சித்திரமே 2
![]()
விதார்த் வந்ததும் சித்தாராவின் புலம்பல்கள் நின்று விட்டது. மகன் “அம்மா” என்ற கொஞ்சலோடு வந்து கட்டிக் கொண்டதும், அவளது கவலை எல்லாம் பறந்து போய் மகனது பாசம் தான் முதலில் நின்றது.
“விது குட்டி..” என்று தூக்கிக் கொஞ்ச, அவனும் அன்னையிடம் கொஞ்ச, சில நிமிடங்கள் அந்த வீட்டில் சிரிப்பும் கும்மாளமும் தான் கேட்டது.
விதார்த்துக்கு சரியாக விளையாடி அவனை சிரிக்க வைத்து, தானும் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
உடல் கழுவி உடை மாற்றி, செய்து வைத்த சிற்றுண்டியை இருவரும் சாப்பிட்டு முடிக்க, பள்ளிப்பாடங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தனர்.
மகனுக்கு ஒவ்வொன்றையும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள். சித்தாராவின் இந்த பொறுமையையும், எல்லோரையும் துச்சமாக மதிக்கும் மித்ராவையும் ஒப்பிட்டு பார்க்கும் போதே சிரிப்பு வந்தது.
“ம்மா.. என்னமா.. சிரிக்கிற?” என்று மகன் கேட்க, “அதுவா.. இன்னைக்கு ஒரு காமெடி.. அத நினைச்சு சிரிச்சேன்” என்றாள்.
“என்ன காமெடி?”
“அது.. பெரியவங்க பண்ணுற காமெடி.. நீ குட்டி பையன். உனக்கு புரியாது”
“நானும் பெரிய பையன் தான்” என்று அவன் சினுங்கலோடு கொஞ்ச, கன்னத்தை பிடித்துக் கிள்ளி முத்தமிட்டாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்க, “இத எல்லாம் எடுத்து உள்ள வை.” என்று கூறி விட்டு எழுந்து சென்று கதவை திறந்தாள்.
வாசலில் நின்றிருந்தான் அவன். விக்ரம சேனா. கதையின் நாயகன். காலையில் விழித்ததிலிருந்து யாரை எதிர்பார்த்தாளோ அவன்.
‘வந்துட்டான்’ என்று நினைத்தவள், அதிரவும் இல்லை. அலட்டவும் இல்லை. காலையிலேயே அத்தனையும் முடிந்தவரை நினைவுபடுத்தி இருந்தாள். அதில் அவன் முகமும் அடக்கம்.
நாயகன் நாயகி பிரியும் போது நடந்த சண்டையும், அவளது தந்தை செய்த துரோகம் மட்டும் நினைவு வரவில்லை. அதனால் அதை விட்டு விட்டாள்.
இப்போது அதிராமல் நின்றிருந்தவனை விக்ரம் ஆச்சரியமாக பார்த்தான்.
“நீ என்னை எதிர்பார்த்தியா?” என்று முதல் கேள்வி வர, ‘பின்ன? நீ வந்தா தான கதையே ஆரம்பிக்கும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால், “உன்னை ஏன் நான் எதிர்பார்க்கனும்?” என்று தெனாவெட்டாக ஒரு கேள்வி வந்தது.
விக்ரம் அவளை ஆராய்ச்சியாக பார்க்க, “இப்ப எதுக்கு வந்த?” என்று கேட்டாள்.
“உள்ள போய் பேசலாமா?”
“உன்னை உள்ள கூப்பிடுற ஐடியா இல்ல”
“ஏன்?”
“என்ன ஏன்? உள்ள வர்ர அளவுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.
கூடவே, ‘ஹீரோயின் இப்படி எல்லாம் பேசுமா? ஒரு வேளை ஏமாத்துன பழைய லவ்வர் வந்தா அவன பார்த்து சாக் ஆகி நிக்குமோ? இந்த ஹீரோயினிங்க நேச்சர் நமக்கு செட் ஆகாது போலயே. நாம வில்லி தான். இப்படித்தான் பேசுவோம். இப்படித்தான் இருப்போம். எவன் எப்படி போனா என்ன?’ என்று யோசனையும் ஓடிக் கொண்டிருந்தது.
