சாரா 52

Loading

ராகவியை நேரில் பார்த்து விசயத்தை அறிந்து கொண்டால் போதும் என்று சாரா கிளம்பியிருக்க, பாதையில் ஒரு கார் பின் தொடர்வதை பாரத்தான்.

காரின் எண் புதிதாக இருக்க, “பிரமோத்.. அந்த கார் நம்மல ஃபாலோவ் பண்ணுது” என்று காட்டினான்.

“யாரோடது? புதுசா இருக்கே?”

“யாருனு தெரியலயே. இப்படியே கவிய பார்க்க போறது நல்லது இல்ல” என்றவன், உடனே பாதையை மாற்றினான்.

அந்த காரும் விடாமல் துரத்த, பிரமோத் தனது துப்பாக்கியை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

சாராவிற்கு அவன் கண்ணை காட்ட, கார் பறக்க ஆரம்பித்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, காரை கொண்டு சென்று ஃப்ளாட் போட்டிருந்த இடத்தில் நிறுத்தினான்.

அவர்களுக்கு சொந்தமான இடம் தான். விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்பதால், அங்கு யாருமே இல்லை.

காரை அங்கு நிறுத்தி விட்டு காத்திருக்க, சிவா வந்த காரும் அங்கு வந்து நின்றது.

அனுபமா எரிச்சலுடன் சிவாவை பார்த்தாள்.

“நின்னாச்சுல? இன்னும் என்ன?” என்று அவள் கேட்க, சிவா சாராவின் காரை ஆராய்ந்து விட்டு இறங்கினான்.

சாராவும், யார் அது? என்று தெரிந்து கொள்வதற்காக உள்ளேயே அமர்ந்திருக்க, சிவாவை பார்த்து புருவம் சுருக்கினான்.

“இவனா? இவன் எதுக்கு பின்னாடி வர்ரான்?” என்று கேட்டான் பிரமோத்.

“நீ தேவையில்லாம வெளிய வராத” என்று கூறி விட்டு, கீழே இறங்கினான் சாரா.

பிரமோத் காரில் இருப்பது, வெளியே இருந்து பார்த்தால் தெரியாத படி, காரின் கண்ணாடி அமைந்து இருந்தது.

சாரா தனியாகவே இறங்கி நின்றான்.

சிவா அவனை பார்த்து விட்டு காரை பார்த்தான். சாரா தனியாக தான் கிளம்பியிருக்கிறான் என்று செய்தி கிடைத்தாலும், ஒரு முறை காரை பார்த்துக் கொண்டான்.

“என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்படி ஃபாலோவ் பண்ணிட்டு இருக்க?” என்று சாரா கோபமாக ஆரம்பிக்க, “உன் கிட்ட இருக்கது எனக்கு வேணும்” என்றான்.

சாரா புருவம் சுருக்கிப் பார்த்தான்.

“வைரவர் கேஸ் கோர்ட்டுக்கு வரப்போகுது”

“ஆமா..”

“ஆனா அதுக்கு தேவையான எவிடன்ஸ் உன் கிட்ட இருக்கு. அத கொடுத்துடு”

“நீ கேட்டா நான் கொடுப்பேனா?”

“கொடுத்து தான் ஆகனும். உனக்கும் அந்தாளு கேஸுக்கும் சம்பந்தமில்ல. தேவையில்லாம இதுல நுழையாத”

“தர முடியாது. போய் வேற வேலை இருந்தா பாரு” என்றவன் உடனே திரும்பி காரை நோக்கி செல்ல, “சாரா.. என் பொறுமைய சோதிக்காத” என்றான் சிவா.

சாரா கண்ணை அழுந்த மூடித்திறந்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, சிவாவை பார்த்தான். அவன் கையையும் பார்த்தான்.

“கையில அடி பட்டுருக்குல? போய் வீட்டுல ரெஸ்ட் எடு. அத விட்டுட்டு என் பின்னாடி வந்துட்டு..”

“இப்ப நீ தர போறியா இல்லையா?’

“முடியாதுடா.. என்ன செய்வ?” என்று கேட்டதும், சிவா விறுவிறுவென சாராவின் அருகே வந்தான்.

அனுபமா காரில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிவா காரில் ஏறியதோடு, சில நிமிடங்களிலேயே சாராவின் காரை தொடர சொன்னான்.

“ஏன்?”

