சித்திரமே 16

Loading

“ஹேய்.. ஏன் புக்க தூக்கிப்போடுற?” என்று விக்ரம் குனிந்து எடுக்க, “இதெல்லாம் படிச்சா டென்சன் தான் வருது. பழிவாங்குற ஹீரோவும் அவன மன்னிக்கிற ஹீரோயினும். இவனுங்கள்ளாம் ஆம்பளயா? நேரடியா நின்னு சண்ட போட துப்பில்லாம பொண்ணுங்க மனச உடைச்சுட்டு, ஜெயிச்சுட்டேன்னு மார்தட்டிட்டு திரியுறானுங்க. டிஸ்கஸ்டிங்” என்று பொறிந்து கொட்டி விட்டு தண்ணீரை எடுத்துக்குடித்தாள் சித்தாரா.

தண்ணீரை விழுங்கும் போது எதோ தோன்ற, சட்டென திரும்பி விக்ரமை பார்த்தாள். அவன் முகம் கறுத்து இருந்தது.

“ஓஓ.. மறந்துட்டேன் பாரேன். நீ கூட இப்படித்தான? உனக்கு அந்த புக் ரொம்ப பிடிக்கும். பொண்ண கடத்தி அவள ப்ரெக்னன்ட் ஆக்கி கை விட்டவன் தான் அதுல ஹீரோவாம். அதுனால உனக்கு கண்டிப்பா பிடிக்கும்”

“கொஞ்சம் நிறுத்துறியா?” என்று விக்ரம் எகிற, “உண்மைய சொன்னா எரியுதா?” என்று பதிலுக்கு எகிறினாள்.

“என்னடி பெரிய உண்மை? உன் அப்பா என் அப்பாவ நம்ப வச்சு கழுத்தறுத்துருக்கான். அத பத்தி பேச மாட்டியே”

“டேய்.. என் அப்பாவ அவன் இவன்னு பேசுன மரியாதை கெட்டுரும்.”

“அந்த துரோகிக்கு என்னடி மரியாதை?”

“என் வாயக்கிளறாத விக்ரம். அப்புறம் நான் பேசானா நீ தாங்க மாட்ட. கொஞ்ச நாள் பொறுமையா இருக்கனும்னு இருக்கேன்” என்று எச்சரித்தாள்.

ஆனால் அவனுக்குத்தான் வாஸ்து சரியில்லை. வாயைத்திறந்தான்.

“என்ன பேசிக்கிழிச்சுடுவ? எங்க பேசேன்” என்று அவன் முன்னால் வர, “கேட்டல வாங்கிக்க” என்று பார்த்தவள் வாயைத்திறந்தாள்.

“எங்கப்பா பணத்துக்காக துரோகம் பண்ணாருனு நீயும் உன் குடும்பமும் அடிச்சுக்கிறீங்களே.. அப்படி அவர் பண்ணலனு நான் நிரூபிக்க முடியும். ஆனா அத இப்ப பண்ண மாட்டேன். என்னைக்கு அடிச்சா நீ எந்திரிக்கவே முடியாதோ அன்னைக்கு அடிக்கிறேன். இப்ப என் அப்பாவ துரோகினு சொல்லுறதுக்கு வர்ரேன். என் அப்பா துரோகினா நீ யாருடா?” என்று குரலை உயர்த்தினாள்.

விக்ரம் பேச வரும் முன், “அவர் துரோகம் பண்ணிட்டாருனே வச்சுக்க.. நீ மட்டும் பெரிய மகானா? நம்பி வந்தவள ஏமாத்துன வீரன் தான நீ? எங்கப்பா ஏமாத்துனாருனா அது உன் அப்பாவ. சரிசமமா பலமானவங்க. ஆனா நீ? உன் மேல உயிர வச்சுருந்தேன்னு தெரிஞ்சும்.. அசிங்கமா பழி வாங்குறதுக்காக உன் அக்கா கூட சேர்ந்து என்னை ஏமாத்துனியே.. நீ பெரிய யோக்கியவான் தான்” என்றவள் இடையில் நிறுத்தி மூச்சு வாங்கினாள்.

