சித்திரமே 24
![]()
காலையிலேயே வந்திறங்கினாள் வேதவல்லி. கதவை திறந்து வீட்டுக்குள் நுழைய, அங்கு விக்ரம் மட்டும் நின்றிருந்தான் செல்பேசியை காதுக்கு கொடுத்தபடி.
“விக்ரம்.. இங்க என்ன பண்ணுற?” என்று கேட்ட வேதாவை ,அவன் எதிர்பார்க்கவில்லை.
“க்கா..” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு முன்னால் வந்தான்.
“இங்க எதுக்கு வந்த?” என்று கேட்க, “அத நான் தான்டா கேட்கனும். இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ? ரெண்டு நாளா வீட்டுக்கு வரல. வாசல்ல கார பார்த்துட்டு உள்ள வந்தேன்” என்றாள்.
விக்ரம் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறி நிற்கும் போது, சித்தாரா வாசல் பக்கம் வந்து நின்றாள்.
“விக்ரம்?” என்று அவள் கேள்வியாக பார்க்க, விக்ரமுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் மாறி மாறி பார்த்து சுதாரிக்கும் முன், வேதா சித்தாராவை நன்றாக பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டாள்.
“இது.. அந்த மருதநாயகம் பொண்ணுல? இவ இங்க என்ன பண்ணுறா?” என்று கேட்க, “க்கா.. நீ வீட்டுக்கு கிளம்பு. நான் வர்ரேன்” என்று கிளப்பி விடப் பார்த்தான்.
“அக்காவா? உங்க அக்கா வேதவல்லியா?” என்று கேட்டுக் கொண்டே சித்தாரா உள்ளே வந்தாள்.
“ஆமா. அக்கா தான். நீ எதுக்கு இங்க வந்த?” – வேதா
விக்ரமை ஒரு பார்வை பார்த்து விட்டு, “நானும் உங்க தம்பியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்” என்று கூறி விட்டாள்.
“வாட்?” என்று வேதா ஒரு நொடி அதிர்ந்து தம்பியை பார்த்தாள்.
அவன் கல்லைப்போல் நிற்க, “இவ என்னடா சொல்லுற? லவ்வா? மருதநாயகத்த பழி வாங்குவேன்னு சொல்லிட்டு இது என்ன கூத்து?” என்று கேட்டாள்.
“பழி வாங்குறதா? எங்கப்பாவையா?” என்று இப்போது சித்தாரா அதிர்ந்தாள்.
“ஆமா. உங்கப்பாவ தான். அந்தாள நடுத்தெருவுல நிற்க வைப்பேன்னு என் தம்பி சத்தியம் பண்ணி சபதமே எடுத்துருக்கான்” என்று கண்ணில் அனல் பறக்க பேசியவள், உடனே, “ஓஓஓ.. இப்ப புரியுது” என்று இழுத்தாள்.
“அந்த ஆள பழி வாங்க தான் இவ கூட காதல் நாடகம் போட்டுட்டு இருந்தியா? ச்சே.. நான் கூட நம்ம தம்பி சபதத்த மறந்துட்டு, எவ கூடயோ ஊர சுத்துறானேனு ரொம்ப கவலைப்பட்டேன். கடைசியில நீ சபதத்த மறக்கவே இல்ல. சபாஷ்டா” என்று விக்ரமின் தோளை தட்ட, சித்தாரா அங்கு நொறுங்கிப்போய் நின்றாள்.
“என்ன சொல்லுறாங்க இவங்க?” என்று சித்தாரா அதிர்ச்சியோடு விக்ரமை பார்க்க, அவன் கல்லாய் நின்றான்.
“உன்னை தான் கேட்குறேன். இதெல்லாம் உண்மையா?” என்று கேட்க, விக்ரம் இமையை அழுத்தமாக மூடித்திறந்து, “ஆமா” என்று விட்டான்.
சித்தாரா கேட்டது என்னவோ காதல் நாடகத்தைப் பற்றி. அவன் பேசியது பழிவாங்கலை பற்றி.
அவன் ஒப்புக்கொண்டதை நம்பமுடியாமல் சித்தாரா நெஞ்சை பிடித்தபடி, “நான் நம்ப மாட்டேன்” என்றாள்.
