சாரா 36

Loading

அனுபமா அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய அறை தான். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட உயர்பதவியில் இருப்பவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர்.

சிலர் சில விசயங்களை பேசி முடிக்க, அனுபமாவின் விசயத்தை எடுத்தார் கமிஷ்னர்.

“வைரவர் கேஸ் சம்பந்தமா இருந்த எவிடன்ஸ் காணாம போயிடுச்சாமே?” என்று கேட்க, அனுபமா தலையை மட்டும் ஆட்டினாள்.

“அந்த கேஸ் கோர்ட்க்கு வந்தா என்ன செய்ய போறீங்க?” என்று மற்றொருவர் கேட்க, “இங்க இருக்கிறது மட்டும் தான் எவிடன்ஸ்னு இல்லயே. வருசகணக்கா இந்த கேஸ்காக உழைச்சுருக்கேன். அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் விட்டுர மாட்டேன்.” என்று தைரியமாகவே பதில் சொன்னாள்.

“வேற எவிடன்ஸும் இருக்கா?”

“இருக்கு”

“அதையாவது பாதுகாப்பா வைங்க” என்று கமிஷ்னர் கூற, அனுபமா இறுகிய முகத்துடன் தலையை ஆட்டினாள்.

“எப்படித் தொலைஞ்சதுனு இன்னும் கண்டு பிடிக்கலயா?”

“கண்டு பிடிக்கிறது கஷ்டம் சார். ஏன்னா கூட இருக்கவங்களே தான் திருடி இருக்காங்க. திருடன் வெளிய இருந்து வந்தா தான் நமக்கு க்ளூ கிடைக்கும். போலீஸே திருடனா மாறுனா? அதுவும் ஒரு அயோக்கியனுக்கான எடுத்துக் கொடுத்துட்டு, இன்னும் காக்கி சட்டைய போட்டுட்டு டியூட்டில வெட்கமே இல்லாம இருக்காங்க. அதெல்லாம் நினைச்சா தான் பத்திட்டு வருது” என்று கடுப்பாகவே பேசினாள்.

“யாருனு சேர்த்துக் கண்டு பிடிங்க அனுபமா. இப்படி பட்ட ஆளுங்கள உள்ள வச்சுருக்கது நமக்கு தான் ஆபத்து”

அதற்கும் தலையாட்டி வைத்தாள்.

“வைரவர் செத்தது கொலைனு சந்தேகப்பட்டு உங்க மேல கேஸ் கொடுத்துருக்காங்க”

“நான் தான் கொன்னேன்னு முடிஞ்சா நிரூபிக்க சொல்லுங்க. கோர்ட்ல தண்டனை வாங்கி கொடுக்க வேண்டிய ஆள நான் ஏன் கொல்லனும்? அப்படிக் கொல்லுறதா இருந்தா, இந்த மிஷன ஏன் மூணு வருசம் இழுத்தடிக்க போறேன். அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச போதே ஈசியா கொன்னுருக்கலாமே? முடிஞ்சா நிரூபிக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்”

“நிஜம்மாவே நீங்க எதுவும் பண்ணலயா?”

ஒருவர் சந்தேகமாக கேட்க, “பண்ணுனா ஆமா ஒத்துக்கிற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு” என்று தலை நிமிர்த்தி திமிராகவே பேசினாள்.

“அப்ப என்ன தான் நடந்தது?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“நீங்க ஸ்பாட்ல இல்லையா?”

“டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போயிருந்த கொஞ்ச நேரத்துல, அவருக்கு நெஞ்சு வலினு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதா நியூஸ் வந்துச்சு. காண்ஸ்டபிள் தான் கால் பண்ணாரு. சரினு நேரா ஹாஸ்பிடல் போனா, அங்க ஏற்கனவே செத்துட்டாருனு சொல்லிட்டாங்க. இவ்வளவு தான் ஆச்சு. இதுல நான் கொன்னேன்னு சொன்னா எப்படி?”

“அப்ப அந்த கேஸ் நிக்காது. விட்டுரலாம். ஆனா வைரவரோட கடத்தல் கேஸ் எப்படியும் கை விட்டுப் போகக்கூடாது. அதுக்கான வேலைய சரியா பாருங்க”

அழுத்திச் சொல்ல, அனுபமா தலையசைத்தாள்.

