சாரா 9
![]()
அடுத்த நாள் காலையில், அரை தூக்கத்தில் எழுந்து வந்து கதவைத்திறந்தாள் ராகவி. ஏகாம்பரம் தான் எழுப்பி இருந்தான்.
“போய் குளிச்சுட்டு வா. சமைக்கனும்” என்று கூற, “இந்த நேரத்துலயா?” என்று கண்ணை கசக்கியபடி கேட்டாள்.
“பின்ன எப்ப? போ” என்று அதட்டி விட்டுச் செல்ல தூக்கத்துடனே சென்று குளித்து விட்டு வந்தாள்.
காலையில் வேலைக்கு கிளம்பும் போது சாப்பிட்டு விட்டு செல்வதை பல மாதங்களாக மறந்திருந்தாள். பாட்டி இருக்கும் வரை அவளை சாப்பிட வைத்து தான் அனுப்புவார். அவர் மறைந்ததும், ராகவி காலை உணவை மதித்தது இல்லை.
குளித்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவள், ஏகாம்பரத்தை பார்த்து முறைத்து விட்டு வேலையை ஆரம்பித்தாள்.
அவளது முறைப்பை ஏகாம்பரம் தான் விசித்திரமாக பார்த்தான்.
அவனுக்கு அவளிடம் பேச பிடித்திருந்தது. எப்போதும் ஏகாம்பரம் வீட்டில் தனியாகத்தான் இருப்பான். பூபதியும் சாராவும் வெளியே கிளம்பி விட்டால், காசியும் அவர்களோடு சென்று விடுவான். ஏகாம்பரம் தனியாய் வீட்டு வேலைகளை பார்த்து விட்டு, தொலைகாட்சியில் எதாவது விளையாட்டை பார்த்து நேரத்தை ஓட்டுவான்.
தனிமையில் கிடந்தவனுக்கு, ராகவி வாய் மூடாமல் பேசுவது பிடித்திருந்தது. அதனால் அவளது முறைப்பை கண்டு கோபம் கொள்ளாமல், தானாகவே பேசினான்.
“வாய்ல என்ன வச்சுருக்க?” என்று கேட்க, “ஒன்னுமில்லயே” என்றாள்.
“இவ்வளவு நேரம் நீ பேசாம இருக்க மாட்டியே.. என்ன விசயம்?”
“உங்க கூட இனி நான் பேச மாட்டேன். என் கிட்ட நீங்களும் பேசாதீங்க”
முகத்தை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு அவள் கூற, ஏகாம்பரத்திற்கு சிரிப்பு தான் வந்தது.
“அதெல்லாம் உன்னால முடியாது”
“எது முடியாது?”
“பேசாம இருக்கது தான்”
“அதெல்லாம் இருப்பேன்”
“உன்னால அது முடியாது ராகவி. வீணா ட்ரை பண்ணாத”
“ஹலோ கிண்டலா? உங்க மேல கோபமா இருக்கேன். கோபம் போற வரை உங்க கிட்ட நான் பேச மாட்டேன்” என்றவள், வெடுக்கென திரும்பிச் சென்று உணவு மேசையை துடைக்க ஆரம்பித்தாள்.
“காலையில எழுப்பி விட்டதுக்கா கோபம்?” என்று அவன் சிரிப்போடு கேட்க, “அது இல்ல.. நேத்து நைட்டு இருந்தே கோபம் தான்” என்றாள்.
“நைட்டா? என்ன கோபம்?”
“நீங்க சீட்டர். உங்க கிட்ட பேசவே கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்”
“அப்படி என்ன பண்ணேன்?”
“உங்க சார் கிட்ட போய் நான் ரௌடினு சொன்னத போட்டுக் கொடுத்துட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி பேசிட்டு இருக்கீங்கள்ள? உங்க கிட்ட இனிமே எதையும் சொல்ல மாட்டேன்”
ராகவி கடுப்பாக சொல்லி விட்டு வெடுக்கென திரும்பிக் கொள்ள, ஏகாம்பரம் அவசரமாக யோசித்தான். சாரா தான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். நான் எதையும் தனியாக சொல்லவில்லை என்று சொன்னால், இந்த பெண் அவன் மீது வைத்த நம்பிக்கையை இழந்து விடுவாள்.
