சாரா 55
![]()
சிவா தன் வீட்டில் இருந்தான். அவனது வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டு. ஒரு கையால் அவனால் அதிகம் பார்க்க முடிவது இல்லை தான். ஆனால் அதற்காக, அடுத்தவர்களை நம்பவும் அவன் தயாராக இல்லை.
சாரா இறந்து போன செய்தி எதுவும் வராததால், அவன் பிழைத்து விட்டான் என்று புரிந்து கொண்டான். இனி அவனை என்ன செய்வது? என்று பிறகு தான் யோசிக்க வேண்டும்.
நான்கு நாட்களும் அதன் போக்கில் பறந்து விட, அடுத்த நாள் காலையில் அவனது கைபேசி அழைத்தது. தெரியாத எண்ணை பார்த்து புருவம் சுருக்கியபடி எடுத்து, காதில் வைத்தான்.
“ஹலோ.. நான் பிரமோத்.. லாயர் பிரமோத் பேசுறேன்.” என்று பிரமோத் ஆரம்பிக்க, சிவாவின் புருவம் உயர்ந்தது.
“சொல்லுங்க..”
“சிவராஜ் தான?”
“ம்ம்”
“உங்கள நேர்ல மீட் பண்ணனும்”
“ஏன்?”
“வைரவர் கேஸ் விசயமா பேசனும்”
அப்போது தான், பிரமோத் தான் வைரவரின் வழக்கில் வருகிறான் என்று நினைவு வந்தது.
“அத பத்தி என்ன பேசனும்?”
“நேர்ல மீட் பண்ணனும். எங்க பார்க்கலாம்?”
“கமிஷ்னர் ஆஃபிஸ்ல?”
“ஓகே. எப்போ?”
“நாளைக்கு பத்து மணிக்கு.”
“சரி பார்க்கலாம்” என்றவன், உடனே வைத்து விட்டான்.
‘என்ன பேச போகிறான்?’ என்று சிவா அப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அடுத்த நாள் பத்து மணிக்கு, சரியாக பிரமோத் வந்து சேர்ந்தான். இப்போது புது கமிஷ்னர் யாரும் இல்லாததால், அந்த அலுவலகத்தை சிவா தான் பயன்படுத்துகிறான்.
அங்கு பிரமோத் வந்ததும், மரியாதை நிமித்தமாக எழுந்து வரவேற்றான். பிரமோத் சிவாவை விட வயதில் மூத்தவன். அவனது பதவிக்கு மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்.
பிரமோத் கை நீட்ட, சிவா மறுக்காமல் குலுக்கினான்.
இருவரும் அமர்ந்ததும், “சொல்லுங்க சார்” என்று சிவாவே ஆரம்பித்தான்.
“உங்க அப்பா கேஸ் பத்தி பேசனும் சிவராஜ். அவர் கேஸ்ல நான் தான் ஆஜர் ஆகுறேன்.”
“ம்ம் தெரியும். இப்ப என்ன பேசனும்?”
“அவரோட சொத்த பத்தி பேசனும்”
சிவராஜ் புருவம் சுருக்க, பிரமோத் கத்தையாய் பல காகிதங்களையும் பத்திரங்களையும் தூக்கி சிவாவின் முன்னால் வைத்தான்.
“இது எல்லாமே உங்கப்பாவோட சொத்து தான். இது எல்லாம் கேஸ்ல வரும். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு”
“என்ன சிக்கல்?”
“எடுத்து படிச்சு பாருங்க” என்றதும் சிவா எடுத்து படித்தான்.
பாதிக்கும் மேல் சொத்துக்கள், அவன் பெயரில் இருந்தது. அத்தனையும் அசையா சொத்துக்கள்.
அதைப்பார்த்ததும் முதலில் கோபமும், பிறகு ஒரு ஏளமான சிரிப்பும் அவனிடம் வெளிப்பட்டது.
‘கொள்ளையடிச்ச பணத்துல பிள்ளைக்கு சொத்து சேர்த்துருக்காராம்.. இத நான் வாங்கிக்கனுமாக்கும்’ என்று நினைத்தவன், பிரமோத்தை பார்த்தான்.
