சித்திரமே 33
![]()
விக்ரம் மருத்துவமனையில் மகனை தூக்கிக் கொண்டு நின்று இருந்தான். சித்தாராவை அவசர பிரிவில் உள்ளே அழைத்துச் சென்று விட்டனர். மகன் மனைவியை பார்த்து விடக்கூடாது என்று தாமதமாகவே வந்து சேர்ந்தான்.
“ப்பா.. அம்மா.. அம்மா எங்க? அம்மா வேணும்” என்று விதார்த் ஒரு பக்கம் அழ, என்ன சொல்லி தேற்றுவது? என்று புரியவில்லை.
“அம்மா வீட்டுக்கு போயிருக்காங்கடா விது. நாம போகலாம். இப்ப அப்பாவுக்கு காய்ச்சல். ஊசி போட்டு போகலாம்” என்று வாய்க்கு வந்ததை கூறி அவனை திசை திருப்பினான்.
என்ன சொல்லியும் அடங்காத மகன், தந்தைக்கு காய்ச்சல் என்றதும் தன் அழுகையை மறந்து போனான்.
அவன் நெற்றியை தொட்டுப்பார்த்து, “அம்மா ஃபீவருக்கு மாத்திர வச்சுருக்காங்கபா. வாங்க போய் போடலாம்” என்று கூறினான்.
விக்ரமுக்கு நெஞ்சு அடைத்த உணர்வு. மகனை கட்டிக் கொண்டவன், சட்டென வெளியே வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
சிவஞானம் அல்லி விசாகா எல்லோருமே பதறியடித்து வந்து சேர்ந்தனர்.
“என்ன ஆச்சு?” என்று அல்லி பதட்டமாக கேட்க, விக்ரம் மகனை கண்ணால் காட்டி விட்டு, “ஒன்னும் இல்ல. பார்த்துக்கலாம்” என்று சமாளித்தான்.
சிறுவன் மிரண்டு போய் தந்தையின் கழுத்தைகட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, எல்லோருமே சற்று துக்கத்தை அடக்கினர்.
“விது.. வா அத்த உனக்கு சாக்கிலேட் வாங்கி தர்ரேன்” என்று விசாகா கை நீட்ட, “வேணாம்” என்று தந்தையிடம் ஒட்டிக் கொண்டான்.
“விடு” என்று விக்ரம் கூறி விட, மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“நான் கொஞ்சம் நடந்துட்டு வர்ரேன்” என்று மகனை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
சிறிது நடையில் மகன் தூங்கி வழிய, அவனை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான். சிறுவன் அவன். எந்த வித கவலையையும் அறியாமல் உறங்கி விட்டான்.
வளர்ந்த மனிதன் இவன். உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனைவியை நினைத்து உடைந்து கொண்டிருந்தான்.
“உலகத்த விட்டே போகப்போறேன்” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்து அவனை உருக்குலைத்தது.
‘இதுக்கு தான் சொன்னியா? தாரா.. என்னால முடியல. வந்துடுடி’ என்று மனதில் ஓலம் கேட்டபடி இருக்க, வெளியே மகனுக்காக அமைதியாக நடித்தான்.
விதார்த் நன்றாக தூங்கியதும், விசாகாவை அழைத்தவன் காரில் அமரச்சொல்லி விசாகாவிடம் கொடுத்தான்.
“இடையில தூக்கம் கலைஞ்சா.. இப்படி தட்டிக் கொடுத்து தலையை லேசா வருடி விடு. தூங்கிடுவான்” என்று கூற, விசாகா தலையசைத்து வைத்தாள்.
அவளது முகமும் பயத்தில் வெளிறிப்போய் இருந்தது. ஆனால் மற்றவர்களை போல் கலங்கி துடிக்க அவளால் முடியவில்லை. சிறு வயதில் இருந்தே பெரிதாக பாசத்தை அனுபவிக்காதவள். வெளிப்படையான உணர்ச்சிக்கு அவள் புதிது.
