சாரா 8
![]()
அனுசயா, அடுத்த நாள் மாலை வைரவரை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றிருந்தாள். அவளை பார்த்ததும் வாசலில் நின்றிருந்தவர்கள் தலையசைத்து உள்ளே அனுமதித்தனர்.
அனுசயா.. இருபத்தி மூன்று வயதான பெண். பார்க்க உயரமாகவும், எப்போதும் சேலை அணிவதால் வயதை விட அதிக முதிர்ச்சியாக தெரிவாள். அக்கவுண்ட்ஸ் படித்து, வைரவரின் ஒரு தொழிலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்தாள்.
அவளுடைய தாய், தந்தை, குடும்பம் எல்லாம் பிறந்த ஊரில் இருந்தது. இங்கு வேலை செய்ய வந்தவள், மிகப்பெரிய இடத்தை சட்டென எட்டி இருந்தாள்.
தேவையில்லாத பகையை அங்காங்கே உருவாக்கி வைத்திருப்பது வைரவரின் இயல்பு. அப்படி ஒரு பகை, புகைச்சலில் வைரவரின் தொழிலை கசியவிட்டது.
அவர்களின் தலையாய வேலையே, கடல் சார்ந்த பொருட்களை கடத்துவது தான். விலைமதிப்பற்ற பொருட்களை இந்தியாவிற்கு தானமாக கொடுத்து விடலாம். ஆனால் அதனால் அவருக்கு லாபமில்லையே?
லாபம் கிடைக்கும் இடத்தில் விற்று பணத்தை பெற்றுக் கொண்டார். உள்நாட்டு வளங்களை சுரண்டி விற்பது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால் அதை சட்டத்தை கொண்டே செய்தால்? அதை தான் வைரவர் செய்தார்.
அப்படி செய்வதற்கான ஓட்டைகளை விட்டது யார் தவறு? இந்த கேள்வி நீண்ட விவாதத்தை தான் இழுத்து வரும்.
வைரவரின் கையில், பல மீன் பிடி கப்பல்களும், சில சரக்கு கப்பல்களும் உண்டு. அது போக, அதிநவின கப்பல்கள் வெளிநாட்டு ஆட்கள் பெயரில் அவருடையதாக உலாவிக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிலிருந்து குவியும் பொக்கிஷங்கள், கடல் வழியாகவே கை மாற்றப்படும். அப்படி மாற்ற முயற்சிக்கும் போது தான், விசயம் கசிந்து விட்டது.
அன்று வேலையில் இருந்த அனுசயா, கணக்கை முடித்து அலுவலகம் விட்டுக் கிளம்பும் போது, ஒருவன் திருட்டுத்தனமாக செல்வதை கண்டு கொண்டாள்.
ஓடிச் சென்று விசயத்தை அவளுடைய மேலதிகாரியிடம் சொல்ல, அவர் கேமராவின் மூலம் யாரென்று அறிந்தார். அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன் தான். அவனது கைபேசி உடனே ஒட்டுக்கேட்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முழுவதும் தகவல் கிடைக்காமல் போக, மறுநாள் மாட்டிக் கொண்டான்.
வைரவரின் பகையாளி ஒருவனுக்கு உளவு சொல்லி இருக்க, அவன் அரசாங்கத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்ப, விசயம் கை மீறும் முன்பு அவசரமாக எல்லாவற்றையும் மாற்றி தப்பினர்.
அனுசயா மற்றும் அவளுடைய மேலதிகாரியால் தான் இது நடந்தது என்பதால், அனுசயா வைரவரின் முக்கியமான கணக்கு வழக்குகளை பார்க்க அமர்த்தப்பட்டாள். அதாவது அரசாங்கத்தின் கண்ணிலிருந்து மறைக்கப்பட்ட வரவு செலவு கணக்குகள் அவள் கைக்கு வந்தது. அவளுடைய மேலதிகாரிக்கும் பதவி உயர்வு கிடைத்தது.
அன்றிலிருந்து இன்று வரை, கனகச்சிதமாக கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அனுசயா.
அவளை தாண்டி ஒரு குண்டூசி கூட போகாது என்ற நிலைமைக்கு வந்திருந்தாள். ஆனால்?
வைரவரை சந்தித்தவள், “எப்படி இருக்கீங்க சார்?” என்று விசாரித்தாள்.