“ஃபாலோவ் பண்ணு. ஏன் எதுக்குனு கேள்வி கேட்டுட்டு”

“ஹலோ.. அப்படி உங்களுக்கு எதாவது பண்ணனும்னா, நீங்க மட்டுமா போக வேண்டியது தான? என் கார்ல உட்கார்ந்துட்டு அதிகாரம் பண்ணிட்டு இருக்கீங்க”

“நான் உனக்கு சுப்பீரியர். நான் சொன்னா செஞ்சு தான் ஆகனும்”

“அப்படினு நீங்களா நினைச்சுப்பீங்களா? என்னை அதிகாரம் பண்ணுற வேலையெல்லாம் வேணாம்.”

“ப்ச்ச்.. பேசாம ஓட்டுறியா?” என்று எரிச்சலாக கேட்டான்.

அவனிடம் சண்டை போட்டாலும், சாராவின் காரை தொடர்ந்து தான் சென்று கொண்டிருந்தாள்.

“அதிகாரம் பண்ணிட்டு பேசாம வரனுமாம்ல? ஆள பாரு” என்று எரிச்சலாக முணுமுணுத்துக் கொண்டே காரை ஓட்டினாள்.

பில நிமிடங்கள் பின் தொடர்ந்ததில் கடுப்பாகி விட்டாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் போறது?”

“அவன் கார நிறுத்துற வரை போ”

“நிக்கலனா?”

“நீயும் நிக்காத”

“நான் ஏன் நிக்க போறேன். பெட்ரோல் இல்லாம என் கார் தான் நிக்கும்”

வெடுக்கென சொல்லி விட்டு திரும்பிக் கொண்டாள். அவளது கார் நிற்கும் முன்பே, சாராவின் கார் நின்று விட்டது. சிவாவும் இறங்கி விட, அனுபமா இப்படியே இவனை விட்டு விட்டு கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் மனசாட்சி இடம் கொடுக்காததால், அமைதியாக காத்திருந்தாள்.

சிவா சாராவிடம் ஆதாரங்களை கேட்டதும், ‘ஆமா இவரு கேட்டதும் தூக்கி கொடுக்குறதுக்கு தான் அவன் எடுத்து ஒளிச்சு வச்சானாக்கும்? சரியான இம்சைடா’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் சிவாவின் நோக்கம் அதுவல்ல. சிவா சாராவின் அருகே வர, சாராவும் பிரமோத்தும் எச்சரிக்கையடன் அவனை கவனித்தனர்.

“இங்க பாரு.. இதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ். ஒழுங்கா எல்லாத்தையும் கொடுத்துட்டு விலகிடு. இல்லனா இதே இடத்துல உன்னை கொன்னு போடக்கூட யோசிக்க மாட்டேன்”

“கொல்லேன்.. இத கேட்டு நான் பயப்படுவேன்னு நினைப்பா? நீ என்ன செய்வனு நானும் பார்க்கிறேன். கூடவே இருந்த துரோகி உன் கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?”

“நான் துரோகியா? நாட்டுக்கு நீங்க பண்ணுறதுக்கு பேரு தான்டா துரோகம்”

“பெத்த அப்பாவ விசம் வச்சு கொல்லுற நீ என் கிட்ட துரோகத்த பத்தி பேசுற பாரு.. உன்னால முடிஞ்சத பார்த்துக்க. இது மட்டுமில்ல. இன்னும் நீ ஆயிரம் எவிடன்ஸ் கொண்டு வந்தாலும், அத்தனையும் எடுப்பேன். நீ எப்படி அந்த கேஸ நடத்துறனு பார்த்துடுறேன்”

“அந்த கேஸ் நடக்கலனா போகுது. தேவையில்ல” என்ற சிவா சட்டென பாவனையை மாற்றி கிண்டலாக சிரிக்க, சாரா புருவம் சுருக்கினான்.

“சரி.. உன் கிட்ட இருக்க ஆதாரம் உன் கிட்டயே இருக்கட்டும். அந்த கேஸ் நடக்கவே வேணாம். அதுக்கு பதிலா மொத்தமா கதைய முடிச்சுடுறேன்” என்றவன் இரண்டடி பின்னால் எடுத்து வைக்க, எங்கிருந்தோ பைக்கில் ஹெல்மெட்டுடன் வந்தவன், சட்டென துப்பாக்கி எடுத்து சுட்டிருந்தான்.

சாராவின் உடலில் தோட்டா ஒன்று இறங்கி விட, அனுபமாவும் பிரமோத்தும் அதிர்ந்தனர். பிரமோத் அவசரமாக தன் தூப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்க, அனுபமாவும் இறங்கினாள்.

சாரா பைக்கை பார்த்ததும் சுதாரித்து திரும்பியதால், நெஞ்சில் பாய வேண்டிய தோட்டா தோளில் பாய்ந்திருந்தது.

