சித்திரமே 30
![]()
போன வேகத்தில் திரும்பி வந்து நின்ற விக்ரமை, அல்லி ஆச்சரியமாக பார்க்க, அவன் அவரை கவனித்தால் தானே?
வேகமாக லிஃப்டில் நுழைந்து அறைக்குச் சென்றான். அங்கு சித்தாராவை காணவில்லை. கீழே அவள் இல்லை. நீச்சல் குளத்துக்கு வந்து பார்த்தான் அங்கும் இல்லை.
பின்னால் ஜிம் பகுதியிலிருந்து பாடல் சத்தம் கேட்டது. உடனே உள்ளே சென்றான். ஒரு ஆங்கில பாடலை போட்டு விட்டு, அதைக்கேட்டபடி நடந்து கொண்டிருந்தாள் சித்தாரா.
விக்ரம் அதை அணைத்து விட, திரும்பிப் பார்த்தாள்.
“ப்ச்ச்.. எதுக்கு ஆஃப் பண்ண?” என்று சலிப்பாக கேட்டு விட்டு, நடப்பதை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள்.
குனிந்து அந்த பாடலை திரும்பி போடப்போக, விக்ரம் அவள் கையை பிடித்துக் கொண்டான்.
“தாரா.. ஏன் ஃபாரின் போற?”
“உனக்கு அம்னீஷியாவா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான சொன்னேன்”
“இல்ல.. எனக்கு தண்டனை கொடுக்க நீ இப்படிப்போய் தான் ஆகனுமா?”
“நான் போனா வருத்தப்படுவியா விக்ரம்?” என்று கேட்டபடி பென்ச்சில் அமர்ந்து கொண்டாள்.
“ஆமானு சொன்னா போக மாட்டியா?”
“ஹாஹா.. நீ என்ன சொன்னாலும் நான் போவேன். என்னை தடுக்க நினைக்காத”
விக்ரமுக்கு கோபம் வந்து விட்டது.
“போடி. நீ போயிட்டா நான் துடிச்சுட்டு எல்லாம் இருக்க மாட்டேன்” என்று வீம்புக்கு பேசியவன், “அப்படியே டைவர்ஸ் வாங்கிட்டு கூட போ. எனக்கு ஒன்னும் கவலை இல்ல” என்றான்.
அவளிடம் கெஞ்சுவது வீண் என்று புரிந்தது. அதனால் எகிற ஆரம்பித்தான். ஆனால் அவள் உடனே மசிந்து விடுபவளா?
“குட் ஐடியா விக்ரம். நானும் ஃபாரின்ல எவனையாச்சும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணனும்னா, இங்க உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு போறது தான் சேஃப்ட்டி.”
விக்ரம் இதைக்கேட்டு அவளை ஆவேசமாக பிடித்து எழுப்பினான்.
“வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா? பண்ணுவியா?” என்று அவளை பிடித்து உலுக்க, அவனது கையை தட்டி விட்டாள்.
“எதுக்கு இப்படி உலுக்குற இடியட்” என்று திட்டி, தோளே தேய்த்துக் கொண்டவள், “நான் போனப்புறம் நீ ஸ்வேதாவ லவ் பண்ணலாம். நான் மட்டும் வேற கல்யாணம் பண்ணிக்க கூடாதா?” என்று நக்கலாக கேட்டாள்.
“நான் எவளயும் லவ் பண்ணல”
“அப்ப ஸ்வேதா கிட்டயும் நடிச்சியா? அது சரி உனக்கு போய் காதல் வரும்னு நினைச்சா அவங்க தான் முட்டாள்”
“பைத்தியம் மாதிரி பேசாத தாரா. நான் ஸ்வேதாவ தான் லவ் பண்ணல. உன்னை லவ் பண்ணலனு சொல்லல”
“லவ் பண்ணுற மாதிரி நடிச்ச அதான?”
“இல்ல.. நான்… நான் உன்னை நிஜம்மாவே லவ் பண்ணேன் தாரா”
“டேய்.. போடா அங்குட்டு. எரிச்சல கிளப்பிட்டு” என்று சித்தாரா திரும்ப, அவளை பிடித்து நிறுத்தினான்.
