சித்திரமே 23

Loading

அக்காவை விட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்த விக்ரம், சில நிமிடங்கள் வேலையை பார்க்காமல் அமர்ந்து விட்டான்.

நேற்று நீச்சல் குளத்தில் நீந்தும் போது, சித்தாராவை காதலித்த நாட்கள் நினைவில் வந்து அலைக்கழித்து இருந்தது. அப்போதிலிருந்து, மனம் மீண்டும் மீண்டும் பழையதை புரட்டிக் கொண்டே இருந்தது.

எவ்வளவோ முயன்று மனதை மாற்றப் பார்த்தாலும், வேறு சிந்தனை இல்லாமல், அந்த நினைவுகள் பின்னால் தான் மனம் ஓடியது.

அன்று அவனது பிறந்தநாளன்று, தாலியை வாங்கிக் கொண்டு சித்தாரா புன்னகைக்கும் போது, அவன் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.

தாலி கட்டி குங்குமமும் வைத்து விட்டு, சாமி கும்பிட்டு முடித்தனர். அதே கோலத்தில் கைபேசியில் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

தனது துப்பட்டாவிற்குள் தாலியை மறைத்து விட்டு, சித்தாரா பிரகாரம் சுற்றி வந்து விக்ரமிடம் நின்றாள்.

“கிளம்பலாமா?” என்று கேட்டதும், அவளோடு வெளியே வந்தான்.

இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும், விக்ரம் சில நொடிகள் அவளை அமைதியாக பார்த்தான்.

“என்ன?”

“என் மேல கோபமில்லையே?”

“இல்ல”

“இது போதும்” என்று புன்னகைத்து விட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

நேராக பீச்சுக்கு சென்று சில நிமிடங்கள் நடக்க, வானம் இருண்டு மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.

அங்கிருந்து கார் நிற்கும் இடத்திற்கு வரும்முன், இருவருமே மொத்தமாக நனைந்து இருந்தனர்.

“அச்சோ.. இப்படியே ஹாஸ்டல் போறதா? மொத்தமா நனைஞ்சுட்டேன் ச்சே..” என்று சிணுங்கிக் கொண்டே அவள் முகத்தை துடைக்க, “இரு” என்று டிஸ்யூவை எடுத்துக் கொடுத்தவன், “சீக்கிரம் போயிடலாம்” என்று காரை எடுத்தான்.

ஆனால் மழை காரணமாக சாலையில் மரம் ஒன்று ஒடிந்து விழுந்திருக்க, அவர்கள் செல்லும் பாதையை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. பாதை மாறிப்போனவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற, காரை வேறு பக்கம் கொண்டு சென்றான்.

நேராக சென்றாக ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான்.

“யார் வீடு?” என்று சித்தாரா கேள்வி கேட்க, “நம்ம வீடு தான். வா” என்று இறங்கி, அவளையும் மழையில் நனையாமல் வேகமாக உள்ளே அழைத்துச் சென்றான்.

வீடு சுத்தமாக இருந்தாலும், சில நாட்களாக உபயோகப்படுத்தாத வீடு என்று தெரிந்தது. சுவற்றில் ஆணி இருந்தாலும், படங்கள் இல்லை. ஹாலில் நாற்காலிகள் இருந்தன. அதையும் ஓரமாய் போட்டு வைத்து, மூடி வைத்திருந்தனர்.

உள்ளே சென்று துண்டை எடுத்து வந்து கொடுத்தவன், நாற்காலியை எடுத்துப்போட்டு, “உட்காரு. இங்க எதுவும் இல்ல. நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று ஓடினான்.

“ஹேய்.. எங்க போறீங்க?” என்று கேட்க அவன், “உள்ள இரு வர்ரேன்” என்று கூறி விட்டு காரோடு காளம்பி விட்டான்.

வீட்டை நன்றாக சுற்றிப்பார்த்தவள், குளியலறையில் நுழைந்து கொண்டாள்.

