சாரா 43

Loading

இரண்டு நாள் கடந்து போக, ராகவி சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகத்தில் வந்து நின்றாள். சாராவை பார்ப்பதற்கும் காரோட்டி பழகுவதற்கும்.

சாரா அங்கில்லை என்ற செய்தி தான் கிடைத்தது.

‘ரொம்ப பிசி போல’ என்று நினைத்தவள், ஏகாம்பரத்தை தொடர்புகொள்ள அதுவும் முடியவில்லை.

‘வீடு சென்று பார்க்கலாமா?’ என்ற யோசனையுடன் கிளம்பி விட்டாள்.

போகும் வழியில் அவளது பழைய வீடு செல்லும் பாதை வர, அங்கு இன்னும் பொருட்கள் இருப்பது நினைவு வந்தது.

உடனே அங்கு சென்றாள். வீட்டு ஓனரிடம் பேசி விட்டு, சாவியை வாங்கி உள்ளே சென்றாள். வீடு தூசி படிந்து கிடந்தது.

“இங்க வாழ்ந்தே பல வருசம் ஆன மாதிரி இருக்கு” என்றவள், தூசியை பொருட்படுத்தாமல் தன் உடைகளை ஆராய்ந்தாள்.

தேவையானது என்று தோன்றிய சிலவற்றை எடுத்துக் கொண்டவள், கையில் இருந்த பணத்தை ஓனரிடம் கொடுத்து விட்டு, மற்றதை பிறகு தருவதாக சொல்லிக் கிளம்பினாள்.

வெளியே வந்ததும், அவள் முன்னால் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.

அவள் புரியாமல் பார்க்க “ராகவி தானமா நீ?” என்று கேட்டான் ஒருவன்.

மேலும் கீழும் அவனை பார்த்து விட்டு, போலீஸ் ஜீப்பையும் பார்த்தவள், “நீங்க?” என்று இழுத்தாள்.

“உன்னை சார் கூட்டிட்டு வரச்சொன்னாரு.. ஏறுமா” என்று கூறினாள் பெண் காவலதிகாரி.

அவளையும் அதே பார்வை பார்த்த ராகவி, “சாரா? எந்த சாரு?” என்று கேட்டு வைத்தாள்.

“அத நேர்லயே வந்து பாரு”

“எங்க?”

“போலீஸ் ஸ்டேஷனுக்கு”

“அப்படியா? நான் வர முடியாது”

“இந்தாமா நீயா வர்ரியா? இல்ல அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டு போகவா?” என்று எகிறினாள் பெண்.

“அரெஸ்ட் பண்ணுவீங்களா? எதுக்கு?”

“நீ நிறைய கேள்வி கேட்குறீயே..”

அவர்கள் கோபமாக பேச, அந்த கோபத்திற்கு எல்லாம் ராகவி அசரவில்லை. இன்னும் சந்தேகமாக தான் பார்த்து வைத்தாள்.

“ஏறுமா வண்டில” என்று அருகே வந்து இழுக்க, அசையாமல் நின்றாள்.

“என்னை பார்த்தா என்ன கேனச்சி மாதிரி தெரியுதா உங்களுக்கு?” என்று வேறு கேட்டு வைத்தாள்.

அவர்கள் அவளது தைரியத்தை பார்த்து வியக்க, ராகவி கோபமாக பார்த்தாள்.

“நடு ரோட்டுல ஒரு ஜீப்ல வந்து நின்னு ஏறுனு சொன்னா? நான் ஏறிடனுமா? நீங்க போலீஸ்ங்குறதுக்கு என்ன ஆதாரம்? இது போலீஸ் ஜீப்ங்குறதுக்கு என்ன ஆதாரம்? வாடகைக்கு எடுத்துட்டு வந்து நடிச்சு, ஆள் கடத்துற கும்பலா இருந்தீங்கனா? நான் ஏன் வரனும்?”

அடுக்கடுக்காய் அவள் கேள்வி கேட்ட, மற்றவர்களுக்கு தலை சுற்றியது. இவளது தைரியத்திற்கு பாராட்டுவதா? இல்லை நம்மயே சந்தேகப்படுகிறாளே என்று கோபப்படுவதா? என்று புரியவில்லை அவர்களுக்கு.

பிறகு சற்று தணிந்து போக நினைத்தனர். முதலில், எதோ ஒரு குற்றவாளியை அழைத்து வரப்போவதாக நினைத்து தான் கடுமையாக பேசினார்கள்.