என்ன செய்வது? என்று அவசரமாக யோசித்து, ஒரு பதிலை கண்டு பிடித்தான்.
அலன் திடீரென பேசாமல் இருக்கவும், “என்ன மாட்டிக்கிட்டோம்னு பயமா?” என்று கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தாள்.
“இல்லயே.. நீ என் பாஸ என் முன்னாடியே ரௌடினு சொன்னத நான் பாஸ் கிட்ட சொல்லி தான ஆகனும்? சொல்லாம விட்டா தான் தப்பு”
“அடப்பாவி..! போட்டுக் கொடுத்தது சரிங்குறீங்க?”
“இது போட்டுக் கொடுக்குறது இல்ல. என் பாஸ யார் என்ன சொல்லி திட்டுனாலும் நான் என் பாஸ் கிட்ட போய் சொல்லிடுவேன்.”
“இதெல்லாம் ஒரு பொழப்பு..? இனிமே உங்க கிட்ட பேசுனா தான போட்டுக் கொடுப்பீங்க? நான் பேசவே போறது இல்ல” என்றவள் வாயை கப்பென மூடிக் கொண்டு, கையால் பெருக்கலும் வாய் மீது போட்டுக் கொண்டாள்.
அவளது செய்கை எல்லாம் ஏகாம்பரத்தை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது.
“சரி சரி வந்து இதெல்லாம் கட் பண்ணி கொடு. நீ ஒன்னும் பேசத்தேவையில்ல” என்றவன், “ஆமா எப்ப பாஸ் உன் கிட்ட சொன்னாரு?” என்று கேட்டான்.
“நேத்து..” என்று ஆரம்பித்து விட்டு, மீண்டும் அவசரமாக வாயை மூடிக் கொண்டாள்.
போட்ட சபதத்தை ஒரு நொடியில் மறந்து போனோமே என்று, தலையில் வேறு அடித்துக் கொண்டாள்.
“நேத்து..? நேத்து எப்ப?” என்று ஏகாம்பரம் அவளிடம் மீண்டும் கேட்க, அவள் தலையை உலுக்கினாள்.
“ஓஓ.. சொல்ல மாட்டியா?”
மேலும் கீழும் தலையாட்ட, “சரி விடு.. நேத்து நீ அவர் கடத்தல் பண்ணுறாருனு சொன்ன விசயத்த நான் சொல்லாம விட்டுட்டேன். இப்ப போய் சொல்லிட்டு வர்ரேன்” என்றவன் வெளியே திரும்ப, அவன் முன்னே ஓடி வந்து கையை விரித்து தடுத்தாள்.
“தள்ளு.. நான் போகனும்” என்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“நீ பேசலனா நான் சொல்ல தான் செய்வேன். தள்ளு” என்றவன் அவள் கையை இறக்க, “சரி சரி பேசுறேன்” என்று கடுப்பாக கூறினாள்.
“அப்படி வா வழிக்கு” என்றவன், “சொல்லு எப்ப சொன்னாரு?” என்று கேட்டபடி சமையலை ஆரம்பித்தான்.
“நேத்து நைட் கேட்டாரு. நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? எங்க என்னையும் கொன்னு சுறாவுக்கு போட்டுருவாரோனு பயந்துட்டே இருந்தேன்”
‘இவ சுறா கதைய விட மாட்டா’ என்று சலிப்பாக தலையாட்டியவன், “உன்னை சும்மாவா விட்டாரு?” என்று கேட்டான்.
“நான் அப்படி சொல்லவே இல்லனு சொன்னேனா.. உடனே நம்பிட்டாரு.
அதுனால என்னை எதுவும் பண்ணல” என்று பெருமையாக சொல்ல, “ஓஹோ” என்றான் ஏகாம்பரம்.
“ஆனா அந்த முத்த கொல்ல போறதா சொன்னாரு”
“முத்தா?”
“என் அம்மா கூட பிறந்த தருதலை.. அந்தாளு உன் பாஸ் கையில மாட்டிக்கிட்டான். அவரும் கொல்ல போறேன்னு சொல்லிட்டாரு. செத்து ஒழியட்டும். வீணா போனவன்”
அவள் ஆவேசாமாய் சாபம் விட்டுக் கொண்டிருக்க, ஏகாம்பரம் அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டிருந்தான்.
