சித்திரமே 20

Loading

விக்ரம் படுத்து உருண்டு புரண்டு பார்த்து விட்டான். தூக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. மூளையில் சித்தாரா பேசியது, வேதா பேசியது எல்லாமே குடைந்து கொண்டிருந்தது.

அதுவும் விசாகா செய்த காரியம், மனதை அரித்துக் கொண்டிருந்தது. தங்கைக்கு தான் எப்படிப்பட்ட உதாரணமாக இருக்க வேண்டும்? ஆனால் அவன் எப்படி இருந்திருக்கிறான்?

எல்லாமே மனதை அழுத்த, வேகமாக எழுந்து விட்டான். சற்று நேரம் நீச்சல் குளத்தில் நீந்தி வந்தால், உடல் களைத்து தூக்கம் வந்துவிடும் என்று தோன்ற, வேகமாக வெளியே வந்தான்.

எதிர் அறைக்கதவு அடைத்திருக்க, அதை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, நீச்சல் குளத்துக்கு வந்து சேர்ந்தான். டீ சர்ட்டை கழட்டி போட்டு விட்டு, சார்ட்ஸோடு தண்ணீரில் பாய்ந்தான். அந்த நள்ளிரவு குளிரில் தண்ணீர் குளுமையாக இருந்தது.

அந்த குளுமை அவனது மனதில் இருந்த வெம்மையை தணிக்க, அமைதியாக நீந்த ஆரம்பித்தான். அலையலையாய் சித்தாராவோடு இருந்த அழகிய நாட்கள் மனதில் எழ ஆரம்பித்தது.

எனோ தானோவென ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்வில், தென்றலாய் தோன்றினாள் சித்தாரா. இப்போது இருப்பது போல், எப்போதும் கோபமும் வெறுப்புமாக இருக்க மாட்டாள்.

உதட்டில் மெல்லிய சிரிப்பும், கண்ணில் மின்னலுமாக அன்று அவள் பேசியதை மறக்கவே முடியாது.

ஒரு மாலில் தான் முதலில் சந்தித்தனர். அவனது காரை இடித்து விட்டு மன்னிப்பு கேட்டவனை, திட்டிக் கொண்டிருந்த விக்ரமுக்கு, தண்ணீர் பாட்டிலை நீட்டி குறும்பாய் சிரித்தாள்.

“மூச்சு வாங்குது. குடிச்சுட்டு பேசுங்க” என்று தண்ணீர் பாட்டிலை கையில் திணித்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டாள்.

விக்ரம் திகைத்து நிற்கும் போதே, இடித்தவன் மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி விட்டான். ஆனால், விக்ரம் அந்த தண்ணீர் பாட்டிலை வெகுநேரம் பார்த்திருந்தான்.

அதன் பிறகு மாலுக்குப்போனால், அவனது கண்கள் தன்னையறியாமல் அவளைத்தேடும். யாரென்று தெரியாத பொண்ணை இப்படித்தேடுவது பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தாலும், அவனது கண்கள் தேடலை விட்டதே இல்லை. அதற்கு பலனும் கிடைத்தது.

அன்று தேடலுக்கான விடையாக, ஐஸ்கிரீமை சாப்பிட்டபடி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து, விக்ரமின் மனம் துள்ளி குதித்தது.

உடனே ஓடிச்சென்று பேசினான். தெரியவே தெரியாது என்று அவள்‌ அடித்துப் பேசினாலும், அவனை பார்த்தும் ஒரு நொடி விரிந்து போன கண்களும், குறும்புச் சிரிப்பை அடக்கியபடி பேசும் உதடுகளும், அவளை நன்றாக காட்டிக் கொடுத்து விட்டன.

அப்போதும் அவளது பெயரையோ விவரங்களையோ அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. மூன்றாம் முறை சந்திப்போம் என்று இருவருக்குமே நம்பிக்கை இருந்தது. அது நிகழவும் செய்தது.

ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, சில நொடிகள் சந்தோசத்தில் நின்று விட்டனர். இம்முறை அவள் வந்து கையை நீட்டி, “ஹாய் ஐம் சித்தாரா” என்று அவன் கேட்காமலே அறிமுகமானாள்.

அந்த கையைப்பிடித்து, “விக்ரம சேனா” என்றவன் சில நொடிகள் கையை விடவே இல்லை.