“பாதி சொத்து உங்க பேர்ல இருக்கு. மீதி தான் அவர் பேர்ல இருக்கு. ஆனா எல்லாமே அவர் வாங்குனதுங்குறதால கணக்குல வர தான் செய்யும். நீங்களும் வருவீங்க”
“எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல”
“இந்த சொத்து கோர்ட்ல ஜப்திக்கு போகும். இல்லனா…”
“இல்லனா..?”
“அரசியல்வாதிங்க வாய்ல போகும்”
“ஒரு கொள்ளை காரன் கிட்ட தப்பிச்சு இன்னொருத்தன் கிட்டயா?” என்று கிண்டலாக கேட்டான்.
“கிட்டத்தட்ட அப்படித்தான். அரசாங்க சொத்து எல்லாம், அரசாங்கத்த ஆளுறவங்களுக்கு சொந்தம்னு தான நினைக்கிறாங்க. பட் அத அப்படிப்போக விடனுமானு நீங்க தான் முடிவு பண்ணனும்”
“எனக்கு இந்த சொத்தெல்லாம் வேணாம்” என்று வேகமாக பதில் வந்தது அவனிடமிருந்து.
“அது எனக்கு தெரியும். ஆனா அத அடுத்தவன் கிட்ட அள்ளி கொடுக்குறத விட, எதாவது நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணுங்களேன்”
“சமூக சேவையா? அதுக்கு எனக்கு நேரமில்ல”
“நேரம் ஒதுக்கி பண்ணலாம். ஒரு வேளை இந்த வேலையால, பாதிக்கப்பட்ட உங்க அம்மா மனசு கூட இதுல சாந்தி அடையலாம்”
“இப்ப எதுக்கு என் அம்மாவ பத்தி பேசுறீங்க?” என்று சிவா கோபமாக கேட்க, “எனக்கு தெரியும். உங்கம்மாவோட சாவுக்கு உங்கப்பாவும் அவரோட தொழிலும் காரணம்னு. இப்ப அந்த தொழிலால வந்த சொத்த, எவனோ அடுத்து ஒருத்தன் கொள்ளையடிக்க ஏன் விடனும்? உங்க அம்மா பேர்ல, உங்கம்மா மனசு சாந்தி அடையுற மாதிரி நாலு பேருக்கு நல்ல விதமா உதவலாமே?” என்று கேட்டு நிறுத்தினான்.
சிவா சில நொடிகள் அமைதி காத்தான். கோபத்தை கொஞ்சமாய் குறைத்து விட்டு சிந்தித்தவன், “எங்கம்மா இறந்தத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டு வைத்தான்.
“பெருசா எதுவும் தெரியாது. ஜஸ்ட் விசாரிச்சப்போ தெரிஞ்சது. அவங்களுக்கு உங்கப்பாவோட வேலை எதுவும் பிடிக்காதாமே. அவங்களே கடைசியில அதால இறந்தும் போயிட்டாங்க. தப்பு தான். ஆனா போனவங்கள திருப்பி கூப்பிட முடியாது. அதுக்கு பதிலா, அவங்க மனசு சந்தோசபடுற மாதிரி எதையாவது செய்யலாம். இது என்னோட ஒப்பீனியன் தான். மத்தபடி உங்க இஷ்டம்”
அந்த சொத்து பத்திரங்களை பார்த்து விட்டு, சிவா பெருமூச்சோடு திரும்பினான்.
“வேற என்ன?”
“வைரவர் கேஸ்ல பெருசா நான் வாதாட போறது இல்ல. நீங்க உங்க எவிடன்ஸ்ஸ காட்டி, அவரோட தொழில பத்தி ஊருக்கே சொல்லிக்கோங்க. பிரச்சனை இல்ல”
பிரமோத் இப்படி சொன்னதும், சிவா அவனை சந்தேகமாக பார்த்தான்.
“இது நம்புற மாதிரி இல்லையே?”
“எனக்கும் தான். ஆனா நான் பெருசா வாதாடக்கூடாதுனு ஆர்டர். கேஸ எடுத்ததுக்காக சில விசயம் பேசுவேன். மத்தபடி நீங்க என்ன வேணா செய்ங்க”
“சாரா சொன்னானா?”
