சாரா 39
![]()
அன்று காலையில்..
விடிந்ததும் ராகவி கந்தனிடம் சென்று நின்றாள். இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அவள் முடிவெடுக்க காரணமும் இருந்தது. நேற்று மாலை தான், குறிஞ்சியின் அன்னை அவளை பார்த்துக் கொள்வதற்காக கிளம்பி வந்திருந்தார்.
கந்தன் அவளை கேள்வியாக பார்த்தான்.
“நான் வேலைக்கு போகனும் அண்ணா” என்க, “போகலாமே.. எதாவது வேலை இருந்தா சொல்லுறேன்” என்றான்.
“இல்ல நான் மறுபடியும் பாஸ் கிட்ட தான் வேலைக்கு போகனும்”
கந்தன் அதிர்ச்சியோடு பார்க்க, “எனக்குத் தெரியாத இடத்துல திரும்ப போய் எதுலயாவது மாட்டிக்க கூடாதுல. அதான் நான் பாஸ் கிட்டயே திரும்ப வேலை கேட்கலாம்னு இருக்கேன்” என்றாள்.
அவள் ஜாதக விசயத்தை பற்றி, குறிஞ்சி கந்தனிடமும் கூறியிருந்தாள்.
முதலில் அதிர்ந்தாலும், பிறகு இதுவே சாராவிடமிருந்து ராகவியை பிரித்து விடும் என்று நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது மீண்டும் அவனிடம் செல்வேன் என்கிறாளே?
“ஏன் மறுபடியும் அவன் கிட்ட போகனும்னு சொல்லுற?”
“எனக்கு பாஸ பார்க்கனும் போல இருக்கு.” என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.
“திடீர்னு என்ன? ஒரு வேளை மனசு மாறிட்டியா?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள் குறிஞ்சி.
“அதெல்லாம் இல்ல அண்ணி. என்ன நடந்தாலும் நான் மாற மாட்டேன். ஆனா அவர பார்க்கனும் போல இருக்கு. எதாவது வேலை பார்த்துட்டு அவர் கூட இருக்கலாம்னு…”
கந்தன் நன்றாக யோசித்தான். எப்படியும் ராகவி அவனை திருமணம் செய்ய மாட்டாள். அவனை மட்டுமல்ல, யாரையும் திருமணம் செய்ய கூடாது என்று இருக்கிறாள். சாராவிடம் வேலைக்குச் சென்றால், அவளுக்கு இதமாக இருக்குமென்றால் போகட்டும் என்று நினைத்து விட்டான். பிரித்து வைத்தாலும் சேர்த்து வைத்தாலும் ஒரு லாபமும் இல்லை என்ற போது, எதற்காக ராகவி துன்புற வேண்டும்?
“நீ வேலை பார்க்க போறது ஓகே. ஆனா அவன் கூட இருக்க முடியாது. இங்க தான் தங்கனும்.” – கந்தன்
ராகவி யோசித்து விட்டு, தலையை ஆட்டி விட்டாள்.
“திடீர்னு உனக்கு எப்படி இந்த வேலை ஐடியா வந்துச்சு?” என்று குறிஞ்சி கேட்க, “ஏகா தான் சொன்னாரு” என்றாள்.
“சரி வேலை கொடுத்தா பாரு. ஆனா நீ இங்க தான் இருக்கனும்.அத ஞாபகம் வச்சுக்க” என்று கண்டிப்பாக சொல்லி விட்டு, கந்தன் கிளம்பச் சென்று விட்டான்.
ராகவியை அறைக்குள் இழுத்துச் சென்ற குறிஞ்சி, “உன் ஜாதக விசயம் ஏகாவுக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
“தெரியாது அண்ணி. நான் சொல்லலாம் மாட்டேன்”
“சரி எங்க வேலைக்கு போவ?”
“முதல்ல அவர் வீட்டுல தான் வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்பவும் அப்படித்தான் போகனும்”
“வீட்டுக்கெல்லாம் போக வேணாம்”
“ஏன் அண்ணி?”
“வேணாம்னா வேணாம் தான். முதல்ல இருந்ததும் இப்ப இருக்கதும் ஒன்னு இல்ல”
“அப்படினா?”