“உரிமை என்னனு உனக்கு தெரியாதா சித்தாரா?”
“தெரியலயே.. எங்க சொல்லேன்?” என்று கையை கட்டிக் கொண்டு நின்றாள்.
விக்ரம சேனாவின் முகம் இறுகியது. எப்படி சொல்லுவான்? உறவே இல்லை என்று துரத்தியவன் அவனல்லவா? உரிமை மட்டும் எங்கிருந்து வரும்?
“என்ன கனவு கண்டுட்டு இருக்க?” என்று சித்தாரா அதட்ட, “நான் என் மகன பார்க்க வந்தேன். வழிய விடு” என்றவன் அதற்கு மேல் அவளை கவனிக்காமல் உள்ளே சென்றான்.
‘பெரிய என் மகன்’ என்று பல்லைக்கடித்தவள் தானும் உள்ளே வந்தாள்.
பாட புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு தன் விளையாட்டுப்பொருளை பரப்ப ஆரம்பித்திருந்த விதார்த், புதிதாக வந்து நின்றவனை பார்த்து விழித்தான்.
விக்ரமசேனா அவனை வைத்தகண் வாங்காமல் பார்த்து நின்றான். ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்து விட்டுத்தான் வந்திருந்தான். ஆனால் நேரில் பார்க்கும் போது, மனம் மகனிடம் உருகியது.
அவனது பார்வையை கவனித்தவள், ‘அட பார்ரா..! பாசமாக்கும்? நீ பழி வாங்குனதுல பிறந்தவன்டா அவன். இவரு பாசத்துல குப்புற விழுந்துடுவாரு போல’ என்று நக்கலாக நினைத்தாள்.
கூடவே, படித்திருந்த சில கதைகள் நினைவில் வந்தது. இப்படி பலகாலம் கழித்து வந்து குழந்தையோடு உரிமை கொண்டாடினால் நாயகி விட மாட்டாள். என் பிள்ளை எனக்கு தான் சொந்தம் என்று சண்டை போட்டு, அவனை துரத்தப்பார்ப்பாள். ஆனால் அப்படி எதையும் செய்ய சித்தாராவிற்கு பிடிக்கவில்லை.
“விதார்த்..” என்று விக்ரம் கையை நீட்ட, அவன் அன்னையை தான் பார்த்தான்.
“விதார்த் நான் உன் அப்பா” என்று கூறி விக்ரம் மீண்டும் ஆர்வமாக கையை நீட்ட, விதார்த் கண்ணில் சிறு ஆனந்தமும் ஆர்வமும்.
அப்போதும் அவன் சித்தாராவை தான் அனுமதி வேண்டி பார்த்தான்.
விக்ரம் வேகமாக திரும்பி சித்தாராவை பார்த்து, “சொல்லு” என்று கண்ணால் கட்டளையிட்டான்.
ஆனால் சித்தாரா அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “விது இவரு உன் அப்பா தான்” என்று சொல்லி வைத்தாள்.
அவளது ஏளனமான பார்வையில் எங்கே மாற்றிச் சொல்லி விடுவாளோ என்று பார்த்த விக்ரம், அவள் உண்மையை சொன்னதும் மகனை பார்த்தான்.
“நிஜம்மாவாமா? சாமி கிட்ட போன அப்பா வந்தாச்சு.. ஹே…” என்று எழுந்து ஓடி வந்து விக்ரமனை அணைக்க, அவன் அதிர்ந்து போயிருந்தான்.
‘சாமி கிட்ட போன அப்பாவா?’ என்று அவன் ஏகத்திற்கும் அதிர்ந்து சித்தாராவை பார்க்க, அவள் முகத்தில் டன் கணக்கில் ஏளனம் தான் இருந்தது.
“எல்லாரும் சாமி கிட்ட போனா திரும்ப வர மாட்டாங்கனு சொன்னாங்கப்பா.. நீங்க வந்துட்டீங்களே.. ஹே.. நான் என் ஃப்ரண்ட் எல்லாருக்கும் சொல்ல போறேன்” என்று விதார்த் குதூகலிக்க, இப்போது அவனது பெற்றோர் இருவரும் மாறி மாறி முறைத்துக் கொண்டனர்.
