சாரா 37

Loading

இரவு தாமதமாக வீடு திரும்பினான் கந்தன். வீட்டின் மற்றொரு சாவி அவனிடமிருந்ததால், கதவை திறந்து உள்ளே வந்தவன் ராகவி இருக்கும் அறையை எட்டிப் பார்த்தான். விளக்கு எரியவில்லை.

பிறகு தங்களது அறைக்குள் சென்றவன், சத்தமில்லாமல் உடை மாற்றி வந்தான்.

என்ன தான் அவன் அமைதியாக வேலை செய்தாலும், குறிஞ்சி விழித்து விட்டாள்.

தூக்கத்தோடு அவனை பார்க்க, “வந்துட்டேன் தூங்கு” என்றான்.

தலையாட்டி விட்டு அவள் உறங்கி விட, கந்தன் அருகே படுத்துக் கொண்டு சில நிமிடங்கள் விட்டத்தை பார்த்து, எதோ யோசித்துக் கொண்டிருந்து விட்டு உறங்கினான்.

காலையில் ராகவி தான் முதலில் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பித்திருந்தாள். சமையலை மட்டும் வழக்கம் போல் அவள் தொடுவது இல்லை.

கந்தனுக்காக சமைத்து வைத்து விட்டு குறிஞ்சி காத்திருக்க, ராகவி குளிக்கச் சென்று விட்டாள்.

கந்தன் ராகவி இல்லாததை உறுதி செய்து விட்டு, மனைவியை அழைத்தான்.

“என்னங்க?”

“ராகவி?”

“குளிக்கப்போயிருக்கா”

“அவ கிட்ட சொல்லாத. நேத்து சாரா கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு” என்று கூறவும், குறிஞ்சி அதிர்ந்து போனாள்.

“அச்சச்சோ”

“பதறாத அவன் நல்லா தான் இருப்பான்”

“நல்ல வேளை” என்று பெருமூச்சு விட, கந்தன் அவளை முறைத்தான்.

“அவன் அக்யூஸ்ட் அவன் நல்லா இருக்கான்னு சந்தோசமா உனக்கு?”

“அவன் உங்களுக்கு அக்யூஸ்ட்டா இருந்தாலும், ராகவிக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்.”

“ரொம்ப முக்கியம். அவ கிட்ட சொல்லாத”

“என்ன நடந்துச்சு?”

“சரியா தெரியல. நைட் லேட்டா தான் நியூஸ் வந்துச்சு. ஆனா சாராவுக்கு ஆபத்து எதுவும் இல்லனு தான் சொன்னாங்க. இனி தான் போய் விசாரிக்கனும்”

“ராகவி கிட்ட சொல்ல வேணாமா? தெரிஞ்சா…”

“அவன் கிட்ட ஓடிருவா”

“ஆமால?”

“கொஞ்ச நாள் அவ இங்கயே இருக்கட்டும். ஏற்கனவே அவனுக்கு ஏகப்பட்ட எதிரி. இப்ப சும்மா இல்லாம, அனுபமாவ வேற சீண்டிட்டு இருக்கான். எவன் எந்த பக்கம் வந்து என்ன செய்வான்னு தெரியாது. அதுல நடுவுல ராகவி போய் விழ முடியுமா?”

“நோ சான்ஸ். அவளுக்கு தெரியாம பார்த்துக்கலாம்”

“அது தான் சரி. நான் கிளம்புறேன். இங்க யாரும் சொல்ல மாட்டாங்க. மீறி யாரும் சொல்ல வந்தாலும் பார்த்துக்க” என்று கூறி விட்டுக் கிளம்ப ஆரம்பித்தான்.

இது எதையும் அறியாத ராகவி, என்றும் போல் இயல்பாக அந்த நாளை தொடங்கினாள்.

வேலைகள் முடிந்து தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருக்க, “நான் வேலைக்கு போகனும் அண்ணி” என்றாள்.

“ஏன்? வேலை பார்க்க ஆசையா?”

“ச்சீ ச்சீ.. என் கிட்ட இருக்க காசு தீர்ந்து போச்சுனா என்ன பண்ணுறது? அதுக்காக வேலைக்கு போகனும்”

“உங்கண்ணன் இல்லையா? அவரும் நானும் வாங்கி தர மாட்டோமா?”

“அம்மா யார் கையையும் எதிர்பார்த்து வாழக்கூடாதுனு சொல்லிருக்காங்க அண்ணி. கோச்சுக்காதீங்க. எனக்கு நானே செலவு பண்ணுறது தான் பிடிக்கும்”

“சுதந்திரமா வாழ பழகி இருக்க. நல்லது தான்.”