இதற்கே விக்ரமின் முகம் கறுத்து விட்டது. ஆனாலும் அவன் தவறை ஒப்புக்கொள்வதாக இல்லை.

“ஏமாத்துனவன பதிலுக்கு பழிவாங்காம? அய்யா நீங்க பண்ணது தப்புங்கயானு கெஞ்சிட்டு இருப்பாங்களா?” என்று அவன் நியாயம் பேச, “அத என் அப்பா கிட்டல வச்சுருக்கனும்? என் கிட்ட ஏன் காட்டுன?” என்று எகிறினாள்.

“உன் அப்பானு இவ்வளவு உருகுறியே.. அதுக்கு தான். இங்க அடிச்சா அங்க வலிக்கும்ல?” என்றவனின் முகம் பழிவெறியில் ஜொலித்தது.

“ஹா..” என்று நக்கலாக சிரித்தவள், “வீக்னெஸ் அடிக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பள?” என்று கேட்டு விட்டாள்.

நாயகிக்கு தான் வார்த்தை வரம்பும், கட்டுதிட்டங்களும், கட்டுக்கோப்பும் தேவைப்படும். அடுத்தவர்களை புண்படுத்தாமல் பேச வேண்டும். சிலதை நாயகிகள் பேசவே கூடாது என்ற சட்டம் வைத்து, அவளை அழ மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் கதை உலகில், வில்லிக்கு எந்த சட்ட திட்டமும் வைப்பதில்லை.

எதிராளியை துளைத்து எடுக்கும் வார்த்தைகளை சர்வசாதாரணமாக வீச வில்லிக்கு மட்டுமே அனுமதி உண்டு. அவர்கள் மனதில் தோன்றியதை பேசி நியாயம் கேட்கலாம். ஆனால் நாயகிகள் முடிந்தவரை யாரையும் காயப்படுத்தக்கூடாது. முடிந்தால் முட்டாளாக இருக்காலாமே தவிர, நாயகனை எதிர்த்தோ அவனது குடும்பத்தை எதிர்த்தோ கடுஞ்சொற்களை உதிர்க்கவே கூடாது. ஏனென்றால் அவள் நாயகி!

ஆனால் இங்கு இருப்பவள் நாயகி உருவத்தில் இருக்கும் வில்லி அல்லவா? அவளுக்கு சட்டதிட்டங்கள் எல்லாம் தூசிக்கு சமம். அவளை நோகடித்தால் பதிலுக்கு பத்து மடங்கு அதிகமாக நோகப்பேசுவாள்.

அவளை சீண்டினால், சீண்டியவர்கள் ஓடும் வரை விரட்டி அடிப்பாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளுடைய நியாயங்கள் மட்டுமே. அடுத்தவருக்காக பார்த்து, அடுத்தவருக்காக பேசி, யோசித்து, சிரித்து, அழுது வாழ அவளால் முடியாது. அப்படி வாழ்வது எல்லாம் நாயகி என்ற சில முட்டாள்களால் மட்டுமே முடியும்.

சித்தாரா வார்த்தையை விட்டதும் அதே கணக்கில் தான். ஆனால் எதிரிலிருப்பவன் தான் நாயகனுக்கு எதிர்பதம் ஆயிற்றே. நாயகனே கொந்தளிப்பான். இவன் மட்டும் வேடிக்கையா பார்ப்பான்?

“ஏய்..” என்று அவளது கழுத்தை பிடித்து அருகே இழுத்திருந்தான்.

“யார பார்த்துடி ஆம்பள இல்லங்குற?” என்று கர்ஜிக்க, சித்தாரா அதிராமல் அவனை ஆத்திரமாக பார்த்தாள்.