“சத்தியமா இதான் உண்மை. நான் உன்னை லவ் பண்ணேன். பண்ணுறேன். இனியும் பண்ணுவேன். உன்னை தவிர யாரும் என் வாழ்க்கையில வரல தாரா. ஆனா நீ என் கிட்டயே வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுற.. ஏன் தாரா? என் லவ்வ நீ உணரவே இல்லையா?”
விக்ரம் வேகமாக மூச்சு விடாமல் பேச, அவனது கையை விலக்கி விட்டவள் நிதானமாக அவனை பார்த்தாள்.
“இப்ப அதுக்கு என்னங்குற? நீ என்னை லவ் பண்ண. அவ்வளவு தான? அதுக்காக நீ பண்ணத எல்லாம் மன்னிச்சு உன் கூட வாழனும்னு சொல்ல வர்ரியா?”
இதற்கு பதில் சொல்ல முடியாமல் விக்ரம் வெறித்துப் பார்த்தான்.
“என்ன பார்க்குற? சொல்லு. நீ லவ் பண்ணனு சொல்லிட்டதால கடந்து போன அஞ்சு வருசமும் திரும்ப வந்துடுமா? அன்னைக்கு திரும்ப திரும்ப கேட்டேனே? அப்ப மனச உடைச்சுட்ட. தனியா தவிச்சு, துடிச்சு, கழுத்துல தாலி இல்லாம, புருஷன் கூட இல்லாம, பிள்ளைய சுமந்து பெத்த எல்லா வலியும் காணாம போயிடுமா? அத்தனை வலியையும் மறக்க வைக்குற அளவுக்கு, உன் காதலுக்கு சக்தி இருக்கா என்ன? இல்ல இதெல்லாம் மறந்துட்டு நீ லவ் பண்ணுறனு சொன்னதும், உன் கால்ல விழ எனக்கு சொரண இல்லாம போயிடுச்சா? என்ன எதிர் பார்க்குற நீ?”
அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, விக்ரமிடம் பதிலே இல்லை.
“உன்னை பொறுத்தவரை நீ லவ் பண்ணி என்னை ஏமாத்தல. நிஜம்மா லவ் பண்ணிருக்க. அதுனால நீ சொன்ன நடிச்சேன்ங்குற பொய் அடி பட்டு போயிடுச்சு. அதுனால நீ நல்லவனாகிட்ட. ஆனா அத தொடர்ந்து இந்த அஞ்சு வருசமா நடந்த விசயங்கள்? அதுக்கெல்லாம் என்ன பதில் வச்சுருக்க?”
சித்தாரா கேள்வி கேட்டு கையை விரித்து தோளை குலுக்கினாள். விக்ரமால் வாயைத்திறக்கவே முடியவில்லை. அவனிடம் பதில் இருந்தால் அல்லவா?
“இத பத்தி ஆர்கியூ பண்ணுறதே வேஸ்ட். நான் இனி இங்க இருந்து தினம் தினம் உன்னை ஃபேஸ் பண்ணி எரிச்சலாகுறத விட, நிம்மதியா எங்கயாவது போய் வாழ்வேன்.”
முகத்தை அழுந்த துடைத்து ஆழ மூச்செடுத்த விக்ரம், அவளிடம் திரும்பினான்.
“உனக்கு என்னை பார்க்க பிடிக்கலனா நான் போறேன். நீ இரு”
முடிவு போல் அவன் சொல்ல, சித்தாரா நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள்.
“அடடே தியாகச்செம்மல்னு பாரட்டுனுமா? நீ ஃபாரின் போறது உனக்கு தண்டனையா? எப்படி? எந்த வகையில? கொஞ்சம் சொல்லேன். மிஞ்சி மிஞ்சி போனா விதுவ பிஸ் பண்ணுவ. லவ் பண்ணுறேன்னு சொன்னதால என்னை கூட மிஸ் பண்ணுவ. அவ்வளவு தான? அதுக்கு மேல உன் வேலைய பார்த்துட்டு இருப்ப. அது உனக்கு தண்டனையா? இத்தனை வருசம் தனியா வாழ்ந்த மாதிரி அங்கயும் போய் வாழுவ. ஆனா அது எனக்கு வேணாம்.
