சாரா 32
![]()
அடுத்த நாள் காலையில், அனுபமா கமிஷ்னர் அலுவலகத்தில் நின்றிருந்தாள்.
பொன்வண்ணன் எல்லாவற்றையும் விளக்கமாக கூறி முடித்தார்.
அனுபமாவின் முகத்தில் கோபம் ஜொலித்தாலும், பல்லைக்கடித்தபடி அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இப்ப உன் மேல தான் சந்தேகம்னு கேஸ் கொடுத்துருக்காங்க. என்ன செய்யலாம்?”
“நான் அந்த வைரவர கொல்லல. அவரா தான் செத்தாரு”
“அத நிரூபிக்க சொல்லித்தான் கேட்குறாங்க”
“சார்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல ஹார்ட் அட்டாக்ல தான் செத்தாருனு போட்டுருந்துச்சே. அப்புறமும் ஏன் நான் கொன்னேன்னு சொல்லுறாங்க?”
“உன்னை பழி வாங்குறதுக்கா இருக்கும். அவங்க வீட்டுக்குள்ள இருந்துட்டு வந்திருக்கியே. அத நினைச்சுட்டு உன்னை பழி வாங்க நினைக்கிறாங்க. எதுக்கும் ஜாக்கிரதையா இரு”
“அப்படி என்ன பண்ணிடுறாங்கனு பார்க்குறேன்” என்றவள், உடனே ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தாள்.
தொப்பியை கழட்டிக் கொண்டு கடுங்கோபத்தோடு மனதில் சாராவை சபித்துக் கொண்டு அவள் வர, எதிரே வந்தான் சிவா.
அனுபமாவை பார்த்ததும் சிவா ஆச்சரியமாக புருவம் உயர்த்தி நக்கலாக புன்னகைக்க, அதை பார்த்துக் கொண்டே வந்த அனுபமா, அருகே வந்ததும் ஓங்கி அறைந்திருந்தாள்.
சுற்றி அத்தனை பேரும் இதைப்பார்த்து ஸ்தம்பித்து நின்று விட, சிவாவும் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடு ஆத்திரமும் வந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அவளை பார்த்தான்.
“தொலைச்சுடுவேன்” என்றவள், விருட்டென அவனை தாண்டிக் கொண்டு சென்றாள்.
நேற்று அவளது அலுவலகத்தில் வைத்து அவளது கழுத்தை பிடித்ததற்கான தண்டனை இது. சிவாவிற்கு சில நொடிகளில் விளங்கி விட, திரும்பிப் பார்த்தான்.
தொப்பியை மாட்டிக் கொண்டு, கம்பீரம் குறையாமல் சென்று கொண்டிருந்தாள்.
அவளை பார்த்ததோடு சுற்றியிருந்தவர்களை பார்த்தான். எல்லோருமே அவன் அடி வாங்கியதை அதிர்ச்சியோடு தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சிவா எல்லாரையும் முறைப்பது போல் பார்க்க, உடனே திரும்பி தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
சிவா எதுவும் நடக்காதது போல் கமிஷ்னர் அறையை நோக்கிச் சென்றான். அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று அமர்ந்தான்.
“எதுக்கு சார் கூப்பிட்டீங்க?”
“உங்கப்பா மேல இருக்க கேஸ் தொடர்ந்து நடக்கும் சிவராஜ். அதுக்கு நீங்க எங்களுக்கு ஒத்துழைக்கனும். ஒத்துழைக்க மாட்டேங்குறீங்கனு கம்ப்ளைண்ட் வந்துருக்கு”
“யாரு ஏசிபி சொன்னாங்களா?”
“கேஸ் இன்னும் அவங்க கிட்ட தான் இருக்கு சிவராஜ்”
“அதான் சார் பிரச்சனையே. எங்கப்பாவ அவங்க தான் கொன்னுட்டாங்கனு சந்தேகப்படுறப்போ, அவங்க கூட நான் எப்படி கோ ஆப்ரேட் பண்ணுறது?”
“அந்த கேஸ் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கேஸ் நடக்க தான் செய்யும்”
“நடக்கட்டும். ஆனா நான் ஏசிபி மேல சந்தேகப்பட்டதும் இருக்கும். அவங்க என் அப்பாவோட இறப்புக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்.”
