சாரா 5
![]()
பூபதி பின்னால் ஓடியவள், ஒரு முறை வீட்டை திரும்பிப் பார்த்தாள். சாணக்கியன் கண்ணில் படவில்லை.
“நல்லா வருவயா” என்று வாய் விட்டு புலம்பி விட்டு நடந்தாள்.
அவள் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வருவதை பார்த்த பூபதிக்கு கடுப்பாகி விட்டது.
“இவளால நான் டென்சன் ஆகுறது போதாதாமா? இவ ஏன் மூஞ்சிய இப்படி வச்சுட்டு வர்ரா?” என்று கடுப்பாக திட்டியவன், “ஹலோ.. சீக்கிரம் வா” என்று குரலை உயர்த்தினான்.
வேண்டா வெறுப்பாய் வந்து நின்றாள்.
இன்னும் உடல் முழுவதுமாக தேறவில்லை. காயங்களை மறைக்கும் அளவு தான் சரியாகி இருக்கிறாள். அவளை இப்படி பந்தாடினால்?
சோர்ந்து போய் பூபதியின் முன்னால் வந்தவள், “சொல்லுங்க சார். என்ன வேலை பார்க்க?” என்று கேட்டாள்.
அவளது சோர்ந்து போன குரலும் தளர்ந்த நடையும், பூபதியை சற்று நிதானிக்க வைத்தது. உடல் நிலை சரியில்லாத பெண் என்பது உரைக்க, கோபத்தை ஒதுக்கி விட்டு, “என்ன வேலை தெரியும் உனக்கு?” என்று விசாரித்தான்.
“படிச்சதே ப்ளஸ் டூ தான் சார். அதுக்கு மேல படிக்காம வேலைக்கு தான் போயிருக்கேன். டாலி மட்டும் படிச்சேன்.”
“டாலி பண்ணலாம் தேவை இல்ல. வீட்டு வேலை தான் பார்த்தாகனும்”
அவளை வெளியே அனுப்ப அவனுக்கும் ஆசை தான். ஆனால் சாணக்கியன் வீட்டை விட்டு போகக்கூடாது என்று சொல்லி விட்டானே.
“ஏகாம்பரம்” என்று கூப்பிட, ஏகாம்பரம் உடனே வந்து நின்றான்.
“இந்த பொண்ண அசிஸ்டன்டா வச்சுக்க. பெரிய வேலை எதுவும் கொடுக்காத. உடம்பு சரியில்லாத பொண்ணு” என்றதும் ஏகாம்பரம் தலையை ஆட்டி வைத்தான்.
பூபதி அவளை விட்டு விட்டு நடக்க, “பூபதி சார்.. நில்லுங்க.. இந்த வேலை பார்த்து நான் எப்ப அஞ்சு லட்சத்த அடைக்குறது?” என்று பதட்டமாக கேட்டாள்.
“வேற எந்த வேலை பார்த்தாலும் உன்னால அவ்வளவு சீக்கிரம் அந்த பணத்த தர முடியாது. கொஞ்ச நாள் இரு. சாரா சார் மனசு மாறிட்டா அனுப்பி விட்டுருவார்” என்று கூறியதோடு சென்று விட்டான்.
‘வீட்டுக்கா? இல்ல ஒரேடியா மேலயா? அய்யோ ரௌடி கும்பல்ல மாட்டிக்கிட்டேனே’ என்று உள்ளே புலம்பிக் கொண்டாள்.
அவள் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அழுவது போல் நிற்க, “இந்தாமா.. உன் பேரென்ன?” என்று கேட்டான் ஏகாம்பரம்.
“ராகவி”
“என் பேரு ஏகாம்பரம். என் கூட வா” என்று அவன் ஒரு பக்கம் அழைத்துச் சென்றான்.
அது கார் நிறுத்தும் இடம் போல் இருந்தது.