விதார்த்தை நன்றாக பார்த்துக் கொள்வோம். நிச்சயமாக சித்தாரா எழுந்து வருவாள் என்று நம்பினாள்.
விக்ரம் மகனை ஒப்படைத்ததும், மனைவியை தேடி ஓடினான். அங்கு அவளுக்கு சிகிச்சையை மிகத்தீவிரமாக ஆரம்பித்து இருந்தனர்.
அனுமதித்து நான்கு மணி நேரம் கழித்து வந்து, “உயிருக்கு ஆபத்து இல்ல. நல்லா இருக்காங்க” என்று கூறினார்கள் மருத்துவர்கள்.
அடக்கி வைத்திருந்த அழுகை விம்மி வெடிக்க பார்க்க, அல்லி வாயை மூடிக் கொண்டார்.
“தாங்க்யூ டாக்டர்.. இப்ப எப்படி இருக்காங்க?” என்று சிவஞானம் தான் விசாரித்தார்.
மருதநாயகமும் மகாதேவியும் வந்து கொண்டிருந்தனர். டியர்மெண்ட் விழாவிற்கு அவர்கள் வரவில்லை. மகாதேவிக்கு திடீரென உடல் நிலை கெட்டதால் வராமல் இருக்க, அடுத்ததாக மகள் மருத்துவமனையில் இருக்கும் செய்தி சென்று சேர்ந்தது. பதறி அடித்து கிளம்பி இருந்தனர்.
“அவங்க கால்லயும் கையிலயும் ஃப்ராக்ச்சர் இருக்கு. ஆப்ரேஷன்ல சரி பண்ணிடலாம். மத்தபடி அவங்களுக்கு பெருசா எந்த காயமும் இல்ல”
“அப்போ அவ்வளவு ரத்தம்?” என்று விக்ரம் பதட்டமாக கேட்க, “அது அவங்களோடது இல்ல. சின்ன சின்ன காயம் தான் இருக்கு. அதுல ப்ளட் லாஸ் பெருசா இல்ல. சீட் பெல்ட் போட்டுருந்ததால அவங்க இந்த அளவுக்கு தப்பிச்சுருக்காங்க”
விக்ரம் தலையை கோதி கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டான்.
“எப்ப டாக்டர் அவங்கள பார்க்க முடியும்?”
“ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுறோம். பணம் கட்டிருங்க. ஆப்ரேஷன் முடிஞ்சு, ஐசியூல இருந்துட்டு நார்மல் வார்ட் மாத்துனப்புறம் நீங்க பார்க்கலாம்”
சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டு அடுத்த நோயாளியை பார்க்க அவர் சென்று விட, விக்ரம் பணத்தை கட்ட ஓடினான்.
கார்டில் போதுமான வரை செலுத்தி விட்டு, மற்ற தேவைக்கு ஏடிஎம் தேடி ஓடி எடுத்து வந்தான். அல்லி துவண்டு போயிருக்க, சிவஞானத்தின் மனைவி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.
“எங்க வந்துட்டு இருக்கீங்க? பதட்டப்படாம வாங்க. சித்தாராவுக்கு ஒன்னும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாரு. அதுனால கவலைப்பட்டு நீங்க உடம்ப கெடுத்துக்காதீங்க” என்று சிவஞானம் மருதநாயகத்திற்கு தகவல் கூறினார்.
மகாதேவி கண்ணீர் விட்டு அழுது கொண்டே வந்தார். மருதநாயகமும் பதட்டத்தில் இருக்க, அவர்களது நிலைமை உணர்ந்து சிவஞானம் ஆறுதலாக பேசினார்.
விக்ரம் பணத்தை கட்டி முடித்ததும், அதிகாலை நான்கு மணிக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அதுவரை சித்தாராவை பார்ப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறி விட, குடும்பம் மொத்தமும் அங்கேயே இருந்தது.