பின்னால் காதலிக்கும் போது தான், முதல் சந்திப்பில் தண்ணீர் கொடுத்ததற்கான காரணத்தைச் சொன்னாள். பல முறை கேட்டும் சிரித்து மழுப்பியவள், ஒரு வழியாக கூறியிருந்தாள்.

விக்ரம் அந்த மாலில் நுழைந்ததும், சித்தாராவும் அவளது தோழிகளும் பார்த்து விட்டனர். அவனை சைட் அடிக்கவும் ஆரம்பித்திருந்தனர். அவர்கள் போகுமிடத்தில் விக்ரமை பார்த்து விட்டால், குதூகலமாக பேசி அவனையே நோட்டம் விடவும் செய்தனர்.

அந்த மாலை மொத்தமாக சுற்றி வந்து, பல முறை விக்ரமையும் சைட் அடித்து தள்ளி விட்டு வெளியே வந்தால், அங்கு விக்ரம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறான்.

உடனே சித்தாரா, “அவன் கிட்ட இப்ப போய் பேசுறேன் பாரு” என்று தோழிகளிடம் கூறி விட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்று விட்டாள். அவளது தோழிகள் சித்தாராவின் செயலில் வாயைப்பிளந்தனர்.

விகரம் மனதில் அழியாமல் காக்கும் பொக்கிஷ தருணம் அது. அது போல் எல்லாம் குறும்பாக பேசும் சித்தாரா ஏனோ தொலைந்து போனாள். அல்லது அவன் தான் தொலைத்து விட்டான் என்று சொல்ல வேண்டும்.

உடல் களைத்துப்போக, தண்ணீரை விட்டு வெளியே வந்து நின்றான். உடலில் இருந்த தண்ணீர் காயும் வரை அங்கிருந்த இருக்கையில் படுத்து, கை இரண்டையும் தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டான்.

வானம் வெறுமையாக இருந்தது. நிலவும் இல்லை. நட்சத்திரமும் இல்லை. மொத்தமும் கருமையாக காட்சியளித்தது. அவனது வாழ்வைப்போல.

தண்ணீர் பாதி உளர்ந்ததும் குளிரெடுக்க, டீசர்ட்டை மாட்டிக் கொண்டு நேராக அறைக்குச் சென்றான்.

கதவை திறக்கும் போது விதார்த்தை பார்க்க வேண்டும் என்று தோன்ற, சித்தாராவின் அறையை திறந்து உள்ளே சென்றான்.

அங்கு யாரும் இல்லை.‌ அறைக்குள்ளும் வெளியேயும் தேடியவனுக்குள் சிறு அதிர்வு.

“இன்னேரத்துல எங்க போனா? விதுவயும் காணோம்?” என்று வேகமாக தன் அறைக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டு, கைபேசியை எடுத்தபடி கீழே வந்தான்.

புத்தகம் இருக்கும் இடத்தை ஒரு முறை பார்த்து விட்டு, மற்ற இடங்களையும் பார்த்தான்.

சித்தாரா இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. உடனே தரைதளத்திற்கு வந்து சேர்ந்தான். வேறு எங்கும் சித்தாரா இருக்க வாய்ப்பில்லை.

சமையலறையில் இருப்பாளோ என்று பார்த்தவனுக்கு, அதுவும் வெறுமையாக இருக்க, அப்போது தான் அல்லியின் நினைவு வந்தது. விறுவிறுவென அல்லியின் அறைக்கு வந்தவன், கதவை தட்ட கையை தூக்கி விட்டு சட்டென நிறுத்தினான்.

உள்ளே விதார்த்தும் தூங்கிக் கொண்டிருந்தால், வீணாக பதட்டப்படுத்தியது போல் ஆகிவிடுமே? கையை இறக்கியவன் கதவை ஒருமுறை நன்றாக பார்த்து விட்டு, வாசல் கதவை நோக்கி நடந்தான்.

சாவியை எடுத்து கதவை திறந்து வெளியே வந்தவன், பக்கவாட்டில் சுற்றிச் சென்று அல்லியின் அறை சன்னலை அடைந்தான். திரைச்சீலைகள் மூடி இருந்த போதும், அதன் மெல்லிய அசைவில் சித்தாராவும் படுத்திருப்பது தெரிந்தது. அவளிருந்தால் விதார்த்தும் இருப்பான் என்று தோன்ற, விக்ரமிடமிருந்து பெருமூச்சு வந்தது.