பிரமோத்தும் அனுபமாவும் ஒன்றாக இறங்கி வந்தனர். அனுபமா சிவாவை நோக்கி வந்தாள்.

“சார் என்ன பண்ணுறீங்க?” என்றவள் தனது துப்பாக்கியை தூக்க, “பாஸ்..” என்று வந்த பிரமோத் சாராவின் முன்னால் நிற்க, அதற்குள் அடுத்த தோட்டா சாராவின் மார்புக்கருகே சென்று நுழைந்திருந்தது.

சுட்டவனோ வந்த வேகத்தில் காற்றைப்போல பறந்திருக்க, பிரமோத் சிவாவை குறி வைத்தான். அவன் சுடும் முன்பு சாரா வலியோடு பிரமோத்தின் மீது சரிய, பிரமோத்தின் குறி தவறியது.

பிரமோத் குறி வைத்ததை பார்த்து சிவாவும் நகர்ந்து விட, பின்னால் வந்த அனுபமாவின் மீது தோட்டா பாய்ந்தது. அவளது தோளில் நுழைந்ததும், “அம்மா..” என்ற அலறலோடு மடங்கி விட்டாள்.

பிரமோத் அவர்களை கண்டு கொள்ளாமல், சட்டென சாராவை தூக்கி காருக்குள் போட்டான்.

சிவாவை கொல்லும் ஆத்திரம் வந்தாலும், நின்று சாராவின் நிலையை மோசமாக்க அவனுக்கு விருப்பமில்லை.

உடனே காரின் மறு பக்கம் ஏறி கிளம்பியும் விட்டான்.

உடலில் நுழைந்த இரண்டு குண்டோடு சாரா அமர்ந்திருந்தான். வலி உயிர் போனது. இரத்தம் அதன் போக்கில் கொட்டிக் கொண்டிருந்தது. துணி ஒன்றை எடுத்து, இரத்தம் வந்த இடத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டான்‌

“அவன நீ சுட்டியா?” என்று பிரமோத்தை கேட்க, “இல்ல பாஸ். அந்த அனுபமா நடுவுல வந்துட்டா” என்றான்.

“நல்ல வேளை..”

“எது நல்ல வேளை?” என்று பிரமோத் எகிற, “டேய்.. நீ சுட்டு உள்ள போக பார்க்காத. அவனுக்கு ஒரு முடிவு நான் கட்டுறேன்.” என்றான்.

பிரமோத் பதில் பேசவில்லை. காரை வேகமாக மருத்துவமனைக்கு ஓட்டினான்.

“ஹாஸ்பிடல் வேணாம்.. வீட்டுக்குப் போ. நம்ம டாக்டர…”

“நோ.. ஹாஸ்பிடல் தான் போவேன்.”

“வேணாம்.. வீணா கேள்வி கேட்பாங்க”

“பேசாம வாங்க” என்று அதட்டியவன், காரை மருத்துவமனைக்கே கொண்டு சென்று நிறுத்தினான்.

“பாஸ்.. வந்துட்டோம்..” என்றவன் வேகமாக திரும்ப, சாரா எப்போதோ மயங்கிப்போயிருந்தான்.

பிரமோத் காரை விட்டு இறங்கியதுமே சிவா அதிர்ந்தாலும், சட்டென சுதாரித்து விலக, அவன் சுட்ட தோட்டா அனுபமாவின் மீது பாய்ந்து விட்டது.

அதை சிவா எதிர்பார்க்க வில்லை. முதலில் அதிர்ந்து தான் போனான். பிறகு கோபம் வந்தது.

‘இவள யாரு இறங்க சொன்னா?’ என்று கடுப்பாக நினைத்துக் கொண்டு, அருகே சென்று பார்த்தான்.

கொட்டிய இரத்தம் அவளது காவல் உடை நனைத்து கொண்டிருந்தது.

வலி பொறுக்க முடியாமல் அவள் துடிக்க, “ஒன்னும் இல்ல.. எந்திரி ஹாஸ்பிடல் போகலாம்” என்று கூறி அவளை ஒரு கையால் எழுப்பப் பார்த்தான்.

அவளாகவே வலியை பொறுத்துக் கொண்டு எழ முயற்சித்துக் கொண்டிருக்க, பைக்கில் வந்து சுட்டவன் இப்போது மீண்டும் வந்தான்.

ஹெல்மெட்டை கழட்டிய பிறகு தான் தெரிந்தது அது குரு என்று. அனுபமா அவனை அதிர்ச்சியோடு பார்க்க, “தூக்குடா இவள..” என்றான் சிவா.

குரு சட்டென அவளை தூக்கி காரில் போட்டு விட்டு, “நீ கார ஓட்டுவியா? இல்லனா யாரையாவது கூப்பிடலாம்” என்றான் குரு.

