சித்திரமே 15

Loading

காலையில் விசாகா கிளம்பி கீழே வர, சித்தாரா அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். தரமான உடை தான். மார்டன் என்றும் சொல்ல முடியாத க்ளாசிக் என்றும் சொல்ல முடியாத சுடிதார் அது.

அன்று பிரத்தியேகமாக மேக் அப் செய்திருந்தாள்.

சித்தாராவின் பார்வையை கவனித்து விட்டு, வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல, ‘இந்த விசச்செடிக்கு இருக்கு. வேரோட புடுங்குறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அல்லி எங்கோ சென்றிருந்தார் விதார்த்தை அழைத்துக் கொண்டு. அவர் வரும் வரை அமர்ந்து இருந்தவள், “நான் சாப்பிங் போறேன் ஆண்ட்டி. இவன பார்த்துக்கோங்க. லன்ச்க்கு வந்துடுவேன்” என்று மகனை ஒப்படைத்து விட்டு மகனிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

அவளுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். அதோடு பார்லர் செல்ல வேண்டும். முதலில் உடைகளை வாங்கிக் குவித்து விட்டு, நேராக பார்லர் சென்று அமர்ந்தாள்.

அங்கிருந்த எக்ஸ்பர்ட்களிடம் பேசி, தன்னுடைய நிறத்துக்கும் சருமத்துக்கும் தகுந்த அழகுசாதனங்களை கேட்டறிந்து கொண்டாள்.

முடியை நிறம் மாற்றி விட்டு, கை கால்களையும் அழகு படுத்தி, முகத்தையும் அழகு படுத்தி முடிக்க, நேரம் பறந்து இருந்தது.

வீடு வந்து சேர்ந்தவள் நேராக போட்டிருந்த மேக் அப் க்கு ஏதுவாக உடையை மாற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

விதார்த் அன்னையை பார்த்து அசந்து விட்டான்.

“ம்மா…” என்று சந்தோசமாக கூச்சலிட்டவன், சோபாவில் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

“ம்மா.. சூப்பர்.. சூப்பர்” என்று அவன் குதிக்க, சித்தாராவிற்கு இப்போது உலகை வென்ற சந்தோசம்.

மேக் அப் போட்டுக் கொண்ட போது கூட இவ்வளவு சந்தோசம் வரவில்லை. மகனின் பாராட்டில் உச்சி குளிர்ந்து விட்டது. எப்போதும் அழுது வடியும் சேலையும் சுடிதாருமாக அன்னையை பார்த்தவனுக்கு, இப்போது அவள் தினம் தினம் தன்னை அலங்காரித்துக் கொள்வதில் அவ்வளவு ஆனந்தம்.

சித்தாராவை கட்டியணைத்து முத்தமாரி பொழிந்து விட்டான்.

“அய்யோ..! என் விதுக்கு பிடிச்சுருக்கு. இனிமே அம்மா டெய்லி இப்படி இருக்கேன் ஓகேவா?” என்று கேட்க, பலமாக தலையாட்டி வைத்தான்.

எல்லோருக்கும் அன்னை உலக அழகி தான். அவர்கள் அலங்கரித்துக் கொண்டால் ரசிக்காமல் இருந்து விடுவோமா என்ன? விதுவும் தன் இரண்டு கண்களையும் விரித்து ரசித்தான்.

அங்கு விதார்த்தின் திடீர் கூச்சல் கேட்டு வந்த அல்லி கூட, அசந்து போனார்.

“என்ன ஆண்ட்டி இப்படி பார்க்குறீங்க?”

“ச்சே.. நானே கண்ணு வச்சுருப்பேன். நைட் சுத்தி போடனும்” என்றவர் வேகமாக அருகே வந்து, முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“ஆண்ட்டி” என்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ரெண்டு பேரும் இப்படி பண்ணுறீங்க. பாட்டியும் பேரனும் என்னை வெட்கப்பட வைக்காம போய் வேலைய பாருங்க” என்று சிரித்துக் கொண்டே கூற, எதுவோ கீழே விழுந்து உருளும் சத்தம் கேட்டதும்.

சட்டென மூவரின் பார்வையும் அங்கு பாய்ந்தது. வேதா தான் சிலையாக நின்றிருந்தாள். நாளுக்கு நாள் சித்தாரா அணியும் உடையும் அதில் அவள் சிறுபெண் போல் தோன்றும் தோற்றமும், வேதாவை மருட்டியது. சித்தாரா சாப்பிடும் உணவை கூட கவனித்து விட்டாள். வேதாவைப்போல சித்தாரா உணவை சுருக்குவதும் இல்லை. உடலை வருத்துவதும் இல்லை.

