சாரா 56 (final)

Loading

நான்கு மாதங்களுக்கு பிறகு…

காலையிலேயே பட்டு வேட்டி சட்டையில் தயாராகி இருந்தான் சாணக்கிய ராஜ். இன்று அவனுக்கு திருமணம். நாள் நட்சத்திரம் பார்த்து, கோவிலில் திருமணம் செய்தே தீருவேன் என்று கந்தன் அடம் பிடித்ததால், இந்த ஏற்பாடு.

ஒரு மாதத்திற்கு முன்பே, ராகவியை இங்கிருந்து அழைத்துச் சென்று விட்டான் கந்தன்.

சாராவின் உடல் அப்போது தான் தேறியிருந்தது. அதனால் ராகவியை அழைத்துச் சென்று விட, இப்போது திருமணம் செய்து அவளை மீண்டும் அழைத்து வர வேண்டும்.

முதலில் கட்டிய தாலியை கோவில் உண்டியலில் போட்டு விட்டு, புதுத்தாலியை கட்ட ஏற்பாடு.

ஏகாம்பரமும் சாணக்கியனும் கிளம்பி இருக்க, பிரமோத் வந்து நின்றான்.

“பாஸ் கார் ரெடி” என்றதும், மூவரும் கிளம்பி விட்டனர்.

கோவிலை அடையும் போது கந்தன் குடும்பத்தோடு வந்து இறங்கினான். குறிஞ்சியின் அன்னை கமலாவின் கையில், கந்தனின் மகன் இருந்தான்.

பிறந்து ஒரு மாதம் தான் கடந்திருந்தது. குறிஞ்சியும் ராகவியும் ஒன்றாக உள்ளே சென்று விட, கந்தன் சாராவிடம் வந்தான்.

“வாங்க மாப்பிள்ளை சார். மாலை ரெடி தாலி ரெடி.. கட்ட நீங்க ரெடியா?”

“வேணாம்னா விடவா போறீங்க?”

“வேணாமா? அப்ப கிளம்பு.. ராகவி.. இவருக்கு…”

“மச்சான்.. என் வாழ்க்கையில மண்ணள்ளி போட பார்க்காதீங்க..” என்று வேகமாக அவனை பிடித்தான் சாரா.

“அது… உள்ள போகலாம்” என்று இருவரும் செல்ல, பின்னாலேயே மற்றவர்களும் சென்றனர்.

யாருக்குமே திருமண விசயம் தெரியாது. குறிஞ்சியின் குடும்பத்தில் மட்டுமே, சில சொந்தங்கள் வந்திருந்தனர். கந்தனின் தாய்மாமாவும் வந்திருந்தார். சாரா பக்கம், ஏகாம்பரம் பிரமோத் தவிர யாரும் வரவில்லை.

“உன் தம்பிய கூப்பிட்டுருக்கலாம்ல?” என்று கந்தன் கேட்க, “சொன்னேன். ஆனா அவன் வர வாய்ப்பில்ல” என்றான்.

“ஏன்?”

“வேற எதோ வேலையில ராஜஸ்தான் வரை போயிருக்கானாம்”

“இன்னும் அவன வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கியா?”

“என் தம்பி அவன். அதெப்புடி விட முடியும்?”

“சரி தான். ஆனா அந்த கேஸ்ல நீ இப்படி பண்ணுவனு நினைக்கல”

“அவனுக்கு அது சந்தோசத்த கொடுக்குதுனா தப்பே இல்ல. இப்ப சொத்த எல்லாம் வித்து டிரஸ்ட் ஆரம்பிக்க போறானாம்”

“அது உன் ஐடியானு பிரமோத் சொன்னான்”

“ஆக்ட்சுவலி.. அப்பா சம்பாதிச்சத அனாமத்தா போக விட எனக்கு மனசு வரல. அதான் அவன திசை திருப்பி விட்டேன். சும்மா விட்டுருந்தா, சிவா அத கண்டுக்காம விட்டுருப்பான். இப்ப அவன் கையாலயே அத மத்தவங்களுக்கு அள்ளி கொடுக்குறான். அதான் எனக்கு வேணும்”

“சரி தான். நீ உன் கம்பெனிய எப்ப திறக்க போற?”