“இந்த சிவராஜ்ஜ கடத்துனதா கேஸ் இருக்கே?”

“அது கஷ்டடில எடுத்தது. அந்த மிஷன்ல எத பண்ணவும் எனக்கு பர்மிஸன் இருக்கு. வைரவர் கேஸ் கொடுத்தார்னா, அத எடுத்த அந்த இன்ஸ்பெக்டரும் என் லிஸ்ட்ல இருக்காரு. முதல்ல அவருக்கு வார்னிங் கொடுங்க. நம்ம சைட் இருந்துட்டு, அவங்களுக்கு சாதகமா கேஸ் எழுதுறது என்ன பழக்கம்? இன்னும் எத்தனை பேர் அவங்களுக்கு சாதகமா இருந்தாலும் சரி. அத்தனை பேரையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன். காக்கி சட்டையை மாட்டிட்டு நாட்ட காப்பாத்த வந்தாங்களா? இல்ல அந்த வைரவருக்கு பணிவிட பார்க்க வந்தாங்களா? இதுக்கு எதுக்கு காக்கி? நேரா அவர் வீட்டுல வேலைக்காரனா போயிட வேண்டியது தான?”

எரிச்சலில் அவள் பொறிந்து தள்ள, “கூல் அனுபமா” என்று அமைதி படுத்தினர்.

எல்லோரும், என்ன தான் வழக்கு இருந்தாலும் காவல்துறையை சேர்ந்தவள் என்பதால், அனுபமாவை தான் அப்போது ஆதரித்தனர்.

மேலும் பல விசயங்களை விவாதித்து முடித்து விட்டு, கூட்டம் கலைந்தது.

அனுபமா எரிச்சலோடு தன் அலுவலகம் கிளம்பினாள்.

‘வேலைய செய்ய விடாம இம்சை பண்ணிட்டே இருக்கான். ஆனா நானும் சளைச்சவ இல்லடா.. உன்னை எப்படி லாக் பண்ணுறேன்னு வெயிட் பண்ணி பாரு’ என்று நினைத்துக் கொண்டாள்.

அலுவலகம் நுழைந்து அறைக்குள் செல்ல, அவளுக்கு பின்னால் வந்து நின்றான் சிவா.

அவனை எதிர்பாராமல் முதலில் அதிர்ந்தவள், பிறகு கோபம் தலைக்கேற முறைத்தாள்.

“ஏய்.. இதென்ன உன் வீடுனு நினைச்சியா? பர்மிஷன் கேட்காம உள்ள வர்ர?” என்று அவள் எகிற, “அட கத்தாதமா.. நல்ல செய்தி கேட்டேன். அந்த சந்தோசத்துல உன்னை பார்க்கனும்னு ஓடி வந்தேன்” என்றான் கூலாக.

“மரியாதை வெளிய போயிரு”

“நல்ல செய்தி என்னனு கேட்க மாட்டியா? என் அப்பாவுக்கு எதிரா வச்சுருந்த ஆதாரத்த காணோமாமே.. வாழ்த்துக்கள் ஏசிபி.. உங்க மூணு வருச உழைப்பு ஃப்பூனு பறந்துடுச்சு போல?”

“என்னடா? அண்ணனும் தம்பியும் சேர்ந்து திருடிட்டா நான் தோத்துடுவேன்னு நினைப்பா?”

“சாரா எடுத்துருப்பான்னு சொல்லுறியா? வாய்ப்பிருக்கு. அவனுக்கு எங்கப்பானா உயிர்” என்று கையை விரித்து சொன்னான்.

“நீ மட்டும் நல்லவனாக்கும்?”

