சித்திரமே 29
![]()
வெண்பனியை பார்த்து சிரித்த மித்ரா “என்ன இப்பலாம் அடிக்கடி வர்ர? முன்னாடி கூப்பிட்டாக்கூட வர மாட்ட?” என்று கேட்டபடி அருகே அமர்ந்தாள்.
“படைச்சவங்க தரிஷனம் கிடைச்சா அனுபவிக்கனும். ஆராய கூடாது”
“ஆஹான்.. இப்ப எதுக்கு வந்த?”
“கதை முடியப்போகுதுனு சொல்லிட்டுப்போக. இதான் அநேகமா லாஸ்ட் மீட்டிங்னு நினைக்கிறேன்”
“வாட்? அதுக்குள்ள முடியுதா?”
“அதுக்குள்ளயா? இவ்வளவு தூரம் போனது பத்தாதா?”
“எவ்வளவு தூரம்? இது ரொம்ப ஃபாஸ்ட்”
“இதுக்கு மேல கதையில என்ன இருக்கு? நீ விக்ரமுக்கு உண்மைய எல்லாம் இன்னைக்கு சொல்லப்போற. அவனும் சாரி கேட்பான். அவ்வளவு தான? முடிஞ்சதுல?”
“கிண்டலா? அவன் சாரி சொன்னா முடிஞ்சதா? நான் மன்னிக்க வேணாமா?”
“மன்னிக்காம என்ன செய்யப்போற?”
“கொல்லுவேன். ஆளப்பாரு.. ஆன்டி ஹீரோ கதைனா கடைசி ரெண்டு எபிசோட்ல மன்னிப்பு கேட்பான். அதோட முடிஞ்சுடும். அப்படித்தான?”
“பின்ன? அவன் மன்னிப்பு கேட்குறத பத்து எபிசோடுக்கு எழுதுனா ரீடர்ஸ் எல்லாரும் ஹீரோயின திட்டுவாங்க. அவனே திருந்திட்டான் அப்புறம் மன்னிக்காம அலைய விடுறாளேனு”
“லூசா நீ? அஞ்சு வருசமா ஹீரோயின் அனுபவிச்ச வலிய விட்டுட்டு ரெண்டு நாள் ஹீரோ மன்னிப்பு கேட்டா மன்னிக்கனுமா? என்ன லாஜிக் இது?”
“இதான் ஆன்டி ஹீரோ கதையோட லாஜிக்.”
“மண்ணாங்கட்டி”
“இப்ப நீ போற.. விக்ரம் கிட்ட உண்மைய சொல்லுற. அவன் வந்து உன் கிட்ட மன்னிப்பு கேட்குறான். எக்ஸ்ப்ளைன் பண்ணுறான். அவன் சித்தாராவ உண்மையா தான் காதலிச்சான்னு ஆதாரம் காட்டுவான். அதுக்கு அப்புறம்?”
கேள்வியாய் நிறுத்த மித்ராவுக்கு மனம் ஒப்பவில்லை.
“என்னால ஒத்துக்க முடியாது போ. அதுவும் விக்ரம் என்னமா பேசினான். சித்தாரா பிள்ளை பெத்து தனியா வளர்த்துருக்கா. அத பத்திக்கூட தெரியாம வாழ்ந்துட்டு இவன் உண்மையா தான் காதலிச்சான்னு சொன்னதும் மன்னிச்சுடனுமா?”
“ஆமா.. அதான் சித்தாரா விக்ரம் மேல வச்சுருக்க லவ். அது தான் காலம் காலமா கண்ணகியில இருந்து இப்ப வர்ர சித்தாரா வரை புருஷனுங்க மேல வச்சுருக்க லவ். அவன் என்ன தப்பு பண்ணாலும் திரும்பி வந்து திருந்திட்டேன்னு சொல்லிட்டா அப்படியே அவன ஏத்துக்கனும்”
“ஸ்னோ வொயிட்.. என் கோபத்த கிளறாத. சொல்லிட்டேன்”
“இப்ப என்ன பண்ணனும்ங்குற?”
“அந்த விக்ரமுக்கு பெரிய பனிஷ்மெண்ட் கொடு. துடிதுடிக்கனும். மைத்தியமா அலையனும்”
வெண்பனி சில நொடிகள் மௌனமாக அமர்ந்திருக்க “என்ன?” என்று கேட்டாள்.
“என் கிட்ட ரெண்டு க்ளைமேக்ஸ் இருக்கு மித்ரா. ஒன்னு ரீடர்ஸ் ஹாப்பி க்ளைமேக்ஸ். இன்னொன்னு உனக்கு ஹாப்பி க்ளைமேக்ஸ்”
“எனக்கு ஹாப்பி க்ளைமேக்ஸ் எழுது”
மித்ரா வேகமாக சொல்ல வெண்பனி சிரித்து விட்டாள்.
“என்ன சிரிப்பு?”
“ரீடர்ஸ் பத்தி யோசிச்சியா?”
