சித்திரமே 14

Loading

காலையில் சீக்கிரமே எழுந்த சித்தாரா, நீச்சல் உடையை மாற்றிக் கொண்டு கீழே சென்று சேர்ந்தாள். வீட்டில் யாரும் எழவில்லை. சூரியனும் கூட அப்போது தான் துயில் கலைய ஆரம்பித்திருக்க, தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதுவும் அவளுக்கு பிடித்திருக்க, கொண்டு வந்ததை ஓரமாக இருந்த ஓய்வு நாற்காலியில் போட்டு விட்டு, தண்ணீருக்குள் பாயப்போய் சட்டென நின்றாள்.

“சித்தாராவுக்கு நீச்சல் தெரியுமானு தெரியல. நாம குதிச்சு மூச்சடைச்சுட்டா?” என்று தோன்ற, படிகள் பக்கம் சென்று மெல்ல தண்ணீரில் இறங்கினாள்.

உள்ளே வந்ததும் கையையும் காலையும் அசைத்துப்பார்க்க, நன்றாகவே வந்தது. முகத்தில் புன்னகை மலர நீந்த ஆரம்பித்தாள்.

மிக அதிமான குளிர் கூட பிடித்திருக்க, இந்த நீச்சல் அவளுக்கு பிடித்து இருந்தது. சூரியனும் மெல்ல எழுந்து தன் கரங்களை வீச, தண்ணீரின் குளிர்ச்சி குறைய ஆரம்பித்தது. நீந்துவதை விட்டு விட்டு மிதக்க ஆரம்பித்தாள்.

வெயில் முகத்தில் பளீரென அடிக்க, தண்ணீரில் மிதப்பது இதமாக இருந்தது.

காலையில் எழுந்து சோம்பல் முறித்தபடி பால்கனிக்கு வந்து நின்ற விக்ரமின் கண்ணில் இது விழ, அவனது விழிகள் விரிந்தது.

“வாவ்!” என்று தன்னை மீறி முணுமுணுத்துக் கொண்டான்.

அவளை அங்குலம் அங்குலமாக பார்த்தவனுக்கு, உணர்ச்சிகள் தூண்டப்பட, அவளை அள்ளி அணைக்க ஆசை வந்தது.

கீழே செல்லத் திரும்ப, கதவு தட்டப்பட்டது. காபியோடு வந்திருப்பார்கள் என்று புரிய, கதவைத் திறந்தான்.

அவனுக்கானதை கொடுத்து விட்டு சித்தாரா அறைப்பக்கம் நகர, “வெயிட். என் கிட்ட கொடு” என்று வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டவன், சித்தாராவின் அறைக்குள் நுழைந்து மகனை பார்த்தான். அவன் இன்னும் தூக்கத்தில் இருக்க, சத்தமில்லாமல் வெளியேறினான்.

நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தவள், கதவு திறக்கும் சத்தத்தில் மிதப்பதை விட்டு, தண்ணீருக்குள் மூழ்கி எழுந்து நிமிர்ந்து பார்த்தாள்.

விக்ரமை பார்த்ததும் நீந்தி கரையருகே வர, “குட் மார்னிங்” என்றான் விக்ரம்.

அவனது முகம் பளிச்சென்று இருக்க, சித்தாரா முடியை ஒதுக்கி விட்ட படி, “மார்னிங்” என்றாள்.

அவனிடம் இருந்த துண்டை ஒரமாக வைத்து விட்டு, தண்ணீருக்குள் பாயத் தயாரானான்.

ஒரு பக்கம் அவன் பாய, மறுபக்கம் சித்தாரா படியில் ஏறி வெளியே வந்து விட்டாள். அதைப்பார்த்த விக்ரமின் முகம் கடுகடுத்தது.

அவளோடு நீந்த வேண்டும் என்று வந்தானோ? இல்லையோ? தெரியவில்லை. ஆனால் அவள் வெளியேறியது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

டவல் உடை இருக்க, அதை மாட்டிக் கொண்ட சித்தாரா, துண்டால் தலையில் சொட்டிய ஈரத்தை துடைத்தபடி அங்கிருந்து நடந்தாள்.

“தாரா”

நின்று திரும்பிப் பார்த்தாள்.

“ஏன் இந்த ஓட்டம்?” என்று விக்ரம் புருவம் உயர்த்த, சித்தாரா அவனை புரியாமல் பார்த்தாள்.

“புரியல?” என்று அவள் புருவம் சுருக்க, விக்ரமுக்கு கோபமே வந்தது.

புரியாதது போல் நடிக்கிறாள் என்று நினைத்தவன், கரையோரம் வந்து அதில் கையை வைத்து தண்ணீருக்குள் நின்றான்.