“நீ தான்டா. உன்னை தான் சொல்லுறேன். நீ ஆம்பளயே இல்லனு ஊருக்குள்ள நியூஸ் பரவியிருக்கு போல? அது பொய்னு காட்டத்தான விதார்த்த கூட்டிட்டு வந்த? கூடவே என்னையும் கல்யாணம் பண்ண?” என்று கேட்டதும், அவன் மீண்டும் ஒருமுறை அதிர்ந்தான்.

அந்த அதிர்ச்சியில் கை துவள, வேகமாக தட்டி விட்டாள்.

“என்ன? இவளுக்கு எப்படித்தெரியும்னு பார்க்குறியா? வீட்டுக்குள்ள கொண்டு வந்து வச்சுட்டா? வெளிய நடக்குறது எதுவுமே தெரியாம போயிடுமா? எனக்கப்புறம் ஒருத்திய லவ் பண்ணியாமே? பேரென்ன? ஸ்வேதாவா? அந்த மால்ல பார்த்தோமே அந்த டீனாவோட க்ளோஸ் ஃப்ரண்ட் தான?” என்று கேட்டவளை, விக்ரம் வெறித்துப்பார்த்தான்.

விசயம் இவ்வளவு சீக்கிரம் இவளுடைய காதுக்கு வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“அந்த ஸ்வேதாவ இன்னைக்கு பார்லர்ல பார்த்தேன். ஹா… கதை கதையா சொன்னா. கேட்கும் போது ஒரே சிரிப்பு. இந்த விசயம் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, சத்தியமா உன்னை கல்யாணமும் பண்ணிருக்க மாட்டேன். இங்க வந்துருக்கவும் மாட்டேன்”

எரியும் தீயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, அதில் மேலும் சில அணுகுண்டுகளை போட்டது போல் இருந்தது அவளது பேச்சு.

“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட. உன்னால பிள்ளை பெத்துக்க முடியாது. அத மறைக்குறதுக்காக தான் எந்த பொண்ணு கூடயும் டேட்டிங் கூட போக மாட்டேங்குறனு டீனா கிளப்பி விட்டு, அந்த ஸ்வேதாவ உன்னை வெறுக்க வச்சுருக்கா. அந்த டீனாவுக்கு, நீ அவள ரிஜக்ட் பண்ணி என் கூட காதல் நாடகம் போட்டதுல கோபம். ஸ்வேதாவ வச்சு மொத்த ஊருக்கும் விசயத்த பரப்பிட்டா. அதை மறைக்க இந்த கல்யாணத்துக்கு சந்தோசமா சம்மதிச்சுட்ட. இடையில நான் ஜகா வாங்கிடக்கூடாதுனு, முழு சொத்தையும் கொடுத்து கூட்டிட்டு வந்துட்ட. அம் ஐ ரைட் மிஸ்டர் விக்ரம்?”

ஏளனக்குரலில் அவனுக்கே கதை சொல்லி கேள்வியாய் நிறுத்த, விக்ரமுக்கு இப்போது பதில் சொல்லவே முடியவில்லை.

“நீ பெரிய ஆன்டி ஹீரோனு நினைச்சிட்டேன். ஆனா நீ டம்மி பீஸா போயிட்ட.‌ ஆக்ட்சுவலி ஆன்டி ஹீரோ எல்லாம் கடைசியில தான் பண்ணது எல்லாமே தப்புனு தெரிஞ்சுக்கிறாங்க. அப்புறம் மன்னிப்பு கேட்க நாயா பேயா அலையனும். நீ இப்பவே மன்னிப்பு கேட்க ரெடியா இரு. ஏன்னா.. நீ பண்ணிட்டு இருக்கது அத்தனையும் தப்பு தான்” என்று கூறி விட்டு, வேகமாக படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள்.

வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டவள், ‘நாம காம் ஆ இருக்கனும்னு நினைச்சாலும் விட மாட்டேங்குறானே. அடியே வெண்பனி.. இப்ப நீ என் கண்ணு முன்னாடி வரப்போறியா இல்லையா?’ என்று மனதில் பல்லைக்கடித்து கடுகடுத்தவள், வேகமாக உடை இருக்கும் பகுதிக்கும் சென்றாள்.