“நான் ஏன் யோசிக்கனும்? நான் அவங்கள பார்த்தது கூட இல்ல. எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம்”
“நீ பக்கா வில்லினு அப்ப அப்ப நிரூபிக்கிற. இதே ஹீரோயினா இருந்தா மத்தவங்க சந்தோசம் தான் என் சந்தோசம்னு வசனம் பேசியிருக்கும்”
“அப்படி பேசுறவ ஹீரோயின் இல்ல லூசு. நான் லூசு கிடையாது” என்று தலையை சிலுப்பினாள்.
“அப்ப உன்னோட சந்தோசத்த எழுதுறேன். அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு பரிசு வச்சுருக்கேன்”
“என்னது?”
“இது வரை நீ எனக்காக கதைக்குள்ள போய் அங்க ஹீரோயினா வாழ்ந்து எஎல்லாத்தையும் சமாளிச்ச. அதுக்கான பரிசு இது. ஒரிஜினல் சித்திரமே சிதைவதேனோ ஸ்க்ரிப்ட். படிக்கிறியா?”
“வாவ்! எங்க எங்க?”
வெண்பனி திரும்பிப் பார்க்க அங்கு ஒரு பெரிய திரை உருவாகி வார்த்தைகள் தோன்றியது.
“இதுல சித்தாராவோட மனசு பத்தி மட்டும் தான் இருக்கும். மத்தவங்க மைண்ட் வாய்ச் அவங்க நிலைமை எதுவுமே இருக்காது. அத பத்தி நீ தெரிஞ்சுக்க வேணாம். தெரிஞ்சுக்கவும் கூடாது. உனக்கு முன்னாடி இருந்த ஹீரோயின் என்னலாம் பண்ணிருக்கானு பார்த்துக்கோ”
“மத்தவங்கள பத்தி தெரிஞ்சா என்ன?”
“நீ மனசுல நினைக்கிறத எல்லாம் உன் கூட வாழுறவங்க தெரிஞ்சுக்கிட்டா ப்ரைவசினு ஒன்னு இருக்குமா?”
“ஓஓ.. ரைட். இத படிக்கிறேன்” என்று வேகமாக வார்த்தைகளில் பார்வையை ஓட்டினாள்.
முதல் அத்தியாயத்திலிருந்து வந்தது. சித்தாரா வேலைக்கு சென்று வருவதும் அவ்வப்போது விக்ரமை நினைத்து கலங்குவதுமாக இருக்க விக்ரம் நேராக வந்து நின்றான். பிள்ளை மீது உரிமை கொண்டாட்டி அவனை கொடுக்கும் படி கேட்டான். சித்தாரா மறுக்க சில நாட்கள் நேரம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டான்.
மீண்டும் வந்து கேட்டபோது சித்தாரா மகனின் நலவாழ்விற்காக சம்மதித்து விட்டாள். திருமணம் செய்ய மாட்டேன் பிள்ளைக்கும் எனக்கும் தான் உறவு என்றவளை வற்புறுத்தி பதிவு திருமணம் செய்தான் விக்ரம். அதுவும் சித்தாராவின் தாய் தந்தை முன்பு தான்.
அங்கிருந்து விக்ரமின் வீட்டுக்குச் சென்றால் அங்கு வேதவல்லி விசாகா ஆதிரா மூவரும் சேர்ந்து சித்தாராவை பாடாய் படுத்தினர். அவள் விக்ரமோடும் இந்த மூவரோடும் போராடினாள். அல்லியும் விதார்த்தும் மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருந்தனர்.
கதையில் பல இடங்களில் சித்தாரா கண்ணீர் வடித்தாள். தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து துடித்தாள். ஒரு வழியாக தந்தையிடம் பேசி உண்மையை அறிந்து கொண்டாள்.
மகள் துடிப்பது பொறுக்காமல் மருதநாயகமே சிவஞானத்தை அழைத்து வந்து அத்தனை ஆதாரங்களையும் காட்டி விட்டுச் செல்கிறார். விக்ரமும் தப்பை உணர்ந்து கொள்கிறான். அதன் பிறகு தான் சிவஞானத்தின் விழாவிற்கு செல்கின்றனர்.
இதுவரை எல்லாம் பொறுமையாக படித்துக் கொண்டே வந்தவள் அடுத்து படித்து விட்டு “வாட்?” என்று அலறியபடி எழுந்து விட்டாள்.
“சிட்.. முழுசா படி” என்று வெண்பனி அதட்ட சித்தாராவும் படித்தாள்.
“என்ன இது?”
“தெரியல க்ளைமேக்ஸ்”
“இப்படி ஒரு க்ளைமேக்ஸா?”
“ஏன் நல்லா இல்லயா?”
“ஒன்னு லூசுத்தனமா வைக்கிறது. இல்லனா இப்படி வைக்கிறதா? வேற நல்ல க்ளைமேக்ஸே கிடைக்கலயா?”
“நல்ல க்ளைமேக்ஸ் நீ ஒன்னு சொல்லேன்”
“என் கிட்ட கேட்டா? நான் என்ன ரைட்டரா?”
“அப்ப ரைட்டர் நான் வைக்கிறது தான் க்ளைமேக்ஸ்.”