கண் கலங்கிப்போயிருந்தது. அழுகை வந்துவிடுவேன் என்று பயமுறைத்திய போதும், அடக்கிக் கொண்டு அவனை தான் பார்த்திருந்தாள்.
“நீ நம்புனா என்ன? இல்லாட்டி என்ன? ஆனா இவ கூட காதல் நாடகம் போடுறது வேஸ்ட் விக்ரம். நீ பிஸ்னஸ்ல அந்தாள அடி. அப்ப தான் நடுத்தெருவுல நிக்க வைக்க முடியும்” என்று வேதா அலட்சியமாக பேசினாள்.
“க்கா.. நீ கிளம்புனு சொன்னேன்” என்றவன் கண்ணில், கண்ணீரோடு தன்னை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த சித்தாரா விழுந்தாள்.
“தாரா.. லிசன்..” என்றவனை கை காட்டி நிறுத்தினாள் சித்தாரா.
அவன் கண்ணில் அவள் எப்போதும் பார்க்கும் காதல் இப்போது இல்லை. அதுவே அவளை முழுதாக உடைத்திருந்தது.
அவன் அப்போதும் பேச வர, கையை அடித்து கும்பிட்டவள் அவனை வெறித்துப்பார்த்து விட்டு, கண்ணீரை துடைத்தபடி திரும்பி வேகமாக ஓடினாள். அவள் வீட்டை விட்டுச் சென்றதும், “பாரேன்.. உடனே கண்ணுல தண்ணி வருது. நல்ல நடிப்பு தான்” என்று வேதா நொடித்துக் கொண்டாள்.
“அக்கா.. நீ இப்ப எதுக்கு வந்த?”
“உன்னை கூட்டிட்டுப்போக தான். அங்க பசங்க மாமா எங்கனு கேட்டுட்டு இருக்காங்க”
அப்போது தான் விடுமுறைக்காக அக்கா பிள்ளைகள் வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்ற நினைவே அவனுக்கு வந்தது.
“சரி நீ கிளம்பு. நான் ஆபிஸ் போயிட்டு வர்ரேன்”
“ஆனா அந்த மருதநாயகம் பொண்ணு எதுக்கு இந்த வீட்டுக்கு வந்தா?”
“அக்கா. கிளம்புனு சொல்லுறேன்ல?”
“இங்க பாருடா. நான் சொல்லுறத கேளு. அந்த மருதநாயகம் லேசான ஆள் இல்ல. அவனால நம்ம அப்பா நிம்மதியே இல்லாம செத்தாரு. அந்தாளு பொண்ண வீட்டுக்குள்ள சேர்த்தா, அப்பா ஆத்மா நம்மல மன்னிக்கவே மன்னிக்காது. அப்பா நிம்மதிய விட, வேற எதுவும் முக்கியமில்ல. நல்லா ஞாபகம் வச்சுக்கோ. அவ கூட போடுற காதல் நாடகத்த நிறுத்திட்டு, வேலைய கவனி சொல்லிட்டேன்” என்று கூறி விட்டு, “வீட்டுக்கு சீக்கிரம் வா” என்றதோடு கிளம்பிச் சென்று விட்டாள்.
விக்ரம் அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டான். இப்போது என்ன செய்வதென்றே அவனுக்கு விளங்கவில்லை. ஆழ மூச்செடுத்து தன்னை நிலை படுத்தியவன், சித்தாராவின் எண்ணை அழுத்தினான். ஆனால் சத்தம் வீட்டுக்குள் கேட்டது.
“ப்ச்ச்” என்று சலித்தபடி அவளது கைபைசியை எடுத்துக் கொண்டு கிளம்ப, அவனுக்கு வேறு அழைப்பு வந்தது. அன்றைய நாளின் அடுத்த அதிர்ச்சி அது.
அவன் பேசி முடித்து வைக்கும் போது, சித்தாரா வேகமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
விறுவிறுவென வந்து அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கிக் கொண்டவள், அவனை முறைத்து விட்டு திரும்பி நடந்தாள். ஆனால் போக மனமில்லை. சட்டென நின்று அவனிடமே வந்தாள்.
“இப்பவும் கேட்குறேன் விக்ரம். அவங்க சொன்னது எல்லாமே உண்மையா?”
