சித்திரமே 21
![]()
காலையில் தயாராகி கீழே வந்த சித்தாரா, ஹாலை பார்வையால் அலசினாள். வேலை செய்யும் பெண் மட்டும் எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டிருக்க, “வேலை முடிஞ்சதா?” என்று வினவினாள்.
“முடிஞ்சது மேடம்” என்றதும் விரலசைவில் அங்கிருந்து அனுப்பி விட்டாள்.
“ஆண்ட்டி” என்று குரல் கொடுத்தபடி சோபாவில் அமர, “என்னம்மா?” என்று விதார்த்தோடு எட்டிப்பார்த்தார்.
“விதுவுக்கு சாப்பாடு கொடுக்கனும். ரெடியா?”
“இதோ” என்று கூறி விட்டு, உடையை அணிவித்துத் தூக்கிக் கொண்டு கொண்டு வந்தார்.
மூவருமாக உணவை முடித்ததும், வேதா இறங்கி வந்தாள். அவளை கடைக்கண்ணால் பார்த்து விட்டு, “விது.. வெளிய போய் விளையாடு.” என்றாள் சித்தாரா.
மகனும் துள்ளிக்குதித்து ஓடிவிட, “ஆண்ட்டி இந்த வீட்டு வரவு செலவு கணக்கெல்லாம் எனக்கு வேணும். எடுத்துட்டு வாங்க” என்று கேட்டாள்.
அவளது குரல் காதில் விழுந்தும், வேதாவுக்கு எரிச்சலாக இருந்தது. நேற்று அவள் பேசிய வார்த்தையை எல்லாம் தாங்கவே முடியவில்லை. விசாகாவிடம் புலம்பலாம் என்றால், அவள் அறையை அடைத்துக் கொண்டு வெளியே வரவில்லை. கணவனிடம் புலம்பினால், உடனே வா என்று கையோடு அழைத்துச் சென்றுவிடுவான். அவளுக்கு இந்த சித்தாராவை இப்படியே விட்டு விட்டு கிளம்ப கொஞ்சமும் மனமில்லை.
சொத்தை எழுதி வாங்கியவள், இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வாள். இவளை துரத்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், உடனே துரத்த வேண்டும் என்று வேதா காத்துக் கொண்டிருந்தாள்.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், சித்தாரா சோபாவின் நடுவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ஒரு போனாவை கையில் வைத்து சுழற்றியபடி, அல்லி கொண்டு வரப்போகும் செலவு கணக்கை பார்க்க காத்திருந்தாள்.
வேதா அமர்ந்ததும் அவள் உண்ணும் சாலட் வைக்கப்பட்டது. அதை எடுத்து வாயில் வைத்தவளுக்கு, எரிச்சலாக இருந்து. உப்பு சப்பில்லாத அந்த உணவு வெறுத்துப்போனது. ஆனால் வேறு எதை உண்டாலும், உடல் எடை கூடி விடுகிறது. அந்த கடுப்போடு சாப்பிட்டபடி, காதை ஹால் பக்கம் வைத்திருந்தாள்.
“இந்தாமா” என்று அல்லி ஒரு நோட்டை நீட்டினார்.
தன் மாமியார் ஏற்படுத்தியபழக்கம். செலவுகளை சரியாக எழுதி வைத்துவிட வேண்டும். அப்போது தான் பணம் என்னவாகிறது என்று கணக்கு பிடிபடும் என்று கூறி இருந்தார். அதை இன்றும் அல்லி விட்டது இல்லை.
ஈஸ்வரி இறந்த பிறகு யாரும் அவரிடம் பெரிதாக கணக்கு கேட்பது இல்லை. இன்று சித்தாரா கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும், அவளிடம் கணக்கை கொடுக்க அவர் தயங்கவில்லை.
அந்த நோட்டை வாங்கித் திறந்தவள், “உட்காருங்க. பார்ப்போம்” என்று அல்லியை அமர வைத்துக் கொண்டாள்.
