சித்திரமே 31
![]()
அடுத்த நாள் மாலை விக்ரம் தயாராகி நிற்க, முதலில் தயாராகி வெளியே வந்தான் விதார்த்.
“அப்பா..” என்று குதித்த மகனை உடனே கையில் தூக்கிக் கெண்டவன், “சூப்பரா இருக்கடா” என்று கொஞ்சினான்.
“நீங்களும் சூப்பர்பா” என்று மகனும் அவனை கொஞ்ச, இருவருமே சிரித்தனர்.
இருவரும் நீல நிற உடையில் இருக்க, சித்தாரா வந்தாள். அவள் அணிந்திருந்த உடை பார்டி வியர் வகையை சார்ந்த மேக்ஸி. உடலோடு ஒட்டிக் கொண்டு இருந்தது. ஆழ்கடல் நீல நிறத்தில் உடையும், அதற்கு பொருத்தமான நீலக்கற்கள் பதித்த மோதிரமும் மட்டுமே அணிந்திருந்தாள். காதில் வைரத்தோடு மின்ன, கழுத்தில் எதுவுமே இல்லை. கையில் வெள்ளி நிறத்தில் பர்ஸ் மின்னியது. காலில் அதே வெள்ளி நிறத்தில் நீலம் கலந்த ஹீல்ஸ். சிகையலங்காரமும் முக அலங்காரமும் செய்து சிலையாக வந்தாள்.
அவளது அழகில் மயங்கி நின்றவன், கழுத்தை கவனித்து விட்டு அவளை முறைத்தான்.
“தாலி எங்க?” என்று விக்ரம் அதட்டலாக கேட்க, “கழட்டி வச்சுட்டேன். இந்த டிரஸ்ஸுக்கு மேட்ச் ஆகல” என்று சர்வசாதாரணமாக கூறி விட்டு நடந்தாள்.
“எதுக்கு இந்த ட்ரெஸ்? சேலை கட்டியிருக்கலாமே?”
“பார்டிக்கு சேலை கட்டிட்டு போகனுமா? அப்படி எந்த டிரஸ் கோட் உம் அங்கிள் சொல்லலயே?” என்று கேட்டபடி பட்டனை அழுத்தினாள்.
“ம்மா.. இது தான் சூப்பரா இருக்கு” என்று விதார்த் கூற, “தாங்க்ஸ்டா தங்கம்” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘அடேய்.. இவ்வளவு அழகா வந்து நின்னா, பல பசங்க கண்ணு உங்கம்மா மேல தான்டா விழும். இதுல தாலிய வேற கழட்டிட்டா.’ என்று நொந்து கொண்டது விக்ரம் தான்.
மற்ற இருவரும் சந்தோசமாக கிளம்பி விட்டனர். பார்டி நடக்கும் இடத்திற்கு சென்று இறங்கியதுமே, விக்ரமின் காரை பார்த்து விட்டு டீனா ஓடி வந்து வரவேற்றாள்.
“விக்ரம்.. வாங்க வாங்க” என்று ஆர்பாட்டமாக ஆரம்பித்தவள், அடுத்த பக்கமிருந்து இறங்கிய சித்தாராவை பார்த்து மூச்சு விட மறந்து போனாள்.
அவளது உடையும் அலங்காரமும் மலைக்க வைத்தது. டீனாவும் அலங்காரம் செய்திருந்தாள் தான். கிட்டத்தட்ட சித்தாராவை போன்று தான் மார்டன் உடையில் இருந்தாள். ஆனால் சித்தாராவின் அழகு ஜொலித்தது.
சிகையை ஒதுக்கி விடும் போது கையில் மின்னிய மோதிரம், காதில் ஜொலித்த தோடு எல்லாமே பொருத்தமாக இருக்க, டீனாவிற்கு வயிறு எரிந்தது.