“கல்யாணத்த முடிச்சுட்டு அத பத்தி ஆற அமர பேசுவோம்” என்றவன், வேகமாக சென்று சாமியின் முன்னால் நின்று கொண்டான். அவனருகே பட்டுச்சேலையில் இதமான அலங்காரத்துடன் ராகவி நின்றிருந்தாள்.

இன்னும் நல்ல நேரம் வர நேரமிருப்பதால், ராகவி கமலாவின் கையிலிருந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த சாராவிற்கு, முதல் முதலில் ராகவியை பார்த்த நாள் நினைவு வந்தது. அன்று மழைக்கு ஒதுங்கி நின்ற இடத்தில், இது போலவே அலங்காரத்துடன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இப்போது அவனது சரிபாதியாக, அருகே நின்றிருக்கிறாள்.

மனம் நிறைய கடவுளை பார்த்தவன், புன்னகைத்து வைத்தான். ராகவியின் கழுத்தில் முதலில் இருந்த தாலி கோவில் உண்டியலுக்கு சென்று சேர்ந்தது.

ஐயர் பூஜையை முடித்து தாலியை கொண்டு வந்து நீட்ட, குறிஞ்சி எல்லோருக்கும் அட்சதையை கொடுத்து விட்டு வந்து நின்றாள்.

ராகவி மனதில் கடவுளை வேண்டிக்க கொண்டு நிற்க, சாரா தாலியை கட்டி மூன்று முடிச்சிட்டான்.

அன்று போல அவசரமாக இல்லை. பொறுமையாக ஒவ்வொரு முடிச்சையும் போட்டு முடிக்க, ராகவியின் இதழ்களில் நிரந்தரமாக புன்னகை நிறைந்தது.

பொட்டு வைத்து முடித்ததும் ஆசி வாங்க சென்றனர். கமாலாவின் காலில் மட்டும் இருவரும் ஜோடியாக விழ, மற்றவர்களின் காலில் ராகவி மட்டுமே விழுந்தாள்.

ஏகாம்பரத்தின் காலில் விழப்போக, சட்டென பிடித்தவனுக்கு கண்கலங்கி விட்டது.

“என்ன இது? என் கால்ல போய்…”

“நாங்க சேரனும்னு நீங்க தான ரொம்ப ஆசைப்பட்டீங்க. அதான் ஆசிர்வாதம் பண்ணுங்க”

“அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. இந்த வாயாடிய எப்ப பாஸ் துரத்துவீங்கனு பாஸ் கிட்ட கேட்டுட்டு தான் இருந்தேன். வேணும்னா நீயே கேளேன்”

“எதே? பாஸ்.. என்னை வீட்ட விட்டு துரத்தனும்னா சொன்னாரு ஏகா?”

“உங்க சண்டையில நான் வரல” என்று சாரா கையை விரிக்க, “யோவ் ஏகா” என்றாள் இடுப்பில் கை வைத்து.

“ன்னா…?’

“நான் தான் இப்ப உங்க பாஸம்மா.. நினைப்பிருக்கா?”

“பாஸம்மாவுக்கு மரியாதை வேணுமோ?”

“தர மாட்டீங்களோ?”

“ஒழுங்கா சக்கரை போடாம சாம்பார் வைக்கிறது எப்படினு கத்துட்டுவா. மரியாதை தர்ரேன்”

“உங்க மரியாதையே வேணாம்” என்று பட்டென சொல்லி விட்டு திரும்பி விட்டாள்.

“கடைசி வரைக்கும் உங்களுக்கு பொண்டாட்டி கையால சாப்பாடு கிடைக்காது பாஸ்.” என்றான் ஏகா.

ராகவி அவனை முறைத்து விட்டு, திரும்பிக் கொண்டாள். அங்கிருந்து நேராக ஒருஹோட்டல் சென்று, எல்லோரும் சாப்பிட்டு விட்டு கந்தனின் வீட்டுக்கு சென்றனர்.