“எதுக்கு இப்படிச் சொன்ன?” என்று விக்ரம் அதீத கோபத்தில் பல்லைக்கடித்து கேட்க, “ஹா.. நீ செத்துட மாட்டியானு ஒரு ஆசை.. செத்துட்டா நிம்மதினு ஒரு ஆசை” என்று சொல்லி வைத்தாள்.
விக்ரமின் முகம் மேலும் இறுகியது.
‘பார்ரா… இந்த துரை பழிவாங்கலாமாம்.. இவன் செத்துடனும்னு நாம நினைக்க கூடாதாம்’ என்று நக்கலடித்தாள் மனதில்.
‘ஒரு வேளை ஹீரோயினா இருந்தா இப்படி நினைக்க மாட்டாளோ? அவ தான் இந்த மூஞ்சிய லவ் பண்ணவளாச்சே.. நினைச்சுருக்க வாய்ப்பில்லை. அதான் சாக் ஆவுறான். இன்னும் இருக்கு.. மவனே.. உனக்கு இருக்கு’
எல்லாம் மனதில் மட்டுமே நினைத்தாள். வெளியில், “தாலி இல்லாம புள்ளைய சுமந்துட்டு வாழ்ந்து பாரு.. புருஷன் செத்துட்டான்னு தான் நீயும் சொல்லுவ” என்று தலையை சிலுப்பினாள்.
இது விக்ரமை சற்று பாதிக்க, அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி மகனை கவனித்தான். பெரியவர்கள் பேசும் மொழி அவனுக்கு புரியவில்லை. இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘சிறுவனை வைத்து பேசிக் கொண்டிருக்கிறோமே’ என்று மனம் சாட, உடனே மகனை பார்த்து புன்னகைத்தான்.
“விதார்த் கண்ணாக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?” என்று கேட்டு அவனை திசை திருப்பி விட்டான்.
அவன் பேசியதை, மகனோடு ஒட்டிக் கொண்டதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல், சித்தாரா வேடிக்கை மட்டும் பார்த்தாள். அந்த இடத்தில் சாதாரண நாயகிகளாக அவளுக்கு நடந்து கொள்ள தெரியவில்லை. பிள்ளையை பிரித்து விடுவானோ? என்று பதறவில்லை. என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று தான் அமர்ந்து இருந்தாள்.
கூடவே, வெண்பனி கதையை எப்படிக் கொண்டு செல்வாள்? என்று கேள்விகளும் தோன்றியது.
தந்தையும் மகனும் விளையாடி ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டிருந்தனர். விக்ரம் வாங்கி வந்த பொம்மைகளை வைத்து விளையாடியவன், சித்தாராவிடம் காட்டி குதித்தான்.
“ம்மா.. குதிரை” என்று தூக்கிக் கொண்டு குதித்து விழப்போக, சித்தாரா பிடிக்கும் முன் விக்ரம் பிடித்து தூக்கி இருந்தான்.
அதை பார்த்து விட்டு சாதாரண நாயகியாக இருந்தால், உரிமை போராட்டம் தொடங்கி இருக்கும். ஆனால் சித்தாரா மகனின் சிரிப்பை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தாள்.
“நான் பெரிய்ய பையனாகிட்டேன்.. அம்மா.. நான் பெரிய்ய பையனாகிட்டேன்” என்று கூறியவன், “இப்ப அந்த ஜோக் சொல்லுங்க” என்று கேட்டு வைத்தான்.
சித்தாரா ஒரு நொடி ஆச்சரியப்பட, “என்ன ஜோக்?” என்று மகனிடம் கேட்டான் விக்ரம்.
“அம்மா சொல்லல. அது பெரியவங்களுக்கு தான் புரியுமாம்”
விக்ரம் அவளை கேள்வியாக பார்க்க, சித்தாரா தலையை சிலுப்பிக் கொண்டு, “இப்ப நீ பொம்ம கூட விளையாடு விது. நான் போய் தோசை சுட்டு எடுத்துட்டு வர்ரேன்” என்று அகன்று விட்டாள்.
விதார்த் அழகாக கைவிரித்து உதட்டை பிதுக்க, மகனின் பாவனையில் மயங்கி அவனது கன்னத்தில் முத்தமிட்டான் விக்ரம். மீசை குத்தியதில் விதார்த் சிரிக்க, விக்ரமனும் சிரித்தான்.