அங்கு நிற்க முடியாமல் திரும்பி நடந்தான். வாசலை நெருங்கும் போது கைபேசி அதிர ஆரம்பித்தது.

வாகீசனின் பெயரை பார்த்து விட்டு, காதில் வைத்தான்.

“மச்சான் என்ன பண்ணுற?”

“நடுராத்திரி கால் பண்ணி என்ன பண்ணுறனு கேட்குறான் பாரு வெண்ண” என்று விக்ரம் எரிந்து விழ, “என்ன மச்சி சூடா இருக்க? எதுவும் டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” என்று வாகீசன் ரகசிய குரலில் கேட்டான்.

“போடாங்… வாய்ல கெட்ட கெட்ட வார்த்தையா வருது. திட்ட வேணாம்னு பார்க்குறேன். அவன் அவன் இருக்க கடுப்புல, போன போட்டு என்ன பண்ணுற ஏது பண்ணுறனு விசாரணை. வச்சுட்டுபோடா”

“ஏய் ஏய்.. மச்சி வச்சுடாத” என்று வாகீசன் கத்த, “சொல்லித்தொலை” என்று விக்ரம் அதற்கும் காய்ந்தான்.

“என்னா மேட்டரு?”

“எனக்கு பொண்டாட்டியா ஒருத்தி வந்துருக்காளே, அவ என்னை நல்லா வச்சு செய்யுறா”

“ஹாஹா.. வாழ்த்துக்கள்டா”

வாகீசன் வாழ்த்தை சொல்லி விட்டு, திட்டு மலையை வாங்கிக் குவித்தான்.

“சரி போதும். மூச்சு விடு. இவ்வளவு நாளா சிங்கிளா சந்தோசமா சுத்துன. இப்ப உனக்கும் பொண்டாட்டி பிரச்சனை வந்தத பார்க்கும் போது ஒரு சந்தோசம். அதுல எதோ சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா? போனே சூடாகுற அளவு திட்டுவ?”

“எரிச்சல கிளப்பாத. அப்புறம் இன்னும் பேசிடுவேன்”

“என்னடா இவ்வளவு டென்சன்? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என்று வாகீசன் தீவிரமாக கேட்க, விக்ரம் தலைமுடியை கோதியபடி பெருமூச்சு விட்டான்.

“விக்ரம் கேட்குறேன்ல?” என்று வாகீசன் அதட்ட, மளமளவென எல்லாவற்றையும் ஒப்பித்திருந்தான்.

வேறு யாரிடமும் அவனால் மனம் விட்டு பேசவும் முடியாது. வாகீசனிடம் சொல்லவில்லை என்றால் தலை வெடித்து விடும்.

“ச்சே.. எவ்வளவு கேவலமான அண்ணன்டா நான்? விசாகா பண்ணத விட, அதுக்கு காரணம் நான்னு தெரியும் போது என் மேல தான்டா கோபம் வருது” என்று அங்கிருந்த கல்லை எட்டி உதைத்தான்.

“டேய்.. நீங்க லவ் பண்ணீங்க. கல்யாணம் பண்ணீங்க. உன் தங்கச்சி பண்ணது தப்புடா. அது எப்படி ஒன்னாகும்?”

“நான் கல்யாணம் பண்ணது இவங்களுக்கு தெரியாதே. அப்ப நான் அவங்க நினைப்புல இவ்வளவு கேவலமானவன் தான? தாரா கேட்குறா.. தலைய நிமிர்த்திட்டு நீ பண்ணத உன்னால சொல்ல முடியுமானு. அப்படியே எங்கயாவது போய் முட்டிக்கலாம்னு இருந்துச்சு. இவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்கனு கல்யாண விசயத்த மறைச்சுட்டேன். அதுக்கு இப்படி டுவிஸ்ட் வரும்னு நினைக்கவே இல்ல”

“ஒருத்தர் தப்ப பண்ணா அத பார்த்து நாமலும் அதையே பண்ணனும்னு அவசியம் இல்ல. ஏன் உன் அக்கா வேதா லவ் மேரேஜ் தான். அவங்க வாழ்ந்த மாதிரி உன் தங்கச்சியால இருக்க முடியாதா? உன்னை ப்ளேம் பண்ணிக்காத. அப்புறம் நீ உன் பிஸ்னஸயும் வேலையையும் கொஞ்சநாள் மூடி வச்சுட்டு, குடும்பத்த நல்லா கவனி. அப்பதான் சரியா இருக்கும். இல்லனா இப்படித்தான் ஆளாளுக்கு ஒன்ன இழுத்துட்டு வருவாங்க”

“ப்ச்ச்..”

