சாரா 50

Loading

சாரா வீட்டில் தேட விட்டு விட்டு அமைதியாகவே அமர்ந்திருக்க, பிரமோத்தால் அப்படி இருக்க முடியவில்லை. அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொல்லை செய்து கொண்டே இருந்தான்.

ஏகாம்பரத்தை அழைத்து, “ஏகா.. சாப்பிட எதாவது வச்சுருக்க?” என்று விசாரித்தான்.

“செய்யுறேன் சார். பசிக்கிதா?”

“ஆமா.. காலையிலயே பாஸ பார்த்துட்டு அப்புறமா சாப்பிட போகலாம்னு வந்தேன். இவங்க பிடிச்சு வச்சுட்டாங்க. இப்ப செம்மயா பசிக்குது. என்ன வச்சுருக்க?”

“தோசை சாப்பிடுவீங்களா?”

“சூப்பர் ஐடியா. ஊத்து ஊத்து”

“நெய் தோசை ஊத்தட்டுமா?”

“வேணாம் வேணாம். நான் டயட்ல இருக்கேன்”

“ஓஓ.. சட்னி அரைக்கவா? குழம்பு எதுவும் இல்ல”

“அது எனக்கு பிடிக்காதுடா. நீ தக்காளி வெங்காயம் வச்சு கூட்டு மாதிரி பண்ணுவியே. அத பண்ணு. சூப்பரா இருக்கும்”

“இவங்க செய்ய விடுவாங்களா?”

“அடுப்புல அவங்களுக்கு என்னடா வேலை? அவங்க தேடுனா நான் பசியோட இருக்க முடியாது. தக்காளிலயும் வெங்காயத்துலயுமா டாகுமெண்ட்ட ஒளிச்சு வச்சுருப்போம்? அதை வெட்டுனா இவங்க கவலைப்படுறதுக்கு? எதுக்கும் நிறையவே சுடு. தேடி கலைச்சுட்டா அவங்களையும் சாப்பிட சொல்லலாம்”

பிரமோத் வேலை ஏவ, குழு தலைவர் முறைத்தார்.

“சார் நீங்க எங்கள டிஸ்டர்ப் பண்ணுறீங்க”

“யாரு நானா? உங்க தேடல்ல நான் எதாவது தலையிட்டா தான் பேச்சு. பசிக்குதுனு சாப்பிறது தப்புனு எந்த சட்டமும் சொல்லல. அப்படி சொல்லியிருந்தா காட்டிட்டு மேல பேசுங்க” என்று கடுப்பாக பதில் சொன்னவன், உடனே எழுந்து சமையலறைக்குள் சென்றான்.

ஏகா சாராவை பார்க்க, அவனும் போ என்று கண்ணை காட்டினான்.

மேடையில் அமர்ந்து, ஏகா வேலை செய்வதை வேடிக்கை பார்த்தான் பிரமோத். அரிசி டப்பாவை கூட விடாமல் அந்த கும்பல் தேடிக் கொண்டிருக்க, ஏகா கண்டு கொள்ளாமல் தோசையை ஊற்றினான்.

நான்கு தோசைக்கு மேல் பிரமோத் உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, “இப்ப தான் டயட் நெய் கூட வேணாம்னு சொன்னீங்க? அஞ்சாவது தோசைக்கு போறீங்க?” என்று கேட்டு வைத்தான் ஏகா.

“டயட் நெய்க்கு தான் மேன். எனக்கு இல்ல. நீ ஊத்து” என்றவன், வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.

பத்து பேரும் பறந்து பறந்து தேடி முடிக்க, பிரமோத் வயிறார உண்டு விட்டு சாராவிடம் வந்தான்.

“ஏகா சூப்பரா சமைக்கிறான் இல்ல?” என்று கேள்வி வேறு.

“ம்ம்” என்று சாரா தலையாட்ட, தேடிய கும்பல் அவர்கள் முன்னால் வந்தது.

வந்தவர்கள் சாராவின் மற்ற தொழில்கள் நடக்கும் இடங்களிலும் சோதனை நடப்பதாக கூற, சாரா ஆச்சரியப்பட்டானே தவிர பெரிதாக கவலையை காட்டவில்லை.

அது அவர்களை சற்று குழப்பியதோடு கோபத்தையும் கொடுத்தது. நிச்சயமாக சாராவிற்கு முன்பே விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

“எப்படி சாந்தமா இருக்கீங்க?”