அங்கிருந்த உடை ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று, மாற்றி விட்டு வந்தாள். அது ஜிம் செய்யும் போது அணியும் உடை. மேல் பாகம் மறைந்து இருந்த போதும், முழு வயிறும் அப்பட்டமாக தெரிந்தது. கால் பகுதியை முழுதாய் மூடிய பேன்ட் அணிந்து இருந்தாள்.

சீப்பை எடுத்து வேகமாக தலையை வாரி, நன்றாக உயர்த்தி குதிரைவால் போன்று போட்டுக் கொண்டாள். புதிதாக இருந்த ஹேர் பேன்ட்டை எடுத்து முடி முன்னால் விழாமல் மாட்டிக் கொண்டாள்.

கண்ணாடியில் பார்த்தவளுக்கு திருப்தியாக இருக்க, வேகமாக வெளியே வந்தாள். விக்ரம் இல்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் கீழே சென்று ஜிம்மிற்குள் நுழைந்தாள்.

ஆழ மூச்செடுத்து தன்னை நிதான படுத்திக் கொண்டு, வார்ம் அப்பை ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது உணர்வு கொந்தளிப்பு குறிய ஆரம்பித்தது.

ட்ரெட் மில்லில் ஏறி நடந்து விட்டு, சில நிமிடங்கள் அமர்ந்தாள். பிறகு ஜிம் பாலில் உடலை வளைத்து உடற்பயிற்சி செய்து முடித்தவள், அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்து வியர்வையை துடைத்துக் கொண்டாள்.

தண்ணீர் தாகமெடுக்க, கொண்டு வர மறந்தது நினைவு வந்தது. எழுந்து சென்று இன்டர்காமை எடுத்து, சமையலறையை தொடர்பு கொண்டாள். தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரச்சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

மீண்டும் வந்து பென்ச்சில் படுத்துக் கொண்டவளுக்கு, தொண்டை வரட்சியாக இருக்க உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள்.

இப்போது மனம் தெளிந்து அமைதியாக அடுத்து என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்தது.

‘எனக்கு எல்லாம் தெரியனும். இது வரை ஃப்ளாஸ் பேக்ல பாதிப்பாதி அப்போ அப்போ ஞாபகம் வருது. முழுசா வந்தா தான அவன என்ன செய்யுறதுனு பார்க்க முடியும்? இதுல என் அப்பா மேல தப்பில்லனு சவால் விட்டுட்டேன். ப்ச்ச்.. எப்ப தான் இந்த வெண்பனி நடந்தத முழுசா சொல்லுவாளோ?’ என்று மனதில் புலம்பிக் கொண்டிருக்க, கதவைத்திறந்து கொண்டு ஒரு பெண் வந்தாள்.

“தண்ணீர் மேடம்” என்று நீட்ட, எழுந்து வாங்கிக் கொண்டாள்.

அவள் திரும்பி நடக்க, “நில்லு. ஆண்ட்டிய இங்க வரச்சொல்லு” என்று கட்டளையிட, அவளும் தலையாட்டி விட்டுச் சென்றாள்.

தண்ணீரை குடித்து முடித்து நிமிர்ந்தவள், துண்டால் கழுத்தில் வடிந்த வியர்வையை துடைத்தபடி எழ, கண் சிமிட்டும் நேர்த்தில் அந்த மொத்த இடமும் இருட்டானது.

வெண்பனி அவள் முன்னால் புன்னகையோடு வந்து நின்றாள்.

“என்னை தேடுன போல?”

“உன்னை…” என்றவள், குனிந்து எதையோ தேடினாள்.

“என்ன தேடுற?”

“இங்க இருந்த கெட்டில் பால். தூக்கி தலையில அடிக்கலாம்னு பார்க்குறேன்”

வெண்பனி பொங்கி வந்த சிரிப்பை அவளது கோப முகத்தை பார்த்து விட்டு அடக்கினாள்.

