சாரா 33
![]()
கந்தன் கிளம்பிச் சென்றதும், ராகவி குறிஞ்சியை எழுப்பினாள்.
“எந்திரிங்க அண்ணி.. சாப்பிட்டுட்டு அப்புறமா தூங்குங்க” என்று எழுப்ப, “எனக்கு பசிக்கல நீ சாப்பிடு” என்றாள் அவள்.
“பரவாயில்ல கொஞ்சமா சாப்பிடுங்க. வெறும் வயித்தோட இருந்தா பாப்பாவுக்கு பசிக்கும்” என்றவள், எழுப்பி விட்டு உடையை மாற்றவும் வைத்து சாப்பிட வைத்தாள்.
கந்தன் வாங்கி வைத்திருந்த உணவையே இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
“நான் போய் தூங்குறேன். கதவ பூட்டிக்க” என்று கூறி குறிஞ்சி நடக்க, “சாப்பிட்டதும் தூங்க கூடாது. கொஞ்ச நேரம் என் கூட டிவி பாருங்க” என்று இழுத்துச் சென்றாள்.
இருவரும் தொலைகாட்சியில் ஒரு படத்தை போட்டு விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களில் குறிஞ்சி கொட்டாவி விட, “போய் தூங்குங்க” என்று அனுப்பி விட்டாள்.
குறிஞ்சி அறைக்குள் சென்றதும், சாராவின் எண்ணை எடுத்து அவனுக்கு அழைத்தாள் ராகவி. அவன் அழைப்பை ஏற்கவில்லை. முகம் சுருங்கினாலும், ‘வேலையில இருப்பாங்க’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
குறிஞ்சி மூன்று மணி நேரத்திற்கு நன்றாக தூங்கி எழுந்தாள். மருத்துவரின் ஆலோசனைபடி காய்ச்சல் குறையவில்லை என்றால், மாலை மருத்துவமனை தான் செல்ல வேண்டும்.
குறிஞ்சி தூங்கி எழுந்து வெளியே வர, ராகவி அவளிடம் ஓடி வந்து தொட்டுப்பார்த்தாள்.
“குறைஞ்சுருக்குல?”
“ம்ம்..”
“சரி வாங்க. ரசம் வச்சேன். கேவலமா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஏகாம்பரம் சொல்லிக் கொடுத்தாரு” என்றவள், சாப்பாட்டை வைத்து ரசத்தையும் அப்பளத்தையும் வைத்தாள்.
“வாசம் நல்லா இருக்கு ராகவி.. சூப்பர்” என்றபடி சாப்பிட ஆரம்பித்த குறிஞ்சி, “நல்லா தான் இருக்கு. நீயும் சாப்பிடு” என்றாள்.
“நான் சாப்பிட்டேன்”
குறிஞ்சி தலையை ஆட்டி விட்டு, அடுத்த வாய் எடுத்து வைக்கப்போனவள் கை அப்படியே நின்றது.
விழிவிரிய வீட்டை சுற்றிப் பார்த்தாள். வீடு முழுவதும் சுத்தமாக இருந்தது.
“ராகவி..”
“என்ன அண்ணி? நல்லா இல்லையா?”
“இது யாரு வீடு?”
“எதே?”
“வீடு எதுவும் மாத்தி வந்துட்டோமா?” என்று கேட்டவள், வீட்டை சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
எல்லாம் போட்டது போட்ட இடத்தில் கிடக்கும். பெரிதாய் சுத்தத்தை பற்றி குறிஞ்சி அக்கறை காட்டுவதில்லை. இப்போது அனைத்தும் ஒழுங்காக பளிச்சென மாறி இருந்தது.
“நிஜம்மாவே இது நம்ம வீடு தானா?”
“இல்லயே.. இது போலீஸ் குவாட்டர்ஸ் அண்ணி. கவர்மெண்ட் வீடு”
“கிண்டல் பண்ணாத. நீயா க்ளீன் பண்ண?”
“எல்லாம் கலைஞ்சு போய் கிடந்துச்சு. எனக்கு எப்பவும் நீட்டா இருக்கனும். அப்படி இல்லனா பாட்டி அடிக்க வந்துடுவாங்க. அதுனால இங்கயும் சரி பண்ணேன். நல்லா இருக்கா?”
“கைய கொடு” என்றவள், அவளது இடக்கையை பிடித்து குலுக்கினாள்.
“நான் நாலு நாளானாலும் செய்ய முடியாதத, நீ நாலு மணி நேரத்துல செஞ்சுருக்க. செம்ம போ”
“எனக்கு இதான் ஒழுங்கா வரும்”
“க்ளீன் பண்ணி சமைக்கவும் செஞ்சியா? ரெஸ்ட் எடுத்து இருக்கலாம்ல?”