“இருக்கேன்மா. உட்காரு”
“இருக்கட்டும் சார்” என்றவள், அன்று கொண்டு வந்ததை அவரிடம் கொடுத்து விட்டு, அவருடைய பதிலுக்காக காத்திருந்தாள்.
அவரும் படித்து முடித்து வேலையைப் பற்றிப் பேசி முடித்தார்.
“சிவா பத்தி எதாவது தெரிஞ்சதா?” என்று கண்ணில் எதிர்பார்ப்போடு அவள் கேட்க, இடவலமாக தலையசைத்தார் வைரவர்.
அனுசயாவின் முகம் விழுந்து விட்டது. ஆனால் உடனே அதை மாற்றிக் கொண்டு, உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டாள்.
“நீங்க தேடலாமே?”
“என் புள்ளைய காணோம்னு தெரிஞ்சா, அவன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது”
வைரவர் சாதாரணமாக சொன்னாலும், அவரது கூற்றில் முழு உண்மை இருந்தது. வைரவர் பாதுகாப்பில் அவருடைய இரண்டாவது மகன் இல்லை என்று தெரிந்தால்? சுற்றியிருக்கும் ஆயிர எதிரிகளில், எந்த எதிரியின் அம்பு சிவராஜ்ஜின் உயிரைக்குடிக்கும் என்று கணிக்க முடியாது.
“அந்த பொண்ணோட டீடைல்ஸ் எதாவது கிடைச்சதா?”
“அத பத்தி தான் இப்ப விசாரிச்சுட்டு இருக்காங்க.” என்றவர் அனுசயாவின் முகத்தை பார்த்து விட்டு, “காபி சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“வேணாம் சார். இப்ப குடிக்க முடியாது. ஒரு விசயம் பேசனும்”
என்னவென்று தெரிந்தாலும், அனுமதி கொடுப்பது போல் தலையசைத்தார்.
“ஏற்கனவே ஒரு பொண்ணால தான் சிவா காணாம போயிட்டாரு. இந்த சாரா ஏன் இப்படி பண்ணுறார்? எதோ பேர் தெரியாத பொண்ண வீட்டுக்குள்ள விட்டுருக்காங்க”
“பேரு தெரியும். ராகவி” என்று அவர் சொல்ல, “ஆனா எனக்கு இது கொஞ்சமும் சரியா படல” என்று நேரடியாகவே சொல்லி விட்டாள்.
“நீ சிவா விசயத்துல கூட பொறாமை படலயே.. சாரா விசயத்துல என்னாச்சு உனக்கு?”
“சார்.. இது பொறாமை இல்ல. அக்கறை. அப்புறம் நான் ஏன் சிவா சார் விசயத்துல பொறாமை படனும்?”
ஒன்றும் அறியாதவள் போல் கேட்டு வைத்தாள்.
“அந்த பொண்ணு.. ராகவிய நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாத. போய் வேலையைப் பாரு”
“ஓகே சார்” என்றதோடு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டாள்.
வைரவரும் இதை எப்படிக் கையாள்வது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தார். காரில் சென்று கொண்டிருந்த அனுசயாவிற்கு, மனமெல்லாம் சிவாவிடம் இருந்தது. அவளது கைபேசியை எடுத்தாள். அதில் சிவராஜின் படங்களை ரகசியமாக மறைத்து வைத்திருந்தாள். அதை எடுத்தவள், சிவராஜ்ஜை சில நிமிடங்கள் வெறுமையாக பார்த்து விட்டு, பிறகு பாதையில் கவனத்தை வைத்தாள்.
........
தூங்காமல் அமர்ந்து இருந்தாள் ராகவி. இரவு, நம்பி தூங்குவதா? வேண்டாமா? என்று கவலையாக இருந்தது.
நோயின் தாக்கத்தில், நர்ஸ் அருகே இருந்த தைரியத்தில் தூங்கி எழுந்து விட்டாள். இப்போது திருமணம் பற்றி எல்லாம் சாரா பேசி வைத்ததில், அவளுக்கு பயத்தில் நா உலர்ந்தது.
கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளது அறையில் எரிந்த விளக்கை பார்த்து விட்டு, சாரா வந்து கதவை தட்டினான்.
“யாரு?” என்று அவள் பதறிப்போய் கேட்க, “கதவ திற” என்ற கட்டளை தான் வந்தது.
