சாரா 51

Loading

பரபரப்புடன் இங்கும் அங்கும் நடந்து சாரா எதையோ தீவிரமாக யோசித்தான். எதையோ எங்கேயோ விட்டது போல் காலையிலிருந்து தோன்றியது.

அதை பற்றி யோசித்தவனுக்கு சட்டென நினைவு வரவில்லை. பிரமோத் ராகவியை நினைவு படுத்த, அவனது மூளை பளிச்சென விசயத்தை கண்டு பிடித்தது.

“எஸ்.. கவி” என்று அவன் கூற, “அண்ணிக்கு என்ன பாஸ்?” என்று கேட்டான் பிரமோத்.

“அய்யய்யோ.. ராகவிக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்ட ஏகாம்பரம் வேகமாக அவனது கைபேசியை எடுக்க, “பிரமோத் வா” என்று அழைத்த சாரா, வேகமாக காரை நோக்கி ஓடி விட்டான்.

ஏன்? எதற்கு? என்று கேட்காமல் சாராவின் பின்னால் பிரமோத் ஓடி விட, ஏகாம்பரம் ராகவியை அழைத்தான். அவளது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வர, “கடவுளே.. அவளுக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்க” என்று அவசரமாக வேண்டுதலும் வைத்தான்.

*.*.*.*.*.*.*.*.

அன்று காலையில் அசந்து உறங்கி விட்ட ராகவி, தாமதமாக எழுந்து வெளியே வந்தாள். நேற்றிரவு தான் வீடு திரும்பினர்.

சாராவிடம் பேசிய பிறகு, அவளது இரத்த அழுத்தம் குறைந்திருந்ததது. அதை மேலும் குறைக்க மருந்துகளை கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அவள் வெளியே வருவதற்கும், குறிஞ்சியின் அன்னை கமலா வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு அவர் உள்ளே நுழைய, “அத்த.. வாங்க..” என்று வரவேற்றாள்.

“அண்ணி.. அத்த வந்துட்டாங்க” என்று குறிஞ்சிக்கும் குரல் கொடுத்தாள்.

குறிஞ்சி வேகமாக அறையை விட்டு வெளியே வந்தாள்.

“என்னமா? காலையிலயே வந்துருக்கீங்க? நைட்டே கிளம்புனீங்களா?”

“ஆமா.. இரு கை கால கழுவிட்டு வந்து பேசுறேன்” என்றவர், உடனே சென்று கழுவிக் கொண்டார்.

பிள்ளையுடன் குறிஞ்சி இருப்பதால், வெளியே சென்று அப்படியே உள்ள வர அவர் அனுமதிப்பதில்லை.

வந்ததும், “ராகவி இங்க வா நீ” என்று அழைத்தார்.

“என்ன அத்த?”

“உன் ஜாதகத்த பத்தி பேசனும்.”

” பார்த்தாச்சா?”

“ஆமா.. அதுல நீ நினைக்கிற போல எதுவும் இல்ல”

“ஹான்?”

“முதல்ல இந்த ஜாதகத்த யாரு பார்த்தது?”

“என் பாட்டி தான்”

“எப்ப பார்த்தாங்க?”

“சரியா ஞாபகம் இல்லையே”

“ஒழுங்கா யோசிச்சு சொல்லு” என்று அவர் அதட்ட, குறிஞ்சி இருவரையும் புரியாமல் பார்த்தாள்.

“எனக்கு இருபது வயசு இருக்கும் போதுனு நினைக்கிறேன். ஏன் அத்த?”

“அப்ப என்ன சொன்னாங்க உன் பாட்டி?”

“என் கிட்ட எதுவும் சொல்லலயே.. வீட்டு ஓனர் கிட்ட பேசிட்டு இருந்தத தான் கேட்டேன்”

அவள் தலையில் பட்டென ஒரு அடி விழுந்தது. அவர் அடித்ததை பார்த்து குறிஞ்சி அதிர, ராகவி அப்பாவியாக உதட்டை பிதுக்கினாள்.

“என்னத்த கேட்டு தொலைச்சியோ.. நீ சொன்ன எதுவும் உன் ஜாதகத்துல இல்ல” என்று கடுப்பாகவே கூறினார்.

“ம்மா.. நிஜம்மாவா சொல்லுறீங்க?” என்று குறிஞ்சி சந்தோசமாக கேட்க, ராகவி நம்பாமல் பார்த்தாள்.