முதலில் கார்களுக்கு ஆகும் செலவு தான் கண்ணில் விழுந்தது.
“இது என்ன இவ்வளவு செலவாகுது? விக்ரம் கார அவன் எடுத்துக்கிறான். மத்த மூணு காருக்கும் இவ்வளவு செலவா?” என்று கேட்டவள், “ஓவரா கார்ல சுத்துறது சரியில்லயே” என்றாள்.
அங்கு விசாகா வெளியே போகத்தயாராகி வர, “ஏய் விசாகா நில்லு” என்று நிறுத்தினாள்.
அவள் நின்று சித்தாராவை முறைக்க, “எங்க கிளம்பிட்ட நீ?” என்று பதிலுக்கு முறைத்தபடி கேட்டாள்.
விசாகா பதில் சொல்லாமல் நிற்க, “போய் கார் டிரைவர்ஸ வர சொல்லு” என்று அதட்டினாள்.
“நான் ஏன் போகனும்?”
“இப்ப போறியா இல்லையா?” என்று சித்தாரா குரலை உயர்த்த, அடித்து விடுவாளோ என்று பயந்து விட்டாள் விசாகா.
நேற்று வாங்கியதே இன்னும் வலித்தது. அதுவும் கை பயங்கரமாக வலித்தது. மருந்தை தடவி ஊதிக்கொண்டே இருந்தாள்.
அதனால், வெடுக் வெடுக்கென நடந்து சென்று, வாசலில் இருந்தவர்களை அழைத்து வந்தாள்.
“இங்க பாருங்க.. இனிமே கார் நான் சொல்லாம எடுக்க கூடாது. என் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் கார யூஸ் பண்ணனும். ஒழுங்கா இருந்தீங்கனா இந்த மாசத்துல இருந்து உங்க சம்பளம் கூடும். புரியுதா? கிளம்புங்க” என்று கூறி விட்டு அனுப்பி விட்டாள்.
வேதா பல்லைக்கடித்தபடி உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள். எல்லாம் காதில் விழத்தான் செய்தது.
“இது என்ன மேக் அப்க்கு இவ்வளவு செலவு? ஏன் ஆண்ட்டி நீங்க போடுறீங்க?” என்று அவரது முகத்தை வேண்டுமென்றே உத்து பார்த்தாள்.
“அய்யோ நான் இதெல்லாம் போட மாட்டேன்” என்று அல்லி வேகமாக மறுக்க, “தெரியுது. புவடர் போடக்கூட யோசிக்கிறீங்க” என்று சலித்துக் கொண்டாள்.
உடனே விசாகாவிடம் திரும்பி, “நீ மேக் அப் அள்ளி பூசிக்கிறிமா?” என்று வேண்டுமென்றே கேட்டு வைத்தாள்.
“நானா? நான் ஒன்னும் அள்ளி பூசிக்கல. நான் யூஸ் பண்ணுறது நாலஞ்சு ஐட்டம் தான். அதுவும் என்னோட பாக்கெட் மணில ப்ராண்டட்டா வாங்கி வச்சுடுவேன். பல மாசத்துக்கு இருக்கும். வீட்டு செலவுல நான் எதுக்கு வாங்குறேன்?” என்று விசாகா குதித்தாள்.
“அப்புறம் எதுக்கு வீட்டு செலவுக்கு கொடுத்த பணத்துல இவ்வளவு மேக்அப் ஐயிட்டம் வருது?”
“அது.. வேதா வாங்கும்மா” என்று அல்லி பதில் சொன்னார்.
“ஓஓ… அவளா? அப்ப சரி” என்று சுலபமாக விட்டு விட்டாள்.
வேதா வாயில் வைத்த உணவை விழுங்காமல் ஆச்சரியத்தில் பார்க்க, விசாகாவும் அல்லியும் அதிசயமாக சித்தாராவை பார்த்தனர்.