“நான் அங்கயும் ரெஸ்ட் தான் எடுத்தேன். இங்கயும் ரெஸ்ட் எடுக்கவா? சும்மாவே இருந்து போரடிக்குது”
“அங்க உனக்கு வேலை இருக்காதா?”
“ம்ஹும். ஏகாம்பரம் எல்லாத்தையும் பார்ப்பாரு. நான் அவருக்கு ஹெல்ப் பண்ணுவேன். பாஸ் எப்பவும் எந்த வேலையும் சொல்ல மாட்டாரு. அந்த வீட்டுல நான் வேலைக்காரியா? இல்ல கெஸ்ட்டானு எனக்கே டவுட்டு வரும்.”
“ஓஹோ.. உன் காயம் எல்லாம் ஆறிடுச்சா?”
“இப்ப பெரிசா எதுவும் வலிக்கல. எல்லாம் மறைஞ்சுடுச்சு”
“டாக்டர் கிட்ட போகனுமா?”
“போகனும் தான். ஆனா பாஸ் பிசியா இருக்காரே. எப்படி போக? அவர் பேசுனா தான் கேட்கனும்”
“பேசலயா?”
“ரெண்டு நாளா வெளியூர்ல இருக்கார் போல. என்னனு தெரியல”
“சரி விடு. அவர் கிட்ட பேசுனா சொல்லு. இல்லனா நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட காட்டலாம்”
“ஓகே.”
“சூப்பரா இருக்கு ரசம்” என்றவள் நன்றாக சாப்பிட்டு முடித்தாள்.
இருவரும் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
“வீடு க்ளீனா இருக்கதும் நல்லா இருக்குல? முதல்ல எல்லாம் நானும் சும்மா இருக்க பிடிக்காம க்ளீன் பண்ணுவேன். பாப்பா வந்தப்புறம் தான் எதையும் செய்யுறது இல்ல. சீக்கிரமே டயர்ட் ஆகிடுதுனு விட்டேன். டாக்டரும் நிறைய வேலை பார்க்கக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அதுனால அப்படியே போட்டு வச்சுட்டேன்.”
“உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு அண்ணி?”
“ஆறு வருசம் ஆகுது”
“வாவ்..! நான் கூட நீங்க புதுசா கல்யாணமானவங்கனு நினைச்சேன்.”
“இளம் ஜோடிகள் மாதிரியா தெரியுறோம்? ஆனா ஆறு வருசம் ஆகிடுச்சு”
“உங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு?”
“அரேன்ஜ்ட் மேரேஜ் தான். அவருக்கு பொண்ணு பார்த்தாங்க. எப்படியோ என் ஜாதகம் அவங்க கைக்கு போயிருக்கு. பொருத்தம் பார்த்து பிடிச்சதுனு வந்து கேட்டாங்க. எங்க வீட்டுலயும் சரினு சொல்லிட்டாங்க. கல்யாணமாகிடுச்சு”
“ஓஹோ..”
“முதல்ல உங்கண்ணனோட மாமா வீட்டுல தான் இருந்தோம். போஸ்டிங் மாறவும் இங்க வந்துட்டோம்.”
“ம்ம்”
“முதல்ல ரெண்டு மூணு வருசம் பிள்ளை பிறக்கலனு எங்களுக்கு தோணல. ஆனா போகப்போக சொந்தக்காரவங்க எல்லாம் பிள்ளை இல்லையானு கேட்டு கேட்டு, ஒரு வழியாக்கிட்டாங்க. வேற தனி வீட்டுல தான் இருந்தோம். சொந்தக்காரவங்க வந்து வந்து எதாவது பேசுறாங்கனு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.
பட் இருந்தாலும் எங்களுக்கும் பாப்பா வேணும்னு ஆசை.. டாக்டர்ஸ் கிட்ட போய் டிரீட்மெண்ட் எடுத்து, இதோ இப்ப அஞ்சு மாசமாச்சு.”
புன்னகையுடன் வயிற்றை தடவி, உள்ளே இருக்கும் குழந்தையை நினைத்து புன்னகைத்தாள்.
“ஆனா இப்பலாம் சீக்கிரம் டயர்ட் ஆகிடுறேன்னு எங்க ஊருக்கு ரெஸ்ட் எடுக்க போயிட்டேன். அவருக்கு கூட.. அவருக்கு எப்பவும் வேலை தான்” என்று சமாளித்து நிறுத்தினாள்.
இப்போது கந்தனுக்கு சஸ்பென்ஸன் வந்ததும், ஆனால் அது உடனே நீக்கி அவனை வேலைக்கு அழைத்ததும் தான் சொல்ல வந்தாள்.