“பாப்பா பிறந்தப்புறம் வேலை தேடனும். இப்ப உங்கள தனியா விட்டுட்டு போக முடியாதுல? ஆமா டேட் எல்லாம் முன்னாடியே சொல்லுவாங்களா?”

“இப்பவேவா? குறிப்பிட்டு சொல்லுவாங்க. ஆனா அதே நாள்ல பிறக்கனும்னு உறுதி இல்ல. நாளைக்கு எனக்கு செக் அப் இருக்கு. நீயும் வா”

இருவரும் பேசியபடி தொலைகாட்சியில் ஆழ்ந்தனர்.

*.*.*.*.*.*.*.*.*.

சாரா கண்ணை மூடி நாற்காலியில் அமர்ந்திருந்தான். இரவெல்லாம் உறங்காததில் கண்கள் எரிந்தது. அதனால் தான் கண்ணை மூடி இருந்தான். மற்றபடி மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நேற்றிரவு நடந்தது நினைவு வந்தது.

வேலை முடியும் நேரம், காசி வந்தான்.

“பாஸ் கிளம்பலாமா?” என்று வீட்டுக்கு அழைத்தான்.

சாராவிற்கு வீடு செல்ல பிடிக்கவில்லை. ராகவி இல்லாததால், சொந்த வீடே வெறுத்து விட்டது அவனுக்கு.

“நீ கிளம்பு. நான் இங்க தான் இருக்க போறேன்”

“அப்ப நானும் இருக்கேன்”

“நீ இருந்து என்ன செய்ய போற?”

“நீங்க என்ன செய்ய போறீங்களோ? அத தான்”

“நான் தூங்க போறேன். நீ கிளம்பு”

“அத வீட்டுக்கு போயே பண்ணலாமே?”

“சொன்னா கேட்க மாட்டியா?”

“இதுக்கு நீங்க அந்த பொண்ண அனுப்பாமலே இருந்துருக்கலாம்”

“டேய் கிளம்புடா” என்று சாரா அதட்டவும், பெருமூச்சு விட்டு விட்டு வெளியே வந்தான்.

சாராவும், வேலையை பார்க்க பிடிக்காமல் போட்டு விட்டு, விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு அங்கிருந்த சோபாவில் படுத்து விட்டான்.

மனம் ராகவியிடம் சென்று சேர்ந்திருக்க, விட்டத்தை பார்த்த படி எவ்வளவு நேரம் படுத்திருந்தானோ? திடீரென அழைப்பு வந்தது.

காவல்துறை பணியில் இருக்கும் ஒருவன் அழைத்துச் சொன்னான்.

நடு சாலையில் காசி சென்ற கார் நசுங்கிக் கிடப்பதாகவும், அவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனை செல்வதாகவும்‌ சொல்ல, பதறியடித்து எழுந்தான்.

காசி காரில் செல்லும் போது சாராவும் அதில் இருப்பதாக நினைத்தே, லாரி அதை தூக்கி விளாசிவிட்டு சென்றிருந்தது. லாரி நிற்காமல் சென்று விட, அந்த பக்கம் பைக்கில் வந்த ஒருவன் இதை பார்த்து ஆம்புலன்ஸை அழைத்தான்.

அருகே இரவு நேர பணியில் சுற்றிக் கொண்டிருந்த காவலர்களும் வந்து விட, வேலை துரிதமாக நடந்தது. காரை அடையாளம் கண்டு கொண்ட ஒருவன் தான், சாராவை அழைத்து விசயத்தை சொல்லியிருந்தான்.

சற்று தாமதமாகத்தான் கந்தனுக்கு செய்தி கிடைத்தது. சாராவின் கார் என்று மட்டுமே தெரிய, உள்ளே சாரா இருந்தானா? இல்லையா? என்று தெரியவில்லை.

சாரா ஓடி வந்து, மருத்துவமனையில் காசியிருந்த நிலையை பார்த்து விட்டு, நிலைகுலைந்து அமர்ந்து விட்டான். இரவு முழுவதுமே காசி உயிருக்கு போராடிக் கொண்டு தான் இருந்தான்.

சாராவும், மற்ற எல்லாம் மறந்து அங்கு அமர்ந்து கிடந்தான்.