இன்று அவள் வீட்டு விழா என்று பார்த்து பார்த்து அலங்கரித்து, தன்னை ஒரு ராணியாக காட்ட முயற்சித்து இருந்தாள். இருக்கும் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் படி சித்தாரா வந்திறங்கினால்? கோபம் வரத்தானே செய்யும்.
“போகலாமா?” என்று மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு விக்ரம் சித்தாராவிடம் கேட்க, அப்போது தான் டீனா அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தாள்.
“வாங்க.. அப்பா கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று அழைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள்.
சித்தாராவின் உடையை ஒரு முறை பார்த்தாள். இதற்கு முன், அதாவது சித்தாராவும் விக்ரமும் காதலித்த போது சித்தாராவை பார்த்திருக்கிறாள். சுடிதார் அணிந்து இருந்தாள். தலையை வாரி பின்னல் போட்டிருந்தாள். அப்போது மோசமில்லை என்றாலும், இப்படி ஆளை அசரடிக்கும் அழகெல்லாம் இல்லை.
‘புள்ளை பெத்துட்டா அழகு போயிடும்னு தான சொல்லுவாங்க? இவ என்ன நாலு வயசு பிள்ளைக்கு அம்மா மாதிரியே இல்ல. விளம்பரத்துல வர்ர அம்மா மாதிரி இருக்கா?’ என்று மனதில் பொறாமையில் வெதும்பிக் கொண்டே நடந்தாள்.
சிவஞானம் இவர்களை பார்த்து விட, அவரே இருவரையும் வரவேற்றார். பேச்சு சுவாரஸ்யமாக போக, விக்ரம் மகனோடு சிவஞானத்துடன் கலந்து கொண்டான்.
சித்தாரா சற்று தள்ளி ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துக் கொண்டிருக்க, “ஹலோ..” என்று குரல் கேட்டது.
“ஹாய்.. என்னை ஞாபகம் இருக்கா? பார்லர்ல பார்த்தோமே?” என்று ஸ்வேதா கூற, “இருக்கே.. மறக்கல” என்று சித்தாரா புன்னகைத்தாள்.
“இங்க விக்ரம் கூட வந்தீங்களா?”
“ஆமா. அவங்க பேசிட்டு இருக்காங்க.”
“ம்ம். வேலையெல்லாம் எப்படி போகுது?”
“போகுது.. நீங்க எப்படி இருக்கீங்க?”
“ஸ்வேதா” என்று வேகமாக அவளிடம் வந்தாள் ஆதிரா.
“ஆதி..” என்று ஸ்வேதா திரும்ப, ஆதிரா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“உங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் தெரியுமா என்ன?”
“ம்ம்.. பார்லர்ல மீட் பண்ணோம். இவங்க விக்ரமுக்கு பி.ஏ தான?” என்று கேட்டு வைத்தாள் ஸ்வேதா.
ஆதிரா அதிர, சித்தாரா புன்னகைத்தாள்.
“பி.ஏ வா? அப்படினு யார் சொன்னா?”
“ஏன் சாக் ஆகுற?”
“இது விக்ரமோட வொயிஃப். அவன் கையில இருக்க பிள்ளையோட அம்மா” என்று ஆதிரா போட்டு உடைத்தாள்.
“வாட்?” என்று அதிர்ந்து சித்தாராவை பார்க்க, அவள் மேலும் கீழும் தலையாட்டினாள்.
“அன்னைக்கு… நீங்க ஏன் உண்மைய சொல்லல?” என்று ஸ்வேதா கோபமாக கேட்க, “நான் வொய்ஃப்னு சொல்லாம இருந்ததால தான உங்க மனசுல இருக்கத கொட்டுனீங்க?” என்று சித்தாரா அமைதியாக கேட்டாள்.
“ஆனாலும்…” என்று ஆரம்பித்தவள் உடனே தனிந்து விட்டாள்.
“நீங்க என்னை தப்பா எடுத்துக்கலயே..?”
“இல்லவே இல்ல. ரிலாக்ஸ்” என்று அவள் தோளில் தட்ட, ஸ்வேதாவிற்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.