சொன்னது போல் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவன் கையில், இரண்டு செட் சுடிதாரும், ஒரு சேலையும் இருந்தது. கூடவே பால், ப்ரெட், மழையில் நனைந்ததால் அவளுக்கு காய்ச்சல் வந்து விடுமோ? என்று மருந்துகளும் வாங்கி வந்திருந்தான்.

இதைப்பார்த்து அவள் அதிர்ந்து நிற்க, “தாரா.. நாளையில இருந்து ஹாலிடேய்ஸ் தான? ரெண்டு நாள் என் கூட இரேன். ப்ளீஸ் ” என்று கெஞ்சினான்.

அவள் திகைக்க, “ரெண்டே ரெண்டு நாள். உன் ஹாஸ்டல்ல சொல்லிடலாம். ப்ளீஸ்” என்று கெஞ்ச, “ஹாஸ்டல்ல பரவாயில்ல. வீட்டுல என்ன சொல்லுறது? அதுவும் ரெண்டு நாள் இங்க..” என்று இழுத்தாள்.

“ப்ளீஸ்டா.. பிறந்தநாள் பையன் கேட்குறேன்ல?” என்று அவன் கெஞ்ச, “பிறந்தநாள் இன்னைக்கு மட்டும் தான? இன்னும் ரெண்டு நாள் சேர்த்து எப்படி இருக்க?” என்று கேட்டு வைத்தாள்.

“ரெண்டு நாள் தான? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கேட்டுருக்கனா?” என்று கேட்ட போது, அவளுக்கும் அது தான் தோன்றியது.

அவள் கைவிரல்களை எப்போதாவது பிடித்துக் கொள்வான். அவ்வப்போது கண் சிமிட்டி பேசி, அவளை சிவக்க வைப்பான். அதைத்தாண்டி வேறு எதற்குமே அவளை வற்புறுத்தியது இல்லை. ஏன் திருமணத்திற்கு கூட கேட்டான். அவள் தடுமாறவும் அப்படியே விட்டு விட்டான். வற்புறுத்தவோ அடம்பிடிக்கவோ இல்லை.

“சுடிதார் சரி. இதென்ன சேலை?” என்று கேட்க, “அப்போ இருக்கியா?” என்று குதிக்காத குறையாக கேட்டான்.

அவள் தலையசைக்க, இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் சற்று தடுமாறி, பிறகு சுதாரித்தாள்.

“இப்படியே ஈரத்துல நின்னா காய்ச்சல் தான் வரும்” என்றதும் வேகமாக விலகியவன், “ஆமா ஆமா. போ ட்ரஸ்ஸ மாத்து” என்று உடையை கையில் திணித்தான்.

“இந்த சேலைய எப்படி கட்டுறது?”

“அது பார்த்ததும் நல்லா இருக்கேனு வாங்கிட்டேன்.‌ கட்டனும்னா அதுக்கு இன்னும் நிறை ஐயிட்டம் தேவைப்படும்ல? சோ அத விட்டுட்டு சுடிதார போடு. இங்க இன்டக்ஷன் இருக்கும். பார்த்து எடுத்து வைக்கிறேன்” என்று வேகமாக நகர்ந்தவன் கையைப்பிடித்து நிறுத்தினாள்.

“நீங்களும் நனைஞ்சு இருக்கீங்க. முதல்ல நீங்களும் ட்ரஸ்ஸ மாத்துங்க. இங்க உங்க ட்ரெஸ் இருக்கா?”

“இருக்கு. ரூம்ல இருக்கு. எடுத்து வெளிய வச்சுடு” என்றதும், உள்ளே சென்று அலமாரியை திறந்தாள்.

விக்ரமே உள்ளே சென்று உடையை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவள் உடையை மாற்றிக் கொண்டு வர, மூலையில் கிடந்த இன்டக்ஷன் அடுப்பை எடுத்து துடைத்து, அதை பயன்படுத்தி, இருக்கும் பாத்திரங்களை கழுவி, ஓரளவு வேலையை ஆரம்பித்திருந்தான்.