“அவன ஏன் பாஸ் கொல்லனும்?” என்று ஏகாம்பரம் கண்ணில் கூர்மையோடு கேட்க, “எனக்காக தான். என்னை அவன் அடிச்சான்ல.. அதான் கொன்னுட்டாரு.. ரௌடில ரொம்ப நல்ல ரௌடி சார்” என்று பெருமை பட்டுக் கொண்டாள்.
“நீ அவன கொல்ல சொல்லி பாஸ் கிட்ட கேட்டியா?”
“இல்ல. ஆனா நானே கொல்லுவேன்னு சொன்னேன். சார் தான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாரு”
“அவரு ஏன் உனக்காக பண்ணனும்?”
எதையோ சொல்ல வாயைத்திறந்தவள், உடனே அந்த கேள்வியை ஆழமாக யோசித்தாள்.
“ஆமா அவர் ஏன் எனக்காக கொல்லனும்?”
“என் கிட்ட கேட்டா? அவர் கிட்ட கேட்கலயா?”
“அவரு…..” என்று இழுத்தவள், “ஹான்.. நான் அவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா கடன அடைக்க முடியாம போயிடும்னு, அவரே பண்ணுறதா சொன்னாரு” என்றாள்.
சொல்லும் போது அவளுக்கே அதில் நம்பிக்கை இல்லை. கொலை செய்யும் அளவு அவள் தைரியசாலி எல்லாம் இல்லை. அவளுக்காக சாரா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஏன் செய்தான்?
கேள்வி அவளுக்குள்ளும் ஓட, பதிலை தீவிரமாக தேடினாள்.
“நேத்து இத கேட்கலயா அவர் கிட்ட?”
“இல்ல. அப்ப ரொம்ப சந்தோசமா இருந்துச்சா.. அதுல இது தோனவே இல்ல”
“சந்தோசமா?”
“ஆமா.. யாருமே இது வரை எனக்காக எதுவும் பண்ணது இல்ல. முதல் தடவ இவரு பண்ணுறாருனு சந்தோசப்பட்டேன்”
“ஒருத்தருக்காக ஒன்னு பண்ணனும்னா காசு கடன் கொடுக்கலாம். இல்ல வேற எதாவது பண்ணலாம். ஒருத்தருக்காக கொலை பண்ணுறது சாதாரணமா தோனுதா உனக்கு?”
ஏகாம்பரம் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கேட்க, அவளுக்கு அப்போது தான் இந்த விசயத்தின் தீவிரமே புரிந்தது.
“ஒரு வேளை உங்க சாருக்கு கொலை பண்ணுறது ஈசிங்குறதால அதையே எனக்கும் செஞ்சாரோ?” என்று கேட்டவளை, ஏகாம்பரம் இப்போது கொலை வெறியோடு பார்த்தான்.
“அப்படியே சுடுதண்ணிய எடுத்து ஊத்திடுவேன். அவருக்கு கொலை பண்ணுறது ஈசியா?”
“இல்ல இல்ல அவர் ஒரு டான்ல? அதனால அப்படி இருக்குமோனு….. சரி சரி முறைக்காதீங்க. நான் அவர் கிட்டயே கேட்குறேன்” என்று முடித்தாள்.
“உனக்கு சந்தேகமா இல்லையா?”
“சந்தேகமா தான் இருக்கு. ஆனா அவர் எனக்காக ஏன் செய்யனும்னு தான் புரியமாட்டேங்குது. அவர் கிட்டயே கேட்கிறேன்”
“எப்போ?”
“இப்போ தான்.” என்றவள் அதே போல் சாரா வந்து சாப்பிட அமரும் போது, கேட்க தயாராகி முன்னால் சென்றாள்.
சாரா அவளை நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்த, “இன்னொன்னு வைக்கட்டுமா?” என்று கேட்டு வைத்தாள்.
இதைக்கேட்டு ஏகாம்பரம் தான் தலையில் அடித்துக் கொண்டான். இவளை போய் தைரியமாய் பேசுவாள் என்று நம்பியது அவன் தவறு தான்.
“நானே வச்சுப்பேன்” – சாரா
“நல்லா இருக்கா?”
“ஏன் நீ செஞ்சியா?”