இப்போது சற்று தணிந்து, “சிவா சார் தான் கூட்டிட்டு வர சொன்னாரு” என்றனர்.

“சிவாவா? யாரது?”

ராகவிக்கு சட்டென ஞாபகம் வராததால் குழப்பத்துடனே கேட்டாள்.

“சிவா சார தெரியாதா?” என்று அவர்களும் குழம்பி விட்டனர்.

“தெரியாதே. யாரு?”

“சாராவோட தம்பி”

“ஓஓ.. அவரா?” என்றவள், அவர்களை மீண்டும் மேலும் கீழும் பார்த்தாள்.

“அவரு கூப்பிட்டா நீங்க ஏன் வந்தீங்க?”

அந்த இருவருமே குழம்பி விட்டனர். நடக்கும் எதுவும் அவளுக்குத்தான் தெரியாதே? தெரிந்தால் அல்லவா காவல்துறையினருக்கும் சிவாவிற்கும் இருக்கும் சம்பந்தம் புரியும்.

புரியாமலே கேட்டவளை, என்ன செய்வது? என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

“நீ நேராவே வந்து அவர பார்த்து பேசிக்க வா”

“முடியாது. என்னை ஏமாத்தி எங்கயாச்சும் கொண்டு போய் வித்துட்டா? நோ சான்ஸ். நான் மாட்டேன்”

“ஏன்மா எங்கள பார்த்தா ஆள் கடத்துற மாதிரியா இருக்கு?”

“ஆமா.. கடத்தல் காரவங்க எல்லாம், கருப்பா பெருசா கேவலமான மூஞ்சியோட தான் இருக்கனும்னு இல்ல. அரவிந்த் சாமி மாதிரி அழகா இருந்தா கூட பண்ணுவாங்க தான். உங்க கூட என்னால வர முடியாது” என்றவள், தாண்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்.

“இது என்ன புது சோதனை?” என்று தலையில் அடித்துக் கொண்டு, அவள் பின்னால் சென்றனர்.

“எம்மா.. நில்லுமா.. நாங்க நிஜம்மாவே போலீஸ் தான்மா”

“அத எப்படி நான் நம்புறதுங்குறேன்?”

“எங்க ஐடிய வேணா காட்டவா?”

“அதுவும் போலியா இருந்தா?”

“யாருடா இவ?” என்று அயர்ந்து விட்டனர்.

ராகவி நிற்காமல் நடக்க, பெண்காவலாளி தான் ஓடி வந்து பிடித்தாள்.

“இங்க பாரு.. நாங்க போலீஸ் தான். நேரா போலீஸ் ஸ்டேஷன் தான் போவோம். எங்க கூட வா..”

“வேற எங்கயாச்சும் போயிட்டா?”

“எம்மா.. என்ன லந்தா? ஓவரா பேசிட்டு இருக்க.. எதாவது கேஸ போட்டு உள்ள வச்சுடுவேன் பார்த்துக்க”

“முதல்ல கேஸ் போடுங்க. அப்புறம் வாரண்ட்டோட வந்து அரெஸ்ட் பண்ணுங்க. நான் கிளம்புறேன்” என்றவள், அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினாள்.

இவளை இவள் வழியில் போய் தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்த பெண் காவலர், ராகவி ஏறிய ஆட்டோவில் தானும் ஏறிக் கொண்டு, காவல்நிலையம் செல்லச் சொன்னாள்.

“ஹலோ.. உங்கள யாரு ஏறச்சொன்னா?” என்று ராகவி எகிற, “எங்க கூட தான் நீ வரல. உன் கூட நான் வர்ரேன். போலீஸ் ஸ்டேஷன் போவோம்” என்றவள், ஆட்டோ ஓட்டுபவனை பார்க்க, அவன் கிளம்பி விட்டான்.

“அப்ப நிஜம்மாவே போலீஸ் தானா?” என்று பார்த்து வைத்தாள் ராகவி.

கடைசியில் காவல் நிலையத்திலேயே வந்து ஆட்டோ நின்று விட்டது. இறங்கி உள்ளே செல்ல, ராகவி குழப்பத்தோடு நின்றாள்.

எதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறோம்? என்ற யோசனை உள்ளே ஓட, கைபேசியை எடுத்து சாராவை அழைக்கப் போனாள்.

அதை சட்டென பறித்துக் கொண்டு, “உள்ள போய் பேசலாம் வா” என்று இழுத்துச் சென்றாள் பெண்காவலாளி.

உள்ளே சிவா அமர்ந்திருந்தான். கம்பீரமாக காவல்துறைக்குண்டான தோரணையுடன்.