“நீ நம்பலனா கூட எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. அப்புறம் இவ்வளவுக்கு அப்புறமும் திமிரா நிக்கிற பார்த்தியா.. இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. இப்பலாம் உன்னை கூட எனக்கு என்னமோ பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு பாரேன். வித்தியாசமா இல்ல? ஆனா நடந்த நல்ல விசயத்துக்கு வாழ்த்தும் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன். வாழ்த்துக்கள். இந்த நல்ல விசயத்த கொண்டாட பிரியாணி வாங்கி சாப்பிட போறேன். நீயும் வாயேன்”

“கன் எடுக்குறதுக்குள்ள ஓடிப்போயிரு”

“ரொம்ப சூடா இருக்க. ஏசி போட்டுக்கோ ஏசிபி. பேர்லயே ஏசி வச்சுட்டு இவ்வளவு சூடு ஆகாது. நான் கிளம்புறேன். அப்புறம் உங்கப்பாவ கேட்டதா சொல்லு. அதையும் கேள்விப்பட்டேன். கொஞ்சம் வருத்தம் தான். ஆனா என் அப்பாவ தூக்குனியேனு உன் அப்பாவ சாரா முடிச்சு விடல. அது வரை தப்பிச்ச” என்றவன் நக்கலாக சிரித்து விட்டு வெளியேறி விட்டான்.

அனுபமாவின் கோபம் எல்லையை தொட்டது. துப்பாக்கியை எடுத்து அப்போதே சிவாவையும் சாராவையும் சுட்டுத்தள்ளும் வேகம் தான் வந்தது.

அவளை கடுப்பேற்றி விட்டு, சிவா கூலாக கிளம்பிச் சென்றான். உண்மையாகவே ஒரு ஹோட்டலில் அமர்ந்து, பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிடவும் செய்தான்.

அவன் பிரியாணியை ரசித்துக் கொண்டிருக்க, காசியிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுடா”

“எங்க இருக்க?”

“ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கேன். நீயும் வர்ரியா?”

“இப்ப என்ன பிரியாணி?”

“ரொம்ப நாளாச்சு. தோனுச்சு. நீ வர்ரியா இல்லையா?”

“வர்ரேன்” என்றவன் உடனே கிளம்பியிருந்தான்.

சில நிமிடங்களில் காசி அந்த ஹோட்டலுக்குச் செல்ல, அவனுக்கும் பிரியாணி வந்தது.

சாப்பிட்டபடி சிவாவை அளந்தவன், “ஏசிபி ஆஃபிஸ் போனியா?” என்று கேட்டான்.

“ஆமா..”

“ஏன்?”

“நீ ஏன் கேட்குற?”

“இப்பலாம் நீ அந்த அனுபமா பின்னாடி சுத்துற மாதிரி தோணுது”

“அப்படியா தோணுது?”

“ஆமா. ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க? அவ துரோகி”

“அவ அவளோட டியூட்டிய பார்த்தா.”

“சிவா.. அவளால தான் அப்பா நம்மல விட்டு போனாரு”

“அவ பண்ணியிருக்க மாட்டா காசி”

இதைக்கேட்டதும் காசி சற்று அதிர்ந்து போனான்.

“அவ இதை பண்ணனும்னா, நம்ம வீட்டுக்கு வந்தப்ப எப்படியாவது அப்பாவ கொல்ல ட்ரை பண்ணிருப்பா. ஆனா அவ சட்டம் பக்கம் நிக்கிறவ. அப்பாவ சட்டப்படி தான் தண்டிக்கனும்னு தான் இவ்வளவும் பண்ணியிருக்கா. அவ அப்பாவ கொல்ல சான்ஸே இல்ல. சாரா வீணா அவ மேல சந்தேகப்படுறான்னு தோணுது”

“நீ என்னடா இப்படி மாறிட்ட?”

“நான் எப்பவுமே இப்படித்தான்.”

“அதுக்காக உன்னை கடத்துனவள மன்னிச்சுடுவியா?”

“நான் மன்னிக்கலயே.. அதான் அவ கிட்ட பேசி அவள வெறுப்பேத்திட்டு இருக்கேன். அதுக்காக, அப்பாவோட சாவுக்கு அவ தான் காரணம்னு சொன்னா என்னால நம்ப முடியல. ஒரு வேளை ரிப்போர்ட்ல வந்த மாதிரி, அப்பா நிஜம்மாவே ஹார்ட் அட்டாக்ல இறந்துருக்கலாம்”

காசிக்கு சிவாவின் மீது வெறுப்பு வந்தாலும், காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப அப்பா மேல போட்ட கேஸ்?”