“இவ்ல இல்ல. ஏகாம்பரம் தான் செஞ்சாரு”
“அப்புறம் ஏன் நீ கேட்குற?”
“நானும் ஹெல்ப் பண்ணேன்”
“அப்படியா? என்ன பண்ண?”
“எல்லாத்தையும் கழுவி கொடுத்தேன். அப்புறம்… டேபிள்ள அடுக்குனேன்” என்று உளறியவளை பொறுமையாய் கேட்டு விட்டு, “சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
“இல்ல.”
“உட்காரு”
“ஹான்?”
“உட்கார்ந்து சாப்பிடு”
“ஓஓ” என்றவள் உடனே அமர்ந்து சாப்பிடும் வேலையை ஆரம்பித்து விட்டாள்.
அவள் சாப்பிட்டு முடியும் வரை, சாரா அந்த உணவை மேசையை விட்டு எழவே இல்லை. கைபேசியை ஒரு கையில் பிடித்தபடி, அதை பார்ப்பது போல் அமர்ந்திருந்தான்.
அவள் முடித்து விட்டு நிமிர்ந்ததும், எழுந்து சென்று கையை கழுவி விட்டு உடனே சென்று விட்டான். ராகவியும் கையை கழுவி விட்டு வர ஏகாம்பரம் கொலை வெறியோடு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஏகாம்பரம்?” என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு அவள் கேட்க, “உன்னை கொல்லலாமானு தோனுது. அதான் எப்படினு பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.
“என்னையா? நான் என்ன பண்ணேன்?”
“எதுக்கு பாஸ் கிட்ட போன?”
“அட ஆமா..! பயத்துல தடுமாறி சாப்பாட்ட பார்த்ததும் மறந்துட்டேன்” என்றவள் அசடு வழிய சிரித்து வைத்தாள்.
“ஒரு குத்து விட்டேன்னா தெரியும். அவரு கிளம்புறதுக்குள்ள போய் கேளு போ”
“நீங்களும் வாங்களேன். எனக்கு அவர பார்த்தா லைட்டா பயந்து வருது”
“என் கிட்ட வாயடிக்க மட்டும் பயம் வராதே. போய் ஒழுங்கா கேளு. போ”
“ஒரு சப்போர்ட்டுக்கு வந்து நில்லுங்க ப்ளீஸ். நான் கேட்குறேன்” என்றவளை பார்க்கவும் பாவமாய் இருக்க, பின்னால் சென்றான்.
சாரா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, “சார்..” என்று இழுத்தாள்.
“என்ன?”
“ஒரு விசயம் கேட்கனும்”
“இப்ப எனக்கு வேலை இருக்கு. வந்ததும் கேளு” என்றவன் கிளம்பி விட, ராகவி ஏகாம்பரத்தை பார்த்து உதட்டை பிதுக்கினாள்.
“நீ தேற மாட்ட..” என்றதோடு ஏகாம்பரம் சென்று விட்டான்.
ராகவி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல், வீட்டின் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஏகாம்பரம் தான் யோசனையில் சுற்றினான்.
ஒரு வேளை சாராவிற்கு ராகவியை பிடித்திருந்தால், அவளை அவன் திருமணமே செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்கப்போவது இல்லை. ஆனால் சாராவின் குணத்திற்கு அவன் ஒரு பெண்ணை விரும்புவானா? என்பது தான் அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
அவனுக்கு கிடைத்த பெரும் அடி அப்படி. அவனை பெற்ற அன்னையால் கிடைத்த அடி. அவனது குருவின் மனைவி கொடுத்த அடி.
வைரவர் சாராவின் உண்மையான தந்தை அல்ல. சாராவின் உண்மையான தந்தை பெருமாள்சாமி. இப்போது அவர் உயிரோடு இல்லை. பெருமாள்சாமியும் வைரவரும் ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத அளவு ஒன்றாக இருந்தவர்கள்.
கடத்தல் தொழிலில் ஏற்பட்ட போட்டியில், பெரும் விபத்து நடந்தது. அதில் சாராவின் அன்னை மிகப்பெரும் துரோகத்தை செய்திருந்தார். பின்னாலில் அது தெரிந்ததும், பெருமாள் தன் கையாலேயே மனைவியை சுட்டுக் கொன்று போட்டிருந்தார்.