“கல்யாணமாகாத ஒரு பொண்ணும் பையனும், தனியா ஒரே வீட்டுல இருக்கது தப்பு. முதல்லயாச்சும் கடன அடைக்க வேலை பார்த்த. அப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டாரு. இப்ப உனக்கும் பிடிச்சுருக்கு. தனி வீட்டுல இருந்தா? தப்பு. நீ அவரோட ஆஃபிஸ்ல வேலை கேளு. அதான் படிச்சுருக்கியே. அத வச்சு பாரு. திரும்ப அந்த வீட்டுக்கு நீ போக கூடாது”
“நீங்க பாஸ ரொம்ப தப்பா நினைக்கிறீங்களோனு தோணுது. அவர் நல்லவர்”
“ஆமாமா நல்லவர் தான். எனக்கு உன் மேல தான் நம்பிக்கை இல்ல”
“என்னது? நானா? நான் பாஸ ஒன்னுமே பண்ணது இல்ல”
“அதான் லவ் பண்ணுறியே. அது போதாதா? ஒழுங்கா ஆஃபிஸ்ல வேலை கேளு. அவ்வளவு தான்.”
தலையை தலையை ஆட்டி விட்டு, ஏகாம்பரத்தை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்று விட்டாள்.
முதன் முறையாக பார்ப்பதால், ஆர்வமாக பார்த்துக் கொண்டே சென்றவள், வேலையையும் கேட்டு விட்டாள்.
சாராவோ வேலை இல்லை என்று சொன்னதோடு விடாமல் கட்டிப்பிடிக்க, பயந்து விட்டாள். அவனை தள்ளிவிடப்பார்க்க, அசைக்கவும் முடியவில்லை.
“பாஸ்..”
“ம்ம்”
“யாராவது வந்துட்டா என்ன நினைப்பாங்க? தள்ளுங்க”
“யாரும் வர மாட்டாங்க”
‘இதுக்கு தான் அண்ணி வீட்டுக்கு போக வேணாம்னு சொன்னாங்க போல’ என்று நினைத்துக் கொண்டாள்.
“பாஸ்.. அப்ப எனக்கு வேலை கொடுப்பீங்களா பாஸ்?” என்று கேட்க, உடனே விலகியவன், “வேலை இல்லனு சொன்னேன்” என்றான்.
“ஏன் பாஸ்?”
“உங்க அண்ணன் உனக்கு சோறு போடலயா? வேலை தேடி வந்துருக்க?”
“அவரு சோறு போட்டா நான் வேலை பார்க்க கூடாதா? எங்கம்மா யாரையும் அண்டி வாழக்கூடாதுனு சொல்லி தான் என்னை வளர்த்தாங்க.”
“உனக்கு ஒரு வேலையும் உருப்படியா தெரியாதே கவி”
“பாஸ் இது கிரேட் இன்சல்ட்.”
அவள் முறைத்துக் கொண்டே சொல்ல, சற்று தள்ளிச் சென்று மேசையில் சாய்ந்து நின்றவன், “கார் ஓட்ட தெரியுமா?” என்று கேட்டான்.
“சைக்கிள் கூட ஓட்ட தெரியாது பாஸ்”
“பார்த்தியா? ஒன்னுமே தெரியல”
“பாஸ்.. நான் என்ன டிரைவராவா ஆகப்போறேன்? டிரைவிங் கத்துக்க?”
“இப்ப டிரைவர் வேலையும், என் பிஏ வேலையும் தான் பாக்கி இருக்கு. ரெண்டும் காசி பார்த்தது. இதுல நீ பிஏ ஆக வாய்ப்பில்ல. டிரைவர் தான் ஆகனும். ஆனா உனக்கு டிரைவிங் தெரியாது”
உதட்டை கடித்து தீவிரமாக யோசித்தவள், “டிரைவிங் கத்துக்கிட்டா வேலை தருவீங்களா?” என்று கேட்டாள்.
புன்னகை மலர தலையாட்டினான்.
“அப்ப சரி. நான் கத்துக்கிட்டு வர்ரேன்” என்றவள், ஏகாம்பரத்தை தேடி ஓடி விட்டாள்.
சாரா புன்னகை குறையாமல், ஃபைலை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
போன வேகத்தில் திரும்பி வந்தாள் ராகவி. கதவை தட்டி விட்டு அவள் உள்ளே வர, சாரா நிமிர்ந்து பார்த்தான்.
“பாஸ்.. ஒரு ஹெல்ப்..”
“என்ன?”