“அத சாரா பார்த்துப்பான். சாரா விசயத்துல நான் எப்படித் தலையிடலயே, அது போல தான் அனுபமா விசயத்துலயும் தலையிடல. அவ அவ டியூட்டிய பார்த்துருக்கா. சாரா அப்பாவுக்காக எல்லாம் பண்ணுறான். இதுல நடுவுல நான் என்ன செய்ய முடியும்?”

சிவா கையை விரித்து கேட்க, காசி அவனை அமைதியாக பார்த்து விட்டு சாப்பிட மட்டுமே செய்தான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை, சிவாவும் தன் கைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

முடித்ததும், “கிளம்பலாமா?” என்று கேட்டு எழுந்து கொண்டான்.

இருவரும் நடந்தனர். கார் அருகே வந்ததும், “நீ எதுல வந்த?” என்று கேட்டான்.

“ஆட்டோல..”

“சரி வா ஒன்னா போகலாம்”

“இல்ல எனக்கு வேலை இருக்கு. ஆனா..”

“ம்ம்?”

“உனக்கு அந்த ஏசிபி மேல லவ் எதுவும் இருக்கா?”

“வாட்?”

“நீ நடந்துக்கிறது அப்படி தான் இருக்கு”

“லவ் பண்ணுற அளவுக்கு அவள எனக்கு பிடிக்கல. ஆனா அதுக்காக, உங்கள போல அவள என்னால வெறுக்கவும் முடியாது. உனக்கே தெரியும்.. சாராவோ அப்பாவோ பண்ணுற வேலை எனக்கு எப்பவும் பிடிக்காதுனு. என்னைக்காச்சும் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னு எனக்கு தெரியும். அது அனுபமாங்குற போலீஸால வந்துருக்கு. அத சமாளிக்க வேண்டியது சாரா பொறுப்பு. அப்பா இறந்ததுல எனக்கு வருத்தம் நிறைய இருக்கு. அதுக்காக நான் போய் ஒரு போலீஸ குறை சொல்ல முடியாது காசி. அவ அவ டியூட்டி பார்த்துருக்கா. நீங்களும் உங்க வேலைய பாருங்க. நான் என் வேலைய பார்க்குறேன். அவ்வளவு தான். சரி நேரமாச்சு. கிளம்புறேன். மியூசிக் டைரக்டர் கூட மீட்டிங் இருக்கு. பை”

நீளமாக பேசி விட்டு, காசியின் பதிலை எதிர் பாராமல் கிளம்பி விட்டான் சிவா.

காசி மனம் கசக்க அங்கிருந்து கிளம்ப, இருவரின் பேச்சையும் முழுதாய் கேட்டுக் கொண்டிருந்த நிரூபன் அனுபமாவிடம் அதை அப்படியே சொன்னான்.

அத்தனையும் கேட்ட அனுபமா, பெரிதாய் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை.

“எனக்கு அவன நல்லாவே தெரியும். ரொம்ப நல்லவன். இல்லனா அவன் கிட்ட காதல் நாடகம் ஆடிருப்பனா? ஒரு அயோக்கியன் கிட்ட காதல் நாடகம் போட்டுருந்தா, என் நிலைமை மோசமாகியிருக்கும். இவன் ரொம்ப நல்லவன்னு தெரிஞ்சு தான் துணிஞ்சு வேலை பார்த்தேன்”

“ஆனா உனக்கு சாராவ தான பிடிச்சது?”

“அது ஒரு க்ரஸ் மாதிரி. ஆப்போஸிட் அட்ராக்ட் மாதிரி. ஆனா இப்ப அவன நினைச்சா பத்திட்டு வருது. என் கையால அவன கொல்லனும் போல இருக்கு”

“அவன அப்புறம் பார்க்கலாம். இப்ப கேஸ் என்ன செய்யப்போற?”

“குருவும் வரட்டும் பேசலாம். அது வரை விசயத்த ரகசியமா வச்சுக்கோ.” என்று முடித்து விட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து குரு வந்து சேர்ந்தான். பூபதியின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்திருந்தது. அந்த நற்செய்தியோடு வந்தவனை, அனுபமா அவளது அலுவகத்திற்கு அழைதாள்.