வேதாவை பார்த்து விட்டு மதிக்காமல் திரும்பிக் கொண்டாள் சித்தாரா.

“ஆண்ட்டி.. உங்களுக்கும் இப்படி பண்ணலாமா? நாளைக்கு என் கூட பார்லர் வர்ரீங்களா?” என்று கேட்க, “இந்த கண்ட்ராவிய உன்னோட நிறுத்திக்க” என்று வேதா அலறினாள்.

“ஆண்ட்டினு சொன்னதும் நீனு நினைச்சுட்டியா? நான் இவங்கள சொன்னேன். வயசான எல்லாருக்கும் காது அவுட் ஆகும். பரவாயில்ல உனக்கு பாம்பு காது தான்” என்று நக்கலடித்து. வைத்தாள்.

“ஏய்.. போதும் நிறுத்துடி.. இதென்ன வீடா? சர்க்ஸா? தினம் தினம் கோமாளி மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு சுத்துற.. இதுல கூட்டு சேர்க்க வேற செய்வியா?”

“வேதா.. நீயா ஆரம்பிக்கிற. உன்னை நல்லா ரோஸ்ட் பண்ணனும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. சோ இத நீ அப்புறமா பேசு.” என்றவள் மகனோடு சென்று விட்டாள்.

இப்படி சித்தாரா தன்னை மதிக்காமல் சென்றது வேதாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“அவ தான் அப்படி அலையுறானா நீயும் சொல்ல மாட்டியா? கொஞ்சிட்டு நிக்கிற?” என்று அல்லியிடம் வேதா பாய, அவர் வாயைத்திறந்தால் தானே?

வழக்கம் போல் வாயை அமைதியாக மூடி வைத்து விட்டு வேலையை பார்த்தார்.

“நான் கேட்குறேன் இப்படி ஊமை மாதிரி வாய மூடிட்டு இருக்க? அவ கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுற?” என்று அதற்கும் வேதா கத்த, “சித்தாரா என் கிட்ட சிரிச்சு பேசுறா. பதிலுக்கு நானும் சிரிக்கிறேன்” என்று அமைதியாக பதில் கூறினார்.

“ஓஹோ.. அப்ப நான் உன் கிட்ட எரிஞ்சு விழறனா?” என்று கேட்கும் போதே எரிந்து விழத்தான் செய்தாள்.

அவளை அமைதியாய் பார்த்து விட்டு அல்லி சென்று விட்டார்.

மாலை வீட்டுக்கு வந்த விக்ரம், அதீத கோபத்தில் இருந்த வேதாவை பார்த்து புருவம் சுருக்கினான்.

‘மறுபடியும் தாரா எதுவும் சொல்லிட்டாளா?’ என்று சந்தேகம் வர, வேகமாக நழுவப்பார்த்தான்.

“நில்லுடா.. நீ கூட என்னை மறந்துட்டல?” என்று கேட்டவளுக்கு மள மளவென கண்ணீர் வந்து விட்டது.

“க்கா..” என்று வேகமாக அருகே வந்தவன், அவள் கையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

“தாயில்லா பிள்ளைனு உன்னையும் விசாகாவயும் தாயா இருந்து வளர்த்தேன். ஆனா என்னையே கண்டுக்க மாட்டேங்குறீங்கள்ள?” என்று வேதா விசும்ப, விக்ரமின் மனம் உருகி விட்டது.

அவனிடம் இருக்கும் பெரிய பலவீனம் வேதாவின் அழுகை தான். அவள் அழுது எதையாவது பேசி விட்டால், உடனே உருகி விடுவான்.

“க்கா.. இப்ப எதுக்கு அழுற? நான் இங்க தான இருக்கேன். என் கிட்ட சொல்லு. என்ன விசயம்?”

“உன் பொண்டாட்டி நாளுக்கு நாள் என்னை அசிங்கபடுத்துறா. நீ கண்டுக்கவே மாட்டேங்குற”

“அவ கிட்ட பேசாதகா. பேசுனா பதிலுக்கு பதில் பேசுறா. இவ பழைய தாரா இல்ல”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவள முதல்ல வீட்ட விட்டு துரத்து”

“முடியாதே. வீடும் சொத்தும் அவ பேர்ல இருக்கு”

“அத ஏன்டா எழுதிக் கொடுத்த?”

“எனக்கு விது வேணும்கா. அவள கல்யாணம் பண்ணா தான் அவன இங்க கூட்டிட்டு வர முடியும்”

“தூக்கிட்டு வந்துருக்க வேண்டியது தான?”

