சாரா 41
![]()
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் அனுபமா. அவளால் எதையும் நம்பவே முடியவில்லை. கண்கட்டு வித்தையாக தோன்றியது.
அவளருகே தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான் கந்தன். இருவரும் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்தனர். அங்கு கமிஷ்னர் இல்லை. மகளை பார்க்க வீட்டுக்குச் சென்று விட்டார்.
கந்தனும் அனுபமாவும் மட்டும் தான் வந்திருந்தனர்.
சாராவை பார்க்கக் கிளம்பும் போதே, அனுபமாவும் கந்தனும் மட்டும் தான் உடன் சென்றனர். அனுபமாவிற்கு அந்த வீட்டை நன்றாக தெரியும். கந்தனுக்கு சாராவை நன்றாக தெரியும்.
சாரா ஒரு வேளை சொல்ல மறுத்தால், தாங்களும் பேசுவது என்று முடிவு செய்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. சாரா சென்றதுமே, அனுபமா பொறுக்காமல் கேட்டு விட்டாள்.
“சிவா எதுக்கு சார் சாரா தலையில கன்ன வச்சுட்டு நின்னான்?”
“சாரா சொல்ல மாட்டேன்னு சொன்னான். அதான்”
“சிவா அவனோட தம்பில?”
“நம்ம டிபார்ட்மெண்ட் ஆளும் தான்” என்றவர், காரை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
தொலைந்தவளை தேடிக் கொண்டிருந்த மற்ற காவலர்களை கவனிக்கச் சொல்லி, இருவரையும் அனுப்பி வைத்தார்.
அதற்காக வந்து விட்டு தான், அனுபமா அசந்து போய் அமர்ந்திருந்தாள்.
“சார்..” என்று கந்தனை அழைக்க, அவன் யோசனை கலைந்து அவளை பார்த்தான்.
“சிவராஜ் நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுனா? யாரு சார்?”
“எனக்கும் தெரியாது”
“பொய் சொல்லாதீங்க. ரொம்ப அமைதியா இருக்கீங்களே?”
“அமைதியா இருக்கேன்னா? குழப்பத்துல யோசிச்சுட்டு இருக்கேன்”
“என்னால நம்பவே முடியல சார். சிவா போய்…?”
அனுபமா நடந்ததை இன்னும் புரிந்து கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தை பார்த்து கந்தனுக்கு புன்னகை மலர்ந்தது.
“நீ சாராவ விட சிவாவ தான அதிகமா நோட் பண்ண? உனக்கே தெரியலயா?”
“சத்தியமா தெரியல சார். தெரிஞ்சுருந்தா, நான் ஏன் அவர தூக்கிட்டு போய் வைக்க போறேன்?”
“நீ சிவராஜ வச்சு விளையாடுறதா நினைச்சுட்டுருந்துருக்க. ஆனா சிவராஜ் எல்லாரையும் வச்சு விளையாடியிருக்கான்”
“லைட்டா அன் ஈசியா ஃபீல் ஆகுது சார்” என்ற அனுபமாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
கந்தனுக்கு அவளது நிலைமை புரியத்தான் செய்தது. ஆனால் அவனாலும் உடனே இதை நம்ப முடியவில்லை.
கமிஷ்னர் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. அவரது மகள் வீட்டுக்கு வந்து விட்டாள் என்று.
“அதெல்லாம் சாரா சொன்னா செஞ்சுடுவான்” என்று அலுப்பாகவே சொன்னாள் அனுபமா.
ஆமோதிப்பாய் தலையாட்டியவன், “இவ்வளவு தூரம் சாராவ கவனிச்சுட்டு சிவாவ கோட்டை விட்டுருக்கோம் பாரு” என்றான்.
“உங்களுக்கு ஒன்னும் இல்ல. நான் லவ் பண்ணுற மாதிரி எல்லாம் நடிச்சு… அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அவளது புலம்பலில் கந்தன் சிரித்து விட்டான்.
“சிவா அதெல்லாம் பார்த்து எவ்வளவு கேவலமா சிரிச்சுருப்பான் இல்ல?”
“நீங்க வேற ஏன் எரியுறதுல எண்ணெய ஊத்துறீங்க? இனி அவன் மூஞ்சிய கூட பார்க்க மாட்டேன்.” என்றவள் வேகமாக எழுந்தாள்.
“இங்கயே உட்கார்ந்தா வேலை ஆகாது. எல்லாரு கிட்டயும் சொல்லிட்டு நம்ம வேலைய பார்ப்போம்” என்க, கந்தனும் எழுந்து கொண்டான்.