இங்க.. உன்னை பத்தி நல்லா தெரிஞ்ச உன் ஃப்ரண்ட்ஸ், உன் சொந்தக்காரவங்க, நீ பிஸ்னஸ் பண்ணுற ஆளுங்க அத்தனை பேர் முன்னாடி வாழு. கையில சின்ன பையனோட நில்லு. இவன் அம்மா எங்க? ஏன் பிரிஞ்சிங்கனு ஊரே உன்னை கேள்வி கேட்கும். கேள்விக்கு பயந்து ஓடு. அம்மா எங்கனு விது கேட்பான். பதில் சொல்ல முடியாம திணறு.
நான் புள்ளைதாச்சியா இருக்கும் போது, புருஷன் எங்கனு என்னை வளைச்சு வளைச்சு கேட்டப்போ, கேள்விக்கு பயந்து ஓடுனனே அது மாதிரி. பிள்ளையோட அப்பா எங்கனு கேட்டப்போ, உன் துரோகத்த நினைச்சு துடிச்ச மாதிரி.. விது அப்பா எங்கமானு கேட்டப்போ பதில் சொல்லாம திணறி நின்னேனே அப்படி. நீயும் நில்லு. அனுபவி. நீ எனக்கு கொடுத்த நரகத்த உனக்கு திருப்பி கொடுக்குறேன். அனுபவி”
விக்ரம் அவள் பேசும் போது கண்களை தான் பார்த்தான். அதில் அப்படி ஒரு வெறி பளபளத்தது. அந்த வெறி வரவேண்டும் என்றால், அவள் எவ்வளவு துன்பங்களை தாங்கியிருக்க வேண்டும்?
அடிவாங்கியது போல் அவன் நிற்பதை பார்த்தவளுக்கு, திருப்தியாகவே இருந்தது. ஒரு வேளை நாயகியாக இருந்தால், இந்த தோற்றத்தில் உருகி இருப்பாள். அவளுக்குத்தான் இளகிய மனமாயிற்றே. ஆனால் இப்போது முன்னால் நிற்பவள் உருகவில்லை. இதை விட பெரிய வேதனைகளில் இருப்பவர்களை எல்லாம் பார்த்து விட்டு, கவலையே படாமல் கடந்து செல்பவள்.
பேச்சு முடிந்தது என, அங்கே அமர்ந்து டம்பிள்ஸை எடுத்தாள். அதை தூக்கிப்பிடித்து உடற்பயிற்சியை ஆரம்பிக்க, விக்ரம் அவளை பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டான்.
பிறகு நள்ளிரவு தான் வீடு திரும்பினான். அதுவரை தனியாக அமர்ந்து, தன்னுடைய தவறை நினைத்து துடித்துக் கொண்டிருந்தான். அவன் செய்த தவறுக்கு, இப்போது விதார்த்துக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கிறதே.
எப்படி சித்தாராவை தடுப்பது என்று யோசித்து, விடை கிடைக்காமவ் நொந்து போய் வந்து சேர்ந்தான்.
சித்தாரா அவளது அறையில் புத்தகம் வாசித்தபடி அமர்ந்து இருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன், தூங்கிக் கொண்டிருந்த விதார்த்தை பார்த்தான்.
சித்தாராவின் பக்கம் பார்வையை திருப்ப, அவள் புத்தகத்தில் பார்வையை பதித்து இருந்தாள்.
“தாரா.. உன் கிட்ட பேசனும்”
“எனக்கு பேச எதுவும் இல்ல. கிளம்பு”
“தாரா.. ஒரு எக்ஸ்ப்ளனேஸனாவது கொடுக்க விட மாட்டியா?”
பெரு மூச்சோடு புதத்கத்தை மூடியவள், எழுந்து ஹாலுக்கு வந்தாள்.
“சொல்லு. என்ன பேசனும்?” என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்து கொண்டாள். விக்ரமும் அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டான்.
“நான்..” என்று ஆரம்பித்தவன் உடனே நிறுத்தி, “சாரி” என்று மன்னிப்பு கேட்டான்.
“எதுக்கு?”
“அன்னைக்கு உன் மனச உடைச்சுருக்க கூடாது. சாரி”
“அப்புறம்?”