“சாந்தமா இருக்கதுக்கும் உங்க ரூல்ஸ்ல டேக்ஸ் கட்டனுமா?” என்று பிரமோத் தான் கடுப்போடு கேட்டான்.

“டேய்” என்று மெல்லிய குரலில் அவனை அதட்டிய சாரா, “உங்க வேலை முடிஞ்சதா?” என்று அமைதியாக கேட்டான்.

“இல்ல.. இதுல எதோ இருக்கு. நீங்க எல்லாத்தையும் மறைச்சு வச்சுட்டதா சந்தேக படுறோம்”

“சந்தேகபடுறது போலீஸ் வேலை. நீங்க ஏன் அத பண்ணுறீங்க?” என்று பிரமோத்தே கேட்டான்.

“உங்களுக்கு யாரோ விசயத்த முன்னாடியே சொல்லியிருக்கனும். அதனால தான் நீங்க எல்லாத்தையும் மறைச்சுருக்கீங்க”

“வாவ்..! நிறைய தமிழ் சினிமா பார்ப்பீங்க போலயே.. அதுல வர்ர மாதிரியே பேசுறீங்க?”

“நீங்க பேசாதீங்க பிரமோத். மிஸ்டர் சாணக்கியராஜ் உங்க மேல எங்களுக்கு இன்னும் சந்தேகம் போகல. இதுக்கு என்ன பதில் சொல்லுறீங்க?”

“உங்க சந்தேகத்துக்கு நான் ஏன் பதில் சொல்லனும்?” என்று அமைதியாக கேட்டு வைத்தான்.

அவர் முறைக்க, “வந்தீங்க. தேடுனீங்க. எல்லாம் உங்க கண்ணு முன்னாடி தான் இருக்கு. ஒத்துக்கிறேன். வரிய குறைக்கிறதுக்காக பணத்த டொனேஷன்ல போட்டு காட்டிருக்கேன். பலர் செய்யுற வேலை தான். அதுல எதாவது தப்பு இருந்தா கோர்ட்ல ஃபைன் கட்டி டாக்ஸும் கட்டிடுறேன். அவ்வளவு தான விசயம்? இதுல உங்க சந்தேகத்துக்கு பதில் கேட்டா எப்படி?” என்று கேட்டான்.

பிரமோத்துக்கு சிரிப்பு வந்தது.

‘நான் பேச்கூடாதாம்ல? இப்ப பேசுடா பார்க்கலாம்’ என்று பார்த்து வைத்தான்.

“இங்க உங்கள அனுப்புனது அரசாங்கமா? உங்க கடமையா? எது? யாருனு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நீங்க நினைச்சுட்டு வந்தது இங்க இல்லனா, அது என் தப்பில்ல. எல்லா இடத்துலயும் சர்ச் நடக்குதுல. நடந்து முடியட்டும். எங்க எதுவும் உங்களுக்கு கிடைச்சா, அதுக்கு பதில் சொல்லுறேன். ஆனா உங்க கற்பனைக்கு நான் பதில் சொல்ல முடியாது. கடந்த அஞ்சு மணி நேரமா உங்களால எனக்கு வேலை போச்சு. அதுக்கே நான் எவ்வளவு நஷ்டப்பட்டேன்னு கணக்கெடுக்கனும்.”

ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து விளக்கமாகவே பேசினான். கேட்டிருந்தவர்களுக்கு தான் கடுப்பானது.

“சரி நாங்க கிளம்புறோம்” என்று எழ, “ஹலோ..வெயிட் பண்ணுங்க. மத்த இடத்துல இருந்தும் நியூஸ் வரனும்ல?” என்று பிரமோத் நிறுத்தினான்.

“வந்துடுச்சு”

“என்னானு?”

“சில சில கணக்கு வழக்கு தவிர வேற எதுவும் இல்லனு”

“அப்ப ப்ராப்பரா சைன் பண்ணி கொடுத்துட்டுபா போங்க. இங்க நாங்க தேடுனோம். வரி ஏய்ப்பு போல தெரிஞ்ச விசயத்த தவிர, வேற எந்த விசயமும் கிடைக்கல. அஞ்சு மணி நேரத்த வீணடிச்சதுக்காக மன்னிப்பு கேட்டுட்டு, கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டுப் போங்க. அப்படியே கிளம்பிட்டா என்ன அர்த்தம்?”

பிரமோத் அதிகாரமாக கேட்க, அவனை மீறவும் வழியில்லை. பெரிய லாயர் அவன். மீறினால் என்னமும் செய்ய தயங்க மாட்டான்.

