சித்திரமே 28

Loading

சிவஞானத்தை விக்ரம் எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவர் கேட்ட கேள்வி இன்னும் ஆச்சரியப்படுத்தியது.

“என்ன விசயம் அங்கிள்?”

“மருதநாயகத்து மேல இருக்க கோபத்துல, சித்ராவ கஷ்டப்படுத்துறியாமே.. என்ன மேன் இது?” என்று கேட்டவர் முகத்தில் அதிருப்தி.

விக்ரம் பதில் சொல்லாமல் இருக்க, “உனக்கு மருது மேல கோபமாமே.. ஏன் கோபம்?” என்று கேட்டார்.

“இது வேற விசயம் அங்கிள்”

“என்னனு தான் கேட்குறேன். சொல்லு”

“இவரு எங்கப்பாவுக்கு துரோகம் பண்ணிருக்காரு”

“ஓஹோ.. என்ன துரோகம்?”

“கம்பெனியில இருந்த பார்ட்னர எல்லாம் கிளப்பி விட்டு, எங்கப்பா கிட்ட இருந்து பிஸ்னஸ பறிச்சுட்டாரு”

“அப்படினு யாரு உனக்கு சொன்னா?”

“என் அப்பா”

“அப்பா சொன்னா நம்பித்தான் ஆகனும். நீ என்ன சொல்லுற மருது? ஏன்னா நான் ஜட்ஜ் இல்லையா? ரெண்டு பக்கமும் விசாரிக்கனும்ல?”

“நான் யாரு சொத்தையும் பறிக்கல சார்”

“பொய்.. எங்கப்பா ஆரம்பிச்ச கம்பெனிய நீங்க தான் தட்டி பறிச்சீங்க” – விக்ரம்.

“அத தட்டி பறிக்கல. எனக்கு சொந்தமாக வேண்டயது. சட்டப்படி தான் வாங்குனேன்”

“ஏமாத்தி வாங்கிட்டு சட்டப்படினு சொன்னா? நம்பிடுவனா?”

“நம்பித்தான் ஆகனும். அந்த கேஸ ஹேன்டில் பண்ண லாயரே இவரு தான். இவரு கிட்டயே கேட்டுப்பாரு”

மருதநாயகம் நிதானம் இழக்காமல் சிவஞானம் பக்கம் கையை காட்டி வைத்தார்.

இந்த திருப்பத்தை எதிர் பார்க்காமல் விக்ரம் அதிர, “நான் தான் உங்கப்பாவுக்கு எதிரா கேஸ் போட்டப்போ வாதாடுனேன். கடைசியில மருது பக்கம் தான் ஜெயிச்சது” என்று கூறி விட்டார் சிவஞானம்.

“நீங்களுமா அங்கிள்?”

விக்ரம் சிவஞானத்தை நம்பமுடியாமல் கேட்டான். அவரும் தன் தந்தையை ஏமாற்றி இருக்கிறாரே என்ற ஆதங்கம் அவனை துவள வைத்தது.

“நான் கூடத்தான். ஏன்னா நியாயம் மருது பக்கம் இருக்கே” என்று சிவஞானம் கையை விரிக்க, விக்ரம் சட்டென எழுந்து விட்டான்.

“என்ன நியாயம்? எங்கப்பாவ ஏமாத்தி சொத்த வாங்கிட்டு என்ன நியாயம் பேசுறீங்க? சாகும் போது கூட அவர் நிம்மதியா சாகல. எல்லாம் இவரால. இல்ல நீங்களும் சேர்ந்து தான் காரணம்.”

எழுந்து நின்று அவன் ஆவேசமாக பேச, “முதல்ல உட்காரு விக்ரம்” என்று சிவஞானம் அதட்டினார்.

“உட்கார வச்சு? எனக்கு இதுக்கு மேல எதுவும் பேச இஷ்டமில்ல”

அவன் கொந்தளித்து நிற்க, “இப்ப உட்கார போறியா இல்லையா? எதுக்கு இப்ப குதிக்கிற? வந்த விசயத்த நாங்க சொல்லிட்டு போறோம். அதுக்கு அப்புறம் நீ எத வேணா முடிவு பண்ணிக்க” என்று சிவஞானம் அதட்டினார்.