“பொய் சொல்லாதீங்க அத்த.. என் ஜாதகத்துல பிரச்சனை இல்லனா, எதுக்கு அத்தனை பேரு ரிஜக்ட் பண்ண போறாங்க? நீங்க என்னை ஏமாத்த தான…”

“இந்தா.. மொதல்ல முழுசா கேளு.. உன் ஜாதகத்துல பிரச்சனை இருந்துருக்கு. இல்லனு நான் சொல்லல. ஆனா அது இப்ப இல்ல.”

“இப்ப காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?”

“குறுக்க பேசாத” என்று குறிஞ்சி தான் அதட்டினாள்.

“உனக்கு இருபது வயசுல இல்லனா பத்தொன்பது வயசுல உன் பாட்டி வரன் பார்த்துருக்கனும். அப்ப தான் அந்த ஜாதகத்துல கண்டமும் இருந்தது. உனக்கு அப்ப மாலைப்பொருத்தம் வரல. கல்யாணம் பண்ணா, ஒன்னு டைவர்ஸ் வாங்கிடுவ. இல்லனா நீயே செத்துடுவனு சொல்லிருக்காங்க. இப்ப புரியுதா?”

இதைக்கேட்டு ராகவியும் குறிஞ்சியும் வாயைப்பிளந்து அமர்ந்து விட்டனர்.

“இருபத்தஞ்சு வயசுக்குள்ள உனக்கு கல்யாணம் நடக்காது. அப்படி மீறி பண்ணா, நீ தான் சாவனு சொல்லியிருக்காங்க. இதை மீறி கல்யாணம் பண்ணாம தான், உன் பாட்டி விட்டுருக்காங்க. உன்னை கேட்ட மாப்பிள்ளை வீடும் பரிகாரம் எதாவது இருக்கானு தேடிருக்காங்க. கிடைக்கலனு தான் விட்டாங்க.”

“இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?”

“நான் பார்த்த ஜோசியரு கிட்ட, ஏற்கனவே உன் ஜாதகம் போயிருக்கு. அவரு தான் சொன்னாரு.. உனக்கு பார்த்த எதோ ஒரு மாப்பிள்ளை காரன், அவர் கிட்ட ஜாதகத்த காட்டிருக்கான். இந்த பிள்ளைய கல்யாணம் பண்ணுறது நல்லது இல்ல. அந்த பிள்ளை உயிருக்கு தான் பிரச்சனை. நீங்க வேற பொண்ணு பாருங்கனு சொல்லிருக்காரு. இப்ப காட்டுனா, இந்த பொண்ணுக்கு கல்யாணம் நடந்துருக்கனுமேனு சொல்லுறாரு. ஆமா நடந்துடுச்சுனு சொன்னேன். அதுனால எதுவும் பிரச்சனை வருமானு கேட்டா, எதுவும் வராது. சில பிரச்சனைகள் இருக்கும். ஆனா வாழ்ந்துடும்னு சொல்லிட்டாரு.”

விசயத்தை விளக்கி முடித்தவருக்கு, முதலில் ராகவியின் மீது கோபம் தான் வந்தது.

“என்னத்தையோ அரையும் குறையுமா கேட்டுட்டு கண்டத கற்பனை பண்ணி.. நீயும் பயந்து.. எல்லாரையும் பயமுறுத்திருக்க நீ” என்று அதட்டியவர், அவளது தலையை பிடித்து ஆட்டினார்.

இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தாள் ராகவி.

“உன் பாட்டி நாலஞ்சு மாப்பிள்ளை பார்த்துட்டு, திடீருனு ஏன் கல்யாண பேச்ச விட்டாங்கனு கேட்கலயா நீ?”

“நான் தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொன்னேன். அதுனால விட்டாங்கனு நினைச்சேன்”

“நீ பெரிய ஆளு.. நீ சொல்லி கல்யாண பேச்ச விடுறாங்க. உன் உயிருக்கு பிரச்சனை இருக்குனு தெரிஞ்சதால தான், பாட்டி பேச்ச விட்டுருக்கனும். ஆனா உனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டாங்க. உன் கிட்ட விசயத்தையாச்சும் தெளிவா சொல்லிருக்கலாம். இவ்வளவு குழப்பம் வந்துருக்காது.”

“அப்ப நிஜம்மாவே பாஸ் உயிருக்கு பிரச்சனை இல்லையா?” என்று உறுதி படுத்திக் கொள்ள அவள் கேட்க, “ஆமா.. உன் புருஷன் உயிருக்கு உன்னால ஒரு பிரச்சனையும் இல்ல. போதுமா?” என்றார்.