“என்ன விசயம்?” என்று ஆதிரா கேட்க, “உங்க ஃப்ரண்ட் கிட்ட கேளுங்க. இங்க வாஸ் ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு ஆதிரா கை காட்டிய திசையில் நடந்தாள்.
“என்ன விசயம்?” என்று ஆர்வமாக ஆதிரா கேட்க ஸ்வேதா ஒப்பித்து விட்டாள்.
பார்லரில் சித்தாராவை சந்தித்தது, அவளுக்கு விக்ரமை தெரியும் என்றதும் அவனிடம் வேலை செய்பவள் என்று ஸ்வேதா நினைத்தது, அதை மறுக்காமல், விக்ரமை பற்றியும் அவன் கடந்த ஐந்து வருடங்களாக வாழ்ந்ததை பற்றியும் சித்தாரா கேட்டு தெரிந்து கொண்டதையும் ஒப்பித்தாள். சித்தாராவை விக்ரமின் பி.ஏ என்று நினைத்ததால் தான் மொத்தத்தையும் ஒப்பித்து இருந்தாள். இப்படி மனைவியாக இருப்பாள் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் வாயைத்திறந்து இருக்க மாட்டாள்.
“ஆமா.. யாரு நீ சொல்லி இருக்க மாட்ட? நீ ஒரு ஓட்ட வாய்னு தான் எல்லாருக்கும் தெரியுமே. ஊரெல்லாம் விக்ரம பத்தி தப்பா பரப்பி விட்டதே நீ தான?”
“அது டீனா சொன்னா..”
“யாரு என்ன சொன்னாலும் நம்பிடு. உனக்கு இதான் வேலை. இப்ப என் கிட்ட சொன்னத டீனா கிட்ட சொல்லாத. சொன்ன.. வாய இழுத்து தச்சு விட்டுருவேன்” என்று ஆதிரா மிரட்ட, ஸ்வேதா வாயை மூடிக் கொண்டாள்.
பார்ட்டி ஆரம்பித்து பேச்சுக்களும் பாடல்களும் ஒரு பக்கம் நடக்க, உணவும் வழங்கப்பட்டது.
சித்தாரா விதார்த்துக்கு மட்டுமே எடுத்து வந்து, அவனை அமர வைத்து ஊட்டிக் கொண்டிருக்க, டீனா அங்கு வந்து சேர்ந்தாள்.
“உன் பையன் அப்படியே விக்ரம உரிச்சு வச்சுருக்கான்” என்று கூற, “பின்ன உன்னை மாதிரியா இருப்பான்? அவங்கப்பா மாதிரி தான் இருப்பான்” என்றாள் சித்தாரா.
பலர் அவளை அப்பாவி நாயகியாக நினைத்து பேசி வாங்கி கட்டி இருக்க, இப்போது அதே வேலையில் டீனாவும் இறங்கி விட்டாள்.
“ஆமா ஆமா.. அப்பா மாதிரி தான் இருப்பான்”
“அத ஏன் சலிச்சுட்டு சொல்லுற? நீ பரப்பி விட்ட பொய்ய ஊரே நம்பும் போது, இப்படி பிள்ளையோட வந்து நின்னுட்டாளேனு ஆத்திரமா?”
சித்தாரா நேரடியாக விசயத்திற்கு தாவ, டீனாவின் முகம் கடுமையாக மாறியது.
“ஆமா. என் அப்பா கிட்ட விக்ரம எனக்கு கட்டி வைக்க சொல்லி கேட்குறதுக்கு முன்னாடி, இப்படி பிள்ளையோட வந்து நின்னு மொத்த ப்ளானயும் சொதப்பிட்டியேடி”
“என்னடி பண்ணுறது? அவன் அவன் விதில இருக்கது தான நடக்கும்?”