“சஸ்பென்ஸன்ல இருக்கேன். இங்க வா. கூடவே இருக்க போறேன்” என்று சொல்லித்தான் அழைத்திருந்தான் கந்தன்.
அதனால் தான் அவளும் கிளம்பி வந்திருந்தாள். ஆனால் என்ன அவசரமோ? சஸ்பென்ஸனை உடனே நீக்கி விட்டு, அவனுக்கு வேலை கொடுத்திருந்தனர். இடையில் குறிஞ்சி தனியாக இருக்க முடியாது என்பதால், உடனே ராகவியையும் வர வைத்திருந்தான்.
இதை எல்லாம் சொல்லலாம் தான். ஆனால் சஸ்பென்ஸன் வந்தது சாராவால் அல்லவா? அதை பற்றிக் கேட்டு விடுவாளோ? என்று சொல்லாமல் விட்டு விட்டாள்.
“உங்களுக்கு பயமா இருந்தது இல்லையா அண்ணி?”
“பயமா? எதுக்கு?”
“இல்ல அண்ணன் போலீஸ்ல?”
“அவரு போலீஸ்னா அவர பார்த்து நான் பயப்படனுமா?”
“அது இல்ல. அண்ணன் போலீஸ்.. எத்தனையோ பிரச்சனை வரும்ல? அதெல்லாம் நினைச்சு நீங்க பயந்தது இல்லையா?”
“நீ சினிமாவ பார்த்துட்டு பேசுறியா? அப்படி எல்லாம் ரியல் லைஃப்ல நடக்காது. அது ஜஸ்ட் என்டர்டெயின்மென்ட் காக காட்டுறது. நிஜம் வேற. அது வேற.” என்று புன்னகையுடன் விளக்கினாள்.
“ஓஓ” என்றவள் யோசனையுடன் தொலைகாட்சியை பார்த்தாள்.
‘நிஜம் வேற சினிமா வேற’ என்ற வார்த்தை அவளுக்குள் ஆழமாக புதைந்தது.
*.*.*.*.*.*.*.*.
சிவராஜ் அந்த காபி சாப்பில் அமர்ந்திருந்தான். ஒரு பிரபல இசையமைப்பாளருடைய மேனேஜர் வந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஒரு இசையமைப்பாளருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது அவனுடைய கனவு. அதற்கான வேலையில் இருந்த நேரம் தான், அனுபமா அவனை கடத்திச் சென்றது.
இப்போது அவர் கேள்வி கேட்டார்.
“அஞ்சு மாசமா உங்கள பிடிக்க முடியலயே சிவா. வீட்டுல கேட்டா ஃபாரின் போயிட்டதா சொன்னாங்களே?”
“ஆமா சார். அங்க தான் இருந்தேன்”
“அங்க என்ன வேலை?”
“உடம்பு சரியில்ல சார். டிரீட்மெண்ட் பார்த்துட்டு ரெஸ்ட் எடுக்க போயிட்டேன்”
“ஓஓ இப்ப ஓகே வா?”
“ம்ம்” என்று தலையாட்டியவன், அந்த இசையமைப்பாளருடன் வேலை செய்ய என்ன செய்வது என்று பேசி முடித்தனர்.
“சரி பார்க்கலாம் சிவா” என்றதோடு கை குலுக்கி, அவர் விடை பெற்றுச் சென்றார்.
சிவா அவரை அனுப்பி விட்டு வாசலை பார்த்துக் கொண்டிருக்க, அனுபமா உள்ளே வந்தாள்.
சிவா இருப்பதை கவனிக்காமல், ஒரு மேசையில் சென்று அமர்ந்து விட்டாள்.
சிவா அவளை பார்த்து புன்னகைத்து விட்டு, எழுந்து அவளிடம் சென்றான்.
“ஹாய் ஏசிபி..” என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டு அவளெதிரே அமர்ந்து விட்டான்.
அனுபமா அவனை முறைக்க ஆரம்பித்தாள். அதைப்பற்றிக் கவலைப்படாமல், “காலையில தான் பார்த்தோம். ஈவ்னிங் மறுபடியும் பார்த்துட்டோமே. உலகம் ரொம்பவும் சின்னதா இருக்குல?” என்று கேட்டு வைத்தான்.
அனுபமா அப்போதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவள் ஆர்டர் செய்த காபி வந்து சேர்ந்தது.
அதை அவள் எடுக்கும் முன்பே, சிவா எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான்.
“அது நான் ஆர்டர் பண்ணது” என்று அனுபமா பல்லைக்கடித்துக் கொண்டு பேச, “நல்லா இருக்கு” என்றான்.
அனுபமாவிற்கு அந்த காபியை வாங்கி அவன் முகத்தில் ஊற்றும் வெறி தான் வந்தது. ஆனால் செய்யாமல் அமர்ந்திருந்தாள்.