“ஆமா. நீங்க என்ன வேணா செய்யுங்க. ஆனா ஒரே ஒரு கண்டீஷன்.. இந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட கட்சி ஆளுங்கள உள்ள இழுக்காதீங்க”
“ஏன்?” என்று கேட்டவனின் குரலில், கோபம் கொப்பளித்தது.
“அப்படி இழுத்தா உங்கள கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.”
பிரமோத் சாதாரணமாக சொல்ல, “இப்படி மிரட்ட சொன்னானா அவன்?” என்று கேட்டான்.
“இது மிரட்டல் இல்ல. உண்மை. இப்பவே, சாரா பாஸ் அவங்க பேரு வெளிய வராதுனு சொன்னதால தான் அடங்கி இருக்காங்க. இல்லனா, எப்போவோ கேஸ ஒன்னும் இல்லாம பண்ணி, உங்களையும் அனுபமாவையும் பரலோகம் அனுப்பிருப்பாங்க.”
“இந்த மிரட்டல் எல்லாம் என் கிட்ட வேணாம். நான் கேஸ நேர்மையா தான் நடத்துவேன்”
“நடத்துங்க. உங்க அப்பா மேல இருக்க தப்ப நிரூபிங்க. ஆனா மத்தவங்கள உள்ள இழுக்காதீங்க”
“தேவைப்பட்டா உள்ள இழுக்க தான் செய்வேன்”
“ரொம்ப சந்தோசம். நீங்க யாரு கையால செத்தா எனக்கென்ன? சொல்ல சொன்னாங்க. சொல்லிட்டேன்.” என்று பிரமோத் சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு, அடுத்த விசயத்திற்கு தாவினான்.
“அனுபமா இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் ஆகுறாங்க. அவங்க சேஃப்ட்டி முக்கியம்னு ரிலீவ் ஆக சொல்லிட்டாங்க. உங்களுக்கு இன்னும் நியூஸ் வந்துருக்காதுனு நினைக்கிறேன். வந்ததும் தெரிஞ்சுப்பீங்க. செத்து போயிட்டா, அரசு மரியாதையோட உங்கள அடக்கம் பண்ணிடுவாங்க. அப்புறம் இந்த சொத்த என்ன செய்யுறதுனு இப்பவே சொல்லிடுங்க. ஏன்னா நான் தான் அதுக்கும் அலையனும்”
பிரமோத் சிவா இறந்துவிடுவான் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். அவனது பேச்சை கேட்டு அவனை முறைக்க நினைத்து, முடியாமல் கோபத்தை கட்டுப்படுத்தினான் சிவா.
“நான் சாவுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் சார்”
“வெரி குட். இந்த சொத்த என்ன பண்ணலாம்?”
“எதாவது உண்மையான டிரஸ்ட் இருந்தா கொடுத்துருங்க”
“ஓகே டன். இந்த சொத்த உங்க லாக்கர்ல வைங்க. லீகலா அப்புறமா நான் எடுத்துக்கிறேன்”
“நான் செத்துடுவேங்குறதுல அவ்வளவு உறுதியா?”
“நூறு சதவீதம் உறுதி. உண்மைய சொல்லனும்னா, உங்கள எனக்கு சுத்தமா பிடிக்கல. அன்னைக்கு குறி தவறலனா, இந்நேரம் நீங்க பரலோகத்துல உங்க அம்மாவ மீட் பண்ணிருப்பீங்க. ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு. உங்கள கொல்லலாம்னு தான் நானும் சொன்னேன். இந்த பாஸ் தான்.. சிவா வைரவரோட பிள்ளைனு சொல்லி வாய அடைச்சுட்டாரு. பட் நான் வேணா பாஸ் பேச்ச கேட்பேன். ஆளுங்கட்சி ஆளுங்க, அவங்க பதவிக்கு பிரச்சனைனா யாரு பேச்சையும் கேட்க மாட்டாங்க. அதுனால நடந்தே தீரும். நீங்களாச்சு உங்க கேஸாச்சு. நான் கிளம்புறேன்”
பேச்சு முடிந்தது என்று பிரமோத் கிளம்பிச் சென்று விட்டான்.