“ஆனா விக்ரம விட மாட்டேன். ஏற்கனவே அவன விட்டு ஓடுனவ தான நீ? திரும்ப உன்னை சீக்கிரமே விக்ரம் துரத்துவான். அப்புறம் பார்த்துக்கிறேன்”
“அடடே வில்லி மேடம் சபதம் எடுக்குறீங்களா? எடுங்க. ஆனா அதுல ஜெயிக்கவும் பாரு. இதைக்கேட்டு அய்யோ என் புருஷன பறிக்க பார்க்குறாளேனு பதறுவேன்னு எல்லாம் எதிர் பார்க்காத. நேரா போ. இங்க தான இருக்கான். போய் காதல சொல்லிட்டு வா”
விதார்த்துக்கு உணவை கொடுத்து முடித்து டிஸ்யூவால் வாயைத்துடைத்து விட்டவள், “விது.. அப்பா கிட்ட போ” என்று கூறியதும் இறங்கி ஓடி விட்டான்.
“ரொம்ப ஆடாத. இவன நீ விக்ரம பிடிக்கனும்னு தான பெத்து வளர்த்த?”
“எப்படி இவ்வளவு கரெக்ட்டா கண்டு பிடிச்ச?” என்று நக்கலாக கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் சித்தாரா.
சிவஞானத்திடம் வந்த சித்தாரா, “அங்கிள்.. சாரி நான் கிளம்புறேன். தலை. வலிக்குது” என்று கூற, “ஓஓ.. சரிமா. விக்ரம பார்த்து கூட்டிட்டு போ” என்றார்.
“ஓகே அங்கிள்.” என்றவள் விக்ரமை தேடி வந்தாள்.
“நான் கிளம்புறேன். தலை வலிக்குது. டேக்ஸி புக் பண்ணிட்டேன். விதுவ நீ கூட்டிட்டு வா. பை” என்றவள், அவன் பேச வருவதை கூட கவனிக்காமல் கிளம்பி விட்டாள்.
அவளை விட்டு விட்டு, விக்ரமும் அடுத்து பேச வந்தவரிடம் மகனை பிடித்தபடி பேச ஆரம்பித்து விட்டான்.
காரில் அமர்ந்த சித்தாரா, முதல் வேலையாக சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டாள். கண்ணை மூடி அமர்ந்தவளின் இதயம், தடக் தடக்கென துடிக்க ஆரம்பித்தது.
‘அய்யோ.. மித்ரா பயப்படாத’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கைபேசி இசைக்க ஆரம்பித்தது.
அல்லியின் பெயரை பார்த்து விட்டு காதில் வைத்தாள்.
“சொல்லுங்க ஆண்ட்டி”
“நேரமாகிடுச்சே.. எப்பமா வருவீங்க? விதுவுக்கு பால் சூடு பண்ணி வைக்கட்டுமா?”
“நான் கிளம்பிட்டேன் ஆண்ட்டி.. வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். விதுவ விக்ரம் கூட்டிட்டு வருவான். வந்ததும் பால்….” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வீலென்று சித்தாரா கத்தும் சப்தம் கேட்க, அதைத்தொடர்ந்து பெரிய இடியோசை காதில் விழுந்தது அல்லிக்கு.
திடுக்கிட்டு பயந்து போனவர், “சித்து.. சித்து..” என்று அழைக்க, வினோத ஓசையோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“அய்யோ.. சித்து..” என்று பதறி திரும்பி அழைக்க, அழைப்பு செல்லவில்லை.
“விசாகா.. விசாகா..” என்று அலறியவர், உடனே விக்ரமுக்கு அழைப்பு விடுத்தார்.
“என்ன சித்தி?” என்று விசாகா ஓடி வர, “சித்தாராவுக்கு போன் பண்ணு” என்று கூறியவர் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
“ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு?” என்று கேட்டவள், உடனே சித்தாராவின் எண்ணை அழுத்தினாள். அழைப்பு போகவில்லை.
அங்கு விக்ரம் அப்போது தான் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தான். மகனை கையில் தூக்கிக் கொண்டு நடந்தவன், கைபேசி இசையில் நின்று எடுத்துப் பார்த்தான்.