சிவஞானத்தையும் அவரது மனைவியையும் அனுப்பி விட்டனர். விசாகா விதார்த்தோடு காரிலேயே இருந்தாள்.
அல்லி சித்தாரா சரியாக வேண்டுமென்று அத்தனை கடவுளையும் அழைத்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்.
விக்ரம் தான் என்ன நினைக்கிறான் என்றே தெரியவில்லை. மகனை கவனிப்பதும், மனைவியை பற்றி விசாரிப்பதுமாக சுற்றிக் கொண்டிருந்தான்.
அதிகாலை காலுக்கும் கைக்கும் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து, சித்தாராவை அழைத்துக் கொண்டு வர, அப்போது தான் விக்ரமும் அல்லியும் அவளை பார்த்தனர்.
முகத்தில் ஒரு மாற்றமும் இல்லை. சிறு சிராய்ப்புகள் மட்டும் தான் இருந்தது. அவள் கண்ணை மூடி இருக்க, நர்ஸை நிமிர்ந்து பார்த்தான்.
“அவங்க டயர்ட்ல தூங்குறாங்க. நாளைக்கு வார்டுக்கு வரும் போது பாருங்க” என்று கூறி விட்டு, ஐசியூ பக்கம் தள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.
அப்போது தான் விக்ரம் நன்றாக மூச்சு விட்டான். மகன் விழித்து அழ ஆரம்பித்து விட்டதாக விசாகா அழைக்க, அவனை கவனிக்க ஓடினான்.
அம்மாவை கேட்டு அழுதவனை ஓரளவு சமாதானம் செய்து திசை திருப்பினர். அடுத்த நாள் சித்தாரா சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள்.
மருதநாயகமும் மகாதேவியும் அல்லியும், சித்தாராவை நன்றாக கவனிக்க, விக்ரம் விதார்த்தை பார்த்துக் கொண்டான். விசாகா வீட்டை கவனித்தாள்.
வேதவல்லியும் சுந்தரும் வந்து சேர்ந்தனர். இருவரும் சித்தாரா பேசியதை மறக்கவில்லை. ஆனால் அவள் இப்படி அடிபட்டு கிடக்கும் போது பார்க்க வேண்டுமே.
“எப்படிமா இருக்க?” என்று சுந்தர் விசாரிக்க, “ஃபைன் பிரதர்” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.
வேதவல்லி பேசியதற்கு வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது. விசாகா ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்து வேதவல்லிக்கு ஆச்சரியம்.
“என்னடி நீ இதெல்லாம் பார்க்குற?” என்று வேதா கேட்க, “பின்ன நான் பார்க்காம நீ வந்து பார்ப்பியா? போய் உன் வேலைய பாருகா.” என்று முடித்திருந்தாள்.
அப்படியே சித்தாராவிடம் இருந்த திமிர் விசாகாவிடம் வந்திருந்தது. அக்கா என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மை அவள். இன்று எதிர்த்து கேள்வி கேட்டு விட்டு செல்கிறாள்.
ஒரு வாரம் கடந்தது. ஓரளவு சித்தாராவின் உடலில் முன்னேற்றம் வர, மருதநாயகம் தொழிலை பார்க்கச்சென்றார். விக்ரமும் அலுவலகம், வீடு, மகன், மனைவி, என்று எல்லாம் பார்த்தான். அல்லியின் சமையலும் பக்குவமும் சித்தாராவை நன்றாக தேற்றியது. விசாகாவும் பொறுப்பாக நடந்து கொள்ள, எல்லாமே சுமூகமான நிலை தான்.
ஆனால் சித்தாராவும் விக்ரமும் மட்டும் பேசிக் கொள்ளவே இல்லை. ஐசியூ வில், சித்தாரா தூக்கத்தில் இருக்கும் போது விக்ரம் சென்று பார்த்தான்.
அப்போது கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியேறி இருந்தான். அதன் பிறகு இது வரை பேசவும் இல்லை. அருகில் செல்லவும் இல்லை.