சிவா சில நிமிடங்கள் அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தான். அவனை கொல்ல ஆட்கள் வருவதை பற்றிக் கவலை இல்லை தான். ஆனால் இந்த அயோக்கியர்கள் கையால் தானும் இறந்தால், அவனுடைய தாய் அவனை மன்னிக்கவே மாட்டார்.
நூறு வருடம் அவன் நன்றாக வாழ வேண்டும் என்பது தான் அவரது ஒரே ஆசை. அப்படி இருக்க, அவரைப்போலவே மற்றவர்கள் தவறிற்கு தானும் உயிரை விட்டால்? அவரைப்போலவே இறந்து போவதென்றால், எதற்காக அவர் அவ்வளவு பாடு பட்டு அவனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்?
அவனது எண்ணங்கள் சுழன்று கொண்டே இருந்தது.
*.*.*.*.*.*.*.*.*.*.
அனுபமா அன்று மருத்துவமனையிலிருந்து வீடு கிளம்பினான். ஆறு மாதங்கள், பாதி ஊதியத்துடன் அவளுக்கு விடுமுறை கொடுத்திருந்தனர்.
மருத்துவமனை விட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்க, அவளது கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது. சிவா பேச விரும்புவதாக அனுப்பி இருந்தான்.
“நான் ஊருக்கு போறேன். ஈவ்னிங் பேசுறேன்” என்று பதில் அனுப்பி விட்டு, வைத்து விட்டாள்.
ஊர் சென்று சேர்ந்தும், தனிமை கிடைத்ததும் உடனே சிவாவை அழைத்தாள்.
“சொல்லுங்க சார்”
“கை எப்படி இருக்கு?”
“இப்ப பரவாயில்ல சார். மூவ் பண்ணலாம்”
“சோல்டர்?”
“அது கொஞ்சம் பரவாயில்ல”
“டேக் ரெஸ்ட்”
“ம்ம்..”
“கேஸ்ல இருந்து விலகிட்டியாமே?”
“ஆமா சார். இந்த நிலைமையில என்னால பார்க்க முடியாது”
“அதுனால மட்டும் தானா?”
“இல்ல சார். நான் இருந்தா வேஸ்ட் தான் சார். உங்கப்பாவ நீங்க பழி வாங்க நான் ஏன் நடுவுல அரைபடனும்?”
“வாட்?”
“நீங்க ஒத்துக்கலனாலும் அதான் உண்மை. உங்க குடும்ப பிரச்சனை இது. இதுல நான் மாட்ட விரும்பல. அப்புறம் நான் இருந்தா, என் உயிருக்கும் உத்திரவாதம் இல்ல. இப்ப அடி பட்ட மாதிரி, எப்ப வேணா அடிபடும். என் ஃபேமிலிக்கு நான் ரொம்ப முக்கியம். என்னால இதுக்கு மேல இதுல இருக்க முடியாது”
“ஓஓ.. உயிருக்கு பயந்து வேலைய விடுறதுக்கா படிச்சு பதவிக்கு வந்தீங்க?”
“இல்ல தான். ஆனா சொந்த அப்பாவ பழி வாங்கவும் நான் யூனிஃபார்ம் போடல. நீங்களே பாருங்க. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க. முடிஞ்சத செய்யுறேன்.”
“ஓகே. டேக் கேர்” என்று வைத்து விட்டான்.
அனுபமா கைபேசியை பார்த்து விட்டு, சாரா பேசியதை நினைத்து பார்த்தாள்.
முதலில் சாரா அவளுக்கு அடி பட்டதற்காக மன்னிப்பு கேட்டான். அதை அனுபமாவே எதிர்பார்க்கவில்லை.
“என்னை காப்பத்தனும்னு நினைச்சு, சிவாவ சுடப்போய் நீ அடி பட்டுட்ட. அதுக்கு சாரி” என்று மன்னிப்பு கேட்ட போது, அனுபமா கனவா? நினைவா? என்று தெரியாமல் விழித்தாள்.
பிறகு சிவாவை பற்றிப்பேச ஆரம்பிக்க, அனுபமாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. சிவா ஏன் இதை எல்லாம் செய்கிறான்? என்று அவளுக்கு தெரியும்.