உடனே எழுதி கையெழுத்து போட்டு, முத்திரையும் வைத்து கொடுத்து விட்டு கிளம்பினர்.

சாராவின் மற்ற தொழில்கள் நகைக்கடைகள் எல்லாம் பழைய நிலைக்கு மீண்டது.

விசயம் காட்டுத்தீயாக ஊடகங்களில் பரவியது. சாராவின் அத்தனை தொழில்களின் மீதும் வீட்டின் மீதும் நடந்த சோதனையில், பெரிதாக எதுவுமே சிக்கவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது.

செய்தியை கேட்ட கருணா, பேக் செய்வதை நிறுத்தி விட்டு வெறித்துப் பார்த்தான். அவனால் அந்த வைரவரை அழித்தது போல், சாராவை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டு, கடைசியில் பலரால் சேர்ந்து காப்பாற்றப்பட்டவன் கருணா. வைரவரோ சாராவோ அரசாங்கத்தை சீண்டுவது இல்லை என்று, எல்லோருமே எடுத்துச் சொன்னார்கள்.

ஆனால் கருணாவிற்கு ஈகோ தலையில் நின்றது.

“அவனுங்க கடத்தல் காரனுங்க. நாம படிச்சு பதவிக்கு வந்தவங்க. அதென்னா அவங்கள தொடக்கூடாதுனு சொல்லுறது? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவனுங்க? அதெப்புடி அவனுங்க சட்டத்த மீறி எதையும் செய்யுறானுங்கனு பார்த்துடுறேன்” என்று சவால் விட்டவன், திரும்ப திரும்ப வைரவருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே தான் இருந்தான்.

ஆனால் வைரவர் அவனை சில மாதங்களில் நாடு கடத்தி விட்டார். அங்கு வைத்து தான் சிவாவை சந்தித்தது. தன்னை பதவி மாற்றம் செய்தி சொந்த ஊரை விட்டு ஓட விட்ட வைரவரையும், அதற்கு துணையாக இருந்த சாராவையும் எதாவது செய்ய வேண்டும் என்ற வெறி.

சிவாவை வைத்து வைரவரின் கதையை முடித்த பின் தான், அந்த வெறி அடங்கியது. சொந்த கையை வைத்தே அவரது கண்ணை குத்தி விட்டான் அல்லவா? அந்த இறுமாப்பு.

ஆனால் அவனை வைத்தே சாராவையும் கொல்ல திட்டமிட்டது மட்டும் நடக்கவே இல்லை.

போகும் முன்பே அவனை மாட்ட வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தான், இந்த சோதனைக்கு ஏற்பாடு செய்தான். ஆனால் சொதப்பி விட்டது.

“நான் போயிட்டா? நீ தப்பிச்சுடுவியா? உன் தம்பிக்கு கொம்பு சீவி விட்டுருக்கேன். என்னைக்கா இருந்தாலும் அவன் உன்னை கொல்ல தான் போறான். இங்க இல்லனா என்ன? தூரமா இருந்து கூட அத பார்த்து ரசிச்சுட்டு போறேன்” என்று நக்கலாக சொல்லி விட்டு, கிளம்பிச் சென்று விட்டான்.

அடுத்ததாக கமிஷ்னரும் கிளம்ப, அவர் அனுபமாவிடம் பொறுப்பை கொடுத்தார். அடுத்த கமிஷ்னர் வரும் வரை சிவாவிற்கு உதவும் படி சொல்லி விட்டு, அவரும் கிளம்பினார்.

கடைசியாக எஞ்சியது என்னவோ சிவாவும் அனுபமாவும் தான். இருவர் தலையிலும் சாராவின் வழக்கு சுமையாய் கிடந்தது.

அதுவும் ஐடி ரெய்டில் எதுவும் சிக்காதது ஆச்சரியமாக இருந்தது.

“ஐடில கூட ஆள் வச்சுருக்கானா இவன்?” என்று ஆச்சரியமாக பார்த்தான் சிவா.

“அவங்க ஆளில்லாத இடமே இல்ல. சிலர் அடி மட்ட வேலையில இருப்பாங்க. சிலர் மேல டாப்ல தலையா உட்கார்ந்துருப்பாங்க. எங்க இருந்து எப்படி நியூஸ் பாஸாகுதுனு கண்டு பிடிக்கவே முடியாது” என்று அனுபமா கூற, “கூடவே இருந்ததுல இதெல்லாம் கவனிச்சுருக்க போல. பரவாயில்ல” என்றான் சிவா.