வேறு யாருக்கும் விசயம் சரியாக தெரியவில்லை. அதனால் சாரா தனியாகவே இருக்க, மருத்துவர் அவனிடம் வந்தார்.

“சார்” என்றதும் பட்டென கண்ணை திறந்து பார்த்தான்.

மருத்துவர் வருத்தமாய் அவனை பார்த்து விட்டு, “கடைசியா பேசிக்கோங்க” என்றார்.

சாராவிற்கு கண்கலங்கி விட்டது. துக்கத்தை விழுங்கியபடி, எழுந்து உள்ளே சென்றான்.

கஷ்டப்பட்டு மருத்துவர்கள் பிடித்து வைத்தார்களோ? இல்லை காசி தான் பிடித்துக் கொண்டிருந்தானோ? உயிரை கண்ணில் தேக்கி வைத்திருந்தான். சாராவை பார்த்ததும் கருவிழியை அசைத்தவன், எதோ பேச வந்து முடியாமல் திணறினான்.

பிறகு அவனது கண்ணிலிருந்தும் கண்ணீர் வடிந்தது.

“எ… என்ன.. எனக்கு நீங்க.. கொல்லி…”

அவன் வார்த்தையை முடிக்கும் முன்பே சாராவின் கண்ணீர் கன்னத்தில் இறங்கி விட, அவனது அடிபட்ட கையை வலிக்காமல் பிடித்துக் கொண்டான்.

“சிவா…வ…”

“அவன் கிட்ட என்ன சொல்லனும்?”

“நான் அவன… மன்னிச்சுட்டேன்”

சாரா புரிந்து கொண்டதாக தலையாட்ட, “கொல்ல வந்த..” என்று ஆரம்பித்தான்.

“அவங்கள நான்.. நான் பார்த்துப்பேன்” என்று சாராவும் தடுமாறினான்.

அவனது கண்ணீர் இப்போது வழிந்து தரையை தொட ஆரம்பிக்க, காசி மெலிதாக புன்னகைத்து, “பா..” என்று ஆரம்பித்தபடி அப்படியே நிறுத்திக் கொண்டான்.

அவனது உயிர் உடலை துறந்திருக்க, சாரா தரையில் மடங்கி அமர்ந்து விட்டான்.

மருத்துவர் மனதை கல்லாக்கிக் கொண்டு நிற்க, நர்ஸ் மட்டும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அருகே வந்து, காசியின் கண்களை மூடி விட்டாள்.

சாராவால் அழ மட்டும் தான் அப்போது முடிந்தது. அடுத்தடுத்த இழப்பு அல்லவா?

சில நொடிகள் அவனது துக்கத்தை போக்க விட்டு காத்திருந்த மருத்துவர், மெல்ல அவன் தோளில் தட்டினார்.

“சார்.. இவரோட ஃபேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணனும்”

“இவனுக்கு நான் மட்டும் தான் டாக்டர்” என்றவன் மூடியிருந்த கண்களை பார்த்து விட்டு, தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் துடைத்துக் கொண்டான்.

காசியின் மீதிருந்த வயர்களை எல்லாம் எடுத்து விட்டு, வெள்ளை துணி கொண்டு அவன் முகத்தை மூடி விட்டனர்.

சாராவிற்கு அழுகை அதிகரித்தது. ஆனால் மருத்துவர் அவனது கையெழுத்து வாங்க காத்திருக்க, உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு கையெழுத்திட்டான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வந்தவனுக்கு, அடுத்து எதையுமே யோசிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருக்க, காவல்துறையினர் வந்து விட்டனர்.

அவர்களை பார்த்த பின்பு, சாரா உணர்வுகளை முழுவதுமாக மறைத்து விட்டான்.

அவர்கள் விசாரித்து முடிக்க, சாரா கைபேசியை எடுத்து சிவாவை முதலில் அழைத்தான். விசயத்தை சொல்லும் முன், அவனுக்கு தொண்டை அடைத்தது.

தந்தையை இழந்த போது கூட, அவன் சொல்லவில்லை. காசியை தான் அனுப்பினான். இப்போது காசியே இல்லையே. சிவாவிடம் விசயத்தை சொல்லி விட்டு வைத்தவன், மருத்துவமனை அலுவல்களை பார்க்க ஆரம்பித்தான்.

சிவா பதறி அடித்து ஓடி வந்தான். காசியின் உயிரற்ற உடலை பார்த்தவனுக்கு, எதுவும் நம்ப முடியவில்லை.

நேற்று காலையில் தான் பேசிவிட்டுச் சென்றான். இன்று காலையில் இல்லை என்றால்?

