சித்திரமே 10
![]()
“என்னது? வீடு.. விக்ரம் இவ என்ன சொல்லுறா?”
“ஏன் வயசானதுல காதும் அவுட்டா? இந்த வீடு மட்டுமில்ல.. இவன் பேருல இருந்த மொத்த சொத்தும் இப்ப என் பேர்ல இருக்கு. இந்த வீட்டுல இனி நீ இருக்க கூடாதுனு உன்னை துரத்தவும் எனக்கு உரிமை இருக்கு. செய்யட்டுமா?”
சித்தாரா அடுத்தடுத்து வெடியை வீச, வேதாவுக்கு தலை சுற்றி விட்டது.
“நிஜம்மாவாடா?” என்று தம்பியைப்பார்த்து கேட்க, அவன் தலையை மட்டும் அசைத்தான்.
அவ்வளவு தான் நெஞ்சைப்பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.
“ஏன்?” என்று பதறிப்போய் கேட்க, “அது எதுக்கு உனக்கு? இங்க இருக்கனும்னா ஒழுங்கா இருக்கப்பாரு. இல்ல இடத்த காலி பண்ணு” என்று கூறி விட்டு சித்தாரா அல்லி சென்ற பக்கம் சென்று விட, விக்ரம் அக்காவை சமாதானம் செய்யாமல் நகர்ந்து விட்டான்.
விதார்த்தை மடியில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அல்லி. சித்தாரா வரவும், “தூங்குறான்மா. இன்னைக்கு இங்க தூங்கட்டுமே” என்று கெஞ்சலாக கேட்டார்.
“இல்ல ஆண்ட்டி. நடுவுல முழிச்சுட்டா என்னை தேடுவான். நான் இல்லனா அழுதுடுவான். நான் தூக்கிட்டு போறேன்” என்று தூக்கிக் கொண்டாள்.
அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட, விக்ரம் வாசலில் நின்று இருந்தான்.
“என்ன?”
“விதுவ பார்க்க வந்தேன். தூங்கிட்டானா?”
“ம்ம்..” என்றதோடு லிஃப்ட்டை நோக்கி நடக்க விக்ரமும் உடன் வந்தான்.
இருவரும் தங்களது அறைக்குள் சென்று விட, கீழே போர்க்களம் வெடித்தது. வேதா, அல்லி ஆரத்தி எடுத்ததற்காக அவரை திட்டிக் கொண்டே இருந்தாள். விசாகா அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
இருவரையும் சாப்பிடச்சொல்லி ஓய்ந்து போன அல்லி, தான் மட்டும் வெகுநாட்களுக்குப்பிறகு பசித்து உண்டு விட்டு படுத்து விட்டார்.
மகனை கொண்டு வந்து அறையில் படுக்க வைத்து விட்டு உடல் கழுவி விட்டு வந்த சித்தாரா, விக்ரமை தேடிச் சென்றாள்.
கதவை தட்டியதும் திறந்தான்.
“என்ன?”
“உன் வீட்டுல புக்ஸ் எங்க இருக்கு?”
“புக்ஸா?” என்று புரியாத குழப்பத்தில் கேட்டான்.
“எங்க இருக்கு?”
“அது லைப்ரரில இருக்கும். காலையில காட்டுறேன். அப்படியே வீட்டையும் சுத்தி பாரு”
“அத நான் பார்த்துக்கிறேன். இப்ப புக்ஸ் எங்க இருக்குனு சொல்லு”
சித்தாரா அதிலேயே நின்றாள். அவள் இங்கு வந்ததே அதற்காக தானே? வந்த வேலையை விட்டு விடுவாளா என்ன?
அவளது பிடிவாதத்தை பார்த்தவன், “சரி வா. காட்டுறேன். விது ரூம்ல தனியா இருப்பானே?” என்று கேட்டபடி கதவை பூட்டி வெளியே வந்தான்.
“இப்போ நல்லா தூங்குறான். பிரச்சனை இல்ல” என்று சித்தாரா நடக்க விக்ரமும் நடந்தான்.
லிஃப்ட் பக்கம் சென்றதும், “இதுக்காக தான் சொத்தெல்லாம் கேட்டியா?” என்று கேட்க, சித்தாரா அதற்கு பதில் சொல்லவில்லை.
லிஃப்டில் நுழைந்து கொண்டாள். விக்ரமும் நுழைந்தான். கதவு மூடியதும் கீழே செல்லும் பட்டனை அழுத்தி விட்டு, “அப்போ கல்யாணத்துக்கு என்ன காரணம்?” என்று கேட்டான்.