சில நிமிடங்களுக்கு பிறகு, மகனை தனியாக விளையாட விட்டு விட்டு சித்தாராவிடம் வந்து நின்றான்.
சட்னி அரைத்து வைத்து விட்டு தோசையை ஊற்ற ஆரம்பித்து இருந்தாள்.
“என்ன ஜோக்?” என்று பின்னாலிருந்து குரல் வர, சித்தாரா திரும்பவில்லை.
“உன் கிட்ட தான் கேட்டேன்”
“நீ கேட்டா நான் சொல்லனுமா?” என்று கேட்டவள், வேலையை மட்டுமே பார்த்தாள்.
“சித்தாரா..”
“ப்ச்ச்.. இந்த அதட்டல் எல்லாம் வேணாம். இப்ப என்ன? ஜோக்னு தெரியனுமா? ஒருத்தன் எனக்கு காஸ்ட்லி ஃபோன் வாங்கித்தரதா சொல்லி என்னை அவன் கூட கூப்பிட்டான். அவனுக்கு இருக்க பொண்டாட்டி பிள்ளையோட என்னையும் சேர்த்து ராணி மாதிரி வச்சுக்கிறேன்னு சொன்னான். ஜோக் எப்படி? நல்லா இருக்கா?”
திரும்பி நக்கலாக கேட்டு விட்டு திரும்பிக் கொண்டாள். விக்ரமனின் உடல் இறுகியது. அவனால் எப்படி தன் காதலியை? அல்லது மனைவியை? இரண்டும் இல்லாது தன் குழந்தையின் தாயையை ஒருவன் இப்படி பேசியதை ஜீரணிக்க முடியும்?
“யார் அவன்?” என்று இறுகிய குரலில் கேட்க, ‘ஹீரோயிசமா?’ என்று மனதில் சலித்துக் கொண்டாள்.
“யாருனு கேட்டேன்?”
“இப்ப நீ முதல்ல எதுக்கு இங்க வந்து நிக்கிற? சும்மா கேள்வியா கேட்டுக்கிட்டு. எனக்கு வேலை இருக்கு.” என்று கூறியவள் சலிப்பாக வேலையை தான் கவனித்தாள்.
விக்ரம் எதோ யோசனையோடு மகனை திரும்பி பார்த்து விட்டு, “நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும். வேலை முடிக்க எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.
ஒரு பெருமூச்சு விட்டவள், ‘அப்படி என்ன தான் இவனுக்கு பிரச்சனை?’ என்று நினைத்து வேகமாக அடுப்பை அணைத்து விட்டுத்திரும்பினாள்.
“என்ன? சொல்லி முடி.”
அவளை கூர்ந்து பார்த்து விட்டு, நேரடியாக விசயத்துக்கு வந்து விட்டான்.
“எதுக்காக விதார்த் இருக்க விசயத்த நீ என் கிட்ட மறைச்ச?”
அவனை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவள், ‘ரைட்டு.. ஆன்டி ஹீரோ வேலைய ஆரம்பிக்கிறானாம். ஆனா நான் யார் தெரியுமா?’ என்று நினைத்தவள், கையை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
“மறைச்சேனா? நான் ஏன் மறைக்கனும்?”
“அப்புறம் ஏன் என் கிட்ட சொல்லல?”
“ஏன் சொல்லனும்?”
“நான் தான விதுவுக்கு அப்பா?”
“ஆமா”
“அப்ப எனக்கு தெரியனும் தான?”
“இல்லையே..” என்று அவனது முறைப்பை வாங்கிக் கொண்டாள்.
“இல்லையா?” என்று கர்ஜனையாக கேட்க, சித்தாரா அசரவில்லை.
“இல்ல.. அதெல்லாம் நல்ல அப்பாங்களுக்கு.. உனக்கு இல்ல.” என்று சீண்டி விட்டாள்.
“சித்தாரா..”
“முக்கியமா.. நான் மறைக்கல. ப்ரெக்னன்ட்டா இருந்தேன் பெத்துக்கிட்டேன். அவ்வளவு தான்.” என்று கையை விரித்தாள்.
“தப்பு.. நீ என் கிட்ட சொல்லி இருக்கனும். என்னை கேட்காம நீ எப்படி என் பிள்ளைய பெத்துக்கலாம்?”