“அது இயற்கையான மரணம் தான் சிவராஜ்”
“நம்ப முடியல சார். என் இடத்துல இருந்து பாருங்க. உங்களால கூட நம்ப முடியாது. ஊரு முன்னாடி பகிரங்கமா அப்பாவ அரெஸ்ட் பண்ணது ஏசிபி தான். அப்பா இறந்தப்போ ஹாஸ்பிடல்ல இருந்ததும் ஏசிபி தான். அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுமே எங்களுக்கு சொல்லி இருக்கனும்ல? நாங்களா நியூஸ் தெரிஞ்சு வந்து பார்க்குற வரை, எங்கள கண்டுக்கவும் இல்ல. இன்னமும் எப்படி சந்தேகபடாம இருக்க முடியும்?”
“உங்களுக்கு எப்படி விசயம் தெரியும்?”
“ஏன் சார்? சொல்லியே ஆகனுமா?”
“போலீஸ்குள்ளயே இப்படி சிலர் இருக்க தான் செய்யுறாங்க. அவங்கள மாத்த முடியாது. அத விடுங்க. உங்களுக்கு உங்கப்பா டெத்ல என்ன தெரியனும்?”
“என்ன நடந்துச்சுனு முழுசா தெரியனும். ரெண்டு நாளா எங்கள பார்க்கவும் விடாம உள்ள அடைச்சு வச்சு, அந்த ஏசிபி எங்கப்பாவ என்ன பண்ணாங்கனு தெரியனும். ரெண்டு நாளா நல்லா இருந்தவருக்கு, திடீர்னு எப்படி ஹார்ட் அட்டாக் வந்துச்சுனு தெரியனும். எதுலயும் சந்தேகம் வரலனா, கேஸ வாபஸ் வாங்கிட்டு ஏசிபி கிட்ட மன்னிப்பு கேட்குறேன். ஆனா அவங்க தான் இத பண்ணிருக்காங்கனு தெரிஞ்சா, நடக்குறதே வேற”
சிவா கோபம் நிறைந்த குரலில் பேசப்பேச, கமிஷ்னர் மனதில் எழுந்த கணக்கோடு கேட்டுக் கொண்டார்.
“இந்த விசயத்த சாரா அவன் ஸ்டைல்ல தீர்க்குறதா தான் சொன்னான் சார். உங்களுக்கு நல்லா தெரியும் சாரா எப்படிப்பட்டவன்னு. அவன் விசாரிச்சா தேவையில்லாம சேதாரம் தான் ஆகும். நான் தான் அவன தடுத்துட்டு இருக்கேன். நீங்க எனக்கு நம்பிக்கையான பதில கொடுக்கலனா, சாராவ என்னால தடுக்க முடியாது”
“போலீஸ் கிட்டயே வந்து ரௌடீஷம் பத்தி பேசுறீங்க இல்ல?”
“ரௌடீஷமா? சாரா ரௌடியா? அவன் எப்பவாவது எதாவது போலீஸ் மேலயும், பொது மக்கள் மேலயும் கை வச்சு பார்த்துருக்கீங்களா? அவன் உண்டு அவன் பிஸ்னஸ் உண்டுனு இருக்கான். எனக்கும் அவன் செய்யுற வேலையில சிலது பிடிக்காது தான். ஆனா அதுக்காக என் அண்ணன ரௌடினு சொல்லாதீங்க சார். என்னால ஒத்துக்க முடியாது”
“அதே மாதிரி தான உங்கப்பாவும் இருந்தாரு?”
“அவர் எப்படி வாழ்ந்தாருனு கேட்க நான் இங்க வரல. அவரு எப்படி செத்தாருனு மட்டும் தான் எனக்கு தெரியனும். அது மட்டும் தான் என் சந்தேகம்”
“சரி.. உங்க சந்தேகத்த தீர்க்க ஏற்பாடு பண்ணுறேன்” என்று கூறி அனுப்பி விட்டார்.
காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய சிவா, நேராக சாராவிடம் சென்றான். அவன் இன்னும் அலுவலகத்தில் தான் இருந்தான். வீடு செல்லவில்லை.
அலுவலகத்திலேயே இரண்டு நாட்களாக தூங்கி எழுந்திருந்தான். ஹேக்கர்ஸ் அனுபமாவின் விவரங்களை எல்லாம் அக்குவேறு ஆணிவேராக பிரித்து எடுத்திருந்தனர்.
அதில் எதை எப்படி பயன்படுத்துவது என்று சாரா திட்டம் போட்டுக் கொண்டிருக்க, சிவா வந்து நின்றான்.