சித்தாரா அதற்கும் அமைதியாக இருக்க, சட்டென லிஃப்ட்டை லாக் செய்து விட்டு அவள் முன்னால் நின்றான்.
“நான் கேட்டா பதில் சொல்லிப்பழகு தாரா”
“முடியாது”
“நீ சொல்லாம விட மாட்டேன்”
அவன் அழுத்தமாக சொல்ல, சித்தாரா கை நீட்டி அந்த லிஃப்டின் கதவை திறக்க முயற்சித்தாள். சட்டென அவளது நீண்ட கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். சித்தாரா அவனது இழுப்பில் ஒரு அடி நெருங்கி வந்து தடுமாறி நின்றாள்.
“பதில் சொல்லு தாரா. எதுக்கு இந்த சொத்த கேட்ட?”
“என்னை ஒரு ஆசை நாயகியா ட்ரீட் பண்ணி அனுப்புனல? அதுக்காக தான் கல்யாணம். இந்த சொத்து ஏன்னு இந்நேரம் புரிஞ்சுருக்கும். இப்ப கைய விடுறியா?” என்று சற்றும் பதட்டமில்லாமல் பேசினாள்.
அவளுடைய அருகாமையில் அவனது மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அவள் திடமாக நின்றிருந்தாள்.
“ஆசை நாயகிய விட பொண்டாட்டி பெட்டர் இல்லையா?” என்று கேட்டவன், அவளை மேலும் நெருங்கினான்.
சித்தாரா அவனை கூர்மையாக பார்த்தபடி நின்றாள்.
“எல்லாத்துக்கும் உரிமை இருக்கும்ல?” என்று கேட்டவன் பார்வை அவளிடம் மோகத்தோடு படிந்தது.
அவள் அப்போதும் அமைதியாக நிற்க, அவளை லிஃப்ட் பின் பக்கம் இருந்த கண்ணாடியில் தள்ளி மேலும் நெருங்கி நின்றான்.
இவ்வளவு நேரமில்லாமல் சித்தாரா சற்று பதட்டமடைந்தாள்.
‘இது சரியில்லயே’ என்று அவளது மனம் எச்சரித்தது.
“அந்த உரிமை எனக்கும் இருக்கு தானே?”
விக்ரம் புருவம் உயர்த்தி கள்ளச்சிரிப்போடு கேட்க, “இல்ல” என்றாள்.
“உனக்கு இருக்கும் போது எனக்கு இல்லையா?”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். கல்யாணம் என் மானத்த காப்பாத்தனும்னு தான். உன் கூட பொண்டாட்டியா வாழுறதுக்கு இல்ல. கண்டீஷன் மறந்து போச்சா?”
“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறியா?” என்று ரகசியமாய் கேட்டு மூச்சுக்காற்று படுமளவு நெருங்கி நின்றான்.
சித்தாராவிற்கு உள்ளே தடதடக்க, வெளியே பல்லைக்கடித்து முறைத்துக் கொண்டிருந்தாள். அவனை தள்ளி விட கைகள் துடித்தது. ஆனால் அசைய யோசனையாக இருந்தது.
சின்ன அசைவு கூட அவன் மீது மொத்தமாக மோத வைத்து விடும். அவ்வளவு நெருங்கி இருந்தான்.
அவளை ஆழமாக பார்த்தவன், சற்று கன்னம் பக்கம் குனிந்து வாசம் பிடித்தான்.
“மாறவே இல்ல நீ. நானும் தான். ஞாபகம் வச்சுக்கோ” என்று காதோரம் முணுமுணுக்க, ஒரு நொடி சித்தாராவிற்கு அடிவயிறு என்னவோ செய்தது.
பாவம் முன்னே பின்னே அவள் காதல் வசப்படவில்லை அல்லவா? நாயகனின் அருகாமையை தாங்க முடியாது திண்டாடி விட்டாள்.
அவளிடம் சிறு பதட்டத்தையும் அதிக முறைப்பையும் பார்த்தவன், கள்ளப்புன்னகையுடன் பின்னால் நகர்ந்தான்.
“புக்ஸ் கேட்டல?” என்று கேட்டபடி லிஃப்ட்டை திறக்கும் பட்டனை அழுத்தினான்.
பார்வை மொத்தமும் அவளிடம் தான் இருந்தது. கதவை திறந்ததும் பின்னோக்கி நடந்து வெளியேறியவன், அவளையும் வெளியே வரும்படி விரலசைவில் அழைத்தான்.
சத்தமில்லாமல் ஆழமாய் மூச்சிழுத்து விட்டுக் கொண்டு வெளியேறினாள்.