பால் பழம் கொடுத்து, இருக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, சீர் வரிசையோடு அனுப்ப தயாரானர்கள்.

“ஆமா மாப்பிள்ளை… டாக்டர் கிட்ட கேட்டுட்ட?” என்று கேட்டபடி, கந்தன் சாராவின் தோளில் கைபோட்டுக் கொண்டான்.

“மூணு நாளுக்கு முன்னாடியே கேட்டேன்” என்று சாரா பெருமையாக சொல்ல, “என்னது? பாஸ்.. மறுபடியும் எதாவது உடம்பு சரியில்லயா?” என்று கேட்டான் பிரமோத்.

“சிங்கிள் சிகாமணியா சுத்துனா இப்படித்தான். எப்படா நீ கல்யாணம் பண்ண போற?”

“எனக்கு என் கோர்ட் கேஸ் போதும். புதுசா ஒரு கேஸ தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியாது எஸ்.பி”

“இப்படியே எத்தனை வருசம் சுத்துறனு பார்க்கலாம்” என்றான் சாரா.

ராகவி சீர் வரிசைகளை எல்லாம் லாரியில் ஏற்றுவதை பார்த்து விட்டு, “அண்ணன் சொத்த பூராம் எனக்கே கொடுத்துட்டீங்க போல?” என்று கேட்டு வைத்தாள்.

“உங்கண்ணன் திரும்ப சம்பாதிப்பாரு.. கவலைப்படாத” என்றாள் குறிஞ்சி.

“நாளைக்கு என் மருமகன் வளர்ந்து வந்து, எங்கப்பா இங்க இருந்த கிணத்த காணோம்னு கேட்பான். அப்ப பதில் சொல்லிக்கோங்க” என்றவள், தூங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தாள்.

“கேட்டா நீ சம்பாதிச்சு கொடு. அதான் உன் பேருல தம்பி கம்பெனி ஆரம்பிக்கிறாரே”

“என் மருமகனுக்கு இல்லாததா?”

“கொஞ்சுனது போதும்.. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள கிளம்பனும்.” என்று சொல்லிக் கொண்டே வந்து நின்றார் கமலா.

அங்கிருந்து சீர் வரிசைகளோடு, சாராவின் வீட்டுக்கு வந்தனர். அங்கும் ஆரத்தி எடுத்து வரவேற்க, ராகவிக்கு தன்னை மீறி சிரிப்பு வந்தது.

“என்ன?” என்று சாரா கேட்க, “இங்க இருந்து தப்பிச்சு ஓட வழி தேடிட்டு இருந்த அதே ராகவி நான் தான்னு நினைச்சேன். சிரிப்பு வந்துடுச்சு” என்றாள்.

“உனக்கு இருந்தாலும் அப்ப ரொம்ப பயம். இப்ப சுத்தமா பயமே இல்ல”

“அப்ப ரௌடி சாரா மேல பயம். இப்ப புருஷன் சாணக்கியராஜ் மேல எதுக்கு பயம்?”

ராகவி புருவம் உயர்த்திக் கேட்க, சாரா புன்னகைத்துக் கொண்டான். கொண்டு வந்த புது விளக்கை ஏற்றி, அங்கும் சாமி கும்பிட்ட பிறகு, எல்லோரும் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்.

“பாஸ்… எதுக்கு டாக்டர பார்த்தீங்கனு சொல்லவே இல்லையே.. அதான் எல்லாம் சரியாகிடுச்சுனு சொல்லிட்டாங்களே”

பிரமோத் அதையே கேட்டுக் கொண்டிருக்க, “இவன் வேற.. டேய் நீயே சொல்லு” என்று விட்டு சாரா சென்று விட்டான்.

பிரமோத் புரியாமல் ஏகாவை பார்க்க, “இன்னைக்கு நைட் என்ன வக்கீல் சார்?” என்று கேட்டான் அவன்.

“நைட்டா?”