சட்டென முகம் மலர எழுந்தவள், “அப்ப நான் பாஸ பார்க்க போறேன்” என்று நடக்க, குறிஞ்சி அவளை பிடித்து நிறுத்தினாள்.

“எப்படி? இப்படியேவா?” என்று அவள் கலைந்த நிலையை காட்ட, “ச்சே.. குளிச்சுட்டு போறேன்” என்றவள் உடனே குளிக்க ஓடினாள்.

அவள் சென்றதும், குறிஞ்சி கமலா பக்கம் திரும்பினாள்.

“நிஜம்மா தானாமா?”

“உண்மைய தான் சொல்லுறேன். ஜோசியர் அப்படி தான் சொன்னாரு. அத சொல்ல தான் ராத்திரியே கிளம்பி வந்தேன். மாத்த சேலை கூட எதுவும் எடுக்காம, வெறும் கையோட கிளம்பிட்டேன்”

“இப்படிலாம் இருக்காமா?”

“ஏன் இல்ல? மாலை பொருத்தம் வர்ரதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி, அழிஞ்சு போன பல புள்ளைங்க வாழ்க்கைய நான் பார்த்துருக்கேனே. ஆனா..” என்றவர் ராகவி சென்ற திசையை பார்த்துக் கொண்டார்.

“என்னமா?”

“பெருசா பிரச்சனை வர வாய்ப்பிருக்குனு சொன்னாரு. அதுல இவளும் இவ புருஷனும் தாண்டுறது, கடவுள் மனசு வச்சா தான் முடியும்னு சொல்லிட்டாரு”

“அய்யய்யோ..”

“ப்ச்ச்.. உஸ்ஸ்.. அவ கிட்ட சொல்லாத. நாம நல்லதையே நினைப்போம். எப்பவும் கலகலனு இருக்க புள்ள, அழுதுட்டே இருக்கவும் மனசு கேட்காம ஓடிப்போய் பார்த்துட்டேன். ஒரு விசயம் நல்லதா கிடைச்சுருச்சுல? மத்ததும் நல்லதா தான் நடக்கும்” என்று குறிஞ்சிக்கும் தனக்கும் சேர்த்தை நம்பிக்கை கொடுத்துக் கொண்டார்.

அந்த நம்பிக்கையை பிடித்துக் கொண்டு அவர்கள் காத்திருக்க, அப்போது தான் கந்தன் வீடு திரும்பினான். நேற்று எங்கோ வெளியூர் சென்றிருந்தவன், இன்று தான் வந்தான்.

வந்ததும் அத்தையை முறைப்படி வரவேற்று விட்டு, குளிக்கச் சென்று விட்டான்.

அவன் வெளியே வரும் போது கைபேசி அலறியது. நேற்று முழுவதும் அணைத்துப் போட்டிருந்ததால், அப்போது தான் சாரா அலுவலகத்தில் சோதனை நடக்கும் செய்தி கிடைத்தது.

கேட்டதும் அதிர்ந்தவன், “யார் வேலை இது?” என்று கேட்டான்.

“அந்த கலெக்டர் வேலையா இருக்கும்னு நினைக்கிறேன். எதாச்சும் மாட்டுனா சாராவ அப்படியே வச்சு நசுக்க ப்ளான் பண்ணிருக்காங்க”

“இது வேறயா? சரி அப்ப அப்ப அப்டேட் கொடு” என்று விட்டு வைத்து விட்டான்.

அவன் பேசி முடித்ததும், குறிஞ்சி ராகவியின் ஜாதக விவரங்களை சந்தோசமாக சொல்ல, கந்தனுக்கு சந்தோசம் பாதி கவலை பாதியாக இருந்தது.

ஒரு வேளை இந்த சோதனையில் சாரா மாட்டிக் கொண்டால், அவனோடு ராகவியும் மாட்டக்கூடாது. அது நடக்காமல் அவன் தப்பித்து விட்டால், ராகவி அவனோடு சந்தோசமாகவே வாழட்டும் என்று நினைத்தான்.

கந்தன் சோதனை நடப்பதை பற்றி குறிஞ்சிக்கு சொல்லவில்லை. சொன்னால் அவள் ராகவியிடம் சொல்லி வைப்பாள் என்ற கவலை அவனுக்கு. அதனால் அதை அப்படியே மறைத்து விட்டு ஜாதக விவரத்தை பேசினான்.