“எனக்குப்பிடிக்கல”
“அப்போ உனக்கு வேற ஆப்சன் தர்ரேன்”
வெண்பனி சொன்ன பதிலை நினைத்தபடியே தான் இன்று காலையிலிருந்து விக்ரமிற்கு அவனது தவறுகளை தெரியப்படுத்தியிருந்தாள். அதோடு அவனுக்கான தண்டனையை அவள் கூறிவிட்டாள்.
“ஏய்..” என்று பதறி எழுந்து விட்டான் விக்ரம். உலகத்தை விட்டு போகப்போகிறாளா?
“தாரா..” என்று பதறி விட “பதறாத.. சாகவெல்லாம் மாட்டேன்” என்றாள்.
“பின்ன நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”
“உன் உலகத்த விட்டு போறேன்னு சொன்னேன். இனிமே விதார்த் உன் கூடத்தான் இருப்பான். அதான் உன் கூட தூங்க வச்சு நீயே பழக்கிட்டியே. இனிமேலும் உன் கூட இருப்பான். நான் மட்டும் ஃபாரின் போய் செட்டில் ஆக போறேன். நிம்மதியா சந்தோசமா..”
சித்தாரா பேசப்பேச விக்ரம் நம்பிக்கை இல்லாமல் பார்த்து வைத்தான்.
“இல்ல எதையோ மறைக்கிற நீ..”
“அப்படியே நான் மறைச்சாலும் அது உனக்கு அவசியமில்லாத ஒன்னு. இப்ப இந்த நிமிஷம் நீ எனக்கு பண்ண துரோகத்துக்கு தண்டனை.. காலம் முழுக்க அந்த வலியில வாழு. உன் துரோகத்துல பிறந்த விதார்த்த நினைச்சு நினைச்சு வாழு. நீ எனக்கு கொடுத்த துரோகத்தோட மொத்த உருவம் அந்த பச்ச மண்ணு தான். அது வளர்ந்து அம்மா ஏன்பா விட்டுட்டு போனாங்கனு கேட்பான். அப்ப பதில் சொல்லு.. நான் உன் அம்மாவ காதலிக்கிற மாதிரி நடிச்சேன். அதுல தான் நீ பிறந்த. அந்த நடிப்பு புட்டுகிச்சு. உங்கம்மா விட்டுட்டு போயிட்டானு சொல்லு. அவ உன்னை பார்த்து காரி துப்பட்டும். என்ன பெத்தவங்க நிம்மதிய நீ குலைச்சல? நீ பெத்த புள்ள முன்னாடி தலை குனிஞ்சு நில்லு. அது தான் உனக்கு சரியா இருக்கும்”
சித்தாரா பேசுவதை பேசி விட்டு அவனை முறைத்தபடி சென்று விட்டாள். விக்ரமுக்கு மனம் பதறியது. அவள் பின்னால் சென்றான்.
“தாரா.. தாரா..” என்று பின்னால் செல்ல அவள் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென படியேற ஆரம்பித்து விட்டாள்.
பின்னால் துரத்தி படி ஏறும் முன் “ப்பா.. ” என்று வேகமாக மகன் வந்தான்.
“அவன் உன்னை காரி துப்பட்டும்” என்ற வார்த்தை காதில் ஒலிக்க மகனை பார்த்தவன் அசையாமல் நின்றான்.
“ப்பா.. என் பால் பறந்து போச்சு.. வந்து எடுத்துக் கொடுங்க” என்று கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்ற மகன் திடீரென நின்று “என் அம்மாவ ஏமாத்திருக்க. என் தாத்தாவ அவமான படுத்திருக்க. நீ எனக்கு வேணாம். நீ நல்ல அப்பா இல்ல. ஐ ஹேட் யூ” என்று கத்தினான்.
விக்ரம் பதறி மகனை தடுக்க வாயைத்திறக்க “ப்பா.. அங்க இருக்கு பாலு” என்று கை காட்டினான்.
அத்தனையும் விக்ரமின் கற்பனை. நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் வெடித்தது.
”எடுங்கபா” என்று விதார்த் கெஞ்ச தலையை உலுக்கிக் கொண்டவன் ஒரு குச்சியை தேடி எடுத்து பந்தை தட்டி கையில் பிடித்துக் கொடுத்தான்.
பந்தை வாங்கிக் கொண்டு அங்கு வேலை செய்யும் பெண்ணோடு விளையாட ஆரம்பித்து விட்டான். அல்லி சமையலை பார்க்க சென்றிருந்தார்.
விக்ரம் மகனை விட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். மனது ஒருநிலையில் இல்லை. அலைபாய்ந்தது. தவறெல்லாம் தந்தையின் மீதிருக்க சம்பந்தமே இல்லாமல் சித்தாராவை வதைத்து விட்டான்.
அதற்காக என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? உலகத்தை விட்டு போவாளா? சடாரென ப்ரேக்கை மிதித்து காரை நிறுத்தியவன் உடனே காரை திருப்பி சித்தாராவை பார்க்க பறந்தான்.
தொடரும்.