“ஆமா.. நைட் தான். பாஸுக்கும் ராகவிக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல? அப்ப இன்னைக்கு நைட் என்ன?”

சட்டென விசயம் புரிந்தது போல் முகத்தை மாற்றியவன், உடனே குழம்பினான்.

“அதுக்கும் டாக்டருக்கும் என்ன மேன் சம்பந்தம்?”

“பாஸ் வயிறுல குண்டு பட்டுச்சுல?”

“ஆமா..”

“தையல் போட்டு இப்ப தான சரியாச்சு?”

“ஆமா..”

“அதான் காரணம்”

ஏகாம்பரம் சொல்லி விட்டு சென்று விட்டான். பிரமோத் நாக்கை கடித்துக் கொண்டு ஓடி விட்டான்.

இரவு வர எல்லோரும் கிளம்பிச் சென்றனர். ஏகாம்பரமும் பிரமோத்துடன் கிளம்பி விட, வீடு வெறுமையானது.

ராகவி சமையலறை மேடையில் அமர்ந்திருந்தாள். எல்லோரும் இருக்கும் வரை சேலை கட்டியிருந்தவள், கிளம்பியதும் உடனே சுடிதாருக்கு மாறி விட்டாள்.

“செம்ம வெயிட்டு அந்த நகையும் சேலையும்..” என்று புலம்பிக் கொண்டே மாற்றி விட்டு வர, சாரா காபி போட்டுக் கொண்டிருந்தான்.

“நீங்க மாத்தல?”

“அப்புறமா மாத்திக்கலாம்.” என்றவன் அவள் கையில் காபியை கொடுத்து, மாடிக்கு அழைத்துச் சென்றான்.

அறைக்குள் செல்லாமல் பால்கனி பக்கம் சென்று நின்றனர். வெயில் காலம் என்பதால் ஏசி ஓடிக் கொண்டிருக்க, கதவை திறக்காமல் உள்ளேயே அமர்ந்து கொண்டனர்.

காலையிலிருந்து இருந்த அலுப்புக்கு, காபி குடிப்பது நன்றாக இருந்தது ராகவிக்கு.

“ம்ம்.. ஹப்பா.. நேத்து இருந்து ஒரே வேலை பாஸ்.. இப்ப தான் ரிலாக்ஸா இருக்கு” என்றாள்.

“என்ன வேலை?”

“மேக் அப் செக் பண்ணுறது.. மெகந்தி போடுறது.. ஏகப்பட்ட வேலை. சொந்தகாரவங்க வேற வந்துட்டாங்களா.. பேசிட்டே இருந்தோம். அண்ணியும் நானும் நிறைய வேலை பார்க்கல தான். ஆனாலும் வேலை இருந்துட்டே இருந்துச்சு. இப்ப தான் ஃப்ரியா உட்கார்ந்து காபி குடிக்க முடியுது”

“காபி நல்லா இருக்கா?”

“சூப்பரா இருக்கு பாஸ். ஆனா அண்ணி நைட் காபி குடிக்க விட மாட்டாங்க. தூக்கம் வராதுனு சொல்லுவாங்க”

“அதுக்கு தான் கொடுத்தேன்” என்றவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, தன்னுடைய காபியை உறிஞ்சினான்.

முதலில் புரியாமல் திரும்பியவள், புரிந்ததும் தலையை கோப்பைக்குள் விடுவது போல் திரும்பிக் கொண்டாள்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, சாராவே ஆரம்பித்தான்.

“நாம கம்பெனி ஆரம்பிக்கிறது தெரியும்ல?”

“ம்ம்.. சொன்னீங்களே”

“அதுல உன்னையும் ஒரு பார்ட்னரா போட்டுருக்கேன்”

“வாட்? பாஸ்.. நான் எதுக்கு?”

“என் லைஃப்ல பார்ட்னரா இருக்க மாதிரி அதுலயும் இரு.”

“எனக்கு ஒன்னும் தெரியாது”

“கத்துக்கலாம்”

“சொதப்பிட்டா?”