“ஹலோ.. விது எனக்கும் பிள்ளை தான். முக்கியமா எனக்கு மட்டுமே பிள்ளை. உனக்கு உரிமை கிடையாது” என்று எகிறினாள் சித்தாரா.
அமைதியாகத்தான் பேச நினைத்தாள். ஆனால் என்னவோ அவளை மீறி கோபம் வந்திருந்தது.
“விது..”
“விது எனக்கு மட்டும் தான் மகன். நீ அவன் பிறப்புக்கு ஜஸ்ட் ஒரு ரீசன். அவ்வளவு தான். அதுவும் எப்படி பட்ட ரீசன்!” என்று நக்கலாக ஆச்சரியபட்டாள்.
“எங்கப்பா உன்னை ஏமாத்துனார். நீ அவர பழி வாங்க என்னை யூஸ் பண்ணிட்ட. டிட் ஃபார் டாட். அதோட முடிஞ்சது. அதுல வந்த குழந்தைய பத்தி உனக்கென்ன அக்கறை? இல்ல நீயெல்லாம் மனுசனா? பழிவாங்க ஒரு பொண்ணோட காதல யூஸ் பண்ணுற ஜென்மம். உன்னை மாதிரி ஒரு அப்பா என் புள்ளைக்கு இருக்கத விட செத்துட்டான்னு சொல்லியே வளர்த்துடுவேன்”
தன்னை மீறி கோபத்தில் அவள் குரலை உயர்த்தி இருக்க, விதார்த் சத்தம் கேட்டு வந்து விட்டான். சித்தாரா பேசியபேச்சில் விக்ரம் அதிர்ந்து நிற்க, அவள் தான் முதலில் மகனை கவனித்தாள்.
சட்டென முகத்தை மாற்றிக் கொண்டு, “விது.. பசிக்குதா? சாப்பிடலாமா?” என்று கேட்டு தோசையோடு மகனையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.
மகனுக்கு ஊட்டி முடித்து விட்டு பார்க்க, விக்ரம் எதோ யோசனையோடு நின்று இருந்தான்.
‘ஆளையும் மூஞ்சியும் பாரு.. என் பிள்ளையாம்’ என்று கடுகடுத்தவள், அவனை அப்போது தான் நன்றாக பார்த்தாள்.
அழகாக இருந்தான். அதீத உயரம். வெள்ளை நிறம். தாடி மீசையை கூட அழகாக வைத்திருந்தான். ப்ளைன் சட்டை தான். ஆனால் ப்ராண்டட் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
‘பணக்காரன் கெட் அப். இந்த மூஞ்சிக்கு ஒரு பிச்சைக்கரான்… ச்சே வேணாம்.. ஒரு மிடில் க்ளாஸ் லுக் போட்டா எப்படி இருக்கும்?’ என்று யோசனை ஓட உடனே கற்பனை செய்தாள்.
தாடியில்லாமல் அளவாய் வளர்ந்த மீசை. ஜெல் இல்லாமல் வாரிய தலை முடி. ப்ராண்டட் இல்லாமல் சாதாரண சட்டை. கூடவே ஒரு கண்ணாடி மாட்டி விட்டாள். அவளையும் மீறி சிரிப்பு வந்தது.
‘இதுல பார்க்க தான் இந்த மூஞ்சி நல்லா இருக்கு. இதுக்கு போய் ஆன்டி ஹீரோ பணக்காரன்னு கெட் அப். முடியல ‘ என்று நினைத்துக் கொண்டாள்.
தன்னையே பார்த்திருந்து விட்டு அவள் தனக்குள் சிரிக்கவும், விக்ரம் அவளை கேள்வியாக பார்த்தான்.
“என்ன சிரிப்பு?”
“நான் சிரிக்கிறதுக்கெல்லாம் உனக்கு காரணம் சொல்லனுமா என்ன?” என்று கேட்டு அவனை சீண்டிக் கொண்டே இருந்தாள்.
விதார்த் மற்றவர்களை விட்டு விட்டு பொம்மையே கதியென கிடக்க, அவனை பார்த்து விட்டு சமையலறைக்கு பாத்திரங்களோடு சென்ற சித்தாராவின் பின்னால் சென்றான்.