‘இவங்க எதுக்கு கூப்பிடுறாங்க?’ என்று யோசித்தபடி, “சொல்லுங்க சித்தி?” என்று ஆரம்பித்தான்.
அந்த பக்கம் அல்லி அழுது விட்டார். விசயத்தை அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே அவர் விவரிக்க, விக்ரமிற்கு மொத்த உலகமும் இருண்ட உணர்வு.
“உலகத்த விட்டே போகப்போறேன்” என்ற சித்தாராவின் வார்த்தைகள் காதில் விழ, மகனோடு வாசலை நோக்கி ஓடினான்.
“ஹேய்.. விக்ரம் என்னாச்சு?” எதிரில் வந்த டீனாவின் தாய் விசாரிக்க, அவன் காரை நோக்கி ஓடினான்.
அவனது பதட்டம் உணர்ந்து கூடவே சென்றார்.
“என்ன விக்ரம்? என்னபா?” என்று அவர் விசாரிக்க, “தாரா.. தாராவுக்கு ஆக்ஸிடென்ட்” என்றவனுக்கு மூச்சு விடக்கூட பயம் வந்து விட்டது.
‘அய்யோ தாரா போயிடாத’ என்று மனம் ஒரு பக்கம் கதற, மகனை அமர வைத்து மறுபக்கம் வந்தான்.
“வாட்? ஹேய்.. கார ஒழுங்கா ஓட்டிருவியா? டிரைவர கூப்பிடவா?”
மறுப்பாக தலையசைத்தவன், விதார்த்துக்கு சீட் பெல்ட்டை போட்டு விட்டான்.
“பார்த்துப்போ விக்ரம். நான் அங்கிள் கிட்ட சொல்லி ஆள் அனுப்புறேன்” என்று கூறும் போதே, கார் வேகமாக கிளம்பி விட்டது.
அவர் உடனே கணவனை தேடிச் சென்றார். கூடவே டிரைவரையும் அழைத்து, “விக்ரம் கார ஃப்லோவ் பண்ணு. எதுவும் எமர்ஜென்ஸினா ஹெல்ப் பண்ணு.போ குயிக்” என்று அனுப்பி விட்டு கணவனிடம் விசயத்தைக்கூறினார்.
விக்ரமின் கார் பறந்து கொண்டிருந்தது. கண்ணீர் வேறு நிற்காமல் வழிய, துடைத்த படி ஓட்டினான்.
“ப்பா.. ஏன் அழுறீங்க?” என்று விதார்த் கேட்க, உடனே சுதாரித்தான்.
“அழல விது. நீ சீட் பெல்ட்ட நல்லா பிடிச்சுக்கோ சரியா?” என்றவனை விதார்த் பாவமாக பார்த்துக் கொண்டே, பெல்ட்டை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
விக்ரம் வேகமாக சென்று கொண்டிருக்க, அல்லியிடமிருந்து அழைப்பு வந்தது.
“விக்ரம்.. சித்துவ பாருபா.. எங்க இருக்கானு தெரியலயே..” என்று அவர் அழ, “நான் பார்க்குறேன். நீங்க அழாம இருங்க” என்றவனும் அழுது கொண்டு தான் இருந்தான்.
வீட்டுக்கு செல்லும் வழியிலேயே போக, சிறிது தூரத்தில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு ட்ராஃபிக் ஆகியிருந்தது. அதுவே நடந்ததை கூற, மனம் திடுக்கிட்டது.
சீல்பெல்ட்டை கழட்டியவன், “விது.. அப்பா வர்ரேன். அது வரை உள்ளயே பத்திரமா உட்காரு” என்று கூறி விட்டு இறங்கினான்.
ஆனால் அகலவும் முடியவில்லை. மகனை தனியாக இந்த இரவு நேரத்தில் காரில் விடவும் முடியவில்லை. தூக்கிக் கொண்டு போனால், அங்கிருக்கும் நிலை எப்படியோ? அதை பார்த்து பயந்து விட்டால்?