பொன்வண்ணனின் மகள் கிடைத்த விசயத்தை சொல்லி விட்டு, அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.
*.*.*.*.*.*.*.*.*.*.
அறைக்குள் வந்து விட்ட சிவாவிற்கு, ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. இத்தனை மாதங்களாக உழைத்தது எல்லாம் வீணானது. உணர்ச்சிவசப்பட்டது தவறு என்று விளங்கியது.
துப்பாக்கியை மறைத்தவன், உடனே தனது பொருட்களை எல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான்.
காரில் வெகுதூரம் சென்று ஓரு இடத்தில் நின்றான். அடுத்து என்ன? என்ற கேள்வியோடு ஒற்றை விரலை நெற்றியில் தேய்த்து கண்ணை மூடி அமர்ந்திருக்க, கைபேசி அழைத்தது.
அவன் எப்போதும் பயன்படுத்தும் கைபேசி அல்ல அது. அதில் குருவின் பெயரை பார்த்து விட்டு எடுத்தான்.
“என்ன?”
“என்னடா? கமிஷ்னர் ஃபோன் பண்ணாரு”
“ப்ச்ச்.. சொதப்பிடுச்சு”
அந்த பக்கம் குரு சிலநொடிகள் அமைதி காத்தான். பிறகு, “நெக்ஸ்ட் என்ன?” என்று கேட்டான்.
“வீட்டை விட்டு வந்துட்டேன். இனி என்னனு தான் யோசிக்கிறேன்”
“சரி நம்ம இடத்துக்கு வா”
“ம்ம்” என்றதோடு கிளம்பி விட்டான்.
*.*.*.*.*.*.*.*.*.*.
வைரவர் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து, சாராவிற்கு ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. ஏகாம்பரம் தான் காரை ஓட்டினான்.
சாராவிற்கு அமர்ந்திருப்பது கூட மூச்சு முட்டுவது போல் இருந்தது. உள்ளேயே தள்ளாடியவன், “கார நிறுத்து” என்றான்.
ஏகாம்பரம் திரும்பிப் பார்த்தானே தவிர, காரை நிறுத்தவில்லை.
“நிறுத்துடா” என்று சாரா கத்த, “பாஸ்.. இது மெயின் ரோடு..” என்று ஏகாம்பரமும் குரலை உயர்த்தினான்.
அவன் குரலை உயர்த்தியதுமே சாரா சற்று நிதானத்துக்கு வந்தான். ஆனாலும் இருப்புக் கொள்ளவில்லை. ஓ.. வென கத்த வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் முடிவில்லை. கார் வேகமாக சென்று ஒரு கிரவுண்டில் நின்றது. உச்சி வெயிலில் காரை விட்டு இறங்கியவன், குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
‘சிவா.. சிவாவா? அவனா அப்பாவ கொன்னான்? ஏன்?’ என்று பல கேள்விகள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்க, சாராவிற்கு மூளை சூடானது.
ஏகாம்பரம் அவனது தடுமாற்றத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தான். அவனாலும் இதை ஏற்க முடியவில்லை.
அனுபமா பூபதியின் துரோகத்தை கூட ஏற்று விடலாம். அவர்கள் வெளி ஆட்கள். ஆனால் சிவா வைரவரின் சொந்த பிள்ளை அல்லவா?
அவனுக்கும் அந்த காவலர்களுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த சம்பந்தம் ஏற்பட்டது? உண்மையில் யாரவன்?
ஒன்றும் புரியாமல் நிற்க, சாராவும் அதே கேள்விகளோடு குறுக்கே நடந்தான்.
சில நிமிடங்கள் யோசனையில் எதோ முடிவுக்கு வந்தவன், “அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணு.. காசியோட மொபைல் எனக்கு வேணும். எப்படியாவது கொண்டு வந்து கொடுக்க சொல்லு” என்று ஏகாம்பரத்திற்கு உத்தரவிட்டான்.
ஏகாம்பரம் அழைத்து விசயத்தை சொல்லி வைத்தான்.