“இத எல்லாம் கூட்டி சுத்தம் பண்ணு” என்றவன், தேவையான பொருள் இருக்கும் இடத்தை காட்டினான்.
“இங்கயா கார நிறுத்துவீங்க? அவ்வளவு காஸ்ட்லி கார போய்.. இந்த குப்பைக்குள்ளயா?” என்று அவள் கேவலமாக பார்க்க, “இது கார் நிறுத்துற இடமில்ல. இங்க முதல்ல பைக் இருந்துச்சு. அத கிளியர் பண்ணதுல இருந்து யூஸ் பண்ணாம இருக்கு” என்றான்.
“அப்ப இப்ப ஏன் துடைக்கனும்?”
“இனிமே நீ இங்க தான் தங்க போற. அதுக்கு தான்”
“நானா? இங்கயா?” என்றவள் சுற்றியும் பார்த்து விட்டு, “என் வீட்ட விட பெருசு தான். ஆனா நான் இங்க தங்கிட்டா சாப்பாட்டுக்கு? என் கிட்ட டிரஸ் கூட இல்ல” என்று பதறினாள்.
“எல்லாம் நேரம் வரும் போது நடக்கும். இப்ப சுத்தம் பண்ணுற வேலைய பாரு”
பேச்சு முடிந்தது என ஏகாம்பரம் சென்று விட, அந்த இடத்தை பார்த்தவள் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
“உனக்கு இது தேவையா? தேவையா? நடுரோட்டுல காப்பாத்தி கூட்டிட்டு வந்து இங்க வச்சு வேலை வாங்குறாங்க.. இதுல அஞ்சு லட்சமாம்.. ஆண்டவா..” என்று தனக்குத்தானே பேசி புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
போன ஏகாம்பரம் திரும்பி வந்தான். அவள் வேலையை ஆரம்பிக்காமல் இருப்பதை பார்த்து அருகே வந்து, “கனவு கண்டு முடிச்சாச்சா?” என்று கேட்டு வைத்தான்.
தலையை மட்டும் தூக்கி பார்த்தவள், “டயர்டா இருக்கு சார். கொஞ்சம் உட்கார்ந்துக்கிறேன்” என்றாள்.
“சார் எல்லாம் வேணாம். ஏகாம்பரம்னு கூப்பிடு போதும்”
“நீங்க என்னை விட பெரிய ஆளு தான? எப்படி பேர் சொல்லுறது?”
“பரவாயில்ல பேரே சொல்லு” என்றவன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
“கொண்டாங்க கொண்டாங்க” என்று வேகமாக வாங்கியவள், மடமடவென குடித்தாள். அவ்வளவு தாகம் அவளுக்கு.
தாகம் தீர்ந்ததும் பெருமூச்சு விட்டு விட்டு, “தாங்க்ஸ்” என்று நன்றியும் தெரிவித்தாள்.
“இப்ப வேலைய ஆரம்பிக்க வேண்டியது தான?”
உடனே எழுந்தவள், சுடிதார் துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டாள்.
“செய்யுறேன். வேற வழி. என் விதி இப்படியாகி போச்சு” என்று கடுப்பாக கூறி விட்டு துடைப்பத்தை எடுத்தாள்.
“ஏன்? இந்த வேலை செய்யுறதுல ரொம்ப கஷ்டமோ?”
“எனக்கு வீடு இருக்கு ஏகாம்பரம். சொந்த வீடு இல்லனாலும் என் வீடு தான். அத விட்டுட்டு இத போய் துடைக்கனுமேனு கடுப்பா இருக்கு.”
“அப்ப போக வேண்டியது தான?”
“எங்க? போக விட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பாரு சாரா சார். கடுப்ப கிளப்பாதீங்க”
“உனக்கு வேலை கொடுத்தது பூபதி சார் தான?”
“அவரு நல்லவர். சாரா சார விட பூபதி சார் ரொம்ப நல்லவர்”
“அப்ப சாரா சார் நல்லவர் இல்லங்குற?”