“சித்தாரா.. நான் ஒரு முக்கியமான விசயம் பேசத்தான் இங்க வந்தேன்” என்க, அவள் எதுவும் கேட்கவில்லை.
“எனக்கு என் பையன் வேணும்” என்று கூற, சித்தாரா வேகமாக திரும்பினாள்.
_____
“சித்தாரா..” என்று வெண்பனி அழைக்க, சித்தாரா சுற்றியும் பார்த்தாள். சற்று முன் தான் அந்த வீட்டில் நின்று விக்ரம் மகன் வேண்டும் என்று கேட்டான். உடனே இங்கே வந்து நிற்கிறாள்.
“ஏய்.. என்ன பார்த்துட்டு இருக்க? அதுவும் இருட்டுல என்ன தெரியுது உனக்கு?”
“நான் ஏன் இங்க வந்தேன்? அந்த விக்ரம் இப்ப தான முன்னாடி நின்னு விதுவ கேட்டான்”
“அந்த எபிசோட் முடிஞ்சது. தொடரும் போட்டாச்சு. உன் கிட்ட பேசலாம்னு வரவச்சேன்”
“ஓஓ.. என்ன? நான் கூப்பிட்டப்போ வரல?”
“அப்படி எல்லாம் நீ கூப்பிட்டதும் வந்து நிக்க முடியாது. நாங்க கூப்பிட்டா கடவுள் வந்து நிக்கிறது இல்ல. அதே ரூல்ஸ் தான் உங்களுக்கும்”
“கல்நெஞ்சக்காரி”
“இப்ப வந்த விசயத்த சொல்லுறேன் கேளு. மத்தத பேசிட்டு நிக்காத. இது வரை நீ அங்க நடந்துக்கிட்டது சூப்பரா இருந்தது. இப்படியே கண்ட்டினியூ பண்ணு. ரீடர்ஸ் கூட உன்னை பாராட்டுனாங்க”
“நிஜம்மா? பொய் சொல்லலயே?”
“இல்லவே இல்ல. இந்த ஹீரோயின் இருந்திருந்தா வேற மாதிரி போயிருக்கும். விக்ரம பார்த்ததும் பலநிமிஷம் சாக்ல நின்னுருப்பா. கரெண்ட்ட மிதிச்சமாதிரி, கன்னி வெடிய மிதிச்ச மாதிரினு வர்ணிச்சுருக்கனும். அவன் பிள்ளைய பிடுங்கிருவானோனு மாத்தி மாத்தி தப்பு தப்பா பேசி, அதுக்கு அவ ஃபேஸ் ரியாக்ஷன் எல்லாம் போட்டு எழுதி இருக்கனும். செம்ம இரிடேட் ஆகியிருக்கும். நீ சும்மா பட் பட்னு பேசிட்டு இருக்க. நல்லா இருக்கு”
“நீயே சொல்லிட்ட.. குட்” என்று அவள் பெருமையாக பார்க்க, “நல்லா தான் போயிட்டு இருக்கு. இடையில ஹீரோயின் மாதிரி எங்கயும் நீ சொதப்பாம இருந்தா சரி. அப்புறம் ஒரு சில சீன்ஸ் தவிர நான் உன்னை தேடி வர மாட்டேன். சும்மா என்னை திட்டிட்டே இருக்காம கதைய கவனிக்கிற. இத சொல்ல தான் வந்தேன். கிளம்பு.” என்று முடித்தாள்.
“ஹே.. ஒரு ஹெல்ப். நான் இன்னும் நிறைய கதைய படிக்கனும். கதைக்குள்ள போயிட்டா எங்க படிக்கிறது?” என்று அவசரமாக கேட்க, வெண்பனி யோசித்தாள்.
“ஹீரோ வீட்டுல அவங்க தாத்தாவோட புக்ஸ் லைப்ரரி இருக்கும். படிச்சுக்க. பை” என்றதோடு வெண்பனி மறைந்து விட்டாள்.
“ஹீரோ வீட்டுக்கா? அங்க போவேனா?” என்று சந்தேகமாக நிற்கும் போதே, அவளும் அந்த இடத்திலிருந்த இருளில் மறைய ஆரம்பித்தாள்.
தொடரும்.