“காசிக்கு தெரிஞ்சுருக்கு ஏகா. கண்டிப்பா தெரிஞ்சுருக்கு. அவன் மன்னிச்சுட்டேன்னு சொல்லும் போது.. அனுபமா பின்னாடி இவன் போறத சொல்லுறான்னு நினைச்சேன். அதான் யோசிக்காம விட்டேன். ஆனா அவனுக்கு மத்ததும் தெரிஞ்சுருக்கு. அவன் தெரிஞ்சப்புறமும் மன்னிச்சுட்டே செத்துட்டான். ஆனா நான் மன்னிக்க மாட்டேன். செத்தாலும் அவன மன்னிக்க மாட்டேன்.. காசி மொபைல் கைக்கு வரட்டும்.” என்று பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தவன், மேலும் பலவிதமாக யோசித்து முடிவுக்கு வந்தான்.
பிறகு காசியின் மொபைலை கைபற்றினர். காரில் அமர்ந்து அந்த கைபேசியை திறந்து பார்க்க, உள்ளே அவன் சாகும் முன்பு எடுத்த படங்கள் இருந்தது.
அதில் இரண்டு பஞ்சாப் ஆட்களை படம் எடுத்திருந்தான். அவர்கள் கையில் எதோ ஒரு புகைப்படமும் இருந்தது. அதையும் படமெடுத்திருந்தான்.
இன்னும் நன்றாக ஆராய்ந்ததில், அவர்கள் பேசியது கூட ஒலிப்பதிவாகி இருந்தது. அதை கேட்க கேட்க சாராவின் முகம் இறுகியது.
அன்று… சாரா வீட்டுக்கு வர முடியாது என்றதும், காசிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதை நினைத்தபடியே வந்தவனுக்கு பசியெடுக்க, ஒரு ஹோட்டலில் சென்று இறங்கினான்.
அந்த நேரம் எல்லா மேசையும் நிறைந்திருக்க, இருவர் அமர்ந்திருந்த மேசையில் மற்ற இரு நாற்காலிகள் காலியாக இருந்தது. அங்கு சென்று அமர்ந்து கொண்டான்.
அந்த இருவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்களாக தெரிந்தனர். ஒருவன் பஞ்சாபியில் பேச, மற்றவன் தமிழில் தான் ஆர்டர் கொடுத்தான்.
இருவரும் பேசிக் கொண்ட போது, காசிக்கு எதுவும் சரியாக விளங்கவில்லை. ஆனால் அவர்கள் கைபேசியை வைத்து பேசிக் கொண்டிருக்கும் போது, அதில் சிவாவின் படத்தை பார்த்து விட்டான்.
புருவம் சுருங்க அந்த படத்தை பார்த்தவனுக்கு, முதலில் சந்தேகம் தான் வந்தது.
‘ஒரு வேளை இவர்கள் சிவாவை எதற்காகவும் தேடி வருந்திருந்தால்?’ என்ற சந்தேகத்துடன், அவர்களை படமெடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்து கொண்டான்.
ஆனால் அவர்கள் அவனை கவனித்து விட, சுதாரித்துக் கொண்டு, “இவன் எனக்கு ஃப்ரண்ட். உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
நண்பன் என்றதுமே அவர்களது விழிகள் ஆச்சரியமானது. தாங்களும் நண்பர்கள் என்றனர்.
காசி சிவாவோடு ஒன்றாக வளர்ந்தவன் என்று கூற, அவர்கள் அவனை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.
பிறகு நாம் தான் தவறாக நினைத்து விட்டோம் போலும் என்று காசி முடிவெடுத்தான். சிவாவை பார்க்க அவனது முகவரி வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, எழுதிக் கொடுத்து விட்டுத்தான் கிளம்பினான்.
கிளம்பி காருக்கு வரும் போது தான் கவனித்தான். ஒரு காவல் அதிகாரி, அவர்களுக்கு சல்யூட் வைத்ததை.
ஒரு நொடி காசி பதறி விட்டான்.
“வைரவர் ஐயா கேஸ்ல சிவாவ எதுவும் தூக்க ப்ளான் போட்டானுங்களா?” என்று பயந்தவன், சத்தமில்லாமல் அவர்களுக்கு பின்னால் சென்று ஒட்டுக் கேட்டான்.
பஞ்சாபியில் பாதி ஆங்கிலத்தில் மீதி பேசவும், அவனுக்கு புரிந்தது ஒன்று தான். சிவா உண்மையிலேயே இவர்களது நண்பன். அதுவும் அவர்களோடு ஒன்றாகவே பயிற்சி எடுத்தவன்.
தெரிந்த விசயத்தில் பேரதிர்ச்சி அடைந்தவன், தன் கைபேசியில் அவர்கள் பேசுவது ஒலிப்பதிவு செய்து கொண்டு கிளம்பியவனுக்கு, இதை உடனே சாராவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
சொல்வதற்காக தான் காரை திருப்பி இருந்தான். திரும்பியவனை தான் லாரி வந்து மோதியது. கார் இரண்டு மூன்று முறை உருண்டு கீழே விழுந்தும் ஏர்பேக் பாதி கூட வரவில்லை.