“இன்னும் என்ன?”

“விடு. நீ எப்படி‌ இருக்க? ட்ரிப் எப்படி போகுது? மேக்னா எப்படி இருக்கா?”

“ட்ரிப் நல்லா தான் போகுது. மேக்னாவுக்கு என்ன? என்னை கொடுமை படுத்திட்டு சந்தோசமா இருக்கா” என்று முடிக்கும் போதே, “ஆஆஆ” என்று அலறினான்.

“எதுக்குடி அடிக்கிற?’

“நான் உன்னை கொடுமை படுத்துறனா?” என்று அவர்கள் இருவரும் சண்டை போட, சிறு புன்னகையுடன் கைபேசியை காதை விட்டு தள்ளி விட்டு, மரத்தடியில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் விக்ரம்.

“டேய்.. இருக்கியா?” என்று வாகீசன் கத்த, “ம்ம்” என்றான்.

“சரி இத விடு. உன் பையன் எப்படி இருக்கான்? தூங்கிட்டானா?”

“ம்ம்.. தூங்கிருப்பான்”

“தூங்கிருப்பானா? என்னடா சொல்லுற? உன் கூட இல்லையா?”

“அந்த கொடுமைய ஏன்டா கேட்குற? எல்லா நேரமும் அவன் கூட விளையாடலாம். நைட் ஆனா தூக்கிட்டு தாரா அவ ரூம்க்கு போயிடுறா. நைட் நடுவுல முழிச்சா அவள தேடுவானாம். ஒரு நாள் கூட என் கூட தூங்க விடுறது இல்ல. ஆனா இப்ப சித்தி கூட படுத்துருக்கா விதுவோட”

“உனக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான். அதான் உன் சித்தி கூட விதுவும் சித்ராவும் தூங்குறாங்களே. அதுபோல உன் ரூம்ல விதுவ தூங்க வச்சு, அங்கயே சித்ராவ தங்க வை. இது கூட செய்யாம புலம்பிட்டு இருக்க? இங்க பாரு விக்ரம்.. நீ பண்ண காரியத்த மறந்து மன்னிக்குறது எல்லாம் சித்ராவுக்கு ரொம்ப கஷ்டம். நீ தான் ஸ்டெப் எடுக்கனும். சும்மா குடும்ப பிரச்சனையில மாட்டிட்டு இருக்காத. உன் புள்ளையையும் சித்ராவயும் நீ தான் நெருங்கி போகனும்.”

வாகீசன் சொல்வது விக்ரமுக்கும் சரியாகவே பட்டது.

“பார்ப்போம்” என்று அவன் முடித்து விட, “அப்புறம் நாளைக்கு இந்தியா வந்துடுவேன். மேக்னா அவ அம்மாவ பார்க்க போறா. போயிட்டு வர ரெண்டு நாள் ஆகும். அப்புறம் கிளம்பி சித்ராவயும் உன் பையனயும் பார்க்க வர்ரோம்.”

“ஓகேடா வா” என்று கூறி விட்டான்.

பிறகு தொழில் பக்கம் பேச்சு திரும்ப, பேசி விட்டு நள்ளிரவு தாண்டிய பின்பே வீட்டுக்குள் வந்தான்.

அல்லியின் அறையை ஒரு முறை பார்த்துவிட்டு, விறுவிறுவென லிஃப்ட் நோக்கிச் சென்று விட்டான்.


விடிந்ததும் வழக்கமான நேரத்தில் சித்தாரா விழித்துக் கொண்டாள். அல்லியும் விதார்த்தும் நல்ல உறக்கத்தில் இருக்க, அவர்களை தொந்தரவு செய்யாமல் மேலே வந்து சேர்ந்தாள்.

நீச்சல் உடையை மாற்றிக் கொண்டு, மேலே டவல் உடையை போட்டுக் கொண்டு கீழே வர, நிச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை அப்போது தான்‌ மாற்றிக் கொண்டிருந்தனர் இருவர்.