விதார்த் தான் அன்னைக்காக ஏங்கினான். அவனை சித்தாராவிடம் அமர வைத்து பேச வைக்கும் போது மட்டுமே, விக்ரமும் உடன் இருந்தான். மற்ற நேரம் சித்தாராவை விட்டு தள்ளியே இருந்தான்.
நாட்கள் பறந்து போக, ஒரு மாதத்தில் சக்கர நாற்காலியில் சித்தாரா வீடு வந்து சேர்ந்தாள். மருத்துவமனையில் இருக்கும் வரை, மகாதேவி மகளோடு இருந்தார். வீடு வந்ததும் உடனே கிளம்பி விட்டார். கிளம்பச்சொல்லி இருந்தாள் சித்தாரா.
“நான் தான் சொல்லி இருக்கேன்ல? இந்த வீட்டுல நீங்க பச்ச தண்ணி கூட குடிக்க கூடாதுனு. என் கூட நீங்க தங்கவெல்லாம் வேணாம். கிளம்புங்க. ப்பா.. கூட்டிட்டு போங்க. அங்க என்னால மேனேஜ் பண்ண முடியும். அங்க அல்லி ஆண்ட்டி இருக்காங்க. அதுவும் இல்லனா எனக்கு தாலி கட்டுனானே அவன் பார்க்கட்டும். நீங்க கிளம்புங்க” என்று துரத்தாத குறையாக அனுப்பி விட்டாள்.
விசாகா மூலம் இதைக்கேட்டறிந்த விக்ரம், உடனே மனைவியின் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.
எங்கே அருகே சென்றால் அவளது கோபம் கிளறப்படுமோ? அதில் அவளது உடல் நிலை கெடுமோ? என்ற பயத்தில் தான் அவன் தள்ளியே நின்றான்.
அவளே அனுமதித்த பிறகு தள்ளி நிற்க முடியாதே. விதார்த்தின் பொறுப்பை அல்லியிடம் கொடுத்து விட்டு, முழுநேரமும் வீட்டில் இருந்தான். வேலைகள் எல்லாம் வீட்டிலிருந்து செய்தான். கண் மொத்தமும் சித்தாராவிடமிருந்தது. அவளுக்கு என்ன தோவையோ அதை அவள் வாய்விட்டு கேட்கும் முன்பே நிறைவேற்றினான்.
ஒவ்வொரு நொடியும் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்தாலும், ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவன் எதாவது கேட்டாலும் தலையை மட்டும் அசைக்கும் சித்தாரா, பேச விரும்பவில்லை என்று புரிந்தது. அவளது விருப்பத்தை மதித்து பேச்சை குறைத்து விட்டான்.
அன்று காய்ச்சலில் அவளை கையில் வைத்து தாங்கிய விக்ரம் மீண்டும் வந்திருந்தான்.
இரவு தூக்கமும் அவளது அறையில் தான். விதார்த்தை ஓரமாக படுக்க வைத்து விட்டு, நடுவே படுத்துக் கொள்வான். மகன் உருண்டு அவளது கையிலோ காலிலோ இடித்து விடுவானோ என்று பயம்.
சித்தாரா அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல், நன்றாக தூங்கி விடுவாள்.
கொஞ்சம் கொஞ்சமாக சித்தாரா கொடுத்த தைரியத்தில், அல்லி விதார்த் இருவரும் தேறி விட்டனர். சோகத்தை மறந்து இயல்பாகினர். விதார்த் பள்ளி செல்வதும், வந்து அன்னையிடம் பேசுவதுமாக அவனது நாட்கள் இனிமையாக கடந்தது.
அல்லியும், விக்ரம் வேலை செய்யும் நேரம் சித்தாரா உடன் அமர்ந்து கொண்டார்.
கை முதலில் நன்றாக குணமடைய, அவளே சாப்பிட்டு பழகினாள். அதுவரை அல்லி ஊட்டி விடுவார். விக்ரம் கொடுத்தால் ஒரே பார்வை தான். அப்படியே வைத்து விட்டு சென்று விடுவான்.