சிவா காபியை முழுதாக குடித்து முடித்து விட்டு, “இந்த காபிக்காக நீ அடிச்சத மன்னிச்சுட்டேன்” என்றவன், காலி கப்பை வைத்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
‘உன் கிட்ட யாருடா மன்னிப்பு கேட்டது?’ என்று அனுபமா மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.
அந்நேரம் அவளது கைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்து விட்டு காதில் வைத்தாள்.
“ம்மா?”
“அனு…” என்று அழுதார் அனுபமாவின் அன்னை.
“ம்மா என்னாச்சு?”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அனு” என்று கூற, அதிர்ந்து எழுந்து விட்டாள்.
“எப்போ? எங்க இருக்கீங்க?”
“ஹாஸ்பிடல்ல இருக்கோம். நீ வர்ரியா?”
“இப்பவே கிளம்புறேன். டாக்டர் என்ன சொன்னாங்க?”
“எதுவும் சொல்லல. இப்ப தான் ஹாஸ்பிடல் வந்தோம். உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க”
“சரி அழாதீங்க. நான் வர்ரேன்” என்றவள், பணத்தை கொடுத்து விட்டு காரை நோக்கி விரைந்தாள்.
அவள் அரக்கப்பரக்க ஓடுவதை தூரமாக நின்று பார்த்த சிவா, ‘ஆரம்பிச்சுட்டான் போல’ என்று நினைத்துக் கொண்டான்.
அனுபமா அப்போதே வேலைக்கு விடுமுறை சொல்லி விட்டு, தன் ஊரை நோக்கி பறந்திருந்தாள். ஆறு மணி நேர பயணம் முடிந்து நள்ளிரவு தான் சென்று சேர்ந்தாள்.
போகும் வழியிலேயே, அவளுடைய தந்தையின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்ற விவரம் கிடைத்து விட்டது.
ஆனாலும் பதட்டத்துடன் தான் சென்று சேர்ந்தாள்.
அங்கு அனுபமாவின் அன்னை கலாவும் அவளது தம்பி பிரபுவும் இருந்தனர். கூடவே அவளது தாய்மாமனும் நின்றிருந்தார்.
“அப்பா எங்கமா?” என்று வந்ததுமே விசாரிக்க, “உள்ள தான் இருக்காரு. நைட் முழுக்க அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.” என்றார் மாமா.
“வேற எதுவும் பிரச்சனை இல்லையே?”
“இப்போதைக்கு உயிருக்கு ஆபத்தில்லனு சொல்லிருக்காங்க”
“ஏன்மா இப்படி திடீர்னு? என்ன நடந்துச்சு?” என்று கேட்க, கலாவின் கண்ணீர் தான் வழிந்து ஓடியது.
“என்னாச்சு மாமா?”
“வீடு ஜப்தி பண்ண போறாங்களாம்மா” என்று விசயத்தை உடைத்தார்.
“என்னது?” என்று புரியாமல் கேட்டவள், “ஓஓ பாட்டி வீட்டயா?” என்று கேட்டாள்.
“ஆமா. அது தான் மச்சானுக்கு உசுராச்சே. அந்த வீட்ட மீட்க முடியாம ஜப்தி பண்ணுற நோட்டீஸ் வரவும், நெஞ்ச பிடிச்சுட்டு விழுந்துட்டாரு”
“வட்டி தான் கட்டிட்டு இருக்கோமே? அப்புறம் என்ன?”
“அதான் தெரியல. பேங்க்ல இருந்து நோட்டீஸ் வந்துருக்கு”
“நான் என்னனு பார்க்குறேன். இப்ப டாக்டர பார்க்கலாமா?”
“அவர் எமர்ஜென்ஸி வார்ட்க்கு போயிட்டாரு. காலையில தான் வருவாராம்”
“சரி அப்போ நான் இங்க இருக்கேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு அப்பாவுக்கு தேவையானத எடுத்துட்டு காலையில வாங்க” என்று கூறி மூவரையும் அனுப்பி விட்டு, அவள் மட்டும் அமர்ந்திருந்தாள்.
ஏன் திடீரென இந்த ஜப்தி? என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அதைச் செய்தவன், அழகாக அடுத்த திட்டத்தை ஆரம்பித்திருந்தான்.
சத்தமில்லாமல் அனுபமாவை ஊருக்கு அனுப்பியவன், அவனது ஆட்களை கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பெட்டகத்தில் கை வைத்திருந்தான்.
அனுபமா ஊர் திரும்பும் போது, வைரவரின் வழக்கு சம்பந்தமாக இருந்த அத்தனை சாட்சிகளும் ஆதாரங்களும், மந்திரம் போட்டது போல் மறைந்து போனது.
தொடரும்.