ராகவி அவனை நன்றாக ஆராய்ந்து விட்டு, “நீங்க போலீஸா?” என்று கேட்டாள்.

தன்னை பார்த்ததும் அதிர்வாள் என்று சிவா எதிர்பார்த்திருக்க, அவளோ சந்தேகமாக கேட்டு வைத்தாள்.

சரி விசயம் இன்னும் தெரியவில்லை போலும் என்று நினைத்தவன், மேலும் கீழும் தலையாட்டினான்.

“ஓஹோ…” என்று சாதாரணமாக கேட்டுக் கொண்டவள், “சரி என்னை ஏன் கூட்டிட்டு வர சொன்னீங்க?” என்று கேட்டு வைத்தாள்.

அவள் முகத்தில் கோபம், பயம், பதட்டம், அதிர்ச்சி எதுவுமே இல்லாததை பார்த்து விட்டு, ‘உண்மையிலயே இவ தான் சாரா லவ்வரா?’ என்று குழம்பி விட்டான் சிவா.

ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல், “உன் கிட்ட விசாரிக்கனும். உட்காரு ” என்றான்.

பையை வைத்து விட்டு அமர்ந்தவள், அவனை புரியாமல் பார்த்தாள்.

இவன் சாராவின் தம்பி. காவலர் பணியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் அவளுக்கென்ன? சாராவிற்கு கந்தனை போன்ற நண்பர்கள் இருக்கும் போது, சிவா போன்ற தம்பி இருப்பதில் ஆச்சரியமா என்ன?

சாராவின் நண்பர்கள் எந்த பதவியில் இருந்தாலும், அவள் ஆச்சரியப்படுவதற்கும் பதட்டப்படுவதற்கும் ஒன்றுமே இல்லையே. அதனால் அமைதியாக தான் அமர்ந்திருந்தாள்.

சிவா தான் ‘தவறான ஆளை தூக்கி விட்டோமா?’ என்ற கேள்வியோடு அவளை ஆராய்ந்தான். அன்று அலுவலகத்தில் பார்த்த அதே பெண் தான் என்பது விளங்கியது.

“உனக்கு சாராவ எவ்வளவு நாளா தெரியும்?”

“அத ஏன் நீங்க கேட்குறீங்க?”

“கேட்டா பதில் சொல்லனும்”

“நான் ஏன் சொல்லனும்?”

“நக்கலா?”

“எதுக்கு கேட்குறீங்கனு தான் கேட்டேன். அது நக்கலா?”

“நீ எங்க இருக்க தெரியுமா?”

சுற்றியும் பார்த்தவள், “போலீஸ் ஸ்டேஷன்” என்றாள்.

“நான் யாரு தெரியுமா?”

“தெரியாதே. யார் நீங்க?”

“நான் ஒரு போலீஸ்.. ஐபிஎஸ் ஆஃபிஸர்”

“சரி..”

“நான் நினைச்சா, நீ இந்த இடத்தை விட்டு வெளிய போக முடியாம உன்னை உள்ள தள்ள முடியும்”

“எதுக்கு?”

“உனக்கு சாராவுக்கும் சம்பந்தமிருக்கு. நீயும் அவனோட தொழில்ல கூட்டுனு”

“இந்த மாதிரி பொய் கேஸ் போட்டு ஆளுங்கள தூக்கி உள்ள போடுறதுக்கா ஐபிஎஸ் படிச்சீங்க?” என்று அவள் கேட்ட கேள்வியில், அங்கு நின்றிருந்த ஏட்டு ஒருவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

படக்கென திரும்பி சிரிப்பை மறைத்துக் கொண்டான். சிவாவும் கூட இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவளை பயமுறுத்த பேசினால், அவள் எதிர்த்து கேள்வி கேட்கிறாள்.

“என்ன நக்கலா?”

“இல்லையே.. ஒரு பொய்யான கேஸ என் மேல போட்டு உள்ள தள்ளுவேன்னு சொல்லுறீங்க. இதான் உங்க போலீஸ் எத்திக்ஸானு கேட்குறேன். படிக்கும் போதும் டிரைனிங்லயும், உங்களுக்கு நாட்ட காப்பாத்தவும் அப்பாவிங்கள காப்பாத்தவும் தான சொல்லி கொடுத்துருப்பாங்க? பொய் கேஸ் போடவா சொல்லிக் கொடுத்தாங்க?”