“எனக்கு ஒரு கார் வேணும். ஏகாம்பரம் கார் இருந்தா தான டிரைவிங் கத்துப்பனு கேட்குறாரு. என் கிட்ட இல்லையே”
“க்ளாஸ் போனா அவங்களே கார் வச்சுருப்பாங்க”
“க்ளாஸ்க்கு கட்டுற அளவு என் கிட்ட பணம் இல்ல பாஸ்..” என்று உதட்டை பிதுக்கியவள், “ஏகாம்பரமே சொல்லித்தர்ரேன்னு சொல்லிட்டாரு” என்று குதூகலித்தாள்.
இருவரையும் நினைத்து புன்னகைத்தவன், “சோ இப்ப கார் வேணும்?” என்று கேட்டான்.
ராகவி பலமாக தலையாட்ட, மேசையின் பின் பக்கமாக சாய்ந்து இழுப்பறையில் இருந்த சாவியை எடுத்தான்.
அதை ராகவியிடம் நீட்ட, ஓடி வந்தாள். வாங்கும் முன் கையை தூக்கிக் கொண்டான் சாரா.
ராகவி புரியாமல் பார்க்க, “கார சும்மா எல்லாம் கொடுக்க முடியாது” என்றான்.
“பாஸ்.. சத்தியமா உங்க காருக்கு வாடகை கொடுக்குற அளவு என் கிட்ட பணம் இல்ல பாஸ்” என்று அழுதாள்.
“பணம் வேணாம்”
“கல்யாணம் பண்ணிக்க சொல்லாதீங்க பாஸ்” என்றவள் மேலும் அதிகமாக அழுதாள்.
“அதுவும் இல்ல”
உடனே பட்டென அழுவதை நிறுத்தியவள், “வேற?” என்று கேட்டாள்.
கையை விரித்தவன், “கட்டிப்பிடி. தர்ரேன்.” என்றான்.
‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று திருதிருவென விழித்தாள்.
சாரா அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மனதை தேற்றிக் கொண்டு அருகே சென்றாள்.
பட்டும் படாமல் அவனை அணைக்க, “என்ன பண்ணுற?” என்று கேட்டான்.
“கட்டிப்பிடிச்சுருக்கேன் பாஸ்”
“இதுக்கு பேரு கட்டிப்பிடிக்கிறதா?”
மனதை திடப்படுத்திக் கொண்டு மேலும் நெருங்கினாள்.
“பத்தல”
கண்ணை மூடிக் கொண்டு, அவன் மார்பில் சாய்ந்து இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
சந்தோசமாக சாராவும் அவளை அணைத்துக் கொண்டான்.
சில நொடிகள் கடந்ததும், “அவ்வளவு தான பாஸ்?” என்று கேட்டாள்.
அவளை விலக்கியவன் சாவியை அவள் கையில் வைத்து விட்டு, “ரொம்ப தூரம் போக வேணாம். பார்த்து ஓட்டு.” என்றான்.
தலையை ஆட்டி விட்டு, உடனே வெளியே ஓடினாள்.
சாரா அவளை அனுப்பி விட்டு, தன்னுடைய கைபேசியை எடுத்தான்.
“ஃபாலோவ் பண்ணு” என்று கூறி விட்டு வைத்து விட்டான்.
ராகவியும் ஏகாம்பரமும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர். அது சாராவின் மற்றொரு கார். காசி ஓட்டியது காவல்துறையினரிடம் இருக்கிறது. அதை மீட்டு எடுக்க வேண்டும். சாரா அதற்கு ஒன்றும் அவசரம் காட்டவில்லை.
அவனது மற்றொரு காரை எடுத்துக் கொண்டு, ஏகாம்பரமும் ராகவியும் சுற்ற ஆரம்பித்தனர். ஏகாம்பரம் ஓட்டும் போது ஒவ்வொன்றையும் சொல்ல, ராகவியும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.
அவர்களது கார் பயிற்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, அந்த காரை இருவர் பின் தொடர்ந்தனர். சாராவின் கார் என்பதால் ஒருவனும். சாரா அனுப்பிய ஒருவனும்.
சாரா அனுப்பியவன், மற்றவனை படமெடுத்து சாராவிற்கு அனுப்பி வைக்க, சாரா அவன் யார் என்ற விவரங்களை சேகரிக்கச் சொன்னான்.
“அது ஒரு கான்ஸ்டபிள்” என்ற பதில் கிடைத்தது.
அவன் யாருக்காக வேலை செய்கிறான்? என்று தான் இனி கண்டு பிடிக்க வேண்டும்.
பதவியில் இருக்கும் எத்தனையோ பேருக்கு சாரா எதிரி. அதில் இது யார்? யார் காசியின் மரணத்திற்கு காரணம்?