“ஆமானு சொல்லிட்டேனே?” என்று அவன் புருவம் சுருக்கி பதில் கூற, “என்ன ஆமா? இல்ல என்ன ஆமாங்குறேன்?” என்று சித்தாரா கத்த ஆரம்பித்து விட்டாள். அவன் அசையவே இல்லை.
“சொல்லு”
“எல்லாம் டிராமா”
“அப்போ தாலி கட்டுனியே? அது என்னடா?” என்று சட்டையை பிடித்தாள்.
“ப்ச்ச்..” என்று அவள் கையை தட்டி விட்டவன், “அதுவும் டிராமால ஒன்னு தான்.” என்றான்.
சித்தாரா அசையாமல் நின்று விட்டாள்.
“ஏன்டா? கல்யாணம் கூட டிராமாவா?”
“வெறும் காதல் நாடகத்தோட முடிச்சுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா அதுல என்ன இருக்கு? எப்படியும் என்னை மறந்துட்டு வேற வாழ்க்கைக்கு போயிடுவ. அதான் கல்யாணம் வரை வந்தேன். இப்ப அவ்வளவு சீக்கிரம் என்னை மறக்க முடியாதுல?”
“டேய்..” என்று அவனது கழுத்தை நெறிக்க வந்தவள், உடனே நிதானித்து, “அப்போ இந்த ரெண்டு நாளா நீ என் கிட்ட நடிச்ச?” என்று கேட்டாள்.
“ஆமா. எல்லாம் ப்ளான். இல்லனா உன்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வரப்போறேன்? ரெண்டு நாள் தங்க சொல்ல போறேன்?”
“அப்ப இந்த வீடு?”
“கெஸ்ட் ஹவுஸ்”
அவ்வளவு தான். சித்தாராவிடம் மிச்சம் சொச்சமிருந்த உயிரும் பறிபோனது.
“கெஸ்ட் ஹவுஸா?” என்று கேட்டவளுக்கு, இதயம் வலியில் இறுக்கிப்பிடிப்பது போல் இருந்தது.
“பின்ன? உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவனா? மருதநாயகம் பொண்ணுக்கு இது போதும்”
அவன் வார்த்தையை முடித்ததும், கையை ஓங்கி விட்டாள். விக்ரம் அவளை தடுக்காமல் அசராமல் நிற்க, “ச்சை” என்று கையை இறக்கினாள்.
“உன் மேல இனி என் விரல் பட்டாக்கூட அது எனக்கு தான் அசிங்கம்” என்றவள், கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி அவன் மீது எறிந்தாள்.
வேகமாக உள்ளே சென்று, தன் பொருட்களை அள்ளிக் கொண்டு, அவனை திரும்பியும் பார்க்காமல் வெளியேற, விக்ரம் காலடியில் கிடந்த தாலியை வெறித்து பார்த்தபடி இறுகிப்போய் நின்றிருந்தான்.
அங்கிருந்து நேராக ஹாஸ்டல் வந்தவள், அப்போதே எல்லாவற்றையும் காலி செய்து விட்டாள். முதலிலேயே கல்லூரி முடிந்ததும் காலி செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தாள்.
இப்போதே மொத்தமாக காலி செய்து விட்டு, பெற்றோரிடம் ஓடினாள். வீட்டுக்கு சென்று ஒரு நாள் முழுவதும் கண்ணீரில் கரைந்தாள். அத்தனையும் வேறு யாரோ சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டாளோ என்னவோ. அவனே வாக்குமூலம் கொடுக்கிறான்.
முதலில் நம்பவே முடியவில்லை. அவன் நடித்தான் என்று இப்போதும் நம்ப முடியவில்லை. நடிப்புக்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியாத அளவு, தனக்கு மூளை வேலை செய்யவில்லையா? என்று அழுது கரைந்தாள்.
மறுநாள் பெற்றோரிடம் விசயத்தைக்கூறி விட்டாள். திருமணம் உட்பட. அவர்கள் அதிர்ந்து போனாலும் உடனே விக்ரமை தேடிச்சென்று சட்டையை பிடிக்க வேண்டும் என்று கிளம்பினர்.