முதலில் அன்னை இறந்து போனதற்கு வருந்திய சாரா கூட, உண்மை தெரிந்த பின் அவரை வெறுத்து விட்டான்.
பெண்கள் என்றாலே பேய்கள், ஆபத்து மட்டும் தான் அவர்களால் விளையும் என்று சொல்லிக் கொடுத்தே வளர்க்கப்பட்டான் சாணக்கியன்.
பெருமாளின் பிள்ளையாக இருந்தாலும் சாரா அந்த தொழிலுக்குள் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட, வைரவரின் மகன் சிவராஜ் அதற்கு எதிர்மறாக இருந்தான்.
சிவராஜ்ஜும் சாணக்கியனும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த தொழில் விசயத்தில் இருவருக்குமே ஒத்துப்போகாது. சிவராஜ் அவனுடைய அன்னையைப்போல அமைதியானவன். எல்லாவற்றையும் தவறாக செய்து விட்டு, பிரச்சனையோடு வாழும் இந்த வாழ்க்கை அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
அவனுடைய கனவெல்லாம் இசை தான். இசையின் பின்னால் அலைந்து தொலைந்தும் போனான். இடையே எதோ ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது. அதற்கான எந்த பதிலையும் சிவராஜ் தெளிவாக சொன்னது இல்லை.
ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென மறைந்து போனான். எந்த தொடர்பும் இல்லாமல், எங்கு போனான்? என்றும் தெரியாமல் அவனை தேடிக் கொண்டிருந்தனர்.
எதிரிகளின் கையில் மாட்டியிருந்தால் கூட, விசயம் காதுக்கு வந்திருக்கும். அதுவும் வராமல் போனது தான் எல்லோருக்குமே கவலையாக இருந்தது. அவன் காதலித்த பெண்ணை பற்றியாவது விசாரிக்கலாம் என்றால், ஒரு தகவலும் இல்லை.
சிவராஜ்ஜின் பொருட்கள் அனைத்தும் அலசிப்பார்த்தாயிற்று. ஒன்றும் கிடைக்கவில்லை. இப்போது காவல்துறையினரும் வைரவரின் ஆட்களும், அவனை ரகசியமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். சாராவும் வேலையை ஓரம் கட்டி விட்டு, சிவாவை தேடித்தான் அலைந்து கொண்டிருந்தான்.
இடையே திவாகர் குளறுபடி செய்ய, அதற்கும் சிவா தொலைந்ததற்கும் சம்பந்தம் இருக்குமோ? என்ற சந்தேகம் சாரா, பூபதியோடு ஏகாம்பரத்திற்கும் உண்டு. ஆனால் அதற்குள் திவாகரை வைரவர் அவரது கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள, அதை மேலும் துருவ முடியாமல் போனது.
இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது, ராகவி என்றொரு அப்பாவிப்பெண் வந்து மாட்டியிருக்கிறாளே? அவளை இந்த கூட்டத்தில் வைக்க சாராவினால் முடியுமா?
அவள் தைரியசாலியாய் புத்திசாலியாய் இருந்தால் கூட, சாராவிற்கு பொருத்தம் என்று ஏகாம்பரம் அமைதியாய் இருந்து விடுவான். இவளோ புலிகளுக்கு நடுவில் மாட்டிய மான்குட்டியாக துள்ளிக் கொண்டிருந்தாள். இவள் எப்படி சாராவின் மனைவி பதவிக்கு தகுந்தவளாக இருக்க முடியும்?
மீறி சாரா திருமணம் செய்து கொண்டாலும், ராகவியின் குழந்தை மனம் நிச்சயம் காயப்படும். அவளால் இங்கு நிம்மதியான வாழ்வை வாழ முடியாது என்பதே அவனது அபிப்பிராயம்.
யாருடைய அபிப்பிராயத்தையும் கடவுளோ விதியோ கேட்பதே இல்லையே. அது என்ன நினைத்து இருக்கிறதோ? அவன் என்ன நடத்துகிறானோ? அது தானே வாழ்க்கை. ஏகாம்பரத்தின் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட காரியங்கள் நடக்கும் போது, யாரை காப்பது? யாரை விடுவது? என்று புரியாமல் அவனையும் சுழலில் சிக்க வைக்க காத்திருந்தது விதி.
தொடரும்.