“இங்க” என்று நடந்து அவன் முன்னால் செல்ல, அவளும் நடந்தாள்.
அது மூன்றாவது தளம். முதல் தளம் விருந்தினர்களுக்கு. இரண்டாவது தளம் அவனுடைய தங்கையும் அக்காவும் அக்காவின் குடும்பத்தினர் வந்தால் தங்குவதற்காக இருந்தது. மூன்றாம் தளத்தில் தான் மற்ற சகல வசதிகளும் இருந்தது.
ஒரு பக்கம் முழுவதும் நீச்சல் குளம் பெரிதாக கட்டி வைத்திருந்தனர். மேல் அறையிலிருந்து அதை சித்தாரா பார்த்திருந்தாள்.
இப்போது நடக்கும் போது பக்கவாட்டில் இருந்தது. கண்ணாடிக்கதவுகள் அடைக்கப்பட்டு இருக்க சிறியதாய் எரிந்த விளக்குகள் அந்த இடத்தை அழகாக காட்டியது.
‘எனக்கு அந்த கதையில ஸ்விம்மிங் தெரியும். சித்தாராவுக்கு தெரியுமானு தெரியாதே.. எதுக்கும் ட்ரை பண்ணி பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டே விக்ரமின் பின்னால் நடந்தாள்.
மூன்று கதவுகள் மறு பக்கம் இருக்க, கடைசி கதவை திறந்து விட்டான்.
“இங்க தான். உள்ள வா” என்று அழைக்க உள்ளே நுழைந்தாள்.
புத்தகங்கள் வாசகசாலை போல் நிறைய அடுக்கப்பட்டு இருந்தது.
“நீ புக்ஸ் எல்லாம் எப்ப இருந்து படிக்க ஆரம்பிச்ச தாரா?” என்று கேட்டபடி அவன் நடக்க, “தெரியாது” என்றாள்.
“வாட்?”
“இங்க தமிழ் புக்ஸ் எங்க இருக்கு?” என்று முன்னால் இருந்த ஆங்கில புத்தகங்களை பார்த்து விட்டுக் கேட்டாள்.
“அதோ” என்று கைகாட்டியபடி அழைத்துச் சென்றான்.
நிறைய ஆங்கில புத்தகங்கள், அங்காங்கே மொழி தெரியாத புத்தகங்கள் என்று எல்லாமே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
“இங்க நிறைய லாங்குவேஜ்ல புக்ஸ் இருக்கே. யாரு படிப்பா?”
“நான் தான்” என்று அலட்டாமல் பதில் சொல்லி விட்டு, “இங்க இருக்க எல்லாம் தமிழ் தான். நிறைய பழைய புக்ஸ் தான் இருக்கும். ரீசண்ட்டா வாங்கி வைக்கல. வாங்க சொல்லனும்” என்று கண்ணாடிக்கதவை திறந்தான்.
உள்ளே இருந்து ஒரு வித மூலிகை மனம் வந்தது.
“என் தாத்தா நிறைய வாங்கி வச்சார். அப்புறம் அப்பா. அவர் வாங்குனது எல்லாம் பிஸ்னெஸ் ரிலேட்டட் தான். அப்புறம் நான் இந்த இடத்த செட் பண்ணதும் நிறைய வாங்கி வச்சேன்.”
“உனக்கு புக்ஸ் படிக்க நேரமெல்லாம் இருக்கா?”
“இல்லாம எப்படி? தூக்கம் வராதப்போ படிச்சுட்டு இருப்பேன். இல்லனா…” என்று ஆரம்பித்தவன் உடனே நிறைத்தி விட்டு, “இதுல உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோ” என்று கூறினான்.
“இல்லனா?” என்று அவள் அதிலேயே நிற்க, “நல்லா சாப்பிடுவேன்” என்று சிரித்தான்.
சமாளிக்கிறான் என்று புரிந்தது. ஆனால் வற்புறுத்தி கேட்காமல் புத்தகங்கள் பக்கம் திரும்பினாள்.
எது கதை புத்தகமாக இருக்கும் என்று ஊகித்து தேடித்தேடி எடுக்க, “கதை படிக்க போறியா?” என்று கேட்டான்.
“ஆமா” என்றதோடு புத்தகத்தை எடுத்து விட்டு கதவை அடைத்தாள்.
விக்ரம் அவளை விசித்திரமாக பார்த்தாலும், அங்கிருந்து நகர்ந்தான். தனக்கு தேவையான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வர, சித்தாராவும் வந்தாள்.
கதவை பூட்டி விட்டு திரும்பினர்.
லிஃப்ட் பக்கம் செல்ல, “இங்க படி எங்க இருக்கு?” என்று வினவினாள்.