கை கட்டுப்போட்டிருந்த நிலையில், விசயம் கேள்வி பட்டு குருவை பார்க்க வந்திருந்தான். அங்கேயே அனுபமாவும் இருக்க, மூவரும் ஒன்றாக பேச ஆரம்பித்தனர்.

“என்னத்த கவனிக்க? முடிஞ்ச வரை அவங்க டீலிங், பணம் கைமாறுறது மட்டும் தான் எடுத்தேன். இன்னமும் டீல் யாரு கூட பண்ணுறாங்கனு பேர் தெரியல. அத எந்த வழில பண்ணுறாங்கனு கூட தெரியல”

“அத நேரடியா தான் பண்ணுவாங்க”

“அப்படியா?”

“ரெண்டே பேரு தான். ஒன்னு திவாகர். இன்னொன்னு அவனோட அப்பா. இவங்க ரெண்டு பேருமே நேரடியா களத்துல இறங்குவாங்க. அவங்க ரெண்டு பேர தவிர, வேற எவனுக்கும் முழு விவரம் தெரியாது”

“ப்ச்ச்.. ஆனா அவங்க ரெண்டு பேருமே இப்ப இல்லையே. மிஸ் பண்ணிட்டோமே”

“ஜஸ்ட் அசந்துட்டேன். பக்காவா ஒளிச்சுட்டான்” என்ற சிவா, தன் கையை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

அதை கவனித்த அனுபமா, “இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.

“மச் பெட்டர்”

“உங்கள பார்க்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன். பட் அட்ரஸ் இல்ல. சோ சாரி”

“நீ ஏன் என்னை பார்க்க வரனும்?” என்று புரியாத ஆச்சரியத்தோடு சிவா அவளை பார்த்து கேட்க, “கூட வேலை பார்க்குறவங்களுக்கு அடி பட்டா பார்க்க போறது வழக்கம் தான? போன வாரம் ஒரு திருடன துரத்தி, எஸ்ஐக்கு கால்ல அடி. டூ வீக்ஸ் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு ஃபுரூட்ஸ் வாங்கிட்டு போய் பார்த்துட்டு தான் வந்தேன். அப்படி தான் உங்களையும் பார்க்க நினைச்சேன்” என்றாள்.

அனுபமா சாதாரணமாக சொல்ல, “ஓஓ அவ்வளவு தானா?” என்று கேட்டான்.

“அவ்வளவு தானானா? வேற இருக்கா என்ன?”

“இல்ல.. மறுபடியும் காதல் எதுவும் பண்ணப்போறியோனு நினைச்சேன்”

“இங்க பாருங்க.. அது என் மிஷன். அந்த இடத்துல நீங்க இல்ல யாரா இருந்தாலும் கவலப்படாம நடிச்சு தான் இருப்பேன். சும்மா உங்க மேல எனக்கு காதல் அது இதுனு பேசாதீங்க.”

படபடவென பேசியவள், வெடுக்கென திரும்பிக் கொண்டாள்.

“ஆமால.. உனக்கு சாரா மேல தான் லவ்.. அத மறந்துட்டேன் பாரு”

“சார்.. போதும். எனக்கு யார் மேல வேணா லவ் இருக்கட்டும். அத பத்தி நீங்க இப்ப பேச வேண்டியது இல்ல”

“இருக்கே.. ஒரு வேளை உன் லவ் ஓவராகி, இங்க நடக்குறத நீயே சாராவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டா? நாங்க எப்படி உன்னை நம்புறது?’

“நம்ப வேணாம். நீங்களே இந்த கேஸ பார்த்துக்கோங்க. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. இத கட்டிட்டு அழனும்னு அவசியம் இல்ல. கமிஷ்னர் சொன்னாரேனு தான் வந்தேன். நீங்களாச்சு உங்க வேலையாச்சு” என்று எரிச்சலாக சொன்னவள் உடனே எழுந்து நடக்க, சிவா அவளது கையைப்பிடித்து நிறுத்தினான்.

“நில்லுங்க மேடம்.. ரொம்ப சூடாகாதீங்க.. உட்காருங்க”

“தேவை இல்ல” என்றவள் அவனை கையை விலக்கி விட, “அப்படிலாம் போக முடியாது. சாரா கேஸ விட வைரவர் கேஸ் இருக்கு. அந்த கேஸ விட்டு விலக முடியாது. அப்படி கேஸ விட்டு விலகுனாலும், நீங்க போட்டுக் கொடுப்பீங்கனு எனக்கு சந்தேகம் வரத்தான் செய்யும். இந்த கேஸ் முடியுற வரை நீங்க இருந்து தான் ஆகனும் மேடம்” என்றான் அவன்.