சாவின் விளிம்பில் அரை மயக்கத்தில் இருந்தவன் பார்வையில், சிவா தான் பட்டான்.
அவனை பார்த்து விட்டு காசி மயங்கி விட, சிவா உள்ளே சாரா இருக்கிறானா? என்று தேடி விட்டு, அவன் இல்லை என்றதும் இடத்தை காலி செய்து விட்டான்.
ஒலிப்பதிவில் கலந்திருந்த பஞ்சாபி வார்த்தைகளை எல்லாம் மொழிபெயர்த்து அர்த்தம் புரிந்து கொண்ட பிறகு, சாராவிடம் ஒரு நிதானம் வந்து விட்டது.
சிவராஜ் உளவு பார்ப்பதற்கென்றே பயிற்சி பெற்று தான் வந்திருந்தான். அவன் இங்கு சொந்த ஊரில் ஓய்வெடுக்க வந்திருப்பதாக நினைத்ததால் தான், அவர்கள் பகிரங்கமாக சிவராஜ்ஜை தேடியது. இல்லை என்றால், அவனை தெரிந்தது போல் காட்டியிருக்கவே மாட்டார்கள்.
ஓரளவு சிவாவை பற்றி அறிந்ததும், சாராவிற்கு அடுத்தது என்ன? என்று புரியவில்லை.
சிவா யாரோ ஒருவன் அல்ல. அவனுக்கு எதுவரை தெரிந்திருக்கும் என்று கணிக்கவே முடியாது. ஆனால் சிவாவின் நோக்கமே வைரவரையும் அவனையும் கொல்வது தான்.
அதில் வைரவரை கொன்று விட்டவன், சாராவை கொல்லும் முயற்சியில் தோற்று விட்டான்.
இனி என்ன செய்வான்? சட்டப்படி சாராவை கைது செய்வது நடக்காத காரியம். காசி, திவாகர், சாராவை தவிர யாருக்கும் எந்த விபரமும் முழுமையாக தெரியாது.
இப்போது திவாகரை தான் பார்க்க வேண்டும். அவனை ஏகாம்பரத்தை வைத்து அழைத்து வந்தான்.
திவாகர் புரியாமல் சாராவின் முன்னால் அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு சாரா? எதாவது வேலையா?”
“சிவா கிட்ட பேசுனியா?”
“நேத்து காலையில பேசுனேன். அப்புறம் அவன் ஃபோன் நாட் ரீச்சபில்ல போயிடுச்சு. ஏன் எங்க இருக்கான்?”
சாரா அவனை கூர்ந்து பார்க்க, “மறுபடியும் எதுவும்?” என்று பதட்டமாக கேட்டான்.
மீண்டும் சிவாவை கடத்தி விட்டார்களோ? என்ற பயம் அவனுக்கு.
மறுப்பாக தலையசைத்த சாரா, “சிவா யாரு தெரியுமா?” என்று கேட்டான்.
“இல்ல”
“அண்டர்கவர்ல நம்மல எல்லாம் போட்டுத்தள்ள வந்த பஞ்சாபி போலீஸ்”
“ஹான்?” என்று முதலில் புரியாமல் பார்த்தவன், புரிந்ததும் அதிர்ந்து எழுந்து விட்டான்.
“சிவா போலீஸா?”
அவனது அதிர்ந்த குரலும் நம்பாத தன்மையும் கவனித்தாலும், சாரா தலையை மட்டும் ஆட்டினான்.
“அது எப்படி முடியும்? அவனுக்கும் போலீஸுக்கும் என்ன சம்பந்தம்? அவன் மியூசிக் டைரக்டர் ஆக போறவன்”
“அது நடிப்பு”
“நடிப்பா?” என்று கேட்டவனின் குரலில் மெல்ல நடுக்கம் பரவியது.
மீண்டும் அமர்ந்து கொண்டவன், அவசர அவசரமாக சிவாவுடன் இருந்த நேரங்களை எல்லாம் அலச ஆரம்பித்தது.
“உனக்கு இது முன்னாடியே தெரியுமா?” என்று சாரா கேட்க, திவாகர் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
சாரா அவனை ஆழமாக பார்க்க, “இல்ல” என்று தலையாட்டியவன் முகத்தில் மெல்ல திகிலும் பரவியது.