கை சரியான பிறகு, அவளால் மேலும் இயல்பாக இருக்க முடிந்தது.
அன்று சக்கர நாற்காலியில் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருந்தாள் சித்தாரா.
அல்லி அவளுக்கு பழங்களை கொடுத்து விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
“மறுபடியும் எப்ப ஸ்விம் பண்ண போறேனோ தெரியல ஆண்ட்டி. ரொம்ப நாளாச்சு ஸ்விம் பண்ணி. தண்ணிய பார்த்தா ஆசையா இருக்கு”
அல்லி அவளை பார்த்து சிரித்து விட்டு, “சீக்கிரம் பண்ணலாம். அதான் இனிமே வீல் சேர் விட்டுட்டு குச்சி வச்சு நடக்க பழகிடலாம்னு டாக்டர் சொன்னாங்களே” என்று கூறினார்.
“ம்ம்.. ஜிம் ஸ்விம்னு எல்லாம் பண்ணிட்டு இப்படி உட்கார்ந்துட்டே இருக்கேன். நிறைய வெயிட் போட்டு குண்டாக போறேன்” என்று சோகமாக சொல்ல, “உடம்பு தான் முக்கியம் சித்துமா. குண்டானா என்ன? அதுல கூட நீ அழகா தான் இருப்ப” என்றார்.
“சமாளிங்க. எனக்கே தெரியுது வெயிட் போட்டது. இந்த கால் எப்படா சரியாகும்னு இருக்கு” என்று பெருமூச்சு விட்டாள்.
இவர்கள் பேசியதை பால்கனி சுவற்றில் சாய்ந்து கொண்டு விக்ரம் கேட்டுக் கொண்டிருந்தான்.
இப்படித்தான் அவள் மற்றவர்களோடு பேசுவதை கேட்பான். அவள் மனதை தெரிந்து கொள்வான். அவனால் தான் பேசவே முடியவில்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்கவும் முடியவில்லை. மற்றவர்களோடு பேசும் போது அதை மறைந்து நின்று கேட்டு, அவள் மனதை தெரிந்து கொண்டான்.
சக்கர நாற்காலியை விட்டு விட்டு, குச்சி வைத்து சித்தாரா நடக்க ஆரம்பித்தாள்.
“அரைமணி நேரம் நடந்து பாருங்க. அதுக்கு மேல ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம்” என்று மருத்துவர் கூறி விட, சித்தாரா குச்சியோடு ஹாலில் நடக்க ஆரம்பித்தாள்.
மெதுவாய் நடந்து கொண்டிருந்தவளின் அருகே வந்த விக்ரம், அவள் தோளை பிடித்து கொள்ள, திரும்பிப் பார்த்தாள்.
“நட” என்று அவளை நடக்க வைக்க, சித்தாரா பதில் பேசவில்லை.
“சித்தி எங்க? தனியா நடக்குற?”
“பக்கத்துல வேலைனு போயிருக்காங்க”
“விசாகா?”
“இன்னைக்கு அவளுக்கு லைசன்ஸ் கிடைச்சுடும். அதுக்காக போயிருக்கா”
“சரி உட்காரு. வியர்த்துடுச்சு பாரு” என்று அமர வைத்து மின்விசிறியை சுழல விட்டவன், பழச்சாறு பிழிந்து வந்து கொடுத்து குடிக்கச் சொன்னான்.
“உட்காரு விக்ரம்” என்று சித்தாரா கண்ணை காட்ட, அவனும் அமர்ந்தான்.
“என்ன பேசனும்?” என்று முகத்தை பார்த்து கேட்க, அவனிடம் பெருமூச்சு வந்தது.
பேசவேண்டும் என்று தான் வந்திருந்தான். நேற்று அறையில் அவளது பாஸ்போர்ட்டை பார்த்து விட்டு, அவனுக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை.