அத்தனையையும் அறிய வேண்டும். அறியும் முயற்சியில் இறங்கி இருந்தான்.
காரை ஓட்டி முடித்து, ஆளில்லாத இடத்தில் ராகவியையும் ஓட்ட வைத்து, பயிற்சி கொடுத்து விட்டு மீண்டும் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
கார் சாவியை கொடுத்து விட்டு, “பாஸ் நான் நிறைய கத்துக்கிட்டேன்” என்று குதூகலமாக சொன்னாள் ராகவி.
“அப்ப நாளைக்கே லைசன்ஸ் வாங்கிடலாமா?”
“வாங்கலாமே ஆர்டிஓ குருடனா இருந்தா” என்று ஏகாம்பரம் சொல்ல, “யோவ் ஏகா..” என்றாள் ராகவி.
“யோவ் யோவ்னு சொல்லுறதுக்கு ஒரு நாள் இருக்கு பாரு”
“தப்பு என் மேல இல்ல ஏகா. நீங்க தான என் டீச்சர். நான் தப்பு பண்ணா உங்க தப்பும் தான். நீங்க ஒழுங்கா சொல்லிக்கொடுத்தா நான் வாங்கிருப்பேன்.”
“இன்னைக்கு முழுக்க, இவளுக்கு பிரேக் எங்க இருக்குனு மட்டும் தான் பாஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன். முடியல”
“நான் அழுத்துனா அது நிக்கல. அது என் தப்பா?”
“உனக்கு தெரியலனு சொல்லு. நான் அழுத்துனப்போ நின்னுச்சு?”
இரண்டு பேரும் வாய்க்கால் தகராறை ஆரம்பிக்க, சாரா சட்டென நிமிர்ந்தான்.
காசி பல வருடமாக காரை ஓட்டுபவன். இதற்கு முன் எத்தனையோ முறை நூலிழையில் தப்பிச் சென்றிருக்கிறான். அப்படிப்பட்டவன், இப்போது மட்டும் எப்படி இறந்தான்?
காரில் எதாவது பிரச்சனை இருக்குமோ?
நினைத்த உடனே எழுந்தவன், “ஏகா.. இவள வீட்டுல பத்திரமா விட்டுரு. நான் கிளம்புறேன்” என்றவன் விறுவிறுவென கிளம்பியிருந்தான்.
ஏகாம்பரமும் ராகவியை வீட்டில் விடச் சென்றான்.
சாரா நேராக காரைத்தேடிச் சென்றான். போகும் போதே மெக்கானிக் ஒருவனை அழைத்துச் சென்றான்.
“என் கார வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என்றதும், “அது எவிடன்ஸ் சார். கேஸ் ஆக்ஸிடென்ட் தானானு செக் பண்ணிட்டு தான் தர முடியும்” என்று மறுத்தான் காவலதிகாரி.
“அப்ப நான் அத பார்க்கலாமா?”
“இல்ல சார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு கந்தன் வந்து சேர்ந்தான்.
சாராவை எதிர்பாராமல் புருவம் சுருக்கியவன், “என்ன விசயம்?” என்று கேட்டான்.
“என் கார பார்க்கனும். அத தான் கேட்க வந்தேன்”
அப்போது தான், காசி இந்த ஏரியாவில் தான் விபத்துக்குள்ளானான் என்பது நினைவு வந்தது.
“எங்க இருக்கு?” என்று கேட்டு விட்டு, கந்தனே அழைத்துச் சென்றான்.
காரை மெக்கானிக்கிடம் பார்க்கச் சொன்னான் சாரா.
சில நிமிடங்கள் ஆராய்ச்சியில் நேரம் கடந்தது.
“பிரேக் அண்ட் ஏர் பேக் ரெண்டையுமே டேமேஜ் பண்ணியிருக்காங்க” என்று கூறினான்.
அதை எப்படி செய்திருக்க முடியும்? என்பதையும் அவன் புட்டு புட்டு வைக்க, கந்தனும் சாராவும் அமைதியாக கேட்டுக் கொண்டனர்.
அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, சாராவோடு மீண்டும் காவல்நிலையம் சென்றான் கந்தன்.
விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட புகைப்படங்களை அனைத்தையும் வர வைத்து, அலசி ஆராய்ந்து முடித்தனர்.
அந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றாலும், கந்தன் அத்தனையும் பார்த்தான். நீண்ட நேர விவாவதத்திற்கு பிறகு, சாரா முடிவுக்கு வந்திருந்தான்.