விக்ரம் அசையாமல் நிற்க, சித்தாரா ஒரு முறை சிவஞானத்திடம் கண்ணை காட்டி விட்டு, “இப்ப உட்கார்ந்து கேட்குறதுல என்ன பிரச்சனை உனக்கு? ஏன் உன் அப்பா பண்ண தப்பெல்லாம் தெரிஞ்சா நீயே உன் அப்பாவ வெறுத்துடுவனு பயமா?” என்று நக்கலாக கேட்டாள்.

“ஏய்.. அவ்வளவு தான்” என்று அவள் பக்கம் ஆவேசமாக திரும்பியவன், அவளை விரல் நீட்டி எச்சரிக்க, “நானும் அதான்டா சொல்லுறேன். இப்ப கேளு. உன் ஆட்டம் மொத்தமும் அவ்வளவு தான். க்ளோஸ்” என்று சைகை செய்தாள்.

“என்னடி நக்கலா?”

“ஆமாடா. இவ்வளவு பெரியவரு வீடு தேடி வந்துருக்காருனா அவருக்கு மரியாதை கொடுக்க பழகு” என்று சித்தாரா அதட்ட, விக்ரம் அழுத்தமாக இமையை மூடித்திறந்து சோபாவில் அமர்ந்து விட்டான்.

“ஒருத்தர் பேசும் போது பொறுமையா இருக்க கத்துக்க விக்ரம். நீ எல்லாம் எப்படி பிஸ்னெஸ் பண்ணுற?”

சிவஞானம் அவனுக்கு ஒரு கொட்டு வைத்து விட்டு, தான் கொண்டு வந்த ஃபைலை முன்னால் வைத்தார்.

“நாங்க பேசுறத கேட்குற அளவுக்கு உன் கிட்ட பொறுமை இல்ல. இத எல்லாம் படிச்சு பாரு. உனக்கு புரியும்” என்று விட, விக்ரம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதை எடுத்துப் படித்தான்.

அத்தனையும் அவர்களது வழக்கு சம்பந்தமான விவரங்கள். ஆதாரங்கள். கடைசியாக நிறுவனம் மருதநாயகத்துக்கு கொடுக்கப்பட வேண்டி தீர்ப்பு வந்த நோட்டிஸ். எல்லாமே இருந்தது.

“நீ பிஸ்னஸ் பண்ணுறவன் தான? புரிஞ்சதா? மருதுவும் இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து பிஸ்னஸ்ல பார்ட்னரா பணத்த போட்டுருக்காங்க. உன் அப்பா என்ன செஞ்சுருக்கனும்? பிஸ்னஸ ஒழுங்கா பார்த்துருக்கனும். ஆனா அவன் எந்த நேரமும் குடிச்சுட்டு கூத்தடிச்சுட்டு இருந்தான். உங்க பரம்பரை சொத்துல உன் அப்பா விளையாடுனா பரவாயில்ல. அடுத்தவங்க பணம் போட்டுருக்க தொழில்ல விளையாடுனா?

பணம் போட்டவங்க வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா? மத்த ரெண்டு பேரும் போட்ட பணத்த திருப்பி எடுத்துட்டு போயிட்டாங்க. மருது தான் பணத்துக்கு பதிலா நஷ்டத்துல கிடக்குற தொழிலயே வாங்கிக் கொடுங்கனு வந்து நின்னது.

அதுவே நஷ்டத்துல இருக்கு. பணத்த வாங்கிட்டு போய், வேற புதுசா ஆரம்பிக்கலாம்லனு கேட்டு பார்த்தேன். அவனுக்கு இதான் பிடிச்சுருக்குனு சொல்லிட்டான். மூழ்கிட்டு இருந்த தொழில, போட்ட பணத்துக்கு ஈடா மருது வாங்குனது உனக்கு துரோகம் பண்ண மாதிரி இருந்துச்சா?