“ஆத்தே.. ஏகாம்பரம்.. ஏன் இப்படி பீதிய கிளம்புறீங்க? நான் அப்படி சொல்லவே இல்ல”
“இவர விட அவர் நல்லவர்னு சொன்ன?”
“நல்லவர்னு தான சொன்னேன். கெட்டவர்னு சொல்லவே இல்லையே.. ஏன் இப்படி கிளப்பி விடுறீங்க? ஏற்கனவே விதி என்னை வச்சு செய்யுது. நீங்க வேற ஆரம்பிக்காதீங்க”
“ஓஓ அப்ப அப்படி சொல்லலயா?”
“இல்ல சாமி. ஊருல ரொம்ப கேவலமான விதி இருக்க பத்தாவது ஆளு நான் தான். இன்னும் அத மோசமாக்கிக்க எனக்கு ஆசை இல்ல”
“பத்தாவது ஆளா? முதல் ஆளுனு தான சொல்லுவாங்க?”
“எனக்கு முன்னாடி ஒன்பது பேர் இருக்காங்கனு நினைச்சு நானே சந்தோச பட்டுக்குறதுக்காக பத்தாவது ஆளா வச்சுக்குவேன்”
அவளது விளக்கத்தில் ஏகாம்பரத்திற்கே சிரிப்பு வந்து விட்டது.
“அப்படி என்ன மோசம் உன் வாழ்க்கை?”
“அதெல்லாம் சொல்ல கூட பிடிக்காத கதை. ஆனா இனி அத விட மோசமா போகுமோனு பயமா இருக்கு” என்றவள் திடீரென அலறி பின்னால் ஓடி வந்தாள்.
இவ்வளவு நேரமும் சுத்தம் செய்தபடி தான் பேசிக் கொண்டிருந்தாள். திடீரென துள்ளி வரவும், ஏகாம்பரம் எட்டிப்பார்த்தான்.
கரப்பான்பூச்சி ஒன்று அங்கும் இங்கும் ஓட, “அய்யய்யோ.. அத அடிங்க” என்றவள் ஏகாம்பரம கையில் துடைப்பத்தை கொடுத்து விட்டு, பின்னால் போய் நின்று கொண்டாள்.
“இம்புட்டு வாய் பேசிட்டு கரப்பான்பூச்சிக்கு பயப்படுற?” என்று கிண்டலாக கேட்டபடி, அதை அடித்து தூக்கி எறிந்தான்.
பயந்துபோய் நின்றிருந்தவள், அதை தூக்கி எறிந்த பின்பே நிம்மதியாக மூச்சு விட்டாள்.
“எனக்கு எந்த அனிமல பார்த்தாலும் பயம் தான். மனுசனுங்கள உட்பட.” என்றவள் மீண்டும் வேலையை ஆரம்பித்தாள்.
“இவ்வளவு பயம் இந்த இடத்துக்கு பொருந்தாது. தைரியமா இருக்க பழகு”
“நான் இங்க இருக்கவே வேணாம்ங்குறேன். நீங்க பழக சொல்லுறீங்க? அடப்போங்கயா”
“அப்ப இங்க ஏன் இருக்க?”
“பணம் தான். அஞ்சு லட்சம் தரனுமாம். கொடுமைய பாருங்க. அஞ்சு பைசா இல்லாத என் கிட்ட அஞ்சு லட்சம் கேட்டா எங்க போவேன்? அதான் சாரா சார விட பூபதி சார் நல்லவருனு சொன்னேன்”
“அப்படி என்ன பூபதி சார் பண்ணாரு?”
“அவரு பணத்த தர வேணாம்னு சொன்னாரு. அவரு தான் ரோட்டுல கிடந்த என்னை வீட்டுல விட ஏற்பாடும் பண்ணாரு. அவர் ரொம்ப நல்லவர்”
“அப்ப சாரா சார் என்ன பண்ணாரு?”