சிவாவும் கண்ணீர் விட, சாரா அவனை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான்.

“ஏன்டா?” என்று அவனது சட்டையை பிடிக்க, “தெரியலயே” என்றான் சாரா.

இவர்களது துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், காவலர்கள் தங்களது வேலையை மளமளவென பார்த்துக் கொண்டிருந்தனர்.

கந்தன் அலுவலகம் வந்து சேரவும், விசயம் தெரிந்து விட்டது.

“சாராவோட டிரைவர் காசி மட்டும் தான் கார்ல இருந்துருக்கான். இப்ப அவன் செத்துட்டானாம்” என்று சொன்னதும், கந்தனிடமிருந்து பெருமூச்சு தான் எழுந்தது.

ஆனால் இதை ராகவியிடம் சொல்ல வேண்டுமே. குறிஞ்சி அழைத்தவன், விசயத்தை விளக்கினான்.

“நீ போக வேணாம். கார்ல அவள அனுப்பு. நான் திரும்ப கூட்டிட்டு வந்துக்கிறேன்” என்று சொன்னதும், குறிஞ்சி சம்மதித்தாள்.

ராகவியிடம் விசயத்தை சொல்ல, அதிர்ந்து போனவளின் கண்கள் அப்போதே கலங்கி விட்டது. காரில் அவளை அனுப்பி வைத்தாள் குறிஞ்சி.

காசியின் உடல் அப்போது சாராவின் வீட்டுக்கு எடுத்துச் செல்லபட்டிருக்க, அங்கு சென்றாள்.

கார் நின்றதும், மற்ற எதையும் கவனிக்காமல் இறங்கி உள்ளே ஓடினாள். வைரவரின் இறுதிக்காரியம் போல் கூட்டம் எதுவும் இல்லை. அங்கு வேலை செய்பவர்கள் மட்டும் தான் இருந்தனர்.

சாராவும் சிவாவும் இடிந்து போய் ஆளுக்கொரு மூலையில் நின்றிருந்தனர். ஏகாம்பரம் அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்தான். மற்றவர்கள் மாலையை போட்டு விட்டு விலகிச் செல்ல, ராகவி காசியை பார்த்தாள்.

காசியோடு அவளுக்கு பெரிதாய் பேச்சு வார்த்தை இருந்தது இல்லை தான். ஆனால் முதலில் ராகவியை காப்பாற்றி, காசியிடம் தானே ஒப்படைத்தான் பூபதி. அந்த நன்றி அவள் மனதில் இருந்தது.

கலங்கிய கண்களோடு சாராவை பார்த்தாள். அவன் யாரையும் பார்க்காமல் தரையை பார்த்தபடி இருந்தான். ஏகாம்பரம் மட்டும் ராகவியை ஏறெடுத்துப் பார்த்தான். அவளை பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கண்கலங்கியது.

சொல்ல முடியாத துக்கத்தை, விழுங்கவும் வழியில்லாமல் தவித்தனர்.

கடைசியாக காரியங்கள் நடக்க, சாரா கொல்லி வைப்பதாக கூறினான்.

“நான்..” என்று ஏகாம்பரம் வர, “அவன் தான்டா கேட்டான். நான் தான் கொல்லி வைக்கனும்னு அவன் தான் கேட்டான்” என்ற சாராவிற்கு குரல் உடைந்தது.

ஆனால் சட்டென மீண்டும் திடப்படுத்திக் கொண்டு, சாராவே மொட்டை அடித்து கடைசி காரியங்களை முடித்து விட்டான்.

ராகவி நடப்பதை எல்லாம் ஜீரணிக்க சக்தியற்றி ஓரமாக அமர்ந்திருக்க, கந்தனின் கார் வந்து நின்றது. அவளை அழைத்துச் செல்ல.

அவளுக்கு அங்கே இருப்பதா? போவதா? என்ற குழப்பம். கந்தன் வாசலில் நிற்க, அவள் சாராவை பார்த்தாள்.

சாரா அவளை கவனித்து விட்டு கந்தனிடம் வந்தவன், “கூட்டிட்டு போங்க” என்று கூறி விட்டு, விறுவிறுவென இறங்கி வீட்டின் பின் பக்கம் சென்றான்.

அவன் சென்ற பாதையை ராகவி பார்த்துக் கொண்டு கலங்கிப்போய் நிற்க, கந்தன் அவள் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தான்.

தொடரும்.

Leave a Reply