“இன்னும் ஃபாரின் போற ஐடியால தான் இருக்கியா?”
“ஏன் கேட்குற?”
“தெரிஞ்சுக்கலாம்னு”
“ஆமா. போறதுனு முடிவு பண்ணியாச்சு.”
“ஏன் தாரா? எனக்கு தண்டனை கொடுக்கனும்னா இப்படிதான் கொடுப்பியா?”
“வேற எதாவது வழி இருக்கா? நீ செஞ்சத உனக்கு திருப்பி செய்யலனா என் வலி உனக்கு புரியாதே?”
“எனக்கு புரியுது தாரா. நான் செஞ்சது எல்லாம் தப்புனு புரியுது”
“புரிஞ்சா போதுமா? வலிக்கனும்ல?”
“தாரா.. செத்த பாம்ப அடிக்கிற நீ”
“அப்படியா?” என்று கேட்டவள், ஒரே மூச்சாக கையிலிருந்ததை குடித்து விட்டு வைத்தாள்.
“செத்த பாம்புனா? எத சொல்லுற விக்ரம்? நீ செத்த பாம்பு இல்ல. செத்து போன பாம்புக்கு வலிக்காது. உனக்கு இப்போ வலிக்குது தான? உனக்கு வலிக்கலனா நீ செத்துட்டனு ஒத்துக்குறேன். வலிக்குதுனா நீ செத்த பாம்பா ஆகுற வரை அடிப்பேன்”
பல்லைக்கடித்தபடி சித்தாரா பேச, விக்ரமுக்கு எதை சொல்வது என்றே புரியவில்லை. சாகும் வரை அடிப்பேன் என்கிறாள். மற்ற யாரும் சொல்லி இருந்தால் நடப்பதே வேறு. சித்தாரா வெறும் வார்த்தைகளை வைத்தே அவனை வதைத்துக் கொண்டிருந்தாள்.
“தப்பு பண்ணும் போது அடிச்சா அத பத்தி யாருக்குமே அக்கறை இருக்காது விக்ரம். அதையே திருந்துனப்புறம் அடிச்சா, செத்த பாம்புனு சொல்லி தப்பிக்க வேண்டியது. ஆனா என்னை பொறுத்தவரை திருந்துனப்புறம் தான் அடிக்கனும். ஏன் தெரியுமா? அப்ப தான் அந்த வலி என்னனு முழுசா உணர முடியும். நீ பழைய விக்ரமா இருந்திருந்தா.. அஞ்சு வருசம் நான் போனப்போ என்னனு கூட தேடாம இருந்த மாதிரி, ஃபாரின் போறதயும் கண்டுக்காம இருந்துருப்ப. அந்த விக்ரமுக்கு நான் இருந்தாலும் போனாலும் ஒன்னு தான். ஆனா இப்ப இருக்க விக்ரம்? நான் போனா துடிக்கிறான். அந்த துடிப்பு தான் எனக்கு வேணும். அது இந்த செத்த பாம்பு கிட்ட தான் கிடைக்கும். திருந்திட்டனு மன்னிச்சுடனுமா? மன்னிக்குற அளவுக்கு சின்ன தப்ப நீ செய்யலயே?”
“ஃபைன்..” என்று அவளது பேச்சை நிறுத்தியவன், பெருமூச்சை எடுத்து நிதானமாக அவளை பார்த்தான்.
“இப்ப என்ன பண்ணனும்? நான் என்ன பண்ணா நீ போக மாட்ட?”
“சொன்னா செஞ்சுடுவியா?”
“சொல்லு. செய்யுறேன்”
“என் அப்பா அம்மா கால்ல விழுந்து, நான் உங்க மகளுக்கு செஞ்சது தப்பு. என்னை மன்னிச்சுடுங்கனு அவங்க கிட்ட மன்னிப்பு கேளு. நான் எங்கயும் போக மாட்டேன்” என்று முடித்தாள்.
தொடரும்.