“அவரும் நல்லவரு தான். என்னை வீட்டுல விட்டாரு. எனக்கு பிரச்சனையா இருந்தப்போ காப்பாத்தினாரு. எனக்கு செலவு பண்ணி வைத்தியம் கூட பார்த்தாரு.. ஆனா இப்படி புலம்பவும் விட்டாரு”
“ஏன்?”
“வைத்தியம் பார்த்த காச கேட்குறதுல தப்பில்ல தான். ஆனா அத வைச்சுட்டு அப்புறமா வெளிய போனு சொன்னா? நான் என்ன மந்திரமா போட முடியும்? அது தெரிஞ்சுருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்? அஞ்சு லட்சம்.. அம்மாடி.. அத என்னைக்கு அடைச்சு.. நான் என்னைக்கு போய்? இனி வாழ்க்கைய மறந்துட வேண்டியது தான்.”
“உன் அம்மா அப்பா எல்லாம் எங்க?”
“ஒருத்தன் இல்ல. எல்லாம் மொத்தமா பரலோகம் போயாச்சு. நானே ஒரு அனாதே.. அனாதை கிட்ட அஞ்சு லட்சம் கேட்குறாங்களே?”
“என்ன வேலை பார்க்குற?”
“ஒரு கடையில வேலை பார்த்தேன். மாசம் எட்டாயிரம் தான் தருவான் அந்த பட்டர் மவன். ஆனா வேலை மட்டும் எண்பதாயிரத்துக்கு வாங்குவான். எட்டாயிரத்துக்கே வழி இல்லாத நானு அஞ்சு லட்சம் எங்க இருந்து எடுத்துட்டு வர?”
“உனக்கு ஃப்ரண்ட் எல்லாம் யாரும் இல்லையா?”
“இருந்துச்சுங்க. ஆனா எல்லாம் என்னை விட பிச்சக்காரிங்க. என் கிட்ட வந்து தான் கடன் கேட்பாளுங்க. உனக்கு என்ன குடும்பமா இருக்கு? செலவா இருக்கு? எனக்கு புருஷன் புள்ளை எல்லாம் இருக்கு. அதுனால உன் பணத்த எனக்கு கடன் கொடுனு வந்து நிப்பாளுங்க. அவளுங்க அஞ்சு லட்சத்த அழுதுட்டாலும்…? அய்யோ அஞ்சு லட்….சம்.. அஞ்…சு லட்…சம்.. அஞ்சே லட்சம்.. வாழ்க்கையில நான் கண்ணால கூட பார்க்காத பணம்.. எப்படி அடைக்க போறேனோ?”
சுற்றி சுற்றி அந்த பணத்திலேயே வந்து நின்று புலம்பிக் கொண்டே வேலை செய்தாள். அவள் சோர்வது தெரிந்து ஏகாம்பரமும் மனம் கேட்காமல் உதவி செய்தான்.
அவளை வெளியே துரத்த வேண்டும் என்று பூபதி சொன்னாலும், ஏகாம்பரத்திற்கு அதை கடுமையாக செய்ய மனமில்லை. ஏன் பூபதியால் கூட அதை செய்ய முடியாது.
“பணம் பெருசு இல்ல. சாரா சார் நல்லவரு.. கொஞ்சம் கெஞ்சி கேட்டா மன்னிச்சுடுவாரு”
“எதே? மன்னிக்கிறதுக்கு நான் என்ன தப்பா பண்ணேன்? எனக்கு டிரீட்மெண்ட் பார்த்துருக்காங்க. பணத்த கேட்குறாங்க. ஆனா உங்க சார் என்னை கொண்டு போய் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல போட்டுருக்கலாம். இப்படி கூடவே நர்ஸ வச்சு வைத்தியம் பார்த்து.. அஞ்சு லட்…சம்.. ஆமா அதுக்கு அஞ்சு ஜீரோ தான?”