“யாரும் அவன தேடிப்போகக்கூடாது. நீங்க தோத்துப்போய் அவன் முன்னாடி நிக்கனும்னு தான என்னை ஏமாத்துனான்? அது நடக்கவே கூடாது” என்று கூறி விட, யாரும் செல்லவில்லை.
மாதக்கணக்காக சோர்ந்து போய் கிடந்தவள், வயிற்றில் குழந்தை வளர்ந்ததை எதிர்பார்க்கவில்லை. குழந்தையை அழித்து விடத்தான் பெற்றோர்கள் விருப்பப் பட்டனர். ஆனால் சித்தாரா விடவில்லை.
“இந்த குழந்தை இருக்கனும்பா. எனக்குனு வேணும். அதோட முக்கியமா விக்ரமோட வாரிசா இருக்கனும்.. நான் சீக்கிரம் மறந்துட கூடாதுனு கல்யாணம் பண்ணி ஏமாத்துனதா சொன்னான். அவன் வாழ்க்கையோட பிடி என் கையில இருக்கனும். என்னைக்கு அவன் என்னை மறந்து வேற கல்யாணத்துக்கு யோசிக்கிறானோ, அன்னைக்கு பிள்ளைய கொண்டு போய் கையில கொடுத்துடுவேன். தப்போட பலன அனுபவினு” என்று கூறி விட்டு, திடமாக மாறி இருந்தாள்.
ஆனால், அவளை தினமும் பார்த்து உருகும் தாய் தந்தையை பார்க்க முடியாமல், அவர்களை விட்டு பிரிந்து தூரமாக அத்தையின் வீட்டில் சென்று தங்கிக் கொண்டாள்.
அவரும் இறந்து போக, பெற்றோரிடம் செல்லவில்லை. அவர்கள் பிள்ளையை கொண்டு சென்று விக்ரமிடம் விடச்சொன்னார்கள். ஆனால், சித்தாராவிற்கு உடனே விதார்த்தை பிரிய மனமில்லை. அதனால் வேறு ஊருக்கு வந்து, நேரத்தை போக்க வேலையும் பார்த்துக் கொண்டு, மகனோடு தனி உலகில் நிம்மதியாக இருந்து விட்டாள்.
இத்தனையும் மனதில் ஓடி முடிய, “அந்த சித்தாராவும் தைரியமாவே இருந்துருக்கா” என்று நினைத்துக் கொண்டே அடுத்த பக்கத்தை புரட்ட, சட்டென இடம் இருண்டு வெண்பனி வந்து கொண்டிருந்தாள்.
“நான் உன்னை கூப்பிடவே இல்லையே?” என்று சித்தாரா புருவம் சுருக்க, வெண்பனி சிரித்து விட்டாள்.
“அடப்பாவி.. உன்னை படைச்ச என்னையவே இப்படி சொல்லுற? நீ கூப்பிட்டா தான் நான் வரனுமா? எனக்கா தோணுனா நான் வருவேன்” என்று கூற, “எதுக்கு வந்த?” என்று விசயத்துக்கு வந்தாள்.
“சும்மா.. ஃப்ளாஷ் பேக் எப்படினு கேட்க”
“மொக்க தான்.”
“ஆன்டி ஹீரோ கதையில இத விட லாஜிக்கா எல்லாம் ஃப்ளாஸ் பேக் வைக்க முடியாது”
“அது சரி. ஆனா சித்தாரா போல்ட்டா இருக்கா. நைஸ்”
“என்னது சித்தாராவா? நீனு சொல்லிட்டு இருந்த?”
“நான் சித்தாராவா ரீ ப்ளேஸ் ஆனவனு சொல்லிட்டு போயிட்டியே. இது கூட புரியாதா என்ன?”
“குட். இதே தெளிவோட இரு”
“நிஜம்மாவே விக்ரம் சித்தாராவ லவ் பண்ணலயா?”
“நீ என்ன நினைக்கிற?”
“லவ் பண்ணிருப்பான்னு தான் தோணுது. அவன் என்னை பார்க்குற பார்வையிலயே என்னால புரிஞ்சுக்க முடியுது”
“ம்ம். லவ் பண்ணான்”
“அப்புறம் ஏன் அப்படி சொன்னான்?”