“நீ பிரிஞ்சு போனதும் எப்படி இருக்கனு தெரிஞ்சு வைக்காம, என் கோபம் தான் பெருசுனு இருந்திருக்க கூடாது. அதுக்கும் சாரி”
“ம்ம்”
“என்னால நீ எவ்வளவோ வலிகள அனுபவிச்சுட்ட. அது எல்லாத்துக்கும் சாரி”
“ஓகே”
“ஆனா.. தாரா என் தப்புக்கு விதுவ தண்டிக்கிறது நியாயமே இல்ல. நீ இல்லாம அவன் இருக்க மாட்டான்”
“இது உன் கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் விக்ரம். அப்பாவ பழி வாங்கனும்னா, அவங்க பிள்ளைங்கள தான் கஷ்டப்படுத்தனும்னு நீ தான சொல்லிக் கொடுத்த?”
“விது உனக்கும் மகன் தான்”
“நான் கூட தான் உனக்கு பொண்டாட்டி. ஆனா நீ பழி வாங்கனும்னு முடிவு பண்ணும் போது, பொண்டாட்டி எதிரியோட மகளா மட்டும் தான உன் கண்ணுக்கு தெரிஞ்சா? நீ பண்ணா நியாயம் நான் பண்ணா தப்பா?”
அவன் என்ன பேசினாலும், எதைக்கேட்டாலும், வாயை அடைப்பது போல் ஒரு பதிலை வைத்திருந்தாள் சித்தாரா. பதில் சொல்ல முடியாமல், முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு அமர்ந்தான்.
“தப்பு தான். உன்னை கல்யாணம் பண்ணது தப்பு தான். அன்னைக்கு உன்னை இழந்துடுவேனோனு பயத்துல தான் கல்யாணம் பண்ணிட்டேன். ஆனா.. உன்னை விட்டு பிரியனும்னு நினைக்கல. அன்னைக்கு நடந்தது அப்படி என்னை பேச வச்சுடுச்சு.” என்று முகத்தை மறைத்த கைகளை எடுக்காமலே பேசினான்.
“தெரியும்” என்றாள் சித்தாரா அமைதியாக.
மறுப்பாக தலையசைத்தவன், “இல்ல உனக்கு தெரியாது. நான் தாலி கட்டும் போது இருந்த நிலைமை உனக்கு தெரியாது” என்றான்.
கையை எடுத்து விட்டு, “நீ மருதநாயகம் மகனு தெரிஞ்சப்புறம் தான் தாலி கட்டுனேன். அது பழி வாங்குறதுக்கு இல்ல. உன் அப்பாவுக்கு விசயம் தெரிஞ்சா நம்மல பிரிச்சுடுவாரோனு பயம்” என்றான்.
இதைக்கேட்டதும் சித்தாராவிடம் ஒரு அதிர்வு ஒரு இளக்கம் வரும் என்று எதிர்பார்த்து, ஏமாந்து போனான் விக்ரம்.
“ம்ம்.. தெரியும்” என்று மட்டுமே கூறினாள்.
“தெரியுமா?” என்று அவன் நம்பமுடியாமல் பார்க்க, “ஆமா. என் அப்பாவ பத்தி உனக்கு தெரிஞ்சதே கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான? அதுக்கப்புறம் தான் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்க கேட்டு, கல்யாணமும் பண்ணிக்கிட்ட. அதான?” ஈன்று கேட்டாள்.
“உனக்கு.. உனக்கு எப்படித்தெரியும்? நான் இது வரை யாருக்குமே சொன்னது இல்லையே?”
“எனக்கு எவ்வளவோ தெரியும். அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்ல” என்று கூறியவள், “எனக்கு தூக்கம் வருது. குட் நைட்” என்று எழுந்து சென்றாள்.
விக்ரம் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருக்க, போனவள் திரும்பி வந்தாள்.
“நாளைக்கு ரிடயர்மெண்ட் பங்சனுக்கு போகனும்ல? போய் தூங்கு” என்று கூற, விக்ரம் எழுந்து சென்று விட்டான்.
நாளை கிடைக்கப்போகும் பல திருப்பங்களை எதிர் பார்த்து சித்தாராவும், எதுவுமே அறியாமல் விக்ரமும் இரவை கடந்தனர்.
தொடரும்.