“என்னை பார்த்ததும் ஓடுறியே? நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு ஓடுற?” என்று நேராக கேட்க, சித்தாராவின் புருவம் உயர்ந்தது.

“உன்னை பார்த்து ஓடுறனா?” என்று அச்சரியமாக கேட்டாள்.

அவனது பார்வை அவள் மீது கூர்மையாக படிய, “நான் ஏன் ஓடனும்?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அத நீ தான் சொல்லனும்” என்று விக்ரம் தோளை குலுக்க, சித்தாரா இப்போது அதிக ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்.

“நான் கிளம்புறத சொல்லுறியா?” என்று கேட்டவளுக்கு, சட்டென விவரம் புரிந்தது.

“ஓஓ.. நானும் உன் கூட ஸ்விம் பண்ணனும்னு நினைச்சியா?” என்று கேட்டு விட்டாள்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்தபடி இருந்தான்.

“நல்ல ஆசை தான். ஆனா அதுக்கெல்லாம் நான் வர மாட்டேன்”

“ஏன் பயமா?”

“பயம் எதுக்கு?”

“என் கூட இருந்தா எதாவது பண்ணிடுவேன்னு”

“அதுக்கு நான் விடுவேன்னு தோனுதா உனக்கு?” என்று கேட்டவள், சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

சித்தாராவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பயமா? என்று கேட்டு விட்டால், யாருக்கு பயம்? என்று களத்தில் இறங்கி விடுவாள் பழைய சித்தாரா. இவளோ சர்வ சாதாரணமாக எதிர் கேள்வி கேட்டு சிரித்து விட்டுச் செல்கிறாள்.

இவளைத்தூண்டி விடவும் முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை அவனால். குழப்பத்துடனே நீந்த ஆரம்பித்தாள்.

சித்தாரா மேலே வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு, அங்கு வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றினாள். காபியை அருந்தியபடி சோபாவில் அமர்ந்தவள், விக்ரம் பேசியதை நினைத்துப்பார்த்தாள்.

“இவன பார்த்து பயந்து ஓடுறனாம். லிஃப்ட்ல சும்மா விட்ட தைரியம். ஒரு நாள் இருக்கு. இப்ப முதல் வேலையா சொத்தோட டீடைல்ஸ் வாங்கனும்” என்று முடிவு செய்து விட்டு, மகனை எழுப்பி தயார்படுத்தி கீழே அழைத்துச் சென்றாள்.

இப்போது லாங் ஸ்கர்ட்டும் ப்ளவுஸும் அணிந்து, தலை முடியை விரித்து விட்டாள். இப்போது பார்க்க சிறு பெண் போல் இருந்தாள் சித்தாரா. மகனோடு கீழே வர, சோபாவில் அமர்ந்து இருந்த வேதாவுக்கு அவளைப்பார்த்து அதிர்ச்சியில் தூக்கிவாரி போட்டது.

“விது.. ரைம்ஸ் சொல்லு” என்று கேட்டு, மகன் மறக்காமல் பாடுகிறானா? என்று கேட்டுக் கொண்டே கையை பிடித்து நடந்து சென்றாள்.

அவளை பார்த்த வேதா அதிர்ந்து போய் இருக்க, “இது.. இந்த பொண்ணா உன் தம்பி பொண்டாட்டி?” என்று நம்பமுடியாமல் கேட்டான், அருகே அமர்ந்து இருந்த வேதவில்லியின் கணவன் சுந்தர்.

அதில் சுதாரித்த வேதா, “ஆமா.. மனசுல சின்ன பிள்ளைனு நினைப்பு. ஒரு பிள்ளை பெத்தப்புறமும் பாவாடை சட்டை போட்டுட்டுத் திரியுறா” என்று கரித்துக் கொட்டினாள்.

பாவம் அந்த உடையின் பெயர் கூட அவளுக்குத் தெரியவில்லை. சுந்தரின் மனம் மனைவியின் பேச்சில் அதிசயத்து, அவளை மேலும் கீழும் பார்த்தது.

“என்ன?” என்று சித்தாராவின் மீது இருந்த கோபத்தில் கணவனிடம் எகிற, “நீ ரெண்டு பிள்ள பெத்துட்டா நான் ஆண்ட்டியானு கேட்டு சண்டை போடுவ. அந்த பொண்ணு ஒரு பிள்ளை பெத்துட்டு சின்னபிள்ளையா இருக்க கூடாதா?” என்று கேட்டு விட்டான்.

வேதாவின் முகம் போன போக்கில், சுந்தருக்கு சலித்து விட்டது.