“ப்ச்ச்”

“அப்படி என்னடா அவள வச்சு தான் ஃப்ரூஃப் பண்ணனும்னு இருக்கு? நீ ஆதிராவ கல்யாணம் பண்ணா அடுத்த வருசமே பிள்ளை பிறந்துருக்கும். ஊரே வாய மூடிருக்கும். இப்படி இவ கிட்ட போய் மாட்டிக்கிட்டியே”

“முதல்ல எனக்கு ஆதிராவ சுத்தமா பிடிக்கல. அவள கல்யாணம் பண்ணி பிள்ள பெத்தாலும், அது என் பிள்ளை தானானு சந்தேகத்த கிளப்பிட்டு தான் இருப்பாங்க. விதுவ பாரு.. ஏற்கனவே நாலரை வயசாச்சு. அதுவும் அச்சு அசல் என்னை உரிச்சு வச்சுருக்கான். இது தான் சரியான வழி”

“எனக்கு இவள பார்த்தாலே பிடிக்கல. இவள பார்த்தாலே இவ அப்பா நம்ம அப்பாவுக்கு பண்ண துரோகம் தான் ஞாபகம் வருது” என்று வேதா தூண்டி விட, அந்த நினைவில் விக்ரமின் முகம் இறுகியது.

“அத நான் ஜென்மத்துக்கு மறக்க மாட்டேன்கா. அந்தாள ஓட ஓட விரட்டுறேன். சொத்து பத்தெல்லாம் இழந்து நடுத்தெருவுல நிக்க வைப்பேன்னு சத்தியம் பண்ணிருக்கேன். அத செஞ்சு காட்டுவேன்” என்று விக்ரம் ஆவேசமாக பேச, வேதாவிற்கு அப்போது தான் நிம்மதியானது.

அந்த நிமம்தியோடு நிமிர்ந்தவள், அதிர்ந்து போனாள். ஏனென்றால் அல்லியின் அறையிலிருந்து வெளியே வந்து சித்தாரா அவர்களை நக்கலாக பார்த்தபடி நின்று இருந்தாள்.

வேதா அரண்டு போய் பார்க்கவும், கழுத்தை வெட்டிக் கொண்டு ஏளன சிரிப்போடு லிஃப்ட் நோக்கி நடந்தாள். அவளது ஹீல்ஸ் சப்தத்தில் விக்ரம் திரும்பிப் பார்த்தான்.

சித்தாரா எதையும் கவனிக்காமல் லிஃப்டில் நுழைந்து கொண்டாள். விக்ரமின் முகம் இறுகியது. சற்று முன் பேசியதை கேட்டிருப்பாள். கேட்கட்டும். அவளும் அவளுடைய தந்தை செய்ததை மறந்து விடக்கூடாது அல்லவா?

அரண்டு போய் அமர்ந்து இருந்த அக்காவின் கையை அழுத்தி விட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

சித்தாரா அறையில் அமர்ந்து கொண்டு வேறு புத்தகத்தை கையில் எடுத்தாள்.

அதுவும் ஆன்டிஹீரோ கதை தான். காலையில் சாப்பிங் முடிந்து வந்ததும் எடுத்தவள், விதார்த் விளையாட அழைக்கவும் அப்படியே போட்டு விட்டுச் சென்று விட்டாள். இப்போது மீண்டும் எடுத்தாள்.

ஒருவனை பழிவாங்கவென்று அவன் வீட்டுப்பெண்ணை கடத்துகிறான் நாயகன். அவளை இல்லாத கொடுமையெல்லாம் செய்து விட்டு கர்பமாக்கி விடுகிறான்.

ஆனால் அந்த குழந்தையை கலைக்க நினைக்கிறான். கேட்டால் அவனது வாரிசு துரோகி வீட்டு மகளின் வயிற்றில் வளரக்கூடாதாம்.

“சாக்கடையா? என்ன வார்த்தைடா இது? அவ எதிரி வீட்டு மக. அவ வயித்துல புள்ள வளருறது அய்யாவுக்கு அவமானமாம். ஆனா அவள தொடுறதும் லவ் மேக் பண்ணுறதும் மட்டும் அவமானம் இல்லையாம்” என்று கிண்டலாக பேசி விட்டு மேலும் படித்தாள்.

அநத நாயகி குழந்தையை கலைக்க மாட்டேன் என்று போராடினாள். பிறகு அவனிடமிருந்து தப்பித்து அவளுடைய குடும்பத்துக்கு வந்து சேர்ந்தால், அங்கு அவளை யாருமே ஏற்கவில்லை.

“பெத்த பிள்ளை மேல நம்பிக்கை இல்லயாம். இப்படிக்கூடவா இருக்கானுங்க?” என்று சலித்தவளுக்கு தன் தந்தை நினைவு வந்தார்.