அவளது கேள்வியில் பக்கென ஒரு சிரிப்பு சத்தம் வந்தது. சிவா அவளை முறைக்க முடியாமல், சிரிப்பு வந்த பக்கம் திரும்பி முறைக்க, அங்கு கந்தன் வந்து நின்றிருந்தான்.

ராகவியின் புது கைபேசியை வைத்து அவள் இருக்கும் இடத்தை பார்த்தவன், சந்தேகத்துடன் கிளம்பி வந்திருந்தான்.

வந்தால் சிவாவை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ராகவி. அவளது கேள்வியில் அவனுக்கு சிரிப்பு வர, உடனே சிரித்து விட்டான்.

கந்தனை பார்த்து விட்டு சிவா தன்னை கட்டுப்படுத்த, “சொல்லுங்க சிவா சார். பொய் கேஸ் போடவா படிச்சோம்?” என்று கேட்டு வைத்தான்.

“சில தப்பானவங்களோட பழகுறவங்கள, பொய் கேஸ் போட்டாச்சும் உள்ள போட்டா தான் நாட்ட காப்பாத்த முடியும்” என்று சிவா இறுகிய குரலில் சொல்ல, “அதுக்கு என் தங்கச்சி தான் கிடைச்சாளா உங்களுக்கு?” என்று கேட்டான்.

சிவாவிற்கு, கந்தன் வீட்டில் தங்கை என்று சொல்லிக் கொண்டு ராகவி தங்கியிருப்பது தெரியும்.‌ அனுபமா சொல்லியிருந்தாள். ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. சாராவின் காதலி என்பது மட்டும் தான் அவனுக்கு வேண்டியவை.

“உங்க தங்கச்சியா? நீங்களும் சாராவும் மாமன் மச்சானா என்ன? அவனோட காதலி உங்களுக்கு தங்கச்சியாகிட்டாளா?”

சிவா சற்று நக்கலாகவே கேட்டான். கந்தனை விலக்கினால் தான் ராகவியை அவன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்று நினைத்தான். ஆனால் கந்தன் விட வேண்டுமே?

“இவ சாராவுக்கு லவ்வரானு தெரியாது. நானும் அவனுக்கு மாமனா மச்சானானு தெரியாது. ஆனா.. ராகவி எனக்கு தங்கச்சி தான்”

“அப்படியா?” என்று சிவா நக்கலடிக்க, “அப்படித்தான். அதுனால.. உங்க பொய் கேஸ வேற யாரு மேலயாச்சும் போடுங்க. எந்திரி ராகவி” என்றதும், உடனே எழுந்து விட்டாள் அவள்.

“கந்தன்.. இதுல நீங்க தேவையில்லாம தலையிடுறீங்க” என்று சிவா கடுமை நிறைந்த குரலில் பேச, “என் தங்கச்சிய கூட்டிட்டு வந்தா நான் தலையிட தான் செய்வேன் சிவராஜ்” என்றான் அவன்.

“இந்த அண்ணன் தங்கச்சி சென்டி எல்லாம் என் கிட்ட வேலைக்காகாது. இவள நான் விசாரிக்கனும்.”

“இவ அவனு மரியாதை இல்லாம பேசாதீங்க சிவராஜ். பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்”

“என்னமோ சொந்த தங்கச்சி மாதிரி இவ்வளவு துள்ளுறீங்க?”

“என் சொந்த தங்கச்சி தான்”

“வாட்?”

“என் சித்திக்கு பிறந்த பொண்ணு ராகவி. எங்களுக்கு ஒரே அப்பா தான். எனக்கு சொந்த தங்கச்சி தான்” என்று வார்த்தைகளை அழுத்தி நிதானமாக கூறினான்.

இதை சிவா எதிர்பார்க்காமல் புருவம் தூக்கி ஆச்சரியப்பட, “பிரச்சனை யார் கிட்டயோ அவங்கள பிடிங்க. என் தங்கச்சிய எதாவது பண்ணீங்கனா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவன் ராகவியை இழுத்துக் கொண்டு, ஒரு கையில் அவளது பையையும் தூக்கி கொண்டு வெளியேறி விட்டான்.

ராகவி கந்தனின் சொந்த தங்கை என்பது சிவாவை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

‘இந்த விசயம் நமக்கு தெரியலயே.. அதான் கந்தன் கூட சாரா எப்பவும் ஸ்மூத்தாவே போறானா?’ என்று யோசித்தான்.

ராகவி கந்தனோடு காரில் அமர்ந்த பிறகும், ஒன்றும் பேசாமல் யோசனையுடன் வந்தாள்.