அங்கு அனுபமாவும் நிரூபனும் இருக்க, குருவும் வந்து அமர்ந்தான்.

“என்ன விசயம்? எவிடன்ஸ் என்ன ஆச்சுனு தெரிஞ்சதா?”

“அத தேடுறத விட இருக்கத காப்பாத்த பார்ப்போம்” என்றாள்.

“என்ன செய்ய போற?”

“முதல்ல நம்ம ஃபோன டாப் பண்ணுறாங்கனு தோனுது”

“வாட்?”

“சாரா செய்யக்கூடியவன் தான். அதுனால இனிமே எதுனாலும் இதுல பேசலாம்” என்று கூறி, பட்டன் வைத்த மிக மிகப்பழைய கைபேசி மூன்றை எடுத்து முன்னால் வைத்தாள்.

“இதுலயா?” என்று நிரூபன் கேட்க, “அப்ப நம்ம போன தூக்கி போடனுமா?” என்று குரு கேட்டான்.

“தேவையில்ல”

“இதுல வேற சில டீடைல்ஸும் இருக்கே?”

“அது சாராவுக்கு தேவையில்லாத ஆணி. அத அவன் தொடக் கூட மாட்டான். அவனுக்கு தேவை இந்த கேஸ் பத்தின டீடைல்ஸ் தான். அப்புறம்.. மூணு பேரும் வேற யாரு கிட்டயும் எதுவும் பேசக்கூடாது. நாம மட்டும் தான் பேசனும். இதுல தான் பேசனும். அதுவும் எப்படிப்பேசனும்னு அப்புறமா சொல்லுறேன்”

“நிச்சயமா சாரா வேற எந்த விசயத்தையும் தொட மாட்டானா?”

“அவன் ஏன்டா அடுத்தவங்க விசயத்துல போய் நேரத்த வேஸ்ட் பண்ண போறான்? அதெல்லாம் பண்ண மாட்டான்” என்று சரியாகவே கணித்திருந்தாள் அனுபமா.

“சரி அடுத்து என்ன?”

“ஒன்னும் கிடையாது. இதுக்கு மேல பேசவே வேணாம். பூபதி ஆப்ரேஷன் என்ன ஆச்சு?”

“சரியா முடிஞ்சுடுச்சு”

“சீக்கிரம் நடந்துடுவானா?”

“ம்ம். அப்படி தான் டாக்டர் சொல்லியிருக்காங்க”

“கெட்டதுலயும் நல்லதா பூபதி ஆப்ரேஷனுக்கு சாரா ஹெல்ப் பண்ணிட்டான்”

“ஆனா இது தெரிஞ்சா பூபதி ஆப்ரேஷன் பண்ணிக்க சம்மதிக்க மாட்டான்னு சொல்லவே இல்ல”

“ம்ம்.. பின்ன? அவன அந்த அடி அடிச்சு போட்டதே அவன் தான?”

“உன் அப்பா எப்படி இருக்காரு?”

“அவர் இப்ப ஓகே”

“அவன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுனு, உன் அப்பாவுக்கும் வர வச்சுட்டான் பாரேன்”

“அவன் அப்பனும் என் அப்பாவும் ஒன்னா? என் அப்பா உழைச்சு சம்பாதிச்சு வாழுறவரு. அவனோட அப்பன் கடத்தல் பண்ணி, ஊர ஏமாத்தி வாழ்ந்தவன். நான் படிச்சு, நேர்மையான போலீஸா, நாட்ட காப்பாத்திட்டு இருக்கேன். அவன் ஊர அடிச்சு உலையில போட்டு ஏப்பம் விடுறவன். அவனும் நானும் ஒன்னா? என்னைக்காச்சும் அவன் என் கையில மாட்டுனான்? அந்த இடத்துலயே வச்சு சுட்டுத்தள்ளனும்னு போல வெறியா வருது”

அனுபமா கொந்தளிக்க, அவளது கொந்தளிப்பின் பிரதிபலிப்போ என்னவோ? அன்று இரவு சாராவின் காரை ஒரு லாரி தூக்கி எறிந்திருந்தது.

தொடரும்.

Leave a Reply