அவனை காதலிப்பது போல் அவள் நடித்த போது, அவனை பற்றிய அத்தனை விவரங்களையும் வேலைக்காரர்களிடம் இருந்து வாங்கியிருந்தாள். அவனது காவல்துறை பணியை பற்றித்தான் தெரியாதே தவிர, அவனது சிறுவயது வாழ்வை பற்றி எல்லாமே தெரிந்து கொண்டாள்.
அவனது அன்னை பயந்து பயந்து வாழ்ந்ததும், சிவாவிற்கு எப்போதும் போதிப்பதும் தெரிந்தது. அதோடு அன்னை இறந்த பிறகு, சிவா வைரவரிடம் பேசுவதை கூட நிறுத்தி விட்டான் என்று செய்தி கிடைத்தது.
முதலில் அதை எல்லாம் அவள் சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டாள். ஆனால் இப்போது யோசிக்கும் போது, எல்லாவற்றிற்கும் தொடர்பு இருப்பது புரிந்தது.
அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமலே இருந்தவள், சிவா சாராவை கொல்ல துணியவும் கேட்டு விட்டாள்.
இப்போது அதைப்பற்றி சாராவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஒரு வேளை, அவன் சிவாவின் மனக்காயத்தை ஆற்றலாம் அல்லவா?
சிவா நல்லவன் தான். அவனது பழி வாங்கும் படலம் தான், அவனை சற்று கெட்டவனாக காட்டுகிறது. சட்டப்படி சாராவை தண்டிக்க வேண்டும் என்றால், அனுபமா நிச்சயமாக உதவுவாள். ஆனால் அவன் சட்டத்தை மீறி செய்வது அவளுக்கு பிடிக்கவில்லை.
அதை எல்லாம் பார்த்து ஹீரோயிசம் என்று நினைத்து ரசிக்க, அவள் சிறு பெண்ணும் அல்ல. நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு, எனக்கென்ன என்று போக அவளுக்கு பொறுப்பில்லாமலும் இல்லை.
அதனால், குத்து மதிப்பாய் சிவாவின் அன்னையின் பேச்சை எடுத்து வைத்தான்.
“அவர் நல்லவர் தான் சாரா. என்ன அவரோட அம்மாவோட இறப்பு, அவர் மனசுல காயமா இன்னும் இருக்கு. சரி உங்க பிரச்சனைய நீங்க பாருங்க. நான் ரெஸ்ட் எடுக்க எங்க ஊருக்கு போறேன்” என்று கூறி விட்டு வைத்து விட்டாள்.
சாராவின் மூளை விசயத்தை உடனே பிடித்துக் கொண்டது. உடனே அலசி ஆராய்ந்து விசயத்தை கண்டு பிடித்தவன், முடிவும் எடுத்து விட்டான்.
சாரா ஒரு நிறுவனம் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தான். எல்லாவற்றையும் செய்து கொண்டே, வைரவரின் சொத்துக்களை எல்லாம் சிவாவிடம் ஒப்படைக்க வைத்தான்.
அவன் மீதிருந்த அக்கறையில் எச்சரிக்கையும் செய்ய சொல்ல, பிரமோத் வேண்டாவெறுப்பாகவே சொல்லி விட்டு வந்து விட்டான்.
நாட்கள் பறந்து சென்றது. சாரா மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது, ராகவியின் பெயரில் கம்பெனிகள் சில உருவாக ஆரம்பித்திருந்தது.
மருத்துவமனையில் தினமும் வந்து பார்த்த ராகவி, சாரா வீடு திரும்பும் போது அவனுடனே போவதாக சொன்னாள்.
கந்தன் முறைக்க, “இதுல நான் ஒன்னும் பண்ண முடியாது. என் பொண்டாட்டி அவ. என் கஷ்டத்துல அவ தான கூட இருக்கனும்?” என்று கேட்டு வைத்தான் சாரா.
கந்தன் பேசியும் ராகவி கேட்காமல் போக, அவளை அனுப்பி வைத்தான்.
ஏகாம்பரமும் ராகவியும் சாராவை நன்றாகவே கவனித்தனர். அதோடு சாரா எதிர் பார்த்த நாளும் வந்தது.
தொடரும்.