“என்னடா பண்ண போற?” என்று கேட்க, “அவளுக்கு அவ ஃபேமிலினா ரொம்ப பிடிக்கும் போல சிவா” என்றான் சாரா.
“அதுக்கு?”
“அதுக்கு… நாம அனுபவிச்சத அவளுக்கும் கொடுக்கனும்னு ஆசை”
“யாரையும் கொன்னுடாத. கேஸ் கிரிட்டிக்கல் ஆகிடும்”
“கொல்லுற ஐடியா எல்லாம் இல்ல. ஆனா அவள அலற விடனும். அதுக்கு அவளோட அப்பா தான் டார்கெட்”
“ம்ம்..”
“கமிஷ்னர் என்ன சொன்னான்?”
“அந்தாளு வேற என்ன சொல்லுவான்? அனுபமாவ காப்பாத்த தான் பார்ப்பான்”
“அவனுக்கும் இருக்கு. போலீஸ் கிட்ட போக வேணாம்னு நாம உண்டு நம்ம வேலை உண்டுனு இருந்தா, சீண்டி பார்த்துட்டாங்கள்ள? இனிமே திரும்பி எந்த போலீஸும் நம்மல தொட யோசிக்கனும். பார்த்துக்கிறேன்.”
“நீ வீட்டுக்கு போகலயா?”
“இல்ல.”
“ஏன்?”
“வேலை இங்க தான இருக்கு?”
“என்னவோ பண்ணு. நான் கிளம்புறேன்” என்றவன் சென்று விட்டான்.
*.*.*.*.*.*.*.*.
அன்றைய இரவும் சாரா வீடு திரும்பாமல் போனதில், ராகவிக்கு ஏகப்பட்ட வருத்தம். நொந்து போய் அமர்ந்திருந்தாள்.
ஏற்கனவே ஏகாம்பரத்தை அழைத்துக் கேட்டு விட்டாள். சாரா எதோ முக்கியமான வேலையில் இருப்பதாகத்தான் சொன்னான்.
“அதுக்காக வீட்டுக்கு வர மாட்டாங்களா?”
“பாஸ் முக்கியமான வேலைல இருந்தா, ஒரு வாரம் வரை கூட வீட்டு பக்கம் தலை வச்சு படுக்க மாட்டார். ஃபோனும் எடுக்க மாட்டார். இதெல்லாம் சகஜம் தான்” என்று சமாளித்து வைத்தான்.
சாப்பிடவும் பிடிக்காமல் சமைக்கவும் தோன்றாமல், காலையில் எழுந்து ராகவி அமர்ந்திருக்க, குறிஞ்சியிடமிருந்து அழைப்பார் வந்தது.
பார்த்ததும் சந்தோசமாக எடுக்க, பேசியது கந்தன். குறிஞ்சிக்கு காய்ச்சல் வந்திருந்தது. அருகில் யாரும் இல்லாததால் அவளோடு வந்து தங்க முடியுமா? என்று கேட்டு வைத்தான்.
“அய்யோ.. காய்ச்சலா? ஹாஸ்பிடல் போனீங்களா?”
“இந்த நேரத்துல ஊசி மாத்திரை எதுவும் போட வேணாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க”
“ஓஓ.. சரி நான் வர்ரேன். ஆனா உங்க அட்ரஸ்?”
“நான் கார் அனுப்புறேன். அதுல வா. அப்படியே உன் டிரஸ் எடுத்துட்டு வாயேன். எப்படியும் இங்க தான தங்க போற?”
“சரி அண்ணா.” என்றவள், உடனே குளித்து கிளம்பினாள்.
தன் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டவள், அந்த வீட்டை ஒரு முறை பார்த்து பெருமூச்சு விட்டாள். பிறகு கடைசியாக ஒரு முறை ஏகாம்பரத்தை அழைத்தாள்.
“என்ன ராகவி சாப்பிட்டியா?” என்று ஏகாம்பரம் ஆரம்பிக்க, ராகவி விசயத்தை விளக்கினாள்.
“அதுனால நான் கிளம்பிப்போறேன். பாஸ் கிட்ட சொல்லனும் ஏகா”
“அவர் வேலை முடிஞ்சு வந்ததும் நான் சொல்லுறேன்”
“எங்க இருக்காருனு தெரியுமா?”
“ஊர விட்டு வெளிய இருப்பார்னு நினைக்கிறேன்”
“ப்ச்ச்.. சரி நான் கிளம்புறேன். அவர் பேசுனா மறக்காம சொல்லிடுங்க”
“சரிமா. பார்த்து போயிட்டுவா.”