அவள் சந்தேகமாக கேட்க, ஏகாம்பரத்திற்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
“ஏன் ஸ்கூல்ல சொல்லி தரலயா?”
“எனக்கு இப்ப இருக்க மயக்கத்துல அ னா ஆ வனா கூட மறந்துடும் போல இருக்கு. என் விதி எப்ப தான் என்னை நிம்மதியா வாழ விடுமோ?”
“ரொம்ப புலம்புற நீ”
“இப்படி புலம்பி தான் என் கஷ்டத்த நானே குறைச்சுப்பேன். வேற யாரும் வந்து குறைக்க போறது இல்லயே”
“வீட்டுல பணம் எதுவும் இல்லையா? சேர்த்து எல்லாம் வைக்க மாட்டியா?”
“வச்சுருக்கேன். அதுவும் பாட்டி வச்ச பணம். ஆனா அது அம்புட்டு வராது. அத எடுக்கவாச்சும் உங்க சாரு என்னை வெளிய விடனுமே? என் வாழ்க்கையே சோக படம் தான். ஆனா அதுல இவ்வளவு காஸ்ட்லி டுவிஸ்ட் வரும்னு எதிர்பார்க்கல. அதுவும் அஞ்சு லட்…ச ரூபா காஸ்ட்லி..”
அவள் கையை விரித்துச் சொல்ல, ஏகாம்பரம் பக்கென சிரித்து விட்டான்.
“நான் புலம்புறது உங்களுக்கு சிரிப்பா இருக்குல? என்ன பண்ண? வாழ்க்கையே சிரிப்பா போகுது. நானும் சிரிக்கிறேன். ஹா ஹா ஹி ஹி” என்று முகத்தை சுழித்துக் கொண்டு அவள் சிரிக்க, ஏகாம்பரம் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.
“ரொம்ப பேசுற நீ”
“அது ஒன்னுல தான் ஆண்டவன் ஒரு பிரச்சனையும் வைக்காம இருக்கான். அதையும் சொல்லி கெடுத்துறாதீங்க.”
“அது என்னமோ சரி தான். வாய் தான் ரொம்ப இருக்கு”
இருவரும் பேசிக் கொண்டே இருந்தாலும், இடத்தை பாதிக்கும் மேல் சுத்தம் செய்து விட்டனர்.
“பேசாம என் வீட்டுல இருக்க தட்டுமுட்டு சாமான வித்துடலாமா? அதுல ஒரு ஐயாயிரம் வராது? ஹும்ம்.. ஐயாயிரம் எங்க? அஞ்சு லட்சம் எங்க? வேற எத விக்கிறது? கிட்னிய வித்தா அஞ்சு லட்சம் தருவாங்களா?”
அவள் எல்லாவற்றையும் ஏகாம்பரத்திடம் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“கிட்னிக்கு அஞ்சு லட்சம் எல்லாம் வராது”
“அதுவும் வராதா? சுத்தம்”
“வேணும்னா உன் ஹார்ட்ட வித்துடேன்”
“வித்துட்டு? செத்து போறதுக்கா? இந்த சின்ன வயசுல சாவுறதுக்கா நான் பூமிக்கு வந்தேன்? நோ என்னைக்காச்சும் நான் நல்லா வாழுவேன். இந்த பங்களா அளவு இல்லனாலும், ஒரு ஓட்டு வீடாச்சும் கட்டி, அதுல புருஷன் புள்ளை குட்டியோட சந்தோசமா வாழுவேன்”
“பார்ரா… கல்யாணம் பண்ணிக்கனுமா? அப்ப யாரையாவது புடிக்குமா? லவ்வர் இருக்கானா?”
“ம்ம்.. இருக்காரே” என்று அவள் ஆர்வமாக சொல்ல, சரியாக அதை கேட்டபடி வந்து நின்றான் சாணக்கியன்.
தொடரும்.