உடனே தன்னுடைய கைபேசியை அவசரமாக எடுத்தவன், யாரையோ அழைத்தான்.
“டேய்.. அன்னைக்கு ஒருத்தன் கூட வந்தேன்ல?”
“ஆமா சார்..”
“அவன் திரும்பி உன் கிட்ட வந்தானா?”
“வந்தாரு சார். ஆனா நான் தான் நீங்க இல்லாம டீடைல் தர முடியாதுனு சொல்லிட்டேன்” என்றதும் நிம்மதி பெரூமுச்சு விட்டவன், “திரும்ப அவன் வந்தா உனக்கு அவன தெரியாது.. புரியுதா?” என்று கேட்டான்.
“ஓகே சார்” என்று கூறவும் வைத்து விட்டான்.
சாரா புருவம் சுருங்க யோசித்து விட்டு, “எங்க கூட்டிட்டு போன சிவாவ?” என்று கேட்டான்.
“நம்ம டீலர் கிட்ட.”
சாரா அவனை கோபத்தோடு பார்க்க, “சிவாவ நம்பினேன் சாரா..” என்றவன் தலை குனிந்தான்.
“வேற என்னலாம் சொன்ன?”
“வேற எதுவும் சொல்லல. ஆனா அன்னைக்கு நீ போய் பார்க்க சொன்னதும், நான் சிவா கூட தான் இருந்தேன். நம்ம சிவா தானனு… கூடவே கூட்டிட்டு போயிட்டேன்”
“தனியா போகனும்னு தெரியாதா உனக்கு?” என்று சாரா குரலை உயர்த்த, திவாகர் தலை குனிந்தான்.
அவர்களது கடத்தல்களுக்கு உதவும் ஒரு டீலரை தான், திவாகர் காட்டிக் கொடுத்து விட்டான்.
சிவா அவனைப்பிடித்து விட்டால், அடுத்தடுத்து இறங்கி விடுவானே? சாராவிற்கு தலை வலி வரும் போல் இருந்தது.
குறுக்கும் நெடுக்குமாக சில நொடிகள் நடந்தவன், சட்டென நின்றான்.
“இங்க பாரு திவா..” என்றதும் நிமிர்ந்து பார்த்தான்.
“உன் வீட்டுல போன்ல எதுவுமே இருக்க கூடாது. எல்லாத்தையும் எரிச்சுடு. நான் செத்தா கூட இனி என்னை நீ பார்க்க வரக்கூடாது. கிளம்பு”
“சாரா..”
“உங்கப்பாவுக்கு நீ மட்டும் தான் ஒரே புள்ள. அவரும் அநாதையா நிக்க கூடாதுனு நினைச்சனா, எல்லாத்தையும் அழிச்சுட்டு கிளம்பிடு”
“உன்னை இப்படி நட்டாத்துல விட்டுட்டு ஓடச்சொல்லுறியா? சிவா துரோகினா என்னையும் துரத்துவியா? உனக்கு என் மேல எப்பவும் நம்பிக்கையே இருக்காதா?”
திவாகர் கத்த, சாரா அவனது சட்டையை பிடித்து தள்ளி விட்டான்.
“சொன்னா சொன்னத செய். சும்மா கத்திட்டு இருந்த… அப்புறம் என் கையாலயே செத்துடுவ. போ” என்றான்.
“மாட்டேன். அப்படி போனா வைரவர் ஐயா ஆத்மா என்னை மன்னிக்காது”
“அவர் மன்னிக்கிறாரானு தெரியாது. ஆனா நான் கொன்னுடுவேன். அது மட்டும் நல்லா தெரியும். முதல்ல போய் எல்லாத்தையும் அழி. கிளம்பு” என்றவன் வாசலுக்கு பிடித்து தள்ளி விட்டான்.
திவாகர் அவனோடு தர்க்கம் செய்யவில்லை. என்ன நினைத்தானோ, விறுவிறுவென கிளம்பியிருந்தான்.
அவன் வீட்டுக்கு சென்று சேரும் போதே, அவனுடைய மடிக்கணினி முதல் பென்டிரைவ் வரை அனைத்தும் தண்ணீருக்குள் மிதந்து கொண்டிருந்தது. காகிதங்களை எல்லாம் எரித்தபடி நின்றிருந்தார் குமாரசாமி.
அதை பார்த்து அவன் நிம்மதி பெருமூச்சு விட, சிவாவும் குருவும் புயல் போல் உள்ளே நுழைந்தனர்.
தொடரும்.