“எனக்கு நேரமாச்சு. நான் கிளம்பனும். நீ வர மாட்ட அப்போ?”

“நான் தான் கொஞ்ச நாள் இங்க இருக்கேனு சொன்னேன்ல? பிறந்த வீட்டுல நாலு நாள் சேர்த்து தங்குறது குத்தமா?” என்று சண்டைக்கு கிளம்பினாள்.

“என்னவோ பண்ணு” என்று சலிப்போடு விட்டு விட்டு, சுந்தர் அல்லியை தேடி நடந்தான்.

மகனை அமரவைத்து அவனுக்கு மேசை நாகரிகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவனும் ஒவ்வொன்றையும் சரியாய் செய்து கொண்டிருந்தான்.

அவர்களை பார்த்தபடி சுந்தர் வர, “விது.. மாமாவுக்கு ஹாய் சொல்லு” என்று அறிமுகப்படுத்தினாள்.

சுந்தர் ஆச்சரியமாக பார்த்தபடி நின்று விட்டான்.

“ஹாய் மாமா” என்று கையாட்டிய விதார்த், “எனக்கு மாமா இருக்காமா?” என்று சந்தேகமாக அன்னையிடம் கேட்டான்.

“இருக்காங்களே. இவங்க தான் அது.” என்று காட்ட, “நான் தான் உன் மாமா. உன் பேரன்ன?” என்று அருகே வந்தான்.

“விதார்த். உங்க பேரு?”

“என் பேரு சுந்தர். உங்க வேதா அத்தையோட ஹஸ்பண்ட்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

விதார்த் புரிந்தும் புரியாமலும் பார்த்து வைக்க, “ஓகே சாப்பிடலாமா?” என்று கூறி மகனை உணவு பக்கம் திருப்பி விட்டு, சுந்தரை பார்த்தாள்.

“நீங்க சாப்பிடுங்கமா. நான் கிளம்புறேன். அத்தைக்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்று கூறி விட்டு, அல்லியை தேடி உள்ளே சென்று சொல்லி விட்டு, விதார்த்துக்கு கையாட்டியபடி விடை பெற்றுச் சென்று விட்டான் சுந்தர்.

கிளம்பும் போது அவனோடு பேசி விட்டு வந்த விக்ரம், சித்தாராவை பார்த்தபடி அமர்ந்தான்.

“தாரா” என்றதும் நிமிர்ந்து பார்த்தாள்.

“உன் கிட்ட கொஞ்சம் பேசனும். சாப்பிட்டதும் ரூம்க்கு வா” என்க அவள் தோளை குலுக்கிக் கொண்டாள்.

மகனை அல்லியிடம் ஒப்படைத்து விட்டு விக்ரமை தேடிச் செல்ல, அவன் அறைக்குள் இருந்தான்.

கதவை தட்டியதும், “வா” என்று குரல் வந்தது.

கதவை திறந்தவள், எங்கும் பார்க்காமல் அவன் நின்ற இடத்தை நோக்கிச் சென்றாள்.

“என்ன விசயம்?”

“இதுல உன் சைன் வேணும்” என்று பத்திரத்தை நீட்டினான்.

வாங்கிப்பார்த்தவள், “எதுக்கு இது?” என்று கேட்டாள்.

“அந்த நிலத்துல ஒரு மால் கட்டுற ப்ளான்”

“யார் பேர்ல?”

“விது பேர்ல”

அந்த பத்திரமும் அதையே சொல்லி இருக்க, கையெழுத்து போட்டுக் கொடுத்தாள்.

“நான் உன் கிட்ட ஒன்னு கேட்கனும்”

“என்ன?”

“ஏன் விது கிட்ட எல்லாரு பத்தியும் ரொம்ப நல்லவிதமா சொல்லுற?”

“வாட்?”

“இல்ல. என் மேல இருக்க கோபத்துக்கு, நீ அவன என் பக்கம் வரவே விடமாட்டனு நினைச்சேன். ஆனா விட்ட. வேதா விசா பத்தி தப்பா சொல்லி‌…”

“தப்பா? உண்மையச்சொல்லினு சொல்லு” என்று சித்தாரா நக்கலாக கூற, “சரி அவங்க கிட்ட இருந்தும் பிரிப்பனு பார்த்தேன். ஆனா நீ அவங்க உன் அத்தைங்கனு நல்லவிதமா சொல்லுற” என்று நிறுத்தினான்.

“ம்ம் அதுக்கு?”