“அந்த டோர ஓபன் பண்ணா படி தான்” என்று சொல்லிக்கொண்டே வந்தவன், சட்டென நின்று அவளை குறுகுறுவென பார்த்தான்.
“ஏன்? என் கூட லிஃப்ட்ல வர பயமா இருக்கா என்ன?” என்று கேட்க, சித்தாரா அவனை முறைத்து விட்டு விறுவிறுவென நடந்தாள்.
உண்மையில் மீண்டும் அவனோடு மாட்டிக் கொள்ள நேருமோ என்ற எண்ணத்தில் தான் படியை கேட்டாள். ஆனால் அவன் கண்டு பிடித்த பிறகு கெத்தை விடுவாளா என்ன?
புத்தகத்தோடு அவள் நிற்க, அவளை உதட்டில் உறைந்த கேலி சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
“என்ன? உள்ள வர்ர ஐடியா இல்லையா?”
“தனியா போக ஆசைப்படுவனு நினைச்சேனே” என்று கிண்டலடித்து விட்டு உள்ளே வந்து கதவை மூடினான்.
இம்முறை அவளை வம்பிழுக்காமல் மேலே சென்று சேர்ந்தான்.
சித்தாரா வேகமாக அறைக்குள் சென்று விட, விக்ரம் அவள் அடைத்த கதவை ஒரு பெருமூச்சோடு பார்த்து விட்டு தனதறைக்குள் நுழைந்தான்.
புத்தகத்தோடு அமர்ந்தவளுக்கு வாசிக்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. கண்ணை மூடினால் விக்ரம் நெருங்கி நின்றது தான் நினைவில் வந்தது.
“ப்ச்ச்” என்று அந்த நினைவை உதறினாள்.
“சரியில்ல. இது சரியில்ல. எப்படி அவன் கிட்ட வந்து கைய பிடிக்கலாம்? ஸ்னோ ஒயிட்.. உன் வேலை தான? இருக்கட்டும். ரொமான்ஸ் சீனா வைக்கிற? இனி வச்சனா நான் என்ன செய்யுறேன்னு பாரு” என்று கூறி விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
முழுவதுமாக படித்து முடிக்க தான் ஆசை. ஆனால் பாதி தாண்டும் முன்பே தூக்கம் வந்து விட்டது.
காலையில் சீக்கிரம் எழுந்தது, அலைந்தது, எல்லாம் சேர்ந்து புத்தகத்தை பிடித்தபடியை மகனருகே படுத்து தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை சித்தாரா எழுந்து குளித்து முடித்தாள்.
உடைகளில் இருந்த சேலையை பார்த்தாள். அணியப்பிடிக்கவில்லை.
“இத கட்டுறதெல்லாம் நமக்கு செட்டாகாது. இது சிட்டி தான? மார்டன் டிரஸ் போட்டா என்ன? முதல்ல இந்த முடிய சரி பண்ணனும். எக்கச்சக்கமா இருக்கு. கலரிங் பண்ணா நல்லா இருக்கும். நாளைக்கு கிளம்ப வேண்டியது தான்” என்று யோசித்தபடி, ஒரு க்ராப் டாப்பை எடுத்தாள்.
“கொஞ்சம் ஓவர் மார்டனா பார்ப்பாங்களோ?” என்று தன்மேல் வைத்து பார்த்தவளுக்கு தோன்றியது.
“நாம எப்ப இருந்து அடுத்தவங்க நினைக்கிற பத்தி கவலை பட ஆரம்பிச்சோம்? அந்த கதை ஹீரோயின் எஃபக்ட்” என்று சலித்து விட்டு, அதையே அணிந்து கொண்டாள்.
க்ராப் டாப்பாக இருந்தாலும், பார்க்க அவளுக்கு கச்சிதமாக இருந்தது. நிதானமாக சிகையலங்காரத்தை ஆரம்பித்தாள். நிறைய முடி இருந்ததால் அதை அழகாக மாற்றினாள்.
ஜீன்ஸ் க்ராப் டாப் அணிந்து சுருள் சுருளாக பாதி முடி முன்னால் விழ, மீதியை அலங்காரம் செய்து தலையில் அடக்கி இருந்தாள்.
சுற்றி சுற்றி தன்னை பார்த்தவளுக்கு, அப்போது தான் திருப்தியாக இருந்தது.
“பர்ஃபெக்ட்” என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டவள், உடை மாற்றும் அறையை விட்டு வெளியே வந்தாள். மகன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.