அப்படினு உன் அப்பா சொன்னா? விசாரிக்கவெல்லாம் மாட்டியா? என்ன மேன் நீ? உன்னை புத்திசாலினு நினைச்சேனே. இப்படி இருப்பனு எதிர்பார்க்கல. இந்த பிரச்சனையில சித்தாராவ வேற கஷ்டப்படுத்திறியாமே.

இதனால தான் நீங்க இத்தனை வருசமா பிரிஞ்சுருந்தீங்கனு கேட்கும் போது வருத்தமா இருக்கு. இந்த எவிடன்ஸ உன் கிட்ட காட்டனும்னு தேடி எடுத்துட்டு வந்துருக்கேன். இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்க”

சிவஞானம் நீளமாக பேச, விக்ரம் அந்த காகிதங்களை வெறித்தபடி அமர்ந்து இருந்தான்.

சிவஞானம் மணியை பார்த்து விட்டு, “நான் கிளம்புறேன் மருது. கொஞ்சம் வேலை இருக்கு. என்ன இருந்தாலும் மருமகன் இல்லயா? சுமூகமாக பேசி முடி” என்று கூறி விட்டு எழுந்தார்.

“ரிடயர்மெண்ட் பங்சனுக்கு பிள்ளையோட வாமா. நீயும் வா மருது” என்று அழைத்து விட்டு விக்ரமின் தோளில் தட்டி, “டேக் கேர்” என்றவர் உடனே கிளம்பி விட்டார்.

விக்ரம் சிலையாக அமர்ந்து இருந்தான்.

“நீங்களும் கிளம்புங்க. விது வெளிய இருப்பான். போய் பாருங்க” என்று சித்தாரா கூற, அவளது பெற்றோர் இருவரும் கிளம்பி விட்டனர்.

விக்ரமின் முன்னால் வந்த சித்தாரா, சொடக்கிட்டாள். அந்த சொடக்கு சத்தத்தைக் கேட்டு விக்ரம் கண்ணை மூடித்திறந்தான்.

“நான் சொன்னேன்ல? நீ பண்ணிட்டு இருக்கது எல்லாமே தப்பு. மன்னிப்பு கேட்க ரெடியா இருனு. இப்ப என்ன செய்யப்போற மேன்? உன் அப்பா அழிக்க நினைச்ச தொழில, எங்கப்பா சட்டப்படி வாங்கி வளர்த்துருக்காரு. அத அழிக்க உனக்கென்ன உரிமை இருக்கு எங்கப்பாவுக்கு குடைச்சல் கொடுக்க நிறைய ட்ரை பண்ணி தோத்துப்போனியாமே. இதான் நியாயமும் நேர்மையும் எப்பவும் ஜெயிக்கும்னு சொல்லுறது. ஆனா நான் நியாயவாதி எல்லாம் கிடையாது. எனக்கு அநியாயம் பண்ண உனக்கும் பதிலுக்கு பதில் செய்வேன்.”

சித்தாரா பேசப்பேச விக்ரமின் முகம் இறுகியதே தவிர, அவன் வாயைத்திறக்கவே இல்லை.

“என்னை கல்யாணம் பண்ணிட்டு எல்லாம் நாடகம்னு அசிங்கபடுத்துனல? அதுக்கு தான் உன் தங்கச்சி பர்ஸ்னல போட்டு உடைச்சு உன்னை அவமானபடுத்துனேன். என் அப்பாவ நடுத்தெருவுல நிக்க வைக்க சபதம் எடுத்தல? அதான் உன் அக்கா இந்த வீட்டு வாசப்படிய கூட‌ மிதிக்க விடாம துரத்திட்டேன். கடைசியா அந்த கெஸ்ட் ஹவுஸ்.. அதுக்கு பதிலா இப்ப இந்த வீடு என் பேர்ல இருக்கு. இனிமே நீ இந்த வீட்டுல இருக்க கூடாதுனு துரத்தி அடிக்கனும். ஆனா அத விட பெருசா ஒன்னு பண்ணணட்டுமா?”