தோட்ட வேலைகளை இருவர் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பெண் வாசலை பெறுக்கிக் கொண்டிருந்தாள். இவர்கள் எல்லோருமே பின்னால் இருக்கும் அவுட் ஹவுஸில் இருப்பவர்கள். காலையில் விடிந்தும் விடியாமலும் வந்து வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

சித்தாராவை பார்த்து விட்டு அவர்கள் நிற்க, “வேலைய பாருங்க” என்றவள், நேராக ஜிம் பகுதிக்குள் சென்று விட்டாள்.

தண்ணீர் மாற்றி முடிக்கும் வரை, சிறிது நேரம் ட்ரெட் மில்லில் நடந்து விட்டு வந்தாள்.

இப்போது அங்கு யாருமே இல்லாமல் இருக்க, மேலாடையை களைந்து விட்டு தண்ணீரூக்குள் இறங்கினாள்.

நேற்று நடந்ததையும் இனி நடக்கப்போவதையும் சித்தாரா யோசித்துக் கொண்டே நீந்திக் கொண்டிருக்க, விசாகா அங்கு வந்து சேர்ந்தாள்.

நீச்சல் உடையில் சித்தாராவை பார்த்து, அவளது விழிகள் தெறித்து விழும் போல் விரிந்தது.

‘இவ என்ன இவ்வளவு மார்டனா இருக்கா?’ என்று மனதில் பொறாமையும் எழுந்தது.

விசாகாவை பார்த்து விட்டு, சித்தாராவும் ஆச்சரியப்பட்டாள்.

“ஸ்விம் பண்ண வந்தியா?” என்று கேட்டவள், அவளது உடையை பார்த்தாள்.

சுடிதாரோடு எப்படி நீந்துவாள்? என்று சந்தேகம் வந்தது.

விசாகா மறுப்பாக தலையசைத்து விட்டு, “உன்னை பார்க்க தான் வந்தேன்” என்றாள்.

“என்ன விசயம்?” என்று கேட்டவள், கரை ஓரம் வந்து சுவற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“நேத்து ஏன் அப்படி பண்ணுன?”

சித்தாராவிற்கு இந்த கேள்வி பெரும் ஆச்சரியத்தை கிளப்பியது.

“என்ன பார்க்குற? சொல்லு. ஏன் அப்படி பண்ண?”

“ஹேய்.. உன்னை ஒரு தத்தினு நினைச்சேன். இவ்வளவு தூரம் யோசிக்கிற. ஆச்சரியமா இருக்கு” என்று கூறியவள், நீந்தி படிகளில் ஏறி வெளியே வந்தாள்.

“எனக்கு இன்னும் நீ பதில் சொல்லல” என்று விசாகா கேட்க, “இவ்வளவு யோசிச்ச நீ அதையும் யோசிக்க வேண்டியது தான?” என்று கேட்டபடி துண்டை எடுத்து முகத்தை நன்றாக துடைத்தாள்.

“என் மேல உனக்கு அப்படி என்ன கோபம்? நான் உன்னை ஒன்னுமே பண்ணலயே” என்று ஆதங்கமாக கேட்டாள்.

டவல் உடையை மாட்டி கயிறை கட்டி முடிச்சிட்டவள், நக்கலாக சிரித்தாள்.

“நீ எனக்கு எதுவும் பண்ணல தான். ஆனா உன் அண்ணனும் அக்காவும் பண்ணிட்டாங்களே” என்று கிண்டலாக கூற, “அவங்க பண்ணதுக்கு என்னை இப்படி அசிங்கபடுத்துவியா?” என்று கத்த ஆரம்பித்தாள்.

“பண்ணக்கூடாது தான். ஆனா இத சொல்லிக் கொடுத்தது உன் கூட பிறந்தவங்க தான். அவங்கள தான் நீ குறை சொல்லனும்”

“அவங்க மேல பழி போடாத. நீ என்னை இப்படி அசிங்கபடுத்திருக்க கூடாது” என்று விசாகா விரல் நீட்டி திட்ட, சித்தாரா நன்றாக சிரித்தாள்.

“விசாகா.. உனக்கு இன்னும் விசயம் சரியா விளங்கல போலயே” என்று பேசியபடி விசாகாவின் தோளில் கை போட, வெடுக்கென தட்டி விட்டாள்.