“சரி பண்ணிக்கலாம்”

“ஏன் இப்படி ஒரு முடிவு?”

“இது நான் இப்ப எடுத்தது இல்ல. முதல் தாலி கட்டும் போதே எடுத்துட்டேன்”

“ஹான்?”

“அன்னைக்கு நீ ஜாதகத்த பத்தி சொன்னப்போ.. பெருசா ஒன்னும் நம்பிக்கை இல்ல. ஆனா நீ அழுத பாரு.. அது என்னை ரொம்ப பாதிச்சுடுச்சு” என்றவன், அவள் கையைப்பிடித்து எழுப்பி தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

“நைட் ரொம்ப நேரம் யோசிச்சேன். உன் ஜாகத்தால என் உயிர் போனா அத பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா என்னால உனக்கு ஆபத்து வருமே? அத மட்டும் எப்படியாவது சரி பண்ணனும்னு யோசிச்சேன். என் கிட்ட இருக்க இல்லீகல் பணம் தொழில் எல்லாம் தான முதல் காரணம்.. அத லீகலா மாத்திடனும்னு முடிவு பண்ணேன். அப்படி நான் மாத்திட்டா, அரசாங்கத்துக்கு நிறைய கணக்கு காட்டனும். அத பார்த்துக்கலாம். பிரமோத் அதுக்கு ஹெல்ப் பண்ணுவான். பட் அத உடனே மாத்த முடியாது. லேட்டாகும். அது வரை உன்னை விட முடியாதுனு தோனுச்சு. அதான் உடனே தாலிய வாங்கி கட்டிட்டேன்.”

“அதுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம்?”

“ஒரு காரணம் வேணும் எனக்கு. நீ எனக்கு பிடிச்ச பொண்ணா மட்டும் இருக்கும் போது, எனக்கு எதையும் மாத்திக்க தோணல. ஆனா என் பொண்டாட்டியாகிட்டா? உன்னை காப்பாத்தவாச்சும் உடனே வேலை செய்வேன்னு தோணுச்சு. அப்புறம் உன்னை அப்படியே விட்டா, உங்கண்ணன் என் மனச கலைச்சு விட்டுருவாரு. பெரிய ஆளு அவரு. ரெண்டே வார்த்தையில என் மனச மாத்திடுவாரு. அவரும் மாத்தாம இருக்கனும்னா, தாலி தான் பெஸ்ட் ஆப்ஷன். அதான் கட்டினேன்”

“அண்ணன் சொன்னா? மாறிடுவீங்களா?”

“உங்கண்ணன் பேச்ச பத்தி உனக்கு தெரியாது. நாலு வார்த்தை தான். மறுபடியும் வாய திறக்கவே முடியாத அளவு பேசுவாரு. நீ பார்த்தது எல்லாம் பாசக்கார அண்ணன். நான் பார்த்தது எல்லாம் எஸ்பி கந்தன். ஆளு செம்ம டெரர் பீஸு. குடும்பத்து கிட்ட தான் இவ்வளவு பொறுமை”

“என் அண்ணன்ல.. அப்படி தான் இருப்பாரு” என்று ராகவி பெருமையாக சொல்ல, அவளது கன்னத்தை கிள்ளி அதில் முத்தமிட்டான்.

“ஆமா உன் அண்ணனே தான். ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் நான் மதிக்கிற போலீஸ்னா அவர் மட்டும் தான்”

ராகவி சந்தோசமாக புன்னகைத்துக் கொண்டாள்.