இது வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பண்ணுவேன்னு நினைக்கிற விக்ரம்? சொல்லு சரியா கெஸ் பண்ணுறியா பார்க்கலாம்”

அவன் பதில் சொல்லாமல் வெறித்துப் பார்க்க, “அட சொல்லுடா. என்ன செய்வேன்னு நினைக்கிற?” என்று கேட்டாள்.

“சொத்த விக்க போற”

“சில்லி.. இதெல்லாம் சின்ன புள்ளைங்க நினைக்கிறது”

“அப்போ டைவர்ஸ் வேணுமா?”

“ப்ச்ச்.. நோ”

“தென்?”

“உலகத்த விட்டே போகப்போறேன்.” என்று வெடியை வீசினாள்.


வெண்பணி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவளிடம் ஓடி வந்தாள் அவளது தோழி.

“பனி.. கதை முடியப்போகுதா?” என்று அவசரமாக கேட்க, “ம்ம்” என்றாள்.

“க்ளைமேக்ஸ் எழுதிட்டியா?”

“எழுதிட்டேன்”

“என்ன ஆகும்?”

வெண்பனி நிமிர்ந்து முறைக்க, “ஏய்.. சொல்லு.. எனக்கு தலை வெடுச்சுடும் போல இருக்கு” என்று அவசரப்படுத்தினாள்.

“அப்லோட் ஆகும் போது படி”

“இப்பவே சொல்லு. தாரா சூசைட் பண்ணிக்குவாளா?”

“தெரியல”

“அடிங்க..”

“நீ எப்படி கேட்டாலும் என் கிட்ட இருந்து பதில் வராது”

“அடிப்பாவி.. நீயெல்லாம்.. போடி இவளே.. தாரா எவ்வளவு கெத்து.. அவள சூஸைட் அட்டன் பண்ணுற மாதிரி சில்லி விசயத்த எல்லாம் பண்ண வச்ச.. அப்புறம் உன்னை ஃப்ரண்ட்னு பார்க்காம கொன்னுடுவேன்”

“ஓஹோ” என்றவள் உணவு டப்பாவை மூடி விட்டு, கை கழுவ எழுந்தாள்.

“ஏய்.. ப்ளீஸ் பனி.. சொல்லு.. அட்லீஸ்ட் என்ன க்ளைமேக்ஸ்னாச்சும் சொல்லுடி. தாராவ கொன்னுட்டு விக்ரம தனியா வாழவிடுவியா? மட்டமா இருக்கும் படிக்க”

“இவ்வளவு தூரம் வந்த எனக்கு எப்படி க்ளைமேக்ஸ் வைக்கனும்னு தெரியாதா?” என்று கேட்டவள் கையை துடைத்துக் கொண்டு நடக்க, “அப்போ ஹாப்பி க்ளைமேக்ஸா?” என்று பரபரத்தாள்.

“தெரியாது”

“அடியேய்…” என்று அவள் கத்தி விட, வெண்பனி சிரித்து விட்டாள்.

“என்னடி?”

“என்னை வெறுப்பேத்திட்டு இருக்க நீ.. வர்ர கோபத்துக்கு உன்ன…” என்று கழுத்தை பிடிக்க வர, அவளது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“நீ கதைய படிச்சு தெரிஞ்சுக்காம கேள்வி கேட்டா இப்படித்தான் பதில் வரும்” என்று சிரிக்க, “எரிச்சல கிளப்பாத. அய்யோ தாராவுக்கு என்னாகுமோ..” என்று புலம்பினாள்.

“நீ என் ஃப்ரண்ட்.. ரொம்ப புலம்புறது பாவமா இருக்கு. அதுனால..”

“அதுனால…?”

“ஒன்னே ஒன்னு சொல்லுறேன்”

“என்னாது?”

“கடைசியா அப்லோட் ஆன எபிசோட் பாதி தான். மீதி இனிமே தான் ஆகும்”

“அப்ப எதோ இருக்கு”

“இருக்கும் இருக்கும். இப்ப வா வேலை இருக்கு” என்று இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

தொடரும்.

Leave a Reply