“அட..!” என்றவள், மீண்டும் தோளில் கைபோட்டு, அவளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“ஆக்ட்சுவலி லவ்வரோட ரூம் போட்டு டைம் ஸ்பெண்ட் பண்ணுறதெல்லாம் பெரிய விசயமே இல்ல. அதெல்லாம் அவங்க அவங்க பர்ஸ்னல்னு கண்டுக்காம போற ஆளு தான் நான். ஆனா பாரு.. உன் அண்ணனுக்கும் அக்காவுக்கும் நீ செல்லமாகிட்ட. உன் பர்ஸ்னல இழுத்தா தான் அவங்கள நிக்க வச்சு கேள்வி கேட்க முடியும்னு, அன்னைக்கு ஆண்ட்டிய வேணும்னே கூட்டிட்டு வந்தேன்” என்று கூறி விசாகாவை அதிர வைத்தாள்.

இருவரும் லிஃப்ட்டில் நுழைந்ததும் பட்டனை அழுத்தியவள், விசாகாவின் தோளில் இருந்து கையை எடுத்து விட்டு, “உன் அண்ணன் சொன்னான். என்னை அடிச்சா தான் எங்கப்பாவுக்கு வலிக்கும்னு. அதான் அவனுக்கு வலிக்கனும்னு உன்னை இழுத்தேன்” என்றாள்.

விசாகா வெறித்துப்பார்த்தாள். அவளுக்கு எதையும் ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய அந்தரங்கம் வேண்டுமென்றே கடைபரப்பப்பட்டதை அவளால் ஏற்க முடியவில்லை.

“உன்னை ஏற்கனவே அந்த ஹோட்டல்ல உன் ஆளோட பார்த்துட்டேன். இது உனக்கு ஃப்ர்ஸ்ட் டைம் இல்லனு எனக்கு நல்லா தெரியும். அது உன்னோட சொந்த விசயம். நீ யார் கூட இருக்கனும்? யார லவ் பண்ணனும் நீ தான் முடிவு பண்ணனும். அதுல தலையிடுறது எல்லாம் தப்புனு தான் சொல்லுவேன். ஆனா, உன் அண்ணன பழி வாங்கனுமே. அதுக்கு எனக்கு எதாவது துருப்புச்சீட்டு வேணும்ல? நீ தான் கிடைச்ச. நேத்து உன் அண்ணன் தலை நிமிர முடியாம சொந்த குடும்பத்து முன்னாடியே அவமானப்பட்டு உட்கார்ந்திருந்தான் பார்த்தியா? அது அதுக்காகத்தான் அத்தனையும் பண்ணேன்”

இதழில் வளைந்த ஏளன சிரிப்போடு அவள் பேசப்பேச, விசாகாவிற்கு நெஞ்சம் வலித்தது.

“நான் இப்படித்தான் உன் அக்காவாலயும் அண்ணனாலயும் என் அப்பா முகத்த நிமிர்ந்து பார்க்க முடியாம, தலை குனிஞ்சு நின்னேன். அதே அவமானத்த உன் அண்ணனுக்கு திருப்பிக் கொடுக்குறது தப்பில்லையே?”

போலி ஆச்சரியத்தோடு கேள்வி கேட்டவள், திறந்து கிடந்த கதவை தாண்டி வெளியே வந்தாள். திரும்பி விசாகாவை பார்த்தவள், “இப்ப நேரா போய் உன் அண்ணன் கிட்ட நான் இதெல்லாம் சொன்னேன்னு சொல்லு. அப்புறம் அவன் என்ன செய்யுறான்னு பாரு” என்று விட்டு திரும்பினாள்.

சட்டென நின்றவள், “நீங்க எல்லாரும் வில்லிக்கு புதுசுடா. நான் எப்படித் தெரியுமா? நீங்க வில்லினா நான் வில்லாதி வில்லி. சாஃப்ட்டா டீல் பண்ணுற ஹீரோயின் கிடையாது. அதுனால என்னை இனி சீண்டாம இருக்கது உங்களுக்கு நல்லது. ஏன்னா.. என் கிட்ட என்ன வருதோ அத பத்தா திருப்பி கொடுப்பேன். இதையும் சேர்த்து சொல்லு உன் அண்ணன் கிட்ட” என்றவள் வேகமாக அறையை நோக்கி சென்று விட்டாள்.

தொடரும்.

Leave a Reply