“சரி.. அப்புறம்?” என்று அவளே கேட்க, “அப்புறம் தாலிய கட்டுனதுக்காகவே பறந்து பறந்து வேலை செஞ்சேன். அப்படி வேலை செய்யும் போது, உன் கூட இருக்க முடியாது. அது உனக்கு நல்லது இல்லனு, மச்சான் கிட்ட அனுப்பி விட்டேன்.‌ நீ என்னடானா மயங்கி விழுந்து எல்லாரையும் பதறடிச்சுட்ட” என்றவன், அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“அப்ப ரொம்ப பயந்துட்டேன் பாஸ். ஜாதக விசயத்துல”

“அதான், இந்த வயசுக்கு மேல கல்யாணம் பண்ணா தான் வாழ்க்கை நிலைக்கும்னு ஜோசியர் சொல்லிட்டாரே. நீ தப்பா கேட்டதுல தான் அப்படி ஆகிடுச்சு. பட் இப்ப சரியாகிடுச்சுல? ஆனா இப்பவும் ரெண்டு தாலி தான். ரெண்டையும் நான் தான் கட்டினேன்”

“ஆமா ஆமா.. வேற யாரு கட்டுவா?”

“சரி நம்ம வேலைய முடிச்சுட்டு கூப்பிட்டுக்கலாம்னு, அவசர அவசரமா வேலை பார்த்துட்டு இருந்தா, ரெய்டு வேற வந்து கொஞ்சம் சொதப்புச்சு. ஆனா பிரமோத் காப்பாத்திட்டான். அப்புறம் அடி பட்டு ஹாஸ்பிடல்.. டிரீட்மெண்ட் இப்ப கல்யாணம்…”

“உங்களோட அனுபமாவுக்கும் அடி பட்டுச்சுல?”

“ஆமா.. ஆனா அவளுக்கு தோள்ல பட்டதால, கைய சரியா யூஸ் பண்ண முடியாதுனு சொல்லியிருக்காங்க. ஒரு வருசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. இன்னும் லீவ்ல தான் இருக்கா”

“ஆனா மாமா கேஸ் அப்போ அவங்கள பார்த்தேனே?”

“அவ தான முதல்ல இந்த கேஸ்ல இருந்தா.. அதுனால அவளையும் கோர்ட்ல கூப்பிட்டுருந்தாங்க. ஆனா கேஸ் தான் அவங்களுக்கு சாதகமா முடிஞ்சதே”

“அதான் எனக்கும் சாக். ஏன் அப்படி? நீங்க எதுவும் பண்ணலயா? மாமாவ தான் குற்றவாளினு கோர்ட்ல தீர்ப்பு சொல்லி, அவரோட வீட்ட கூட கோர்ட் எடுத்துக்கிச்சு”

“எல்லாம் சிவாவோட மனம் ஆறட்டும்னு தான் விட்டேன்”

“சிவாக்கு என்ன?”

“அவனோட அம்மாவ, அப்பாவோட எதிரிங்க தான் வெட்டி கொன்னாங்க. எந்த தப்புமே செய்யாம அவங்க செத்தத, சிவாவால ஏத்துக்கவே முடியல. அதுக்கு காரணம் அப்பானு நினைச்சான். அதான் இத்தனையும் பண்ணிருக்கான். அவன் மனசு ஆறட்டும்னு தான், கோர்ட்ல அவன் இஷ்டப்படி விட்டேன். பிரமோத்தும் விட்டான். சிவாவும் கேஸ் முடிஞ்சதும், மறுபடியும் பஞ்சாப் கிளம்பி போயிட்டான்”

“அவனுக்கு உங்க மேல கோபம் தான?”

“சின்ன வயசுல ஆரம்பிச்சது. அது இந்த ஜென்மத்துல மாறாது. அத மாத்த ட்ரை பண்ணுறதே முட்டாள்தனம் தான். அவனுக்கு பிடிச்சத செஞ்சுட்டு வாழட்டும். நான் என் வேலைய பார்க்குறேன்”

“உங்க கிட்ட அவன் பேசலயா?”

“பேசுனான். தீர்ப்பு வந்து கிளம்பும் போது, வந்து பேசுனான். நான் என் பிஸ்னஸ மாத்துறேன்னு தெரிஞ்சதால தான், அவன் என்னை சும்மா விடுறதா சொல்லிட்டு போனான். நானும் இதே வேலையில இருக்கது அவனுக்கு பிடிக்கல போல”

“திரும்ப வர மாட்டானா?”