“இப்ப அத்தான் கூட ஆச்சரியமா பேசிட்டு போறார். நீ கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டனு தெரிஞ்சதும், சண்டை தான் போட்டுட்டு இருப்பீங்க. முக்கியமா நீ பண்ண காரியத்துக்கு இந்த குடும்பத்தையே ஒதுக்கி வைப்பானு நினைச்சேன். ஆனா என்னை மாமானு மகனுக்கு சொல்லுறா. சுமூகமா பேசுறானு சாக் ஆகிட்டாரு”

“சரி அதுக்கு இப்ப என்ன?”

“என்னனா? ஏன் இந்த விசித்திரம்? ஒரு வேளை எங்க மேல எல்லாம் இருக்க கோபம் போயிடுச்சா?” என்று கேட்டதும், சித்தாரா சிரித்து விட்டாள்.

“கோபம் போகனுமா? அது கணக்கே இல்லாம வட்டி போட்டு வளர்ந்துட்டு இருக்கு. ஆனா நான் உன் அக்கா இல்ல. பச்ச மண்ணுக்கு விசத்த ஊட்டி விசச்செடியா வளர்த்து விடுறதுக்கு” என்று பட்டென கூறியவள், விக்ரம் முகம் கறுத்ததை பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தாள்.

“உன் அக்கா வீரதீர புராணத்த கேட்டேன். பெத்த புள்ளைங்க, கூட பிறந்தவங்கனு யாரையுமே ஆண்ட்டிய நெருங்க விடலயாமே? அப்படித் தீண்டத் தகாதவங்களா அவங்க? உண்மைய சொல்லனும்னா இந்த குடும்பத்துல வந்து சேர்ந்தது தான் அவங்க தப்பு. சேத்துல பன்னிங்க தான் புரளனும். கன்னுகுட்டி அவங்கள கொண்டு வந்து விட்டுட்டாங்க”

“தாரா.. யார பார்த்து பன்னிங்கனு சொல்லுற?” என்று எகிறிக் கொண்டு வர, “உன்னையும் உன் குடும்பத்தையும் தான் ” என்று கூறி விட்டாள்.

“ஏய்..” என்று கையை ஓங்க, “அடி பார்க்கலாம்” என்று ஒரு அடி முன்னால் வந்தாள்.

“அடிடா.. ஏன் நிக்கிற? உன் அப்பாவெல்லாம் ஒரு ஆளு.. அந்தாளுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வேற. அதுவும் ரெண்டாவது பொண்டாட்டி புள்ள பெத்துக்க கூடாதாம். தான் பெத்த முத்து ரத்தினங்கள வளர்க்க வந்த ஆயா மட்டும் தான் அவங்களாம். இதெல்லாம் ஒரு குடும்பம். இங்க வந்து சேர்ந்துருக்கோம்பாரு நாங்க‌ ரெண்டு பேரும்.” என்று அருவருப்பாய் கூற, அவள் வார்த்தையில் அதிர்ந்து நின்றான்.

“என்ன சொல்லுற நீ?”

“நீங்க ஒரு கேடு கெட்ட குடும்பம்னு சொல்லுறேன். உங்கப்பா ஒரு சைக்கோ. உன் பாட்டி ஒரு சூனியக்காரி. உன் அக்கா ஒரு நச்சுப்பாம்பு. நீ நம்பிக்கை துரோகி. கடைசியா இருக்காளே அவ ஒரு விசச்செடி. உங்க மொத்த பேரையும் வச்சு குடும்பத்த உருவாக்குன ஆள் மட்டும் என் கையில கிடச்சது…” என்று நிறுத்தியவள், ‘அந்த வெண்பனிய பார்க்குற அன்னைக்கு இருக்கு’ என்று மனதில் கறுவிக் கொண்டாள்.

“தாரா.. திஸ் இஸ் த லிமிட்”

“லிமிட்ட க்ராஸ் பண்ணுவேன். முடிஞ்சத கிழிச்சுக்க” என்று சவால் விட்டு விட்டு, வெளியேறி விட்டாள்.

நேராக அறைக்கு வந்தவளுக்கு அத்திரம் அடங்கவில்லை. முதலில் விக்ரமை தான் ஓட ஓட விரட்ட வேண்டும் என்று நினைத்து இருந்தாள். ஆனால் அதை விட இப்போது வேதவல்லியையும் விசாகாவையும் துரத்த வேண்டும் என்று தோன்றியது.

‘அவங்கள முடிச்சுட்டு உன் கிட்ட வர்ரேன் இரு’ என்று முடிவு செய்து கொண்டாள்.

ஆனால் அவர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டும் வாய்ப்பு உடனே வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. வெண்பனி அந்த வாய்ப்பை உடனே கொடுக்க முடிவு செய்து விட்டாள்.

தொடரும்.

Leave a Reply