“அதெல்லாம் கதைக்குள்ள இருக்கும். நீ இங்க வந்துட்டா அதுவும் வந்துடுமா?”

“அப்ப நீ கதைக்குள்ள வா. வந்து பாரு. உன்னை என்ன செய்யுறேன்னு தெரியும்”

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுற?”

“குடும்பமா இது? எல்லாம் பைத்தியங்களா இருக்குங்க. இதுங்க கூட போய் என்னை கோர்த்து விட்டுட்டல?”

“கதைனு இருந்தா அதுல வில்லன் வில்லிங்க இருப்பாங்க மித்ரா. நீ கூட ஒரு கதையோட வில்லி தான?”

“ஆனா அதுல நான் மாஸா இருந்தேனே? இப்படி லூசாவா இருந்தேன்?”

“ஆன்டி ஹீரோ கதைனா இப்படித்தான் மித்ரா. ஹீரோயின தவிர மத்த அத்தனை பேரும் இப்படித்தான் மெண்டலா இருப்பாங்க. அப்பத்தான் ஹீரோயின தியாகியா காட்ட முடியும். உனக்குத்தான் அல்லிக்கொடிய பிடிச்சுருக்கே. அப்புறம் என்ன?”

“அவங்களுக்காக தான் உன்னை முதல்ல வெட்டனும்னு நினைச்சேன். இப்படியா அவங்க வாழ்க்கைய எழுதி வைப்ப?”

“இங்க பாரு.. சும்மா பொங்காத. எங்க நிஜ வாழ்க்கையில இத விட மோசமா.. படு மோசமா பலர் வாழ்க்கை இருக்கு. அதுக்கெல்லாம் கோபப்பட்டா டெய்லி பிபி ஏறி டெய்லி சாகனும்”

“உன் உலகம் எனக்குத்தேவையில்ல. என் உலகத்துல இப்படி ஏன் எழுதுன? அதை சொல்லு”

“அது அப்படித்தான். நீ உன் விசயத்தப்பேசு. இல்லனா கிளம்புறேன்”

“போய்த்தொலைஞ்சுடாத. எனக்கு முழு ஃப்ளாஷ் பேக்கும் சொல்லிட்டுப்போ”

“பாதி ஞாபகம் வந்துடுச்சே”

“விக்ரம் எதுக்காக எங்கப்பாவ பழி வாங்க நினைச்சான்? எதுக்கு என்னை யூஸ் பண்ணான்? எங்கப்பா என்ன பண்ணாரு? ஆன்ஸர் மீ”

வெண்பனி பெருமூச்சு விட்டு விட்டு, “மருதநாயம் விக்ரமோட அப்பா வேதாச்சலம் கம்பெனில ஒன் ஆஃப் த பார்ட்னர். அந்த வேதாச்சலம் ஒரு குடிகாரன்ல? சோ குடிச்சுட்டு பிஸ்னஸ கவனிக்கல. மத்த பார்ட்னர் பணத்த கொடுத்தா போதும்னு வாங்கிட்டா பிரிஞ்சு போயிட்டாங்க. உங்கப்பா பணம் வேணாம் அந்த தொழிலயே கொடுனு கேஸ போட்டு வாங்கிட்டார்.” என்று நிறுத்தினாள்.

“சோ?”