“என்ன யோசிக்கிற?” என்று கந்தன் கேட்க, “பாஸ் மேல இவருக்கு என்ன கோபம்? இவரு அவரோட தம்பி தான?” என்று கேட்டாள்.

“அது பெரிய காம்ப்ளிகேட்டான விசயம். உனக்கு புரியாது”

“ஓஓ.. சரி நான் ஏகா கிட்ட கேட்டுக்கிறேன்”

“உனக்கு புரியாதுங்குறேன். ஏகா கிட்ட கேட்பியா?”

“ஆமா. நீங்களும் பாஸும் எல்லாத்தையும் மறைப்பீங்க. ஆனா ஏகா அப்படி இல்ல. சொல்லிடுவாரு. நான் அவரு கிட்டயே கேட்டுக்கிறேன்” என்று விட்டாள்.

வீடு வந்ததும் ஏகாவை அழைத்தாள். அழைப்பு செல்லவில்லை. இரவு வரை காத்திருந்து மீண்டும் அழைக்க, எடுத்து விட்டான்.

“என்ன‌ ராகவி?”

“ஏகா.. கால் பண்ணிட்டே இருக்கேன். எங்க போனீங்க?”

“எங்க போக? வேலை இருந்துச்சு. நீ ஏன் இப்ப கூப்பிட்ட?”

“இன்னைக்கு காலையில ஒன்னு நடந்துச்சு” என்று ஆரம்பித்தவள், அத்தனையும் கூறி முடித்தாள்.

“சிவராஜுக்கு ஏன் பாஸ் மேல இவ்வளவு கோபம்?” என்று அவள் புரியாமல் கேட்க, ஏகாம்பரமும் நடந்ததை எல்லாம் ‌கூறி முடித்தான்.

“இவனா‌ வைரவர் ஐயாவ கொன்னது? ச்சே ரொம்ப பேட்.. இவ்வளவு நாள் நல்லவன் மாதிரி நடிச்சுருக்கானா?”

“ம்ம்.. எல்லாத்தையும் ஏமாத்தியிருக்கான்”

“அந்த அனுபமா பக்கி மாதிரியே.. அவளும் அவ முகர கட்டையும்”

“ம்ம் ஆமா”

“ஏன் ஏகா எல்லாரும் இப்படி இருக்காங்க?”

“தெரியலயே.. தெரிஞ்சா நாம ஏன் வருத்தப்பட போறோம்?”

“ஏகா.. நீங்களாச்சும் நல்லவங்க தானா?”

“நீ கேட்டுட்ட.. நான் உன்னை கேட்கல அம்புட்டு தான் வித்தியாசம்”

“நிழல கூட நம்ப முடியாது போல ஏகா” என்றவள், பெருமூச்சு விட்டாள்.

“சரி கந்தன் சார் வந்து உன்னை கூட்டிட்டு வந்துட்டாருல. இனி நீ யாருனு தெரிஞ்சு உன் பக்கத்துல வர மாட்டாங்க”

“வந்தாலும் எனக்கு என்ன பயம்? நான் என்ன தப்பா பண்ணேன்?”

“அதான.. நீங்க தைரியசாலி தான் மேடம்”

“அதே தான்”

“ஒரு வேளை உன்னை தூக்கி உள்ள வச்சுருந்தா என்ன செஞ்சுருப்ப?”

“பாஸ் வந்து காப்பாத்துவாருனு வெயிட் பண்ணுவேன். இல்லனா அண்ணனுக்கும் உங்களுக்கும் போன் போட்டுருப்பேன். வந்து கூட்டிட்டு வந்துட மாட்டீங்களா என்ன?”

“பரவாயில்ல இதுல தெளிவா தான் இருக்க. ஆனா மத்தவங்க தான் பாவம். உன்னை பத்தி தெரியாம கூட்டிட்டு போய், நீ கேட்ட கேள்வில தலை சுத்தியிருக்கும்” என்ற ஏகா அதை நினைத்து சிரிக்க, “பின்ன? பொய் கேஸ் போடுவேன்னா? ஊருக்குள்ள நூறு கேஸ பிடிக்காம விட்டுட்டு, சும்மா இருக்கவ மேல கேஸ் போடுவாங்களாம். போட்டு தான் பார்க்கட்டுமே. கோர்ட்ல வச்சு கிழி கிழினு கிழிச்சுட மாட்டேன்” என்று வீர வசனம் பேச, ஏகாம்பரம் வாய் விட்டு சிரித்தான்.

தொடரும்.

Leave a Reply