“ராகவி எங்க?”

“குளிச்சு கிளம்ப போனா.. பேக் பண்ணிட்டு இருப்பா”

“இப்பவே போகனுமா? நாமலே கொண்டு போய் விடலாம். கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு”

“அவ இருப்பான்னு தோணல. ஆனாலும் சொல்லி பார்க்கிறேன்” என்றவள், ராகவியை தேடி வந்தாள்.

ராகவி பல முறை சாராவிற்கு அழைத்து, அவன் எடுக்கவில்லை என்றதும் ஓய்ந்து அமர்ந்து விட்டாள். அவன் கொடுத்த கைபேசியில் அவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்க, ஏகாம்பரத்தையும் அழைக்க முடியவில்லை.

கந்தன் வாங்கிக் கொடுத்தது எங்கு கிடக்கிறது? என்றே தெரியவில்லை. அதனால் அதை தேடத் தொடங்க, குறிஞ்சி வந்தாள்.

“ராகி..”

“என்ன அண்ணி?”

“உங்கண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொன்னேன். அவரு ஒன்னு சொல்லுறாரு”

“என்னது?”

“நாம முறைப்படி கொண்டு போய் விடலாம்னு சொல்லுறாரு”

“அப்படினா?” என்று அவள் புரியாமல் கேட்க, கமலா வந்தார்.

“அதுவும் நல்ல யோசனை தான்” என்று அவர் கூற, ராகவி இருவரையும் புரியாமல் பார்த்தாள்.

“கல்யாணம் தான் யாருமே இல்லாம அவசர கோலத்த அள்ளி தெளிச்ச மாதிரி பண்ணிட்டீங்க. தாலிய கட்டுனாரே தவிர, ஒரு பொட்டு கூட வைக்கல. பேசாம கோவில்ல வச்சு தங்கத்துல தாலி பிரிச்சு கோர்க்குற மாதிரி பங்சன் வச்சுடலாமா?”

“இப்ப எதுக்கு அதெல்லாம்?” – ராகவி

“இப்ப இல்லாம? வேற எப்ப செய்யுறது? நீ மாப்பிள்ளை கிட்ட கேளு. நாம போய் தங்கத்துல தாலி வாங்கிட்டு வந்துடலாம். அவங்க வழக்கப்படி எதாவது விசேஷம் இருக்குமா? ராகவி.. அப்படி இருந்தா கேட்டு சொல்லு. அதே மாதிரி தாலி வாங்கி அப்படியே கட்டிறலாம்”

“அவர கூப்பிட தான் போன தேடுறேன் அத்த. எங்க போச்சுனே தெரியல. நீங்க பார்த்தீங்களா?” என்று குறிஞ்சியை கேட்க, அவளும் தேடிப்பார்த்து விட்டு, “எங்கயாச்சும் சுவிட்ச் ஆஃப் ஆகி விழுந்துருக்கும்” என்றாள்.

“சரி விடு. நாம உங்கண்ணன் போன்ல பேசி, அவரு கிட்ட எல்லா விவரமும் கேட்போம். அதே மாதிரி தாலி வாங்கி, கோவில்ல வச்சு மாலை மாத்திடலாம். அப்புறம்.. உனக்கு சீரும் வாங்கனும்” – குறிஞ்சி.

“அண்ணி.. இந்த சீரெல்லாம் எதுக்கு?”

“ஏன் நான் கொடுத்தா வாங்க மாட்டியோ?”

“அது இல்ல.. செலவு தான?”

“நக்கலா?” என்று கேட்டு குறிஞ்சி இடுப்பில் கை வைத்து முறைக்க, ராகவி பம்மி விட்டாள்.

“நீங்க என்ன வேணா பண்ணுங்க. நான் ஒன்னுமே சொல்லல” என்று கூறி சரணடைய, “அது.. ம்மா.. நாம சீர் வாங்குறோம். இவளுக்கு நகையும் வாங்குறோம்” என்றாள்.