“சித்தாரா ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது அப்பா என்ன பண்ணிருப்பாரு?” என்று கண்ணை மூடி யோசித்தாள்.

மெல்ல காட்சிகள் விரிந்தது.

சித்தாரா கையில் இருந்த கிட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க, அறைக்குள் வந்த மகாதேவி, “சித்து.. எப்ப எந்திரிச்ச?” என்று கேட்டார்.

சித்தாரா திரும்பவில்லை.

“உன்னை தான்…” என்று அருகே வந்தவர், அவள் கையிலிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

“இது.. இது..” என்று வேகமாக பிடுங்கிப்பார்த்தவர், “சித்து” என்று குரல் நடுங்க அழைத்தார்.

அவரை ஏறிட்டு பார்த்த சித்தாரா, “கொஞ்ச நேரம் தூங்குறேன்மா” என்று படுத்து விட்டாள்.

மகாதேவிக்கு மயக்கமே வந்து விட்டது. வேகமாக கணவரை தேடி ஓடியவர் விசயத்தை திக்கித்திணறி சொல்ல, அவரும் அதிர்ந்து போனார்.

“சித்து எங்க?”

“தூங்குறேன்னு படுத்துட்டாங்க. எனக்கு கையெல்லாம் உதறுது”

“அமைதியா இரு மகா” என்று அதட்டினாலும், அவருக்கும் உள்ளே இதயம் பலமாக துடித்தது.

சில மணி நேரம் கழித்து சித்தாராவின் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

அது வரை எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தவள், பெற்றவர்களை பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள்.

“இங்க பாருமா. நீ அவன வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட. திரும்ப இந்த குழந்தைக்காக நாங்க அங்க போய் நிக்க தயார். நீ என்ன சொல்லுற?” – மருதநாயகம்.

சித்தாரா மறுப்பாக தலையசைத்தாள்.

“அவன தேடி யாரும் போகக்கூடாது”

“அப்போ இந்த குழந்தைய கலைச்சுடலாம்” என்று மகாதேவி கூற, அன்னையை ஏறிட்டுப்பார்த்தாள்.

“வேணாம்மா. நீ செய்யாத தப்புக்கு காலம் முழுக்க தண்டனை அனுபவிக்க வேணாம். உள்ள இருக்கதும் இந்த உலகத்துல பிறந்து தண்டனை அனுபவிக்க வேணாம்.” என்ற மகாதேவி கண்ணீர் வடிக்க, சித்தாரா தந்தையை பார்த்தாள்.

“அந்த பையன் கூட நீ சேர்ந்து வாழ மாட்டேன்னு முடிவு பண்ணிட்டா, ஒரு உயிர உலகத்துக்கு கொண்டு வந்து துடிக்க வைக்க வேணாம்டா.” என்றவர் மருந்து அட்டையை அவளருகே வைத்தார்.

“முடிவ நல்லதா எடும்மா” என்று கூறி விட்டு, அழுது கொண்டிருந்த மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

சித்தாரா அந்த மாத்திரையை வெகு நேரம் பார்த்திருந்தாள். கடைசியாக முடிவுக்கு வந்தவள், அதை தூக்கிக் கொண்டு தாய் தந்தையை தேடிச் சென்றாள்.

பட்டென கண்ணைத்திறந்த சித்தாராவிற்கு, முகமெல்லாம் சந்தோசம்.

“பரவாயில்ல. அந்த சித்தாரா அவ்வளவு கோழை இல்ல. அதான் விதுவ தனியாவே பெத்து வளர்த்துருக்கா” என்று நினைத்தவளுக்கு பெருமையாக இருந்தது.

“இந்த மாதிரி லூசு பேரன்ட்ஸுங்கள விட எங்கம்மா அப்பா எவ்வளவோ மேல். பிள்ளை மேல நம்பிக்கையில்லாம அடிச்சு துரத்துறாங்க. இடியட்ஸ்” என்று திட்டி விட்டு மேலே படித்தாள்

வழக்கம் போல் கடைசி அத்தியாயத்தில் அந்த நாயகன் நாயகியிடம் மன்னிப்பை வேண்டினான். அவளும் மன்னித்தாள். முடிந்து விட்டது.

கடுப்பாகி தலையை பிடித்துக் கொண்டாள்.

“இந்த மாதிரி கதையா படிச்சுட்டு இருக்கேன். ஒரு நார்மல் வாழ்க்கைய கதையில வாழவே மாட்டானுங்களா?” என்று எரிச்சலாக கேட்டபடி அந்த புத்தகத்தை தூக்கி தூரப்போட, கதவை திறந்து கொண்டு விக்ரம் வந்தான்.

தொடரும்.

Leave a Reply