில் ஏறி அமர்ந்தான். அப்போது கூட துப்பாக்கியை பார்த்து பயந்து விட்டான் என்று சொல்லலாம்.
ஆனால் கடத்தி அடைத்து வைக்கப்பட்ட பிறகும், அமைதியாக தான் இருந்தான். அவர்களை வேடிக்கை தான் பார்த்தான். எதுவும் பேசவில்லை. உணவை கொடுத்தால் சாப்பிட்டான். உடை கொடுத்தால் மாற்றிக் கொண்டான். ஒரு வாரம் முழுவதுமே அப்படியே இருந்தான்.
ஒரு வாரம் சென்ற பின்பு தான், நிரூபனிடம் நோட்டு ஒன்று கேட்டான்.
“எதுக்கு?”
“நாள் முழுக்க சும்மா இருக்கேன். ஒரு மனசனால எப்படி அப்படி இருக்க முடியும்?” என்று கேட்டான்.
அவன் கேட்பதும் நியாயமாக தான் தோன்றியது. நாள் முழுவதும் எதையும் செய்யாமல் அறைக்குள் அடைந்தே கிடப்பது மிகவும் கடினம் தான்.
ஆனால் அதுவும் ஒரு வாரம் வரை இருந்து விட்டான். அவன் கேட்டதை நிரூபன் வாங்கி வந்து கொடுத்தான்.
நோட்டு வந்ததும், சிவா அதன் பிறகு அவனது நேரத்தை நோட்டில் எழுதுவதிலேயே செலவழித்தான்.
அவன் தூங்கிய நேரம், அந்த நோட்டில் இருந்த அனைத்தையும் படமெடுத்து வைத்துக் கொண்டனர். இசையை படித்தவர்களை பிடித்து அது என்னவென்று விசாரித்தால் அவர்கள், “வெறும் மியூசிக் நோட்” என்றனர்.
அந்த குறிப்புகளை பியானோவில் வாசித்தும் காட்டினர். மிக மெல்லிய இசை தான் வந்தது. அதுவும் அழகாக வந்தது.
“நைஸ் நோட் சார். யார் எழுதுனது?” என்று நிரூபனிடம் கேட்க, “ஃப்ரண்ட் ஒருத்தனோடது” என்று முடித்துக் கொண்டான்.
அதில் இருந்தது எல்லாமே இசை சம்பந்தமானது தான். அடிக்கடி சந்தேகம் வந்து சோதித்த போதும், பெரிதாக எதுவுமே அதில் கிடைக்கவில்லை.
சிவாவுக்கு இசையில் பைத்தியம் என்று அவர்களுக்குத் தெரியும். அறை முழுவதும் பல இசை கருவிகளை வாங்கி வைத்திருப்பதாக அனுபமா சொல்லி இருந்தாள்.
பல இசை கருவிகளை வாசிக்கவும் கற்றுக் கொண்டிருந்தான். அதனால் இசையில் இருக்கும் ஆர்வத்தில் எழுதி வைத்திருக்கிறான் என்று விட்டு விட்டனர்.
எதிலும் விசயத்தை புகுத்தி வைக்கும் அறிவுடன், அதிலும் சிவா புகுத்தி வைத்திருப்பான் என்று அப்போது அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருந்தன. அதை எழுதியவனை தவிர யாரும் கண்டு பிடிக்க முடியாது.
அத்தனையும் செய்து விட்டு அமைதியாகவே இருந்தவனை, சாரா மீட்டெடுத்து விட்டான். அனுபமா திட்டமிட்டபடி மட்டும் நடந்திருந்தால், சிவா இன்னும் அறைக்குள் தான் கிடந்திருப்பான்.
அனுபமா சுலபமாக கூடவே வைரவரையும் சாராவையும் சேர்த்தே பிடித்து உள்ளே போட்டிருப்பாள். அது நடவாமல் போனதில் கோபம் உள்ளே இருந்தது. அந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, முன்னால் இருந்த சிவாவை அளவெடுத்தவள் விசாரணையை ஆரம்பித்தாள்.
தொடரும்.