சாராவின் குரலை கேட்டதும், உடல் வெளிப்படையாக தூக்கிப்போட்டது.
“எதுக்கு?” என்று நடுங்கும் குரலில் கேட்க, அவன் பதில் சொல்லவில்லை.
சத்தமில்லாமல் போகவும், பயந்து பயந்து வந்து கதவை திறந்தாள். அதையும் முழுதாக திறக்காமல், தலையை மட்டும் வெளியே விட்டு எட்டிப்பார்த்தாள்.
“என்ன சார்?”
“தூங்காம என்ன பண்ணுற?”
“தூங்கிட்டு தான் இருந்தேன்”
“லைட்ட போட்டுட்டேவா?”
“எனக்கு லைட் எரிஞ்சா தான் தூக்கம் வரும்”
“அப்ப கரெண்ட் பில்க்கும் சேர்த்து பணம் வாங்குவேன் பரவாயில்லயா?”
“இப்பவே லைட்ட ஆஃப் பண்ணிடுறேன் சார்” என்றவள் உடனே கதவை அடைக்க போக, தடுத்து நிறுத்தினான்.
அவள் பயந்து போய் பார்க்க, “உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா வெளிய வா” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
‘என்ன சொன்னாரு?’ என்று புரியாமல் அவள் குழம்பி நின்றிருந்தாள்.
மெல்ல மெல்ல புரிய, ‘எதுக்கோ வெளிய கூப்பிடுறாரு. ஆனா எதுக்குனு தெரியலயே?’ என்று சந்தேகத்துடன் இங்கும் அங்கும் நடந்தாள்.
“எப்படியும் நடு ராத்திரி தாலி கட்ட முடியாது. கட்டுனாலும் அந்த கல்யாணம் செல்லாதுனு சொல்லிடலாம். இல்லனா தாலிய கழட்டி எறிஞ்சு… ம்ஹும்.. அதெல்லாம் படத்துல பார்க்க நல்லா இருக்கும். இங்க பண்ணா, ரௌடி சார் கைய உடைச்சு சுறாவுக்கு ஃபிரன்ச் ஃப்ரைஸா போட்டுருவாரு. கட்டுறதுக்கு முன்னாடி கால்ல விழுந்துடலாம். ஆமா அவரு கல்யாணம் பண்ண தான் கூப்பிடுறாரா? இல்ல நாமலா யோசிக்கிறமோ?”
ஐந்து நிமிடம் யோசனையில் கடத்தி விட்டு, பிறகு ஒரு முடிவோடு கதவை திறந்து வெளியே வந்தாள்.
சாரா ஹாலில் தான் நின்றிருந்தான். அவளது வரவில் திரும்பிப் பார்த்தான்.
“என்ன விசயம் சார்?” என்று அவள் கேட்க, “நான் உனக்கு ரௌடியா?” என்று கேட்டான்.
பகீரென அதிர்ந்து போனவள், ‘அடப்பாவி ஏகாம்பரம். போட்டுக் கொடுத்திட்டியா?’ என்று அவனை தான் திட்டினாள்.
“ஹேய்..” என்று சாரா சொடக்கிட, “ஹான் சார்?” என்றாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லுற பழக்கம் இல்லையா?”
“இல்ல சார்.. ச்சீ.. அப்படி எல்லாம் இல்ல சார். உங்கள போய் ரௌடினு சொல்லுவேனா சார்..? நீங்க ரொம்ப நல்லவர் சார். என் உயிர காப்பாத்தி இருக்கீங்க சார்”
மூச்சுக்கு ஒரு முறை சார் போட்டவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தாலும், “நம்புற மாதிரி இல்லயே..” என்று இழுத்தான்.
‘நடு ராத்திரி கூப்பிட்டு வச்சு தான் விசாரிக்கனுமா?’ என்று அவள் உள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள்.
அப்படி ஒன்றும் நேரம் கடந்து விடவில்லை. அவளுக்குத்தான் பயத்தில் எல்லாம் தவறாக இருந்தது.
“அத அப்புறம் கவனிக்கிறேன். உனக்கு ஒரு மாமா இருக்கான்ல?”
“ஆமா”
“அவன் பேரென்ன?”
“முத்து.. வெளக்க மாத்துக்கு பட்டுக்குஞ்சும்னு பேரு வைச்ச மாதிரி, குணங்கெட்டவனுக்கு பேரு முத்தாம்” என்று கூறி நொடித்துக் கொண்டாள்.