மறுக்க வாயைத்திறந்த ராகவி, குறிஞ்சியின் முறைப்பில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

கந்தனிடம் சொல்ல அவனும் சம்மதித்தான். ஆனால் சாராவை தான் பிடிக்கவே முடியவில்லை. சோதனை முடியும் வரை அவனது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“எதாச்சும் முக்கியமான வேலையில இருப்பான். பார்த்துட்டு அவனே கூப்பிடுவான். நீங்க உங்க லிஸ்ட்ட ரெடி பண்ணுங்க. நான் ஸ்டேஷன் போயிட்டு வர்ரேன்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

சாரா வேலையில் இருப்பான் என்று விட்டு விட்டு, ராகவி குறிஞ்சியோடு சீர் பட்டியல் தயாரிக்கும் வேலையை பார்த்தாள். ஆனால் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்ட மட்டும் தான் முடிந்தது.

அவள் எதையாவது மறுத்தால், இருவரும் முறைத்து வைத்தனர்.

நகை, புடவை, பாத்திரங்கள், சீர் பொருட்கள் என்று நீண்டு கொண்டே போன பட்டியலை பார்த்து, அவளுக்கு மயக்கம் தான் வந்தது. சாரா வெறும் மஞ்சள் கயிற்றில் தாலியை வாங்கி கட்டியிருந்தான். அதற்கும் இந்த சீர் வரிசைக்கும் எந்த பொருத்தமும் இல்லை.

“இதெல்லாம் ரொம்ப ஓவரு.. நான் சேலையே கட்ட மாட்டேன். எனக்கு போய் இருபத்தஞ்சு சேலையா?” என்று அவள் வாயைப்பிளக்க, “இனிமே கட்டு. கல்யாணமானா சேலை கட்டித்தான் ஆகனும்” என்று அதட்டினாள் குறிஞ்சி.

“என்னமோ பண்ணுங்க” என்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

*.*.*.*.*.*.*.*.

சிவா அனுபமாவுடன் செய்தியை பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க, அவனது கைபேசியில் செய்தி வந்தது.

சாரா தனியாக கிளம்பியிருப்பதாக செய்தி வர, சிவா சட்டென முடிவு செய்தான்.

“நான் கிளம்புறேன். எனக்கு வேலை இருக்கு” என்று அனுபமா கிளம்ப, “என்னை டிராப் பண்ணிட்டு போ” என்றான் சிவா.

“நான் எதுக்கு? உங்க ஃப்ரண்ட் கிட்ட கேளுங்க.”

“அவனுக்கு வேலை இருக்கு. நாம போகலாம் வா” என்றவன் முன்னால் நடந்தான்.

கடுப்பாக அவன் முதுகை பார்த்து விட்டு, அனுபமா பின்னால் சென்றாள்.

*.*.*.*.*.*.

சாராவும் பிரமோத்தும் காரில் சென்று கொண்டிருந்தனர். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் காரில் ஏறி விட்ட பிரமோத், “பாஸ் அண்ணிய பார்க்க போறாமா?” என்று இப்போது கேட்டான்.

“ஆமா”

“அப்படி என்ன அவசரம்?”

“அவள பார்த்து ஒரு விசயத்த க்ளியர் பண்ணனும்”

“என்னாது பாஸ்?”

“அவ அறிவாளியா? இல்ல லூசானு தான்”

“பாஸ் அண்ணிய அப்படிலாம் எதுவும் சொல்லாதீங்க”

“ரொம்ப சப்போர்ட் பண்ணாத மேன். காலையில இருந்தே எதுவோ மூளைக்குள்ள உறுத்துதேனு யோசிச்சேன்”

“என்ன விசயம்?”

“உன் கிட்ட சுறாவ பத்தி சொன்னேன்ல?”

“ஆமா”

“அப்ப இன்னொன்னும் சொன்னேன்ல? அவ எல்லாத்தையும் நம்புற ஆளுனு”

“எஸ் யுவர் ஆனர்”

“அவ ஜாதகத்துல ஒரு பிரச்சனைனு சொன்னா. சுறாவ பெட்டா வளர்க்குறேன்னு சொல்லுறவ, ஜாதக விசயத்த மட்டும் கரெக்ட்டா சொல்லிருப்பாளா?”

பிரமோத் அவனை திரும்பிப் பார்த்து, புருவம் உயர்த்தினான்.

“சுறா ரூமர் மாதிரி, இவ எதையோ கேட்டுட்டு ஜாதக பிரச்சனைய இழுத்துருப்பானு நினைக்கிறேன். இவ யாரு என்ன சொன்னாலும் நம்புற கேரக்டர்டா. ஒழுங்கா புடிச்சு விசாரிக்கனும். நேர்ல பார்த்து பேசுனா தான் சரி வரும்”

காலையில் பிரமோத்திடம் பேசும் போது, “அவ எல்லாத்தையும் நம்புவா” என்று சொன்ன போது, மூளை ஜாதக விசயத்தை எடுத்துக் காட்டியது.