“கார் உன் கிட்ட இருக்கும் போதே இத பண்ணிருக்காங்கனா, உன் கூட இருக்க எவனோ தான் பண்ணிருக்கனும். உன் ஆஃபிஸ் வொர்க்கர்ஸ் இல்ல வேற யாராச்சும்… காச கொடுத்தும் பண்ண வச்சுருக்கலாம். என்ன பண்ண போற?”
“இது மர்டர்னு தெரியுது. ஆனா இத ஆக்ஸிடெண்ட் கேஸா ஃபைல் பண்ண போறேன்.”
அவன் எதற்காக இப்படிச் சொல்கிறான் என்று புரிந்ததால், கந்தனுக்கு கோபம் தான் வந்தது.
“ஏன் சட்டம் எதுக்கு இருக்குனு நினைக்கிற?”
“சட்டம் வந்து காசிய காப்பாத்துச்சா?”
“நீயும் கூட தான் காசிய காப்பாத்தல”
கந்தன் பட்டென சொல்ல, சாரா ஒரு நொடி வாயடைத்துப்போனான். ஆனால் இதை சட்டத்தின் கையில் விட அவனுக்கு விருப்பம் இல்லை.
“ஆமா. நானும் அவன காப்பாத்தல தான். ஆனா உங்களாலயும் இத முடிக்க முடியாது. உங்க டிப்பார்ட்மெண்ட் மேல முதல்ல நிறைய நம்பிக்கை இருந்துச்சு எஸ்பி. ஆனா இப்ப அதெல்லாம் போயிடுச்சு. எத்தனையோ தப்ப அசால்ட்டா பண்ணியிருக்கேன். ஆனா இது வரை எந்த போலீஸயாச்சும் நான் எதாவது பண்ணிருக்கனா? என் நம்பிக்கைய குலைச்சது உங்க ஆளுங்க தான். கூட இருந்து துரோகம் பண்ணதுல இருந்து, இப்ப காசிய கொன்னது வரை”
“வாட்?”
“காசிய கொன்னது.. அதாவது என்னை கொலை பண்ண ப்ளான் போட்டது.. என் அப்பாவ கொன்னது.. எல்லாம் யாருனு எனக்கு ஒரு கெஸ் இருக்கு”
“யாரு?”
“சொல்ல மாட்டேன். அவங்களா விலகிட்டாங்கனா தப்பிச்சாங்க. இல்லனா நடக்குறத நீங்களும் வேடிக்கை பார்த்து தான் ஆகனும்”
“யாருனு சொல்லு சாரா. பிராப்பர் ஆக்ஷன் எடுக்கலாம்”
“என்னனு? சாராவுக்கு எதிரா வேலை பார்க்குற போலீஸ் மேல ஆக்ஷன் எடுப்பீங்களா? கேட்கவே காமெடியா இல்லை?”
கந்தன் இதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான்.
“உங்க பாசைல அதுக்கு பேரு மிஷன். அந்த மிஷனுக்கு அவார்ட் ப்ரமோஷன் எல்லாம் கிடைக்கும். ஆனா நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன். என்னை தொடாத வரை, உங்களையும் நான் ஒன்னும் பண்ணல. என்னை தொட்டீங்கள்ள? பார்த்துடலாம்”
“தப்பு சாரா..”
“இல்ல.. என் பாசைல இது தப்பு இல்ல எஸ்பி..” என்றவன், விருட்டென எழுந்தான்.
“அப்புறம்.. இங்க வச்சு பர்ஸனல பேசுறேன்னு நினைக்காதீங்க. ராகவி உயிருக்கும் ஆபத்து இருக்கு. அவள நான் பத்திரமா பார்த்துப்பேன். ஒரு வேளை நான் இல்லனா, அவள நீங்க பாதுகாக்க வேண்டி வரும்” என்றவன் உடனே கிளம்பி விட்டான்.
கந்தனுக்கு, இவன் என்ன செய்யப்போகிறான்? என்ற கவலை வந்தது. கூடவே யார் அது சாராவை கொலை செய்ய பார்த்தது? என்ற கேள்வியும் எழுந்தது. அவனது கேள்விகளுக்கு, மூன்று நாட்களில் பதில் கிடைத்தது. கமிஷ்னர் பொன்வண்ணனின் மகள் சத்தமில்லாமல் கடத்தப்பட்டிருந்த செய்தி, பதிலை தாங்கி வந்தது.
தொடரும்.