“அது இவன் தான?” என்று தன் கைபேசியை எடுத்துக் காட்ட, “இவன் தான்” என்றாள் கோபமாக.
“இவன பார்த்தா என்ன செய்வ?”
“கொலை பண்ணுவேன். ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லனு கழுத்த நெரிச்சு கொண்ணுடுவேன்”
“அவ்வளவு கோபமா?”
“என்னை விக்க பார்த்தவன கொஞ்சவா செய்வாங்க? என்னைக்காச்சும் அவன பார்த்தா, அந்த இடத்துலயே அவன வெட்டிப்போடனும்னு இருக்கேன்”
“அவன் தான உனக்கு இருக்கே ஒரே உறவு?”
“இப்படி ஒருத்தன உறவுனு சொல்லுறத விட, நான் அனாதைனு சொல்லிக்கிறேன்”
அவள் கோபமாக பேசி வைக்க, “அப்ப அவன் செத்தாலும் வருத்தப்பட மாட்ட?” என்று கடைசியாக உறுதி படுத்திக் கொள்ள கேட்டான்.
அவள் தலையை ஆட்ட, உடனே கைபேசியை காதில் வைத்தவன், “முடிச்சுடு” என்று விட்டு வைத்தான்.
முதலில் புரியாமல் பார்த்த ராகவி, புரிந்ததும் அதிர்ந்து போனாள்.
“எத? எத முடிக்கனும்?”
“உன் மாமா கதைய தான். நான் தான் ரௌடி ஆச்சே. நானே அவன கொல்லுறேன். நீ கொன்னு ஜெயிலுக்கு போக வேணாம்”
நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சியை ஜீரணித்தவள், “அப்ப அந்தாளு உங்க கிட்டயா இருக்கான்?” என்று கேட்டாள்.
“ஆமா. நீ சொன்னதும் தேடச்சொன்னேன். இப்ப தான் கிடைச்சான்”
“அவன கொல்ல போறீங்களா?”
“ஏன்? நீயும் கொல்லனும்னு தான சொன்ன?”
“நான் சொன்னா ரீசன் இருக்கு. நீங்க ஏன் கொல்லனும்?”
“நீ ஜெயிலுக்கு போயிட்டா யாரு எனக்கு பணத்த தருவா? அதான் நானே கொன்னுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“அதெல்லாம் உங்க கடன நான் அடைச்சுடுவேன்” என்று வீராப்பாய் பேசியவள், சட்டென விசயம் புரிந்து ஆச்சரியமாக பார்த்தாள்.
“எனக்காகவா அவன கொல்லுறீங்க?” என்று கேட்டவள் குரலில் அதிர்ச்சியை விட, ஆச்சரியம் தான் நிறைந்து இருந்தது.
“எனக்காக தானா? சொல்லுங்க சார். எனக்காகவா?” என்று மீண்டும் கேட்க, அவன் அவளை ஆழ்ந்து பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை.
“உங்களுக்கு அவன கொல்ல காரணமே இல்ல. எனக்காக பண்ணுறீங்களா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டவளுக்கு, திடீரென கண்கள் கலங்கியது.
அவளுக்காக யாரும் எதுவும் செய்து அவளுக்கு பழக்கம் இல்லை. ஒருவன் அவளுக்கு தவறிழைத்தான் என்பதற்காக, சாரா அவனை கொல்லவும் துணிந்து இருக்கிறான்.
“சார் ப்ளீஸ் சொல்லுங்க. எனக்காகவா?” என்று கெஞ்சலோடு கேட்க, “ஆமானு வச்சுக்கோ” என்றான்.
கலங்கிய கண்களோடு புன்னகைத்தவள், “எனக்காக இது வரை யாருமே எதுமே பண்ணல. தாங்க்ஸ். ஆனா இப்படி கொலை பண்ணுறதுல உங்களுக்கு பிரச்சனை வந்துடாதே?” என்று அக்கறையாக கேட்டாள்.
“நான் கொன்னுட்டு சுறாவுக்கு சாப்பாடா போட்டுருவேன். அதுனால பயப்படாம போய் தூங்கு” என்றவன் அவள் திருதிருவென விழிப்பதை கண்டு கொள்ளாமல், புன்னகையை மறைத்துக் கொண்டு சென்று விட்டான்.
தொடரும்.