“சோ வாட்? தொழில் கைய விட்டு போயிடுச்சு. அதுவும் பணம் கொட்டுற தொழில் இல்லையா? அது போனது ஈஸ்வரிக்கு பிடிக்கல. நம்ம மகன் வாழத்தெரியாதவன்னு நினைச்சுட்டு, இருந்த சொத்த எல்லாம் மூணு பேர புள்ளைங்க மேல எழுதி வச்சுடுச்சு. அதுல வேதாச்சலத்துக்கு அவமானமா போச்சு”

“சரி”

“நம்மல நம்ம அம்மாவே நம்பாம போனதுக்கு காரணம் அந்த தொழில் கைய விட்டு போனது தான்னு நினைச்சு, ஓரளவு குடிக்குறத விட்டுட்டு மத்த பின்ஸன நல்லா பார்த்துருக்காரு. ஆனாலும் உடம்பு ரொம்ப கெட்டுப்போகவும், மகன கொஞ்சம் கொஞ்சமா உள்ள விட்டுருக்காரு. இப்ப அவன் பார்க்குறான். அந்தாளு போய் சேந்தாச்சு”

“இதுல எதுக்கு எங்கப்பாவ விக்ரம் பழி வாங்கனும்?”

“சாகும் போது அவனோட அப்பா, மருதநாயகம் தொழில்ல பார்ட்டனரா வந்து மத்தவங்கள தூண்டி விட்டு, விலக வச்சு, கடைசியில மொத்தமா சுருட்டிக் கிட்டு போயிட்டாருனு விக்ரம் கிட்ட சொல்லிட்டு, செத்துட்டான். சாகும் போது கூட நிம்மதி இல்லடா.. அந்த தொழில நீ திரும்ப வாங்குனா தான் என் ஆத்மா சாந்தி அடையும்னு சொல்லிட்டு, செத்து போயிட்டான். அந்த தொழில வாங்க தான் விக்ரம் இவ்வளவும் பண்ணுறான்”

சித்தாரா அமைதியாய் நிற்க, “என்ன ஃப்ளாஸ்பேக் கேட்டு ஃபீலிங் வந்துடுச்சா?” என்று வெண்பனி சந்தேகமாக கேட்டாள்.

“இதெல்லாம் ஒரு கதை. இதுல ஃபீல் வேற?  தூ….” என்று அவள் துப்பிய வேகத்தில், வெண்பனி சிரித்து விட்டாள்.

“உன்னை துப்புறேன்.. சிரிக்கிற?” என்று எகிற, “ஹா ஹா அதெல்லாம் உனக்கு புரியாது.” என்று சிரிப்பை அடக்கினாள்.

“இதெல்லாம் ஒரு ஃப்ளாஷ் பேக். இதுக்கு எமோசனல் வேற எதிர்பார்க்குற. கருமம் கருமம்”

அவள் தலையில் அடித்துக் கொள்ள, “நீ நம்பலனாலும் இதான் நடந்துச்சு. நீ இத ஃபீல் பண்ணித்தான் ஆகனும்” என்று கறாராக கூறினாள்.

“அடிங்கொய்யால.. என் கெத்து என்ன ஆகுறது?”

“அது பத்தி எனக்கென்ன கவலை?”

“உன்னை நான் கொல்ல முடியாதுங்குற திமிருல பேசிட்டு இருக்க நீ.. நீ மட்டும் என் ஏரியாவுக்குள்ள நுழைஞ்சு பாரு. கார விட்டு ஏத்துறேன்”

“அஸ்கு புஸ்கு. அங்க வர எனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?” என்று சிரிக்க, பல்லைக்கடித்தபடி அவள் கழுத்தை நெரிக்க வந்தாள் மித்ரா.

“சரி விளையாடுனது போதும். நீ சொன்னது சரி தான். மருதநாயகம் எந்த தப்பும் பண்ணல. நீ இனி விக்ரம என்ன வேணுமோ பண்ணு” என்று கூறி விட்டாள்.

“அக்காவும் தம்பியும் சேர்ந்து என் வாழ்க்கையிலயே விளையாடுறீங்களா? பார்த்துக்கிறேன்” என்று பல்லைக்கடிக்க, “உன் வாழ்க்கை இல்ல. சித்தாரா வாழ்க்கை” என்று வெண்பனி அழுத்தமாக கூற, மித்ரா அவளை சட்டென கூர்மையாக பார்த்தாள். அதோடு வெண்பனி மறைந்து போனாள்.

தொடரும்.

Leave a Reply