அனுபமாவிற்கு அவனை முறைக்கத்தான் தோன்றியது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டவள், வேண்டாவெறுப்பாய் வந்து அமர்ந்தாள்.

“வைரவர் கேஸ் எப்ப கோர்ட்க்கு வருது?”

“இன்னும் பத்து நாள் இருக்கு”

“யார் ஆஜர் ஆகுறது?”

“இது வரை சொல்லல. அநேகமா எதாவது பெரிய லாயரா பிடிக்கலாம்”

“ஓகே பார்த்துக்கலாம். நீ உன் கிட்ட இருக்கத எல்லாம் கோர்ட்ல கொடுக்க ரெடியா இரு”

“என் கிட்ட என்ன இருக்கு?”

“உன் கிட்ட ஒன்னும் இல்ல? அத நான் நம்பனும்?”

கண்ணை அழுந்த மூடித்திறந்தவள், “ஆமா இருக்கு. அத என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“வைரவருக்கு எதிரா எவிடன்ஸ் கலெக்ட் பண்ணியே.. சாராவுக்கு எதிரா எதுவுமே ஏன் எடுக்கல?”

“அது பூபதி வேலை. ஆனா அவன சாரா உள்ள விடவே இல்ல”

“ஒன்னு கூடவா தெரியல?”

“கடைசியா எதோ ஒரு தீவுல வச்சு டீல் பேச போறதா சொல்லி, அந்த டீல் பத்தி, இடத்த பத்தி எல்லாம் விவரம் கொடுத்தான். ஆனா அங்க போன அடுத்த நிமிஷமே, அவன தூக்கிட்டு போய் அடைச்சு வச்சு அடிக்க மட்டும் தான் செஞ்சுருக்கானுங்க. உண்மையிலயே அந்த டீடைல் டீலிங் சம்பந்தமா இருக்க வாய்ப்பில்ல. அவன தூக்கனும்னே இத பண்ணிருக்கனும்”

“ஓஹோ.. எதுக்கும் அத கொடு செக் பண்ணிக்கலாம்” என்று கேட்டான்.

அனுபமாவும் தருவதாக வாக்கு கொடுத்தாள்.

*.*.*.*.*.*.*.*.*.*.

வருமான வரித்துறை ஆட்கள் கிளம்பிச் சென்றதும், பிரமோத் வீட்டை ஒதுங்க வைப்பதில் ஏகாவுக்கு உதவ முன் வந்தான்.

“நானே பார்த்துக்கிறேன் சார்.. ஆனா அங்க பாஸ பாருங்க” என்று கை காட்டினான்.

அப்போது தான் பிரமோத் சாராவை கவனித்தான்.

சாரா குறுக்கும் நெடுக்கும் தீவிர யோசனையுடன் நடந்து கொண்டிருந்தான்.

“பாஸ்..?”

பதில் வரவில்லை.

“பாஸ் ஏன் பரபரப்பா இருக்கீங்க..?”

“எதையோ விட்டேன் பிரமோத்..”

“எத? அதான் எல்லாம் தேடி பார்த்துட்டு போயிட்டாங்களே”

“இல்ல.. எதையோ ரொம்ப முக்கியமான ஒன்ன விட்டேன்னு காலையில இருந்து தோணுது. எதுனு தெரியல..”

சாரா பரபரப்புடன் நடந்தபடி யோசித்துக் கொண்டிருக்க, “முக்கியமானதா?” என்று இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.

“முக்கியமான சொத்தெல்லாம் காப்பாத்தியாச்சு. ஆஃபிஸ் வீடுனு எங்கயும் எதுவும் மிஞ்சலயே?” என்று பிரமோத் கேட்க, “வேற எது பாஸுக்கு முக்கியம்?” என்று ஏகாம்பரமும் யோசித்தான்.

“இதுக்கு மேல முக்கியம்னா அண்ணிய தான் சொல்லனும்” என்று பிரமோத் கூற, “ராகவியா?” என்று கேட்டான் ஏகாம்பரம்.

அவர்களது பேச்சு காதில் விழுந்ததும், சாராவின் மூளையில் மின்னல் வெட்டியது.

“எஸ் கவி” என்று வாய் விட்டே கூறினான்.

தொடரும்.

Leave a Reply