“அவன் வாயால விளக்குவான். கேட்டுக்க”
“ஓஹோ.. சரி இத விடு. எனக்கு உன் மேல வேற ஒரு சந்தேகம்”
“என்னனு?”
“நீ தான் எங்கள ஆட்டி வைக்கிற. அப்ப உண்மையில விக்ரம் நல்லவன். நீ வேணும்னே அவனுக்கு மேல கெட்டவன் ரோல்ல பூசி இருக்கனு தோனுது. எனக்கு முன்னாடி இருந்த கதையில ஹீரோவ லவ் பண்ணுற மாதிரி சீன் எழுதுனியே அப்படி. அப்படித்தான?”
“அடிப்பாவி.. இது அபாண்டமான பழி. நான் உங்க கதைய எழுதுறேனே தவிர, உங்க மேல தப்பான பிம்பத்த பூசல” என்று வெண்பனி முறைக்க, “நீ தான எங்க விதிய எழுதுற?” என்று கேட்டாள்.
“விதியும் இதுவும் ஒன்னு கிடையாது. ஏன் உன்னையே எடுத்துக்க.. முதல் கதையில தான் வில்லி. இந்த கதையில நீ ஹீரோயின். அதுவும் நீ எப்படி வேணா இருக்கலாம்னு சொல்லி தான அனுப்புனேன். போய் ஹீரோயின் மாதிரி அழுதுருக்க வேண்டியது தான? எல்லாத்தையும் சாஃப்ட்டா டீல் பண்ணிருக்க வேண்டியது தான? ஏன் பண்ணல? ஏன்னா உன் நேச்சரே அப்படித்தான்.
எங்க உலகத்துலயும் இப்படித்தான். கடவுள் நல்லதையும் கெட்டதையும் சரி பங்கா கொடுத்துட்டு, சூஸ் பண்ணிக்க தான் சொல்லுவார். ஒரு ஆப்பிள் இன்னைக்கு உனக்கு கிடைக்கும்னு தான் எழுதி இருப்பார். அத உழைச்சு சம்பாதிச்ச காசுல வாங்கி சாப்பிடுறது ஒரு ரகம். இல்ல யாருக்கும் தெரியாம திருடித்திங்குறது ஒரு ரகம். அடுத்தவன் கையில இருந்து பறிச்சு தின்னுறது ஒரு ரகம். தானமா வாங்கித்தின்னுறது வேற ரகம். இது எல்லாமே நாம தான் சூஸ் பண்ணிக்கனும். நம்ம கேரக்டர், நம்ம மூளை ஆழ் மனசு தான். அது நமக்கு வழி சொல்லும். அதுக்கும் கடவுள் எழுதுற விதிக்கும் சம்மந்தமில்ல”
“அப்ப எங்க கதை உலகம்?”
“ஆரம்பிக்கும் போது, இது இது உங்க வாழ்க்கையில நடக்கும்னு மட்டும் தான் முடிவு பண்ணிட்டு எழுத ஆரம்பிப்போம். ஆனா எழுத எழுத அந்த அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி அதுவா தான் சீன் அமையும். நீங்க பேசுறது நடந்துக்குறது எல்லாம் அதுவாவே அமையும். அத்தனையும் உட்கார்ந்து டீடைலா யோசிக்கிறது முடியாத காரியம். சில நேரம், கேரக்டர்ஸ் கதை எழுதும் போது அதுவாவே எங்கள இழுத்துட்டு போறதும் நடந்துருக்கு. நாங்களா இத முடிக்கனும் மாத்தனும்னு நினைச்சா கூட, மனசுக்கு ஒத்துவராது. அந்த கேரக்டர் இழுப்புக்கு போகனும்னு தான் தோனும்”
“சோ.. நீங்களா எங்கள கண்ட்ரோல் பண்ணல? நாங்களா சூஸ் பண்ணிக்கிறோம்”
“அப்படியும் சொல்லலாம். அது உங்க விருப்பம்”
“சரி. நீ எதுக்கு வந்த?”
“சொன்னேனே சும்மா பேச”
“அப்படியா? அதான் பேசிட்டல? கிளம்பு பை” என்று கையாட்ட, வெண்பனி சட்டென வாய்விட்டு சிரித்தபடி மறைந்து விட்டாள்.
தொடரும்.