“ஏன்? அக்கா வாங்குனா ஓகேவா?” என்று விசாகா கேட்டு விட, “அவ கிழவி விசாகா. அவ மூஞ்சிய இதெல்லாம் பூசி மறைக்கலனா எப்படி? அவ வீட்டுல வேற வாழா வெட்டியா துரத்திட்டாங்க. இதையாச்சும் வச்சுட்டு போகட்டும்” என்று பேனாவில் எதையோ எழுதியபடி பதில் சொன்னாள் சித்தாரா.
வேதாவுக்கு சுறுசுறுவென ஏறி விட்டது. சாப்பாடை அப்படியே விட்டு விட்டு எழுந்து வந்தாள்.
“யாருடி கிழவி? என்னை பார்த்து எப்ப பார்த்தாலும் இதையே சொல்லுற? நீயும் பிள்ள பெத்தவ தான். பெரிய உலக அழகி மாதிரி பீத்திக்காத. இப்படி எல்லாம் ட்ரெஸ் பண்ணிட்டா நீ பிள்ளை பெத்தவங்குறது மாறிடுமா?” என்று வேதா கத்தோ கத்து என்று கத்திக் கொண்டிருக்க, அதை கேட்க வேண்டியவளோ கொஞ்சம் கூட சலனமில்லாமல், நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.
‘மறுபடியுமா? என்னை விடுங்கடா. அடி வாங்க முடியாது’ என்று விசாகா வேகமாக நழுவ, “ஏய் நில்லு” என்று சித்தாரா அவளை அதட்டினாள்.
உடனே நின்று விட்டாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று விசாகாவிடம் பேசியவள், வேதாவை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
“நானா?”
“உன் கிட்ட தான கேட்குறேன்? அப்புறம் என்ன நானானு திருப்பி ஒரு கேள்வி?” என்று சித்தாரா பாய, விசாகா பம்மி விட்டாள்.
“நான் என்ன பண்ணேன்?” என்று அப்பாவியாக நின்று விட்டாள்.
நேற்று கொடுத்த அடியின் விளைவு என்று சித்தாராவிற்கு நன்றாக புரிந்தது. இதை சிறுவயதிலேயே செய்து திருத்தி இருக்க வேண்டும். செய்யாமல் விட்டு விட்டனர்.
“அத தான் கேட்குறேன். என்ன செய்யுற? படிச்சு முடிச்சு எத்தனை வருசம் ஆகுது?”
“ரெண்டு வருசம்”
“இவ்வளவ செலவு பண்ணி படிச்சு கிழிச்சுட்டு, இப்படி வெட்டியா ஊர் சுத்துற. வெட்கமா இல்ல?”
விசாகா என்ன பேசுவதென்று புரியாமல், வேதாவை பார்த்தாள். அவளுக்கு புசுபுசுவென ஏறியது.
“ஏய்…” என்று வேதா ஆரம்பிக்க, “அங்க என்ன லுக்கு? இங்க பார்த்து பேசு” என்று சித்தாரா விசாகாவை குரல் உயர்த்தி அதட்டி, நோட்டை பட்டென கீழே வைக்க, அதில் வேதாவும் அதிர்ந்து விட்டாள்.
அவள் வாய் கப்பென மூடிக்கொள்ள, விசாகா வேறு வழியில்லாமல் சித்தாராவிடம் பணிந்து விட்டாள்.
“வேலைக்கு போகனும்னு நினைப்பிருக்கா? இல்லையா? அடுத்தவன் சம்பாதிச்சு போட்டு தின்னுட்டே இருந்தா இப்படித்தான் கொழுப்பு கூடிப்போகும். நாளையில இருந்து நீ விக்ரம் ஆபிஸ்க்கு போற. உழைச்சு சம்பாதிக்கிற. அப்ப தான் நேரத்தோட அருமையும் பணத்தோட அருமையும் உனக்கு விளங்கும்”
“அத நீங்க சொன்னா எப்படி? அண்ணன் சொல்ல வேணாமா? அண்ணன் ஒத்துக்காது”
“உங்கண்ணன் தான?” என்று கேட்டவள் வேகமாக சோபாவின் அருகே இருந்த இன்டர்காமை கையில் எடுத்தாள்.