“வந்தா பார்க்கலாம். இல்லனா அங்கயே செட்டில் ஆகட்டும். அவன் வாழ்க்கை அவன் முடிவு”

“ம்ம்”

சிவாவிற்கு சாராவை அப்படியே விட விருப்பமில்லை தான். ஆனால் அவனே தொழிலை மாற்றி மாற நினைக்கும் போது, அவனை எதாவது செய்தால், அவனது மனசாட்சியே அவனை கொன்று விடும். தாயின் சாவுக்கு பழி வாங்கி விட்டான். வைரவரின் தொழிலை அழித்து விட்டான். அவர் கொள்ளையடித்த சொத்துக்களை, ஏழை மக்களுக்கும் தேவையானவர்களுக்கும் உதவ பயன்படுத்துகிறான். இதுவே அவனது அன்னையின் மனதை குளிர்வித்திருக்கும் என்று நம்பினான். அதனால் தான் அந்த வழக்கு முடிந்ததுமே, கிளம்பிச் சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கு மீண்டும் சாராவை சந்திப்பதில் சுத்தமாய் விருப்பமில்லை. சந்திக்கக்கூடாது என்று தான் கிளம்பி விட்டான்.

“சரி.. இப்ப நம்ம விசயத்துக்கு வருவோமா?”

“என்னாது?”

“உங்க அண்ணி உனக்கு எதுவும் சொல்லலயா?”

“எத பத்தி?”

சாரா அறையின் பக்கம் கண்ணை காட்டினான். விசயம் உடனே புரிந்து புன்னகைத்தவள், “சொன்னாங்களே” என்றாள்.

“என்னாது?”

“அத இப்படி உட்கார்ந்துட்டு சொல்ல முடியாது” என்றவள் எழுந்து நின்றாள்.

“முதல்ல புருஷன் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்னு சொன்னாங்க” என்றவள் அவன் காலில் விழ, “ஏய்..” என்று பதறி நிறுத்தினான்.

“உஸ்..” என்றவள், “அடுத்து பால் சாப்பிடனும்னு சொன்னாங்க” என்றாள்.

“பாலெங்க?”

“அத தான் காபி போட்டு குடிச்சுட்டோமே?”

“ஆமா.. அடுத்து..?”

“அடுத்து…” என்றவள் அறைக்கதவை பார்த்து விட்டு, பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“ஒழுங்கா கதவ பூட்டிட்டு தூங்க சொன்னாங்க” என்றவள், ஓடிச்சென்று கதவை திறந்து, உள்ளே ஓடி கதவை பூட்டி விட்டாள்.

“அடிப்பாவி” என்ற சாரா சிரித்து விட்டு, உடனே தன்னிடமிருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்றான்.

கதவை பூட்டி விட்டு அவன் தட்டுவதற்காக காத்திருந்த ராகவி, அவன் திறந்து வரவும் அதிர்ந்து பார்த்தாள்.

“என் ரூம்ல.. என்னைய வெளிய விட்டு பூட்டுவியா நீ?” என்று கேட்டவன் அவளை பாய்ந்து பிடித்துக் கொள்ள, “பாஸ்.. பாஸ்.. அண்ணி தூங்க தான் பாஸ் சொன்னாங்க” என்றாள்.

“உங்க அண்ணி சொன்னத விடு.. உங்க அண்ணன் ஒன்னு சொன்னாரு.. அத கேளு”

“என்ன சொன்னாங்க?”

“டாக்டர் கிட்ட போய் கேட்டுட்டு வந்தியானு கேட்டாரு”

“ஹான்?” என்று புரியாமல் விழித்தவளுக்கு அவன் விளக்கம் கொடுக்க, சிவந்து விட்டாள்.

“அய்யய்யோ நான் கேட்கல” என்றவளை வாரி அணைத்தவன், “நீ உன் அண்ணி சொன்னத கேளு நான் என் மச்சான் சொன்னத கேட்குறேன்” என்றவன், அவள் இதழ்களை சிறை செய்தான்.

சுபம்.

One Comment

Leave a Reply