எதையோ கூறவும் விளைந்தது. ஆனால் அப்போது கவனம் வேறு பக்கம் சென்றதால், அவனால் யோசிக்க முடியவில்லை.

எல்லோரும் கிளம்பிய பிறகு மூளை அமைதியடைந்ததும், மீண்டும் அவனை உசுப்பி விட்டு யோசிக்க வைத்தது. அந்த ஜாகத்திற்கான தீர்வு நிச்சயம் இருக்கும் என்று இப்போது நம்பினான். அதை உறுதி செய்து கொள்ளவே, பரபரப்புடன் கிளம்பினான்.

“அப்படி என்ன பாஸ் ஜாதகத்துல இருந்துச்சு?”

“அது ஒரு பெரிய கதை” என்றவன் கண்ணாடியில் தங்களை தொடர்ந்து வந்த காரை பார்த்து புருவம் சுருக்கினான்.

அந்த காரில் சிவா தான் அவனை பின் தொடர்ந்தான்.

தொடரும்.

மக்களே.. இந்த ரன்னிங் சேசிங்க அடுத்த எபில பார்க்கலாம். இப்ப மேல சொன்ன ஜாதக மேட்டருக்கு வருவோம். எப்படியோ ஹனி ஒரு விசயத்த கண்டு பிடிச்சு அவங்கள சேர்த்து வச்சுடுச்சு. இதெல்லாம் என்னோட கற்பனை. கதைக்காக இப்படி எழுதியிருக்கேன். அப்படினு நினைச்சா.. அதான் இல்ல. நிஜம்மாவே இப்படி இருக்கு. இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ண கூடாதுனு சொல்லியும்.. பரிகாரம் பண்ணிட்டோம்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சு, கடைசியா அந்த பொண்ணு இப்ப உயிரோட இல்ல. அதே மாதிரி இன்னொரு பொண்ணுக்கு பண்ணி வச்சு, ஒரு வருசம் கூட வாழாம டைவர்ஸ் வாங்கிட்டு வந்துடுச்சு. இன்னும் சில ஸ்பெஷல் எல்லாம், பையன் செத்து போயிட்டான். பொண்ணு இப்ப வரை தனியா இருக்கு. இந்த மாதிரி நான் நேர்ல பார்த்துருக்கேன்.

திடீர்னு இந்த பொண்ணு ஏன் ஜாதகம் மேல நம்பிக்கை வச்சு கதை எழுதுதுனு யோசிக்காதீங்க. எனக்கு ஜாதகத்து மேல நம்பிக்கை இருக்கு. நீ ஜாதகம் பார்த்தியானு கேட்டா அதெல்லாம் பார்த்தது இல்ல. ஆனா கடவுள் சில விசயங்கள நமக்கு கொடுத்து தான் அனுப்பிருப்பாரு. அதுல நம்பிக்கை நிறைய இருக்கு. சோ நான் நேர்ல பார்த்த சில ஜாதக விசயங்க வச்சு தான் இத எழுதுனேன்.

அந்த வயசுல கல்யாணம் பண்ணா பிரிஞ்சு போவாங்க வேணாம்னு சொல்லி மீறுனது… இந்த வயசுக்குள்ள பண்ணா, பையன் செத்துடுவான்னு சொன்னாலும் கேட்காம கட்டி வச்சது…. பொண்ணுக்கே ஆபத்து வேணாம்னு சொல்லியும் கேட்காம பண்ணது… இதெல்லாம் சேர்த்து பிச்சு போட்டு தான் எழுதி இருக்கேன்.

அந்த வயசு வரை பொறுத்திருந்து கல்யாணம் பண்ணவங்க, இப்ப எவ்வளவோ சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்காங்க. நம்ம சாராவும் ராகவியும் பொறுத்து இருந்து லேட்டா தான் கல்யாணம் பண்ணியிருக்காங்க. அதுனால அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஹாப்பி? நானும் ஹாப்பி. ஆனா ஒருத்தர் கூட ஜாதக மேட்டர பத்தி யோசிக்கல பாத்தீங்களா? அதான் லைட்டா வருத்தமா… அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். உங்களால கண்டு பிடிக்க முடியாத டுவிஸ்ட் வச்ச ஹாப்பி எனக்கு. ஹா ‌ஹா ஹா…

Leave a Reply