அதில் விக்ரமின் அறை எண்ணை அழுத்தினாள். அவன் அந்த பக்கம் எடுத்து, “எஸ்” என்றான்.
வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவன், கைபேசியில் பேசி முடித்து வைக்க, இன்டர்காம் ஒலித்தது. அதிகமாக சமையலறையில் இருந்து தான் வரும். சாப்பாடு எப்போது எடுத்து வருவது என்று கேட்க. அப்படி நினைத்து காதில் வைக்க, சித்தாரா பேசினாள்.
“கிளம்பிட்டியா?”
“தாரா.. என்ன விசயம்?”
“கிளம்பிட்டனா கீழ வா. முக்கியமான விசயம் பேசனும்” என்று கூறி துண்டித்து அருகே வைத்து விட்டாள்.
“வருவான். பேசிக்கலாம். அதுவரை இங்கயே நில்லு” என்று அதட்டலாக கூறி விட்டு, அடுத்த கணக்கை பார்த்தாள்.
உணவை பொறுத்தவரை அந்த வீட்டில் பெரிய செலவு எதுவுமே இல்லை. விக்ரம் பல நேரம் வெளியே சாப்பிட்டு விடுவான். விசாகாவும் அப்படித்தான். வேதாவோ உணவை பார்த்தாலே ஓடுவாள். அல்லி தனக்காக தான் சமைத்தார். அவ்வப்போது வரும் மருமகன் குடும்பம், எப்போதாவது சாப்பிடும் விக்ரமிற்காகவும் சமைப்பதில், பெரிய செலவு எதுவுமே இல்லை.
“சமையல் செலவுல மட்டும் இவ்வளவு சிக்கனமா இருக்கீங்களேடா.. அமேசிங்” என்று சித்தாரா சிரிப்போடு கிண்டலாக பாராட்ட, அல்லியும் சிரித்து விட்டார்.
விக்ரம் வேகமாக வந்தான். எல்லோரும் ஒன்றாக கூடியிருப்பதை பார்த்து விட்டு, ‘மறுபடியும் பிரச்சனையா?’ என்று மனதில் அலறி விட்டான்.
ஆனால் வெளியில் எல்லோரையும் ஆராயும் பார்வையோடு வந்து நின்றான்.
“என்ன விசயம்?” என்று கேட்க, தாரா அவனை நிமிர்ந்து பார்க்காமல் பேனாவை எதிரிலிருந்த சோபாவை நோக்கி நீட்டி, அமருமாறு சைகை செய்தாள். அவனும் அமர்ந்து விட்டான்.
“நாளையில இருந்து விசாகா உன் ஆபிஸ்க்கு வருவா. அவளுக்கு ஒரு ட்ரைனி போஸ்டிங் கொடு. அண்ட் ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடு. நீ கொடுக்குற சம்பளத்துல தான் இனி அவளோட செலவ அவ பார்த்துக்கனும். ஸ்கூட்டி மெயின்டனனஸ் உட்பட. தினமும் ஆபிஸ் வந்தா தான் மத்த வேலைக்கு நேரமிருக்காது. என்ன?” என்று எழுதிக்கொண்டே பேசியவள், கடைசி வார்த்தையில் விக்ரமை நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்தினாள்.
விக்ரம் இமை சிமிட்டாமல் சித்தாராவை பார்த்தான். நேற்று இரவு முழுவதும் தங்கையை இனி எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று யோசித்து நொந்து கொண்டிருந்தான். அவளை வீட்டில் அடைக்க முடியாது. அவளது காதலயும் தடுக்க முடியாது. ஆனால் பாதுகாக்க வேண்டும்.
இப்போது சித்தாரா அதற்கு சுலபமான முடிவை கொடுத்து விட்டாள். அலுவலகத்திற்கு தினமும் வந்தால், அவனது கட்டுப்பாட்டில் இருப்பாள். அதுவும் ட்ரைனியாக வந்தால், வேலை எக்கச்சக்கமாக இருக்கும். வேறு யோசிக்க நேரமே கிடைக்காது.