கைபேசியை வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்தவள், வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு கந்தன் அனுப்பிய காரில் ஏறிக் கிளம்பி விட்டாள்.
ராகவியிடம் பேசி முடித்து விட்டு, ஏகாம்பரம் அருகே இருந்த சாராவை பார்த்தான். அவனது பார்வை மடிக்கணினியில் பதிந்திருந்தது.
“பாஸ்.. ராகவி எஸ்பி வீட்டுக்கு போறாளாம்”
“ம்ம்”
“பாஸ் உங்களுக்கு கவலையே இல்லையா? அங்க போயிட்டா திரும்ப அவ உங்க கிட்ட வர்ரது கஷ்டம். கந்தன் விட மாட்டாரு”
“போகட்டும் ஏகா”
“ஏன் பாஸ் இப்படி பண்ணுறீங்க? இதுக்கு அவள முன்னாடியே அனுப்பி இருக்கலாம். கலகலனு இருந்த பொண்ணு. நேத்து ரொம்ப டல்லாகிட்டா”
“இப்ப அத பத்தி எல்லாம் என்னால நினைக்க முடியாது ஏகா. அப்பா சாவுக்கு பழிவாங்குறது மட்டும் தான் என் மூளையில ஓடிட்டு இருக்கு. ராகவி எஸ்பி வீட்டுல சேஃப்பா இருப்பா. அது போதும். நாம நம்ம வேலைய பார்ப்போம்” என்று முடித்து விட்டான்.
ஏகாம்பரத்திற்கு இதைக்கேட்டு கோபம் வந்தாலும், ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாகி விட்டான்.
ராகவி கந்தன் இருக்கும் போலீஸ் குவாட்டர்ஸில் வந்து இறங்கினாள். வாசலிலேயே நின்றிருந்தான் கந்தன்.
சாதாரண உடையிலேயே அவனை பார்த்திருந்த ராகவி, முதல் முறையாக காக்கி உடையில் பார்த்ததும் சற்று பயந்து போனாள். அதை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.
“வா ராகவி. உள்ள வா.” என்றவன், அவளது பையை வாங்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.
“ரூம்ல இருக்கா வா” என்றவன், “நேத்து எதாவது சாப்பிட்டாளா?” என்று விசாரித்தான்.
ராகவி திரும்பிப் பார்க்க, “நேத்து உன் கூட வெளிய வந்தாளே. எதாவது சாப்பிட்டாளா?” என்று மீண்டும் கேட்டான்.
“ஆமா ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அதுனால தான் பீவரா?”
“ஐஸ்கிரீமா? கூலா எதுவுமே சாப்பிடாதனு சொல்லியும்.. வா பார்த்துக்கிறேன் அவள” என்றவன், ராகவியோடு அறைக்குள் நுழைந்தான்.
குறிஞ்சி போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள்.
“அண்ணி..” என்று ராகவி அழைக்கவும், மெல்ல கண்ணை திறந்தாள்.
ராகவி அவளை தொட்டுப் பார்த்து விட்டு, “ரொம்ப கொதிக்குது” என்றாள் கவலையாக.
“நேத்து ஐஸ்கிரீம் சாப்பிட்டியா?” என்று கந்தன் கேட்க, திருதிருவென விழித்து விட்டு உடனே கண்ணை மூடிக் கொண்டாள் குறிஞ்சி.
“எனக்கு தூக்கம் வருது” என்று வேறு கூற, “உன்னை வந்து பேசிக்கிறேன்” என்றான் கந்தன்.
“நேத்து நான் சொல்ல சொல்ல கேட்காம சாப்பிட்டீங்கள்ள? இப்ப பாருங்க.. உங்களால பாப்பாவும் கஷ்டப்படுது” என்று ராகவியும் திட்ட, “அண்ணனும் தங்கச்சியும் ரொம்ப தான் பண்ணுறீங்க. காய்ச்சல் தான? சரியா போயிடும். போங்க” என்றாள் குறிஞ்சி.
“இவள நான் பார்த்துருக்கேன். நீ சாப்பிடு மா. ரெண்டு பேருக்கும் வாங்கி வச்சுருக்கேன். எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுது. நான் கிளம்புறேன்” என்றதோடு கந்தன் கிளம்பிச் சென்று விட்டான்.
தொடரும்.