நேரம் கடந்து விட்டதால், “விது எந்திரி.. இவ்வளவு நேரமா தூங்குவாங்க?” என்று எழுப்ப, அந்த மொத்தையில் உருண்டு புரண்டானே தவிர எழவில்லை.
“விது கண்ணா.. செல்லம் எந்திரிடா.. பசிக்கும். சாப்பிட்டு வந்து மறுபடியும் தூங்குவியாம். எந்திரி” என்று எழுப்பி பிடித்து அமர வைத்தாள்.
தூக்கம் கலைந்து சினுங்கிக் கொண்டே விழித்தவன், எதிரில் இருந்த அன்னையை பார்த்து பேந்த பேந்த விழித்தான்.
“என்ன? அம்மா ட்ரஸ் நல்லா இருக்கா?” என்று கேட்க, “சூப்பர்” என்று தன் விரல்களால் சைகை காட்டியவன், மெத்தையில் எழுந்து நின்று சித்தாராவை கட்டிக் கொண்டான்.
மகனது பாராட்டில் சித்தாராவின் முகம் மின்னியது.
“செல்லம்” என்று கொஞ்சியவள், அவனை அப்படியே தூக்கிக் கொண்டு நடந்தாள்.
அவனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உடையை எடுத்து போட்டு விட்டபடி பேசினாள்.
“உங்கப்பா இன்னும் வரல. நேரா போய் ரூம் கதவ தட்டி எழுப்பி விடு. போ” என்று தலைவாரி விட்டு அனுப்பி வைத்தாள்.
விதார்த்தும் துள்ளி குதித்து ஓடினான். உடனே நின்று அன்னையை ஒரு முறை திரும்பி பார்த்து, அவளது அழகை ரசித்து, “ம்மா.. நீ இந்த டெஸ்ஸே (டிரெஸ்) போடுமா” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
“இனி அம்மா இதான் போடுவேன்” என்றதும் துள்ளி குதித்து தந்தையை பார்க்க ஓடினான்.
பின்னால் வந்த சித்தாரா மகன் விக்ரமின் அறைக்கதவை தட்டுவதை பார்த்து விட்டு, நேராக லிஃப்ட்டை நோக்கி நடந்தாள்.
விக்ரம் கதவை திறக்கும் வரை, லிஃப்டில் நுழையாமல் தான் நின்றாள். ஒரு வேளை விக்ரம் அறையில் இல்லை என்றால் விதார்த் தனியாக இருப்பானே. அதனால் நின்று பார்க்க, விக்ரமின் அறைக்கதவு திறந்தது. உடனே லிஃப்டில் நுழைந்து விட்டாள்.
“விது..” என்று வேகமாக தூக்கிக் கொண்டான் தந்தை. அவனும் அலுவலகம் கிளம்பி இருந்தான்.
“அப்பா.. அம்மா செம்ம டெஸ் போட்டுருக்காங்க”
“செம்ம டிரஸ்ஸா? எங்கடா?” என்று எட்டிப்பார்த்தான்.
சித்தாரா இருந்த அடையாளம் தெரியவில்லை.
“போயிட்டாங்க”
“ஓஓஓ.. சரி நாமலும் போகலாம். கொஞ்சம் இரு” என்று மகனோடு சென்று வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினான்.
மகனை விட்டு விட்டு கீழே இறங்கிய சித்தாரா, ஹாலை எட்டிப்பார்த்தாள். வீட்டினர் யாரும் இல்லை. வேலை செய்யும் இரண்டு பெண்கள் தான் அங்கிருந்த படங்களை எல்லாம் துடைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
நேராக சமையலறை பக்கம் சென்றாள். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தவர்கள் இவளுடைய உடையலங்காரத்தில் அதிர்ந்து போய் பார்க்க, “ஆண்ட்டி எங்க?” என்று அதிகார தோரணையில் கேள்வி எழுப்பினாள்.
இது மித்ராவின் குணம். இன்று சித்தாராவிற்கு வந்து விட்டது. பிடித்த உடையும் பிடித்த சூழ்நிலையும் தன்னம்பிக்கையை தானாகவே விதைத்து விடுகிறது போலும். தன் மனதுக்கு சற்றும் பொருந்தாத வாழ்வை வாழும் போது, அவளுக்குள் இருந்த தன்னம்பிக்கை அதிகாரம் எல்லாம் குறைந்து இருந்தது. எதையும் செய்யும் முன் நூறு முறை யோசிக்க வேண்டியிருந்தது. இப்போது அவளுக்கு சௌகரியமான இடத்திற்கு வந்து விட்டாள். இனி தயங்கவோ யோசிக்கவோ அவளுக்கு நேரமில்லை. தேவையும் இல்லை.
தொடரும்.