“ஓகே. பட் ட்ரைனியா வந்தா தங்கச்சினு சலுகை எதுவும் கிடைக்காது. எல்லாருக்கும் என்ன வேலையோ அது தான் உனக்கும். என்ன வர்ரியா? என்று தங்கையிடம் கேட்டான்.
“வருவா. வேலை பார்த்து தான் ஆகனும். ஆபிஸ் ஸ்கூட்டர்ல தான் போயிட்டு வரனும். ஓட்டத்தெரியாதுனா ஓட்ட கத்துக்க. அதுவரை பஸ்ல போ. உன் ட்ரான்போர்ட் செலவு எல்லாம் இனி நீ சம்பாதிக்கிற பணத்துல தான் நடக்கனும். சொந்தகால்ல நின்னுட்டு, அப்புறமா வாழ்க்கையில வேறத பத்தி யோசி. புரியுதா?”
மனம் மாட்டேன் என்று அடம்பிடித்தாலும், வெளியே தலையாட்டியவள், விறுவிறுவென படிகளில் ஏறி மேலே ஓடினாள்.
விக்ரமுக்கு சற்று நிம்மதியாக இருக்க, உடனே சித்தாராவிற்கு அது பொறுக்கவில்லை.
“நீ எல்லாம் ஒரு குடும்பத்தலைவனா?” என்று கேட்டு விட்டாள்.
“வாட்?”
“என்ன வாட் வடைகறினு? உன் அக்கா பிறந்த வீட்டுல இவ்வளவு நாளா உட்கார்ந்து இருக்கா. புகுந்த வீட்டுக்கு அனுப்பி வாழவைக்கனும்னு கூட உனக்கு தோணல. நீயெல்லாம் ஒரு குடும்பத்தலைவன். சும்மா பிஸ்னஸ பார்த்து சம்பாதிச்சு போட்டா போதாது. வீட்டயும் நிர்வாகம் பண்ண கத்துக்க” என்று எரிச்சலாக சொல்லி விட்டு, “உன் மாமாவுக்கு போன போட்டு எப்ப உன் அக்காவ கூட்டிட்டுப் போறாருனு கேளு” என்று வேதாவை வைத்துக் கொண்டே பேசினாள்.
வேதா தம்பியை பார்க்க, அவன் சுந்தரை அழைத்தே விட்டான்.
“அக்கா அங்க வருதாம் மாமா. நான் வந்து விடட்டுமா? உங்களுக்கு வேலை இருக்கும்ல?” என்று கேட்டு வைத்தான் விக்ரம்.
வேதா இப்படி ஒரு அதிரடியை எதிர்பார்க்காமல் ஆடிப்போய் நிற்க, விக்ரம் பேசி விட்டு வைத்து விட்டான்.
“அக்கா.. பத்து நிமிஷத்துல பேக் பண்ணிடு. நான் சாப்பிட்டு உன்னை விட்டுட்டு ஆபிஸ் கிளம்புறேன்” என்று முடித்து விட்டு எழுந்து சென்றான்.
‘பரவாயில்ல. கரெக்ட்டா பாயிண்ட்ட பிடிச்சுட்டான். நான் தான் சரினு குதிச்சுட்டு இருந்த ஆன்டி ஹீரோவ இப்படி ஆக்கிட்டாளே வெண்பனி. உண்மையாவே ஆன்டி ஹீரோ எல்லாம் உள்ளுக்குள்ள டம்மி பீஸுங்க தானோ? பணமும் ஸ்டைலும் மட்டும் வச்சுட்டு திமிர் பிடிச்சு திரிஞ்சா, அவன் ஆன்டி ஹீரோவா? என்னவோ எனக்கு வேலை சுலபமா முடிஞ்சா சரி’ என்று நினைத்துக் கொண்டு கணக்கை புரட்டினாள்.
தொடரும்.