அவளும் வந்து சேர, பாலை சூடு படுத்தி, வாங்கி வந்த ப்ரெட்டையும் சாப்பிட்டு முடித்தனர்.‌ வெளியே மழை விடாமல் வெளுத்து வாங்கியது.

சுடிதார் சற்று பெரிதாக இருக்க, அவளுக்கு குளிர் தாங்கியது. அதோடு வாசலில் நின்று மழையை வேடிக்கை பார்த்தவள், இரும ஆரம்பித்து விட்டாள்.

“ஏன் இருமுற?” என்று விக்ரம் வேகமாக அருகே வர, “காத்து சேரல. உள்ள போகலாம்” என்று சென்று விட்டாள்.

அன்று இரவும் பாலும் ப்ரெட்டுமே உணவாக இருந்தது.‌ மழை விட்டபாடில்லை.

கைபேசியை வைத்து ஹாஸ்டலை சமாளித்து விட்டவள், வீட்டுக்கு தகவல் செல்லவில்லை. பொய் சொல்வதை விட, விசயத்தை மறைத்ததாக மட்டும் இருக்கட்டுமே என்று விட்டு விட்டாள்.

இருவரும் வழக்கம் போல் பேசி சிரித்து பொழுதை ஓட்டினார். இரவு சித்தாராவிற்காக கட்டிலை துடைத்து, பரண்மேல் கட்டி போட்டு வைத்திருந்த மெத்தையை எடுத்து தூசி தட்டி போட்டு விட்டு, விக்ரம் ஹாலுக்கு வந்தான்.

“தூக்கமா வருது விக்ரம். குட் நைட்” எழுந்தவளை, விக்ரம் வழிமறித்து நின்றான்.

“என்ன?”

“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு”

“ஆமா”

“இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட்”

“ஓஓஓ…. அதுக்கு?”

“கொண்டாடனும்ல?” என்று சட்டை கையை ஏற்றி விடுவது போல் நடித்து, அவளை பிடிக்க வர, “ஆசை தோசை” என்று அவனிடம் பிடிபடாமல் நழுவி ஓடினாள்.

அவளை துரத்தாமல், இடுப்பில் கைவைத்து சிரித்துக் கொண்டான்.

“எவ்வளவு நாள் இப்படி ஓடுறனு பார்க்குறேன்” என்று மிரட்டலாக சொல்ல, “வெவ்வெவ்வெவ்வ” என்று பழிப்பு காட்டி விட்டு, அறைக்குள் நுழைந்து கதவையும் அடைத்துக் கொண்டாள்.

முகம் வெட்கத்தில் சிவக்க, உடைக்குள் இருந்த தாலியை கையில் எடுத்துப்பார்த்து, அதை முத்தமிட்டபடி மெத்தையில் விழுந்தாள்.

விக்ரமும் போர்வையை விரித்து படுத்து விட்டான். இரவு நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது, சித்தாரா இருமல் சத்தம் அவனை விழிக்க வைத்தது.

எழுந்து சென்று கதவை தட்டினான்.

“தாரா.. கதவ திற” என்று தட்ட, “வர்ரேன்” என்றாள் இருமலுக்கு நடுவே.

கதவை திறந்தவள் நிற்க முடியாமல் மீண்டும் மெத்தையை நோக்கிச் செல்ல, அவளை பிடித்துக் கொண்டான். உடல் காய்ச்சலில் கொதித்தது.

“இப்படி சுடுது. கூப்பிட மாட்டியா?” என்றவன், அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, தண்ணீரை சூடு படுத்தி மாத்திரைகளை எடுத்து வந்தான்.

“தெரியும் மழை உனக்கு சேராதுனு. பார் ஐயா எப்படி ஐடியாவோட மாத்திரை வாங்கிருக்கேன்” என்று பெருமையாக பேச, சித்தாரா இருமலை தாண்டி சிரித்தாள்.

“இதப்போட்டுட்டு தூங்கு.காலையில சரியாகிடும். இல்லனா ஹாஸ்பிடல் போகலாம்” என்றதும் சித்தாரா விழித்தாள்.