அவன் தடுமாறி நிற்க, விதார்த் நடப்பது எதுவும் புரியாமல் அமர்ந்து இருந்தான்.
பின்னால் வந்த சிவஞான வீட்டு காரின் டிரைவர், “சார்..” என்று அருகே வந்து காரை நிறுத்தினான்.
“சார்.. ஜட்ஜ் ஐயா வீட்டுல இருந்து வர்ரேன்” என்று அவன் கூறவும், “உள்ள என் பையன் இருக்கான். பார்த்துக்கோங்க” என்று பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.
“விது.. அங்கிள் கூட இரு. அப்பா உடனே வர்ரேன்” என்று கூறி அவனை விட்டு விட்டு முன்னால் ஓடினான்.
காவல் துறையினர் வந்து குவிந்து, அந்த இடத்தை நேர் படுத்திக் கொண்டிருக்க, சுற்றியும் விபத்தை கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு நின்றிருந்தனர் ஆட்கள்.
விக்ரம் வேகமாக முன்னால் வர, காவலதிகாரி தடுத்து நிறுத்தினார்.
“அது என் வொய்ஃப்” என்று தன்னை மீறி கத்தி விட்டு, அந்த காவலதிகாரியை மீறி அவன் உள்ளே ஓடி வர, காருக்குள் மாட்டியவர்களை அப்போது வெளியே எடுக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
சித்தாரா இருந்த பக்கம் கதவை உடைத்து, அவளை வெளியே கொண்டு வந்து, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க, விக்ரமுக்கு கண் இருட்டிக் கொண்டு வந்தது.
முகம் உடல் அத்தனையும் இரத்தம். பொம்மை போல் அலுங்காமல் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் நோக்கி ஓட, விக்ரம் பின்னால் ஓடினான்.
“தாரா.. தாரா..” என்று அவன் கத்திக் கொண்டே இருக்க, அவளை ஆம்புலன்சில் ஏற்றினர். அதற்கு ஒரு நொடி முன்பு அவனை கண் திறந்து பார்த்து விட்டு, மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.
“சார்.. நீங்களும் வர்ரீங்களா?” என்று நர்ஸ் கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.
மகன் இருக்கிறானே. அவனை விட்டு விட்டு கிளம்ப முடியாதே.
“நான்.. கார்ல..” என்று தடுமாறிக் கொண்டு கண்ணீர் கன்னத்தில் வழிய பேச முடியாமல் நிற்க, ஆம்புலன்ஸ் கதவை மூடி விட்டனர். உடனே ஓட்டுனரிடம் ஓடியவன், தனக்குத்தெரிந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினான்.
ஆம்புலன்ஸ் புறப்பட்டு விட, விக்ரமுக்கு அவன் உயிரும் அதோடு சென்று விட்டது போல் இருந்தது.
சித்தாரா வந்த காரை ஓட்டியவனும், மறுகாரில் வந்து மோதியவனும் அதே இடத்தில் உயிரை விட்டிருந்தனர்.
அவர்களது உடல்கள் தனியாக அனுப்பப்பட, விக்ரம் அதை வெறித்து பார்த்தான். பிறகு கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டு, அழக்கூட நேரமில்லாமல் மகனைதேடி ஓடினான்.
அங்கு டிரைவர் சிவஞானத்திற்கு விசயத்தை சொல்லி இருக்க, அவர்களும் கிளம்பி விட்டனர்.
மகன் தந்தையின் நிலையை பார்த்து அழ ஆரம்பிக்க, அவனை சமாதானபடுத்தியபடி காரை எடுத்தவனுக்கு, கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
‘தாரா.. போகாதடி.. நீ போனா எங்களுக்கு யார் இருக்கா?’ என்று என்னென்னவோ புலம்பல்கள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
அதோடு அழுத மகனையும் தேற்றிக் கொண்டு, காரை எடுத்து ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தான்.
தொடரும்.