“நானே பார்த்துக்கிறேன். நீ முன்னாடி போ” என்ற சிவா, உடனே காரை எடுத்து முடிந்தவரை ஒரு கையால் ஓட்ட ஆரம்பித்தான்.

“அப்போ.. நீங்க சாரா கிட்ட பேசுறதுக்காக வரல?” என்று வலியை பொறுத்துக் கொண்டு கேள்வி கேட்டாள் அனுபமா.

சிவா பதில் சொல்லாமல் போக, “நாம கிளம்பும் போது குருவுக்கு வேற வேலை இருக்குனு சொன்னீங்களே.. அது இது தானா?” என்றும் கேட்டாள்.

அப்போதும் அவன் அமைதியாகவே இருந்தான்.

“எதுக்காக சாராவ கொல்லனும்? அவன சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தலாமே”

“அப்படி நிறுத்துனா மட்டும்? இப்ப உன்னை சுட்டானே.. அவன் சிட்டில பெரிய லாயர். அவன் தான் வைரவர் கேஸயும் எடுப்பான். அவனும் சட்டம் படிச்சவன் தான். ஆனா அந்த சட்டத்த சாராவுக்கு சாதகமா யூஸ் பண்ணுவான். சட்டத்து முன்னாடி அவன நிக்க வைக்கிறத விட, கொன்னுடறது தான் சரியான முடிவு.”

“அப்ப அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டாள்.

அதீத இரத்த போக்கில் மயக்கம் வரும் போல் இருந்தது. ஆனால் அப்போதும் விடாமல் கேள்வி கேட்டாள்.

சிவா அவளை முறைக்க, “ஒரு வித்தியாசமும் இல்லல?” என்று கேட்டாள்.

“இருக்கு.. அவன் நாட்ட கெடுக்க பண்ணுறான். நான் நாட்ட காப்பாத்த பண்ணுறேன்”

அனுபமா நக்கலாக சிரித்தாள்.

“அவங்கள கொன்னா தான் தீர்வு கிடைக்கும்னா, நாம ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேலைக்கு வரனும்? சும்மாவே இருந்து அவங்கள கொன்னுருக்கலாமே”

“சும்மாவே கொன்னா அது கொலை”

“அப்போ உங்க கொலைய மறைக்க, ஒரு யூனிஃபார்ம் தேவைனு தான் இதெல்லாமா?”

“வாய மூடுறியா?” என்று சிவா எரிந்து விழ, அதற்கும் அனுபமா சிரித்தாள்.

“உண்மைய ஒத்துக்கோங்க சார்.. உங்களுக்கு உங்கப்பா மேலயும் சிவா மேலயும் கோபம். அந்த கோபத்துக்காக, அவங்கள கொல்லனும்ங்குறதுக்காக, மிஷன் பேர சொல்லிட்டு சுத்துறீங்க. அப்படி தான?” என்று கேட்டவளை திரும்பிப் பார்த்தவன் முகத்தில் கோபம் ஜொலித்தது.

“ஆமாடி.. அதுக்கென்னங்குற?”

“அதான் உங்களுக்கும் அவங்களுக்கும் வித்தியாசமே இல்லைங்குறேன்”

“இன்னொரு தடவ இத சொன்னனா, உன்னை இங்க நானே கொன்னுடுவேன். மூடிட்டு வா”

“என் மேல உங்களுக்கு என்ன சார் பகை? நான் உங்க அம்மா சாவுக்கு காரணம் இல்ல. நான் உங்க அம்மாவ விட முக்கியமா உங்கப்பா வாழ்க்கையிலையும் இல்ல. அதுனால என்னை போய் ஏன் கொல்லனும்?”

சிவாவின் கையில் ஒரு நொடி கார் தடுமாறியது.

“வாய மூடு” என்று உறுமினான்.

“உண்மை சில நேரம் கசக்கும் சார். ஆனா அத மாறாது. உங்க கோபம் வைரவர் மேலயும் சாரா மேலயும் வந்துருக்குனா, அதுக்கு உங்கம்மா தான காரணம்? ஆனா அவங்களே கூட நீங்க இப்படி இருக்கத விரும்ப மாட்டாங்க”

“ஏய்.. வாய மூடு” என்று அலறியபடி திரும்பிப் பார்க்க, அனுபமா மயங்கி இருந்தாள்.

அதை பார்த்து கடுப்பானவன், ஸ்டியரிங்கை ஓங்கி அடித்து விட்டு காரை ஓட்டினான்.

தொடரும்.

Leave a Reply