“அய்யோ நான் மாட்டேன்.” என்று வேகமாக பேசிவிட்டு, இருமவும் செய்தாள்.

“ஏன்?”

“எனக்கு மாத்திரை போட்டா வாந்தி வந்துடும். நோ” என்றவள், வேகமாக போர்வையை இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.

“வாந்தி வருமா? தாரா.. மாத்திரை போடாம இருக்க விளையாடுறியா? எந்திரி” என்று அவன் அதட்டியும், அவள் கேட்கவில்லை.

“ப்ளீஸ் விக்ரம். காலையில காய்ச்சல் குறைஞ்சுடும். இல்லனா ஹாஸ்பிடல்க்கு வந்து ஊசியே போட்டுக்கிறேன். இப்ப என்னால வாந்தி எடுக்க முடியாது. ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவனும் நம்பி விட்டான்.

“இன்னும் மழை அப்ப அப்ப வந்துட்டு தான் இருக்கு. காலையில சீக்கிரமா ஹாஸ்பிடல் போகலாம். இப்ப தண்ணிய துணில நனைச்சு வைப்பாங்கள்ள? அத வேணா ட்ரை பண்ணலாமா?” என்று கேட்டு, துணியை நீரில் நனைத்து அவள் நெற்றியில் வைத்தான்.

அது காயக்காய, துணியை மாற்றியபடி இரவு முழுவதும் அவளருகில் அமர்ந்து இருந்தான். காலையில் அவளது காய்ச்சல் குறைந்து போயிருந்தது.

அதன் பிறகு தான், அவன் கெஞ்சிய தன் கண்களுக்கு ஓய்வு கொடுத்து, உறங்க ஆரம்பித்தான்.

காலையில் வெகுநேரம் கழித்து சித்தாரா முழிக்க, விக்ரம் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல், குளியலறை பக்கம் சென்று வந்தவளுக்கு, உடல் காற்றில் தள்ளாடியது.

மீண்டும் உடல் சூடு ஏற ஆரம்பித்திருக்க, அமைதியாய் சுருண்டு படுத்து விட்டாள்.

சில நிமிடங்களில் முழித்த விக்ரம், அவளை தொட்டுப்பார்க்க, மீண்டும் உடல் சூட்டை உணர்ந்தான்.

“அப்போ போயிருந்துச்சே.. ப்ச்ச்” என்று எழுந்து வெளியே சென்றான்.

வெளியே மழை அப்போது தான் குறைந்திருக்க, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மீண்டும் வந்தவன், பாலை சூடு படுத்தி மாத்திரையை எடுத்துக் கொண்டு, சித்தாராவிடம் வந்தான். போர்வைக்குள் சுருண்டு கிடந்தாள்.

அவளருகே அமர்ந்தவன், போர்வையை அவள் முகத்திலிருந்து விலக்கினான்.

“தாரா..” என்று மெல்ல அழைத்து தலையை வருடினான், விக்ரம்.

அந்த வருடலில் கண்ணைத்திறந்து பார்த்தாள். அவளை ஒரு கையால் தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டவன், “காய்ச்சல் குறையுற மாதிரியே இல்ல. இந்த மாத்திரையாவது போடு” என்று செல்லமாய் கண்டித்தான்.

“வேணாம். எனக்கு பிடிக்காது.”

“நோ.. இதுக்கு மேல உன் பேச்ச கேட்குறதா இல்ல. ஒன்னு டேப்ளட் போட்டு பால குடி. இல்லனா ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டுப் போயிடுவேன்” என்று மிரட்டி விட்டு, மாத்திரையை எடுத்து வாயைத்திறந்து போட்டு விட்டான்.

சிணுங்கியபடி தண்ணீரை குடித்தவள் மீண்டும் படுக்கப்போக, “இத குடிச்சுட்டு படு” என்று பிடித்துக் கொண்டான்.

“வேணாம்” என்று வாயைத்திறந்தவள் வாயில் பால் டம்ளரை வைத்து புகட்ட ஆரம்பித்து விட்டான்.

அவன் கண்ணில் இருந்த கனிவும் காதலும் அவளை கட்டிப்போட, பாலை குடித்து முடித்து விட்டாள்.

நேற்றும், அவன் முதல் முதலாக தனக்காக செய்த பாலை, பிடிக்காது வேண்டாம் என்று கூற மனமில்லாமல், மொத்தமாக குடித்து இருந்தாள். இப்போதும் அவனுக்காக குடித்து விட்டாள்.

விக்ரம் டம்ளரை ஓரமாக வைக்க, அவனது சட்டையைப்பிடித்து வாயைத்துடைத்தாள்.

அவன் அவளது செய்கையில் மெல்ல புன்னகைத்து விட்டு, “இப்போ தூங்கு. சரியாப்போகும்” என்றான்.

“எனக்கு தூக்கமே போச்சு உன்னால. இரு என் காய்ச்சல உனக்கு ஒட்ட வைக்கிறேன்” என்று சித்தாரா சிணுங்கி அவனை கட்டிக் கொண்டாள்.

“சரி எனக்கு கொடுத்துடு. நீ தூங்கு” என்று விக்ரம் அவளை அணைத்துக் கொள்ள, நன்றாக தூங்க ஆரம்பித்து இருந்தாள்.

மாத்திரையின் விளைவாக மொத்தமாக காய்ச்சல் காணாமல் போயிருந்தது. ஹோட்டலில் இலகுவான உணவாக வாங்கி வந்து, அவளுக்கும் கொடுத்து தானும் உண்டு, அந்த நாள் முழுவதும் அவளோடு தான் இருந்தான்.

ஒரே இடத்தில், யாருமில்லாத தனிமையில் இருந்தும், இருவரின் மனமும் பெரிதாக தடுமாறவில்லை. தேவையில்லாமல், தூக்கம் வரவில்லை போரடிக்கிறது என்று சித்தாரா வாயை விட்டு, கைபேசியில் ஒரு ஆங்கில படத்தை தரவிறக்கி பார்க்க ஆரம்பித்தனர்.

முன்னே பின்னே அதை பார்த்திருந்தால், அந்த நேரத்தில் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்களோ என்னவோ. அதை புதிதாக பார்க்க அமர, மசாலாவிற்காக தூவிய காட்சிகள், இருவரையும் சலனபடுத்த ஆரம்பிதது விட்டது.

விக்ரம் சமாளிக்க பார்க்க, சித்தாரா எங்கோ பார்த்துக் கொண்டு, “எனக்கு துக்கம் வருது” என்று வேகமாக எழுந்தவள், தடுமாறி தரையில் அமர்ந்திருந்த விக்ரமின் மீதே விழுந்திருந்தாள்.

அவனும் எவ்வளவு தான் அமைதி காப்பான்? உரிமையாய் மனைவி, யாருமில்லா தனிமை, கிளப்பி விட்ட காதல் காட்சிகள் எல்லாம் சேர்ந்து அவனை கணவனாய் மாற்றியிருந்தது.

அவனது செய்கையில் சித்தாரா விலகி ஓடியிருந்தாள் துரத்தியிருகக மாட்டான். ஆனால், அவளும் மயங்கிப் போனாள். அவர்களது வாழ்வின் அழகான பகுதியாக மாறியிருந்தது அந்த இரவு.

பின்னாளில் இதை நினைத்து நினைத்து சித்தாரா அழுவாள் என்று அவள் நினைத்துக் கூட பார்க்காமல், கணவனிடம் ஒன்றினாள்.

அடுத்த நாள் முழுவதும், அவர்களுக்கு கிடைத்தது எல்லாம், அவர்கள் வாழ்வின் பொக்கிஷ நிமிடங்கள் தான்.

ஆனால், அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்களது வாழ்வின் சந்தோசமான நாளாக இருக்கும் என்று, விதி எழுதி வைத்திருந்தது.

மறுநாள் சித்தாரா கிளம்பும் போது, விதியை கைபிடியாய் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள், வேதவல்லி.

தொடரும்

Leave a Reply